கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 17, 2022
பார்வையிட்டோர்: 4,378 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஸுலைமாவின் தளிர் உடல் ஆடிக்காற்றில் அலைந்தாடும் பசுந்தளிரைப் போல் படபடத்தது. “யா அல்லா! நீங்கள் அங் கெல்லாம் போகவே கூடாது” என்று அலறினாள் அவள். அமீருக்கு மனைவியின் பதற்றம் ஆச்சரியத்தை அளித்தது. அவன் அவளை அருகில் இழுத்து அணைத்துக்கொண்டு, ‘பர்தா’ வுக்கு மேலாக அவளுடைய தலையை அன்புடன் வருடியவாறு, “ஏன் ஸுலே, ஏன் இந்தப் பதற்றம்?” என்று கேட்டாள்!

“ஏனா? இந்த நெஞ்சைக் கேட்டுப் பாருங்கள்”. ஸுலைமா தாமரைத் தண்டு போன்ற தனது நீண்ட சுட்டுவிரலை அவன் நெஞ்சில் பதித்தாள்.

அமீர் சிரித்தான். இப்பொழுது அவனுக்கு மனைவியின் பதற்றத்தின் காரணம் விளங்கிவிட்டது. ஆம், அவளைப் போன்ற நிலையிலுள்ள எந்தப் பெண்ணும், கணவனை அந்த இடத்துக்கு அனுப்ப அஞ்சத்தானே செய்வாள்? ஆகையால் அவன் தன் நெஞ் சில் பதித்திருந்த விரலோடு ஸுலைமாவின் கண்ணாடி வளையல் குலுங்கிய அழகிய கரத்தை ஆசையோடு பற்றிக் கொண்டு, “பைத்தியமே! இந்தக் கையை என்றைக்குப் பற்றினேனோ, அன்று தொட்டு நீதான் என் உடல், பொருள், ஆவியெல்லாம் என்பது உனக்குத் தெரியாதா? ஏதோ அல்லாவின் திருவருளால் இனி என்னாளுமே போக முடியாது என்றிருந்த அந்த இடத்துக் குப் போகும் வாய்ப்பு ஒன்று வலியக் கிட்டியிருக்கிறது. ‘போய் வாருங்கள்’ என்று மகிழ்ச்சியுடன் விடை தந்து அனுப்ப வேண்டிய நீ, ஏதேதோ கற்பனைகள் செய்து கொண்டு வீணில் மனசைக் கலக்கிக் கொள்ளுகிறாயே!” என்று அவளைத் தேற்ற முயன்றான்.

ஸுலைமாவின் மனத்தில் எழுந்த பீதி கணவனின் ஆறுதல் மொழிகளால் மாறிவிடவில்லை. அவள் சொன்னாள் : ‘என் உள்ளம் கலங்கத்தான் கலங்குகிறது, அமீர். நீங்கள் இந்த உலகத்தில் வேறு எந்தப் பகுதிக்குப் போவதாக இருந்தாலும் சந்தோஷமாக விடை தந்து அனுப்பி விடுவேன். ஆனால் இங்கு மட்டும்…அவளால் மேலே பேசமுடியவில்லை. நெஞ்சத்தின் கலக்கம் கல்லாக உருண்டு தொண்டையை அடைத்தது. அந்த அடைப்பு அவளுடைய கவர்ச்சிமிக்க மைதீட்டிய கருவிழிகளில் கண்ணீரை ஊற்றெடுத்து ஓடச் செய்தது.

அமீர் மீண்டும் அவளை அருகில் இழுத்து அவளுடைய வாடிய முகத்தைத் தன் அகன்ற மார்பின் மீது சாய்த்துக் கொண்டான். “அடடா! இது என்ன ஸுலே? ஏன் இப்படிக் கண்ணீர் விடுகி றாய்? உன் கண்ணீரைப் போக்கக் கைப்பிடித்த நான், உன்னைக் கண்ணீர் சோர விட்டுவிட்டு எங்கும் போகமாட்டேன். நீ போக வேண்டாம் என்றால் போகவில்லை கண்ணே; அதற்காக அழாதே, ஏதோ ஒரு சபலம்; ஆபீசிலிருந்து அனுப்புவதாகச் சொல்லுகிறார்களே; நமது நன்றிக் கடனும் நீண்ட காலமாக நிறைவேற் றப்படாமல் இருக்கிறதே; போய் வந்துவிடாலாமென்று நினைத் தேன்…”

ஸுலைமா கேவிக்கொண்டே அவனை இடைமறித்தாள்: “ஆமாம்; எல்லோரும் இப்படித்தான் ஏதேதோ காரணத்தைச் சொல்லிக்கொண்டு, ‘இதோ வந்து விடுகிறேன்’ என்று போகி றார்கள். ஆனால் போனவர்கள் திரும்பிவருவதே இல்லை; பிறந்த மண் அவர்களைப் பிடித்து வைத்துக்கொண்டு விடுகிறது.”

“ஆனால் என்னைப் பிடித்து வைத்துக்கொண்டிருக்கும் காந்த மாகிய நீ இங்கே இருக்கையில் என் உடல்தான் அங்கே போய் வருமேயன்றி உயிர் இங்கேதான் இருக்கும் ஸலே.’

ஸுலைமாவிடமிருந்து நெடுமூச்சு ஒன்று பிரிந்தது. “இப்ப டிச் சொல்லிவிட்டுத்தான் ஆறு மாதத்துக் கைகுழந்தையைக்கூட விட்டுவிட்டுப் போனாள் தாரா. அவள் திரும்பிவந்தாளா? திரும்பி வர முடிந்ததா அவளால்?”

“அவள் பெண். தவிர பெற்றோரும் அங்கே இருந்தனர். ஆனால் என் விஷயம் அப்படியில்லையே. எனக்கு அங்கே யார் இருக்கிறார்கள்?”

கை ஸுலைமாவுக்கு இன்னும் கணவனின் பேச்சில் நம்பிக்கை பிறக்கவில்லை. அவள் சொன்னாள் : “எப்படியிருந்தாலும் உங்களை நான் அனுப்ப உடன்படவே மாட்டேன் அமீர், ஆபீஸில் வாக்களித்துவிட்டதற்காகப் போய்த்தான் ஆகவேண்டுமென்றால், என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்.”

மனைவி தன் பிரயாணத்தின் நோக்கத்தை இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பதை அமீர் இப்பொழுதுதான் உணர்ந்து கொண்டான். சே! இந்தப் பெண்கள் தான் எவ்வளவு சீக்கிரம் நன்றி மறந்தவர்கள் ஆகிவிடுகிறார்கள்! அன்று அந்தத் தாராவும் இப்படித்தான் நன்றி மறந்தவள் ஆனாள். இன்று இவளும்…

அவன் ஒருகணம் மனைவியின் நெஞ்சைத் துளைத்து விடும்படி யாக ஒரு பார்வையைச் செலுத்திவிட்டுச் சொன்னான் : “நான் இந்தப் பிரயாணத்தை மேற்கொண்டிருப்பதன் நோக்கத்தை நீ புரிந்துகொண்டிருப்பாய் என்று நினைத்தேன் ஸுலே. ஆனால் நீ அதை இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை. என் அன்புள்ள ஸுலே ! நான் இப்பொழுது அங்கே போவது ஆபீஸ் கட்டளையை நிறைவேற்றவோ, அல்லது பிறந்த மண்ணைக் காணவேண்டியோ அல்ல ; நம்மை ஆளாக்கி வாழ்வளித்த மாந்தர்குல மாணிக்கத் திற்கு அஞ்சலி செலுத்தத்தான் போகிறேன்.”

அஞ்சலி ! கட்டுக்கடங்காமல் படமெடுத்துக் கொட்டவந்த பாம்பு, பிடாரன் கையில் வேர்ப்பையை எடுத்ததுமே கொட்ட மடங்கித் தலை சாய்த்து விடுவதுபோல், தலைகுனிந்தாள் ஸுலைமா. ” யா அல்லா! எனக்கு அது தோன்றவே இல்லையே? போய் வாருங்கள் அமீர்; தாராளமாய்ப் போய் வாருங்கள். லாகூருக்குப் போய் அந்தப் புண்ணியாத்மாவின் ‘தர்கா’ வின் முன் மண்டியிட்டு அஞ்சலி செலுத்துவதோடு, இந்த அபலையின் அஞ்சலியையும் அவருக்குச் செலுத்துங்கள்; பிறகு அங்கிருந்து அதிக தூரம் இல்லை ஷேக்குப்புரா; அங்கே போய், அந்த நன்றி கெட்ட தாராவைச் சந்தித்து அவள் முகத்தில் காரி உமிழ்ந்து விட்டும் வாருங்கள் ” என்றாள் அவள் இறுதியாக:

தாண்டமுடியாத கோட்டையாய், தகர்க்க முடியாத கற் சுவராய், கணவனின் பிரயாணத்துக்குத் தடைபோட்ட ஸுலைமாவை ஒரு கணத்துக்குள் தாழிடப்படாத கதவாகமாற்றி, தாராளமாகத் திறந்து வழிவிடச் செய்துவிட்டது அந்த அஞ்சலி என்ற மந்திரச் சொல். அதன் மகத்துவம் தான் என்ன ? அத னுள்ளே அடங்கியிருந்த மர்மந்தான் என்ன? எந்த மனிதருக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டுச் சொந்தக் கணவன் தன்னைப் புறக்கணித்துப் பிறந்த இடத்தில் தங்கிவிட்டாலும் பரவாயில்லை; அவரை அனுப்பித்தான் ஆகவேண்டும் என்று அவள் துணிவு கொண்டாள். இந்த விவரங்களையெல்லாம் தெரிந்து கொள்ளு முன், ஏன் அவள் இதோ இருக்கும் லாகூருக்குக் கணவனை அனுப்ப இத்தனை பெரிய தடை போட்டாள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அதற்கு முதல் காரணம் இது தான்; “ஸுலைமாவின் கணவன் அமீர்கான் லாகூரில் பிறந்தவன். இந்தியா பிளவடைவதற்கு முன் அமிர்தசரஸ்ஸில் இருந்த அவன், பின்னர் தான் பிறந்து வளர்ந்த ஊராகிய லாகூர், பாகிஸ்தானுக்குப் போய்விட்டபடியா லும், அப்பொழுது ஏற்பட்ட கலவரங்களில் தன் பெற்றோர் கொல்லப்பட்டுவிட்டனர் என்று அறிந்தமையாலும் இந்தியாவி லேயே தங்கிவிட்டான். இதுகூடப் பெரிதல்ல; ஆனால் அமீரைப் போல் பாகிஸ்தானில் பிறந்து, நிர்ப்பந்தம் காரணமாக இந்தியப் பிரஜையான பலர், பின்னர் எப்பொழுதாவது பிறந்த பூமிக்குச் சென்றால், அந்த மண்ணின் மணம் அவர்களைக்கவர்ந்து அங்கேயே தங்கிவிடச் செய்ததைக் கண்கூடாகக் கண்டிருந்ததால்தான், ஸுலைமா தன் கணவரும் அப்படிச் செய்துவிடுவாரோ என்று அச்சமுற்றாள்.

அடுத்த காரணம், அப்படி அவர் பிறந்த பூமியில் தங்கி, விட்டால், தன்னை இங்கே ஆதரிக்கயாருமில்லை என்பதும், தனக் குத் தான்பிறந்த சமூகத்தில்கூட இனி இடம் கிடையாது என்பது மாகும். ஆம்; அவளுடைய கதையே ஒரு சோகக் கதை; ஒரு விந்தைக் கதை.

இன்று அவள் உயிர் வாழ்கிறாள்; காதல்மிக்க கணவனுடன் கருத்தொருமித்து இல்லறம் நடத்துகிறாளென்றால், இந்த வாழ் வையும், இந்த இல்லறத்தையும் அவளுக்குக் கிடைக்கச் செய்த வன் தான், அவளும் அமீரும் இன்று அஞ்சலி செலுத்த விரும்பிய கேஸர் ஸிங்.

கேஸர் ஸிங்கின் கதையைக்கூற வரும்போது அதைக் காதல் காவியம் என்பதா அல்லது கவினுறும் தியாகச்சித்திரம் என்பதா என்ற ஐயம் ஏற்படுகிறது. ஏனெனில் இந்த இரண்டுமே அவனு டைய வாழ்வில் முக்கிய இடம் பெற்றிருந்தன. ஆயினும் இன் றைய உலகம், கேஸர் ஸிங்கின் தியாகத்தைக் காதலோடு முடிச் சிட்டு அவனுடைய வரலாற்றிற்குக் காதல் மகுடமே சூட்டியிருப் பதால் நாமும் அந்தக் கண் கொண்டே அவன் கதையைப் பார்ப்போம்.

இந்த உலகிலே உண்மைக் காதலுக்காக உயிர்நீத்த உத்தமர்கள் எத்தனையோ பேர். நம் நாட்டில் ஓர் அம்பிகாபதி; மேலை நாட்டில் ஒரு ரோமியோ; அராபிய நாட்டில் ஒரு மஜ்னு. இன்னும் இப்படி எந்த நாட்டுச் சரித்திர ஏட்டைப் புரட்டினாலும் இவர்களைப் போன்ற எத்தனையோ “காதல் தியாகி களைக் காண லாம். அவ்வாறே இன்றைய பாரதநாட்டின் சரித்திரம் ஒன்று வருங்காலத்தில் வரையப்படும்போது, அதில் காதல் பகுதிக்கு மகுடமிடும் ஓவியமாகத் தீட்டப்பட்டிருப்பான் கேஸர் ஸிங் என் பதில் சிறிதும் ஐயமில்லை.

கேஸர் ஸிங் என்ற பெயரே அவன் சீக்கியன் என்பதை விளக் கப் போதும்; ஆனால், அவன் ஓர் உண்மையான சீக்கியன் என்பதை விளக்க? அதற்கு அவன் கதையைத் தன் ரத்தத்தினாலே தான் எழுத நேர்ந்தது.

கேஸர் ஸிங் சீக்கிய மதக் கோட்டையான பொற்கோவில் நகரம் அமிர்தசரஸ்ஸில் பிறந்தவன். செல்வச் சிறப்புள்ள குடும் பத்தின் ஒரே வாரிசு. அவனுடைய தந்தை பல்பீர் ஸிங் ஒரு தீவிர மதவாதி. சீக்கிய மத நூலான ‘கிரந்த ஸாஹிப்’ பைக் கரைத்துக் குடித்தவர்; ஆயினும் அதன் சாரத்தை வாழ்வில் கொள்ளாதவர். பாரத நாட்டின் வீரத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் சிக்கிய மதம், மதத்தைக் காக்கத் தோன்றிய மதந் தான். இருந்தாலும் அது போதித்த அன்பையும். பரோபகாரத் தையும் உணராத சிலரும் அம்மதத்தில் இருந்தனர், இடுப்பிலே ‘ கிரீ’ பானும், கரத்திலே இரும்பு வளையமும். உடலிலே பிறந் தது முதல் ஒரு தடவைகூட உதிர்க்கப்படாத ரோமமும் கொண்ட சீக்கியர்கள் மதப்பற்று மிக்கவர்கள் என்பது பிரசித்தம். ஆனால், அந்த மதப்பற்று பல்பீர் ஸிங்கைப் போன்ற சிலரிடம் மதவெறி யாக மாறியிருந்ததென்றால், அதற்கு அந்த மதம் காரணமல்ல; அவர்களுடைய மனந்தான் காரணம்; ‘உன் மதத்தையும், மானத்தையும் காக்க உயிரையும் கொடு’ என்று ‘ கிரந்த ஸா ஹிப்’ பில் குறிப்பிட்டிருக்கும் போதனையின் – உண்மைப் பொருளை அவர்கள் உணராததே காரணம். ஆம்; ‘மதத்துக் கும் மானத்துக்கும் அழிவு ஏற்படும்போல் இருந்தால் உயிரைக் கொடுத்தாவது அந்த இரண்டையும் காப்பாற்று’ என்று அது கூறியதை அவர்கள் வேறு விதமாக அர்த்தம் செய்து கொண்டார் கள். ஆதிகாலத்தில் முகமதியர்களின் கொடுமைக்கும், அட்டுழி யத்துக்கும் ஆளாகியிருந்த காரணத்தால், தங்கள் மதத்தை அழிக்கத் தோன்றியிருப்பவர்களே முகமதியர்கள் என்று அவர் கள் மீது அடங்காத் துவேஷம் கொண்டார்கள் இந்தத் தீவிர மதாபிமானிகள். இதன் காரணமாக எங்கெங்கு எப்படி எப்படி யெல்லாம் முடியுமோ அப்படி அப்படியெல்லாம் முகமதியர் களுக்குத் தீங்கு விளைவிப்பதை மதத்தின் பெயரால் தங்கள் கடமை யாகக் கொண்டார்கள். இதனால் விளைந்தது தான் பெரும்பாலான சீக்கிய-முகமதியச் சண்டைகள், ரகளைகள், கலகங்கள் எல்லாம். இத்தகைய மனப்பாங்கு உடையவர் தான் பல்பீர் ஸிங். சைவ உணவுக்காரர்களுக்கு எப்படி மாமிச உணவின் வாடையே அரு வருப்பைத் தருமோ, அப்படித்தான் பல்பீர் ஸிங்குக்கும், முகமதி யர்களின் வாசனையே உதவாது.

ஆனால் இதற்கு நேர் எதிராக இருந்தான் அவருடைய மகன் கேஸர் ஸிங். அவனுக்குத் தன் தந்தையைப் போன்ற சிலர், காரணமின்றி முஸ்லீம்களை வெறுப்பதும், அவர்களுக்குத் தீங் கிழைப்பதும் கட்டோடு பிடிக்கவில்லை. ஆனால், மகன் தந்தை யைத் திருத்த முடியுமா? ஆகையால், தந்தை எப்படி யிருந்தா லும் தன்னைப் பொறுத்தவரை எம்மதமும் சம்மதமாக வாழ்வது ; தன் மதத்தவரால் பகைமை பாராட்டப்படும் முஸ்லிம்களுக்கு இயன்றவரை உதவுவது என்று அவன் உறுதி பூண்டான். சிறு பிராயத்திலிருந்தே ஊறி வந்த இந்த மனப்பாங்கு கேஸர் ஸிங் வளர வளர அவனிடம் வளர்ந்து வந்தது, இந்த மாறுபட்ட மனப்போக்கு காரணமாகப் பிற்காலத்தில் தந்தைக்கும், மகனுக் கும் இடையே பெரும் பிளவு ஏற்பட்டிருந்தாலும், ஏற்பட்டிருக் கக்கூடும். ஆனால் அதைத் தெய்வச் செயல் என்று தான் சொல்ல வேண்டும்; கேஸர் ஸிங் பத்தாவது படித்து முடித்ததும் பல்பீர் ஸிங் காலமாகிவிட்டார். தந்தை இறந்ததுமே தான் ஓர் உண்மை சீக்கியன் என்பதை அவன் வெளிப்படையாகச் செயல் மூலம் காட்ட ஆரம்பித்து விட்டான்.

கேஸர் ஸிங் தினந்தோறும் காலையிலும் மாலையிலும் பொற் கோயிலுக்குப் பிரார்த்தனைக்காகச் செல்வதுண்டு ஒரு நாள் மாலையில் அவன் அவ்வாறு பிரார்த்தனைக்குச் சென்றபோது கோயிலின் முன் பெருங்கூட்டமாக மக்கள் கூடி நின்றதைக் கண்டான். அருகில் சென்று விசாரித்தபோது யாரோ ஒரு முஸ்லிம் இளைஞன் கோயிலுக்குள்ளே புகுந்துவிட்டானென்றும், அவனை வெளியேற்றி அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அறிந்தான். மறு நிமிஷம் அவன் கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே பாய்ந்தான். அங்கே சுமார் இருபது வயது மதிக்கத்தக்க முஸ்லிம் இளைஞன் ஒருவனைப் பல சீக்கியர்கள் தாக்கிக் கொண்டிருந்தனர். அவனுடைய ஆடைகள் அலங்கோலமாகக் கிழிக்கப்பட்டிருந்தன. உடலில் பல இடங்களிலிருந்து உதிரம் கொட்டிக்கொண்டிருந்தது. இந்தக் காட்சி கேஸர் ஸிங்கின் கண்களில் கண்ணீர் பெருக் கெடுக்கச் செய்தது. அந்த இளைஞனை அடித்துக் கொண்டிருந் தவர்களை அவன் வெறியோடு அப்பால் பிடித்துத் தள்ளினான். பிறகு முகத்திலே அனல் பரக்க “நீங்கள் மனிதர்களா? காட்டு மிராண்டிகளா? எதற்காக இப்படி ஓர் அந்நியனை அடிக்கிறீர்கள்? அப்படி அவன் என்ன தவறு செய்துவிட்டான்? நம் கோயிலில் அவன் நுழைந்து விட்டதால் என்ன கெட்டுப் போய்விட்டது? அங்கிருக்கும் தெய்வம் ஓடிப் போய்விட்டதா ? பொற்கோயில் பித்தளைக் கோயிலாக மாறிவிட்டதா? இது தான் நமது புனித சீக்கிய மதம் போதிக்கும் நீதியா?” என்று பலவாறு கண்டித்துப் பேசிவிட்டு, அந்த இளைஞனை எழுப்பித் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அவனுடைய காயங்களுக்கு மருந்திட்டு அவனுக்கு வேறு உடையும், உண்ண உணவும் அளித்து, அவன் யார், எந்த ஊர் என்ற விவரங்களை விசாரித்தான்:

இன்று ஸுலைமாவின் கணவனாக விளங்கும் அமீர்கான் தான் அந்த இளைஞன். சொந்த ஊரில் பத்தாவது வரையில் படித்த பிறகு அவன் டில்லிக்குச் சென்று ஏதாவது வேலை தேடிக்கொள்ள லாமென்று புறப்பட்டான். அவனுக்கு நெடுங்காலமாகவே அமிர்தசரஸ்ஸிலுள்ள உலகப் புகழ்பெற்ற பொற்கோயிலைக் காண வேண்டுமென்று ஆசை. ஆகையால் லாகூரை விட்டுக் கிளம்பிய அவன் முதலில் அமிர்தசரஸ்ஸுக்குச் சென்றுவிட்டுப் பிறகு டில்லிக்குப் போகலாமென்று இங்கே வந்தான். அந்தக் கோயிலின் பிரும்மாண்டமான அமைப்பிலும், அதன் பொன்னாலான கோபுரத்தின் பேரொளியிலும் மனசைப் பறிகொடுத்து விட்ட அவன், தான் ஒரு முஸ்லிம் என்பதையே மறந்து மளமளவென்று உள்ளே வந்துவிட்டான். முஸ்லிம்களைக் காணவே சகிக்காதவர் களுக்கு அவர்களில் ஒருவன் தங்கள் கோயிலுக்குள்ளே வந்து விட்டால் ஆத்திரம் ஏற்படக் கேட்கவா வேண்டும்? அன்று கேஸர் ஸிங் மாத்திரம் தக்க சமயத்தில் வந்து காப்பாற்றியிராவிட்டால், அமீர் அல்லாவின் திருவடி நிழலை அடைந்திருப்பான். !

அமீரின் காயங்கள் ஆறும் வரை அவனைத் தன்னுடன் வைத்திருந்து, பின்னர் அவனை டில்லிக்கு அனுப்பிவிடலாமென்று தான் கேஸர் ஸிங் நினைத்திருந்தான். ஆனால் அந்தத் தீர்மானத் தை உடனே மாற்றிக்கொள்ளும்படி செய்து விட்டார்கள் அமிர்த சரஸ்ஸிலிருந்த சில தீவிர மதாபிமானிகள். அன்றிரவு அவர் களில் சிலர் கேஸர் ஸிங்கின் வீட்டுக்கு வந்தார்கள். அவனைத் தனியே கூட்டிச் சென்று தங்கள் மதத்தின் விரோதியான ஒருவனை அவன் காப்பாற்றிப் புகலளித்திருப்பது மதத்தையே அவமதிப்ப தாகும் என்று குறை கூறினார்கள். அவனை உடனடியாக வீட்டை விட்டு விரட்டிவிட வேண்டுமென்று நயத்திலும் பயத்திலும் கேட்டுக் கொண்டார்கள்.

“விரட்டாவிட்டால்?” என்று நிமிர்ந்து நின்று கேட்டான் கேஸர் ஸிங்.

“உன்னை மதவிரோதியாகக் கருதுவோம்” என்றார் வந்திருந்தவர்களில் ஒருவர்.

சீக்கிய மதம் இம்மாதிரி ஒரு பிழையும் அறியாத பிற மதத்தவர் ஒருவனைத் தண்டிக்கும்படி போதிப்பதாக இருந்தால், நான் அந்த மதத்தின் விரோதியாக இருப்பதையே விரும்பு கிறேன்” என்று கூறி அவர்களை விரட்டியடித்துவிட்டான் அவன். -இதன் பலன் மறுநாள் வெளியாயிற்று. கேஸர் ஸிங்குக்கு அவ்வூரில் ஒரு கடை உண்டு. ‘குரு நானக் எம்போரியம்’ என்ற அந்தக் கடை அவனுடைய பாட்டனார் காலத்திலிருந்து சுமார் அறுபது ஆண்டுகளாக நடந்து வந்தது. நூற்றைம்பது சிப்பந்தி கள் வேலை செய்து வந்த பெரிய கடை அது. அன்று காலையில் வழக்கம்போல் பத்து மணி சுமாருக்குக் கடைக்குச் சென்றான் கேஸர் ஸிங். ஆனால் சிப்பந்திகள் இன்னும் கடையைத் திறக்கா மல் வெளியே கூட்டமாக உட்கார்ந்திருந்ததைக் கண்டு அவன் திகைப்படைந்தான். அவர்களிடம் சென்று, “என்ன நேர்ந்து விட்டது? ஏன் எல்லோரும் வெளியே உட்கார்ந்திருக்கிறீர்கள்?” என்று அவன் பரபரப்போடு கேட்டான். அவர்கள் கூறிய காரணம் அவனைத் திடுக்கிட வைத்ததோடு மட்டுமல்ல ; கடுங் கோபத்துக்கும் உள்ளாக்கிற்று. மத எதிரி ஒருவனுக்கு ஊர்ப் பிரமுகர்கள் விருப்பத்துக்கு மாறாக அவன் புகலளித்திருக்கிறானாம்; அவனை வெளியே அடித்துத் துரத்தும் வரையில் அவர்கள் இந்தக் கடைக்குள்ளே சென்று வேலை செய்ய மாட்டார்களாம்.

கேஸர் ஸிங் அவர்களுக்குப் பதிலேதும் கூறவில்லை. கடைச் சாவிகளை வாங்கிக் கடையைத் திறந்தான். உள்ளே சென்று பணப்பெட்டியை எடுத்து வந்து சிப்பந்திகள் அனைவருக்கும் சேர வேண்டிய சம்பளப் பாக்கியை எண்ணிக் கொடுத்தான். “மத விரோதி ஒருவனுக்கு இடமளித்துள்ள நானும் ஒரு மத விரோதிதான்; ஆகையால், நீங்கள் இனி என்னிடம் வேலை செய்யக் கூடாது : போய் வாருங்கள்” என்று கூறிவிட்டுக் கடையை இழுத்துப் பூட்டிக் கொண்டு வீட்டுக்குச் சென்றான். அவன் உடனே டில்லியில் வியாபாரத் தொடர்புடைய ஒருவருக்கு டெலிபோன் செய்து அங்கிருந்து தன் கடைக்குத் தேவையான சிப்பந்திகளை முஸ்லீம்களாகவே தேர்ந்தெடுத்து, குடும்பத்துடன் அனுப்ப ஏற்பாடு செய்தான். தங்கள் இனத்தவர் ஏதேனும் கலகம் செய்வார்களோ என அஞ்சிய அவன் முன்னெச்சரிக்கை யாக போலீஸ் பந்தோபஸ்த்துக்கு ஏற்பாடு செய்துவிட்டான். ஆம்; இந்த முன்னெச்சரிக்கையை எடுத்திராவிட்டால், அவனு டைய இந்தத் துணிகரச் செயல் அமிர்தசரஸ்ஸில் ஒரு பெரிய வகுப்புவாதக் கலகத்தையே ஏற்படுத்தியிருக்கும். ஆனால் இப்பொழுது சட்டத்தின் முன் வாலாட்ட முடியாமல் மத வெறி யர்கள் அடங்கிப் போய்விட்டார்கள். சில நாட்களில் எல்லாம் சரியாகப் போய்விட்டது. கேஸர் ஸிங் இப்பொழுது தன்னால் காப்பாற்றப்பட்ட அமீர்கானுக்கு வியாபாரத்தில் பயிற்சியளித்து எம்போரியத்தின் மானேஜராகவும், தன் அந்தரங்கச் செயலாள னாகவும் ஆக்கிக் கொண்டான்.

இது நடந்த மறு ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்தது. அந்தச் சுதந்திரம் நாட்டை இரு கூறுகளாக வெட்டிவிட்டதால், வெட்டுண்ட இடத்திலிருந்து கொட்டும் ரத்தம் போல் இந்தியா விலும், பாகிஸ்தானிலும் ரத்தக் களறியான அமளிகள் தோன் றின. அப்பொழுது இரு தரப்பிலும் நடந்த அட்டூழியங்களை யும், அராஜகச் செயல்களையும் யார் தான் அறிய மாட்டார்கள்? அமிர்தசரஸ்ஸிலும் அதன் எதிரொலி ஏற்படாமல் போகவில்லை. ஆனால் இதை எதிர்பார்த்த கேஸர் ஸிங், இந்திய-பாகிஸ்தான் எல்லையில் கலகம் தொடங்கியதுமே தன் கடையை மூடிவிட்டு, அமீர்கானையும், இதர சிப்பந்திகளையும் டில்லிக்கு அனுப்பிவிட்டான். கிட்டத்தட்ட ஆறு மாத காலத்துக்கு அவன் அவர் களுக்கு வேலையின்றியே சம்பளம் கொடுத்துக் காப்பாற்றி வந்தான். அமளியெல்லாம் அடங்கி, அமிர்தசரஸ் அமைதியடைந்த பிறகே அவர்களை அங்கே திருப்பி அழைத்துக் கொண்டான்.

அமிர் தசரஸ்ஸுக்கு அவர்கள் வந்த அன்று மாலையில், கேஸர் ஸிங் அமீரைத் தன் காரில் ஏற்றிக்கொண்டு, நகரத்தின் ஒதுக்கமான பகுதி ஒன்றின் முன்பு அவனுடைய கடையின் கிடங் காக உபயோகிக்கப்பட்டு வந்த கட்டிடத்துக்கு அழைத்துச் சென்றான். அங்கே ஏழெட்டு இளம் பெண்கள் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அமீர் திடுக்கிட்டான். அவன் திடுக்கிட்டதற்குக் காரணம் இருந்தது. பிரிவினைக் கலவரங்களின் போது நடந்த அட்டூழியங்களில் ஒன்று, ஹிந்துக்கள் முஸ்லீம் பெண்களையும், முஸ்லீம்கள் ஹிந்துப் பெண்களையும் கடத்திச் சென்று, அவர்களை ஆடு-மாடுகளை ஏலம் போடுவது போல் காமுகர் களுக்கு விற்பனை செய்து வந்ததாகும். இப்பொழுது இங்கே அம்மாதிரிச் சில பெண்கள் இரகசியமாக வைக்கப்பட்டிருந்ததைக் கண்டதும், தன் எஜமானரும் அந்தக் கொடூரமான பணியில் இறங்கிவிட்டாரோ என்ற சந்தேகம் அமீரின் மனசில் எழுந்து. அவனை வாட்டி எடுத்தது.

ஆனால் அந்தச் சந்தேகத்தைக் கேஸர் ஸிங் வளரவிடவில்லை. “என்ன அமீர், திகைத்துப் போய் நின்று விட்டாய்?” என்று சிரித்துக் கொண்டே வினவிய அவன் தொடர்ந்து விஷயத்தை விளக்கினான். இந்தப் பெண்கள் அனைவரும், கேஸர் ஸிங்கினால் தலா மூவாயிரம், நாலாயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வர்கள் தாம். ஆனால், மற்றவர்களைப்போல் தனது காமப் பசிக்கு உணவாக்கிக்கொள்ள அவன் இவர்களை ஏலத்தில் எடுக்கவில்லை. பெற்றோர்-சுற்றத்தாரைப் பிரிந்து, கற்பை இழந்து நிற்கும் இந்த அபலைகள், கண்ட காமுகர்களால் விலைக்கு வாங்கப்பட்டு மேலும் சீரழிக்கப்படுவதைத் தடுக்கத் தானே அவர்களை விலை கொடுத்து வாங்கிக் காப்பாற்றி வந்தான். கொந்தளிப்பு முழுவ தும் அடங்கியதும் அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதை விசாரித்து, உரியவர்களிடம் ஒப்படைத்துவிடவேண்டும் என்பதே, கேஸர் ஸிங்கின் நோக்கம். மதவெறியர்கள் தன் இந்த நோக்கத்தையும் நிறைவேற விடாமல் செய்து விடு வார்களோ என்று அஞ்சியே அவன் இவர்களை இரகசியமான இடத்தில் வைத்து உணவும் உடையும் கொடுத்து இவ்வளவு நாட்களாகப் பாதுகாத்து வந்தான்,

கேஸர் ஸிங் இந்த விவரங்களையெல்லாம் அமீருக்கு விளக்கி விட்டு, ” அமீர்! இப்பொழுது அமளியெல்லாம் ஒருவாறு அடங்கி விட்டது. பாவம், இந்தப் பெண்கள் எந்த இடத்தைச் சார்ந்த வர்களோ ? இவர்களைப் பார்த்தால் பெரும்பாலும் முஸ்லிம் பெண்களாகவே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆத லால், முஸ்லிமான உன்னிடமே இவர்களை ஒப்படைக்கிறேன். நீ இவர்கள் ஒவ்வொருவரையும் தனித் தனியே கூப்பிட்டுப் பேசி, இவர்களுடைய பெற்றோர்-உற்றோர் விலாசம் அறிந்து அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இதற்காக எவ்வ ளவு பணம் தேவையானாலும் என்னிடமிருந்து பெற்றுக்கொள்ள லாம். இந்த வேலை முடியும்வரை இதுதான் உன் ஆபீஸ் ; இது தான் உன் வீடு” என்று கூறிவிட்டு வந்தான்.

கேஸர் ஸிங்கின் உயர்வான மனிதத் தன்மையை நினைத்து நினைத்து வியந்தான் அமீர். எஜமானரின் கட்டளைப்படி அவன் அன்றுதொட்டு அந்தக் கிடங்கையே தன் இருப்பிடமாக்கிக் கொண்டான். மெல்ல மெல்ல ஒவ்வொரு பெண்ணாகச் சந்தித் துப்பேசி, அவர்கள் மனத்திலிருந்த கிலியைப் போக்கி, அவர் களுடைய ஊரும் சுற்றமும் அறிந்து அங்கே கூட்டிச்சென்று உரிய வர்களிடம் ஒப்படைத்தான். கடைசியில் இரண்டே இரண்டு பெண்கள் தான் பாக்கி. அவர்களில் ஒருத்தி ரோஷனாரா என்ற முஸ்லிம் பெண். மற்றொருத்தி குமுத் என்ற ஹிந்துப் பெண். இவர்கள் இருவரும் தங்கள் சொந்தக்காரர்கள் யார் என்ப தையோ, ஊர் எது என்பதையோ அறிவிக்க மறுத்துவிட்டனர். “நாங்கள் கறைப்பட்டு விட்டோம். எங்கள் கறையைக் குடும்பத் தின் மீதும் தீட்டமாட்டோம். தயவு செய்து, எங்களை வெளியே விட்டுவிடுங்கள். எங்கேயாவது குளம், குட்டை பார்த்து விழுந்து எங்கள் மாசு படிந்த உடலை அழித்துக் கொள்ளுகிறோம்” என்று அவர்கள் கூறினர். அமீர் எவ்வளவு கெஞ்சியும், அவர்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ள இணங்காததால், அவன் கேஸர் ஸிங்கிடம் விஷயத்தைச் சொல்லி, ” நீங்களே வந்து அவர்களுடைய மனசை மாற்ற முடியுமா பாருங்கள்” என்று கேட்டுக் கொண்டான்.

கேஸர் ஸிங் வந்தான். ஆனால், அவனிடமும் அப்பெண்கள் எந்த விவரத்தையும் அறிவிக்க மறுத்துவிட்டனர். “நாங்கள் சாகத்தான் வேண்டும்; சாகத்தான் வேண்டும்;” என்ற பல்லவி யையே திருப்பித் திருப்பிப் பாடினர்.

“இதோ பாருங்கள், அம்மா; நீங்கள் மனமறிந்து பிழை செய்திருந்தால் சாவை நாடுவது சரிதான். ஆனால் சமூகமே தலை குப்புறப் புரண்ட நிலையில் நீங்கள் மாசுபடுத்தப்பட்டிருக்கிறீர்கள். ஆகையால் இது உங்கள் பிழையாகாது. இருந்தாலும் உங்க களுக்கு மீண்டும் குடும்பத்தாருடன் கலக்கப் பிரியமில்லாவிட் டால், உங்களை மகிழ்வோடு மனைவியாக ஏற்றுக் குடும்பம் நடத் தக் கூடியவர்களைத் தேடி நான் மணம் செய்து கொடுக்கிறேன். இதற்காவது நீங்கள் இணங்கத்தான் வேண்டும்” என்று கேஸர் ஸிங் அவர்களிடம் அன்போடு வேண்டிக்கொண்டான்.

கேஸர் ஸிங்கின் வேண்டுகோளில் தொனித்த ஆத்மார்த்த மும் அன்பும், அந்தப் பெண்களின் உள்ளத்தைத் தொட்டிருக்க வேண்டும். ரோஷனாரா என்ற பெண் கேட்டாள் : “உலகறிய மானபங்கப்படுத்தப்பட்ட எங்களை, அடிமைகளாக நடுத் தெரு வில் விலை கூறப்பட்ட எங்களை, யார் தான் மனமுவந்து மணம் செய்து கொள்வார்கள், ஐயா? அப்படி யாரேனும் மணம் செய்து கொண்டாலும், பிற்காலத்தில் அவர்கள் எங்களின் மாசைச் சுட்டிக் காட்டிக் கொடுமைப்படுத்த மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?”

“அதற்கு நான் உறுதியளிக்கிறேன், அம்மா. என்மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? நீங்கள் நன்றாக வாழ வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் விலைக்கு வாங்கி, உற்றாரிடம் ஒப்படைக்கத் தயாராயிருக்கும் நான், பிற்காலத்தில் உதறிவிடக் கூடியவர்களிடம் உங்களை ஒப்படைப்பேனா?”

இதற்கு குமுத் பதிலளித்தாள் : “உங்களை நாங்கள் நம்புகி றோம், ஐயா, இதோ இருக்கிறாரே, இவரையும் நம்புகிறோம். நாங்கள் இங்கே கிட்டத்தட்ட மூன்று மாத காலம் இருந்தோம். உங்கள் நண்பரிடம் ஒப்படைக்கப்பட்டும் ஒரு மாதம் வாழ்ந்து விட்டோம். நீங்கள் விரும்பியிருந்தால் இச்சமயத்தில் எங்களை என்ன வேண்டுமானாலும் செய்திருக்க முடியும். ஆனால், நீங்கள் எங்களைச் சொந்தச் சகோதரிகளாக நடத்தி வந்திருக்கிறீர்கள். ஆகையால், உங்களை நாங்கள் பரிபூர்ணமாக நம்புகிறோம். ஆனால், இந்த உலகில் இனி எங்களுக்கு வேறு எந்த ஆண்மகனிட மும் நம்பிக்கைக் கிடையாது.”

கேஸர் ஸிங் சிறிது நேரம் அந்தப் பெண்களின் முகத்தைப் பார்த்துக்கொண்டே சிந்தனை செய்தான். பிறகு ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்து விட்டவன் போல், “எங்கள் மீதாவது உங்களுக்குத் தளரா நம்பிக்கை இருக்கிறதா?” என்று கேட்டான்.

“ஆம் நீங்கள் செயல் மூலம் அதற்கு ருசுத் தந்திருக்கிறீர்கள்” என்றாள் ரோஷனாரா.

“அப்படியானால் நாங்களே உங்களை மணந்து கொள்ளுகி கிறோம்; சம்மதமா?”

அப்பெண்கள் திடுக்கிட்டனர். இதை அவர்கள் கனவில்கூட கருதியிருக்கவில்லை. ஐயா! உங்களைப் போன்ற உத்தமர் களுக்கு உயர்குலத்துப் பெண்களில் எத்தனையோ பேர் மனைவி யாக வரக் காத்திருப்பார்கள். எதற்காக எச்சில் பாண்டங்க ளான எங்களை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்?” என்று குமுத் கேட்டாள்.

“எதற்காக என்றால், உங்களுக்கு வாழ்வளிப்பதற்காகத்தான்; நான் மேற்கொண்ட கடமையை நிறைவேற்றத்தான்” என்று பளிச்சென்று பதிலளித்த கேஸர் ஸிங் தொடர்ந்து சொன்னான் :

இது ஏதடா இவன் நல்லவன் மாதிரிப் பேசினான்; இப்பொழுது விலைக்கு வாங்கிய பெண்களிடம் மற்றவர்கள் நடந்து கொள்ளு வதுபோலவே நடந்து கொள்ளத் தலைப்பட்டுவிட்டானே என்று நினைக்காதீர்கள். என்னுடைய நோக்கம், செய்யாத பிழைக்காக நீங்கள் உயிர்விடக் கூடாது என்பது தான். எங்கேயாவது நீங்கள் மறு வாழ்வு பெற்று க்ஷேமமாக வாழ வேண்டும் என்பது தான். ஆகையால், உங்களுக்கு எங்களையும் மணந்து கொள்ளத் தயக்க மாக இருந்தால், அவசியம் உங்களுடைய உற்றார் உறவினர் விலாசத்தையாவது கூறத்தான் வேண்டும். அவர்களிடம் உங்க ளைச் சேர்த்துவிட்டு நாங்கள் எங்கள் கடமையை முடித்துக் கொள்ளுகிறோம்.”

விஷயத்தை வளர்த்துவானேன். அந்தப் பெண்கள் இறுதி யில் அவர்களை மணக்க உடன்பட்டனர். சீக்கியனான கேஸர் ஸிங், முஸ்லிம் பெண்ணையும், முஸ்லிமான அமீர் ஹிந்துப் பெண்ணையும் ஏற்று, அவர்களைத் தங்கள் தங்கள் மதத்துக்கு மாற்றி, உரிய மதச்சடங்குகளுடன் மணம் செய்து கொண்டனர். ரோஷனாரா தாராவானாள். குமுத் ஸுலைமாவானாள்.

கடத்தி வரப்பட்ட பெண்களிடம் எப்படி நடந்து கொள்ளு வது மனிதத் தன்மை என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டினான் கேஸர் ஸிங். தான் காட்டியது மாத்திரமல்ல; தன்னை அண்டி தன் வழி நடந்து வந்த அமீரையும் காட்டச் செய்தான். அவர் கள் இருவரும் மனைவியைப் பூவெனப் போற்றி, இல்லற வாழ்க்கையை இன்பப் புனலாக்கி அதிலே நீந்தித் திளைத்தனர். மண மான மறு வருஷமே தாரா கணவனுக்குத் தங்கப் பதுமையென ஒரு பெண் குழந்தையை அளித்தாள். மொத்தத்தில் புரட்சிகர மான முறையில் ஒன்றுபட்ட இத்தம்பதிகளின் வாழ்விலே இன்பம் நாளுக்கு நாள் பெருகிற்றேயன்றிக் குறையவில்லை.

ஆனால், விதி அரக்கனுக்குத்தான் மனிதரின் வாழ்க்கையில் விபரீத விளையாட்டு விளையாடாவிட்டால் பொழுது போகாதே. தாரா கமலை ஈன்றெடுத்த ஆறாவது மாதத்தில் அவர்களுடைய இன்ப வாழ்வில் சைத்தான் புகுந்தான்.

பிரிவினை அமளியெல்லாம் ஒருவாறு ஓய்ந்த பிறகு, இந்தியா வும், பாகிஸ்தானும் அகதிகள் பரிவர்த்தனை, கடத்தப்பட்ட பெண்களை மீட்டல் போன்ற நற்காரியங்களைச் செய்ய ஓர் உடன் பாட்டுக்கு வந்தன. இப்பணிகளில் இரு அரசாங்கங்களின் போலீசும் தீவிரமாக ஈடுபட்டன.

திடீரென்று ஒருநாள் கேஸர் ஸிங்கின் வீட்டுக்குச் சில போலீசார் வந்தனர். அவனுடைய மனைவியாக வாழும் தாரா, ரோஷனாரா என்ற முஸ்லிம் பெண் என்றும், அவளுடைய பெற்றோர் லாகூருக்கு அருகில் உள்ள ஷேக்குப்புரா என்றகிராமத் தில் உயிரோடு இருக்கிறார்கள் என்றும், அவர்களிடம் தாராவை ஒப்படைக்க அழைத்துச் செல்லப் போவதாகவும் அறிவித்தனர்.

கேஸர் ஸிங்கும், தாராவும் இதைக் கேட்டு அதிர்ச்சியடைந் தனர். தாங்கள் முறைப்படி மணம் செய்துகொண்டு கணவன்மனைவியாக வாழ்ந்து வருவதையும், ஒரு குழந்தைக்குப் பெற்றோராகியிருப்பதையும் அவர்கள் அறிவித்தனர். தாரா ஒருபடி மேலே சென்று தான் பெற்றோரிடம் திரும்பிச் செல்ல விரும்பவில்லை என்றுகூடக் கூறினாள்: “எங்கள் நிம்மதியான இல்லற வாழ்வைத் தகர்க்காதீர்கள்” என்று அவள் கதறினாள்.

ஆனால் போலீஸ் அதிகாரிகளுக்கு அவளைக் கேஸர் ஸிங்கிடமே விட்டுச் செல்ல அதிகாரம் இல்லையே! அவர்கள் அதை அவனுக்கு எடுத்துச் சொல்லி, “உங்களுடைய கேஸ் சற்று விசித் திரமானதுதான். இருந்தாலும், நாங்கள் முறைப்படி தாராவை அவள் பெற்றோரிடம் சேர்த்துத்தான் ஆக வேண்டும். ஒப்ப டைத்துவிட்ட பிறகு வேண்டுமானால் அவள் தன் பெற்றோரின் அனுமதி பெற்று உங்களிடம் திரும்பி வந்து சேர்ந்து கொள்ளட்டும்” என்று கூறினர்.

தாராவைப் பெற்றோரிடம் போக விட்டால் அவர்கள் அவ ளைத் திருப்பி அனுப்புவார்களோ மாட்டார்களோ, என்று கலங்கி னான் கேஸர் ஸிங்; ஆனால், போலீஸார் தன்னை எப்படியும் கொண்டு சென்றே தீருவார்கள் என்ற நிலை ஏற்பட்டுவிட்டதால், தாரா கணவனுக்கு ஆறுதல் கூறினாள். “கவலைப்படாதீர்கள். என் உயிராகிய நீங்கள் இங்கே இருக்கையில், என் உடலை அவர் கள் அங்கே கட்டி வைத்துவிட ‘முடியாது. இவர்கள் என்னைப் பெற்றோர்களிடம் ஒப்படைத்ததும், அவர்கள் சம்மதம் அளித் தாலும் அளிக்காவிட்டாலும், நான் இங்கே புறப்பட்டு வந்து விடுவேன்” எனப் பலவாறு எடுத்துச் சொல்லிவிட்டுப் போலீஸா ருடன் புறப்பட்டுச் சென்றாள். ஆறு மாதத்துக் குழந்தையான கமலைக்கூட அவள் தன்னுடன் எடுத்துச் செல்லவில்லை. “கமல் உங்களிடமே இருக்கட்டும்: அவளைப் பிரிந்திருக்கும் ஒவ்வொரு கணமும், எனக்கு நரக வேதனையாகவே இருக்குமாதலால், நான் விரைவில் இங்கே திரும்பி வர, அவள் உங்களிடம் இருப்பது ஒரு தூண்டுகோலாக இருக்கும்’ என்று கூறி, குழந்தையை விட்டுவிட்டே சென்றாள். ஆனால்

அன்று போனவள் தான் தாரா; அதன் பிறகு அவள் திரும்பி வரவும் இல்லை; அவளிடமிருந்து எவ்விதத் தகவலும் கேஸர் ஸிங்கிற்குக் கிடைக்கவில்லை. அவன் அவளுக்குக் கடிதத்தின் மேல் கடிதம் எழுதினான்: தந்திகள் அனுப்பினான். எல்லாம் கிணற்றில் எறிந்த கற்களாகவே போயின. நாட்கள் வாரங்களாகி, வாரங் கள் மாதங்களும் ஆகிவிட்டன. ஆனால் தாரா எங்கே? அவள் ஏன் திரும்பி வரவில்லை? ஏன் கணவனின் கடிதங்கள் ஒன்றுக் குக்கூடப் பதில் எழுதவில்லை?

நல்ல வேளையாகக் குழந்தையைப் பற்றிய கவலை கேஸர் ஸிங்குக்கு இருக்கவில்லை. தங்களுக்குக் குழந்தை பிறக்கவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்த அமீரும், ஸுலைமாவும் கமலைக் கண்ணென வளர்த்து வந்தனர். ஸுலைமாவிடம் தாயன்பைப் பெற்று வந்ததால், கமலும் தாய்க்காக ஏங்கவில்லை. ஆனால் கேஸர் ஸிங் மனைவிக்காக ஏங்கினான். ஏங்கி ஏங்கி உருகினான். அவன் கடமைக்காகவே, தற்கொலை செய்து கொள்வதினின்றும் தடுப்பதற்காகவே, தாராவை மணந்து கொண்டான். எனினும் மணந்து கொண்ட பிறகு அவனுக்கு அவளிடம் ஒருவிதத் தெய் விகக் காதலே ஏற்பட்டுவிட்டது. அந்தக் காதல் இப்பொழுது அவனைத் தகித்தது. தாராவை அவளுடைய பெற்றோர் தாம் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்க வேண்டுமென்று அவன் திடமாக நம்பினான். அவளை இங்கே திரும்பி வரச் செய்ய வேறு ஏதேனும் வழியுண்டா என்பதை அறியப் பலரைக் கலந்து ஆலோசித்தான்: ஆனால் அந்த ஆலோசனைகளோ அதற்குரிய சாத்தியக் கூறுகள் எதையும் காட்டாததோடு, அவனுடைய மனம் உடையும்படி யான செய்தி ஒன்றையும் அளித்தன. இம்மாதிரி அகதிகள் பரிவர்த்தனை மூலமும், கடத்தப்பட்ட பெண்களின் மீட்சி மூலமும் பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் திரும்பியவர்களை இரு அரசாங்கங்களும் தங்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதிப்ப தில்லை என்ற விவரம் தெரிந்த பிறகு கேஸர் ஸிங் ஒரேடியாக இடிந்துபோய்விட்டான்.

எப்படியிருந்தாலும் தாராவின்றி இனித் தன்னால் வாழ முடி யாது என்று தோன்றிவிட்டது அவனுக்கு. ஆகையால், குழந்தை யுடன் பாகிஸ்தானுக்குப் புறப்பட்டுச் சென்று அங்கேயே நிரந் தரமாகத் தங்கிவிடுவது என்று தீர்மானித்தான். ஆனால் அப்ப டிச் சென்றாலும் சீக்கியனான தன்னுடன் தங்கள் மகள் சேர்ந்து வாழத் தாராவின் பெற்றோர் மறுத்துவிடுவார்களோ என்று அவன் இங்கேயே முஸ்லீம் மதத்தைத் தழுவி அப்துல் ஜாபர் என்ற பெயர் பூண்டான். தன் கடையையும், இதர சொத்துக் களையும் விற்றுப் பணமாக்கிக் கொண்டான், உயிர் நண்பனாகவும், உற்ற துணைவனாகவும் விளங்கிய அமீரிடம் விடை பெற்றுக் கொண்டு, உரிய அனுமதிச் சீட்டுகளுடனும், ஒன்றரை வய துக் குழந்தை கமலுடனும் ஒரு நாள் லாகூருக்குப் பயணமானான்.

அமிர்தசரஸ்ஸில் அமீரும், ஸுலைமாவும், கேஸர் ஸிங்கின் தெய்விகக் காதல் வெற்றி பெற வேண்டுமென்றும், அவனும் தாராவும் மீண்டும் ஒன்றுகூடி ஆனந்தமாக வாழ வேண்டுமென் றும் அல்லாவை இடைவிடாது தொழுது வந்தனர். ஆனால் கேஸர் ஸிங்கின் தெய்விகக் காதல் வெற்றி பெற்றதா ? அவனும் தாராவும் மீண்டும் ஒன்று கூடினரா?

கேஸர் ஸிங் லாகூர் சென்று ஒரு வாரம் ஆன பின் ஒருநாள் காலையில் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தான் அமீர். அதில் வெளியாகியிருந்த ஒரு செய்தியைப் படித்ததும், அவன், “ஐயோ!” என்று அலறிவிட்டான். அந்தச் செய்தி இதுதான்:

லாகூரில் சீக்கியனின் தற்கொலை :

உண்மையான காதலை நிருபிக்க உயிரையே கொடுத்தான்:

லாகூர், மார்ச்சு, 8-ஆயிரக்கணக்கான லாகூர் வாசிகள் ‘ஜனாஸா’வில் கலந்து கொள்ள, இன்று மாலை இங்குள்ள மியானி ஸாஹிப் தர்காவில் அப்துல் ஜாபர் என்ற கேஸர் ஸிங்கின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.

முப்பது வயதுகூட நிரம்பாத கேஸர் ஸிங் இன்று அதிகாலையில் தன் ஒன்றரை வயதுப் பெண் குழந்தையுடன் ஓடும் ரெயிலில் பாய்ந்துவிட்டான். காதலி தன்னையும், குழந்தையையும் நிராகரித்ததே தங்களது தற்கொலைக்குக் காரணம் என்று அவனிடம் அகப்பட்ட கடிதம் அறிவித்தது.

கேஸர் ஸிங் அமிர்தசரஸ்ஸைச் சேர்ந்தவன்; பிரிவினை அமளியில் கடத்தி வரப்பட்ட ரோஷனாரா என்ற பெண்ணுக்கு வாழ்வளிப்பதற்காக, அவளைச் சீக்கிய மதத்தைத் தழுவச் செய்து தாரா என்று பெயர் மாற்றி முறைப்படி மணம் செய்து கொண்டான். அவர்களுக்குக் கமல் என்று ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.

இச்சமயத்தில் ரோஷனாரா கடத்தி வரப்பட்ட பெண் என்பதை அறிந்து இந்தியப் போலீஸார் அவளைக் கேஸர் ஸிங்கிடமிருந்து பிரித்து லாகூருக்கு அருகில் உள்ள ஷேக்குப்புராவில் வசித்து வந்த பெற்றோரிடம் அனுப்பிவிட்டனர்.

மனைவியைப் பிரிந்த கேஸர் ஸிங் வாழ்வையே இழந்து விட்டவன்போல் ஆனான். அவள் திரும்பி வருவதற்கு எவ்வித சாத்தியக் கூறுகளும் இல்லாமையால், தானும் இஸ்லாமிய மதத்தைத் தழுவி அப்துல் ஜாபர் எனப் பெயர் பூண்டு, சொத்து சொம்பு களை விற்று எடுத்துக்கொண்டு, குழந்தையுடன் மனைவியை நாடி வந்தான்.

ஆனால் ரோஷனாராவின் பெற்றோர் அவனைத் தங்கள் வீட்டுக் குள்ளேயே ஏற்ற மறுத்துவிட்டனர். எப்படியோ அப்துல் ஜாபர் மனைவியைச் சந்தித்துத் தன்னுடன் வந்து விடுமாறு அழைத் தானாம்; ஆனால் அவள் மறுத்துவிட்டாளாம்; குழந்தையையாவது ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடினானாம்; அதையும் பெற்றுக்கொள்ள அவள் இணங்கவில்லையாம்.

மனமுடைந்த அப்துல் ஜாபர் லாகூருக்குத் திரும்பி வந்து, இன்று அதிகாலையில் லாகூர் ஸ்டேஷனுக்கு ஒரு மைல் தூரத்திற் கப்பால் ஓடும் ரெயிலில் பாய்ந்து விட்டான். அவனும் குழந்தை யும் ஸ்தலத்திலேயே மரணமடைந்தனர். அப்துல் ஜாபரின் சட்டைப்பையில் ஒரு கடிதம் இருந்தது. அதில் அவன் மேலே கூறப் பட்ட விவரங்களையெல்லாம் எழுதியிருந்தான். அதோடு, தனது உண்மையான காதல் இவ்விதம் தோல்வியடைந்ததால், தானும், குழந்தையும் தற்கொலை செய்து கொள்ளுவதாகவும் குறிப்பிட்டிருந்தான்: ரோஷனாா தன்னை வெறுத்து ஒதுக்கிவிட்டாலும், தான் அவள் மீது கொண்டிருந்த காதல் பவித்திரமானது என்றும், அதற்கு அடையாளமாக, இந்தியாவிலிருந்து தன் சொத்து – சொம்புகளை விற்றுக் கொண்டு வந்த பணம் அனைத்தையும் ரோஷ னாராவுக்கு அனுப்பிவிட்டதாகவும் அவன் அக்கடிதத்தில் குறிப் பிட்டிருந்தான்.

ஜஹாங்கீரும் நூர்ஜஹானும் காதல் வளர்த்த பூமியில் இன்று ஒரு காதலன் காதலுக்காக உயிர் நீத்தான். பாகிஸ்தான் முழு வதுமே அப்துல் ஜாபரைத் தெய்விகக் காதலன் என்று கொண்டாடுகிறது. மியானி ஸாஹிப் தர்காவிலுள்ள அவனுடைய கல் லறை இனி லாகூர்வாசிகளுக்கும், லாகூருக்கு வருகிறவர்களுக்கும், பயபக்தியுடன் அஞ்சலி செலுத்தும் ஒரு புனித ஸ்தலமாக விளங் கும் என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை.

ஆம்; அப்பத்திரிகையின் ஊகம் சிறிதும் பொய்க்கவில்லை.! தன் எஜமானரின் தூய காதலை அந்த நன்றிகெட்ட தாரா உணர வில்லையெனினும், லாகூர் நகரிலுள்ள ஒவ்வொருவரும், குறிப் பாகக் கல்லூரிகளில் படிக்கும் இளம் மாணவ-மாணவிகள் நன்கு உணர்ந்து, அவருடைய தர்காவை உண்மைக்காதலின் சின்னமாக மதித்து நாள்தோறும் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை லாகூருக்குப் போய் வந்தவர்கள் கூறக் கேட்டான் அமீர். அப்படிப்பட்ட உத்தமரின் கல்லறைக்குத் தானும் விஜயம் செய்து அஞ்சலி செலுத்த வேண்டுமென்ற ஆவல் கடந்த ஒரு வருஷமாக அமீரின் உள்ளத்தில் பொங்கிக் கொண்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக இப்பொழுது அவனுக்கு அதற்கு வாய்புக் கிடைத்தது. அமீர் இப்பொழுது ஒரு பிரபல தோல் வியாபாரக் கம்பெனியில் பிரதம விற்பனையாளனாக வேலை பார்த்து வந்தான். ஒரு வியாபார பேரத்தை முடிப்பதற்காகவே அக்கம்பெனி இப் பொழுது அவனை லாகூருக்கு அனுப்பிற்று.

அமீர் ஒரு நாள் இரவு லாகூரை வந்தடைந்தான். அந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்து இருபத்தைந்து ஆண்டுகளைக் கழித்தவனாதலால், இரவென்றும் பாராமல், வந்த உடனே மியானி ஸாஹிப் தர்காவை நோக்கிப் புறப்பட்டு விட்டான்.

அப்பொழுது இரவு பதினோரு மணிக்கு மேலிருக்கும். நகரத் தின் பரபரப்பெல்லாம் அநேகமாக அடங்கிவிட்டது. தர்காவிலும் அமைதி நிலவிற்று. ஆம்; இந்நேரத்தில் அங்கே யார் வரப் போகிறார்கள்?

கேஸர் சிங்கின் கல்லறையைக் கண்டு பிடிப்பதற்காக அமீர் ஒவ்வொரு கல்லறையாக அருகில் சென்று பார்த்துக் கொண்டே வந்தான். அதோ அந்தக் கல்லறையின் முன் யாரோ ஒருவா மண்டியிட்டு உட்கார்ந்திருப்பதுபோல் தோன்றுகிறதே. அந்த ஆளைக் கேட்டால் ஒருகால் விவரம் சொல்லக்கூடுமென்று அவன் அங்கே போனான். கல்லறையை நெருங்கியபோது அங்கே அமாந திருந்தது ஒரு பெண் என்பது அவனுக்குத் தெரிந்தது. கல்லறை விலையுயர்ந்த சலவைக் கற்களால் கட்டப்பட்டிருந்தது. அதன் ஏராளமாக மலர்கள் தூவப்பட்டிருந்தன. மாலையில் அஞ்சல செலுத்த வந்தவர்கள் கொளுத்திவிட்டுப் போயிருந்த ஊதுவத்தி களின் நறுமணம் இன்னும் அங்கே கமழ்ந்து கொண்டிருந்தது.

இவற்றிலிருந்து அதுவே கேஸர் ஸிங்கின் கல்லறையாக இருக்க வேண்டுமென்று அவன் நினைத்தான். ஆஹா; இப்படி நள்ளிரவில் கூட ஒருபெண்மணி வந்து அஞ்சலி செலுத்த வேண்டுமென்றால், கேஸர் ஸிங் எவ்வளவு தூரம் லாகூர்வாசிகளின் உள்ளத்தைக் கவர்ந்திருக்க வேண்டும்? இப்படி உலகமே வியந்தேற்றும் அந்த அண்ணலை நன்றி கெட்ட தாரா ஒருகணத்தில் உதறித் தள்ளிவிட்டாளே; சீ; பெண்ணா அவள்? பேய்! கொடிய பேய்!

ஆள் அரவம் கேட்டு அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த அந்தப் பெண் ஓர் அதிர்ச்சியுடன் திரும்பினாள். அருகிலிருந்த மின்சார விளக்கின் ஒளி அவள் முகத்தில் விழுந்ததும், அங்கே கண்ணீர் பளபளப்பதை மட்டுமா கண்டான் அமீர் ? இல்லை; அதையும்விட ஒரு பேராச்சரியம் அவனை ஸ்தம்பிக்க வைத்தது .

அப்பெண்-ஆம், அவள் தாராவே தான்;

அவளும் அமீரை அடையாளம் தெரிந்து கொண்டாள். மறு நிமிஷம், “அமீர்; அமீர்; இந்தப் பாவியை அவர் மன்னிப்பாரா அமீர்;” என்று அவள் கதறினாள்.

அவன் வெறுப்பு வெளிப்படச் சிரித்தான். “செய்வதையும் செய்துவிட்டு மன்னிப்புக்கு இறைஞ்சும் உங்கள் போக்கு விசித்திரமாகத்தான் இருக்கிறது தாரா!” என்று வெடித்தான்.

“என்னைத்தாரா என்று அழையாதே அமீர். தாரா செத்துவிட்டாள். உலகம் புகழும் உன்னத மனிதராக விளங்கிய கேஸர் ஸிங்கின் மனைவி தாரா என்றோ இறந்துவிட்டாள். இந்தப் பாவி ரோஷனாரோ, வேறொருவரின் மனைவி;”

“என்ன மனைவியா? வேறொருவரின் மனைவியா?”

“ஆம் அமீர்; நான் வஞ்சிக்கப்பட்டேன். பெற்றோர்களால் சிறை செய்யப்பட்டு இங்கு வந்த ஒரு வாரத்துக்குள்ளாகவே மறுபடியும் முஸ்லிமாக்கப்பட்டு, வேறொருவருக்குக் கட்டாயமாக மணம் செய்து வைக்கப்பட்டேன். என் உடல் ஏற்கனவே ஒரு தடவை மாசுபடுத்தப்பட்டது. அவர் என்னை மணந்து என் மாசைப் போக்கினார். அந்த மகாத்மாவுக்கு மீண்டும் ஒரு தடவை மாசுபடுத்தப்பட்ட உடலையா சமர்ப்பிப்பது? தவிர என் பெற்றோரும், தற்சமயம் இவ்வூரில் பெரிய வியாபாரியாக விளங்கி வரும் என் இப்போதைக் கணவரும், உன் எஜமானரையும், என் கண்மணி கமலையும் கொன்றுவிட வேண்டும்; இல்லாவிட்டால் நான் அவர்களோடு ஓடிப்போய் விடுவேன் என்று பேசிக்கொண்டதையும் நான் கேட்டேன்.

ஆகையால்தான் என் உயிருக்கு உயிரான அவர்களைக் காப்பாற்ற அவ்விருவரையும் வெறுத்துவிட்டவள் போல் நடித்துத் திருப்பி அனுப்பினேன்; இனி அவர்கள் இந்தியா திரும்பிவிடுவார்கள்; க்ஷேமமாக இருப்பார்கள் என்று நம்பினேன். ஆனால் அமீர்…” அவளால் மேலே பேச முடியவில்லை; தேம்பித் தேம்பி அழுதாள்.

அமீருக்கும் நெஞ்சில் அழுகை முட்டிற்று. அவன் கேஸர் ஸிங்குக்கு அஞ்சலி செலுத்தத்தான் இங்கு வந்தான். ஆனால் இப்பொழுது யாருக்கு முதலில் அஞ்சலி செலுத்துவது என்பது அவனுக்குச் சந்தேகமாகிவிட்டது!

– மார்ச் 1969

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *