சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்
மும்பை செல்லும் விரைவு ரயிலில், பயணிகள் ரயிலுக்கு வெளியே ஒட்டப்பட்டிருந்த முன்பதிவு தாளில் தங்கள் பெயர்களை உறுதி செய்துகொண்டு, இருக்கையில் சென்று அமர்ந்தனர்.
சிலர் அளவுக்கதிகமான பெட்டிகளையும், பைகளையும் வைத்துக்கொண்டு எங்கே வைப்பதென தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தனர். வேக வேகமாக உடைமைகளை மேலும் கீழும் கிடைத்த இடத்திலெல்லாம் அடைத்ததால் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருந்தும் அவர்களுக்கு வியர்த்தது. அவ்வாறு சிரமப்பட்டுகொண்டிருந்த ஒருவர் தன் சக பயணியிடம்,
“ஸார் உங்க காலுக்கு கீழே இந்த பெட்டியை கொஞ்சம் வச்சிக்கட்டுமா?”
“தாராளமா”
“தாங்க்ஸ். சார், உங்கள எங்கியோ பாத்தமாதிரி இருக்கு?”
“மாநிலத்தில் செஸ்ஸில் முதலாவதாக வந்ததாக பேப்பரில் பாத்திருப்பீங்க .”
“யெஸ் நீங்க மிஸ்டர் தீபக் செஸ் சாம்பியன் கரெக்ட்.”
“ம்” என்று தலையசைத்து அவரிட மேலும் பேச விரும்பாமல் ஜன்னலை நோக்கி திரும்பி கண்களை மூடிக்கொண்டான். ஏனென்றால் அவனுக்கு மாநில அளவில் சாம்பியனானது கூட பெரிதில்ல, கண்டிப்பாக ஒருமுறையாவது அஜீதாவை ஜெயிக்கவேண்டும். இன்று அவன் இந்த நிலைக்கு வந்ததற்கும் அதுவே காரணம்.
அலுவலகத்தில் சைட் விசிட் ‘கடப்பா’ செல்ல வேண்டும் என்று சொன்னவுடன் முதலில் நினைவுக்கு வந்தது ‘அஜீதா’தான்.
நிறை மாத கர்பிணியான தன் மனைவியைக்கூட மறந்து புறப்பட்டான்.
தனக்கு திருமணமானது அஜீதாவுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை, விலாசமில்லாததால் அழைப்பிதழை தபாலில் அனுப்பவில்லை, நேரில் சென்று தரலாமென்றிருந்தவன் கடைசி நேரத்தில் மறந்துவிட்டான்.
ரயில் நகர்ந்தது சற்றே ஆறுதலாக இருந்தது. மெல்ல மெல்ல மனம் குழந்தை பருவத்தை அசைபோட்டது.
அஜீதாவை முதல் முதலில் சந்தித்தபோது அவனுக்கு பன்னிரண்டு வயதிருக்கும். அவளுக்கு இருபது வயதிருக்கும்.
அவள் மன நிலையை காரணம் காட்டி கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியிருந்தார்கள்.
எப்போதாவது அவளுக்கு லேசான மயக்கம் வரும், அதுபோன்ற நேரங்களில், மயக்கம் தெளிந்த பின் சிறிது நேரத்திற்கு சுத்தமாக எல்லாம் மறந்து விடும், தன்னையே மறந்துவிடுவாள், சிறிது நேரத்தில் எல்லாம் சரியாகிவிடும்.
பள்ளியிலும், கல்லூரியிலும் அவள்தான் செஸ் சாம்பியன். முதன்முறை கல்லூரி டீமில் செஸ் டோர்னமென்டில் தோற்றதும், தொடர்ந்து அதையே நினைத்துகொண்டிருந்ததில் ஏற்பட்ட பாதிப்பு. இதனால் பெரிதாக ஒன்றும் பாதிப்பில்லை என்று மருத்துவர்கள் கூறிய போதும், அடிக்கடி வர ஆரம்பித்ததால் அதிகம் வெளியில் செல்வதில்லை. அவளுடைய முழு நேர பொழுதுபோக்கு செஸ் மட்டுமே.
விடுமுறைக்கு தாத்தா வீட்டிற்கு செல்லும்போதெல்லாம் தினமும் அவளுடன் செஸ் விளையாடுவது, ஒன்றிரண்டல்ல, குறைந்தது பத்து ஆட்டங்கள். அதில் ஒன்றில் வென்றாலும் பத்து அட்டங்களும் அவன் வென்றதாகவே பந்தயம். ஒவ்வொருமுறை விடுமுறைக்கு தாத்தா வீட்டிற்கு கடப்பா செல்லும்போதும் தொடர்ந்த இந்த நட்பும் ஆட்டமும் அலுக்கவே இல்லை. இத்தனைக்கும் அவன் ஒருமுறை கூட வென்றதில்லை
அவர்கள் பக்கத்து வீட்டுகாரர் தான், சொந்தம் கூட இல்லை, இருப்பினும் என்னேரமும் இவன் அவள் வீட்டில். அவர்கள் வீட்டில் அவளும், வயதான அவள் தந்தையும் மட்டுமே. அந்த கடைசி நாள் இன்னமும் பசுமையாக நினைவிருந்தது.
“அக்கா இன்னைக்குத்தான் கடைசி”
”ஏண்டா”
”எங்க தாத்தாவுக்கு ட்ரான்ஸ்ஃபெர் ஆயிருச்சு, கடைசியா ஒருதடவை ஆடுவமா”
“கண்டிஷன் அதே தான் நீ ஒருமுறை ஜெயிச்சாகூட போதும்”
“ உங்களை ஜெயிக்கவே முடியாதா?”
“முயற்சி செஞ்சா ட்ரா பண்ணலாம், இரு நான் காய்ன்ஸும் போர்டும் கொண்டுவறேன்.” உள்ளே சென்றவள் சிறிது நேரத்தில் போர்டும், காயின்ஸும் கொண்டுவந்தாள்
அந்த செட் மிக நேர்த்தியாக வடிவமைக்கபட்டது. இருபுறமும் கருப்பு வெள்ளையில் நிஜமான ராஜா, ராணி போல் மரத்தினால் செய்யப்பட்டு, சிப்பாய்களின் அணிவகுப்பு போருக்கு செல்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.
ஒன்பது ஆட்டங்கள் போனதே தெரியவில்லை. பத்தாவது ஆட்டத்திற்காக காய்களை ஒவ்வொன்றாக அடுக்கிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக உள்ளே வந்த அவன் பாட்டி
“கடங்காரா இங்கென்னடா பண்ற”
“பாட்டி ப்ளீஸ் லாஸ்ட் கேம்”
சொல்லச் சொல்ல கேட்காமல் அவன் கையைபிடித்து இழுத்துக்கொண்டே வெளியில் சென்றாள்.
“சாய்ங்காலம் ஊருக்குப்போறோம் அதுக்குள்ள அந்த பைத்தியத்தை பாக்க இன்னொருதடவை போனன்னு தெரிஞ்சது, கால உடச்சுடுவேன் ”
” அவங்க காதுல விழப்போவுது பாட்டி”
“விழட்டுமே எனக்கென்ன?”
இப்போது நினைத்தாலும் கண்களில் நீர் திரண்டது. தீடீரென வந்த “டீ, காபி -டீ, காபி” என்ற சத்தம் அவன் கவனத்தை கலைத்தது.
மனைவியிடம் பேசலாமென்று வீட்டிற்கு போன் செய்தான். ரிங்க் போய்க்கொண்டே இருந்தது. அப்போது அருகிலிருந்தவர்,
“சார் ஒரே ஒரு ஆட்டோகிராஃப் ”
அவர் நீட்டிய புத்தகத்தில் கையெழுத்திட்டுகொண்டே “நீங்க எங்க இறங்கணும் ”
” தாதர், ஏன் சார், ரொம்ப டிஸ்டர்ப் பண்றேனா? ”
“சேச்சே, நான் கடப்பால இறங்கணும், ஒருவேளை தூங்கிட்டா கொஞ்சம் எழுப்பறீங்களா?”
“ஷூர். எல்லார்கிட்டயும் சொல்லுவேன், செஸ் சாம்பியன நான் தான் ட்ரெய்ன்ல எழுப்புனேன்னு.”
சங்கடத்துடன் மெலிதாக சிரித்து “தாங்க்ஸ்” என்று சொல்லி மறுபடியும் ஜன்னலில் சாய்ந்து கண்களை மூடினான். எப்போது தூங்கினானோ, அருகிலிருந்தவர் மெல்ல தட்டி எழுப்பினார்,
“சார் உங்க ஸ்டேஷன் வரப்போவுது”
“நல்ல தூக்கம்” என்று சொல்லி சோம்பல் முறித்தான் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, தன்னுடைய உடமைகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தபோது கடப்பா ரெயில் நிலையமே மாறியிருந்தது. பதினைந்து வருடத்திற்கு முன்பிருந்த ரிக்க்ஷா வண்டிகள் முற்றிலும் வழக்கொழிந்து போய் இப்போது அந்த இடத்தில், ஆட்டோக்கள், கார்கள். ஒரு ஆட்டோக்காரரை அணுகி
“திலக் நகர்”
“யாபை ரூபாய்”
“சரே”
ஆட்டோக்காரர் பத்தே நிமிடத்தில் வீட்டின் முன் நிறுத்தினான். ஐம்பது ரூபாயை கொடுத்துவிட்டு, வீட்டு வாசலை அடையும்போது மனதில் ஒரு லேசான குறுகுறுப்பு. சிறுவயதில் பார்த்தது, இப்போது நினைவிருக்குமா, என்று சற்றே தயங்கியவாறேகாலிங் பெல்லை அழுத்த, கதவை திறந்தது… அஜீதாவேதான். கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே இருந்தாள்.
“அக்கா எப்படியிருக்கீங்க”
“நீங்க”
“தீபக் ஞாபகமில்ல ”
“ஏய் நீயா!, குட்டியாயிருந்த, இவ்ளோ ஹைட்டாயிட்ட, சுத்தமா அடையாளமே தெரியலடா, உள்ள வா. ”
உள்ளே சென்றபோது, ஹாலில் அவள் தந்தையின் படம் பெரிதாக மாட்டப்பட்டு, மாலையிடப்பட்டிருந்தது
“எப்படியிருக்கீங்க?”
“நல்லா இருக்கேன், என்ன பண்ற? இப்பல்லாம் அடிக்கடி பேப்பர்ல பேர் வருது”
” ரியல் எஸ்டேட் கம்பனில ஒர்க் பண்றேன், கடப்பால சைட் விசிட், நடு நடுவில செஸ், எல்லாம் நீங்க சொல்லிக்குடுத்தது தானே”
“சேச்சே அதெல்லாமில்லை எனக்கு ரொம்ப போரடிக்கும், உன்கூட விளையாடினேன் அவ்வளவுதான்.”
சிறிது நேரம் அவளுடன் பேசிக்கொண்டிருந்தான். பின்பு, “இப்ப ஒரே ஒரு ஆட்டம் அடுவமா”
” அப்பவே ஒரு ஆட்டம் பேலன்ஸ் இருக்குல்ல. ஞாபகமிருக்கா? ஓ, அதுக்காகத்தான் வந்தியா, இரு, போர்டும் காய்ன்சும் இருக்கு கொண்டு வரேன்.”
அவள் உள்ளே சென்றபோது, அவன் மனதில் ஒரு இனம் புரியாத பயம், ஒருவேளை இப்போதும் தோற்றுவிட்டால், ம்ஹூம் சான்சே இல்லை. போர்டும் காயின்சும் கொண்டுவரும்போது, அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவன்
” அக்கா நீங்க இன்னம் அப்படியே இருக்கீங்க”
“சாப்பிடுறது, தூங்கறதுன்னு ரெண்டே வேலை, வேற ஒருவேலையும் இல்ல, அதனால தான், என்று மெதுவாக காய்களை அடுக்கினாள். முடித்தவுடன்,
“வழக்கம்போல நீயே ஸ்டார்ட் பண்ணு”
“இப்பவுமா ”
“யெஸ்”
அழகாக துவங்கியது ஆட்டம். நெடு நேரம் வரை இருவருமே விட்டுக்கொடுக்காமல் ஆடினார்கள். அவள் வெள்ளையில் ஒன்றை வெட்டும்போது, சரிசமமாக அவன் கருப்பில் ஒன்றை வெட்டினான். எதிர்பாராத அந்த தருணத்தில் குதிரையை நகர்த்தி,
“தீபக் ராஜாக்கு செக்” என்றாள்.
அவளுடைய சிறிது நேர அதிரடி ஆட்டத்தில் தீபக்கின் ராஜா தனி மரமாய் நின்றார். அவளிடம் ஒரு குதிரையும், சிப்பாயும் மட்டும்.
இப்போது அவனுக்கிருக்கும் ஒரே வாய்ப்பு, ராஜாவை பதினாறு முறை நகர்த்தி ஆட்டத்தை ட்ரா செய்வது தான். ராஜாவை ஒவ்வொரு இடமாக பதினாறு முறை நகர்த்த மிகுந்த சிரமப்பட்டான். அதைவிட திணறினான் என்றே சொல்ல வேண்டும் கடைசி முறை நகர்த்தி விட்டு,
“அப்பாடா” என்று சொல்லி, நம்ப முடியாமல் போர்டையே வெறித்துக்கொண்டிருந்தான்.
“நான் தான் அப்பவே சொன்னேனில்ல, முயற்சி செஞ்சா ட்ரா பண்ணலாம்அவ்வளவுதான், என்ன சாப்பிடற காபி , டீ , ஜூஸ் ”
“ஜூ ஸ் ”
“நைஸ் சாய்ஸ் என்று ஃப்ரிட்ஜிலிருந்த ஜூஸை எடுத்து மெதுவாக டம்ப்ளரில் ஊற்றி அவனிடம் கொடுத்துக்கொண்டே, “இந்தா ஜூஸ் எடுத்துக்கோ, இன்னும் ஆட்டத்தையே நினைச்சிட்டிருக்கியா, ”
“சேச்சே, அப்பவே மறந்துட்டேன், எப்படிக்கா இதெல்லாம்?
சர்வதேச செஸ் போட்டிகளோட மூவ்ஸெல்லாம் பேப்பரில் வருதுல்ல,அதுல தோற்றவங்க சார்பா விளையாடி பார்ப்பேன், சாதாரணமா யார் கூடவாவது விளயாடணும்னா ஒரு ஹார்ஸ், ஒரு எலெஃபன்ட், மட்டும் வச்சிட்டு விளையாடுவேன்,அப்ப நிறைய புது புது மூவ்ஸ் கிடைக்கும். டின்னர் என்ன வேணும் சாம்பியனுக்கு”
“பாத்திங்களா சந்தடி சாக்கில சாம்பியன்னு கிண்டல் பண்றீங்க, டின்னர்லாம் முடியாதுக்கா, உடனே கிளம்பணும் இன்னோர் நாள் கண்டிப்பா வறேன்” .
“சொன்னாலும் சொல்லாட்டாலும் நீ சாம்பியன் தான்”
மேலும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்ததில் புதிது புதிதான நுணுக்கங்களை கற்றுக்கொண்டு, பின் பிரிய மனமில்லாமல் அவளிடம் விடைபெற்றான்.
அடுத்த நாள் கடப்பாவில் அலுவலக வேலைகளை முடித்துவிட்டு சென்னைக்கு வர இரவாகிவிட்டது.
இரவு ஒன்பது மணிக்கு சோர்வாக வீட்டிற்கு வந்து அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான். அவனருகே வந்து அமர்ந்த அவன் மனைவி, காபி, டிபன் இரண்டையும் இரண்டையும் டேபிள் மீது வைத்துவிட்டு, ஏதோ சிந்தனையோடிருந்தவனை,
“என்னங்க ஒரு மாதிரி இருக்கீங்க, எதாவது பிரச்சினையா”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை” என்று சுய உணர்வுக்கு வந்தவன்,
“அமா, நேத்து சாயந்த்ரம் கால் பண்ணேன் எங்க போன, ரிங்க் போய்ட்டே இருந்தது?”
” ப்ரவுசிங்க் சென்டர்க்கு போயிருந்தேங்க ”
“எதுக்கு” என்றான் நெற்றியை சுருக்கியபடி,
“பொறக்கப்போற நம்ம குழந்தைக்கு, பையனாயிருந்தா’ஆனந்த்’னும், பொண்ணாயிருந்தா ‘அஜீதா’ன்னு பேர் சொன்னீங்கல்ல”?
“ம்”
“அஜீதான்னா என்ன அர்த்தம்னு நேத்து ‘கூகிள்ல ஸ்ர்ச் பண்ணேங்க!”
“என்ன அர்த்தம் ?”
” ‘ஜெயிக்கமுடியாதவ’ன்னு அர்த்தமாம்”
” கரெக்ட், முயற்சி செஞ்சா ட்ரா பண்ணலாம் ” என்றான் அவனையறியாமல்.
அருமையான கதை. வாழ்த்துக்கள்.