கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுதேசமித்திரன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 2, 2024
பார்வையிட்டோர்: 5,929 
 
 

(1953ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

என் கண்களுக்கு நானே சின்னவனாகியதை நினைத்துக் கொண்டே நடந்தேன். நிமிஷத்துக்கொருதரம், சாயங்காலம் நடந்ததெல்லாம் என்னுள் மோதி என்னைத் தலைகவிழச் செய்தன. ஒருவனுடைய படிப்புக்கும், வயதுக்கும் அந்தஸ்துக்கும் மேலாக ‘ஒன்று’ இருக்கிறது என்று தெரிந்தும் நடைமுறையில் தெரியாதவன்போல இருந்ததன் பலனை நினைக்க நினைக்க மனம் சுருங்கயது.

மெளன நடையால் மனக் கண் முன் விட்டல் எனக்கு முன்னால் தனக்குப் பிடித்த ராகம் ஒன்றை இழுத்துக் கொண்டு போவது போல் தோன்றியது.

இந்த விட்டல் – எங்கேயோ, யாருக்கோ, எப்பவோ பிறந்த பையன் – என் வாழ்வின் பகுதியில் ஒரு சிறிய பகுதியில் குறுக்கிட்டு மன எழுச்சியைக் கிளறி விட்டானே? ஏதோ இரண்டு வருஷங்களுக்கு முன்னால் இழைத்த தவறுக்கு இன்றைக்கு தண்டனை? அதுவும் சாமான்யமானதா? ‘நாலு உதைகள் நாலு வார்த்தைகள்’ இவைகளினாலெல்லாம் மானம் போவதுகூட சகிக்கலாம். ஆனால் நான் இன்று அடைந்ததை? அதை நினைக்கிறபோது – புது விட்டலைப் பார்க்கிறபோது – பழைய விட்டல்தான் முன் தோன்றுகிறான். என்னதான் உருவம் மாறினாலும் முதன் முதலில் பார்த்த பார்வையின் அர்த்தம் தான் நிற்கிறது.

அன்று இரண்டு வருஷங்களுக்கு முன், பழனியில் தங்கையின் கலியாணம். இரண்டு வீட்டுக்காரர்களும் எதிர்த்திசைகளிலிருந்து வந்து பழனியில் சொந்தமானார்கள்.

தங்கை கலியாணத்தை எடுத்து நடத்த நான்தான், கலியாணத்துக்கு ஏழு நாள் முன்பாக சரியான அலைச்சல். கலியாணத்தன்று ஜலதோஷம், தொண்டைக் கட்டு, கலியாணமான பிறகு முதுகு வலி.

கலியாணமான மறுதினமே எல்லோரும் சென்றுவிட்டார்கள். டேரா அடித்தவன் தாமதித்துத்தானே புறப்படவேண்டும்? இரண்டு நாட்கள் நான் இருந்தாகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் உண்டாயிற்று.

அன்று மத்தியானம் நிம்மதியாகப் படுத்துத் தூங்கவேண்டும் என்று காலையிலேயே நிச்சயம் செய்திருந்தேன். ஒன்பது மணி ரயிலில் எல்லோரும் சென்ற பிறகு, கூட்டம் கலைந்த கொட்டகையாகக் காட்சியளித்தது சத்திரம்.

சரியான தூக்கம், பட்டினி கிடந்தவன் ருசித்துச் சாப்பிடுவதுபோல, ருசித்துத் தூங்கிக் கொண்டிருந்தேன். திடீரென்று, ‘அக்னி என்றறியாயோ…’ என்று கேதார கௌளை வானைப் பிளக்கும்படியாகக்கேட்டது. முன் காலங்களில் ராஜாக்களின் தூக்கத்தைக் கலைத்தால் மரண தண்டனை! நான் ராஜாவாக இல்லையே என்ற துக்கத்திலும் ஆத்திரத்திலும், “யாரடா அது கத்துகிறது?” என்று இரைந்தேன்.

