காலையில் கண் விழிக்கும் பொது மணி 6.30. !
‘ஐயோ..!’ அடித்துப் பிடித்து எழுந்தேன்.
“நிர்மல் ! விமல் !”- அருகில் மெத்தையில் படுத்துறங்கியவர்களைத் தட்டி எழுப்பினேன்.
சோம்பல் முறித்துக் கொண்டே எழுந்தார்கள்.
அவரசரமாக வந்து வாசல் திறந்தேன்.
படியில் பால் பாக்கெட் இருந்தது. எடுத்துக் கொண்டு விடுவிடுவென்று சமையலறைக்கு வந்து , உடைத்துப் பாத்திரத்தில் ஊற்றி ,அடுப்பைப் பற்ற வைத்து விட்டு கொல்லைக்குச் சென்றேன்.
குளியலறையில் புகுந்து பிரஷ்ஷில் பற்பசையை வைக்கும்போதே…
‘பால் பொங்குமோ..!’ என்ற சந்தேகம் வந்தது.
தேய்த்துக் கொண்டே வந்து பார்த்தேன்.
‘பொங்கவில்லை. !’ வேகமாக பல் துலக்கி, முகம் கழுவி வந்த போது பொங்கியது.
இறக்கி வைத்து விட்டு, பானை எடுத்து குடத்திலிருந்து தண்ணீர் சாய்த்து உலையைப் போட்டேன்.
மூன்று டம்ளர்கள் எடுத்து அடுப்பு மேடையில் வரிசையாக அடுக்கி சர்க்கரை போட்டு, பாலை ஊற்றி, சன்ரைஸ் போட்டு… காபி கலந்தேன்.
நிர்மல், விமல் பல் துலக்கி, முகம் கழுவி காபிக்கு வந்து விட்டார்கள்.
“சீக்கிரம் குடிச்சிட்டுப் படிக்கனும்…”உத்தரவிட்டேன்.
அவர்கள் எடுத்துக் கொண்டு நகர்ந்தார்கள்.
நான் எடுத்து வாயில் வைத்து உறிஞ்சும்போது…
‘என்ன குழம்பு வைக்கலாம்..?’ – மூளைக்குள் ஓடியது.
நேற்று புளிக்குழம்பு.
இன்று சாம்பார், முட்டை !! – முடிவு .
உலை கொதித்தது.
சட்டென்று எழுந்து மூன்று ஆழாக்கு அரிசியைப் பானையிலிருந்து எடுத்து களைந்து உலையில் போட்டேன்.
மறக்காமல் கழுநீர் ஒதுக்கி, அடுத்த அடுப்பைப் பற்ற வைத்து பருப்பு வேகப்போட்டுவிட்டு …. கறிகாய் வேலைக்கு வந்தேன்.
சின்ன வெங்காயம் உரித்து, உருளைக் கிழங்கு வெட்டும்போது உலை வழிந்தது. மூடியை அப்புறப்படுத்தி விட்டு காய்கறி வேலைகளைத் தொடர்ந்தேன். முடித்த போது துவட்டலுக்கு முட்டைக்கோஸ் சிரித்தது . அதையும் எடுத்து சன்னமாக வெட்டிவிட்டு எழுந்தேன்.
“அறம் செய விரும்பு. ஆறுவது சினம் !” – விமல்.
“இந்தியாவின் தந்தை மகாத்மா காந்தி !” – நிர்மல்.
உரக்கப் படித்தார்கள்.
வெந்து கொண்டிருக்கும் பருப்பில் காய்கறிகளை அள்ளிப் போட்டு சாம்பார் தயார் செய்யும்போது சாதம் வெந்து வடிக்கத் தயாராகிவிட்டது.
எடுத்து வெடிக்கும்போது கையைச் சுட்டுவிட்டது.
உதறி கைகைச் சூப்பிக்கொண்டு, அதே அடுப்பில் எண்ணெய் சட்டியைப் போட்டு.. குட்டைக்கோசு துவட்டல்….ஆரம்பமானது.
முடிக்க…. வயிற்றைக் கலக்கியது .
ஓடிப் போய்…. இயற்கை உபாதையை முடித்து கழிவறையை விட்டு வெளியே வந்து வேலையைத் தொடர…. சிறிது நேரத்தில்…. துவட்டல், சாம்பார் தயாரானது.
துவட்டலை இறக்கி, சாம்பாரைத் தாளித்து இறக்கும்போது….
மணி 8.00. அடித்தது.
பிள்ளைகள் படிப்பை முடித்து விட்டு குளிக்கப் புறப்பட்டார்கள்.
“டேய்..! சீக்கிரம் முடிங்க. நான் குளிக்கனும்…” அதட்டல். !
வடித்த சாதத்தை நிமிர்த்தி சட்டியில் போட்டு, சாம்பார் விட்டு கலக்கி, இரண்டு டப்பாக்களில் துவட்டலும் சேர்த்து வைத்து மூட… மகன்கள் மதிய சாப்பாடு.
அடுத்து மூன்றடுக்குத் தூக்கை அடைக்க…எனக்கும் வேலை முடிந்தது.
மணி…8.15.
8.45 க்கு அலுவலகத்தில் கட்டை விரல் பதிக்கவேண்டும். தவறினால்…தாமத வருகை என்று பதிவாகி பதில் சொல்ல வேண்டும்.
வேகமானேன்.
குளித்து முடித்து , மூவரும் சாப்பிட்டுவிட்டு ஒரு வழியாக எல்லோரும் வீட்டை விட்டு வெளியே வரும்போது…
மணி 8.30. !
“அப்பா போயிட்டு வர்றேன் !” கூவி…நிர்மல், விமல் ஆளுக்கொரு சைக்கிளை எடுத்துக் கொண்டு நகர்ந்தார்கள்.
“சரி” தலையாட்டி என் இருசக்கர வாகனத்தில் ஏறி அமரும்போது…
‘கோபித்துக் கொண்டு தாய் வீடு சென்ற மனைவி எப்போது திரும்புவாள்..? !’
மனம் நினைத்தது.!!