அந்தச் சின்னப் பெண்ணின் சிநேகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 2, 2023
பார்வையிட்டோர்: 4,022 
 
 

(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பிடரி முழுக்க வியர்வை வழிய அவன் சட்டைக் காலரைப் பின்னாகத் தள்ளிவிட்டான். பாலியஸ்டர் துணி, அந்தஸ்திற்கு துணை போனாலும், மாசி வெயிலுக்குத் தோதுப்படவில்லை. கண்கள் சோர்ந்து கிடந்தாலும் சுற்றிலும் தேடிச் சுற்றின. வத்தலக்குண்டு ஊர். பெரியதில்லையென்றாலும். கொடைக்கானல், மதுரை, பெரியகுளம் என்று போக, ஊர் பஸ் நிலையத்தில் கூட்டம் ஜகஜகத்தது.

ஏழு வருடங்களுக்கு முன் அவன் இங்கு வருகையில் இப்படியில்லை. அது மார்கழி மாதம். குளிரில் கொடைக்கானல் செல்வோர் அதிகமில்லை; மதுரையில் திருமணக் காலமுமில்லை. அத்தை, பாட்டியின் வசவுகளில் மனம் வெறுத்து பஸ் ஏறியவன், இவ்வூர்வந்து இறங்கியபோது கையில் பைசா இல்லை!

கோர்த்துப் பிரியும் நினைவுகளை சீராக்கி அசைபோட ஓரிடம் தேவையாயிருக்க – அவன் கண்ணில்பட்ட ஹோட்டலிலுள் நுழைந்து ஒரு தயிர் வடைக்குச் சொன்னான்.

***

அப்போது 20 வயதிருக்குமா…? சரியாக மீசை கூட அடர்ந்திருக்கவில்லை.

‘எலக்ட்ரிக்கு வேலை படிக்கியா மூதி? நாலுநாளா தோட்டங் காயுறது கண்ணுல படலை? வயரும் பல்புமா பொழுதக் கழிக்காங். ஆயி அப்பன் உசிரோடு ஏங் உசிரும் முழுங்கப்போதியாவில?’

காலையிலிருந்து அவன் தொண்டைக்கு ஒருவாய் ‘வெந்நித் தண்ணி’ காட்டாத கிழவி, சேலை நெகிழ்ந்ததுகூட உணராது, இவன் முன்னுச்சி மயிரைப் பற்றிக் குலுக்கி, கன்னத்தில் இடித்தாள்.

பல், உதட்டைக் கீற உப்பாய்க் கரிந்தது. எலக்ட்ரிக் ஷாப்பில் உடன் வேலை பழக அமர்ந்திருந்த விடலைகள், நமுட்டாய்ச் சிரித்தது ரோஷத்தைக் கிளற, தான் கழற்றி கொக்கியில் மாட்டியிருந்த சட்டையைக்கூட எடுக்கத் தோன்றாது. அனைத்தையும் உதறிவிட்டுக் கிளம்பி விட்டான்.

‘முழுங்குனவனே, சோறு முழுங்க வீட்டுக்குத்தான வருவ?’ கிழவி ‘தடதட’வென பின்னால் முடியவிழ ஓடி வந்தாள்.

தண்ணீரில்லாத் தோட்டத்தில் அவன் எங்கேயிருந்து குளிரப் பாய்ச்ச? தோள் வலிக்க முந்தாநாள் கூட சுமந்து ஊற்றினான். வீங்கிய உதடுகளை நக்கியவன், மிஞ்சிய வெறுப்பில் பஸ் ஏறி விட்டான்.

‘போ… நாசமா போ..’ – கிழவி ஆச்சரியத்தில் கத்திக் கொண்டே பஸ் பின்னாக மறைந்தாள். அவள் அடியும் வசவும் சலித்துப் போனது அவனுக்கு. வேட்டியின் கீழிருந்த அரை டிராயரிலிருந்து மூன்று ரூபாவில் சீட்டும் எடுத்து விட்டான்.

இதெல்லாம் ஏழு வருடங்களுக்கு முன். இங்கு வந்திறங்கிய போது மழைவின் அறிகுறியாய்க் குளிர்ந்த காற்றடித்தது. காலி வயிறும், புது ஊரும் அவனைப் பயமுறுத்தின.

‘கையில் நாலு காசிருந்தா தெம்பா இருக்கும்.’ எண்ணியவன் ஒரு ஓரமாய் அமர்ந்தான். பலர் நடந்த பிளாட்பாரத் தரை, நொறுநொறுத்தது. வெற்றுடம்பை, சாய்க்க முடியவில்லை. மன அதிர்ச்சியும் ஆயாசமும் கண்ணைச் சுழற்றின. குறுகி சிறு தூக்கம் போட்டவன், பொழுது இருட்ட எழுந்தான். செய்வதறியாது அங்குமிங்குமாய் நடந்தான். மீந்திருந்த 20 காசில் என்ன வாங்க? பசி அகோரமாய் முழுச் சாப்பாடு கேட்டது.

கடைகளைப் பூட்ட ஆரம்பித்தனர். பசி, கால்களை வலுவிழக்கச் செய்தது.

‘இப்பவே இப்படிப் பிறாண்டி அசத்துதே! நாளைக்கு..?. நாலு நாட்களில் குப்பைத் தொட்டி அருகில்தான். விலா எலும்பெல்லாம் வரிவிட பிணமாகிக் கிடப்பது போன்ற கற்பனையில் அவன் உடல் மேலும் சில்லிட்டது.

‘ஒரு வேல கிடைக்காதயா போயிறும்?’ தைரியம் நின்றது சொற்ப நேரமே.

‘படுக்கக்கூட இடமில்லாது…?’ சுற்றி வந்த கண்கள், பருத்த குப்பைத் தொட்டியின் மீது நின்றன. இருட்டு அடர்த்தியாயிருக்க நினைப்பு தயக்கமாய்த் தலை நீட்டியது.

‘சே… எச்சிலையா?’

‘வயத்துக்குப் போட காசில்லை. விடிஞ்ச பெறவு பொறுக்க ஏலுமா?’ நெருங்கியவன், தன் நிலைமையை முழுவதுமாக உணர அழ ஆரம்பித்தான்.

தோளை யாரோ தட்டினார்கள்.

விதிர்த்துத் திரும்பினான்.

‘துன்னத் தேடினியா?’ கேட்டாள்.

பசி, அவன் கண்ணில் தெரிந்திருக்க வேண்டும். குறுகிக் குனிந்தான்.

கண்கள் மேலும் கலங்கிச் சொரிந்தன.

“வா” – கூடையை இடுப்பிலிருத்தியவள், முன்னாக நடந்தாள்.

‘இந்தச் சிறுபெண்ணைத் தொடர்ந்தா?… – எங்கே?’ கேட்கத் தோன்றாமல் அவன் தொடர, பஸ் ஸ்டாண்டின் பின்வாசல் வழியே வெளியேறி ஒரு சந்தில் நுழைந்தனர்.

மழை வலுத்தது. காய்ந்த தரையில் துளிகள் விழுந்து மறைந்து பின் சற்றே சகதியானது. கழிவு நாற்றம் தூக்கலானது.

அவள் ஒரு திண்டின் மேலேறி நின்று “இங்ஙனதான்” என்று குரல் கொடுத்தாள்.

இரண்டு கடைகளின் நடுவே மேடை போலிருந்த திண்டு என்றோ அதில் வழவழப்பாய் பூசியிருந்த சிமிண்டு இன்னும் சிறிது ஒட்டிக் கொண்டிருந்தது.

இருபக்க தகரக் கூரை நீண்டிருந்ததில் மழைநீர் படாது காய்ந்திருந்த தரை அவனுக்குத் தெம்பு தந்தது. மேலேயிருந்த மழைநீரை சிறுது உதறி, கால்களைத் தேய்த்தவன், திண்டில் ஏறினான்,

கூடையை ஓரமாக வைத்து நெடுக நடந்தவள், ஒரு ஜன்னலருகே குனிந்து யாருக்கோ குரல் கொடுத்தாள். நீட்டப்பட்ட துணி முட்டையுடன் வந்தவள்,

“என்னோடதுதேங். இங்கன கொடுத்து வச்சிருப்பேன்”. அவன் பதிலுக்குச் சிரிக்க முயன்றான்.

சிரமமாய் இருந்தது.

கிழிந்த வாழை இலை ஒன்றால் திண்டைப் பெருக்கினாள். கூடையிலிருந்து வாழைப் பழங்களை எடுத்து மடியில் போட்டுக் கொண்டு, பேப்பரில் பொதிந்த பொட்டலத்தைப் பிரித்து நடுவாய் வைத்தாள்.

பல்லாங்குழியாய் மழைத்துளி, துள்ளித்துள்ளித் தெறித்ததைப் பார்த்தபடி நின்றிருந்தவனை,

“உக்காந்து துன்னு” அதட்டினாள்.

நாலு இட்லியும் சாம்பாரும் தெரிய, அவன் வாயில் நீர் சுரந்தது.

“ஒனக்கு?”

“இதாங். எனக்கு ஒண்ணு உனக்கு முணு, பழம் இருக்குதுல்ல.”

மழைநீரில் கை கழுவி, இவனுக்கு முன்றை ஒதுக்கி வைத்தவள், சாப்பிட ஆரம்பித்தாள்.

கூடையில் சுருண்டு கிடந்த கனகாம்பரத்தைப் பார்த்தவன்,

“பூ யாவாரமா?” கேட்டான்,

“ம்.” அவள் மேலே பேசாது சாப்பிட, அவனும் குளிந்தான் சாப்பிட, கைவிரல்கள் நடுங்கின. வறண்ட இட்லி சாம்பார், அமிர்தமாய் சுவைத்தது. வயிறு நிறையாவிடினும் உயிர்மீண்டது.

இருவரும் கைகளை மழைநீரிலேயே கழுவிக் கொள்ள, இலை எடுத்துச்சுத்தப்படுத்தினாள், கைகுவித்து, நீர்சேர்த்து பிடரி, முகம் எனத் தேய்த்துக் கழுவிக் கொண்டாள்.

“சில்லுனு இருக்குது, பழம் சாப்பிடறியா?”

தோல் கருத்த வாழைப் பழங்களை நீட்ட, ஆளுக்கு இரண்டை விழுங்கினர். மெல்லுவதற்குள் அது வழுக்கி உள்ளே இறங்கியது. அந்தனைக் கனிந்த பழம்!

“பொட்டிக் கடையில விக்க முடியாததை அடிக்கோசரம் எனக்குக் கொடுத்திடுவாரு நாடாரு அண்ணாச்சி”

“ம்”

“நானு ஞாயிறுதோறும் அவரு கடை மாதா படத்துக்கு ஒண்ணர முழப் பூவத் தந்துருவேனில்ல?”

பெருமையாகப் புன்னகைத்தாள்.

*உள்ளாற நவுரு, வாடையாயிருக்கு”

இப்போது தெருவிளக்கு மங்களாய் அவர்கள் முகத்தில் பட்டது. அவளை நிமிர்ந்து பார்த்தான். முகம் கழுவியபின் புதிதாய்ப் பளிச்சிட்டாள்.

‘பதினஞ்சு வயசிருக்கும்’ கணித்தான்,

பூப்போட்ட பாவாடையும், ஆண்கள் போடும் சிலாக் சட்டையுமாக இருந்தாள். முடி செம்பட்டையாய் இருந்தாலும், கண்கள் நல்ல கருப்பில் மின்னின. மெலிந்த கைகளின் சிவப்புக் கண்ணாடி, வளையல்கள் அவ்வப்போது சினுங்கியது இனிமையாயிருந்தது.

மௌனம் சங்கடமாயிருக்க,

“பூ நாளக்கு வித்துப் போடுமா?” கேட்டான்.

“ம்.. கனகாவரந்தான்”

“நல்ல யாவாரமா?”

“நீ வூட்டுல சொல்லிக்காம வந்துட்டியாக்கும்?” அவள் சாய்ந்து சாவதானமாய்க் கேட்க, அவன் முகம் இறுகியது.

“ம்”

“வசதியா… இல்ல கஷ்டந்தானா?”

“ஏதோ ரெண்டு வேள கூழு, சோறு உண்டு”

“எல்லாரும் மாதிரிதான். நானு இங்கன வந்து முணு வாரந்தாங் ஆவுது”

லேசாய் வாய் திறந்து அவளைப் பார்த்தான்.

“இதுக்கு முன்ன?”

“இதே பூ யாவாரந்தான். ஆயி அப்பன் கிடையாது. சின்னாத்தா வூடுதாங். அந்த ஊருல நல்ல சேல்ஸ்சு. எங்கையில் துட்டுப் புழக்கம் சாஸ்தி பஸ்சு ஏசண்டு ஒருத்தன் சிநேகம்… ம்ப்ச்…. நம்பி ஏமாந்தாச்சு போ… அவனும் அவஞ்சிரிப்பும்….”

முணங்கிய அவள் முகம், வெறுப்பில் சற்று முற்றித் தெரிந்தது.

அவன் பேச்சைத் தொடரத் தெரியாமல், அவளையும் மழையையும் மாறிமாறிப் பார்த்தவாறிருந்தான். காதின் சிறு வளையமும், இளங்கன்னங்களும் அவளைச் சிறுமியாகத்தான் காட்டின.

“அவனுக்கு வேற சிறுக்கிங்க சகவாசம். சம்பாரிச்ச துட்டெல்லாங் அவங் குடிக்கும் கூத்தியாளுக்குமாக் கரைச்சு நாசமாத்தான் போனேங்”.

மூக்கை அழுந்த தேய்த்து, விரல்களை நெரித்து விட்டுக் கொண்டாள்.

அழுகை முட்டுகிறதோ?

“சின்னாத்தா ஒப்பாரியும், அவ புருசன் ஏச்சும் ஒதையும் தினத்துக்கும் தாங்குமா சொல்லு? மனசு சும்மாவே நொந்து கிடக்குது. அதுங்க வேற. அதான் இந்த ஊருக்கு வந்தாச்சு”.

‘இத்தினி சின்னப் பொண்ணு நீ – ஓனக்கு ஒரு கத… அதிலியும் காதலு கத!’ வியந்தவன்,

“உனக்கு எத்தினி வயசு?” வினவினான்.

“ஏங்? ஒனக்கு எத்தினி? நீ கூடத்தேங் சின்னப்புள்ள கணக்கா அமுத” கேலி பேசினாள்.

“உனக்கு ஆயி, குடும்பம்?”

இல்லையென்பதாய் தலையசைத்து, தன் சோகத்தைச் சுருக்கி சொட்டாக விட்டான்.

“அப்ப ஒனக்கு எலக்டிரிக்கு வேல தெரியுமாக்கும்?”

“சுமாரா”

“முழுசா படிக்கிறமட்டும் கிழவியோட இம்சையைத் தாங்கிக்கிட்டிருக்கலாங்” – அபிப்ராயப்பட்டாள்.

“மதுரயில ஒண்ணு விட்ட மாமா இருக்காரு.”

“அப்ப இங்கன ஒன் இறக்குன?”

“துட்டில்ல”

“அதுசரி. படு. நாளக்கி நா தரேங்“

“ம்ப்ச்… நீ கஷ்டப்பட்டு சம்பாரிச்ச துட்டு”

“அவங் குடிச்சு அழிச்சாங். உடம்பொறப்பாட்டம் இணக்கமா பேசத நீ… நீ நல்லா வா… சந்தோஷப்படுவேங்.”

முதன் முதலாய்க் கேட்ட நல்ல வாக்கு அது – இனித்தது.

கோணியை உதறி விரித்தாள்.

“படு” என்றவாறு கவரோரமாய்ப் படுத்துப் போர்த்திக் கொண்டாள். அவனுக்கு திடீரெனக் கூச்சமாயிருந்தது.

“நா இருக்கேங்” என்று குத்துகாலிட்டு அமர்த்தான்.

“அது சரி. நனஞ்ச வேட்டியோட சீக்குக்கோழி மாதிரி கிட, நோவு கண்டா நாள மதுரை போனக்க மாதிரிதான்”. அதட்டினாள்.

அவனுக்கு அவள் மீது விகல்ப எண்ணம் ஏதும் தோன்றவில்லை. சிறு வயதுத் தோழியாகத்தான் தோன்றினாள். சினிமா நாயகிகளைக் கண்டும், ஆபாசப் புத்தகங்களிலும் அவன் உடம்பு கொதித்துப் போவது உண்டுதானென்றாலும், அவளிடம் அவனுக்கு நன்றியும், பிரியமுமே வந்தன. முடித்த அளவு தள்ளிப் படுத்தவனைப் போர்த்தி விடுகையில் வளையங்கள் கலகலத்தன.

“இருக்கது ஒரு போர்வ, தள்ளிப் படுத்தா எட்டுமாக்குங்?”

அவன் தாயை அறிந்ததில்லை. இப்போது தொண்டை அடைத்தது. நெஞ்சு பொங்குகிறதே அதுபோலத் தான் அருகாமையில் இருக்குமோ? அவன் அவளருகில் நகர்ந்தான்.

குனிர்எட்டாது வெதுவெதுப்பு கூடியது. மனம் அலுக்கும் வரை கவலைகளில் அலைபாய்ந்து பின் உறக்க விளம்பில் வந்து நின்றது. மெள்ள கனவுலகின் உள்ளிருக்கையில் கூரை நடுங்கும்படி இடி இடிக்க அவன் உதறி திரும்பிப் படுத்தான். பிறகே ஒரு பெண்ணின் அண்மை நினைவிற்கு வர, எழ முயற்சித்தவனை அவள் கைகள் தடுத்தன.

“கிட. மனசுல கள்ளமில்லேன்னா எதுவும் தப்பில்ல, ஊரு சனங்க ஏதுமில்லாத அனாதங்க நாம. தட்டிக் கேட்க யாரு? நாமதான் நமக்குக் காவலு”.

குரல் அழுகையில் கரகரத்தது.

இருளில் இவளும் பலதும் நினைத்துக் குழம்பிக் கிடந்திருக்கிறாள். மெலிந்த தோள்களை அவன் கைகள் ஆதரவாய்ச் சுற்றிக் கொண்டன. தொளதொளப்பான சட்டைக்குள் தோள் எலும்பாய்த் தட்டுப்பட, அவன் நெஞ்சு மேலும் இளகியது.

“கண்டதையும் யோசிக்காத புள்ள”

“ஒனக்கு பயமில்ல?” மூக்குறிஞ்சியபடி கேட்டாள்.

“முன்ன இருந்துச்சு. இப்ப இல்ல”.

“அது சரி.”

“சின்னப் பொண்ணு நீ. இந்தனி தகிரியமா சம்பாரிக்கற. பிழைக்கிற எனக்கு இருவது முடிஞ்சிருச்சு”

“சரிதான். தகிரியந்தாங் வேணும்.” அவள் குச்சு விரல்கள், அவன் தலையை ஆதுரத்துடன் கோதின.

“யாருமில்லேன்னு ஒஞ்சிடக்கூடாது… என்னா?”

இதுகாறும் விம்மியவள், அவனுக்குத் தைரியம் சொன்னாள்.

இதுவரை அனுபவித்தறிந்திராத ஆதரவில், தாய்மையில், அவனுள்ளே இறுக்கிப் பொதுமி வைத்த மணல் குன்று குளிர்ந்து சரிந்தது.

அவன் முதுகு குலுங்க ஆரம்பித்தது. பின் பெரும் கேவல்கள் வெடித்துக் கிளம்ப,

“ந்தா… வேணாந்.துரை. வேணாம்பா ஒண்ணுங் குறஞ்சும் போவலை. நீ நல்லா வருவே பாரேன்” ஆசுவாசப்படுத்தினாள்.

“தொழிலத் திருத்தமாக் கத்துக்கிடு என்னா? நாணயமா இரு . வேல குமிஞ்சுடும்” அறிவுறுத்தினாள்.

முதுகை அவள் கைகள் நீவின.

எத்தனை நேரம்? தெரியவில்லை.

குழம்பிக்கிடந்த மனதுள் நிம்மதியும் தெளிவும் பரவித்தூங்கிப் போனான்.

***

விழித்தபோது கீழே சேறும் சகதியுமாயிருக்க, வானம் நிர்மலமாய்ப் பளிச்சிட்டது!

முகம் கழுவி இட்லி, டீ சாப்பிட்டான். வேட்டி காய்ந்திருக்க, சட்டை இல்லாததுதான் விசித்திரமாயிருந்தது. பேசியபடி நடந்து பஸ் ஸ்டாண்டின் மூலையிலிருந்த சிறு பிள்ளையார்கோயிலுக்குள் நுழைந்தனர்.

“சாமி எண்ணம் உண்டில்ல?”

உதட்டைச் சுழித்தான்.

“நம்மளப் போலவுங்களுக்கு இவரயும் விட்டா யாரு?”

பொட்டு விபூதி எடுத்து அவனுக்கு இட, தன்னிச்சையாய் அவன் கண்கள் மூடிக் கொண்டன.

“இந்தப் புள்ள நல்லாயிருக்கணும்பா” வேண்டிக் கொண்டான்.

“இப்ப உம்முகம் மதிப்பா, களையாத் தெரியுது. வேலைக்கு வெளியே இப்படி போ”

அவள் காலில் விழுந்து வணங்கத் தோன்றியது ஒரு கணம்.

“நா ஒரு நிலைக்கு வந்ததும் ஒன்னைய வந்து கூட்டிப் போறேங். என்னா?” குழறினான்.

“ஒங் கலியாணத்தப்பக்கூப்பிடு அண்ணியப் பாக்கவருதேங்” சிரித்தாள்,

பொட்டலத்தினின்று துணி ஒன்றை உருவி நீட்டினாள்.

சிறு வெள்ளைக் கட்டம் போட்ட கருப்புச்சட்டை. புதிது போலத் தெரிந்தது.

“ஏது?”

“போடு, சொல்லுதன்”

புத்து போடும் உற்சாகம் அத்தச் சூழ்நிலையிலும் அவனுக்குள் எழுந்தது.

“அவங் குடுத்தது. நா போடறதில்லை. ஒனக்கு நல்லாயிருக்குப் போ.”

“நா இதெல்லாம் மறக்க மாட்டேம் புள்ள”

“அது சரி.. கிளம்பு” ஆதரவாய்க் கிடைத்த ஒரு உறவு அறுபடும் வேதனை அவள் கண்களிலும் பரவியது.

“பஸ்ஸு ஸ்டார்ட் எடுத்து நேரமாச்சு…. ஏறு” என்று அவன் கையில் 10 ரூபாய்த் தாளைத் திணித்தாள்.

கூட்டத்தில் ஏறி, நெளிந்து குனிந்து ஜன்னல் கம்பி வழியே தேட அவளில்லை. உள்ளம் பதைத்தது.

‘கிறுக்கன்… புள்ளப் பேரக் கூட கேக்க மறந்து…’ பஸ் நிலையத்தை விட்டு வளைந்து வெளியேறியது.

***

தட்டில் பாதி வடையை விட்டுவிட்டு வெளியேறினான். இங்கு வருவது இது மூன்றாம் முறை. முதல் சம்பளத்துடன் வந்தது இங்குதான். அதுவரை எடுபிடிவேலைகள் அரைகுறைச் சம்பளம்.

“ஒரு சின்னப் பொண்ணு பூ வித்துட்டு இருந்ததுங்களே?”

“பேரு”

“தெரியலை”

“எப்படி”

“மூணு வருஷத்துக்கு முன்ன”

கேலியாய், எரிச்சலாய் வேறு ஜோலிக்குத் திரும்பினார்கள். தன் கல்யாணப் பத்திரிகையோடு வந்தவன், கிறுக்கனாய் நாள் முழுதும் இங்கேயே சுற்றி வந்தான்.

மதுரையில் அவன் தொழிலுக்கு நல்ல பேர். ‘வேல சுத்தம் – பையன் நாணயந்தான்’ என்று வேலைகள் தேடி வந்தன. உள்ளங்கை எரிய ஒயர் இழுத்தான். கை காய்ந்து சிவந்திருக்க வயிறு, வாழ்க்கை காயாது செழித்தது.

சப் காண்ட்ராக்ட் எடுத்து ஒண்டியாய் உழைத்தான். புண்ணான கை நிறைய பணம் நின்றது.

டைரக்ட் காண்ட்ராக்டிற்கு உயர்ந்தபோது, பெண் வீட்டார் தேடி வந்தனர்.

கல்யாணம் சிறப்பாக நடந்தது. அத்தைக் கிழவி வந்திருந்து, அவன் வாங்கித் தந்த சேலையில். “இதெல்லாம் இருந்து பாக்காம போயிட்டா. உன்னையப் பெத்தவ” என்று பினாத்தினாள்.

பூக்காரச்சின்னப் பெண்ணை புதுச்சேலையில், கறிச்சோறிட்டு, சந்தோஷப்படுத்த முடியாததில்தான் அவனுக்கு ஏக வருத்தம்.

அவள் வாயால் ‘நல்லாயிருப்பே’ என்ற சொல் கேட்க முடியாத ஆதங்கம்.

புதுமனைவி பொம்மை மாதிரி அழகாய்த்தானிருந்தான், 12 பவுன், பாத்திரம் பண்டம் இருந்தது. தினத்துக்கொரு சினிமா பார்த்து அதன்படியெல்லாம் உடுத்திக் கொண்டாள். தன் சுகம் மட்டுமே அவளுக்குப் பிரதானம், புருஷனுக்கும் கூட. தரநேசம், நேரம் இருக்கவில்லை.

தினம் பூ. ஸ்வீட், சேலை, வளையல் என்று வாங்கி வந்தால்தான் சிரிப்பு, சோறு!

சிமெண்ட் சுவரில் தோள் தெரிய டிரில்லிங் செய்து, நொந்து வருபவன், அவளைக் கொஞ்சி வெளியே அழைத்துச் செல்ல வேண்டும்; அவள் குறுவிழிகள் பார்ப்பவையெல்லாம் வாங்கி நீட்ட வேண்டும்.

“அடிக்கு பன்னெட்டு ரூவாதான் மார்கெட் ரேட்டு. நீங்க பத்துக்கு ஏஞ் செய்யணும்?” மாங்கா மால வாங்கிரணும் மறுவருஷம்” என்று அதட்டினாள்.

ஆறு மாதத்தில் அவனுக்கு விழி பிதுங்கி விட்டது. நேற்று அவள் கேட்ட சோப்பை அவன் வாங்கி வரவில்லையென்று இரண்டு மணி நேரம் அழுகை, விசும்பல்.

சட்டியில் சோறில்லை.

வயிறு காய, அவனும் இரவு ஏங்கி அழுதான்.

பேர் அறியா ஒரு சிறு பெண்ணின் தன்னலமில்லாத அன்பை எண்ணி, அவள் அணைப்பு தந்த நிம்மதியை எண்ணி!

‘நீ போட்ட பிச்சை புள்ள இந்த வாழ்வு. இவ ஆட்டம் போடுதா… எங்கன கிடக்க நீ?’ பிதற்றினான். தலையணை நனைந்து போனது.

***

தங்க மோதிரம், கடிகாரம் என அந்தஸ்தாக உடுத்தி நின்ற அவன் அழுததைப் பலர் திரும்பிப் பார்த்துச் சென்றார்கள். கவலைப்படாமல் பஸ்கள் அங்கும் இங்குமாய் உறுமலுடன் உருண்டன.

– ராஜம் – ஜூலை 1994, பல்லக்குப் பயணம், முதற் பதிப்பு: செப்டம்பர் 2005, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *