கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 17, 2022
பார்வையிட்டோர்: 8,494 
 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நசநசன்னு மழ பேஞ்சுக்கிட்டு இருந்துச்சு, ரெண்டு வாரமா இப்பிடியே பிசுபிசுத்துக்கிட்டு இருந்தா, சனங்க என்னனு வேல வெட்டிக்குப் போறது? ரவைக்கு ரவ ஆன மோண்டது கணக்கா சோன்னு ஊத்துது. விடுஞ்சா இந்த நசநசப்பு. நல்லா பேஞ்சம்னு இல்ல; காஞ்சம்னு இல்ல. இதென்ன எழவெடுத்த பெய மழயோ!

கொளத்தூர்ல ஒத்த சனம் பாக்கி இல்லாமெ அம்புட்டுப் பேரும் பொலம்பிக்கிட்டுக் கெடந்தாக, குண்டுங்குழியுமாக் கெடந்த தெருவுகள்ள பூராந் தண்ணி ரொம்பிக் கெடந்துச்சு..வீடுகளுக்கு முன்னால மாடுக கெட்டுன எடம்பூராம் சாணியுஞ் சகதியுமா பாக்கவே அரோசியமா இருந்துச்சு. பசுமாடுகளாச்சும் பரவாயில்ல. இந்த எருமைக கெட்டுன எடங்கள சொல்லவே வேண்டாம். மாடுகன்னுகள் வேற எங்க கொண்டு போயிக் கெட்டுவாக? சனங்க குடியிருக்குறதே இத்தினிக்காலு குடுச. அவுகளுக்கே இருக்க எடம் பத்தாது; மாடுகன்னு களுக்கு எடத்துக்கு எங்க போறது? அதுனால எல்லார் வீட்டுக்கு முன்னாலயும் பாவோ, எருமையோ நிக்கும். மாடுகன்னுகள நம்பித்தான் அவுகளோட பொழப்பே இருக்குது. பகல் பொழுதுல மாடுகள கொண்டுபோயி காடுகரைகள்ள மேய உடலாம்னா எங்க பாத்தாலும் தண்ணிக்காடா இருக்கு. முன்ன மாதிரி கம்மாயிலயும் உட முடியாது. கம்மாயில் கூட தண்ணி வந்துருக்குன்னு சொல்லிக்கிட்டாக. ஆடு வச்சுருந்தவுக பாடு பரவாயில்ல வீட்டுத் தாவரத்துலயே அதுகள கெட்டிப் போட்டுக்கிட்டாக, செலபேரு வீட்டுக்குள்ளயே ஆட்டுக்குட்டிகளக் கெட்டிப்போட்டாக.

தவசிப் பாட்டியும் ஒரு ஆட்டுக்குட்டி வச்சுருந்தா நல்லாத் தெடமா இருந்த காலத்துல எம்புட்டெம்புட்டோ ஆடுமாடுக வச்சு வளத்தா. இப்ப அவா இஸ்டப்பட்டாலும் வச்சு வளக்க முடியாது. ஒடம்பு ரொம்பா பலவீனமாகிப் போச்சு. இந்தத் தள்ளாத வயகலயும் தனியா வேலஞ்சு காச்சிக் குடிச்சுக்குட்டு இருக்கா ஏழெட்டு மக்களப் பெத்து ஆளாக்கி எல்லாருக்கும் பொண்ணு புள்ள பாத்துக் கெட்டிக்குடுத்துட்டு புருசனயுஞ் சாகக் குடுத்துட்டு இப்ப ஒத்தயில ஒலவச்சுக் காச்சிக்குடிக்கிறதப் பாக்கயில கருமாயமா இருக்கும். மக்கமாரெல்லாம் ஓரளவுக்குப் படுச்சுட்டு எங்கெங்கயோ வேல வெட்டி பாத்துக்குட்டுத்தான் இருக்காக. அவுக கூப்புட்டாலும் இவா போகமாட்டா, ரொம்பா ரோசக்காரக் கெழவின்னு ஊர்ல சொல்லுவாக, புருச இருக்குறவரையில கொஞ்சம் நல்லாத்தான் இருந்தா. அந்தக் கெழன் என்னைக்கு மண்டயப் போட்டானோ, அன்னைக்கே அவளுக்கு அற உழந்தது கணக்கா ஆகிப்போச்சு. புருசனுக்கு முன்னால போயிச்சேந்துரணும்னு வாய்க்கு வாயி சொல்லிக்கிட்டே இருப்பா. ஆனா அவளுக்கு முன்னால மாடசாமிக் கெழவம் போயிட்டான், இப்பயும் அந்தக் கெழவஞ் செத்து அந்தா இந்தான்னு ஏழெட்டு வருசத்துக்கு மேலாகிப்போச்சு. தவசிக் கெழவியும் ஏதோ அவளுக்குத்தக்கன வேலஞ்சு கொதிக்கவச்சுக் குடிக்கா. வருசத்துல ஒருவாட்டி ஊருத்திருநா வரும்போது மக்கமாக, மருமக்கமாரு பேரனுக, பேத்திமாருக ரொம்பப் பெருகளமா வந்து போவாக. அப்பத்தா அவா கை அஞ்சோ, பத்தோ குடுத்துட்டுப் போவாக.

இந்த ஒரு மாசமா இப்படி அடமழ புடுச்கக்குட்டதுனால தவசிப் பாட்டி வேல் வெட்டி எதுக்கும் போக முடியல. அறுப்புக் காலத்துல வைக்கப் போட்ட தரைக, களத்து மேட்டுகளத் தூத்துப் பெறக்கிச் சேத்து வச்சுருந்த நாலு மரக்கா நெல்ல அவுச்சுப் பொட்டு குத்தி வச்சுருந்த அரிசியத்தான் காச்சிக்குடிச்சுக்கிட்டுப் பொழுத ஓட்டுறா. வையாசி மாசம் திருநாளைக்குப் பிள்ளைக வரும்போது அந்த அரிசிய காச்சிச் குடிக்கலாம்னு இம்புட்டு நாளாப் பொத்திப் பொத்தி வச்சுருந்தா. இப்ப இந்த மழைன்னால வேல வெட்டிக்குப் போக முடியாம அரிசிய எடுக்க வேண்டியதாயிப்போச்சு.

தவசிப்பாட்டி போட சொந்த பந்தங்கள்லாம் இதே ஊர்லதான் இருக்காக. ஆனா தவசி ஒருநா ஒரு பொழுது அவுக்கிட்டப் போயி கையேந்தி நின்னது கிடையாது. ரொம்ப வைராக்கியமான கெழவிதான்னு ஊர்ல சொல்லுவாக. தவசிக்கெழவி போட கூடப் பொறந்த தம்பி கிட்ணங்கூட கூடியமட்டும் சொல்லிப்பாத்தான்.

“இந்த வயசான காலத்துல ஏம்கா இப்பிடிக்கெடந்து ஒத்தையில கஸ்டப்படுற? பேசாம ஏங்கூட வந்துரு; இல்லன்னா மக்கமாருக்கிட்டயாச்சும் போயி இரு. நடக்க மாட்டாயெ நடந்துக்குட்டு வேலவெட்டிக்குப் போற, தண்ணிக் கொடந் தூக்கும், கஞ்சி தண்ணியங் காச்சிக்கற பத்தாக் கொறைக்கு ஒரு ஆட்டுக்குட்டி வேற…இந்த வயசுள எந்த மரத்துல் ஏறி கொழ ஒடுக்கப்போட்டு அந்தக் குட்டியக் காப்பாத்தப் போற? பேசாம வித்துருன்னாலும் கேக்கமாட்டேங்க… வீம்புக்காரிதான் நீயி…”

தம்பி எம்புட்டுத்தாஞ் சொன்னாலும் ஆட்ட விக்கிற மாதிரி இல்ல. எங்குட்டுக் கூடியாச்சும்: அதுக்கு கொழ ஒரிச்சுக் கொண்டாந்து போட்டுருவா கெழவி. தம்பிக்காரனும் நாலஞ்சு ஆடுக வச்சுருந்தான். ஒரு தடவ தவசிக்கெரவிட்ட அவர் சொன்னான், “ஏக்கா நீயி வேணும்ணா ஓ ஆட்ட ஏங்குட்டிகளோ உட்டுரு. ஏங்குட்டிகளோட அது மேயட்டும். பெருசாகுற காலத்துல புடுச்சு வித்துக்கோ என்ன சொல்ற?”.

“ஒனக்கிருக்கற சள்ளையில் இதென்னத் துக்குடா? நானு எங்குனயாச்சும் வேல வெட்டிக்குப் போகயிய இத்தினி கொழ ஒடிச்சாந்து போட்டப்னா அது பாட்டுக்குத் தின்னுக்குட்டு கெடக்கு. அது இங்க ஏங்கூடயே நின்னுட்டுப் போட்டும் டா” இப்படிக் சொல்லிட்டு குட்டியக் குடுக்க மாட்டம்டா.

“எங்ன சாகப்போற நாளைல் குட்டிய எங்கிட்ட உட்டா நானு குட்டிய வச்சுக்கிருவம்னு கெழவிக்குப் பயம். அவா என்ன வேசுப்பட்ட கெழவின்ன நெனச்சீக…எம்புட்டுத் தடவ கேட்டுப் பாத்துட்டேன். குடுக்கவே மாட்டம்ங்கா. அவளே வச்சுக்குட்டு லோளுப்படட்டும்”. கிட்ணன் தெருச் சனங்ககிட்ட சொல்லி ஆத்துரப்பட்டான். தவசியோட புருசங்கூட பெறந்த நாத்துனாக்காரி கூட தவசிகிட்ட சொல்லிப்பாத்தா கொழாயில தண்ணி புடுச்சுக்கிட்டு இருந்த தவசி சொன்னா, “நீங்கள்ளாம் புரியாமப் பேசுறீகத்தா. ஏந்தம்பிக்காரனும் அவம்பாட்டுக்கு வாயிக்கு வந்ததெல்லாம் பேசிக்கிட்டுத் திரிரான். நீங்க நெனைக்கிற மாதிரி நானு இந்த வயகல ஆடு வளத்து சொத்து சொகமாச் சேக்கப்போறேன்? எந்த நேரமும் ஒத்தபிலயே கெடக்குறது வெருக்கு வெருக்குன்னு இருக்குது. கூட இந்த ஆட்டுக்குட்டி இருக்குறது கொஞ்சந் தெம்பா இருக்குது. சாகுந்தட்டிக்கும் இந்த வாயில்லாச் சீவங்கூட இருந்துட்டுச் செத்துப் போகலாம்னு பாத்தா ஆளாளுக்கு என்னென்னமோ சொல்லுறிக”.

இதக்கேட்ட அன்னம்மா பாட்டி சொன்னா, “அவா சொல்றதும் நாயந்தான….அவளுள்ளும் ஒரு தொண வேணும்ல…என்னமோ பேரம்பேத்திக கூட பேசுறது கணக்கா தவசி அந்தக் குட்டிக்கிட்டட் பேசிக்கிட்டுக் கெடப்பா அந்தக் குட்டியும் எந்த நேரமும் இவாக் காலச்சுத்திக்கிட்டு இவாகிட்ட ரொம்பப் பிரியமாத்தா இருக்குது… அதுதான் அவளுக்குத் தொணையா நிக்கிது.”

“கெழவம் போயிச் சேந்துட்டான். இன்னமும் எம்புட்டு நாளைக்குத்தான் கடவுளூ எனியச் சோதிக்கப் போறாரோ தெரியலயே…காலு கையி நடமாட்டத்துல இருக்கயிலேயே கடவுளூ எனிய எடுத்துகிரனும். இந்தக் கொடத்தத் தூக்கி உடுத்தா’, ஆராயி தூக்கி உட்ட கொடத்த வாங்கி இடுப்புல வச்சுக்குட்டுப் போனா தவசிப்பாட்டி..

ரெண்டு நாளா மழ செத்த ஒஞ்சிருந்துச்சு, மத்தியானம் கூழக்கரச்சுக் குடுத்துட்டு செத்தப் படுத்து எந்திருச்சு. தவசிக்கெழவி ஆட்டுக்குட்டியப் பத்திக்கிட்டு வயக்காட்டுச் செம போனா. குட்டிய மேய உட்டுட்டு அடுப்பெரிக்க ரெண்டு முள்ளுப் பேற்ககிட்டு வரலாம்னு ஓடப்பக்கம் போனா. “கொமரிகுட்டச்சியா இருக்கயில சேதரகாரப் பிள்ளைகளச் சேத்துக்கிட்டு சன்ன முள்ளாப் பெறக்கிக் கெட்டி யாருவோம்! போட்டி போட்டுக்கிட்டுப் பெறக்குவோம்… பச்ச உயிர்வேலி முள்ளக்கூட வெட்டிக் கொண்டாந்து நறுக்கி கெட்டு கெட்டாக் கெட்டி வெளித்திருண நிமுர அடுக்கி வச்சுருவோம்….. இப்பிடி மழ நாளுல எரிக்க வெறகுக்கு அலமோத் வேண்டாம்… இப்ப எங்க அருவாப் புடுச்சு வெட்டவா முடியுது? காஞ்ச முள்ளுக் கூட இந்த மழயில் நமத்துப் போயிக்கெடக்கு….” தன்னால் பேசிக்கிட்டே முள்ள அள்ளிக் கெட்டிக்கிட்டு வந்தா. பொழுது போயி மசங்குற மாதிரி இருந்துச்சு. இப்பயெல்லாம் வெள்ளனத்துலயே மசங்கிரு துன்னு நெனச்ச தவசிக்கெழவி இருட்டமுன்ன ஆட்டுக்குட்டியப் புடிக்கனும்னு எட்ட இழுத்து வச்சுப் போட்டா… கெழவி தொலவுல வாரதப்பாத்த ஆடு மே… மேன்னு கத்துச்சு.

“என்னடி. ஏஞ்செல்லம் ரொம்ப நேரமாக் காணம்னு தேடுறியாக்கும்டி… ரவைக்கிக் கஞ்சி காச்ச இத்தினி முள்ளுப் பெறக்கியாரலாம்னு போனேன்… எங்க இந்த மழைக்குள்ள பூரா நமத்துப் போயிக்கெடக்கு….. ரெண்டு வரட்டியும் ரெண்டு முள்ளுமா வச்சு ஒப்பேத்தனும்…. வெறன்ன செய்றது சொல்லு….. ஒத்த பெயமக்களக் காணும்…… மழைக்கிப் பயந்துக்கிட்டு அம்புட்டுச் சனமும் இப்ப யெல்லாம் வெள்ளன வெடுக்குல காச்சிக் குடுச்சுட்டு வீட்டுக்குள்ள சட்டுன்னு மொடங்கிக்கிதுக. எம்மாடியோ… கூதக்காத் தென்ன இப்பிடி அடிக்கி… மழ வார மாதிரில்ல இருக்கு… இனி எந்நியாரம் போயி அடுப்புப் பத்த வச்சு ஒல் வைக்கவோ… இந்தப் பச்ச முள்ளு வேற பொகஞ்சுக்கிட்டே கெடக்கும்… இந்தா பே… பே… வா…. வா… வாம்மா ….. இந்தா வந்துட்டேண்டி….” சொல்லிக்கிட்டே ஆட்டப் பாத்து வேகமா நடந்தா. தவசி வாரதப் பாத்த ஆட்டுக்குட்டி அவள நோக்கி கத்திக்கிட்டே ஓடியாந்துச்சு.

ஆட்டப்பாத்துக்கிட்டே வந்த தவசி தண்ணி கெட்டிக் கெடந்த வெட்டுக்குழிக்குள்ள உழுந்துட்டா. தண்ணி அவளுக்கு நெஞ்சு வரைக்கு இருந்துச்சு. அவளால அந்தக் குழிக்குள்ள இருந்து மேல எந்துருச்சு வர முடியல. கைய வச்சு எம்ப எம்ப வழுக்கி வழுக்கி உள்ளேயே உழுந்தா குழியும் நாலடி ஆழத்துக்கு இருந்துச்சு. பூராஞ் சேறுஞ்சகதியுமா இருக்கவும் அவளால் அம்புட்டுச் சாமானியமா ஏறி வெளிய வரமுடியல, இதுக்குள்ள ஆட்டுக்குட்டியும் அவா இருந்த எடத்துக்கு வந்துருச்சு. அவளப் பாத்துக்குட்டு பே… மே…ன்னு கத்திக்கிட்டே அந்தப் பள்ளத்தயே சுத்திச் சுத்தி வந்துக்கிட்டு இருந்துச்சு.

‘இன்னைக்குன்னு பாத்து ஒத்தச்சனத்தக் காணுமே…. இங்ன இருந்து கத்துனாக்கூட தெச்சனங்களுக்கு கேக்காதே… குளுதல வெரச்சே நானு இன்னைக்குச் செத்துப்போவேன்…மழ வேற தூறுதே..இப்படியே இந்தப் பள்ளத்துலயே செமாதி ஆயிருவேன் போல…. கடேசி ஏங்கெதி இப்பிடியா ஆகனும்? ஏ உசுரு இப்பிடித்தாம் போகனும்னு கடவுள் எழுதி இருப்பாரு போல…அம்புட்டுத்தான் எனக்கு விதி நஞ்சு போச்சு…. ஏ பக்கமாக தன் பேரம் பேத்தியாரு ஒருத்தரக்கூட பாக்க முடியாமப் போறேனே….வந்தது வந்தேனே கொஞ்சம் மேப்பகல்லயே வந்திருந்தம்னா நம்ம தெருச் சனங்களாவது இருந்து காப்பாத்தி இருப்பாகளே… ஏந்தம்:பி கிட்ணங்கூட இப்ப வீட்லதான இருப்பான்…ஒரு வாத்த சொன்னா ஓடியாந்து போல இழுத்துப் போட்டுருவானே…. பெத்த மக்கமாரு இருந்தும் சொந்த சாதிசன மெல்லாம் இருந்தும் இப்பிடி அனாதையாச் சாகனும்னு ஏந்தலைல எழுதிட்டானே…’ துக்கத்துல தவசி குமுறிக் குமுறி அழுதா.

அவனயே சுத்திச் சுத்தி வந்த ஆட்டுக்குட்டி, அந்த ஏகாந்தர வெளில மே…. மே..ன்னு அலறுனதக் கேக்கயில மனசே ரெண்டா வகுந்துரதுகணக்கா இருந்துச்சு பொழுது போயி நல்லா இருட்டத் தொடங்கியிருச்சு. தவசி மேல ஏறி ஏறிப் பாத்துட்டு சறுக்கிச் சறுக்கி உழுந்து சோந்து போனா. குளுருல வெட வெடன்னு நடுங்கிக்கிட்டு ஆட்டுக் குட்டியப் பாத்துச் சத்தம் போட்டு அழுதா. ஆட்டுக்குட்டி அவளப் பாத்துட்டு இன்னங் கொஞ்சம் சத்தமாக் கதறுச்சு. இந்த ரெண்டு கதறல் சத்தத்தத் தவுர அந்தச் சத்து வட்டாரத்துல ராப்பாடி வண்டுகளோட ரீங்காரமும் தவள கத்துர சத்தமுந்தாங் கேட்டுச்சு.

‘நெலாக்கூட இல்ல…. கும்மிருட்டா இருக்கு….சாகப்போற கழுத இருட்டுல கெடந்து செத்தா என்ன..வெளுச்சத்துல கெடந்து செத்தா என்ன…நெலா இருந்தா யாராச்சும் தப்பித் தவறி இப்படிக்கூடி வந்தா நம்ம இந்தப் பள்ளத்துக்குள்ள கெடக்குறது தெரியும்…இந்நியாரத்துக்குப் பெறகு யாரு இங்க வந்து எனியப் பாத்துத் தூக்கப் போறாக? அப்பிடின்னாலும் ஒரு வெயிலுக் – காலமா இருந்தாலும் சனங்கா வருங்க…போகுங்க…இந்தக் குளுருக்குள்ள ஒத்த ஈங்குஞ்சி வராது’ இந்த நெனப்புல் தவசிக்கு நெஞ்சே வெடிச்சிரும் போல இருந்துச்சு.. ஆட்டுக்குட்டியும் அந்த அத்துவானக் காட்டுக்குள்ள பரிதாபமாக் கத்திக்கிட்ட இருந்துச்சு.

ஆட்டுக்குட்டியப் பாத்துட்டு தவசி அதுட்ட ஆத்தமாட்டாமெ பொலம்பத் தொடங்கனா.

“ஏ நெலமயப் பாத்தா நீயி அழுகுற? என்ன செய்ய? ஏ விதி அம்புட்டுத்தான். ஏழெட்டு மக்கமாரப் பெத்து, வளத்து, ஆளாக்கி, ஏதோ என்னால ஏண்ட.. மட்டும் அவுகளப் படிக்க வச்சு, கடப்பட்டு ஒடப்பட்டு கலியாணங்காச்சி மூடுச்சு…எல்லாத்தாஞ் செஞ்சேன். அம்புட்டுப்பேரும் உட்டுப்போட்டு அத்து வாழ்க்கையப் பாத்துட்டு எங்கயோ பட்ணத்துக்குப் போயிருச்சுக. கெழவனும் உட்டுட்டுப் போயிட்டான். பக்கமாருக எனியக் கூப்புட்டாலும் அங்னக்குள்ள போயி எம்புட்டு நாளைக்கு இருக்க மாடியும்? நம்ம வகுத்துப் பிள்ளைகளான்னாலும் விருந்தும் மருந்தும். மூணே நாளைக்குதான்னு பெரியவுக தெரியாமலா சொன்னாக? எம்புட்டுத்தான் வசதி வாய்ப்புள்னாலும் நாம் பெறந்த மண்ண உட்டுட்டு எப்படிப் போய் அங்க கெடக்க முடியும்? இப்ப இந்த மண்ண உட்டே நாம் போறேன்னே…” துக்கத்த அடக்கமாட்டாமெ விம்மி விம்மி அழுதா.

‘என்னப் பெத்த ஆத்தா கடேசில நானு இந்தச் சாவா சாகனும்? குளுருல கை காலெல்லாம் வெரைக்குதே… மழ வேறயில் டுச்சுக்குட்டு அறையும் போல இருக்கே… இந்த நடுக்கத்துல எம்புட்டு நேரந்தாங் கெடக்குறது? நாளைக்குக் கால வரையில் இந்த உசுரு நிக்கிமா?’ சத்தம்போட்டு அழுதா. ஆட்டுக்குட்டியும் சேந்து கத்துச்சு.

“நீயி என்னத்துக்கு அழுகுற? போம்மா… நீயி வீட்டுக்குப் பொ… நாம் பொழைக்கமாட்டேன். நீயி எந்தம்பி கிட்ணங்கிட்டப் போயிரு…என்ன? ஏதோ இந்த மட்டுக்கும்: யாருக்கும் தொந்தரவு குடுக்காமெ, கால் கையி உழுந்து கெடக்காமே, இழுபறியாக் கெடக்காமெ போயிச் சேந்துர்ரேன். நீயி கத்திக்கத்தி ஒனக்குந் தொண்டந்தண்ணி வத்திப் போகும்”. அப்படியே மயங்கி உழுந்துட்டா.

அதிகாலைல அவா வெறச்சுப்போயிக் கெடந்தா.

– பெண்கள் சந்திப்பு மலர் – 2004/10

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *