அடுத்த மனைவி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 6, 2019
பார்வையிட்டோர்: 5,998 
 
 

(இதற்கு முந்தைய ‘ஜெயித்த நரி’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)

எங்கே போய் பெண் தேடுவது? எப்படிப் போய்க் கேட்பது?

‘அய்யா எனக்கு ஒரு வாரிசு வேண்டியிருக்கு, அதுக்காக நா இன்னொரு கல்யாணம் செய்துக்க ஆசைப்படறேன். ஒங்க பெண்ணை எனக்குத் தருவீங்களா’ன்னா கேட்க முடியும்? ஆனா அப்படித்தான் கேட்டாகணும். அதுதான் நெசம்.

ஆனால் ரொம்ப நேரங்களில் நிசத்தைச் சொல்ல முடியறதில்லை.

இசக்கி அண்ணாச்சிக்கு மெல்லவும் முடியலை; முழுங்கவும் முடியலை. தர்ம சங்கடமாகப் போய்விட்டது. ஊரெல்லாம் வேறு தெரிந்து போய்விட்டதால் தெருவில் நடந்து போகவே வெட்கம் பிடுங்கித்தின்றது. வைத்த கண்ணை எடுக்காமல் எல்லோரும் அவரையே பார்க்கிறார்களே!

முதல் சம்சாரம் செத்துப்போய் அம்பது வயசில் இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளப்போகிறவரா இருந்தா அது வேறமாதிரி! முதல் சம்சாரமும் உயிரோட இருந்துகிட்டு, வாரிசுக்காக இன்னொரு சம்சாரம் வேணும்னு கேட்டா, எவ்வளவு ஏழைப் பட்டவனா இருந்தாலும் பொண்ணு கொடுக்குறதுக்கு யோசிக்கத்தான் செய்வான்.

ஆனாலும் ஊதுகிற சங்கை இசக்கி ஊதிவிட்டார். ஊதித்தானே ஆகணும். சும்மா கிடந்த சங்கைத்தான் காவலூர் ஜோசியன் அநியாயமா ஊதிக் கெடுத்து விட்டானே. ஆனாலும் எல்லா எழைப்படவனும் ஒரேமாதிரியாக யோசிக்கவில்லை. பொண்ணை இசக்கி அண்ணாச்சிக்கு கட்டி வைத்தால் ஒரு பைசா கல்யாணச் செலவு கெடையாது. ஒரேநாளில் பெரிய சீமாட்டியாகி விடுவாள். கொஞ்சம் நிமிர்ந்து நடக்கலாம்.

இந்த மாதிரி நினைப்பில் ரெண்டு மூணு பொண்ணைப் பெற்ற ஏழைகள் ஆசைப்பட்டு தங்களுக்கு சம்மதம் என்று சொல்லி விட்டார்கள். அவர்களின் சம்மதம் இசக்கி அண்ணாச்சிக்குத் தெரிந்த அதே நிமிசம், அந்த விசயம் இலஞ்சிகாரன்களுக்கும் எப்படியோ தெரிந்து விட்டது. யாருக்கும் தெரியாமல் ரெண்டு மூணு அடியாளுங்களை அனுப்பி பொண்ணு கொடுக்கச் சம்மதித்த அப்பாவி எழைப்பட்டவனை காயடிச்சி விரட்டினார்கள். பாக்கிறதுக்கே பாவமாகத்தான் இருந்தது. பொண்ணு கொடுக்க ஆசைப்பட்டதுக்கே இப்படியொரு அடியா? முதலில் இசக்கி அண்ணாச்சிக்கு விளங்கவே இல்லை. நேத்துச் சொல்லிவிட்டான் பொண்ணு தரேன்னு… இன்னைக்கி ‘அய்யா மன்னிச்சிருங்க, நான் ஒங்களுக்குப் பொண்ணு தரலை’ன்னு சொல்லிட்டுத் திரும்பிப் பாக்காமே ஓடுறான்!

தொடர்ந்து இதேமாதிரி ரெண்டு மூணு ஏழைகள் மூஞ்சி முகரையெல்லாம் வீங்கற மாதிரி அடிவாங்கினப் பிறகுதான் இசக்கி அண்ணாச்சிக்கு விசயம் தெரிந்தது. விடுவாரா மனுசன் வந்த சண்டையை?

வாடகைக் கார் பிடிச்சி பறந்தார் இலஞ்சிக்கு. ரெண்டுல ஒண்ணு பாக்கணுமே. ஆனால் இசக்கி போய்ச் சேரும்போது மச்சான்களில் ஒரு குஞ்சுகூட இலஞ்சியில் அகப்படவில்லை. அவ்வளவு மச்சான்களும் குற்றால மலைமேல் போய் ஆளுக்கொரு பக்கமாக ஒளிந்துகொண்டு விட்டார்கள். அவ்வளவு தைரியசாலிகள்.

எதிரிகள் பள்ளம் பள்ளமாகப் பார்த்து சரிவுகளில் ஓடும்போது ஒண்ணும பண்ண முடியாமல் நிற்கின்ற யானை மாதிரி, இசக்கி அண்ணாச்சியும் ‘ப்ரேக்’ போட்டு நின்றுவிட்டார். சரிவுகளில் விரைவது யானைக்கு முடியாத காரியம். அதுமாதிரி இலஞ்சியில் கண்ணில் அகப்பட்ட மச்சான்களின் சம்சாரங்கள் மேல் இசக்கி அண்ணாச்சிக்கு பாய்வதும் ஆகாத விசயம். என்னதான் கோவமாக இருந்தாலும் ஆம்பளை வந்து பொம்பளைப் பிள்ளைகளின் மேல் கைவைத்து விடமுடியாது. அது பிறகு ரொம்ப அசிங்கத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்.

மச்சான்களை தேடித்தேடி அலுத்துப்போன இசக்கி, மாமியார் வீட்டின் வாசலில் நின்றுகொண்டு குரலை உயர்த்திக் கத்தினார். ஊர் கூடி நின்று வேடிக்கை பார்த்தது.

“பொட்டைப் பயலுங்க மாதிரி இங்கன இருந்து அடிக்கிறதுக்கு ஆளை ஏவிவிட்டுட்டு ஓடி ஒளிஞ்சிக்கவாடா செய்றீங்க? நல்ல ஆம்பளையா இருந்தா, மீசை முளைச்ச ஆம்பளைங்களா இருந்தா கண் முன்னால வந்து நில்லுங்கடா! ஒங்களை அக்கு வேறா, ஆணி வேறா கழட்டிக் காட்டறேன்! என்னமோ இவனுங்க வீட்ல வந்து பொண்ணு கேட்ட மாதிரியில்ல குதிக்கிறானுங்க! நா கல்யாணம் செஞ்சா ஒங்களுக்கு என்னடா? இன்னொருவாட்டி எவனையாவது அடியாளை அனுப்பி அடிக்கிறேன் கிடிக்கிறேன்னு வாலை ஆட்டினீங்க, ஓட்ட அறுத்துப்பிடுவேன் வாலை! கொலை பண்ணிட்டு ஜெயிலுக்குப் போகக்கூட அஞ்ச மாட்டேன். என் விசயத்தல அனாவசியமா தலையிடாதீங்க. தலையிட்டீங்க ஒங்க மானம் மரியாதையெல்லாம் காத்துல பறக்க வச்சி சந்தி சிரிக்க வெச்சிடுவேன் சாக்கிரதை! ஒங்க வீட்டு பொட்டச்சிங்களைக்கூட விட்டு வைக்க மாட்டேன், நாற அடிச்சிறுவேன் அவளுங்க கதை பூராவையும்.”

கோபத்தில் இசக்கி இப்படிப் பேசியதும் முதலில் வயிற்றில் பகீர் என்றிருந்தது அவருடைய ரெண்டாவது மச்சானின் சம்சாரத்துக்குத்தான். அத்தனை கதை இருக்கிறதே அந்தக் கருவாச்சி பற்றித்தான்! ஆகையால் உள்ளுக்குள் வேர்த்துக் கொட்டிவிட்டது அவளுக்கு. இப்ப வேர்த்து என்ன செய்ய?

ஆனால் இந்த வேர்வையும், நடுக்கமும் இசக்கி அண்ணாச்சி வாசலில் நின்ற வரைக்கும்தான். அவர் ஏறி உட்கார்ந்த வாடகை டாக்ஸி கண்ணிலிருந்து மறைந்ததும், ரெண்டாவது மச்சானின் சம்சாரத்துக்கு பழைய ராங்கி வந்துவிட்டது.

“அவன் மூஞ்சியப் பாக்கவே பிடிக்கலை எனக்கு. அதேன் உள்ளேயே இருந்திட்டேன்! இந்த விவஸ்தை கெட்டவன் கிட்டல்லாம் எவ பேசுவா? கட்டைல போற வயசுல கல்யாணமாம்!” என்று பேச்சுவேறு வாய் கிழிந்தது.

இவளுடைய வாயே இவ்வளவு தூரத்துக்குக் கிழியும்போது, பாளை சனங்களின் வாய்கள் மட்டும் கிழியாமல் சும்மா இருந்துவிடுமா? ஆனாலும் இசக்கியின் இலஞ்சி பயணம் விருதுப்பட்டி சனியனை விலைக்கு வாங்கின மாதிரியாகி விட்டது. ரொம்ப நாளாக சும்மா இருந்தவன்கள் மறுபடியும் தெருச் சுவரில் கை வரிசையை காட்டத் தொடங்கி விட்டான்கள்.

அதுவும் எப்படி? கொஞ்சம் தமாசா. “பனங்காட்டுச் செல்வனின் அதிவீரத் திருமணம்! எதிர் பாருங்கள் விரைவில்’ படித்துப் பார்த்த இசக்கி அண்ணாச்சிக்கு ரொம்பச் சிரிப்பு வந்தது. இப்படி எழுதினா பரவாயில்லை! கல்யாணப் பத்திரிகை அடிக்கிற செலவு மிச்சம்!

ஆனாலும் அடுத்த மாசமே இசக்கிக்குக் கல்யாணப் பத்திரிகை அச்சடிக்கிற செலவு வந்துவிட்டது! நேரம் வந்துவிட்டால் எல்லாம் தானாக வந்துவிடும் போலிருக்கிறது… பெண்ணின் பெயர் நப்பின்னை; இருபத்திநான்கு வயசு; எட்டாவதுவரை படிப்பு; சுமாரான நிறம்; ஆனால் கவர்ச்சியான தோற்றம். வீட்டிலேயே ஒட்கார்ந்து தீப்பெட்டி ஓட்டுகிற வேலை. அவளுடைய அப்பா ஒரு புண்ணாக்குத் தரகர். நயம் சரக்குப் புண்ணாக்காக வாங்கித் தருவார். விலையும் குறைவாக இருக்கும். மூத்த ரெண்டு பெண்களையும் ரெண்டாம் தாரமாகத்தான் கொடுத்திருந்தார். ஆனால் முதல் இரண்டு மாப்பிள்ளைகளின் முதல் சம்சாரங்கள் தவறிப் போயிருந்தார்கள். அவர்கள் இருவரும் இசக்கி மாதிரி பெரிய பணக்காரர்கள் இல்லை.

கல்யாணம் ரொம்ப எளிமையாக முருகன் கோவிலில் நடந்தது. கோமதிதான் முன்னின்று கல்யாணத்தை நடத்திவைத்தாள். அந்த நன்றியில் இசக்கி அண்ணாச்சிக்கு கண்களில் கண்ணீர் தளும்பிவிட்டது. கோமதியை இழக்கிறோமோ என்று பயம்கூட வந்தது. விளையாட்டுப் போல இப்படியொரு கல்யாணத்தைப் பண்ணிவிட்டோமோ என்ற வருத்தம் கூட மனசுக்குள் வந்தது. நப்பின்னையின் இளமையைப் பார்க்க இன்னொரு மனசுக்கு குதூகலமாகவும் இருந்தது. பனை மரத்தின் குருத்து ஓலை போல அல்லவா இருக்கிறாள்? மீன லக்னத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் இசக்கி அண்ணாச்சி நப்பின்னையின் நல்ல பனங்குருத்துக் கழுத்தில் கனத்த தாலிக்கொடியை அதுவும் பெரிய முகப்பு வைத்த தாலிக்கொடியை ரொம்ப ஆசையுடன் கட்டினார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *