அடுத்த வீடு (ஆனந்தம்)

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 2, 2022
பார்வையிட்டோர்: 2,753 
 
 

(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பள்ளியறையின் ஜன்னல் திரைச்சீலையின் இடைவெளி வழியாக பொன்னொளி சிந்தி மலர்விழியின் முகத்தில் பட்டபோது, துள்ளிக் குதித்து எழுந்து சென்று, ஜன்னல் திரைச்சீலையை விலக்கி வானத்தைப் பார்த்தாள். அங்கே பௌர்ணமி நிலவு கர்வத்தோடு தன் எழிலைக் காட்டி மயக்கிக் கொண்டிருந்தது. அந்தக் காட்சி கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது மலர்விழிக்கு. அப்போது அதிகாலை ஐந்து மணி.

இல்லத்தலைவியான மலர்விழி வழக்கம் போல காலையில் பத்தி பொறுத்தி வீட்டை நறுமணத்தால் சுவாசிக்கச் செய்து விட்டு, இறை வழிபாட்டை முடித்து, தன் பிரார்த்தனையை முடித்த கையோடு, அவள் மகன் ரவியையும், மகள் ராணியையும் எழுப்பி காலைப் பள்ளிக்கு அனுப்ப ஏற்பாடு செய்தாள்.

உயர்நிலை நான்கில் பயிலும் ரவியும், உயர்நிலை இரண்டில் பயிலும் ராணியும், தங்கள் பள்ளிச்சீருடையை அணிந்து, பள்ளிப்பையை எடுத்துக் கொண்டு, மலர்விழி கரைத்துக் கொடுத்த ‘மைலோ’வை அவசரமாக அருந்திவிட்டு புறப்பட்டுச் சென்றனர்.

வீட்டைப் பார்த்தாள். கணவன் வீட்டில் இல்லை. மலர்விழியின் கணவன் சந்திரன் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறான். சிங்கப்பூரின் பொருளாதார நிலை சரிந்திருப்பதால் சந்திரன் வேலை செய்யும் தனியார் நிறுவனத்தின் கிளை நிறுவனம் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்தது. தற்போது சந்திரன் மலேசியாவில்தான் பணிபுரிந்து வருகிறான். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறைதான் சந்திரன் மனைவி, பிள்ளைகளை பார்க்க சிங்கப்பூருக்கு வந்து செல்வது வழக்கம்.

மலர்விழி வழக்கம் போல இன்றும் வீட்டின் பால்கனி பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கும்போது அவளின் நினைவுகள் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நினைவுகள் கண்முன் தோன்ற ஆரம்பித்தன.

பல வீடுகளை தேடிப்பார்த்து ஒரு வழியாக அமைந்தது இந்த ஐந்து அறை வீடு. சிங்கப்பூரின் கிழக்கு வட்டாரத்திலுள்ள அந்த வீடமைப்பு பேட்டை புதுப்பிக்கப்பட்டு பார்க்க கண்ணுக்கும் மனதுக்கும் விருந்து அளிக்கும் வண்ணம் மரங்கள், செடிகள் என இயற்கை அழகும் நிறைந்திருந்தது. சாங்கி சாலையில் புளோக் ஐம்பத்தெட்டின் (58ன்) ஏழாவது மாடியில்தான் வீடு. வீட்டைப் பார்த்தவுடன் மலர்விழிக்கும் மனப்பூர்வமாக பிடித்திருந்தது. அவள் தன் அன்புக் கணவன் சந்திரனிடம்,

“என்னங்க இந்த வீட்டையே வாங்கிடுவோம்” என ஆசையுடன் கூறியதைக் கேட்ட சந்திரன் உடனே தங்களோடு வந்திருந்த வீட்டு முகவர் ஜேம்ஸ் என்பவரிடம் தங்களுக்கு இந்த வீடு பிடித்திருப்பதை எடுத்துக் கூறி பண விஷயங்களை வீட்டுக்காரரிடம் பேசி முடிக்கச் சொன்னார்.

இந்த வீடு மறுவிற்பனை வீடுதான். ‘வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப் பார்’ என்பார்கள். கல்யாணமாகி இரண்டு பிள்ளைகளுக்கு பெற்றோர்களாகிவிட்ட சந்திரன்-மலர்விழி தம்பதிகள் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் மூலம் வாங்க நினைத்த வீடு மனதிற்கு திருப்தி அளிக்காததாலும், இந்த வட்டாரத்தில்தான் வீடு வாங்க நினைத்ததாலும் இந்த வீட்டை வாங்கினர். தெற்கு பார்த்த வீடு ராசி என்பார்கள். தற்செயலாக இந்த வீடு தெற்கு பார்த்த வீடாக அமைந்தது. அடுத்த வீடுகளும் இருந்தன.

வீட்டில் வரவேற்பறை, சாப்பாட்டறை, மூன்று படுக்கை அறைகள், சமையலறை என எல்லா அறைகளும் பெரிய அளவில் பார்க்க தாராளமாக புழங்குவதற்கு ஏற்றவையாக வசதியாக அமைந்ததுடன், சாப்பாட்டறையின் எல்லையில் ‘பால்கனி’ என்று சொல்லும் இடத்தில் செடிகளை வளர்க்க இடவசதி இருந்தது. மலர்விழிக்கு செடிகள் வளர்ப்பதில் ஆர்வமிருந்ததால் அந்த இடத்தை செடி வளர்க்க பயன்படுத்திக் கொள்ள விரும்பினாள்.

இயற்கைச் சூழலில் வாழ்வதை மலர்விழி விரும்பினாள். அவை அவளுக்கு மன அமைதியையும், மன நிம்மதியையும் கொடுத்தது. பால்கனி ஜன்னலிலிருந்து வெளியே பார்க்க இயற்கைக் காட்சிகள் அழகாக இருந்தன. அருகே ஒரு பூங்காவும் இருந்தது.

கிடைத்ததை மனப்பூர்வமாக விரும்பிக் கொள்ளும் மனப்பக்குவம் உடைய மலர்விழி-சந்திரன் இருவர் பெயருக்கு இந்த வீடு மாற்றி எழுதப்பட்டு பத்திரங்கள் உறுதி செய்யப்பட்டன. தை மாதம் பத்தாம் தேதி நல்ல நாளில் பால் காய்ச்சி சந்திரன் மலர்விழி தங்கள் பிள்ளைகள் ரவி, ராணி இருவரோடும் முக்கிய உறவினர்களையும் அழைத்து விருந்து வைத்து புதுவீடு வந்து சேர்ந்தனர். வீட்டுக்கு அருகிலேயே பிள்ளைகளை தொடக்கப் பள்ளியில் சேர்த்தனர்.

சந்திரன் தனியார் நிறுவனத்தில் உதவி அதிகாரியாக பணிபுரிந்து வந்தான். தினமும் வேலைக்கு பேருந்தில் சென்று வருவான். மலர்விழி இல்லத்தலைவியாக வீட்டை பொறுப்புடன் நிர்வகித்து வந்தாள். வீட்டை சுத்தமாகவும் கலையழகுடனும் வைத்துக் கொண்டாள். வீட்டை ஒரு கோவிலாகவே பாதுகாத்தாள். பள்ளியிலிருந்து திரும்பும் பிள்ளைகளுக்கு பிடித்த உணவை சமைத்துக் கொடுத்து மன ஆறுதல் அடைந்தாள்.

வேலையிலிருந்து வீடு திரும்பும் கணவனை முகம் மலர வரவேற்று அவனை கவனித்தாள். ஓய்வு நேரத்தில் துணி தைக்கும் தொழிலையும் செய்து ஏதோ அவளும் சம்பாதித்தாள். கிடைக்கும் நேரத்தில் வானொலி, தமிழ் முரசு பத்திரிக்கைக்கு கட்டுரை, கதை என எழுதி அனுப்பினாள்.

அவள் எழுதிய படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு வானொலியில் ஒளிபரப்பப்பட்டன. தானும் ஏதோ நல்ல காரியம் செய்கிறோம் என மலர்விழி ஆனந்தப்பட்டாள். திருப்தியடைந்தாள். அப்போது ஒரு நாள் கதவு தட்டப்படும் ஒலி கேட்டு கதவைத் திறந்து பார்த்தாள் மலர்விழி.

எதிரே, ஒரு பெண்மணி நின்றுக் கொண்டிருந்தாள். “என் பேரு சாரா, நான் அடுத்த வீட்லதான் குடியிருக்கேன்” என ஆங்கிலத்தில் கூறியதைக் கேட்ட மலர்விழி புன்னகையுடன் “ப்ளீஸ் கம் இன்’ என சாராவை உள்ளே அழைத்தாள்.

அதற்கு சாரா, “இல்லே, நான் அவசரமா வெளியே போறேன், என் மக பேரு ஜெஸிக்கா, இன்னும் கொஞ்ச நேரத்திலே வீட்டுக்கு வருவா, நீங்க அவளை சற்று பார்த்துக் கொள்ளவேண்டும்”, என ஆங்கிலத்தில் கூறினாள். மலர்விழியும் சாராவிடம் தான் பார்த்துக் கொள்வதாக உறுதி அளித்தாள். பிறருக்கு உதவும் மனம் படைத்த மலர்விழி முதன் முதலில் அடுத்த வீட்டு சாராவை இப்படித்தான் சந்தித்தாள். வாழ்க்கையை ஒரு கலையாக வாழ்ந்து பார்க்கும் மலர்விழிக்கு வயது முப்பதுதான்.

அடுத்த வீட்டில் ஒரு சீனக்குடும்பம் குடியிருந்தார்கள். வீட்டுத் தலைவர் பெயர் ரிச்சர்ட் என்றும் தெரிந்திருந்தனர். அவரின் மனைவிதான் திருமதி சாரா. அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர். மூத்த பெண் ஜெஸிக்கா, மலர்விழியின் மகள் ராணியின் வயது. இரண்டாவதும் சாராவுக்கு பெண், மூன்றாவது மகன் சிறுவனாக இருந்தான், வயது நான்கு. பெயர் பேட்ரிக். ரிச்சர்ட்-சாரா இருவரும் வேலைக்கு செல்பவர்கள். ரிச்சர்ட் ஒரு தனியார் நிறுவனத்திலும், சாரா தொடக்கப் பள்ளி ஆசிரியை என்றும் மலர்விழி அறிந்திருந்தாள். அடுத்த வீட்டில் பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த பணிப்பெண் இருந்தாள்.

அன்று அடுத்த வீட்டு ஜெஸிக்கா வந்தபோது மலர்விழி அன்புடன் ஆரஞ்சு ஜூஸ் கொடுத்து ஜெஸிக்காவை கவனித்துக் கொண்டாள். இரவு எட்டு மணிக்கு வீடு திரும்பிய சாரா தன் தாய் மருத்துவமனையில் இருப்பதை பார்க்கச் சென்றதாகவும், சாராவின் தந்தையை அவர் வசிக்கும் தெம்பனீஸ் வட்டாரத்திற்கு சென்று பணிப்பெண் கவனிக்கச் சென்று விட்டதாகவும் கூறிவிட்டு மலர்விழிக்கு நன்றி கூறி ஜெஸிக்காவை அழைத்துச் சென்றாள்.

வீட்டை விட்டு வெளியே செல்லும் போது அடுத்த வீட்டவர்களை பார்க்க நேர்ந்தால் ரிச்சர்ட்-சந்திரன், சாரா-மலர்விழி ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்லிக் கொள்வதை கட்டாயமாகக் கொண்டார்கள். இரு வீட்டவர்களும் பணிவன்புடன் நடந்துக் கொண்டார்கள்.

அன்று ‘மே’ மாதம் பதினைந்தாம் தேதி மலர்விழி-சந்திரன் மகள் ராணிக்கு ஏழு வயது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது மறக்காமல் அடுத்த வீட்டில் உள்ள ரிச்சர்ட் குடும்பத்தாரையும் மறக்காமல் அழைத்தனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு மணிக்கு அடுத்த வீட்டு சாரா, தன் பிள்ளைகளோடு ராணிக்கு பிறந்தநாள் பரிசாக ஒரு பொம்மையும், சில கதை புத்தகங்களும் கொடுத்தார். ராணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறிவிட்டு, மலர்விழி தன் கைப்பட செய்த பலகாரங்களான, சிலேபி, காஸ்டட், லட்டு, கோழி பிரியாணியையும் முகம் மலர வரவேற்று சாப்பிடக் கொடுத்தாள். சாரா வீட்டுக்கு திரும்பும் போது கை நிறைய இனிப்பு பலகாரங்களையும் கொடுத்து அனுப்பினாள். அதன் பிறகு, இரு வீட்டார் அன்பும், நட்பும் இன்னும் பலமாக உறுதி செய்யப்பட்டது.

அதே போல சாராவும் சீனப் பெண்மணியாக இருந்த போதிலும் மறக்காமல் அவர்கள் வீட்டு பிள்ளைகள் பிறந்தநாளுக்கு அழைத்து உபசரித்தார்.

வருடத்திற்கு ஒரு முறை கொண்டாடும் தீபாவளி பண்டிகைக்கு மலர்விழி தன் உறவினர்களை அழைப்பது போல அடுத்த வீட்டு ரிச்சர்ட்சாராவை குடும்பத்துடன் அழைத்து முறுக்கு அதிரசம் போன்ற பலகாரங்களை சாப்பிடக் கொடுப்பாள். அவர்கள் ருசித்து சாப்பிடுவதை பார்த்து மனமார இன்புற்றாள் மலர்விழி. இப்படியே இரு வீட்டவர்களும் அன்பை பரிமாறிக் கொண்டனர்.

ஆண்டு தோறும் பள்ளி விடுமுறையின் போது ரிச்சர்ட்-சாரா தம்பதிகள் தங்கள் பிள்ளைகளோடு வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது வழக்கம். அப்படி பயணம் செல்லும் போது அடுத்த வீட்டு மலர்விழி-சந்திரனிடம் பயணம் சொல்வதுடன் வீட்டை சற்று பார்த்துக் கொள்ளவும், அவர்கள் வீட்டில் இருக்கும் பணிப்பெண்ணை சற்று கவனித்துக் கொள்ளுமாறும் கூறிவிட்டுச் செல்வார்கள். மலர்விழி “சரி பார்த்துக் கொள்கிறேன்” என சாராவிடம் கூறியபடி, அடுத்த வீட்டில் எப்போதும் ஒரு கண் வைத்து கவனித்துக் கொள்வதுடன், தன் வீட்டில் சமைத்த உணவை அடுத்த வீட்டு வேலைக்கார பெண்ணுக்கு கொடுத்து சாப்பிடச் சொல்வாள், பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த அந்த பணிப்பெண் மலர்விழிக்கு நன்றி கூறிவிட்டு வாங்கிச் சாப்பிட்டு விட்டு சாப்பாடு ருசியாகவும் சுவையாகவும் இருந்தது என பாராட்டுப் பத்திரமும் வாயால் கொடுத்து விடுவாள் மலர்விழிக்கு.

வெளிநாட்டுக்கு இரண்டு வார பயணம் மேற்கொண்டு மீண்டும் சிங்கப்பூர் திரும்பும் அடுத்த வீட்டு சாரா மறக்காமல் மலர்விழிக்கு பரிசுப்பொருள் வாங்கிப் கொடுப்பது வழக்கம்.

அதே போல மலர்விழி தன் தாய்நாடான இந்தியாவுக்கு இரண்டாண்டுக்கு ஒரு முறை செல்வது வழக்கம். அப்போது மறக்காமல் அடுத்த வீட்டு சாராவுக்கு பிடித்த இந்தியாவில் பிரசித்து பெற்று விளங்கும் பட்டுத்துணி வாங்கி வந்து கொடுப்பாள். சாராவும் மகிழ்ச்சியோடு வாங்கிக்கொள்வாள்.

மலர்விழியின் மகள் ராணியும், சாராவின் மகள் ஜெஸிக்காவும் வெவ்வேறு பள்ளிகளில் தொடக்க நிலை ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு நாள், பள்ளிகளில் ஆண்டுதோறும் கலாச்சார தினம் நடைபெறும் போது பிள்ளைகள் அடுத்த மதத்தவர்களின் பாரம்பரிய ஆடைகளை பள்ளிக்கு அணிந்து வருவது வழக்கம்.

அன்று அடுத்த வீட்டு சாராவின் மகள் ஜெஸிக்கா வந்து மலர்விழியிடம், ராணியின் இந்திய பாரம்பரிய உடையான பச்சைக் கலர் பட்டுப் பாவாடையையும் சட்டையையும் வாங்கி அணிந்து சென்று தன் பள்ளிக்கு பெருமை சேர்த்தாள். அதே போல ராணி அடுத்த வீட்டு ஜெஸிக்காவின் சீனப் பாரம்பரிய ஆடையான சிவப்பு வண்ண சீன பட்டுத்துணியால் தைத்த நீளச்சட்டையை அணிந்து சென்று ராணியின் பள்ளிக்கு பெருமை சேர்த்தாள்.

இரு வீட்டு பெரியவர்கள் அன்புடன் உறவாடியதைப் போன்று, பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டனர். பெற்றோர் எவ்வழியோ அவ்வழிதானே பிள்ளைகளும் செல்வர்.

ஒரு நாள் திடீரென்று அடுத்த வீட்டு வாசலில் சற்று சத்தம் கேட்டது. மலர்விழி தங்கள் வீட்டுக் கதவைத் திறந்து பார்த்த போது, அடுத்த வீட்டு பணிப்பெண்ணை , அவள் ஊருக்கு வழியனுப்பி வைப்பது போல காணப்பட்டது. அவள் கையில் பெட்டி, பொருட்கள் சகிதம் நின்று கொண்டிருந்தவள், மலர்விழியிடம் “நான் எங்க நாட்டுக்கு திரும்பிப் போறேன், இனி திரும்பி வரமாட்டேன்” என ஆங்கிலத்தில் கூறிச் சென்று விட்டாள்.

பின்பு அடுத்த வீட்டு சாராவிடம் விசாரித்த போது அவள் கணவர் ரிச்சர்ட்டுக்கு திடீரென்று வேலையில்லாமல் போய்விட்டது என்றும், சிங்கப்பூர் பொருளியல் மந்தநிலையால் ரிச்சர்ட் வேலை செய்த தனியார் நிறுவனம் மூடப்பட்டது என்றும் தெரிந்து கொண்டாள்.

பணிப்பெண்ணை வைத்து சம்பளம் கொடுக்க இயலாது என உடனே அந்தப் பெண்ணை வேலையிலிருந்து நிறுத்தி விட்டதுடன் வீட்டில் பிள்ளைகளின் துணைப்பாட வகுப்புகளும் நிறுத்தப்பட்டதை அறிந்தாள் மலர்விழி.

சாராவின் மகள் ஜெஸிக்காவும் மலர்விழியின் மகள் ராணியும் இந்த ஆண்டு உயர்நிலை ஒன்றில் பயின்று வந்தனர். ஜெஸிக்காவும் ராணியும் இணை பிரியாத தோழிகளாக பழகி வந்தனர். ராணியின் மூலமாக அடுத்த வீட்டு நிலவரத்தை தெரிந்த மலர்விழி மிகுந்த வேதனைப்பட்டாள்.)

சந்திரன் அடுத்த வீட்டு ரிச்சர்ட்டிடம் ஆறுதலாக பேசினான். விரைவில் வேறு வேலைக்கு முயற்சி செய்ய ஆலோசனை கூறினான். சூழ்நிலை மாறும்போது நாமும் தம் திறமைகளை வளர்த்துக் கொண்டு முன்னேற பாடுபட வேண்டும் என சந்திரன் கூறிய ஆறுதல் மொழியைக் கேட்டு ரிச்சர்ட் சற்று ஆறுதல் அடைந்தான்.

மகிழ்ச்சியாக, கலகலப்பாக இருந்த அடுத்த வீட்டவர்கள் இப்போதெல்லாம் எதையோ பறிகொடுத்தவர்கள் போல புன்னகை மறந்து சோகத்துடன் காணப்பட்டனர்.

வீட்டில் பணிப்பெண் இல்லாமல் சமைப்பதும் இல்லை. ரிச்சர்ட் வீட்டுக்கு பக்கத்திலுள்ள உணவுக்கடையில் பிள்ளைகளுக்கு உணவு வாங்கிக் கொடுத்தார். சாரா வேலைக்குச் செல்வதால், வீட்டில் எப்போதாவதுதான் சமையல். இதையறிந்த மலர்விழி தங்கள் வீட்டில் சமைத்த கோழிக்கறியை எடுத்து அடுத்த வீட்டு பிள்ளைகளிடம் கொடுத்து சாப்பிடச் சொன்னாள்.

அடுத்த வீட்டு பிள்ளைகளும் மலர்விழி கொடுத்த கோழிக்கறியை சாப்பிட்டு விட்டு ருசியாக இருக்கிறது என நன்றியுடன் கூறிச் சென்றார்கள்.

சாரா கொண்டுவரும் சம்பளப் பணம் குடும்பத்திற்கு போதவில்லை. ஏதோ கடலில் மூழ்கிவிட்டதாக நினைக்கத் தோன்றிற்று ரிச்சர்ட்டுக்கு.

மலர்விழி தங்கள் வீட்டில் செய்யும் பலகாரங்களை மறக்காமல் அடுத்த வீட்டுக்கு கொடுத்தாள். மலர்விழி இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மளிகைப் பொருட்கள், காய்கறி வாங்க சிராங்கூன் சாலைக்குச் செல்வது வழக்கம். அப்போது தன் பிள்ளைகளுக்கு ‘கோமள விலாஸ்’ கடைக்குச் சென்று முறுக்கு, லட்டு, என வாங்கி வருவாள். இப்போது அடுத்த வீட்டு பிள்ளைகளுக்கும் சேர்த்து அதிகமாக முறுக்கு பலகாரங்கள் வாங்கி வந்து மகள் ராணியிடம் கொடுத்து அடுத்த வீட்டு ஜெஸிக்காவிடம் கொடுத்து உண்ணச் செய்தாள். அடுத்த வீட்டு பிள்ளைகள் மூவரும் முறுக்கை விரும்பி ருசித்து சாப்பிட்டனர். அதற்காக அடுத்த வீட்டு ரிச்சர்ட்-சாரா இருவரும் மலர்விழிக்கு நன்றி கூறினர்.

அடுத்த வீட்டு சாராவுக்கு குறைந்த கட்டணத்தில் சட்டை தைத்துக் கொடுத்தாள் மலர்விழி. இப்போது அடுத்த வீட்டு பொருளியல் நிலவரம் தெரிந்து பணம் வாங்காமலேயே சாராவுக்கு ஆடைகளைத் தைத்துக் கொடுத்தாள் மலர்விழி.

துன்பம் வரும்போதுதான் மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் செய்யப்படும் உதவி விலை மதிப்பற்ற தெய்வ செயலுக்கு ஒப்பானதாகும்.

மலர்விழியின் மகன் ரவியின் கதைப் புத்தகங்கள் அடுத்த வீட்டு சாராவின் பிள்ளைகளுக்கு படிக்க உதவியது.

இரு வீட்டு பிள்ளைகளும் இணைந்து ஒற்றுமையுடன் விளையாடி, உறவாடி மகிழ்ந்தனர். அடுத்த வீட்டு ரிச்சர்ட்டின் மகன் பேட்ரிக் தொடக்க நிலை நான்கில் படித்து வந்தான். அவனுக்கு மலர்விழியின் மகன் ரவி கணக்கு பாடம் சொல்லிக் கொடுத்தான். அடுத்த வீட்டு ஜெஸிக்காவும், மலர்விழியின் மகள் ராணியும், ராணியின் அறையில் உட்கார்ந்து பாடங்களை படித்து வந்தனர். ரவியின் கணிணியில் பேட்ரிக்கை விளையாட அனுமதித்தான் ரவி.

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்பார்கள். மலர்விழியின் பிள்ளைகள் ரவியும், ராணியும் எந்தக் குறையும் இல்லாமல் பரந்த மனதுடனும், பிறருக்கு உதவும் எண்ணத்தையும் தன் தாயிடமிருந்து கற்றுக் கொண்டனர்.

பல மாதங்கள் வேலை தேடியும் அடுத்த வீட்டு ரிச்சர்ட்டுக்கு வேலை கிடைக்கவில்லை. மனச்சோர்வுடன் காணப்பட்டார். ரிச்சர்ட்டுக்கு பிள்ளைகளின் படிப்புச் செலவு, வீட்டுச் செலவு, சாப்பாட்டுச் செலவு என பணம் பஞ்சாகப் பறந்தது. என்ன செய்வது என தெரியாமல் தவித்த போது, சந்திரன் தெரிந்த நண்பர் மூலம் ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள மரச்சாமான்கள் விற்கும் தனியார் நிறுவனத்திற்கு டிரைவர் தேவைப்பட்டதால் அந்த வேலையை ரிச்சர்ட்டுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தான். அடுத்த வீட்டு ரிச்சர்ட்டும் கிடைத்த ஆயிரம் வெள்ளி சம்பளத்தை பெரிதாக மதித்து கார் ஓட்டும் வேலையை ஏற்று செய்து வந்தான். அதிக வருமானம் பெற்று வந்த ரிச்சர்ட் சூழ்நிலையை அறிந்து இப்போது கிடைத்த வேலையை மனம் ஒன்றி செய்து வந்தான்.

அப்போதுதான் திடீரென்று சந்திரனின் வேலை செய்யும் கணிணி மென்பொருள் உற்பத்தி செய்யும் நிறுவனம் பொருளியல் மந்த நிலையால் ஆட்டம் காண நேரிட்டது. அதனால் சந்திரன் அதன் கிளை நிறுவனமான மலேசியாவின் கோலாலம்பூருக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போது மலர்விழி முதலில் சற்று தயங்கினாலும், பின்னர் தன்னை சுதாரித்துக் கொண்டு, நாட்டு நிலவரம் அறிந்து கணவன் சந்திரனை மலேசியாவுக்கு அனுப்பி வைத்தாள்.

பிறருக்கு உதவும் நல்ல மனம் படைத்த சந்திரன்-மலர்விழிக்கும் இப்போது சோதனைக் காலம் போல காணப்பட்டது. பிரிந்து வாழும் தியாகத்தைச் செய்தால் பின்னாளில் வளமுடன் வாழலாம் என இருவரும் நம்பினர்.

புத்தகம் படிக்கும் பழக்கமுள்ள மலர்விழி இந்த நேரத்தில் இன்னும் அதிகமான, குறிப்பாக தன்னம்பிக்கை தரும் டாக்டர் எம். எஸ். உதய மூர்த்தியின் நூல்களை அதிகம் படித்து தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டாள். தமிழ் பத்திரிக்கைக்கும் அதிக அளவில் கதைகளை எழுதி அனுப்பினாள்.

அப்போது அடுத்த வீட்டு சாரா தொடக்கப்பள்ளியில் சிறந்த முறையில் பணி ஆற்றியதற்காக அந்த ஆண்டின் சிறந்த ஆசிரியைக்கான விருது கிடைத்ததுடன் மேல்படிப்பிற்காக ஆஸ்திரேலியாவுக்கு சென்று படிக்க உதவித் தொகையும் கிடைத்தது. சாராவின் குடும்பத்தில் பல பிரச்சனைகள் இருந்த போதும் சாரா தன் ஆசிரியர் பணியை பொறுப்புடன் செய்தாள்.

அடுத்த வீட்டு சாரா தன் குடும்பத்தை விட்டு வெளிநாடு சென்று இரண்டு ஆண்டுகள் படிப்பதற்கு தயங்கினாள். ஆனால், ரிச்சர்ட், சாராவை வெளி நாட்டில் இரண்டு ஆண்டுகள் படிப்பதற்கு அனுமதி அளித்ததுடன், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள ஊக்கம் அளித்தான்.

சாரா அடுத்த வீட்டு மலர்விழியிடம் இது பற்றி கூறிய போது மலர்விழி “இது போன்ற வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது, பிள்ளைகளை பற்றி கவலைப்படாதே, நான் பார்த்துக்கறேன் ” என்றாள். ஆனால், சாரா மீண்டும் பழைய பணிப்பெண்ணையே வரவழைத்து வீட்டு வேலைக்கு வைத்துவிட்டு அடுத்த வீட்டு மலர்விழியிடம் சற்று பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு, ஆஸ்திரேலியாவுக்கு உடனே சென்று பட்டப்படிப்பைத் தொடர்ந்தாள்.

நாட்கள் சென்றன. மலர்விழி அடிக்கடி அடுத்த வீட்டுக்குச் சென்று கவனித்ததுடன், முன்பைவிட இன்னும் அதிக அன்புடன் சாராவின் பிள்ளைகளை பார்த்துக் கொண்டாள். சாராவின் பிள்ளைகளும் விடுமுறை நாட்களில் மலர்விழியின் வீட்டில்தான் விளையாடிக் கொண்டிருப்பார்கள். மலர்விழியின் வீடு எப்போதும் கலகலப்பாகவே இருக்கும். வீட்டில் சந்திரன் இல்லை என்ற எண்ணமே மறந்துவிடும் மலர்விழிக்கு.

ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற அடுத்த வீட்டு சாரா, மலர்விழிக்கு அடிக்கடி மின் அஞ்சல் அனுப்பினாள். அதில் மலர்விழிக்கு நன்றி கூறத் தவறவில்லை. மலர்விழியின் அன்பில் கரைந்த அடுத்த வீட்டு சாராவின் மகன் பேட்ரிக்கு திடீரென்று கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியதாயிற்று. மலர்விழி துடிதுடித்துப் போனாள். அடுத்த வீட்டு பணிப்பெண்ணுடன், சிங்கப்பூர் சாங்கி மருத்துவமனைக்குச் சென்று பேட்ரிக்கை அருகில் இருந்து ஒரு தாயைப் போல கவனித்துக் கொண்டாள்

மகனுக்கு உடல்நலம் சரியில்லை என்றால் எந்தத் தாயாலும் மன நிம்மதியுடன் இருக்க இயலாது. அதுவும் சாரா தற்போது ஆஸ்திரேலியாவில் படிப்புக்காக சென்றதால் பேட்ரிக் மருத்துவமனையில் இருப்பதை தெரிவிக்க ரிச்சர்ட் விரும்பவில்லை. ரிச்சர்ட் வீட்டுக்கும், வேலைக்கும், மருத்துவமனைக்கும் அலைந்து தன் மகன் பேட்ரிக்கை பார்த்துக் கொண்டான். பின்பு நான்கு நாளில் பேட்ரிக் பூரண உடல்நலம் தேறி வீடு திரும்பினான்.

காலம் வேகமாகக் கடந்து இரண்டு ஆண்டுகள் படிப்பை முடித்தாள் சாரா. சந்திரன் தற்போது பதவி உயர்வு பெற்று உயர் அதிகாரியாக பணிபுரிந்தான்.

அன்று வெள்ளிக்கிழமை. மலர்விழி ‘பால்கனி’ ரோஜாச் செடியில் நிறைய ரோஜாக்கள் பூத்திருப்பதைப் பார்த்து பூரித்தாள்.

பழைய சிந்தனைகளில் மூழ்கியிருந்த மலர்விழி வீட்டை சுத்தப்படுத்தி விட்டு அன்று தன் மகன் ரவிக்கு பிடித்த கோழிக்கறியை சமைத்து ருசி பார்த்தாள். கறியின் சுவை, மணம் பிரமாதமாக இருந்தது. மறக்காமல் அடுத்த வீட்டு பிள்ளைகளுக்கு ஒரு கோப்பையில் கோழிக்கறியையும், அடுத்த வீட்டுப் பணிப்பெண்ணுக்கு தன் வீட்டு ரோஜாச் செடியிலிருந்து இரண்டு ரோஜாக்களையும் பறித்துக் கொண்டு அடுத்த வீட்டுக்குச் சென்றாள்.

சாரா அன்றுதான் ஆஸ்திரேலியாவிலிருந்து படிப்பை முடித்து சிங்கப்பூர் திரும்புகிறாள். அடுத்த வீட்டில் பணிப்பெண் எல்லா வேலைகளையும் முடித்திருந்தாள். ஐன்னல் திரைச்சீலைகள் மாற்றப்பட்டிருந்தன. மேஜை விரிப்புகள் போடப்பட்டு வீட்டை அலங்காரமாக வைத்திருந்தாள் பணிப்பெண். சாராவின் பிள்ளைகள் பள்ளியிலிருந்து வீடு திரும்பி தன் தாயைக்காண மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர்.

ரிச்சர்ட் மனைவியை அழைத்து வர சாங்கி விமான நிலையத்திற்கு சென்றான். அவன் மனைவியைக் காண மிகுந்த ஆவலுடன் இருந்தான். இந்த நாள் அவன் வாழ்வின் ஒரு பொன்னாளாகவும் கருதினான். மனைவி சாரா வந்த பிறகு இனி வாழ்க்கையில் எல்லா நாளும் வசந்தங்களே என மனதில் ஆயிரம் எண்ணங்களுடன் கைக்கடிகாரத்தை பார்த்தான். மாலை மணி ஆறு. சாரா வந்து இறங்கும் விமானம் இன்னும் வரவில்லை. மாலை ஆறு மணிக்கு வர வேண்டிய விமானம் இரவு ஏழு மணியாகியும் வராததால் பயணிகளுக்கு காத்திருப்போர் கலவரம் அடைந்தனர். என்னாயிற்று சிலர் அலை மோதிக்கொண்டு விசாரித்த போது தீவிரவாதிகள் சிலர் அந்த விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக செய்தி வந்ததால் விமானம் குறிப்பிட்ட நேரத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்து புறப்படவில்லை என்றும், பின்பு குண்டு வைத்த செய்தி வதந்தி என்றும், முழு பாதுகாப்புடன் விமானம் வந்து கொண்டிருப்பதாகவும் தகவல் கிடைத்து ரிச்சர்ட் மன சஞ்சலம் நீங்கி வீட்டுக்கு தகவலை தெரிவித்தான்.

இரவு எட்டரை மணிக்கு சாரா சிங்கப்பூர் வந்து சேர்ந்தாள். வீட்டுக்கு வந்து சேர்ந்த சாராவைக் கண்டதும்தான் பிள்ளைகளுக்கு உயிர் வந்தது. மலர்விழி சாராவைப் பார்த்து நலம் விசாரித்தாள். “ஹாய் மலர் ஹவ் ஆர் யு?” “ஐ எம் ஃபைன் ” என ஆங்கிலத்தில் சிரித்துக் கொண்டே கேட்டாள். சாரா சற்று மெலிந்து வாட்டத்துடன் காணப்பட்டாள். பிள்ளைகளைப் பிரிந்து, குடும்பத்தைப் பிரிந்து, தாய் நாட்டை பிரிந்து தான் சென்ற கடமையை கண்ணும் கருத்துமாக மன உறுதியுடன் படித்து முதல் வகுப்பில் வெற்றி பெற்று நாடு திரும்பி இருந்தாள் சாரா. மலர்விழிக்கு மனமார தன் நன்றியை கூறிக் கொண்டதுடன், ஆஸ்திரேலியாவிலிருந்து மலர்விழிக்கு ஓர் அழகிய சட்டையும் வாங்கி வந்து கொடுத்தாள்.

சிங்கப்பூரில் இரண்டு வார ஆசிரியர் பயிற்சிக்குப் பிறகு சாரா துமாசிக் உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியையாக நியமிக்கப்பட்டாள்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ இப்போது மலர்விழியின் பிள்ளைகள் அடுத்த வீட்டு சாராவிடம் கேட்டு படித்தனர். சாராவும் அன்புடன் மலர்விழியின் பிள்ளைகளுக்கு குறைந்த கட்டணத்தில் ‘டியூஷன்’ சொல்லிக் கொடுத்தாள்.

பத்து ஆண்டுகளுக்கு மேலாக இரு குடும்பங்களும் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொண்டதுடன், பிரதிபலன் எதிர்பாராமல் உள்ளன்போடு உதவிக் கொண்டனர். அந்த ஆண்டின் சிறந்த அண்டை வீட்டுக்காரர்கள்’ என்ற பெருமையையும், சான்றிதழையும் சிங்கப்பூரின் கிழக்கு வட்டாரத்தின் ஈஸ்ட் கோஸ்ட் டவுன் கவுன்சிலிருந்து பிரதமர் திரு.கோ சோக் டாங் அவர்களிடமிருந்து பெற்றனர். ரிச்சர்ட்டும் சந்திரனும் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டே கை குலுக்கிக் கொண்டனர்.

தன் நீண்ட நாள் பிரார்த்தனை நிறைவேறிய மகிழ்ச்சியில் மலர்விழி சாராவை கட்டிப் பிடித்து ஆனந்தம் அடைந்தாள்.

– சிறுகதை கோல்டன் பாயின்ட் எழுத்துப் போட்டி 2003, தமிழ் முரசு மார்ச் 2006, ’பிரகாசம்’ சிறுகதை தொகுப்பு, முதற்பதிப்பு : மே 2006, சிங்கப்பூர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *