அடுத்த ஜென்மம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 20, 2020
பார்வையிட்டோர்: 5,229 
 
 

(இதற்கு முந்தைய ‘முதல் கதை’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)

என் முதல் கதை ‘திசை மாறிய எண்ணங்கள்’ விகடனில் வெளியான பிறகு எனக்குள் ஒரு நம்பிக்கை துளிர்த்தது.

இதனிடையில் எனக்கு பெங்களூர் டைட்டான் வாட்சஸ் கார்ப்பரேட் அலுவலகத்தில் ஒரு நல்ல வேலை கிடைத்தது. நான் உடனே பெங்களூருக்கு இடம் பெயர்ந்தேன். பெங்களூர் வந்ததும் கதைகள் எழுத முயற்சித்தேன்.

அதன் பிறகு எனது சிறு கதைகள் குமுதம், இதயம் பேசுகிறது, சாவி, அமுதசுரபி, ஓம்சக்தி, ஸ்ரீ ராம கிருஷ்ண விஜயம் இதழ்களில் வெளியாகின. தவிர, விகடனில் எனது அடுத்த மூன்று சிறுகதைகள் வெளியாயின.

கல்கியில் அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் ‘புலன் விசாரணை’ என்கிற சிறுகதை வெளி வந்தது. கலைமகளில் காகாஸ்ரீஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை எனது சிறுகதையான ‘தாக்கம்’ பெற்றது.

ஒருமுறை பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் என் அலுவலகத்திற்கு விஜயம் செய்தபோது தற்போதைய சிறுகதைகள் அதன் வீச்சு, தரம் போன்றவைகள் பற்றி அளவளாவிக் கொண்டிருந்தார். திடீரென, “நான் சமீபத்தில் கலைமகளில் ஒரு சிறுகதை படித்தேன்… அந்தக் கதையைப் படித்துவிட்டு பத்து நிமிடங்கள் நான் வேறு எதைப் பற்றியும் சிந்திக்கவில்லை. அதுதான் சிறந்த கதை. அதன் பெயர் ஞாபகமில்லை. ஆனால் கதையைச் சொல்கிறேன்…” கதையை என்னிடம் மிகவும் சிலாகித்துச் சொன்னார்.

நான் அமைதியாக என் மேஜை இழுப்பறையில் இருந்து கலைமகள் புத்தகத்தை எடுத்து பக்கங்களைப் புரட்டிக் காண்பித்து “இந்தக் கதைதானே சார்?” என்றேன். அது நான் எழுதிய ‘தாக்கம்’ சிறுகதை.

என் பெயரைப் பார்த்ததும் “அட, நீங்களா”’ என்று தன் இருக்கையில் இருந்து எழுந்து நின்று என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டார். அதன்பிறகு கோயமுத்தூரிலிருந்து பல தடவைகள் என்னை மொபைலில் தொடர்பு கொண்டு என்னை நிறைய எழுதத் தூண்டினார். நல்ல நண்பர்கள் ஆனோம். என் மகனின் திருமணத்திற்கு பெங்களூர் வந்திருந்தார். ஒருமுறை அவர் வீட்டிற்கு நானும் என் மனைவியும் சென்றோம்… கவனிப்பு என்றால் அப்படி ஒரு வாஞ்சையான கவனிப்பு. ராஜேஷ்குமார் சிறந்த பண்பாளர். இன்றைக்கும் அவர் விடாமல் எழுதிக் கொண்டிருப்பது எனக்கு ஒரு நல்ல மோடிவேஷன்.

ஆனால் அதன்பிறகு நிறைய முயற்சிகள் செய்தும் என்னுடைய ஒரு கதைகூட எந்த ஒரு இதழிலும் வெளியாகவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. அப்புறம்தான் எனக்கு சில உண்மைகள் புரியத் தொடங்கின. அதாவது எல்லா தினசரிகளும், இதழ்களும் விளம்பரத்தை நம்பிதான் இருக்கின்றன. முன்பெல்லாம் தினசரிகளில் செய்திகள் இருக்கும். இப்போது பாருங்கள் முதல் பக்கத்திலேயே முழுபக்க விளம்பரம். தொடர்ந்து பக்கம் பக்கமாக விளம்பரம்.

பொதுவாக பிரிண்ட் மீடியா அனைத்துமே விளம்பரத்தை நம்பி மட்டுமே வெளி வருகின்றன. சிறுகதைகளுக்கு முக்கியத்துவம் என்பது அறவே கிடையாது என்பது இயற்கைதான்… ஏனென்றால் அவர்களுக்கு வருவாய்தான் முக்கியம். தவிர ஒரு சிறுகதையை அனுப்பிவிட்டு, அது வருமா வராதா என்கிற காத்திருத்தல் நேரமும் மிக மிக அதிகம் என்பதையும் உணர்ந்து கொண்டேன்.

பெரிய எழுத்தாளனாக வர வேண்டும் என்றெல்லாம் நான் திட்டங்கள் எதுவும் வகுத்துக் கொள்ளவில்லை. எழுதும் ஆசை நிறைய இருந்தது. என்னால் எழுத முடியும் என்கிற நம்பிக்கையும் எனக்குள் ஏற்பட்டிருந்தது. ஆனாலும் நான் சில காலங்கள் எழுதவில்லை. காரணம், எனக்கு பிரின்ட் மீடியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய தோல்விதான்.

அதனால் நான் உடனே எலக்ட்ரானிக் மீடியாவை கெட்டியாக பிடித்துக் கொண்டேன். அப்போது எனக்கு அதற்கான ஒரு நல்ல தரமான வடிகாலாக அமைந்ததுதான் உலக அளவில் மிகப் பிரபலமான சிறுகதைகள்.காம். அவர்கள் சிறுகதைகளுக்கு என்றே அமானுஷம், அறிவியல், ஆன்மிகம், காதல், க்ரைம், குடும்பம், சமூகநீதி, சரித்திரம், நகைச்சுவை, த்ரில்லர், சுட்டிக் கதைகள் என்று ஏராளமான பிரிவுகளில் அமர்க்களப் படுத்துகிறார்கள்.

ஏப்ரல் 24, 2015 முதல் இதுவரை 410 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் அதில் எழுதிவிட்டேன். அதிகக் கதைகள் அதில் எழுதியவன் என்கிற பெருமை எனக்கு எப்போதும் உண்டு.

நிறைய கதைகள் படைப்பதற்கு கற்பனையில் எப்போதும் லயித்து இருப்பதால், மனம் துடிப்புடன இளமையுடன் இருக்கிறது என்பது என் தனிப்பட்ட அனுபவம்.

என்னுடைய சில கதைகளை மதுரம் சித்தியும் படித்திருக்கிறார். இந்தத் தகவலை ஒரு கல்யாண வீட்டில் என் அம்மாவைப் பார்க்க நேர்ந்தபோது அவரிடம் என்னைப் பற்றி, “நான் நெனச்சே பாக்கலை, இப்படி திடீர்ன்னு கதைகள் எழுதுவான்னு. என்னாலேதான் எழுத முடியலை, அவனாவது எழுதட்டும்…” இது மதுரம் சித்தி என் அம்மாவிடம் சொன்ன வார்த்தைகள். என் அம்மா இந்த வரிகளை அப்படியே எனக்குக் கடிதத்தில் தெரியப்படுத்தி இருந்தார். கடிதத்தில் இந்த வரிகளை வாசித்தபோது என் மனம் சித்திக்காக உருகியது.

ஒருத்தி கதை எழுத ஆசைப்பட்டது ஒரு துர் நடத்தையா என்ன? அதற்காக அவளது கணவன்காரன் அப்படியா ஒரு நெருப்பை வாரி இரைப்பான்? அது அந்தக் கணவனின் துர் நடத்தை. என்னுள் இருந்த காயம் கிளறப் பட்டது. அவ்வப்போது அந்தக் காயத்தில் ரத்தம் கசியவே செய்யும்… அப்போதெல்லாம் எனக்குள் இருக்கும் அறம் பொங்கி எழும்.

நான் பெங்களூர் வாழ்க்கைக்கு வந்தபின் திருநெல்வேலி உறவுகள் அனேகமாக தூர்ந்து போன மாதரிதான். என் பெற்றோர்கள், என் சகோதர சகோதரிகள் என்பதற்குமேல் யாரோடும் ஆழமான உறவுகள் இல்லாமல் போனது.

அதனால் மதுரம் சித்தியைப் பார்த்த சந்தர்ப்பங்களும் விரல்விட்டு எண்ணி விடக் கூடியவையே. ஆனால் மனம் திறந்து சொற்களில் கொட்ட எங்கள் இவருடைய மனங்களிலும் கதைகள் நிறைய இருந்தன. அக்கதைகளை கொட்டுகிற தவிப்பு சித்தியின் கண்களில் பொங்கிக் கிடந்ததை என்னால் பார்க்க முடிந்ததுதான் மிகப்பெரிய சோகம். மனம் திறக்க முடியாத அந்த உளைச்சல் எங்களின் உணர்வுகளில் தேங்கிக் கிடந்தது.

இடையில் எத்தனையோ மாதங்களும் வருடங்களும் ஓடி மறைந்து மறைந்து போயின. திடீரென திருநெல்வேலியில் என் நெருங்கிய உறவினரின் மகளுக்கான கல்யாணம் வந்தது. கட்டாயம் அந்தக் கல்யாணத்தில் நான் கலந்தே தீர வேண்டிய நிலைமை. அதேநேரம் என் மனதிற்குள் ஒரு பொறியும் இருந்தது. அதாவது கல்யாணத்திற்கு மதுரம் சித்தியும் வரலாம். அமர்ந்து பேச முடியாமல் போனாலும், சீலம் நிறைந்த அந்த மனுஷியை நேரில் பார்க்கலாம்.

நான் அந்தக் கல்யாணத்திற்குப் போனேன். எதிர்பார்த்த மாதிரியே மதுரம் சித்தியும் வந்திருந்தார். நான் எதிர்பாராத விஷயம், சிவராமன் சித்தப்பாவிற்கு டைபாய்ட் காய்ச்சல் என்பதால் சித்தியுடன் வரவில்லை. அந்தக் குறுக்குச் சுவர் இல்லாததால் நானும் சித்தியும் சந்தித்துக் கொள்ள தடை இல்லை. என்னைப் பார்த்ததும் சித்தி கிட்டத்தட்ட ஒரு குழந்தை போல ஓடி வந்தார்.

நிஜமாக அன்று எங்களுக்குள் நிகழ்ந்த பேச்சு முடிந்துவிட முடியாத பேச்சு. வேறு எந்த நினைப்பும் இல்லாமல் நாங்கள் பேசிக்கொண்டே இருந்தோம். அன்று பேசிப்பேசி மதுரம் சித்தி களைத்தே போய்விட்டார். நான் நிறைய கதைகள் எழுதுவது காலத்தின் தீர்ப்பு என்றார். அவரின் வீட்டுக்காரருக்கு எதிரான தீர்ப்பு என்றார். இந்தத் தீர்ப்பை சித்தி என்னிடம் சொன்ன நேரம், கல்யாண வீட்டுக்காரரான தர்மலிங்கம் மாமா எங்கள் பக்கமாக வந்தார்.

“என்ன அம்மையும் மகனும் ரொம்ப நேரமா பேசிட்டு இருக்கீங்க… குடிக்க சூடா காப்பி கொண்டுவரச் சொல்லட்டா?” என்றார்.

“காப்பியெல்லாம் வேண்டாம்… இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பாடே சாப்பிடறோம்…” சித்தி சொன்னார்.

“சரி, நான் போய் காப்பி குடிக்கேன்… நீ உன் மகன்கிட்ட பேசிட்டு இரு..” மாமா நகர்ந்து சென்றுவிட்டார்.

மாமா நகர்ந்து சென்றபின் மதுரம் சித்தி மெளனமாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் வாஞ்சையான பார்வையில் வேறொரு விகசிப்பு கனிந்து தெரிந்தது.

“என்ன சித்தி?” என்றேன் மெல்லிய குரலில்.

“நீ எனக்கு மகனா?” சித்தியும் மெல்லிய குரலில் கேட்டார். அவரின் கேள்வி எனக்கு ஆச்சர்யம் தந்தது.

“நான் உங்களுக்கு மகன்தானே சித்தி…” என்றேன்.

சட்டென சித்தியின் கண்களில் தெரிந்த விகசிப்பு பொங்கிப் பெருகினாற் போல் இருந்தது. சித்தி என்னைக் கனிவுடன் பார்த்தார். பின்பு மந்தஹாசமாய் சிரித்தார்.

“எனக்கு நீ மகன் கிடையாது.”

நான் மெளனமாக சித்தியைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“எனக்கு நீ நெஜத்ல யார் தெரியுமா?” சித்தி ஒருவித பெருமிதமான குரலில் கேட்டார். நான் அவர் சொல்வதற்காகக் காத்திருந்தேன்.

“எனக்கு நீ குரு…”

மதுரம் சித்திக்கும் எனக்கும் இருந்த உறவின் உச்சம் அவர் எனக்கு சூட்டிய இந்த பரிவட்டம்தான்.

அப்போது என் மனதில் சிவராமன் சித்தப்பா உதிர்த்த அநாகரீகமான வார்த்தைகள் ஞாபகத்தில் வந்து போயின.

“அன்னிக்கி சித்தப்பா அப்படிப் பேசின அப்புறம் என்னிக்காவது கதை எதுவும் எழுதிப் பார்த்தீங்களா சித்தி?”

“நல்லா எழுதிப் பாப்பேனே… அவர் அன்னிக்கி அப்படிப் பேசினதுக்குப் பெறகு நான் மாச காலண்டர்ல ஷீட்டைக் கூட கிழிக்கிறது கிடையாது. பேனாவையும் தொட்டதில்லை. ஆனாலும் என்ன மனசுக்குள்ள ஏதாச்சும் அப்பப்ப கதைங்க தோணத்தான் செய்யும். அதெயெல்லாம் மனசுக்குள்ளேயே எழுதிப் பாத்துப்பேன் அவ்வளவுதேன்…” சித்தி இதை அவருக்கே உரித்தான மெல்லிய சிரிப்போடும் மிருதுவான குரலோடுதான் சொன்னார். சில வினாடிகள் இடைவெளி விட்டு “ஆனா என்னோட அடுத்த ஜென்மத்ல கண்டிப்பா கதை எழுதுவேன்…”

ஆனால் இதைச் சொன்ன அடுத்த கணம் மதுரம் சித்தியின் கண்கள் சற்றே சுருங்கின. அவருடைய முகத்தின் கனிவு சட்டென மறைந்தது. மனதிற்குள் தெரிகிற ஏதோ ஒரு காட்சியை கண்களால் பார்க்கிற பாவனை அவருடைய முகத்தில் இருந்தது…

சிரிப்பு இல்லாமல்; கனிவு இல்லாமல்; களைத்துப் போன தொனியில் ஏக்கமான குரலில் சித்தி சொன்னார், “ஆனா என் அடுத்த ஜென்மத்திலும் ஒன் சித்தப்பாவே எனக்கு புருஷனா வந்திட்டா, அப்பவும் என்னால கதை எழுத முடியாமத்தான் போகும்…”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *