கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 21, 2022
பார்வையிட்டோர்: 6,868 
 
 

(1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாங்கள் எல்லாரும் வெறும் மேலுடன் தான் திரிவோம். எனக்கு வெறும் மேல் தான் பிடிக்கும்; சட்டையே பிடிக்கா. கிட்ணனும் அப்பிடித்தான்; வெறும் மேலுடன் தான் வருவான். ஆனா கிட்ணன் நல்ல வடிவு. வெள்ளையாய் இருப்பான். ஏனெண்டால் அவன் அம்மா நல்ல வெள்ளை; என்னுடைய அம்மா கூட நல்ல வெள்ளை; அப்பாதான் கறுப்பு; பல்லுத் தீட்டுவமே கரி. அதைப் போல.

சனிக்கிழமை அம்மா முழுக வார்ப்பா. அம்மாவுக்கு ஒண்டுமே தெரியா. இவ்வளவு எண்ணெய் வைப்பா. கண்ணெல்லாம் எரியும். அக்கா எண்டால் ஒரு சொட்டுச் சொட்டாய் வைப்பா, எரியவே மாட்டுது.

ராசா என்னோடு ஒட்ட ஒட்ட வாறான் , தள்ளடா எண்டாலும் தள்ளுறான் இல்லை ; ராசாவும் இண்டைக்கு முழுகுவான்; அவனுக்கு முழுகவே பிடிக்கா . ‘கெற்றப் போல்’ அடிக்கத்தான் அவனுக்குப் பிடிக்கும்; நல்லா லெக்கு வைச்சு அடிப்பான்; எண்டால் நானும் கூட அடிப்பன் ; அப்பா கண்டால் முதுகுத் தோலை உரிச்சுப் போடுவாராம்; அக்காதான் சொல்லுறா .

அப்பாவுக்கு ஒண்டுமே தெரியா; காலம் பற காலம்பற புதுப்புது பிளேட்டால் ‘சேவ்’ எடுத்திட்டு பிளேட்டை எறிஞ்சிடுவார். நான் எல்லா பிளேடும் சேர்ப்பன்; விக்னாவிட்டை குடுத்தால் புதுப் புது முத்திரை எல்லாம் தருவன். அவனிட்ட முத்திரை ஒரு தொகை இருக்கு. அமேரிக்கா, இங்கிலண்டு, லண்டன். எல்லா முத்திரையும் வைச்சிருக்கிறான். விக்கினாவின்ரை அப்பாவிட்டை கார் இருக்கு; பெரிய கார்; அவன் சொல்லுறான் தான் கார் விடுவானாம். அவன் அப்பிடித்தான்; எல்லாம் பொய் பொய்யாச் சொல்லுவான்.

லைசென்சு ஒண்டும் எடுக்காமல் எப்பிடியாம் கார் விடுறது.

அக்கா வந்து முழுகவார்க்கக் கூப்பிட்டா, “பேந்து வாறன் எண்டு சொன்னன் ; அக்கா அப்பிடியே ‘அறுநாக் கொடியில்’ பிடித்து கொற கொற எண்டு இழுத்துக் கொண்டு போனா. நான் அழவே இல்லை. எனக்கு அக்கா எண்டால் விருப்பம்.

அக்காதான் தலையிலே சீயாக்காய் பிரட்டினா; நான் அக்காவையே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தன்; அக்கா நல்ல வடிவு. நல்ல சிவப்பு அக்காவின்ரை கண் வட்டமாய் பெரிசாய் இருக்கும். அதைத்தான் நான் உத்துப் பார்த்துக் கொண்டே இருப்பன். அக்கா ஏண்டா அப்பிடிப் பார்க்கிறாய் எண்டா. எனக்குக் கூச்சமாயிருந்தது. கண்ணுக்குள்ளே சீயாக்காய் போட்டுது எண்டு கத்தினேன், சும்மாதான்; அக்கா கெதி கெதியாய் தண்ணி அள்ளித் தலையிலே ஊத்தினா. தண்ணி சில்லெண்டு இருந்தது; நான் குதி குதி எண்டு குதிச்சன்.

அம்மா பவுடர் போடவே மாட்டா. ஒரு கொஞ்சம் தான் போடுவா. அக்கா எல்லா இடமும் பவுடர் போட்டா. தலையெல்லாம் கூடப் போட்டா. நல்ல வாசமாயிருக்கு. நான் சிரிச்சன் ; அக்கா குனிஞ்சு கொஞ்சினா…

…கிட்ணன் வந்து விளையாடக் கூப்பிட்டான் “நான் மாட்டன் நீ போ” எண்டு சொன்னன். அவன் போக இல்லை. ‘நீ போடா’ எண்டு நான் உள்ளே வந்திட்டன். கிட்ணன் அப்பிடித்தான் “போடா” எண்டால் போகவே மாட்டான்.

கிட்ணன்ரை அக்காவும் வந்தா . எங்கடை அக்காவோடை அவ கனேக்க நேரம் கதை கதை எண்டு கதைச்சா. மெதுவாத்தான் கதைச் சினம். என்னைக் கண்ட உடனே கதைக்கிறதை நிப்பாட் டினம். அக்கா “நீ போய் வெளியிலை விளையா டென்டா” எண்டு என்னைக் கலைக்கிறா. எனக்கு கோவம் கோவமாய் வரும்.

கிட்ணன்ரை அக்கா கூடாது. வந்தா போகவே மாட்டா. ரெண்டு பேரும் சேர்ந்து சிரி சிரி எண்டு சிரிக்கினம். சிரிச்சிட்டுப் போகட்டும்; எனக்கென்ன.

கிட்டிணன்ரை அக்காவின்ரை நகையெல்லாத்தையும் அக்கா போட்டுப்போட்டு பார்த்தா; அம்மா வின்ரை சீலையெல்லாம் அலுமாரியிலை இருந்து எடுத்து அக்கா உடுத்துப் பார்த்தா. கண்ணாடியிலை அக்கா தன்னைப் பார்த்துக் கொண்டேயிருந்தா. ஏனெண்டு கேட்டன். “அப்படித்தான்” எண்டு சொன்னா.

இந்த அக்கா இப்படித்தான்; கிட்டணன்ரை அக்கா வந்தா என்னோடை கதைக்கவே மாட்டா. நான் குசினிக்குப் போய் குஞ்சியாச்சியை கேப்பன்.

குஞ்சியாச்சி குசினியிலே பலகாரம் சுட்டுக் கொண்டு இருந்தா. எனக்குச் சாப்பிட இவ்வளவு பலகாரம் தந்தா. நான் இதை அம்மாவிட்டை சொல்லமாட்டன். குஞ்சியாச்சியை எனக்கு பிடிக்கும்; எனக்கு கேக்கிறது எல்லாம் சொல்லுவா. அக்காவை பொம்பிளை பார்க்க வருகினமாம். இந்தப் பலகார மெல்லாம் அவைக்குத் தானாம்!

குஞ்சியாச்சி நல்லவ. என்னைக் கொஞ்சிறபோது மாத்திரம் கூடாது. அவ வாயெல்லாம் வெங்காயம் மணக்கும். அக்கா மெதுவாய்த்தான் கொஞ்சுவா. கன்னம் பட்டுப்போல இருக்கும். ஆனா அப்பா முகம் குத்தும். சொர சொர எண்டு இருக்கும். பள்ளிக் கூடத்திலை சிலேட்டுப் பெஞ்சில் தீட்டுவமே சீமெந்து படி. அதைப் போல.

எனக்கு அப்பாவை பிடிக்கா. வெள்ளிக்கிழமை மாத்திரம் பிடிக்கும். ஏனெண்டால் என்னைக் கோயி லுக்கு கூட்டிக்கொண்டு போவார். கனேக்க கடலையெல் லாம் வாங்கித் தருவார்…

…இண்டைக்கு எனக்கு புதுச் சட்டையெல்லாம் அக்கா போட்டுவிட்டா. புழுதியிலை இறங்கி விளை யாடினால் கால் முறிச்சிப் போடுவன் எண்டு அக்கா சொன்னா.

எல்லாம் பொய். அக்கா அடிக்கவே மாட்டா; மெதுவாத்தான் அடிப்பா.

அக்கா , அச்சா அக்கா எல்லே, குஞ்சியாச்சியிட்டை கொஞ்சம் பலகாரம் வாங்கித்தா எண்டு கேட்டன். அக்கா, இப்ப வேண்டாம். அவையெல்லாம் வந்து போனாப் பிறகு சாப்பிடலாமெண்டு சொன்னா. ஆரெல்லாம் எண்டு கேட்டன். அக்காவுக்கு முகம் எல்லாம் சிவந்து போச்சு.

அக்கா புதுச் சீலையெல்லாம் கட்டிக் கொண் டிருந்தா. அக்கா நல்ல வடிவு. நான் கட்டிப் பிடிச்சு அக்கா கழுத்திலை கொஞ்சினன், சீ…அப்படி நீ கொஞ்சக்கூடா தெண்டு சொன்னா.

குஞ்சியாச்சி எண்டா அப்பிடிச் சொல்லவே மாட்டா.

லெச்சுமி இண்டைக்கு வர இல்லை.

ஏன் குஞ்சியாச்சி லெச்சுமியைக் கூட்டிக்கொண்டு வர இல்லை, எண்டு கேட்டன். உண்மையாகத்தான் கேட்டேன். குஞ்சியாச்சி சிரிச்சா. ஏன் நீயும் பொம்பிளை பார்க்கப் பொறியோ எண்டு கேட்டா.

பொம்பிளை பார்க்கிற தெண்டால் என்ன?

புதுப்புது ஆக்களெல்லாம் வந்தினம்; ஒரு பென்னம் பெரிய கார்லே அவ்வளவு பேரும் வந்திருந் தனம். நான் அம்மாவின்ரை சீலையைப் பிடிச்சுக் கொண்டு நிண்டன்.

அம்மா பறிச்சுக் கொண்டு போய் அவை எல்லாரையும் கூப்பிட்டு உள்ளுக்கு இருத்தினா. ஒரு மாமிகூட வந்திருந்தா. நான் அக்காவோடை போய் இருந்தன். அக்கா என்னைத் தன்னோடு இழுத்து வைச்சுக் கொண்டா.

அக்கா புதுசு புதுசாய் நகையெல்லாம் போட்டிருந்தா – ‘இதெல்லாம் ஆற்றை நகையக்கா’ எண்டு கேட்டன்; மெல்லத்தான் கேட்டன், ‘சீ பேசாமல் இரடா’ எண்டா அக்கா. அந்த மாமி என்னை என்னை உத்து உத்துப் பார்க்கிறா.

அந்த மாமி கூடாது. ஆனா அக்கா அவளோடை தான் கதைச்சா; கணநேரம் கதைச்சா. பலகாரம் எல்லாம் கொண்டுபோய் வைச்சா.

முன் வீட்டிலே இருக்கிறாரே கொணமாமா, அவரைப் போல ஒரு மாமாவும் வந்திருக்கிறார். ஆம்பிளையள் எல்லாரும் தலைவாசலிலை தான் இருக்கினம்; அந்த மாமாவின்ரை அப்பாவும் அங்கைதான் இருக்கிறார். அவைக்கும் அக்காதான் பலகாரம் குடுத்தா. அந்த மாமா அக்காவையே பார்த்தார். அக்கா ஓடி வந்திட்டா .

அந்த மாமா என்னைக் கூப்பிட்டார். கை காட்டித் தான் கூப்பிட்டார். நான் போகவே இல்லை. அப்பா, வாடா எண்டு உறுக்கினார். நான் பயந்திட்டன்.

அப்பாவும், அந்த மாமாவின்ரை அப்பா, அவரும் கதைச்சினம். இருந்திட்டு. ரண்டு பேரும் பிலத்து சத்தம் போட்டினம். கடைசியாய் அப்பா கோபமாய்ப் பேசினார். அம்மா அப்பாவை பேசவேண்டாம் அப்படி எண்டு சொன்னா. அக்கா அழுகிறது போலை சோர்ந்து போய் இருந்தா. பாவம் பாவமாயிருந்தது.

நான் முறுக்கை எடுத்துக் கடிச்சன்; மெதுவாத் தான் கடிச்சன். படக்கெண்டு சத்தம் போட்டது. அந்த மாமா திரும்பிப் பார்த்தார்; எனக்கு வெக்க மாய்ப் போச்சு…

…இண்டைக்கு வகுப்பு வாத்தியார் வர இல்லை. எல்லாரும் சத்தமாய்ப் போட்டம். பற்பன் தான் கூடச் சத்தம் போட்டான். ஆனா தலைமை வாத்தியார் எல்லாரையும் தான் வாங்கு மேலே ஏத்தி விட்டார்; காலெல்லாம் வலிச்சுது. தலைமை வாத்தியார் உயரமாய் இருப்பார். பிரம்பு வைச்சிருப்பார். அவருக்கு ஒண்டுமே தெரியாது.

பள்ளிவிட்ட நேரம் மழை எல்லாம் தூறிச்சு. “மழையே மழையே மெத்தப் பெய், வண்ணாங் கல்லு தூரப் பெய்” எண்டு நானும் கிட்ணனும் பாடினோம்; மழை பெய்யவே இல்லை.

‘கொக்குவில் கிராமச் சங்கம்’ எண்டு பலகையிலே எழுதி வைச்சிருக்குது . ஏண்டா கிட்ணா, கிராமச் சங்கம் எண்டா என்னடா’ எண்டு கேட்டன். அவன் தனக்குத் தெரியாது எண்டு சொல்லிப் போட்டு ஓடி விட்டான். கிட்ணனுக்கு ஒண்டுமே தெரியா.

வீட்டிலே அம்மா அப்பாவோடு சண்டை பிடிச்சா. அப்பாவும் பெலத்துச் சண்டை பிடிச்சார். எனக்குப் பயமாயிருந்தது. அக்காட்டை ஓடினேன்; அக்கா கூடத்திலே இருந்து அழுதுகொண்டு இருந்தா. ‘அக்கா, அக்கா’ எண்டு கூப்பிட்டன்; அவ பேசவே இல்லை. சீதனம் சரியாய் பேசாமல் ஏன் பொம்பிளை பார்க்க ஆக்களை கூப்பிடுவான் எண்டு அம்மா கத்தினா. அப்பாவும் என்னவோ கத்தினார்.

எதுக்குத் தான் சண்டை எண்டு ஒண்டு இருக்குதோ?

….மண்ணெண்ணெய்க்காரன் வந்தான். கூ கூ எண்டு ஊதினான். நான் அவனைப் பாக்கத்தான் ஓடினேன். ஒழுங்கையிலே கொண மாமாவும் நிண்டார்; என்னைப் பார்த்துச் சிரித்தார்; கொணமாமா நல்ல வடிவாய் இருக்கிறார்.

கொணமாமா, நீ என்ரை வீட்டுக்கு வாறியா எண்டு கேட்டார். நான் ஓம் எண்டு தலை ஆட்டினன்.

கொணமாமா பெரிய பெரிய புத்தகமெல்லாம் படிக்கிறார். எல்லாம் இங்கிலீசு பொத்தகம். எல்லாமும் கூடாது. ஒரு படம் கூட இல்லை.

படம் ஒண்டுகூட இல்லையா எண்டு கேட்டன். படமா எண்டு கேட்டு கொணமாமா சிரிச்சார். புதுசு புதுசா படம் எல்லாம் காட்டினார். அந்தப் பெட்டி நிறையப் படம்படமாய் வச்சிருக்கிறார். மாடு படம், குதிரை படம், ஏரோப்பிளேன் படம் எல்லாம் கூட கீறி வச்சு இருக்கிறார். என்ரை படம், அக்கா படம் கூடக் காட்டினார்.

அக்கா படத்தை அக்காவுக்கு காட்டி போட்டு வரட்டா எண்டு கேட்டன். ஓ…வேணுமெண்டால் கொண்டு போய் காட்டு; ஒரு கடுதாசியும் தாறன் அதையும் காட்டுறியா எண்டார்.

நான் ‘ஓ எஸ்’ எண்டன்.

…அம்மா வெங்காயம் வெங்காயமா உரிக்கிறா. அவவுக்கு கண்ணீரே வர இல்லை. நான் ஒண்டுகூட உரிச்சு முடியல்லை. அழுகை அழுகையா வந்தது. அப்பா இஞ்ச வாடா எண்டு கூப்பிட்டார். நான் கிட்டப் போனேன். முதுகிலே ‘பளார்’ ‘பளார்’ எண்டு அடிச்சார். அதுக்கிடையிலை அம்மா ஓடி வந்து அப்பாவை மறிச்சா. அப்பா, நீ தான் பிள்ளையை கெடுக்கிறாய் எண்டு பேசினார்; அம்மா, அவனுக் கென்ன தெரியும், குழந்தைதானே எண்டா. இனிமேல் மாமா வீட்டை போவுயாடா போவுயாடா எண்டு உறுக்கினார். நான் இல்லை இல்லை எண்டு பயத்திலை கத்தினன். அப்பா உடனே போட்டார். அம்மா முதுகைத் தடவி விட்டா, பலகாரம் எல்லாம் கூடத் தந்தா .

….நடுச்சாமம் போல அப்பா அடிக்க வந்தார். நான் திடுக்கிட்டு முழிச்சுப் பார்த்தன்; ஒண்டுமே தெரிய இல்லை. எனக்குப் பயம் பயமாய் வந்தது. இருட்டிலே அக்காவிட்டை தடவி தடவிப் போனேன். அக்கா தலைகாணி எல்லாம் ஈரமாயிருந்தது. அக்கா விக்கிவிக்கி அழுகிற சத்தம் தான் கேட்டுது. எனக்குப் பயமாயிருந்தது .

அக்காவைத் தொட்டுப் பார்த்தன். அக்கா முகத்தைக் காண இல்லை. ஏன் அக்கா அழுகிறாய் எண்டு கேட்டன். அக்கா கதைக்க இல்லை. அக்கா, என்ரை அக்கா எல்லே…இனிமேல் அந்த மாமாட்டையிருந்து ஒரு கடுதாசியும் வாங்கியர மாட்டன்; என்ரை அக்கா எல்லே.

அப்பவும் அக்கா கதைக்க இல்லை. ‘எனக்குப் பயமாயிருக்கு அக்கா…என்னைக் கட்டிப்பிடி அக்கா…’ எண்டு சொன்னன்.

அக்கா குப்புறப்படுத்துக் கிடந்தா; திரும்பவே இல்லை. தடவிப் பார்த்தன்; முகமெல்லாம் நனைஞ்சு கிடந்தது.

“அக்கா, நீ என்னோடை கோவமா” எண்டு கேட்டன்.

அக்கா அப்படியே என்னைக் கட்டிப் பிடிச்சுக் கொஞ்சினா. கன்னத்திலை தான் கொஞ்சினா. கொஞ்சம் நொந்தது.

– 1959-61

– அக்கா (சிறுகதைகள் தொகுப்பு), முதற் பதிப்பு: டிசம்பர் 1964, பாரி நிலையம், சென்னை.

– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *