ஏண்டா நாயே..,என்ன திமிரு இருந்தா பைக்க திருட பார்த்திருப்ப?!.
ஏட்டைய்யா யார் இவன் என்ன கேஸ்?.,திருட்டுபய அய்யா பெரிய இடத்திலையே வேலையை காட்ட பார்த்திருக்கான்.
இவன் மேல வேற எதுவும் கேஸ் இருக்கா?.,இல்ல அய்யா!.
டேய் இங்க வா., உன் பேரு என்ன?.,
தினேசு சார்.,
எந்த ஏரியா?.,
அண்ணாநகர்.,
தெருவின் பெயரை கேட்ட நிமிடத்தில் அவன் கன்னத்தில் விழுந்த அறையின் சத்தத்தில் ஸ்டேசனே அதிர்ந்தது. ஏண்டா உங்க ஏரியாகாரங்க சும்மாவே இருக்க மாட்டிங்களாடா, எங்க தாலிய அறுக்குறிங்க?..இதுல புதுசா திருட்டு வேறயா?.
இல்ல சார், நான் பைக்க தொட்டு உட்கார்ந்துதான் பார்த்தேன் என தேம்பியவாறு பதிலளித்தான்.,
ஊரான் பைக்ல ஏறி உட்கார்ந்து பார்க்க என்ன நீயா முதல்போட்டு வாங்குன?.,
ஏட்டையா கம்பிளைன்ட் எழுதி வாங்கிட்டு FIR போட்டு உள்ள வையுங்க அப்பதான் புத்தி வரும்.
சார் நான் அப்படிபட்ட ஆளு இல்ல சார்.,
டேய் அய்யா சொல்லிட்டாருல வா என சட்டையை பிடிச்சு இழுத்து சத்தம்போடாம இங்கையே உட்காரு என ஒரு முலையில் உட்காரவைத்தார் ஏட்டையா!.
அண்ணாநகர் ஏரியா பேர கேட்டாலே போலிசுக்கு கோபம் பொத்துகிட்டு வரும் , B2 ஸ்டேசன்ல இருக்கிற ஏரியாலையே ஒரே கரும்புள்ளி ஏரியா. உண்மைய சொல்லனும்னா இந்த ஸ்டேசனே இவங்களுக்காக தான் இயங்குது. ஒட்டு மொத்த சிட்டிக்கே இங்கயிருந்துதான் கஞ்சா சப்ளை அதுமட்டுமில்லமா அசால்ட்டா மட்டை பன்ற சம்பவக்கைகளுக்கும் புகழிடம்..!
தனம் அக்கா உங்க தினேச போலிஸ் புடிச்சிட்டு போயிட்டாங்க., தர்ம முனீஸ்வரா எ புள்ள எந்த வம்பு தும்புக்கும் போகமாட்டானே, என்ன நடந்துச்சுனு தெரியலையே.,தலையில் அடித்துக்கொண்டு தலைவிரிக்கோலமாய் கவுன்சிலர் வீட்டு வாசலுக்கு ஓடிப்போனாள் .
மாரியண்ணே., மாரியண்ணே.,என்ன தனம் இவ்வளவு பதட்டமா அழுதுகிட்டு வந்திருக்க?!.அண்ணே என் புள்ளைய போலீஸ்ல புடிச்சிட்டு போயிட்டாங்களாம்., ஏன் என்ன பிரச்சனை அவன்தான் யார் வம்புக்கும் போகமாட்டானே., தெரியலையே அண்ணே என் புள்ளைய அடிச்சுப்புற போறாங்கண்ணே, இரு நீ அழுகாத சட்டைய போட்டுகிட்டு வரேன்!.
மாரி தான் அந்த ஏரியா கவுன்சிலர் தொடர்ச்சியா இருபது வருசத்துக்கு மேல, அந்த ஏரியா வாசிகளுக்கு நல்லது கெட்டது எல்லாத்துக்கும் மாரிதான் முதல் ஆளா நிப்பாரு. தப்பா போற அந்த ஏரியா பசங்கள திருத்த போர்டு விளையாடுறது, ஃபுட்பால் ஆட என பசங்களுக்கு தன்னால முயன்ற எல்லா உதவிகளையும் செய்வாரு.
அண்ணே வணக்கம்!.,
வாங்க கவுன்சிலர் என்ன இந்த பக்கம்?!.,
அண்ணே நம்ம ஏரியா பையன் எந்த வம்புக்கும் போகமாட்டான் நல்ல பையன் பாவம் அப்பா இல்லாதவன், அவன ஸ்டேசனுக்கு கூட்டிட்டு வந்ததா சொன்னாங்க அதான்.,
யாரு?!.,பேரு கூட தினேசு,
ஓ அந்த பைக் திருட்டு கேஸா?!.
ஐயோ!., என் புள்ள அப்படியெல்லாம் செய்யமாட்டான் சாமி என ஏட்டையா காலில் விழுந்து அழுதாள் தனம்.
ஏட்டையா என்ன அங்க சத்தம்?!.,
அய்யா அண்ணாநகர் கவுன்சிலர் வந்திருக்காரு அந்த பைக் திருட்டு.,அதான பார்த்தேன் என்னடா இன்னும் யாரும் வரலையேனு!.,சார் அந்த பையன் அப்படிபட்டவன் இல்ல சின்னபுள்ளையில இருந்து நான் பாக்குறேன், பாவம் சார் அவங்க அம்மா அவன கஷ்டப்பட்டு வளர்க்குது. அப்பா இல்லாத பையன், நீங்கதான் மனசு வைக்கனும்.
ஏட்டையா இன்னும் FIR போடலைல?!., இல்ல சார்.,சரி எழுதி வாங்கிட்டு அனுப்பிவைங்க. இங்க பாருங்க மாரி உங்களுக்காக தான் இப்ப விடுறேன், இனி ஒருதடவை இதுபோல நடந்துச்சுனா அப்புறம் சிரமம் தான்.
ரொம்ப நன்றி சார்..!
இருக்கட்டும் கூட்டிட்டு போங்க. தினேசு அடிச்சாங்களாடா.,
அதெல்லாம் இல்லம்மா என்றான் மழுப்பலாக.!
என்னடா இது புது பழக்கம், உங்க ஆத்தா பாவம் நாலுவீட்ல பத்து பாத்திரம் தேய்ச்சு உன்னை வளர்க்குது நீ இப்படி செய்யலாமா?!.
அண்ணே சத்தியமா நான் திருடல..!
எனக்கு தெரியும்டா உன்னை ஆனா பாக்குறவுங்க என்ன சொல்லுவாங்க யோசிச்சுபாரு.,
பாவம் உங்கம்மா ஒரே அழுகை, அதுக்கு உன்னவிட்டா யாருடா இருக்கா?. உனக்காக தான் அது உசுரு வாழுது பாத்து நடந்துக்க, தனம் புள்ளைய கூட்டிட்டு போயி சூடா தலைக்கு தண்ணிய வச்சு ஊத்து.
அண்ணே என் உசுரு இருக்குற வரைக்கும் இந்த உதவிய மறக்கமாட்டேன், நீ என்ன தனம் பெருசா பேசிகிட்டு இவன் யாரு என் ராமு மகன் , இன்னைக்கு நான் இந்த நிலைமைல இருக்க காரணமான என் கூட்டாளி மகன் அவனுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்.,போ போயி ஆகவேண்டியத பாரு.
நான் யாருக்காக உசுரு வாழனும், ஒத்த புள்ளையும் சொல்ற பேச்ச கேட்காம தெரியுது என புலம்பியவாறு அடுப்பை பத்தவைத்து சுடுதண்ணி போட்டாள்.
இப்ப எதுக்கு அவன கரிச்சு கொட்டுற என்றால் தனத்தின் அம்மா?!.
ஆமா உனக்கு என்ன நீ எல்லாம் பேசுவ, கஷ்டப்படுவது நான்தான உங்க ரெண்டுபேரையும் தலையில கட்டிட்டு அந்த மகராசன் போய் சேர்ந்திட்டான்.
‘இங்க குடிக்கவே கஞ்சி இல்லையாம் தொறைக்க கொப்பளிக்க பன்னீரு கேட்குதாம்’
பைக் ரேசு தான் இப்ப இவருக்கு பெரிசா இருக்குது, என்ன செய்ய எல்லாம் என் தலையெழுத்து என்றவாறு விசும்பினாள்..!
தினேசு அம்மா சொல்றத கேளுய்யா.,உங்கப்பா ஒருத்தரை இழந்தது போதும்ய்யா இன்னொரு இழப்பை தாங்கிக்கிற சக்தி எங்களுக்கு இல்லய்யா!. அந்த பாழப்போன பைக் ரேஸ் உனக்கு வேணாம்ய்யா, நீ எப்பவும் போல வேலைக்கு போனமா வந்தமானு இரு.
அம்மா இனி எப்பவும் ரேசுக்கு போகமாட்டேன், ப்ளீஸ் மன்னிச்சுக்கம்மா என தனத்தின் தாடையை தாங்கினான். அவளின் கண்ணீர் அவன் உள்ளங்கைய நிறைக்க..!
ஆம்., தனத்தின் வீட்டுக்காரர் ராமு அந்த ஏரியாவிலையே பெரிய ரேசுக்காரன். ஆட்டோ ஓட்டுவது முழுநேர தொழிலாக இருந்தாலும் வாரத்தில் ஒருநாள் ஞாயித்துக்கிழமை மட்டும் ஆட்டோவுக்கு லீவு, அன்னைக்கு அவர ரேசுவிடுற இடத்திலதான் பார்க்க முடியும். அவர் மேல பணம் கட்ட நிறையபேரு காத்துகிடப்பாங்க, அந்தளவுக்கு திறமையான வித்தைக்காரன். இந்த ரேசுக்காகவே தனியா ஒரு புல்லட் பைக்க அவரே ரெடிபன்னி வச்சிருந்தார் அந்தளவுக்கு அதீத காதல். இந்த ரேசு ஓட்டுற அழகில்தான் தன்னையே இழந்தாள் தனம்!.
ராமு எங்க போனாலும் மாரியும் கூட போவான் அந்தளவுக்கு ரெண்டு பேரும் நல்ல பெட்டு, மாரிய அந்த தடவை கவுன்சிலர் எலெக்சன்ல நிக்கவைத்து ராமுதான் மெனக்கெட்டு ஜெயிக்கவைத்தான். மாரி தன் தலைமையிலயே ராமுக்கும் தனத்துக்கும் கல்யாணம் செஞ்சுவைச்சான் எல்லா எதிர்ப்புகளையும் மீறி..!
ராமு மேல பொறாமை கொண்ட மத்த ஏரியாக்காரங்க எப்படியாவது இவர மண்ண கவ்வ வைக்க காத்திருந்தாங்க. வழக்கம்போல ரேசுக்கு அழைச்சவங்க , அன்னைக்கு பிளான் பன்னி அவர் ரேஸ் ஓட்டும்போது இடையில தந்தி போஸ்ட்ட சாய்ச்சுவிட்டு அவன கொலை செஞ்சிட்டாங்க. மாரி எவ்வளவோ போராடி பார்த்தான் ஆனா போலிஸ் ரிப்போட்ல தந்திபோஸ்ட் விழுந்து விபத்தில இறந்ததா ரெக்கார்ட குளோஸ் பன்னிட்டாங்க. ராமுக்காக அந்த ஏரியாவே தனத்தோட சேர்ந்து அழுதுவடிச்சது. ரெண்டுவயசு தினேசு ஏதும் புரியாம விளையாடி தெரிஞ்சான்.
அன்னைக்கே எல்லாத்தையும் தூக்கிபோட்டுட்டு புள்ளைக்காக வாழ ஆரம்பித்தாள் தனம். அம்மாக்காரி எவ்வளவோ கெஞ்சியும் இன்னொரு கல்யாணம் செஞ்சுக்க மாட்டேனு பிடிவாதமாய் இருந்துவிட்டாள், ரேசு நினைப்பே வரக்கூடாதுனு மகன பொத்தி பொத்தி வளர்த்து வந்தா, அவங்க அப்பா ஆக்சிடெண்ட் ஆனா பைக்க கூட வீட்டுக்கு எடுத்திட்டு வரல..!
ஆனா , விதி வலியதுனு அவளுக்கு தெரியாமலே போச்சு..ராமுவின் ரேசு மீதான அதீத காதல் தினேசையும் விட்டு வைக்கல!.
இன்னைக்கு அதுதான் அவனை போலீஸ் ஸ்டேசன் வரை கொண்டுபோய் விட்டது. ரேசில் தோற்றுப்போன பணக்கார வீட்டுப்புள்ளைங்க, தங்களோட செல்வாக்க பயன்படுத்தி இவன் மேல திருட்டு பலி சுமத்திட்டாங்க.
பட்டறையில் வேலை செய்து சேர்த்துவச்ச காசவைத்து பழைய புல்லட் ஒன்றை விலைக்கு வாங்கி தயார் செய்தான். அந்த பைக்கின் மூலமே ரேசில் கலந்துகொண்டான், பைக் அவன் கையில் வந்த நாளிலிருந்து வெற்றியனைத்தும் அவன் வசமானது!.
ஒரு இனம் புரியா உறவு அவனுக்கும் அந்த பைக்குக்கும் இருப்பதாகவே அவன் நினைத்தான், அவன் அம்மாவுக்கு தெரிந்தால் அவள் ரேஸ் ஓட்ட அனுமதிக்கமாட்டாள் என்பதால் தான் வேலை செய்யும் பட்டறையிலையே அதனை நிறுத்திவைத்தான். தினந்தோறும் அந்த பைக்கை துடைத்துவிட்டுதான் அடுத்தபடியாக வேலையை செய்ய தொடங்குவான்.
ரேஸ் மேல் அவனுக்கு ஈர்ப்பு வர அனிதாவும் காரணமாகிப்போனாள், அனிதா கவுன்சிலர் மாரியின் மகள் தினமும் கல்லூரிவிட்டு வரும்போது தினேசின் ரேசை பார்ப்பதில் ஆர்வமாய் அவனுக்கே தெரியாமல் ஒளிந்திருந்து பார்ப்பாள். ஒருநாள் இவன் பார்வை அவள் மேல்பட அன்று முதல் ஆரம்பமானது இவர்களின் காதல். தோழிகளிடம் தினேசின் ரேஸ் புகழை பேசியே நேரத்தை கடத்திவிடுவாள் அனிதா!.
அனிதாவுக்காக இன்னும் பலவிதமாய் பைக் செலுத்துவதை கையாண்டான் தினேஸ், நாளுக்குநாள் அவனுக்கு ரசிகர்கள் கூடிபோயின குறிப்பாக இளம்பெண்கள்.
‘முத்தின கத்திரிக்காய் கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகனும்’ என்பதை போல் விசயம் மாரியின் காதையடைய மகள் மீது கண்மூடித்தனமான பாசம் கொண்டவன் மேலும் ராமின் மீது உள்ள அளவுகடந்த அன்பின் காரணமாகவும் அவர்களின் காதலுக்கு பச்சைக் கொடியை காட்டினான்!.
இது எதையும் அறியாது மகனே உலகமென வாழ்ந்த தனத்திடம் அப்பப்ப யாராவது அவன் ரேஸ் ஓட்டுவதை பற்றி சொல்லிவைப்பார்கள், அவனும் அவளிடம் ஏதாவது சொல்லி சமாளித்து வந்தான். ஒருநாள் அவளே நேராக பார்த்த நாளிலிருந்து அவனை கரிச்சு கொட்டினாள், கருப்பு நிற குதிரைப்போல யாருக்கும் அடங்காமல் சிலிர்த்துக்கொண்டு நிற்கும் அந்த பைக்கின் நிழல் அவள் மனதில் ஒருவித சஞ்சலத்தை ஏற்படுத்தியது.
அதன் பிறகு கொஞ்சநாள் அமைதியாக இருந்தான் தற்போது மீண்டும் பிரச்சனையில் சென்று முடிந்தது. இப்போது கூட அவளுக்காக இனி ரேசுக்கு போகமாட்டேனு சொன்னானே தவிர அவன் ஆழ்மனது அவனை அறித்துக்கொண்டே இருந்தது.
அவனிடம் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தனக்குள் புதைத்துக்கொண்டு தர்ம முனீஸ்வரனை துணைக்கு அழைத்தாள் தனம். தொட்டுப்போன விட்டுப்போன குறை அவனை தொடர்ந்து வருவதால், ஆம் அவள் மட்டுமே அறிந்திருந்தாள் தினேசுக்கு வெற்றியை தந்தது அதீத காதலும் அந்த காதலின் சொந்தகாரனான அவன் அப்பாவின் புல்லட்டுமென..!