என் இரைச்சலுக்கு பதில் பதில் இல்லை. திண்ணையில் சங்கீதம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. நான் இருந்த அறை ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, என் ஆத்திரம் என்னையும் மீறிக் கொண்டு கிளம்பியது.

எந்தச் சத்திரத்தில் தின்று, எந்தச் சத்திரத்தில் முடங்கிக் கொள்ளலாம், என்று சத்திரம் சத்திரமாக ஏறி இறங்கும் நாடோடிப் பயல்கள், ஏதாவது வேலை செய்து பிழைக்கலாம் என்ற எண்ணமே இல்லாத சோம்பேறிகள் ஐந்தாறு பேர்கள் வட்டமாக உட்கார்ந்து ‘பேஷ்’ போட்டுக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு முகமும் ஒவ்வொருவிதமான அருவருப்பை அளித்தது. நடுவே ‘வித்வான்’ உட்கார்த்து கேதார கௌளையின் மென்னியை முறுக்கிக் கொண்டிருந்தான்.

இடத்திலிருந்தே மறுபடியும் “டேய் கத்தாதே நிறுத்து!” என்றேன். பாடினவன் என் குரலைக் கேட்டுவிட்டான் என்று, அவன் என் பக்கம் திரும்பப் பார்த்ததிலிருந்து தெரிந்துகொண்டேன். அதனால்தான் என் ஆத்திரம் மேலும் அதிகரித்தது. என்னைப் பார்த்தும், நான் சொல்லியும், அவன் மேலே போய்க்கொண்டிருந்தான்.

விடுவிடு என்று எழுந்தேன், வதம் செய்யச் செல்லும் அசுரன் போல. இரண்டே எட்டில் திண்ணை. இரண்டு நாடோடிகளுக்கிடையில் காலை வைத்து, அந்தப் பையனைத் தோளோடு தோளாகத் தூக்கி, இடது கன்னத்தில் இரண்டு அறைகள் வைத்த பிறகுதான் ஆத்திரம் அடங்கத் தொடங்கியது.

“படவா, ஒரு மனுஷன் தூங்கறேன்…மத்தியான வேளையிலே வந்து ஓநாய் மாதிரி ஊளையிடறான்…” சொல்லிக்கொண்டே கழுத்தில் கைவைத்தபோது அவன் திமிறினான்.

“நீங்க யாரு சார் என்னை அடிக்க?” கண்களில் நீர்த்திவலைதள். உடலில் மான உணர்ச்சி கிளப்பிவிட்ட படபடப்பு, உதடுகளில் வார்த்தைகள் தெறித்தன.

“நான் யாருன்னா கேட்கிறாய், மடையா.. சோத்துக்கில்லாமல் அலையற நாடோடிப்பயல் கேட்கிறான் கேள்வி”

“உங்களாலே ஒருவேளை சோறு போடறத்துக்கு முடியாட்டாலும், தஞ்சாவூர் மிராசுதார் மாதிரி பேச்சுக்குக் குறைவில்லை!”

“இன்னமே ஏதாவது பேசினாயோ, மென்னியை முறிச்சுப் பிடுவேன், ஜாக்கிரதை” நான் இரைந்துகொண்டே அவனைப் பார்த்தேன். திடீரென்று வேஷ்டி மூலையை வாயினுள் சொருகினான். அதை வெளியே எடுத்த போது, ஒரே சிகப்பு!

“அடடா, ரத்தம்!” என்றான் ஒரு நாடோடி.

“நன்னா துடைடா, விட்டல்!” இன்னொருவன்.

“முன் காலத்திலே நன்னா பாடினா வாயாலே தேனைவிட்டு, கையிலே பொன்னைக்கொடுப்பா… இப்போ என்னடான்னா வாயிலேந்து பல்லைப்படுங்கி, கழுத்திலே கையைக் கொடுக்கறா…” என்றான் ஒரு இளம் நாடோடி. மாடு மாதிரி வளர்ந்திருந்தான், பல சத்திரச் சாப்பாட்டையெல்லாம் ஜீரணித்துவிட்டு.

“இந்தக் காலத்திலே இதுதான் அப்பா ஞானம்…மூணு ரூபாயைக் கொடுத்து மூணு மணி நேரம் பெரியதனமாகக் கேக்கிற சுருதி தாளமில்லாத கச்சேரியில்தான் ஞானம் இருக்கு!” என்றான் இன்னொருவன்.

“சரித்தான் வெளியே போங்கடா, நாடோடிப் பயல்களா” என்று இசைத்தேன். நித்திரை இழந்ததில் கண்கள் எரிந்தன.

“ஏன் சார், பல்லை உடைத்து விட்டீர்களே?” என்றான் விட்டல் மறுபடியும் மறுபடியும் துடைத்துக்கொண்டே.

“பாக்கிப் பல் இருக்கே, அதுவே பெரிய பாக்கியம், நீ பாடின பாட்டுக்கு..”

“ஏன் சார், பாட்டைப்பத்து உங்களுக்கு ஏதாவது தெரியுமா? நேத்து உங்க மச்சினன் நலங்கும்போது ரெண்டு பாட்டுப் பாடினானே, அதை ரசித்தீர்களே? அது பாட்டா? யாரோ என்னை இழுத்துண்டு வந்து, ‘இவன் நன்னாப்பாடுவான்னு’ சொன்னப்போ, என் மூஞ்சாயைப் பார்த்து முகத்தைச் சுருக்கிக்கொண்டீர்களே?. வேண்டாம் என்று சொன்னீர்களே…”

“டேய் அதிகப் பரசங்கி..இந்த வரிசையிலும் ஒண்ணுரெண்டு உதிர்ந்துவிடும்..போடா, கழுதே…”

“நான் போகிறேன் சார், போறேன்.. இந்த சத்திரத்தை யெல்லாம் கட்டினானே ஒரு புண்ணியவான், உங்க மாதிரி ‘பெரிய’ மனிதர்கள் வந்து தங்க என்று, அதை நினைத்துக்கொண்டே போகிறேன்… ஆனா இது கடைசி சந்திப்பாக இருக்காது” என்று அவன் சொல்லிக்கொண்டே போனான். பரிவாரமும் கலைந்தது.

மீண்டும் அறையரில் வந்து படுத்துக்கொண்டேன். இழந்த நித்திரை இழந்ததுதான். விட்டலின் வார்த்தைகள் காதில் ஒலித்துக்கொண்டேயிருந்தன. சாவதானமாக ‘பாடாதே’ என்று சொல்லியிருந்தால் அவன் பேசாமலிருந்திருப்பான். என் தூக்கமும் பறி போயிருக்காது. ஆத்திரத்தில் கண் இழந்து செய்த காரியம் எத்தனை தூரத்துக்குப் போய்விட்டது? நேரம் செல்லச் செல்ல உடம்பின் குடு இறங்க இறங்க, விட்டலின் இரத்தம் கசிந்த வாய்தான் முன் தோன்றியது. ‘நான் பேசாமலிருந்திருக்கலாம்; ஏழைப் பையன்… நாதியற்றவன்… அவனுக்கு ஆதரவு அளிக்காவிட்டாலும் சும்மாவாவது இருந்திருக்கலாம்’ என்றெல்லாம் நினைத்தேன்.

ஆனால் என்னுள் நிறைந்து கிடக்கும் மமதையும் போலி கௌரவமும் அன்பு உணர்ச்சிகளுக்கு அணையிட்டுவிட்டன. ‘இது மாதிரி எத்தனையோ நாடோடிப்பயல்கள்… நம்ம மாதிரி மனுஷா கிட்டே உதை படறத்துக்குன்னே பிறந்திருக்கிறார்கள்!’ என்று நானே சொல்லிக்கொண்டேன்.

அதற்குப் பிறகு என்றைக்காவது எப்போதாவது, கொதிக்கும் நீரில் குமிழ்கள் மேலும் கீழுமாக வந்து போவதுபோல விட்டலின் நினைவு மனத்தின் மேலே வந்து போகும். இரத்தம் கசிந்த பல் மின்னல் மாதிரி தோன்றிமறையும். ‘எத்தனையோ பேர் என் முரட்டுக் கோபத்தி்ற்கு ஆளாகியிருக்கிறார்கள்… இந்த அனாதையும் ஒருவன்’ என்றுதான் விஷயத்தை ஒதுக்குவேன்.

நாட்கள் தூசியாகப் பறந்து விட்டன.

இன்றைக்கு நண்பன் வீட்டில் ஒரு விசேஷம். பணம் இருப்பதை கச்சேரி மூலம் காட்ட அவன் விரும்பினான். கச்சேரியைக் கேட்கப் போகும் வரையில் எனக்கு விட்டலின் ஞாபகம் துளிக்கூட இல்லை. எந்த மனிதன் எப்போதோ வரப் போகிற சாவையே நினைத்துக் கொண்டு இருக்கப்போகிறான்? அதேபோல் வாழ்வில் எப்போதோ கண்ணில் விழுந்த கரடை நினைத்துப் பார்க்கப் போகிறான்?.

நண்பன் கச்சேரி முடிகையில் – அப்போதுதான் நான் போய்ச் சேர்ந்தது – “இவன் ஒரு இளம் வித்வான்டா…ஆனால் நல்ல பேரு…ஞானமும் சாரிரமும் அதிருஷ்டமும் இருக்கு… கேட்கணுமா?” என்றான்.

“என்ன பெயர்?” என்று கேட்கவில்லை. எனக்குத் தெரியுமே, பழைய சிந்தனைகளைக் கிளறிக் கொண்டு என் முன்னால் பாடுபவன் யாரென்று? நண்பனுக்கு ‘உம்’ கொட்டி வைத்தேன்.

பழனி, கலியாணம், தூக்கம், கேதார கௌளை, நாடோடிப் பயல்கள், விட்டலின் இரத்தம் கசியும் பல், அவன் பரிதாபமாகத் திமிறின திமிறல் எல்லாம் சுருட்டிவைத்த பாய் விரிவது போல விரிந்தன. பாடுபவனைப் பார்க்கவே வெட்கமாகவும், பயமாகவும் இருந்தது. சமூக அஸ்திவாரக் கும்பலின் பிரதிநிதிகளின் முன் அமரிக்கையாக உட்கார்ந்து பாடுறான். அன்று என்னிடம் அடிவாங்கிய பையன் என்பதை நினைக்கையில் எழுந்து போய்விடலாமா என்று நினைத்துவிட்டேன்.

ஆனால் அதற்குள் கச்சேரியும் முடிந்துவிட்டது. நண்பன் சாப்பிட்டு விட்டுத்தான் போகவேண்டும் என்று வற்புறுத்திவிட்டான்.

பந்தியில் எனக்கு எதிரே விட்டல். அவன் வாயைத் திறக்கையால் நான் உடைத்த பல்லின் மீதிப்பகுதி இருக்கிறதா என்று பார்க்க வெட்கத்திலும் ஏனோ ஆசை உதிர்த்தது.

என் நண்பன், சாப்பிட்டானதும் விட்டலை எனக்கு நேரடியாக அறிமுகப்படுத்தி விட்டு, என்னையும் அறிமுகப்படுத்தினான், “இவர் தான் இந்த வட்டாரத்திலேயே பெரிய சங்கீத ரசிகர்… ஒரு பெரிய சபாவை நடத்துபவர்” என்றான்.

விட்டல் என்னைப் பார்த்தான். உதடுகளில் புன்னகை அரும்பியது. பிறகு சிரித்தான். “இவரை எனக்கு முன்னமே தெரியும்… இவருடைய ரசிகத்தன்மையும் கண்டு அனுபவித்திருக்கிறேன்!” என்றான் கடைசியில்.

நான் குன்றிப்போனேன்.

“அட, விட்டலுக்கு உன்னை தெரியுமாமே..” என்றான் நண்பன். அவனுக்கு சமயா சந்தர்ப்பம் தெரியாது.

“உம்..உ..ம்..” என்று ஏதோ முணுமுணுத்துவிட்டு, “அடடா மணி பத்து அடித்துவிட்டதே!” என்றேன்.

“ஆமாம், சார், உங்கள் நண்பருக்கு நேரம் ஆகிவிட்டது… பாவம், தூக்கம் வருகிறதோ என்னமோ?” என்று விட்டல் கூறினான்.

நான் விடை பெற்றுக்கொள்ளுகையில், என் கைகள் எல்லோருக்கும் கூப்பினதுபோல் விட்டலுக்கும் கூப்பின.

“என்னை நீங்கள் மறக்கமாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்!” என்று விட்டல் விடை அளித்தான்.

அவன் கைகூப்பினபோது இரண்டு விரல்களில் மோதிரங்கள் பிரகாசித்ததைப் பார்த்துக்கொண்டே நகர்ந்தேன். அவன் மனத்தில் என்ன நினைக்கிறான்? ‘ரசிகப்புலி ஓய்வெடுத்துக் கொள்ளக் கிளம்பிவிட்டது’ என்று நினைக்கிறானோ?

விட்டல் என்ன நினைத்தானோ, என் சிந்தனை சிதறிக்கொண்டு கிளம்பியது.

நன்றி: பசுபதிவுகள்

– இது ‘சுதேசமித்திர’னில் 1953-இல் வந்தது

Print Friendly, PDF & Email

1 thought on “அந்தஸ்து

 1. இது 1953 இல் எழுதப்பட்ட கதை.

  அந்தக் காலக்கட்ட தமிழ் கதைகளில் தனிமனித ஒழுக்கம், மனசாட்சி சார்ந்த நடுநிலைமை, அத்துடன் நலிந்தோர் மீதான அநீதி சார்ந்து சிறியளவில் சமூக நையாண்டி ஆகியவை அதிகமாகக் கையாளப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.

  இந்தக் கதையும் அவ்வாறானதே.

  1950 களில், ஏன் அதற்குப் பின்னர் பல ஆண்டுகளிலும் கூட, வெகுஜன மக்கள் எல்லோரும் காசு கொடுத்து புத்தகங்கள் வாங்கிப் படிக்கும் நிலைமை இருக்கவில்லை; ஓசி புத்தகங்களுக்குத் தான் மவுசு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

  நாள் பத்திரிகைகளும் கூட டீக்கடை மற்றும் சலூன் கடைகளின் உபயமாக இருந்தன. வாரப் பத்திரிகைகளுக்கு நூல் நிலையங்கள் இருந்தன. சைக்கிள் வாடகைக்குக் கொடுக்கப்பட்டதைப் போல வாராந்தர மற்றும் மாதாந்திரப் பத்திரிகைகள் வாடகைக்கும் கொடுக்கப்பட்டன.

  அப்போதைய எழுத்தாளர்கள் பலரும் சமுதாயத்தில் மேல்தட்டு வாசகர்களுக்குரிய மொழி நடையையும், அறிவு ஞானத்தையையும் பயன்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. ஒருவேளை வியாபாரச் சந்தைக்கு அத்தகைய எழுத்துகள் அவசியப்பட்டிருக்கலாமோ என்னவோ!

  இந்தக் கதையும் வியாபாரச் சந்தையைப் பிரதிபலிப்பதாகவே உணர்கிறேன்.

  இப்படிக்கு
  விஜய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *