கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 17, 2019
பார்வையிட்டோர்: 5,336 
 

நாளை காலை திருமணம். மணமகன், மணமகள் , சுற்றம், நட்பு எல்லாமே வந்து மண்டபம் கலகலப்பாய் இருந்த.

எல்லோரும் உண்ட முடித்து உறங்கும் நேரம். சில இளசுகள் சினிமா பார்க்கப் புறப்பட்டுப் போனார்கள். பெண்களில் சிலர் கொட்டாவி விட்டு கும்பலில் படுதாரகள். சிலர் புருஷன் துணை இல்லாம புரண்டாள்.

மண்டபத்தின் பின்புறம் சமயற்கட்டில் வேலை நடந்து கொண்டிருந்தது.

அப்போது மாப்பிள்ளையின் அப்பா வெங்கடசுப்ரமணியம் எவரோ ஒருவரை உடனழைத்துக்கொண்டு மண்டபத்தில் யாரையோ தேடினார்.

அவருடன் வந்தவர் வெள்ளை சட்டை, வெட்டி அணிந்திருந்தார். நெற்றியில் சந்தனப் பொட்டு. கக்கத்தில் வெற்றிலைப் பெட்டி போல் ஒரு டப்பா.

பெண்ணின் தந்தை தணிகாசலம் மண்டபத்தின் கடை கோடியில் மங்கலான வெளிச்சத்தில் யாரோ ஒரு உறவுக்காரருடன் பேசிக்கொண்டிருந்தார்.

வெங்கடசுப்ரமணியத்திற்கு தேடிய ஆளைக் கண்டுபிடித்து விட்ட திருப்தி முகத்தில் வந்தது. பேசிக்கொண்டிருந்தவர்களைக் கலைக்க விருப்பமில்லாமல் நெருங்கியவர் நின்றார். அவருடன் வாலாய் தொடர்ந்து வந்தவரும் பக்கத்தில் நின்றார்.

பேச்சு சுவாரஸ்யத்தில் யாரோ எவரோ என்றிருந்த தணிகாசலம் வெங்கடசுப்ரமணியத்தை அடையாளம் கண்டுகொண்டதும் திடுக்கிட்டார்.

பேச்சை முடித்துக் கொண்டு…

” வாங்க சம்பந்தி ! ” என்று வரவேற்று விரைவாய் வந்து இவர் அருகில் நின்றார்.

இவருக்கு எப்படி ஆரம்பிப்பது என்று உள்ளுக்குள் சின்ன தடுமாற்றம்.

” என்ன சம்பந்தி. ..? ” தணிகாசலமே கேட்டு அவர் முகத்தைப் பார்த்தார்.

வெங்கடசுப்ரமணியத்திற்குத் தடுமாற்றம் மறைந்து பிடி கிடைத்து விட்டது.

” ஒ. ..ஒ. .. விசயம். …” என்று மெல்ல சொல்லி அவரைக் கையைப் பிடித்து இன்னும் கொஞ்சம் தனியே அழைத்துச் சென்றார்.

‘ என்ன விஷயம். ..? ரகசியம். …?! ‘ பெண்ணைப் பெற்றவருக்குள் கிலி. உள்ளுக்குள் கலவரம். மனம் திக். .. திக்.

ஆள் பதற்றத்தைப் புரிந்து கொண்ட வேங்கடசுப்ரமணியம். …

” ஒண்ணுமில்லே சம்பந்தி. பின்னால் நமக்குள்ள சின்ன வருத்தம், மனஸ்தாபம் ஏற்படாம இருக்க சின்ன ஏற்பாடு ! ” என்று தணிகாசலம் காதுகளுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னார்.

” சொல்லுங்க. .? ”

” நாம பேசியபடி பொண்ணுக்கு அம்பது சவரன் நகைகள் போட்டிருக்கீங்களான்னு பார்க்கனும் !” வெங்கடசுப்ரமணியம் விசயத்தை உடைத்தார்.

தணிகாசலம் முகம் டக்கென்று ஒரு மாதிரியாகிப் போனது.

” இதுக்கு என்ன செய்யனும் சொல்லுங்க..? ” என்றார்.
” இப்போ பொண்ணுக்கு நகைகள் பூட்டி இருப்பீங்க. நான் பத்தரை கூட்டி வந்திருக்கேன். மணப்பெண் திவ்யாவை இப்படி தனி அறைக்கு அழைச்சி வந்தீங்கன்னா. . ஒவ்வொண்ணா கழட்டி, எடை போட்டு பார்த்து அரை மணி நேரத்துல வேலையை முடிச்சி காதும் காதும் வச்ச மாதிரி அனுப்பிடலாம். யாருக்கும் எந்த சந்தேகமும் ஏற்படாது. அவமானமுமில்லே ! ” தன் திட்டத்தைச் சொன்னார்.

‘ மடியில் கனமில்லை என்கிறபோது வழியில் பயமில்லை ! சரி பாருங்க சொல்லலாம். குறைந்தால் என்ன செய்வார். .? திருமணத்தை நிறுத்துவாரா. .? ஆமாம். ! அப்படித்தான் ! ‘ நினைக்க தணிகாசலத்திற்குள் நடுக்கம் வந்தது.

‘ கொஞ்சம் அதிகமாக இருந்தால் கழட்டி கொடுப்பாரா. ..? இருக்கட்டும் விடுவாரா, இல்லை வழிவாரா. .? ! ‘ என்று யோசித்தவரை வெங்கடசுப்ரமணியத்தின் குரல் வெட்டியது.

” உங்க மேல நம்பிக்கை இல்லாம இந்த ஏற்பாட்டயுய்ச் செய்யல. சரியாய் இருந்தால் மனசு திருப்தி படும். அதான் ! ” சொன்னார்.

பணக்கஷ்டமோ, பொருள் கஷ்டமோ இந்த நம்பிக்கையைப் பாழ் பண்ணுவது போல் பலர் நடக்கின்றார்கள். பாந்தமாய் கவரிங் நகைகளைப் போட்டு அப்போதைக்குத் தப்பித்து பின்னால் முடியும்போது எவருக்கும் தெரியாமல் போட்டு கணக்கை முடித்துக் கொள்கிறார்கள். முடியாமல் போனால் குட்டை உடைத்துச் சொல்லிவிட்டு காலம், நேரம் வாங்கி சமாளித்துக் கொள்கிறார்கள். இந்த திருட்டுத்தனம் மாப்பிள்ளை வீட்டிற்குத் தெரிந்து போக…. தங்களை ஏமாற்றி விட்டதாக பிரளயமே நடக்கின்றது. போய் மாட்டிக்கிட்டு வா. பெண்ணைத் திருப்பி அனுப்புகிறார்கள். ஒரு சிலர் இப்படிப்பட்டத் திருட்டுத்தனத்தால் பெண்ணின் வாழ்க்கையையே நாசம் செய்கிறார்கள்.

இப்படி செய்வது ஓரளவிற்குச் சரிதானென்றாலும் இப்போது கழற்றி பரிசோதிப்பது பெண்ணின் மனநிலைக்கு ஆபத்து. தன்னையும், பெற்றவர்களையும் இவர்கள் அவமானப்படுத்துவதாக நினைப்பாள். இப்படி நம்பிக்கை இல்லாத இடத்தில் வாழ்க்கைப்பட்டு விட்டோமே என்று மாமன், மாமி, கணவனையே வெறுப்பாள்.

”எதுக்கும் யோசனை பண்ணாதீங்க. போய் அழைச்சுக்கிட்டு வாங்க. ..” வெங்கடசுப்ரமணியம் அவரைத் துரிதப்படுத்தினார்.

‘ இனி வழி இல்லை ! ‘ – உணர்ந்த தணிகாசலம் மனதைத் திடப்படுத்திக்கொண்டு மணமகள் அறைக்குச் சென்றார்.

அறைக் கதவை ஒருக்களித்து திவ்யா தோழிகள் கேலிக்கும், கிண்டலுக்கும் இலக்காகி இருந்தாள். முகம் வெட்கத்திலும் , நாணத்திலும் நிரந்தர செம்மைப் பூசி இருந்தது.

” அம்மா. ..! ” மெல்ல கதவைத் தட்டினார்.

” யாரது. ..? ” திடுக்கிட்ட ஒருசில குரல்களோடு சிலர் திரும்பினார்கள்.

திவ்யாவும் பார்த்தாள்.

அனைவரும் கப்சிப்.

” என்னப்பா. ..? ” எழுந்து வந்தாள்.

” ஒரு விஷயம்மா. ..” தணிகாசம் மகளைத் தனியே அழைத்தார்.

” என்னப்பா. .? ” இவரது தர்மசங்கடமான முகம் அவளுக்குள் பீதியை ஏற்படுத்தியது.

” ஒ. … ஒண்ணுமில்லேம்மா. ..’ என்று ஆரம்பித்த தணிகாசலம் மகளிடம் மெல்ல விசயத்தைச் சொன்னார்.

கேட்ட திவ்யாவுக்கு இது இடியாக இருந்தது.

” ஒரு வகையில யோசிச்சா மாப்பிள்ளை வீட்ல இப்படி செய்யிறது நியாயம். பின்னால பிக்கல் பிடுங்கல் வராது. நமக்கெதுக்குப் பயம். .? வாம்மா. .!” பெண்ணைத் தயவாய் அழைத்தார்.

முகம் இறுகி கொஞ்ச நேரம் யோசித்த திவ்யா ஒரு முடிவிற்கு வந்தவளாய் அவருடன் புறப்பட்டாள்.

அறைக்குள் அவர்கள் தயாராய் அமர்ந்திருந்தார்கள்.

நுழைந்து கதவைச் சாத்தி தணிகாசலம் தன் மகளுக்கருகில் அமர்ந்தார்.

பத்தர் பெட்டிக்குள்ளிருந்து சின்ன கைதராசு, எடைக்கற்களை எடுத்து வைத்து தராசை சரி பார்த்தார்.

வெற்றுத் தட்டுகளில் அது சரியாக இருந்தது.

திவ்யா முதலில் கழுத்துச் சங்கிலி, காசு மாலை , நெக்லஸ்களைக் கழற்றினாள்.

பத்தர் ஒவ்வொன்றாகத் துல்லியமாக எடை போட்டார். முடித்து எடையை வேங்கடசுப்ரமணியத்திடம் சொன்னார். அவரும் தராசை சரி பார்த்து, எடைக் கற்களை பார்த்து விவரம் எழுதி ஒரு தாளில் குறித்துக் கொண்டார்.

அரை மணி நேரத்தில் மொத்த நகைகளும் எடை போட்டு முடிக்கப்பட்டது.

திவ்யா கழற்றியவைகளை மாட்டினாள்.

வெங்கடசுப்ரமணியம் எடைகளைக் கவனமாய்க் கூட்டி. ..

” சரியா இருபத்தி அஞ்சு பவுன் இருக்கு சம்பந்தி !. ” சந்தோசமாகச் சொன்னார்.

” அப்போ. .. புறப்படுவோம். எழுந்திரிம்மா. .” தணிகாசலம் மகளை எழுப்பினார்.

” ஒரு நிமிசம் உட்காருங்கப்பா. ஒரு விஷயம் பேசனும். ..” அவள் எழுந்திருக்கவில்லை.

” என்னம்மா. ..? ” அவர் வயிற்றில் புளி கரைக்க அமர்ந்தார்.

” நான் எவ்வளவோ யோசனை பண்ணிப் பார்த்தும் இப்போ நடந்தது சரி இல்லேன்னு என் மனசுக்குப் படுது. ” மெல்ல சொன்னாள்.

தணிகாசலம் மகளை அதிர்ச்சியாகப் பார்த்தார்.

” இந்த காரியம் நம்ப மேல நம்பிக்கை இல்லேங்கிறதைத்தான் காட்டுது. இப்படிப்பட்டவங்க வீட்டுல நான் எப்படி வாழறதுன்னுதான் எனக்கு யோசனை. .! ” நிறுத்தினாள்.

” அம்மா. …ஆ ! ” தணிகாசலம் பதறினார்.

” அந்த வீட்டுக்குப் போனா. ..ஏதோ கொள்ளைக் கும்பல்ல புகுந்த மாதிரி இருக்கும். இந்த இடம், மாப்பிள்ளை எனக்கு வேணாம். என் அக்காவை இழந்த அத்தானை எழுப்பி எனக்கு மாப்பிள்ளையாக்குங்க. பாவம் அவர் புள்ளையும் கையுமாய்த் தவிக்கிறார். இது நம்ம வீட்டுக் கலியாணம். இவுங்களை விருந்தாளியாய் இருந்து வாழ்த்திட்டுப் போகச் சொல்லுங்க. ” கறாராய்ச் சொல்லி எழுந்து வெளியே நடந்தாள்.

வெங்கடசுப்ரமணியம் எதிர்த்து வாய் பேச முடியாமல் தலை கவிழ்ந்தார்.

தணிகாசலத்திற்கும் மகள் சொன்னது சரி , நியாயமாகப் பட்டது. கம்பீரமாக எழுந்தார்.

வெங்கடசுப்ரமணியத்தையும் பத்தரையும் தூசியாகப் பார்த்துவிட்டு நகர்ந்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *