அஞ்சறை பெட்டி!

0
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 18, 2013
பார்வையிட்டோர்: 9,831 
 

அன்று ஞாயிற்றுக்கிழமை!

அருள்மொழி அலுவலகக் கோப்புகளில் அமிழ்ந்து கிடந்தான்.
விடுமுறை நாளில்கூட வீட்டில் ஓய்வாக இருக்க முடியாதவனாய் பரபரப்பு தொறிறக் கொள்ள பறந்து கொண்டிருப்பவன், அன்று அமைதியாக தாள்களைப் பரப்பி வைத்துக் கொண்டு வீட்டுக்குள் இருப்பதை பார்த்து, வீடு நிறைந்திருப்பதால் உணர்ந்தாள் சிவகாமி.

உண்மையில் அந்த வீடு அன்றைக்கு நிறைந்துதான் இருந்தது. சிவகாமி பெற்ற செல்வங்கள் இரண்டும், அக்கம் பக்கத்து வீட்டுப் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு வந்து வீட்டைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தனர். தட்டுமுட்டுச் சாமான்கள், தகர டப்பாக்கள், பொம்மைகளென வீட்டு முற்றத்தில் கால் வைக்க இடமில்லாமல் கடை பரப்பி வைத்திருந்தனர்.

அஞ்சறை பெட்டிகுழந்தைகளின் குதூகலத்தில் அக்கம் பக்கத்து வீடுகளில்கூட அதகளப்படும் போல இருந்தது. உள்ளிருந்து அடிக்கடி குரல் கொடுத்து அமைதிப்படுத்தினாள் சிவகாமி. ஆனால் சிவகாசி பட்டாசுகள் போல தொடர்ந்து சத்தம் கிளப்பிக் கொண்டிருந்த பொடிசுகளை சிவகாமியால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

மூத்த மகளை செல்வி விடுவிடுவென உள்ளே ஓடிப்போய் ஒரு பெரிய பையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தாள். முற்றத்தில் அந்தப் பையைப் பிரித்துக் கொட்டினாள். கலகலவென சத்தத்தோடு, அலுமினிய, பித்தளைப் பாத்திரங்கள் சிதறி விழுந்தன.
குழந்தைகளின் கொண்டாட்டக் குரலில் வீடே குலுங்குவது போல இருந்தது.

அவர்ளது அட்டகாசம் எதுவும் அருள்மொழியின் காதில் விழுந்ததாகவே தெரிவில்லை. அவன் தம் வேலையில் மும்முரமாக இருந்தான்.
அருள்மொழிக்கு வேலைகளைத் தள்ளிப் போடுவது ஒத்துவராது. “நமது வேலைகளை நிலுவையில் போடுவது என்பது தம்மைத்தானே சிலுவையில் அறைந்து கொள்வதற்கு சமம்!’ என்ற வார்த்தையைச் சொல்லிச் சொல்லியே அலுவலகத்திலும் சரி, வீட்டிலும் சரி, வேலை வாங்கி விடுவான். அதேபோல தம் வேலையையும் செய்துவிடுவான். அப்போதும் அப்படித்தான் மறுநாள் வருமான வரி தாக்கல் செய்யவேண்டியவர்களின் கோப்புகளைக் கவனமாக சரிபார்த்துக் கொண்டிருந்தான்.

பிள்ளைகள் ஓடி விளையாடியதில் ஒரு குழந்தையின் கால் பட்டு உருண்டோடி அறைக்குள் வந்து அருமொழியின் காலருகே விழுந்தது அந்த அலுமினியப் பாத்திரம்.

“எங்கே வந்து விழுது பார்!’ கோப்பில் இருந்து பார்வையை விலக்கியவன் கோபமாகத் திரும்பினான். பார்வை உக்கிரமாக இருந்தது.

“குமார்தான்ப்பா உதைச்சு உருட்டிட்டான்!’ கண்களில் லேசான கலவரம் காட்டி உள்ளே வந்த மகள் செல்வி, அப்படியே நின்றாள். அவளைத் தொடர்ந்தாற்போல ஓடி வந்த குமார், செல்வி உறைந்துபோய் நின்ற நிலையைப் பார்த்து அவனும் உற்சாகம் குறைந்து நின்றான்.

“இன்னொருமுறை உள்ளே ஓடி வந்தீங்கன்னா உதைதான் உங்களுக்கு. ஓடுங்க அந்தப் பக்கம்…’

“சரிப்பா…’ அவனையே பார்த்தபடி மெல்ல அமர்ந்து, உருண்டு வந்த அலுமினியப் பாத்திரத்தை எடுக்க அவள் குனிந்தாள். அவளது பாவாடை மடிப்பிலிருந்து கீழே விழுந்தன இரண்ட அலுமினிய சிறு குவளைகள்.
சடாரென அருள்மொழியின் மனதுக்குள் சூறாவளி சுழன்றது. அது… அது…
அந்த அழுக்கேறிப்போன அலுமினியப் பாத்திரமும் குவளைகளும் அவனுக்குள் அடங்கிப்போயிருந்த நினைவடுக்குகளைக் கலைத்தன.
அது… அஞ்சறைப்பெட்டியேதான்!

அம்மா குடிசையில் வைத்திருந்த அதே அஞ்சறைப்பெட்டிதான்!
எண்ண முடியாத நட்சத்திரங்களென பொத்தல்கள் நிறைந்த ஓலைக்குடிசை! மண் சுவர்! மண்ணெண்ணெய் விளக்கு! என அவனது குழந்தை பருவத்துக்குப் பின்னோக்கி ஓடிச் சென்று நின்றது நினைவலை!

அம்மா அந்த அஞ்சறைப்பெட்டியில் கடுகு, சீரகம், வெந்தயம் என இருபது காசு, முப்பது காசுகளுக்கு வாங்கி அதை நிறைக்கப் பார்ப்பாள். அப்படி அஞ்சறைப் öப்ட்டி நிறைந்துவிட்டால் அது அம்மாவின் சாதனையாக இருக்கும்.

“வயிறு ரொம்பவே வழியில்ல. இத எப்படி நான் ரொப்பறது?’ என்றதொரு புலம்பலோடு அதை மூடி வைத்து விடுவாள் அம்மா.

அந்த அஞ்சறைப் öப்ட்டியின் ஏதாவதொரு குவளையில்தான் அருள்மொழிக்கும் அவன் தங்கைக்குமான சில்லறைகளைப் போட்டு வைத்திருப்பாள் அம்மா. அதனாலேயே அந்த அஞ்சறைப்பெட்டி அருள்மொழிக்கு ஒரு பொக்கிஷப் பெட்டி!

அம்மாவின் நாட்களோடு, அவனது குழந்தைப் பருவத்தோடும் பின்னிப் பிணைந்தது அந்த அஞ்சறைப்பெட்டி!

அன்றொரு நாளில் அடைமழைக் கால மாலைப்பொழுது!
வீட்டில் இருந்த ஒர குடையையும் அப்பா எடுத்துச் சென்றுவிட, வெளுத்துப்போன சேலையால் தலைக்கு முக்காடிட்டபடி தெருமுனைக் கடைக்கு ஒடிப்போய் மளிகை சாமான் வாங்கி வந்து அம்மா முற்றிலுமாக நனைந்து விட்டிருந்தாள்.

வாங்கி வந்ததை அஞ்சறைப் பெட்டியின் குவளைகளில் போட்டபோது, அருள்மொழியிடம் சொன்னாள்: “ரெண்டு ரூவா எடுத்துட்டுப் போனேன்ப்பா. இருவது காசு தான் மிச்சம்! நாலணா கடுகு, நாலணா சீரகம், பச்ச மொளகா எட்டணா! எவ்வளவு ஆச்சுப்பா?’

“நாலணா, நாலணா, எட்டணா, மொத்தம் ஒரு ரூபாம்மா!’

“முப்பது காசு கடலைப் பருப்பு, முப்பது காசு காபித் தூள்!’

“ம்! ஒரு ரூபா அறுபது காசு ஆச்சும்மா!’

“மிச்சம் காசு சரியா?’ தம் கையில் இருந்த இரண்டு பத்துக் காசுகளைக் காட்டினாள். மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் அருள்மொழி பார்த்தான்.

“அம்மா! இருபது காசுதான் இருக்கு. நாற்பது காசில்லேம்மா கையில இருக்கணும்!’

“என்னடா சொல்றே? நல்லா கணக்குப் போட்டுப்பாரு. தப்பா சொல்லிடாதே!’ மீண்டும் அவள் கணக்கு சொல்ல, மூன்று முறை கூட்டிப் பார்த்துவிட்டு உறுதியாகச் சொன்னான் அருள்மொழி.

“பார்த்தியா இருவது காசு ஏமாந்துட்டேன்! இரு வர்றேன்!’ சொன்ன வேகத்திலேயே எழுந்தாள்.

“அம்மா! மழைம்மா! அப்புறமா போங்க!’

“இல்லேப்பா, அப்புறம் அந்தாளு மறந்துடுவாரு. இப்பவே போனாதான் உண்டு!’ வாசலைத் தாண்டி மீண்டும் தலைக்கு முக்காடிட்டு ஓட்டமும் நடையுமாகச் சென்றவள், சில நிமிடங்களிலேயே திரும்பி வந்தாள்.
“பாத்தியா, போய்ச் சொன்னவுடனே கெடச்சது. அந்த ரெண்டு பத்து காசையும் இருவது காசுன்னு நெனைச்சுட்டாராம்!’ உடல் நடுங்க வந்தவளைப் பார்த்து அருள்மொழிக்கு கண்களில் நீர் வழிந்தது. இருபது காசுகளுக்காக அம்மா இருட்டில் தெருமுனை வரை மழையில் போய் வந்தது அவனது பிஞ்சு மனத்தை வாட்டியது.

“இந்த இருவது காசு என் கையிலே இருந்தா ஒனக்கு ரெண்ட நாளைக்கு பள்ளிக்கூடத்துக்கு கொடுத்தனுப்புவேனே!’ சொல்லியபடியே அந்த இருபது காசுகளை அஞ்சறைப்பெட்டியின் ஒரு குவளையில் போட்டாள்.
பசுமரத்தாணி போல் தம் மனத்தில் பதிந்துவிட்ட அந்தக் காட்சியைப் படமாக ஓட்டிக் காண்பித்தது அவனது காலருகே கிடந்த அஞ்சறைப்பெட்டி!

“சிவகாமி!’

அருள்மொழி கத்திய கத்தலில் போட்டது போட்டபடி கிடக்க அவனது அறைக்கு ஒடி வந்தாள் சிவகாமி.

“என்னங்க? என்னாச்சு?’ பதற்றம் விலகாமல் கேட்டாள். கண்களில் கண்ணீர் தாரையிட, அங்கே கிடந்த அஞ்சறைப் பெட்டியை நோக்கி தன் சுட்டு விரல் நீட்டினான்.

சிவகாமி சடாரென ஓடிச் சென்று அவற்றை எடுக்க முயல்கையில்…

“நினைவுகள்தான் வாழ்க்கை! இந்தப் பழைய அஞ்சறைப்பெட்டி இப்போ உன் கண் பார்வைக்கு காலியா இருக்கலாம். ஆனா இது முழுக்க என் அம்மாவோட காலமும் நினைவும் நிறைஞ்சிருக்கு சிவகாமி!’

வார்த்தைகள் அடுத்து வர தடுத்தது. நா தழுதழுத்தது.

“மன்னிச்சுடுங்க. எப்படியோ தவறி குழந்தைங்க கைக்கே போயிடுச்சு! இனியொரு முறை இப்படி நடக்காம நான் பார்த்துக்கிறேன்ங்க’

உருக்கமாகச் சொல்லி ஆதரவாய் அவனது கரங்களையும் பற்றினாள்.
அமைதியாக எழுந்து சென்று அந்த அஞ்சறைப்பெட்டியை எடுக்கையில், குவளைகளையும் எடுத்தான். அவன் விழிகளிலிருந்து நீர்த்துளியொன்று குவளையில் விழுந்து நினைவுகளால் மீண்டும் நிரம்பத் தொடங்கியது.

– கொற்றவன் (நவம்பர் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *