அதர்மு மாமா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 16, 2012
பார்வையிட்டோர்: 14,271 
 
 

மூஷிகவாகனா, முடிஞ்ச வரைக்கும் காப்பாத்துடாப்பா.

ஸ்மச்ரம்னா தேவபாஷைலே மீசைனு அர்த்தம். பொம்னாட்டிகளுக்கு அந்தக்காலத்துலே மீசை உண்டாக்கும். மீசைக்குச் சின்னதா பட்டுக் குஞ்சலம் கட்டி அலங்காரம் பண்ணுவா. சர்வமும் ஒரு நா காக்கா ஊஷ்னு காணாமப் போயிடுத்து. ஸ்த்ரீகளுக்கு ஸ்மச்ரம் போன கதைதான் இன்னக்குப் பிரசங்கம். கீர்த்தனாரம்பத்துலே டிஸ்கி ஒண்ணைச் சொல்லிடறேன். எசகு பிசகா நெறைய விஷயம் வரும். பால்யரெல்லாம் படிக்கப்படாது, அப்படியே படிச்சாலும் கள்ளத்தனமா படிக்கணும்.

யுகாரம்பத்திலே மாண்டவியர் மாண்டவியர்னு ஒரு மகரிஷி இருந்தார். அவருக்கு அதிசுந்தரியா ஒரு பத்னி இருந்தார். அவா ரெண்டு பேரும் கூடிக் கூடி ரொம்ப சந்தோஷமா இருந்தா. அதனாலயோ என்னவோ அவாளுக்கு சுருக்கவே ஒரு பொண் கொழந்தை பொறந்தது. லாவண்யம்னா லேசுப்பட்ட லாவண்யமில்லே அந்தக் கொழந்தைக்கு. சாக்ஷாத் மகாலட்சுமி, பார்வதி, சரஸ்வதி, திலோத்தமை, மேனகை எல்லாரையும் கரைச்சடிச்ச அழகான அழகு. லாவண்யானு பேரு வச்சு, கொழந்தைய ஆசையும் பாசமும் அளவுச்சாப்பாடும் போட்டு வளத்தா. கொழந்தைக்கு விவாக வயசாறச்சே மாண்டவியருக்கு திடீர்னு லோக சஞ்சாரம் பண்ண ஆசை வந்துடுத்து. பார்யாளையும் அழைச்சுண்டு போக ஆசை. ஆனா ப்ராயக்கன்னியைக் கூட்டிண்டு போகப் பிரியப்படலை. “அதெல்லாம் முடியாதுன்னா. தெறண்ட பொண்ணு, தனியா எப்படி விட்டுட்டுப் போறது?”னு கவலை பிச்சுண்டு போறது தாயாருக்கு. தோப்பனாருக்கு ஒரு ஐடியா தோணறது. “யாராவது நம்பிக்கைக்குப் பாத்திரமா, தர்மானுஷ்டானம் பண்றவாள்ட்டே விட்டுட்டு போகலாம்”னு சொல்றார்.

மாண்டவியர் இப்படி பேபி சிட்டர் தேடறார்னு தெரிஞ்சோடனேயே அத்தனை புருஷ தேவாளும் “ஒங்காத்து லாவண்யாவா? எங்கூட தங்கட்டுமே.. பட்டாட்டம் பாத்துப்பேனே.. உக்கார வச்சு சிஸ்ருஷை பண்ணுவேனே?”னு சமுத்ரமா ஜொள் விட்டுண்டு அலையரா. இவாளைப் பாத்ததும் அப்பா அம்மா ரெண்டும் பேரும் செலக்ஷன் கமிட்டி போட்டு யோசிக்கறா.

“பிறைசூடிப் பெருமானாச்சே பரமசிவன்? அவர் லாவை ஆசையா வச்சுக்கறேங்கறார்.. அவர்கிட்டே விட்டுட்டுப் போவோம்”னு சொல்றார் மிசஸ் மாண்டவியர்.

“அடியே, அடியே. அவர் ஆசையா வச்சுக்கறேங்கறதுக்கு அர்த்தமே வேறேடி. தாருகாவனத்துல திகம்பரமாத் திரிஞ்சு அத்தனை ரிஷி லேடீஸ் மனசையும் கலைச்சு, பின்னாலயே சுத்த வச்சார் அந்தப் பித்தர். வேற ஆளைப் பாப்போம். வாட் அபவுட் மகாவிஷ்ணு?”ங்கறார் மிஸ்டர் மா.

“நன்னா பிடிச்சேளே. போறும் போறும்.. லீலைக்கெல்லாம் நாயகன்னா அவர்? ஒரு பொண்ணா ரெண்டு பொண்ணா? கோபிகாளோட சென்சஸ் லிஸ்ட் எடுத்து வச்சுண்டு ஏழு வயசுலந்தே குஷால் ஆட்டம் போட்டவராக்கும் ஒங்க மகாவிஷ்ணு.. நம்ம கொழந்த லாவண்யா ரொம்ப எளகின சுபாவம்… வெகுளி. லாவை ஏமாத்திடுவாராக்கும் விஷ்ணு. டஸ்ட் பின்” அப்படிங்கறார் மிசஸ் மா.

“தேவராஜனாச்சே இந்திரன், அவனண்ட விட்டுப்போவோமா?”னு மாமா கேட்டு முடிக்கறதுக்கு முன்னாலயே மாண்டவிய மாமி மோவாய்ல இடிச்சுக்கறா. “கண்றாவி. அகலிகை விஷயம் தெரியாதான்னா ஒங்களுக்கு? ஏன் இப்படி புத்தி கெட்டுப் போறேள்?”னு நறுக்குனு கேக்கறா. “நான் சொல்றேன், பிரம்மாவைப் பிடிங்கோ..”.

“ஏண்டி, பைத்தியமா பிடிச்சிருக்கு நோக்கு? பெத்த பொண் பின்னாடியே கைல பிடிச்சுண்டு சுத்தின காமாந்தகன்டி பிரம்மா.. நம்ம பொண்ணுக்கு அப்படியொண்ணும் பிராரப்தமில்லே”னு எரிச்சல் படறார் மாண்டவியர்.

இப்படி ஒத்தொத்தரா குத்தம் குறை சொல்லி, கடைசில அத்தனை தேவாளையும் சப்ஜாடா தள்ளி வச்சுடறமாதிரி ஆயிடறச்சே, டக்குனு எமதர்மராஜன் ஞாபகம் வரது மாமிக்கு. சொன்னதும், “சொர்க்கத்தை விட்டு நரகத்துல ஏண்டி ஆள் தேடறே?”ங்கறார் மாமா.

“அதான் கல்யாணம் பண்ணிண்டாச்சே, இப்ப நெனச்சு என்ன பண்றது?”னு நைசா கதலீபலத்துல ஊசி ஏத்தறா மாமி. “எமதர்மராஜன், தர்மத்துக்கு ராஜனாக்கும். பாவ புண்யங்களை அளந்து ஆளற பகவானாக்கும். நரகத்துல உத்யோகம் பாத்தா என்னப்போ? அவர்கிட்டே தப்பு தண்டா நடக்காது. அவர்தான் நம்ம லாவுக்கு சரி”ங்கறார். மாமாவும் “கரெக்டு. நேக்கு அப்பவே தெரியும்”னார். கவனிச்சேளா?.. நன்னாருந்தா பார்யாள் ஐடியாவை தன்னோடதா எடுத்துக்கற பழக்கம் அப்பவே இருந்திருக்கு பாருங்கோ.

ரெண்டு பேரும் லௌகீக புத்ரி லாவண்யாவை சர்வாலங்காரம் பண்ணி எமதர்மனோட குவாடர்சுலே விட்டுட்டுப் போறா. எமனும் “ஆகா, அதுக்கென்ன பாத்துண்டா போச்சு.. நன்னா சஞ்சாரிச்சுட்டு எல்லா தரிசனமும் முடிச்சுண்டு வாங்கோ”னு சொல்றார். லாவண்யாவைப் பாத்துட்டு, “நீ உள்ளே போம்மா லாக்குட்டி… பாத்து, பாத்து”னார்.

மிஸ்டர் அன்ட் மிசஸ் மாண்டவியர் ஷேத்ராடனம் கெளம்பிட்டா. இங்க திருவாளர் தர்மராஜன் தெனம் லாவைப் பாத்துக்க வேண்டிய நெலமை. ஒரு நாள் பாத்துண்டார். ஒரு வாரம் பாத்துண்டார். அப்றம் அவருக்கே பொறுக்க முடியலை. முழுப்பழமாத் தெறண்ட தனம் ப்ருஷ்டத்தோட, ஸ்ருங்கார ஸ்வரூபிணியா ஒரு யுவஸ்த்ரீ கண்ணெதிர இருக்கப்போ, எந்த மடையன் பாவபுண்யக் கணக்குப் போட்டுண்டிருப்பான்னு தோணிடுத்து அவருக்கு. அவளை அப்படியே ஆலிங்கனம் பண்ணிண்டு ஆனந்தமா இருக்கணும்னு ஆசைப்படறார். லா கிட்டே போய் தன்னோட ஆசையைச் சொல்றார். எமனோட தேஜசைப் பாத்துட்டு லாவுக்கும் கிறக்கமா இருக்கு. சரிங்கறா. ரெண்டு பேரும் டக்குனு ஒரு முத்தா கொடுத்துக்கறா. அவசரம் அவசரமா வஸ்திரங்களை அவுக்கும் போது ஏதோ சப்தம் கேக்கறது. எமனுக்கு பயம் வந்துடுத்து. நாமளோ தர்மராஜன். இந்த அதர்மத்தை யாராவது பாத்துட்டா என்ன பண்றது? அதனாலே ஒரு ஐடியா பண்றார். லாப்பொண்ணைப் பலாச்சொளையாட்டம் முழுங்கிடறார். தேவைப்படும் போதெல்லாம் அக்கம்பக்கத்துல ஆளில்லைனு தெரிஞ்சதும் அவளை வெளியே துப்பிடுவார். லா வெளியே வந்த உடனே ரெண்டு பேரும் ப்ரியத்தோடக் கொஞ்சிக் குலாவி சந்தோஷமா இருப்பா. இப்படியாகத்தானே ப்ளானாட்டம் போயிண்டிருக்கு.

ஒரு நாள் கார்த்தால எமன் லாவை வெளில கொண்டுவந்து, “சித்த இங்கயே இருடிம்மா”னுட்டு உத்தரத்தைக் காதுல மாட்டிண்டு போறார். அப்போ அக்னியும் வாயுவும் அந்தப் பக்கமா வாக்கிங் போயிண்டிருக்கா. அக்னி லாவைப் பாக்கறார். கண்டவுடன் காதல்னு சில பேர் சொல்றா. அதெல்லாம் சிலாக்யமில்லாத பேச்சு. பொதுவா ஆம்ப்ளேளுக்கு பொம்னாட்டியைக் கண்டவுடனே தோண்றது லவ்வில்லே, லஸ்டாக்கும். முகஸ்துதிக்கு மேடம் சிஸ்டர்னு சொன்னாலும், மனசுக்குள்ளே இவ்ளோ லட்சணமா இருக்காளே, இவளை மடக்கிப் போட்டா எப்படியிருக்கும்னு ப்ளாட் போட்டுண்டே இருப்பாளாக்கும். இது புருஷ ஸ்வபாவம். அக்னிக்கும் அதே எண்ணம் தான். லாவண்யாவை ஆனந்தபவன் அல்வா மாதிரி பாக்கறார். உடனே வாயுகிட்டே சொல்றார், “நான்தாண்டா மொதல்ல பாத்தேன். மி த பஸ்டு. நீ கொஞ்சம் மந்தமா மயக்கமா வீசுடா… அவளைப் பிக்கப் பண்றேன்”கறார். வாயுவும் போதை வரமாதிரிப் பூமணத்தோட வீசறார். அவ முன்னால நின்னதும் போதைல பொண்ணுக்கு அக்னியை ரொம்பப் பிடிச்சுப் போச்சு. ரெண்டு பேரும் உடனே குலாவறா. தூரத்துல எமன் வர்றதைப் பாத்துட்டு வாயு சிக்னல் கொடுக்கறார். என்னதிது, குக்கர் விசில் கேக்கறதேனு யோசிச்ச பொண்ணு, எமன் வர்றதைப் பாத்துட்டு பயந்துடறா. அக்னிக்கும் கை கால் ஓடலை. லாப்பொண்ணு இப்ப பெரிய வீலர் டீலரோன்னோ? தெரிஞ்ச வித்தையைக் காட்டறா. டக்குனு அக்னியை முழுங்கிடறா. வாயுவோ ஆள விடுறா ராமானு காத்தா மறைஞ்சு போயிடறார். எமனுக்கு இந்தச் சங்கதியெல்லாம் தெரியலை. அன்னைக்கு தர்மசம்ஸ்தாபன சென்டர்லே கஸ்டமர் கம்ப்ளெயின்டு சிவியரிடி ஒன் பிராப்ளமெல்லாம் ஜாஸ்தியானதுனால ஸ்ரத்தையில்லாம வரார். வழக்கம் போல லாவை முழுங்கிட்டு ஜோலியைப் பாக்கப் போறார்.

ரஷ்யப் பொம்மை மாதிரி ஆயிடுத்தில்லையோ? எமனோட வயத்துல லாப்பொண்ணு. லாவோட வயத்துல அக்னி. பொண் புத்தி பொன் புத்தியாச்சே? விடுமா? எமன் வயத்துல இருக்கறப்போ சும்மா இருப்பானேன்னு தோணிடுத்து லாவுக்கு. அக்னியை வெளில கொண்டு வரா. இதாண்டா சான்சுனு எமனோட வயத்துக்குள்ளே அக்னியும் லாவும் ராசலீலைகள் பண்ணிண்டு சந்தோஷமா இருக்கா. எமன் தன்னை வெளில கொண்டு வரப்போ மட்டும் அக்னியை முழுங்கிடுவா. இப்படியே போயிண்டிருக்கு இவா கூத்து.

இதுல பாருங்கோ, லேடீஸ் அன்ட் ஜென்டில்மென், ஒரு சிக்கல் வந்துடுத்து. அக்னியைக் காணலைனா லோகத்துல ஒரு ஸ்ரேஷ்டமான கார்யமும் நடக்காதே? யாகத்தைக் காணோம். விளக்கைக் காணோம். சமையலைக் காணோம். பிரம்மசபை, விஷ்ணுசபை, சிவசபை எல்லாத்துலயும் விவாதம் நடக்கறது. நெலமை மோசமானதும் எல்லாருமா முதல் தேவர் மூவர்ட்ட முறையிடறா. சிவன் விஷ்ணுவைப் பாத்தார். விஷ்ணு பிரம்மனைப் பாத்தார். பிரம்மா சிவனைப் பாத்தார். இது கொஞ்ச நேரம் நடக்கறது. ‘பார்த்தது போதும், பொங்கியெழு’னு சபைல யாரோ கத்தறா. சிவன் வாயுவைக் கூப்பிடறார். “இங்க வாடாப்பா, நீயும் அக்னியும் ஜிகிரித் தோஸ்தில்லையோ? எங்க அக்னி?”னு கேட்டார். வாயு பகவானுக்கு விஷயம் தெரியும்னாலும் வாயே தொறக்கலை. பயம். தேவாள் பொய் சொல்லப்படாதே? யோசிக்கிறார். பொய் சொல்லப்படாதுனா அதுக்காக உண்மையைத்தான் சொல்லணும்னு அர்த்தம் பண்ணிக்கப்படாது. “அக்னியைத் தேடிண்டிருக்கேன்”னு சமயோசிதமா சொல்றார் வாயு. விஷ்ணு ஒடனே, “நீ தான் தேடிப் பிடிக்கணும்”னு சொல்றார். சிவனோ ஒரு படி மேலே போய், “இன்னும் ரெண்டு நாழிலே அக்னியைத் தேடிக் கொண்டு வரணுமாக்கும்”னு ஆணை போடறார். பிரம்மன் நன்னா நாலு மண்டையையும் ஆட்டிட்டு, “மீடிங் அட்ஜர்ன்டு”னு சொல்றார்.

‘இதேதுடா வம்பாப் போச்சே!’னுட்டு வாயு, லாப்பொண்ணைத் தேடிண்டு போறார். எமன் குவாடர்ஸ் தெருக்குள்ள நுழையும் போது யாரைப் பாக்கறார்? லோக சஞ்சாரம் போன மாண்டவியர் வந்துண்டிருக்கார். சிக்கல் தாண்டி விக்கல்ல மாட்டிப்போம் போலிருக்கேனு நெனக்கறார் வாயு. ப்ரகாசமா ஒரு க்ளைமேக்ஸ் ஐடியா தோணறது. மாண்டவியரைப் பாத்து பவ்யமா சேவிக்கிறார். முனிவரோன்னோ, புஸ்குனு சாபம் கொடுத்துடுவாளே? “நமஸ்காரம் அண்ணா. ஷேத்ராடனம்லாம் எப்படி இருந்தது? ஆத்துல சௌக்கியமா? எங்க இவ்வளவு தூரம்?”னுட்டு குசலம் சாரிக்கிறார். மாண்டவியரும் பதிலுக்கு நம்ஸ்காரம் சொல்லிட்டு, “எங்காத்துப் பொண்ணை எமதர்மர் ஆத்துலந்து கூட்டிண்டு போறதுக்காகப் போயிண்டிருக்கேன்”னு சொல்றார். வாயு விடுவாரா? “அடடா! நானும் அங்கே தான் போயிண்டிருக்கேன். ஒங்களுக்கு ஏன் சிரமம்? எமன் ஆத்தில இருக்காரோ ஆபீஸ்ல இருக்காரோ? அவர் வந்ததும் லாவை நானே கூட்டிண்டு வந்து ஒங்காத்துல விட்டுடறேன்”னு சொல்றார். மாண்டவியரும் “நல்லதா போச்சு. பார்யாள் மத்த ரிஷி லேடீசோட காத்தாலயே கெளம்பிட்டா. நான் ஆத்துக்குக் காவல் இருக்கணும். ரொம்ப தேங்சு வாயுண்ணா, ஜாக்ரதையா கூட்டிண்டு வந்துடுங்கோ”னுட்டு திரும்பிப் போறார்.

மாண்டவியர் அந்தப்பக்கம் போனதும் டாக்கு டாக்குனு நடந்து எமதர்மராஜன் குவாடர்சுக்குள்ளே நுழைஞ்சார் வாயு. அங்கே எமதர்மன் லஞ்சுக்கு ரெடியாயிண்டிருக்கார். மாத்யாஹ்னிகம் பண்ணிட்டு, தயாரா இருக்குற இலை முன்னால் ஒக்காரச்சே, வாயு நுழையறத பாக்கறார். “தேவாள் என்னோட குவாடர்சுக்கு வந்திருக்கேளே! வாங்கோ,வாங்கோ. பையா இன்னொரு இலை போடுறா”ங்கறார். உடனே வாயு, “ரொம்ப சந்தோஷம். ஆனா நாலு பேருக்கு ரெண்டு எலை போறாதே?”னார். “வாட்யூ மீன் வாயு?”ங்கறார் எமன். வாயு நேரா எமனைப் பாக்கறார். “இருக்குற தலைக்கு எலை போட்டுறலாம். இல்லாத தலைக்கு எப்படி எலை போடறதுனு பாக்கறீங்களா?”னு டயலாக் விடறார். “புரியலையா? உங்க வயத்துக்குள்ள ஒளிச்சு வச்சிருக்கேளே, லாப்பொண்ணு அவளுக்கு ஒரு இலை. மொதல்ல அவளை வெளில கொண்டு வாங்கோ”னார். எமன் திருதிருனு முழிக்கிறார், “ஒங்க வாகனமாட்டம் தாமசம் பண்ணாம சட்டுனு கொண்டு வாங்கோ. நேக்கு எல்லாம் தெரியும்”னார். எமன் லாவை வெளில கொண்டு வந்துட்டு வாயுவைப் பாத்து, “ஹிஹி.. நாம ரெண்டு பேருமே தேவலோகம்… அல்ப விஷயம்.. பெரிசு பண்ணாதேங்கோ”னார். அப்புறம், “நாலு பேர்னேளே?”னு கேட்டார். அதுக்கு வாயு லாவைப் பாக்கறார். “ஏண்டீம்மா ஒனக்கு என்ன, படிச்சுப் படிச்சு சொல்லணுமா? ஆகட்டும், ஆகட்டும். அக்னியைக் கொண்டு வா”னு சொல்றார். லாவுக்கு ஒரே பயம். எமன் ஏதாவது சொல்லிடப் போறாரோனுட்டு. அவசர அவசரமா அக்னியை துப்பிடறா. பொசுக்குனு வெளில வந்தார் அக்னி. எமனைப் பாத்துட்டு அசடு வழிஞ்சார். ஆளாளுக்கு அசடு வழியறா. “போறும் நிறுத்துங்கோ எல்லாரும். நடந்தது நடந்து போச்சு. இனிமே லாவை அவ ஆத்துல விட்டுட்டு மறு காரியம் பாக்கணும் நீர் எமதர்மரே”னு மாண்டவியரைப் பாத்ததையும் பிராமிஸ் பண்ணதையும் சொல்றார் வாயு. சரினு எமன் தலையாட்டிண்டே லாவைப் பாத்ததும் அதிர்ந்து போறார். தனக்குச் சமமா அழகா முறுக்கி விட்டிருந்த லாவோட மீசையைக் காணோம்!

“எங்கடீ மீசை?”ங்கறார் எமன். லாவும் அதிர்ந்து போய், “இங்க தானே வச்சேன்?!”னுட்டு உதட்டுக்கு மேலே தடவிப் பாக்கறா. சுத்தமா வழவழனு இருக்கு. “பொம்னாட்டி மீசையில்லாம எப்படி வெளில போறது?”னுட்டு துடிக்கறா. எல்லாம் அக்னியோட கைங்கர்யம். பொசுக்குனு வந்தார் இல்லையா, பொசுக்கிண்டே வந்துட்டார். அவசரத்துலயும் பயத்துலயும் வெளில வந்தாரோன்னோ, லாவோட மீசையை வேரோட பஸ்பம் பண்ணிட்டார். விஷயமெல்லாம் வெளில வந்து மாண்டவியர் சபிச்சுடுவாரே, என்ன பண்றதுனு எல்லாரும் பதறிப் போறா. யோசிக்கறா. பிரம்மாட்ட போறா. எல்லாத்தையும் சொல்லி சமஸ்தாபராதம்னு கால்லே விழறா. பிரம்மா லாவைப் பாக்கறார். ‘மீசை இல்லாம ஜோரா இருக்காளே இந்தக்குட்டி!’னு நெனக்கறார். குஞ்சல சப்தம் கேக்கறது. மீசையை முறுக்கிண்டே சரஸ்வதி அந்தப்பக்கம் வரதைப் பாத்துட்டு சட்டுனு நெனப்பை மாத்திக்கிறார். “சரி, அபயம் தந்தேன். இனிமே பொம்னாட்டிகளுக்கு மீசை கிடையாதுனு ரூல் போட்டுடறேன்”னு சொல்றார். அந்தக்ஷணமே ஸ்த்ரீகளுக்கு ஸ்மச்ரம் காணாமப் போயிடுத்து.

ரொம்ப தேங்க்ஸ்னுட்டு லாவை அழைச்சுண்டு கெளம்பறார் எமன். வாயு விடுவாரோ? “சித்தே இருங்கோ மார்சுவரி மேனேஜர்வாள். உங்களை நம்பாம இல்லை, எதுக்கும் கூட வரேன்”னுட்டு எமன் கூடவே வந்து லாவை அவா அம்மா அப்பாட்டே ஒப்படைச்சுட்டு, ஸ்த்ரீ மீசை ஒழிச்ச பிரம்ம ரூல் பத்தியும் சொல்றார். “கவனிச்சேன்”னு கண்ணடிச்சார் மாண்டவியர்.

இப்படியாகத்தானே ஸ்த்ரீகளுக்கு முகக்ஷவர செலவு கொறஞ்சதுனு விப்ரப்புராணத்துல சொல்லியிருக்கு. இந்தப் புராணக்கதையைக் கேட்டவாளுக்கு முகம் பொலிவா இருக்கும்னு பலன் சொல்லியிருக்கு.

பிரசங்கம் சமாப்தம். போய்ட்டு வாங்கோ.

=========================================================
இந்தப் புராணக்கதையை முதலில் கலைஞர் கருணாநிதியின் உரைத்தொகுப்பான ‘முத்துக்குளியல்’ புத்தகத்தில் படித்தேன். புராணக்கதை பற்றிய மேலதிக விவரங்களை இணையத்தில் தேடினாலும் அதிகம் கிடைக்கவில்லை. அடுத்த வருடச் சென்னைப் பயணத்தில் தேடவேண்டிய புத்தக லிஸ்டில் விப்ரப் புராணத்தையும் சேர்த்திருக்கிறேன். கதையைக் கலைஞர் அவர் பாணியில் சொல்லியிருந்தார். நான் என் பாணியில் சொல்லியிருக்கிறேன். இயற்கையான உணர்ச்சிகளைச் செயற்கையான உணர்வுகள் கொண்டு அடைத்து வைக்கும் பொழுது, சலன பூகம்பங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்று நினைக்கிறேன். அந்தக் கண்ணோட்டத்தில் இது ஒரு சுவையான ஜாலக்கதை. கலைஞர் கோடு காட்டியிருக்கும் ‘தெய்வங்களுக்கே ஒழுக்கமும் கற்பும் கிடையாது’ என்கிற சித்தாந்தம் பக்கம் போக விரும்பவில்லை. காமத்தையும் கற்பையும் ஒரே தட்டில் வைத்துப் பார்த்திருக்கும் அவர் உரையை நான் ரசித்தேன் என்றாலும் ஏற்க முடியவில்லை. காமம் என்பது இயற்கையான உணர்ச்சி. கற்பு என்பது செயற்கையான உணர்வு. உணர்வு கூட இல்லை, குறுகிய நெறி என்பேன். ஏற்புடைய நெறியெனில், கற்பு காமத்தையும் கடந்தது என்று நினைக்கிறேன். உணர்வுக்கும் உணர்ச்சிக்கும் வேறுபாடு இருப்பதைப் புரிந்து கொண்டவர்களுக்கு என் கருத்து புரியும். முறையற்ற காமம், அளவுக்கதிகமான காமம் என்றெல்லாம் சொல்கிறார். முறையற்றக் காமம் புரிகிறது. அளவுக்கதிகமான காமம் என்னவென்றே புரியவில்லை. எது அளவுகோல்? நெறி என்றாலும், ஆண்கள் கற்பு என்பது சினிமாச் சிந்தனையுடன் நின்று விட்டது. காமம் என்ற சொல்லில் ஆண்களின் வேகத்தை அடக்கியிருப்பது போல் பெண்களின் வேகத்தைக் கற்பு என்ற சொல்லுக்குள் நாம் அடக்கியிருப்பதாக நினைக்கிறேன். காமம் இருந்தாலும் கற்பு போனாலும் குடி கெட்டது போல் பதைக்கிறோம். (இன்னொரு இடுகைக்கான கரு.)

இந்த இடுகைக்கு வேறு தலைப்பு வைத்திருந்தேன். சமீபப் பின்னூட்டமொன்றில் RVS எழுதியிருந்த சுஜாதாவின் ‘தர்மு மாமா’ கதை பற்றிப் படித்ததும், இந்த இடுகைக்கு அதர்மு மாமா என்று தலைப்பு வைக்கத் தோன்றியது. சீப் ஸ்ட்ன்ட். தீவிர சுஜாதா ரசிகர்கள் மன்னிக்க வேண்டும். (தொழிலை விட முடியுமா?)

– 2010/10/15

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *