‘என்னடா ஆச்சு? ஏன் இப்படி விரல்ல கட்டுப் போட்டுட்டு வந்திருக்கே? பள்ளியிலிருந்து வந்த மகன் பரமுவைப் பாசத்தோடு கேட்டாள் பார்வதி. முதலில் பதிலேதும் சொல்ல மறுத்தவன் திரும்பத் திரும்பக் கேட்டதும் திருவாய் மலர்ந்தான்.
‘சொல்லுடா… சொல்லு, யாரவது அடிச்சாங்களா?!’ என்று மிரட்டியதும்…
‘அதொன்னும் இல்லைம்மா..! எங்க பள்ளிக்கூடத்துல என் கூடப் படிக்கிறானே நரேந்திரன் அவன் தான் சொன்னான்’.
‘என்ன சொன்னான் சொல்லு! சொல்லு!’ பார்வதி கேட்டதும்,
அவன் சொன்னான். ‘வெள்ளைக் குதிரையைப் பார்த்து விரலைக் கடிச்சா ‘காசு’ கிடைக்கும்னு!’
‘நீ என்ன லூசாடா.?!. வெள்ளைக் குதிரையைப் பார்த்து விரலைக் கடித்தால் காசு வரும்னு எவனோ சொன்னான்னு நீயும் கடிச்சு… காயம் பட்டுட்டு வந்திருக்கேயே?…! பயித்தியமாடா நீ?! யார் என்ன சொன்னாலும் நம்புவியா?! நம்பலாமா?! பள்ளிக் கூடத்துல என்னடா படிக்கிற நீ?! ஏமாந்த சோணகிரி!’ கடிந்து கொண்டாள்.
அவன் நிதானமாய்ச் சொன்னான். ‘நான் ஏமாளினா? அப்ப நீ யாரு?’
‘நான் என்னடா பண்ணினேன்?!’ என்று அவள் கேட்டதும், ‘நானாவது பரவாயில்லை., வெள்ளைக் குதிரையைப் பார்த்து விரலைக் கடிச்சேன்!? நீ…’ என்றான்.
‘நான் என்னடா? பண்ணினேன்.’ என்றாள் அவள்.
‘என்னைப் பார்! அதிர்ஷ்டம் வரும்னு!, செல்வம் பெருகும்னு! கழுதை படத்தை பிரேம் பண்ணி வீட்டுல மாட்டி வச்சிருக்கயே…?! யார் முட்டாள்? செல்வமும், காசும் உழைச்சாத்தான் பெருகும்னு உனக்கு உணர்த்தத்தான் இந்த வெரலைக் கடிச்ச விளையாட்டு!… நெசமா நான் வெரலைக் கடிக்கவே இல்லை..பார்!’ என்று சொல்லி, சும்மா சுற்றி இருந்த விரல் கட்டுத்துணியை அவிழ்த்துக் காட்டினான். பார்வதி அசந்து நின்றாள்.