அடுத்த வீட்டுப் பையன்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2021
பார்வையிட்டோர்: 21,907 
 
 

(செல்போன்கள் பாவனைக்கு வரமுன்பு கனடாவில் நடந்த ஒரு சம்பவம் சிறுகதையாக்கப்பட்டது)

வாசலில் அழைப்பு மணி கேட்டது. கதவைத் திறந்து எட்டிப் பார்த்தேன். எட்டு வயது மதிக்கத்தக்க பையன் ஒருவன் வாசலில் நின்றான். முகத்தில் ஒரு துடிப்புத் தெரிந்தது.

‘நைக்கி’ ரீ சேட், நைக்கி சூ, நைக்கி காப். எல்லாமே நைக்கி மயம். தொப்பியின் முன் பக்கத்தைத் திருப்பி பின் பக்கமாகப் போட்டிருந்தான்.

‘ஜெஸ்……..மே ஐ ஹெல்ப் யூ’ என்றேன்.

‘ஹாய்!…… அங்கிள், ஐ யாம் கிறிஸ்தோஃபர். வீ….ஆ…. கோயிங் டு….பி…யுவ நெய்பேர்ஸ்’.

என்று அறிமுகம் செய்து சைகையால் அடுத்த வீட்டைக் காட்டினான்.
வெளியே எட்டிப் பார்த்தேன். அடுத்த வீட்டிற்கு முன்னால் வண்டியில் இருந்து வீட்டுத் தளபாடங்களை இறக்கிக் கொண்டிருந்தார்கள்.

‘ஹாய்….ஐ…ஆம்….சிவா…கிளாட்யு மீட்யூ, யூ ஆர் வெல்க்கம்’

‘டாட்..!’ இங்கிருந்தே குரல் கொடுத்தான் கிறிஸ்தோஃபர்.

முப்பத்தைந்து வயது மதிக்கத் தக்க ஒருவர் வந்தார்.

‘மீட் மை டாட்,… டாட் ஹீ ஸ் மிஸ்டர் சிவா!’ என்றான் கிறிஸ்தோஃபர்.

‘ஹாய்’ என்று நீட்டிய கையைக் குலுக்கினேன்.

‘ஐ யாம் மைக். அடுத்த வீட்டிற்கு நாங்கள் தான் புதிதாக குடி வந்திருக்கிறோம். உங்களைச் சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி. மீண்டும் சந்திப்போம்!’

அவர்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்ட பண்பு என் மனதைத் தொட்டது. நாங்களும் கனடாவுக்குப் புதியவர்களாக இருந்தோம், நல்ல அயலவர்கள் கிடைக்கா விட்டால் தினந்தினம் பிரச்சனைதான்!

எனது மகனும் கிறிஸ்தோஃபரும் ஒரே வகுப்பில் படித்ததால் இருவரும் நல்ல நண்பர்களானார்கள். மாலைநேரங்களில் வீட்டிற்கு முன்பாக ஓடி விளையாடுவார்கள்.

பனிக்குளிர் காலம் தொடங்கும் அறிகுறிகள் தெரிந்தன. வீட்டிற்கு முன்பாக உள்ள ரோஜாச் செடிகளைப் பனிக்குளிரில் இருந்து பாதுகாப்பதற்காக அவற்றின் கிளைகளை ஒவ்வொன்றாக நறுக்கிக் கொண்டிருந்தேன்.

‘ஹாய்……சிவா….ஹவ்வாயு?’ கலகலப்பான குரல் என் கவனத்தைத் திசை திருப்பியது.

திரும்பிப் பார்த்தேன், மைக்!

‘ஓ…..ஐ….யாம் ஃபயின்! மைக் எப்படி இருக்கிறீங்க?’

‘நல்லா இருக்கிறேன் சிவா! ஊரிலே இருந்தது போன்ற பிரச்சனைகள் இங்கே இல்லை. இங்கே வீஹாவ் மோ ப்ரைவஸி! அதனாலே நாங்க ரொம்ப சந்தோஷமாய் இருக்கிறோம்’.

எங்க ஊரிலே எங்களுக்குத் தான் பிரச்சனை என்று பார்த்தால் இது என்ன அவர்களுக்கும் அவங்க ஊரிலே பிரச்சனையாமே?

என்னவென்று கேட்டுப் பார்க்க வேண்டும் போல ஆவலாக இருந்தது. எப்படி அறிவது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது மைக்கே கதையைத் தொடக்கினான்.

‘சிவா உங்களோட திருமணம் அரேஞ்ச் மரீச்சா?’

‘இல்லை மைக், காதல் திருமணம்!’

‘காதல் திருமணமா? அப்போ ஊரிலே உங்க சொந்தக்காரங்க எல்லோரும் இதை எப்படியாவது எதிர்த்திருப்பாங்களே?’

‘ஆமாம் காதல் திருமணமென்றால் எப்பவுமே எதிர்ப்பு இருக்கத் தான் செய்யும். ஏனென்றால் ஊரிலே உள்ள பெரியவர்களில் அனேகமானவர்கள் ‘மோ கான்ஸவேட்டிவ்வாய்’ அதாவது பழமைவாதிகளாய் இருப்பாங்க. அவர்களுக்கு காதல் என்றால் கற்பனையில் கூடப் பிடிக்காது!’

‘உண்மைதான்! அவங்க எப்படியும் எதிர்க்கத்தான் செய்வாங்க!’

‘அப்படிப் பட்டவர்களுக்கு உண்மையை விளங்கப் படுத்தணும். இல்லை என்றால் அதை எதிர்த்துக் காதலின் வெற்றிக்காகப் போராடணும்.’

‘போராடணுமா? எப்படி?’

‘எங்களாலே எங்கள் வாழ்க்கையை நல்ல படியாய் அமைக்க முடியும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு முதலில் வரணும். முக்கியமாகப் பொருளாதார நிலையில் உயரவேண்டும். அந்த நம்பிக்கை எங்கள் இருவருக்கும் இருந்திச்சு. அதனாலே நாங்க அவர்களின் எதிர்ப்பைப் பற்றிப் பயப்படல்லே!’

‘நீங்க சொன்னது போலவே எங்க காதலுக்கும் இப்படியான எதிர்ப்பிருந்திச்சு. நாங்களும் போராடிப் பார்த்தோம், முடியலே!’

‘அப்படியா? நீங்களும் போராடினீங்களா?’

‘ஆமா! அதன் பலன் வீட்டை விட்டு வெளியே போன்னு சொன்னாங்க. நாங்க யார் எதிர்த்தாலும் பிரிவதில்லை என்று திடமான முடிவோடு இருந்தோம். காதலுக்காக முடியையே துறந்த மன்னர்களின் கதையோடு பார்க்கும் போது, எங்க சொந்த வீட்டைத் துறந்து போவது ஒன்றும் பெரிய கஷ்;டமாய் எங்களுக்குப் படல்லே!’

‘உண்மைக் காதலென்றால் அப்படித்தான் இருக்க வேண்டும். நீங்க நல்ல முடிவு தான் எடுத்திருக்கிறீங்க. அப்போ உங்க குழந்தை பிறந்த போது கூட பெற்றோர் வந்து பார்க்கலையா? பேரப்பிள்ளை என்கிற பாசம் கூட அவர்களுக்கு இருக்க வில்லையா?’

திடீரென மைக்கின் முகத்தில் மாற்றம் தெரிந்தது. எதையோ சொல்லத் தயங்குவது போல இருந்தது.

‘இல்லை…..சிவா எங்களுக்குக் குழந்தை இல்லை என்கிற குறை எப்பவுமே எங்க மனசை வாட்டிக் கொண்டிருந்தாலும், அதற்காக வருத்தப்பட்டுக் கொண்டே இருக்க முடியுமா? அதனாலே தான் கிறிஸ்தோஃபரை தத்து எடுத்து வளர்க்கிறோம்.’
‘கிறிஸ்தோஃபர் தத்துக் குழந்தையா?’

‘ஆமா! ஹீ ஸ் வெரி ஸ்மாட். எங்களுக்கும் அவனை நல்லாப் பிடிச்சுப் போச்சு. யார் குழந்தையாக இருந்தால் என்ன? வளர்ப்புப் பிள்ளை என்கிற குறையேயில்லாமல் பார்த்துக்கிறோம்.’

‘நல்ல காலம் மைக்! எங்களுக்குக் கடவுள் அந்தக் குறையை வைக்கவில்லை. மைக், குழந்தை இல்லையே என்று நீங்க வீணாகக் கவலைப் படவேண்டாம். கடவுள் உங்களை என்றுமே கைவிட மாட்டார், இன்னும் காலமிருக்கு’ ஆறுதல் கூறினேன்.

இந்த நாட்டில் குழந்தைப்பேறு சம்பந்தமாக நவீன வைத்திய வசதிகள் இருந்துமே சிலருக்குத் தீர்க்க முடியாத வேறு சில பிரச்சனைகள் இன்றும் இருக்கத் தான் செய்கின்றன.

இவர்களுக்கு என்ன வயதா போய்விட்டது. இளம் ஜோடி தானே. வாழ்வதற்கு இன்னும் எவ்வளவோ காலம் இருக்கிறது. காலம் தான் இவர்கள் குறையைத் தீர்க்க வேண்டும். ஒருவேளை இல்லாதவர்களுக்குத் தான் ‘இல்லை’ என்பதன் அர்த்தம் என்னவென்று புரியுமோ என்னவோ!

அன்று காலை தொடக்கம் பனிகொட்டிக் கொண்டிருந்தது. டிரைவ்வே பனியால் மூடிக்கிடந்தது. காரை டிரைவ்வேயில் இருந்து எடுப்பதற்காகப் பாதையைச் சுத்தம் செய்தேன். அடுத்த வீட்டு றைவ்வேயை அவர்கள் குடும்பமாக நின்று சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.

‘ஹாய்….சிவா’ என்றான் மைக் அங்கிருந்து.

‘ஹாய்….!’ என்றேன் பதிலுக்கு இங்கிருந்து.

எஸ்கிமோக்களைப் போல உடம்பெல்லாம் மூடிக்கட்டி இருக்க, முகம் மட்டும் வெளியே எட்டிப் பார்த்தது. ஈரமான பனியை உருண்டையாக்கிப் பந்துகள் செய்து மூவரும் ஒருவருக்கொருவர்; எறிந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். கிறிஸ்தோஃபர் பனியில் உருண்டு அவர்கள் எறியும் பனிஉருண்டைகளைப் பிடித்துக் கொண்டிருந்தான். கணவன், மனைவி, குழந்தை என்று நல்ல சந்தோஷமான இளம் குடும்பம் என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டேன்.

அன்றிரவு பனிப்புயல் அடித்ததால் எங்கள் வீட்டின் தொலைபேசித் தொடர்பில் ஏதோ கோளாறு ஏற்பட்டுத் தொடர்பு தடைப்பட்டது.

அவசரமாக ஒரு நண்பரோடு தொடர்பு கொள்ள வேண்டி இருந்ததால் நான் அடுத்த வீட்டிற்குப் போனேன். வாசல் மணியை அடித்தபோது, மைக்தான் வந்து கதவைத் திறந்தான். வந்த விடயத்தைச் சொன்னேன்.

‘என்ன சிவா இதற்குத் தயங்கணுமா? யூ ஆர் வெரி வெல்கம்’ என்று சொல்லி தொலைபேசி இருக்கும் இடத்தைக்காட்டி விட்டான். பாதவணியை வாசலில் கழட்டி வைத்து விட்டு தொலைபேசியில் பேசிவிட்டுத் திரும்பிப் போகும் போது நன்றி சொன்னேன். மைக்கோ விடவில்லை. இருந்து காப்பி சாப்பிட்டு விட்டுப் போகுமாறு அன்போடு கேட்டான்.

அந்த அன்புக் கட்டளையை மறுக்க முடியாமல் அரைமனதோடு ஹாலில் உட்கார்ந்தேன்.

‘டார்லிங்….கம்..ஹிய, வீ ஹாவ் ஏ விசிட்டர்’ மாடியில் உள்ளபடுக்கை அறையை நோக்கி மைக் குரல் கொடுத்தான்.

எனக்கு என்னவோ போல இருந்தது. நேரம் கெட்ட நேரத்தில் இங்கு வந்து அவர்களைக் கஷ்டப்படுத்தி விட்டேனோ என்று நினைத்தேன்.

‘ஜானி…டார்லிங்….இங்கே வந்து பாரேன்…..நெக்ஸ்டோ நெய்பர் சிவா வந்திருக்கிறார்.’

ஜானி! அழகான பெயர், பெயரைப் போலவே அவளும் அழகாக இருப்பாளோ? அவளை நான் நேரில் கண்டதில்லை, அவள் வருவாளா? என்று ஆவலோடு காத்திருந்தேன்.

சற்று நேரத்தால், மாடிப் படிகளில் யாரோ மெதுவாக அடி வைத்து இறங்கி வரும் ஓசை கேட்டது.

என் நெஞ்சு படபடத்தது.

மைக்கின் காதலி, தங்கள் காதலுக்காக கடைசிவரை போராடி வெற்றி கண்டவள். சொந்தம் பந்தமெல்லாம் துறந்து அவனேதான் தன் உலகம் என்று துணிச்சலோடு அவனோடு வாழ வந்தவள். எப்படி இருப்பாள்?

ஆவலோடு எதிரே இருந்த மாடிப்படியைப் பார்த்தேன்.

அவள் இறங்கி வரும்போது பான்ஸ்ஸால் மூடாத மெல்லிய சிவந்த பாதங்கள் தான் முதலில் தெரிந்தன. சற்றே நிமிர்ந்து மேலே பார்த்தேன். ஜீன்ஸ் பேன்ட், மெல்லிய நீலத்தில் பூப்போட்ட நைக்கி சார்ட். சார்ட்டின் மேல் பட்டன் பூட்டப் படாமல் அலட்சியமாய்த் திறந்திருந்தது. இந்தக் காலத்திற்கும், நாட்டுக்கும் ஏற்ற ‘பாஷனபிளான மொடேன் கேளாக’ இருக்கலாம் என்று மனசு கணக்குப் போட்டது.

மெல்லிய புன்சிரிப்போடு, அருகே வந்து மெல்லக் குனிந்து,

‘ஹாய் மிஸ்டர் சிவா! ஐ யாம் ஜான், கிளாட்யு மீட்யூ!’ என்று சொல்லிக் கை குலுக்கிய போது ஜானியின் மேல் பட்டன் திறந்த சட்டைக்குள்ளால் நெஞ்சு நிறைய சுருண்ட முடி தெரிந்தது. விழிகள் தடுமாறி ஒரு கணம் உறைந்து போக, செய்வதறியாது வியப்போடு அதற்கும் கொஞ்சம் மேலே நிமிர்ந்து பார்த்தேன். ஒற்றைக் காதிலே தோடு. மஸ்றூம் கட்.

‘என்ன சாப்பிடுறீங்க? காப்பியா…….இல்லை……யூஸ்….ஏதாவது?’ என்ற இனிய குரலுக்கு என்ன சொன்னேன் என்று எனக்கே தெரியாது. காபிதான் கேட்டிருப்பேன்.
ஏனென்றால் காபிதான் குடித்ததாக ஞாபகம், வாயெல்லம் கோப்பியின் ஒருமாதியான கசப்புச் சுவையை உணரமுடிந்தது.

‘தாங்யூ’ சொல்லி அப்புறம் அவர்களுக்கு ‘பாய்’ சொல்லி விட்டு, அவசரமாக எனது வீட்டிற்கு வந்து வாசலில் அழைப்பு மணியை அடித்தேன். வாசற் கதவை எனது மகன் தான் திறந்தான்.

‘அப்பா…கிறிஸ்தோஃபருடைய அம்மாவைப் பார்த்தீங்களா? இஸ் ஸி நைஸ்?’

தனது நண்பனின் தாயைப் பற்றி அறியும் ஆவலில் மகன் கேட்டான். எனது காதிலே மகன் கேட்டது விழாதது போல நான் உள்ளே போனேன்.

‘அம்மாவா..?’ மகனின் அந்தக் கேள்விக்கு நான் என்ன பதில் சொல்ல…?

Print Friendly, PDF & Email

2 thoughts on “அடுத்த வீட்டுப் பையன்

 1. Lesbian. Gay, Bisexual ஆகிய மூன்று ஏரியாக்களைப் பற்றியும் நன்கு தெரிந்து எழுதிய ஆசிரியன் திறமை வியக்க வைக்கிறது.
  தமிழகத்தின் தலை சிறந்த எழுத்தாளரான திரு சு சமுத்திரம், அவர்கள் ‘வாடாமல்லி’ என்ற ஒரு நாவலை எழுதி இருக்கிறார். இதுதான் தமிழில் திருநங்கைகளை பற்றிய முதல் நாவல்.
  ஆனால் சிறுகதைக்குள்ளே அந்த இனத்தாரைக் கொண்டுவந்ததுடன் அவர்களைப் பற்றிய தவறான புரிதல்களை நீக்கி சரியான புரிதல்களை நோக்கிச் செல்லும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் ஆசிரியர்.
  ஆண் ஆகப் பிறந்து பெண் என்ற உணர்வோடு காணப்படுவோர் திருநங்கை Transgender. இவர்களுக்கு பெண்கள் மீது காதலோ காமமோ தோன்றுவதில்லை.
  பெண்ணாகப் பிறந்து ஆண் போன்றே உணரப்படுபவர் திருநம்பி. Transgender இவர்களுக்கு ஆண்கள் மேல் காதலோ காமமோ வருவதில்லை.
  லெஸ்பியன் Lesbian எனப்படுபவர்கள் தன்பால் ஈர்ப்புக் கொண்டவர்கள் பெண்ணாக இருந்து பெண்களோடு மாத்திரமே உறவு கொள்பவர்கள்.
  ஆண்களோடு ஆண்கள் மாத்திரம் உறவு கொள்வதை கே gay எனப்படுபர்கள் பைசெக்சுவல் Bysexual என்போர் ஆணோடும் பெண்ணோடும் இரு பாலினத்தவர்களோடும் உறவில் ஈடுபடக்கூடியவர்கள்
  ‘ஈரிலிங்கத்தினர்’ எனப்படும் Bysexual கள் ஆண்குறி மற்றும் பெண்குறிகளுடன் சேர்ந்து பிறப்பார்கள். இதிலே ஓர் அங்கத்தை நீக்கிவிட்டு அவர்களால் அவர்கள் நினைத்த பால் இனத்தில் வாழ முடியும்.
  இப்படிப்பட்ட பல விஷயங்களை நன்கு தெரிந்து தன் கதைகளில் கையாண்டு, மூன்றாம் பாலினத்தவரின் சுயமரியாதைக்கு வித்திடுகிறார் திருமிகு குரு அரவிந்தன் என்பதே என் கருத்து.
  வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்
  ஜூனியர் தேஜ்

 2. சிகப்புப் பாவாடை மற்றும் தொட்டால் சுடுவது ஆகிய கதைகளின் பட்டியலில் இந்தக் கதையும் சேர்கிறது.
  நான் கதையைப் புரிந்து கொண்ட வகையில் மூன்றாம் பாலினத்தவர் ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்றால் அவர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்ற தெளிவும் அவர்களுக்கு இருக்கும்.
  பாலியல் சார்ந்த அறிவு மற்றும் மூன்றாம் பாலினத்தவர் சார்ந்த அறிவு மாத்திரமே புதுமைப் பாலினத்தினரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவும், அவர்களை மதிக்கவும் சரியான தீர்வாக அமையும்.
  எனவே, வெறும் பாலியல் சார்ந்த பார்வையில் மட்டும் பார்ப்பதனை விட்டு விட வேண்டும். என்ற கருத்தை நிலை நாட்டவே இந்தக் கதை எழுதப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது.
  ஆசிரியர் விளக்குவாரா?
  ஜூனியர் தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *