கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 29, 2012
பார்வையிட்டோர்: 8,814 
 
 

விசும்பலாகவும் இல்லை அரற்றலாகவும் இல்லை

தீனஸ்வரத்தில் லயம் தப்பாத தொடர் அழுகை இடையிடையே யாரோ குரல்வளையை நெரித்துக் கொண்டிருக்கிறார் போல் திணறித் திணறி வேகம் குறைவதைப் போல தோன்றச் செய்து மறுபடி நிதானித்து வேகமெடுக்கும் சன்னமான அழுகை .

யார் அழுகிறார்கள் இந்த நேரத்தில் ?!

அபர்ணாவுக்கு கொஞ்ச நாட்களாகவே ராத்திரிகளில் மட்டும் இந்த அழுகைச் சத்தம் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருந்தது. படுக்க ஆயத்தம் செய்யும் போதெல்லாம் வழக்கப் படி கேட்கும் ஓசைகள் தவிர வேறெதுவும் காதில் விழுந்த சுவடிருக்காது ,ஆழ்ந்து தூங்கும் போது மட்டுமே வேண்டுமென்று உசுப்பி எழுப்புவதைப் போலத்தான் இந்த அழுகை அபர்ணாவை அலைக்கழித்தது சில வாரங்களாய்.

இந்த அபார்ட்மெண்டுக்கு வந்து இன்னும் முழுதாய் இரண்டு மாதங்கள் கூடக்கழியவில்லை.முன்பு அம்பத்தூர் தாண்டி ஆவடி நெருக்கத்தில் விசாலமான தனி வீட்டு உரிமைக்காரியாய் இருந்தவள் அபர்ணா .மகனை மெடிகல் காலேஜில் சேர்க்க என்று அந்த வீட்டை விற்று வந்த பணத்தில் மீதமிருந்ததைக்கொண்டு கூடக் கொஞ்சம் வங்கி கடனும் பெற்று இந்த குருவிக் கூடு அபார்ட்மென்ட் வீட்டை விலைக்கு வாங்கி கொண்டு குடி வந்து இன்றோடு ஒரு மண்டலம் கழிந்தது வந்த புதிதில் அபர்ணாவுக்கு கொஞ்சம் பிடிக்காமல் தான் இருந்தது இந்த அபார்ட்மென்ட் . பிறகெப்படியோ இங்கே பொருந்திப் போனாள் ,

தனி வீட்டில் மேலே வானமும் கீழே பூமியும் அவளுக்கே அவளுக்கென்று இருந்த நிலை இங்கில்லை தான்,இவர்கள் வாங்கியது இரண்டாம் மாடி பிளாட் கீழ் தளமும் சரி மேல் தளமும் சரி இன்னின்னவர்களுக்கு இத்தனை அடிகள் என பிரித்துக் கொடுக்கையில் முன்பிருந்த தனி வீட்டின் கக்கூஸ் அளவில் கூட சொந்த இடம் கூரையில் காணாது போனது.

அபர்ணா நகரத்தில் பிறந்து வளர்ந்தவள் அல்ல , மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத் தாமம் நிறை பந்தற் கீழ் நின்று உள்ளூர் பெருமாள் கோயிலில் அதிகாலை ஐந்து மணிக்கு மேல் அவளது அண்ணன் ஆதி கேசவன் இவளது கைப்பிடித்து ஜலம் விட்டு தத்தம் செய்து தர கல்யாணம் என்ற சடங்கின் படி சம்பிரதாயத்தின் படி சென்னை ஆவடி தயிர்காரப் பெரியம்மை முத்து மீனாட்சி பால்காரர் ராஜாங்கத்தின் ஒரே மகன் சத்யமூர்த்தியை கைத்தலம் பற்றிக் கொண்டவள்.

சென்னைக்கு வந்த பிறகே நகரத்தை அறிபவள் ஆனாள்.

இந்த வீட்டுக்கு வந்த ஒரு வாரத்தில் இப்படி நட்ட நாடு இரவில் தன்னை வலிய எழுப்பும் இந்த அழுகுரலைப் பற்றி சத்யமூர்த்தியிடம் சொல்லிப் பார்த்தாள்,அவனோ கவலைப் பட இது ஒன்று தானா விஷயம் என்பதாக ,கனவு கினவு கண்டிருப்ப ஒரு மடக்கு தண்ணி குடிச்சிட்டு படு என்ன தொந்திரவு பண்ணாத,இப்ப தான் அர்ஜூன காலேஜ்ல சேர்த்தாப்ல இருக்கு பார்த்தா ரெண்டு வருஷம் ஆயிடுச்சு எனக்கு ஒவ்வொரு செமஸ்டருக்கும் பீஸ் கட்ட பணம் சேர்க்கரதுக்குள்ள ஹார்ட் அட்டாக் வந்து வந்து போகுது,இதுல நீ வேற பீதி கிளப்பாம சும்மா இரேன் .என்று வள்ளென்று விழுந்து விட்டு திரும்பிப் படுத்துக் கொண்டான் .

அவனது கோபத்திலும் நியாயம் இருப்பதாக அபர்ணா நினைக்கப் பழகி இருந்ததால், அதற்குப் பிறகு அவனிடம் இது விசயமாய் எதுவும் சொல்வதில்லைஎன்றானது.

பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் எல்லோரும் பெரும்பாலும் வேலைக்குப் போகும் பெண்களாய் இருந்தனர். நேருக்கு நேர் பார்க்க நேரும் சமயங்களில் நின்று நிதானித்து புன்னகைப்பதே பெரிய வெகுமதி என்று அபர்ணா நினைத்துக் கொள்ளப் பழகியிருந்தாள். அதென்னவோ அவள் சீக்கிரமே எல்லாவற்றுக்கும் தன்னை பழக்கிக் கொள்கிறாள் , அடுத்தவர்களைப் பற்றிய கேள்விகளோ முணு முணுப்புகளோ அவளுக்குள் எழும் போதெல்லாம் மனதை ஆரமபத்திலேயே ஒரே தட்டாய் தட்டி அடக்கி விடுவாள் .

அர்ஜுன் மெடிகல் காலேஜ் ஹாஸ்டலுக்குப் போனதும் வீட்டில் இவளும் சத்யமூர்த்தியுமாய் ரெண்டே பேர் தான் ,சத்யமூர்த்தி மகேந்திரா டிராக்டர்களின் டீலராக இருந்தான் ,காலையில் எட்டரை ஒன்பதுக்கெல்லாம் பாரீசில் இருக்கும் தனது ஆபிசுக்குப் போனான் எனில் வீடு திரும்ப இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகும்.

மதியச் சாப்பாடு கேரியரில் கொண்டு போவான் .

காலையில் பத்து மணிக்குள் ஏறக்கட்டி விடும் சமையலறை வேலைகள் .அப்புறம் வீடு பெருக்கித் துடைத்துக் கழுவி கவிழ்க்க என்று மிஞ்சிப் போனால் பனிரெண்டு மணிக்குள் முடிந்து விடும் ,இடைப்பட்ட நேரங்களில் எல்லாம் துணி துவைத்துக் காய வைத்து மடித்துப் பெட்டி போடுவாள் .அப்புறமும் நிறைய நேரம் மிச்சம் இருக்கிறார் போலத் தோன்றினால் கொஞ்ச நேரம் டி.வி ,அது போரடித்தால் பால்கனியில் அமர்ந்து கொண்டு தெருவை வேடிக்கை பார்க்க ஆரம்பிப்பாள், சில நேரங்களில் பால்கனி சுவற்றுக்கும் பக்கத்து வீட்டு தென்னை மரத்துக்கும் நடுவில் சடு குடு ஆடும் அணில் குட்டிகளை பார்த்துக் கொண்டிருப்பாள் .ஏழுமணிக்கு மெகா சீரியல் பார்த்துக் கொண்டே காய்கறி நறுக்கி ஏழரைக்கு உப்புமாவோ,சப்பாத்தியோ செய்து ஹாட் பாகில் அடைத்து வைத்து விட்டால் போதும் சத்ய மூர்த்தி ஒன்பது மணிக்கு வந்து குளித்து சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் டி.வி யில் எதையாவது பார்த்து விட்டு தானாக கண் சொருக தூங்கிப் போவான் .அபர்ணாவும் தான்.

இப்படியே வாழ்க்கை தொடர்ந்திருக்கலாம் .அபர்ணாவுக்கு அதில் ஏதும் வருத்தங்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை ,அவள் பழக்கப்படுத்தப் பட்ட பசு,கழுதை,வீட்டுக் கோழிகளைப் போல தன்னைத் தானே உருவாக்கிக்கொண்டவள்.தனக்கென்று சுயவிருப்பங்கள் என்று எதுவுமிருப்பதாக அவள் நம்பவில்லை .அப்படியே இருந்திருந்தாலும் மூன்றே பேர் கொண்ட தனது குடும்பத்திற்காக தனது சுய விருப்பங்களை நிராகரிக்கத் தயங்கவே மாட்டாள் என்று தான் தோன்றுகிறது. அவள் அப்படித்தான்.

இப்போது அவளுக்கிருக்கும் ஒரே பிரச்சினை தினம் இரவில் அவளை அலைக்கழிக்கும் இந்த சன்ன அழுகுரல் தான் .

எப்படி இதிலிருந்து மீள்வதென்று அவளுக்குப் புரியவில்லை ,கொஞ்சம் கொஞ்சமாக குழம்பிப் போக ஆரம்பித்திருந்தாள்,சோற்றில் உப்பு போட மறந்தாள் ,பொரியலுக்கு இரண்டு முறை கடுகு தாளித்துக் கொட்டி காய்கறிப் பொரியலா இல்லை இது கடுகுப் பொரியலா என்று சாப்பிடுபவனை மலைக்க வைத்தாள், லீவில் வீட்டுக்கு வரும் அர்ஜூனிடம் தனக்கு தினம் தவறாது ஏற்கும் இந்த அழுகை சத்தத்தைப் பற்றிச் சொன்னதில் அவன் அபர்ணாவைக் கேலி செய்தான்.

”ம்மா நீ மெகா சீரியல் பார்க்கறதா நிறுத்திடு எல்லாம் சரியாயிடும்” என்று ஆக அவனிடமும் இனி எதுவும் இதைப் பற்றி பேசுவதில்லை என்று முடிவு செய்து கொண்டாள்.

சத்ய மூர்த்தியும் அர்ஜூனும் அபர்ணாவின் சுமாரான சமையலைக் கூட சகித்துக் கொண்டார்களே தவிர்த்து அவளது பிரச்சினைக்கு தீர்வு காணும் அவகாசம் அவர்களுக்கில்லை என்றானது.

அபர்ணாவுக்கு இப்போதும் கேட்கத் தான் செய்கிறதாம் அந்த அழுகுரல் .ஆனால் அவள் யாரிடமும் சொல்வதே இல்லை இதைப் பற்றி இப்போதெல்லாம். அவள் எல்லாவற்றையும் தனக்குள் புதைக்கக் கற்றுக் கொண்டிருந்தாள் .

அவளை அகழ்ந்தெடுக்க உங்களால் முடியுமெனில் வெகு ஆழத்தில் நீங்கள் அடையாளம் கண்டு கொள்ள தோதாய் ஒரு பட்டாம்பூச்சி பறந்து கொண்டிருக்கலாம் அதற்கு சற்று மேலடுக்கில் வாலில் நூல் கட்டிய ஒரு தும்பியைக் காணலாம்
,இன்னும் சற்று மேலடுக்கில் ஒரு பழக்கப் பட்ட பசுமாடு சாதுவாய் நிற்பதைக்காணலாம், எல்லாவற்றின் கண்களிலும் அழுத சுவடுகள் உண்டு ,தங்களது அழுகை தங்களுக்கே தெரியாததாய் மயங்கிப் போய் நிற்கின்றன அவைகள். ப்ராபர்டி ரவுண்டில் வைத்து ஆடத் தக்க அஃறிணைகள் .

– செப்டம்பர் 15th, 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *