அட்சதைமழை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 24, 2014
பார்வையிட்டோர்: 15,039 
 
 

அந்த அனெக்ஸ் குடியிருப்பு மனிதர்களையெல்லாம், கட்டளையிட்டு வழி

நடத்திச் செல்கின்ற மிகவும் அழகானதொரு ராஜகுமாரன் போல் அவன் இருக்கிறான். ராஜ்குமாரென்ற அவன் இயற் பெயரை இந்த லட்சணங்க்ளுடன் சேர்த்துக் கொஞ்சம் மாற்றினால் அவன் அசல் ராஜகுமாரன் தான். அப்படித் தான் ஒரு ராஜ வம்சத்திலேயே வந்து பிறந்திருப்பது போலக் கர்வம் மாறாத அவன் சுய தோன்றுதல்களான நடத்தைகளிருந்தே, அவனை அறியாமலே அவை இயல்பாக வெளிப்பட்டு வரும்.

அவனோடு நேர் நின்று பேசவே பயப்படுகிற ஒரு பின்னடைவான தயக்கம் அங்குள்ள அனைவரையுமே பாடாய்ப்படுத்தும்.. இதற்குச் சரளாவோ அவள் குடும்பம் சார்ந்த மற்றவர்களோ விதிவிலக்கல்ல. இப்படியான உறவுகளைப் பகைக்கும் ஒரு விபரீதச் சூழலும் கசப்பையே தரும் மாறுபட்ட வாழ்க்கை அனுபவங்களும் கொழும்புக்கு வந்த பிறகு அவள் எதிர் கொள்ளும் புதிய சவால்கள் அவள் ராஜ்குமாரென்ற ராஜன் கூட்டுறவில் வாழ நேர்ந்தது இதை விடப் பெரிய கொடுமை.

அவள் வயது தானிருக்கும் ராஜனுக்கு. அவனொரு பொறியியல் பீடத்து மூன்றாம் ஆண்டு மாணவனாம். இன்னும் ஒரு வருடம் போனால் மேற் கொண்டு மேலே மேலே பறப்பதற்குச் சிறகு முளைத்த என்ஜினியராகி விடுவான். .அவனின் அம்மா குமுதினிக்கு இதில் மனம் கொள்ளாப் பெருமை. அனெக்ஸ் என்ற போர்வையில் அங்கு காற்றில் கால் முளைத்துப் பறக்கவே முடியாமல் போன, பற்பல அடைப்புக் கூடுகள் அதில் மூச்சுத் திணறிச் சாகவே இந்த யாழ்ப்பாண மண்ணின் வாசம் பார்க்கப் போனால் மண்னும் மனிதனும் ஒன்றுதான்.

எந்த மண் நிலைத்தது என்று, இது வரை புரியவில்லை. ராஜனோடும் அவனின் குடும்பத்தாரோடும் சரளாவுக்கு வெறும் புறம் போக்குப் பழக்கம் மட்டும் தான். உள்ளார்ந்த அன்பு நினைப்பில், எப்பவுமே உறவி வைத்து கொண்டதில்லை. அந்த அனெக்ஸ் குடியிருப்புகளை ஆளும் பெரியவராக டேவிட் ஐயா இருக்கிறார். அங்கு தனியாக அவர் இருப்பதால், ராஜன் குடும்பத்தாரோடு நல்ல நெருக்கம் குமுதினியும் ராஜனின் சகோதரி பாமாவுமாக அவர் காலடியில் விழுந்து விழுந்து சேவகம் செய்வார்கள். இதனால் அந்த ஒட்டு மொத்த வீடுகளுமே, அவர்கள் கையில் குடிமூழ்கிப் போகிற நிலைமைதான்.

கொழும்பு வீடன்றால் சும்மாவா? விற்கப் போனால் கோடிகணக்கில் தேறும் அதை நினைத்துத் தான் ராஜன் இப்படியெல்லாம் வாலட்டுகிறானோ தெரியவில்லை அந்த வாலை ஒட்ட நறுக்க் வேண்டுமென்று யாரும் கருதவில்லை அவர்களை அங்கு வாழ விட்டாலே போதுமென்ற நிலைமைதான். அவர்களும் காசு கொடுத்துத்தான் அங்கு குடியேறினார்கள். ராஜன் வாலாட்டுகிறானென்பதற்காக எப்படி விட முடியும். இடையில் கிளம்பிப் போனால் கொடுத்த அட்வான்ஸ் பணம் தான் கிடைக்குமா? கம்பியூட்டர் படித்துக்குடும்பத்தை காப்பாற்றச் சரளா தினமும் வேலைக்குப் போய் வருவதால், ராஜனின் தேவையற்ற இந்தத் தலையீடுகள் குறித்து அவள் அதிகமாக அலட்டிக் கொள்வதில்லை. அவளுக்குக் கீழே இரு தங்கைகள் அவர்கள் படிக்கிறார்கள். வயதான அப்பா அம்மா வேறு கல்யாணமாகிற வயதில் அவர்களுக்காகவே ஆசைகளைத் துறந்து வாழும், ஒரு தபஸ்வினி போல, அவள் இருக்கிறாள். மிகவும் அமைதியாகத் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவள். அவளையும் ராஜன் விட்டு வைக்கவில்லை.

அவனுக்கும் அவளுக்குமிடையில் நிகழ்ந்தது பெரிய அளவிலான ஒரு சாத்வீகப் போர். அது ஒரு துயரம் மிக்க பெரிய கதை அவள் அறிந்தவரை கொழும்பென்றால் ஒரே மழைக் காடுதான். இதில் காடு எங்கே முளைத்தது? எவ்வளவு அழகான பளபளப்பான கண்ணைக் கவரும் பளிங்கு தேசம் இந்தக் கொழும்பு மாநகரம் அதைக் கழுவி முகம் துடைப்பது போல் தினமும் மழைதானென்றால் எப்படிப் பொறுப்பது?

அதிலும் இருக்கிறதென்னவோ ஓட்டை வீடு எங்கே ஒழுகுமென்று தெரியாத ஒரு தவிப்பு நிலைமை. காசு கறக்கிற மனிதர்களுக்கு, இதில் மட்டும் கண் தெரிவதில்லை. இப்படி விலை போகிற மனித உயிர்கள் பற்றி அவர்களுக்கென்ன கவலை? பெரிய அளவில் காசுக்கடல் கைக்கு வந்தாலே போதும். உயிர்கள் மறு புறம், ஓட்டை வீட்டிலேயே அடைப்பட்டிருக்கும் வெறும் நிழற் பொம்மைகளாய் இந்தப் பாவப்பட்ட மனிதர்கள்.

இதில் தோலுரிந்து போய்க் கிடக்கும் ஒற்றை நிழற் புள்ளி இந்தச் சரளா மட்டுமல்ல. எப்படியிருந்தாலும், பிறரை நோகடிக்கவே தெரியாத, மிக மென்மையான அன்பு மனம் அவளுக்கு, அவளுடனா ராஜன் சாத்வீகப் போர் தொடுத்தான்? அவளையறியாமல் திரை மறைவில் நடந்ததே அப்படியொரு நயவஞ்சக நாடகம்.அவர்களைக் குடியெழுப்பி ஓட ஓட விரட்டுவதற்காக ராஜன் எய்த அம்பு அது. அம்பல்ல அட்சதை மழை.

இப்படி வருமென்று யார் எதிர்பார்த்தார்கள்? ஒரு தினம் சரளா வேலை முடிந்து வீடு திரும்பும் போது, நல்ல மழை பிடித்துக் கொண்டது. பிளாஸ்டிக் குடை தாங்காமல் அவள் தெப்பமாக நனைந்து கொண்டே நீண்ட தூரம் பஸ் ஏறி வந்த களைப்பு மாறாமலே அவசரமாக நடந்து வந்து, வீட்டினுள் படியேறி வரும் போது, வெள்ளம் பெருகி வழிந்தது.

ஓரளவு மழை நீர் ஒழுகி வழியும் ஓட்டை வீடுதானென்றாலும், அணை உடைத்துப் பாய்கிற மாதிரி இப்போது வீடல்ல மனிதர்களே மூழ்கிப் போகுமளவுக்குப் பெரு வெள்ளம், அலை பொங்கிப் பாய்கிறதென்றால், இதில் ஏதோ சூழ்ச்சி நிகழ்ந்திருக்க வேண்டுமென்று அவள் மனவருத்தத்தோடு நினைவு கூர்ந்தாள். அவள் உள்ளே வந்து அறைக் கதவைத் திறந்து பார்த்தால் ஒரே வெள்ளக் காடாக இருந்தது.. அறை மூலையிலிருந்த இரும்பு அலுமாரியின் தலைக்கு மேலே கூரை பிளந்து தண்ணீராய்க் கொட்டுகிறது. அவளைத் தவிர வீட்டிலுள்ள அனைவரும் செய்வதறியாது பிரமைதட்டும் கலங்கிய முகங்களோடு வெளித் தாழ்வாரத்தில் தஞ்சம் புகுந்து சமைந்து போய் நின்றிருந்தனர். அம்மா அவள் உள்ளே போவதைக் கண்டதும், மனம் கேளாமல் பின் தொடர்ந்து ஓடி வந்தாள்.

அவள் வருவதைத் துயரம் மிகுந்து பார்த்தவாறே சரளா அறை வாசலில் நிம்மதியிழந்து நின்று கொண்டிருந்தாள். அப்போது குரலை உயர்த்தி அம்மா சொன்னாள்.

“இனி இஞ்சை இருக்கேலாது வா பிள்ளை வெளிக்கிட்டுப் போவம்.”

அதற்குச் சரளா வேதனை கலந்த வரட்டுச் சிரிப்போடு, தொண்டை வரண்டு போய்க் கேட்டாள்.

“எங்கையம்மா போறது? அதுவும் இந்த நேரத்திலை? ஆர் வீட்டைபோறது? பேசாமல் கிடவுங்கோ. இப்படியே கிடந்து சாக வேண்டியது தான்.”

அதற்குப் பிறகு அம்மா வாயே திறக்கவில்லை. அவர்களைச் சுற்றி, மனதர்களே ஒழிந்து போன, வெறும் காடு போல, அது அவர்களை எரித்தது.

யாழ்ப்பாண மண்ணை, விட்டு அவர்கள் இங்கு வந்தது நிம்மதியாக வாழத்தான்.அதற்கே இப்போது வழியில்லையென்றால் இனி என்ன செய்வது?

சரளாவால் இதற்கு விடை கண்டறிய முடியாமல் அவள் மிகவும் களைத்துப் போயிருந்தாள். அக்களைப்பு மேலீட்டினால் பெரும் ஆயாசத்துடன் நிலை வாசலில் சரிந்தவாறே, நிம்மதியிழந்து உறங்கும் பாவனையில் விழி மூடி நிற்கையில் மூடிய அவளின் கண் பேழைக்குள் , ஒளி மாறாத சிரிப்புடன், எங்கெல்லாமோ ஏகப் பிரமமாய் பரவி ஊடுருவி நிற்கிற, அதே ராஜகுமாரன் தான் பளிச்சென்று மகம் காட்டித் தோன்றுவது போல் அவள் உணர்ந்தாள்/. வெற்றியெல்லாம் தன் பக்கமே என்று கூறுவது போல அப்போது அவன் முகம் ஜோதிப் பிழம்பாகவே தக தகத்து மின்னிற்று. அந்த மின்னல் உட் புகுந்து பாய்ந்த அத்தருணமே, மறக்க முடியாத ஒரு வாழ் நாள் அதை மனதில் சுமந்தபடி அவள் வெகுவாக மனம் வருந்தி அழத் தொடங்கிய போது மீண்டும் அவளின் தலைக்கு மேலே, ராஜகுமாரன் தூவிய அந்த அட்சதை மழை. அப்படித் தூவுவதாலே, சகல நற்குணங்களையுமுடைய பிராமண வம்சத்து, உத்தம புருஷர்களில் ஒருவனே அவனும் என்றாகிவிடுமா?

இல்லையே இப்படி முகடு கிழித்து, எங்களுக்குப் புதை குழி தோண்டிய அவனால் அப்படிஆகி விட முடியுமா? அதை நினைத்துத் தன் கவலையெல்லாம் மறந்து வாய் விட்டுச் சிரிக்கிற பாவனையில் ,சூழ்ந்திருக்கிற அந்தகாரத்தையே கிழித்துக் கொண்டு, அவள் முகம் ஒளி விட்டுப் பிரகாசிப்பதாய் அம்மா உணர்ந்தாள். அதை வாய் விட்டே கேட்டும் விட்டாள்.

“என்ன சரளா சிரிக்கிறாய்? ஏதும் கனவு கண்டனியே?”

“கனவுதானம்மா! நான் இதை மறக்கேலை. இதுக்கெல்லாம் ஆர் பொறுப்பு எண்டு எனக்கு நல்லாய்த் தெரியும். அதை வெளியிலை சொன்னால் நீங்கள் கொதிச்சுப் போடுவியள். இப்படி எங்களையெல்லாம் வாழ்விக்க ஓர் ராஜகுமாரன் வானத்திலை இருந்து குதிச்சு வரேலை. இஞ்சை தான் எங்கடை கண் முன்னாலை, அந்த ராஜகுமாரனின் தேர் எங்களையெல்லாம் மிதிச்சு ஓடிக்கொண்டிருக்கே நீங்கள் காணேலையே?”

“ஆரைச் சொல்கிறாய்?”

“இதற்கு அடைமொழி வைத்து நான் கூற இயலுமோ? அப்படிக் கூற வெளிக்கிட்டால், திரை விலகும். ஒருவரையொருவர் அடித்தே கொல்கிற மாதிரி வீண் சண்டை மூளும். இதை வாய் விட்டுக் கேட்கிற நிலைமையில் கூட நான் இல்லை. நாங்கள் ஒழிந்தால், போதுமென்பதே, அவன்ரை நினைப்பு எப்படி ஒழியிறது? இப்படியே ஒழிந்து போனால் பிறகு வாழ்க்கைதான் எதற்கு?”

அவள் பேசிய அந்தப் பேச்சின் சாரம் புரியாமல், அம்மா திணறிக் கொண்டிருந்தாள். அவளின் கண்களுக்கு முன்னால், பரந்த அளவில் தூவப் படுகிற இந்த அட்சதை மழையும், ஆசீர்வாதப் பெரு மழையும், அந்த ராஜகுமாரன் மனம் குளிர்ந்து போகவல்ல. சரளா வேதம் கற்றுக் கொள்ளவே என்ற உண்மை பிடிபட அம்மாவுக்கு வெகு நேரம் பிடித்தது. அதுவும் அவள் சொல்லித்தான்.

– மல்லிகை (நவம்பர் 2009)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *