வேலைக்கு வந்த இடத்தில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: May 23, 2024
பார்வையிட்டோர்: 2,580 
 
 

இருள் சூழ்ந்த அந்த புதரருகே இருவர் வேர்த்து வழிய குழி வெட்டி கொண்டிருந்தனர். ம்..சீக்கிரம்.பாஸ் குழிய வெட்டி வைக்க சொன்னாரு.. கொஞ்சம் ஆழமாவே வெட்டிடு..ஆறடி நீளம் ம்..சரியா..

யோவ்..சத்தம் போடாதே, “கேட்” ல இருக்கற வாட்ச்மேனுக்கு சந்தேகம் வந்துடக் கூடாது. நாம இப்ப கம்பெனிக்குள்ள பிளம்பர் வேலை செஞ்சுகிட்டிருக்கறோம், புரியுதா?.

சரிண்னே புரியுது, இது போதுமா பாருங்க..ம்.. வா..போலாம்… இருவரும் குழிக்கு வெளியே வந்து அந்த அலுவலகத்தை நோக்கி செல்கிறார்கள். அண்ணே கை கால் எல்லாம் கழுவிடலாமா? இப்ப கழுவிக்கலாம், நம்ம ‘பாஸ்’ பாடியை கொண்டு வந்த பின்னால திரும்ப வரலாம், அவர்கள் தங்களுக்குள் குசு குசுவென பேசிக்கொண்டே அந்த கட்டிடத்துக்குள் நுழைகிறார்கள்.

அவரகளுக்கு தெரியவில்லை இரண்டாம் தளத்தில் ஒரு ஜன்னல் வழியாக ஒரு இளைஞன் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டிருப்பதை.


ரகுவரன் அப்பாவிடம் வந்து நின்றான். நான் கிளம்பறேன், தனக்கு மேலே வளர்ந்து நின்று முறுக்கிய நிலையில் நின்று கொண்டிருக்கும் பையனை பார்த்தவருக்கு சட்டென கண்கள் கலங்க ஆரம்பித்து விட்டன. வீட்டில் இருந்தவரை அவனை திட்டி திட்டி வெறுப்பேற்றினோம். ஆனால் இப்படி சட்டென நான் சென்னை போகிறேன் என்று கிளம்புவான் என நினைக்கவில்லை.

கோயமுத்தூருல இல்லாத வேலைவாய்ப்பாடா? சொல்லத்தான் மனசு துடித்தது, ஆனால் அவனே சென்னையில எனக்கு வேலை கிடைச்சுருக்கு என்று சொல்லி கிளம்புபவனை தடுத்தால் அது அவனது வாழ்க்கைக்கு இடைஞ்சலாகி விட்டால், என்ன செய்வது?

இதை நினைத்தவுடன், சரி ரகு பத்திரமா போய்ட்டு வா, அம்மாகிட்டேயும், அக்கா கிட்டேயும் சொல்லிட்டியா?

எல்லாம் ஆச்சு.

இந்தா இதை செலவுக்கு வச்சுக்க, பார்த்து நடந்துக்க, நம்ம ஊரை விட ரொம்ப பெரிசு சென்னை. பத்திரம்.

சரிப்பா, அவர் கொடுத்த பணத்தை சட்டைப்பையில் திணித்து கொண்டு கிளம்பினான். அப்பா கண் கலங்குகிறார் என்பதை உணர்ந்து அவசர அவசரமாய் நகர்கிறான்.


சென்னையிலிருந்து காஞ்சீபுரம் போகும் வழியில் சுமார் எண்பது கிலோமீட்டர் தள்ளி இறங்கி அங்கிருந்த பொட்டல் வெளியை நடந்தே கடந்தான். வழியில் சென்ற ஓரிருவரிடம் “நிர்மல் இண்டஸ்ட்ரியல் கம்பெனி” எங்கிருக்கு என்று வழி கேட்க அவர்களுக்கும் புரியாமல் “இங்க ஒரு கம்பெனி புதுசா திறந்திருக்காங்க, நீங்க கேட்டது அதுவான்னு தெரியாது, எதுக்கும் போய் பாருங்க”, இந்த பதிலால் நம்பிக்கை இல்லாமல் அந்த கம்பெனி வாசலை அடையும்போது மணி ஏழாகியிருந்தது..

கம்பெனி வாசலின் ‘கேட்டில்’ மட்டும் வெளிச்சம் தெரிய உட்கார்ந்திருந்த வாட்ச்மேனிடம் தன் ‘அப்பாயிண்ட்மெண்ட்’ லெட்டரை காட்டினான். ‘ஏன் தம்பி புதுசா வேலைக்கு வர்றீங்க, இந்த நேரத்துக்கு வந்தா எப்படி?’

வாட்ச்மேனின் கேள்வி இவனை சங்கடப்படுத்த ஐயா, வழி கேட்டு அலைஞ்சு வந்து சேர்றதுக்குள்ள இவ்வளவு நேர்மாயிடுச்சு, இருங்க ஓனர் கிட்டே பேசிட்டு சொல்றேன்.

யாரிடமோ பேசினான், அதுவரை ரகுவரன் அந்த கேட்டை தாண்டி தன் பார்வையை ஊடுருவினான். உள்ளே இருளாக இருந்தது. நூறடி தூரத்தில் வெள்ளையாய் ஒரு கட்டிடம் தெரிந்தது. அதனுள் ஒரு சில அறைகளில் மட்டும் வெளிச்சம். கம்பெனி அதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தவன், ஏன் இங்கிருந்து மின் விளக்கு போட்டால் என்ன? நினைப்பதற்குள், தம்பி உங்களை கம்பெனி மேலே ஒரு ரூம் இருக்காம், அதுல தங்கிக்க சொல்றாங்க, காலையில வ்ந்து பாக்கறாங்களாம்.

வாட்ச்மேன் அவனை அழைத்து சென்று அந்த வெள்ளை கட்டிடத்தின் இரண்டாம் தளத்தில் இருந்த சிறு அறையை காட்டினான். தம்பி இதுல தங்கிக்குங்க, காலையில பாக்கலாம்.

ஏண்ணே கம்பெனிங்கறீங்க, ஆளுங்களையே காணோமே?

தம்பி இது இப்பத்தான் ஆரம்பிச்சு ஒரு மாசமாச்சு, புதுசாத்தான் ஆள் எடுப்பாங்க, அதனாலதான் முதல்ல நீங்க வந்திருக்கறீங்க, காலையில ஆபிசுல வேலை செய்யறதுக்கு மூணு பேரு வருவாங்க.. பக்கத்துல பாத்ரூம் இருக்குது பாத்துக்குங்க, சொல்லி விட்டு கேட்டை நோக்கி சென்று விட்டான்.


புதிய இடம் தூக்கம் வராமல் அங்கும் இங்கும் புரண்டு படுத்துக்கொண்டிருந்த ரகுவரன் திடீரென யாரோ பேசிக் கொள்ளும் சத்தம் கேட்டு எழுந்தவன் முன்புறமா பின்புறமா என்று திகைத்தவன் பின்புறம்தான் என்பதை மண்ணை யாரோ வெட்டுவது போல சத்தம் கேட்க உறுதி செய்தான்.

அங்கிருந்த ஜன்னல் வழியாக என்ன நடக்கிறது என்று பார்த்தான். நல்ல இருட்டாய் இருந்ததால் கண்ணுக்கு அந்த இருட்டு பழகும் வரை தெளிவாக தெரியாமல் இருந்தது. இரண்டு நிமிடங்களில் யாரோ இருவர் குழி வெட்டிக் கொண்டிருப்பதும், அவர்கள் இருவரும் தங்களுக்குள் பேசிக் கொள்வதும் காதுகளில் நன்கு விழுந்தன.

அங்கிருந்து பார்க்க குழி நீளமாய் இருந்ததும், அவர்களின் வார்த்தைகளில் “பாடி”என்று சொன்னது காதில் விழுந்ததும் ரகுவரனுக்கு மயிர்க்கால்கள் சிலிர்த்தன. கடவுளே இது என்ன இடம்? அப்படியே திகிலடித்து நின்றான்.


மாமல்லபுரம் சாலையில் அமைந்திருந்த ஒரு தென்னந்தோப்புக்குள் ‘தண்ணீர் பார்ட்டி’ ஒன்று நடந்து கொண்டிருந்தது. பதினைந்து பேர் இருக்கலாம், அவர்களுக்கு டிரிங்க்ஸ், மற்றும் வேண்டியதை வழங்க இரு ஆண்கள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தனர்.

உட்கார்ந்து குடித்துக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் வயது நாற்பதுக்கு மேல் இருக்கலாம். ஒவ்வொருவரும் வசதியானவர்களாக தோற்றமளித்தனர். அவர்கள் வந்த கார்கள் சற்று தொலைவில் மறைவாக நிறுத்தப்பட்டிருந்தன. அவர்களை ஏற்றி வந்த கார் டிரைவர்கள் தனியாக ஒரு இடத்தில் குழுமி இவர்கள் நடத்தும் கூத்துக்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.

கூடியிருந்தவர்களில் ஒரு சிலர் “பிசினஸ்”பேசிக்கொண்டும், ஒரு சிலர் அவர்கள் அலுவலகத்திலோ, இல்லை வெளியிலோ தென்பட்ட, மற்ற பெண்களின் அங்க லாவண்யங்களை பற்றிய வர்ணனைகளிலும் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்பொழுது அசோக்குமார் அதில் கலந்து கொண்ட ஒரு தொழிலதிபர் அருகில் இருந்த சரவணகுமாரின் பெண்ணை பற்றிய மோசமான கமெண்ட் ஒன்றை அடிக்க சரவணகுமார் பாய்ந்து சென்று அவனை அடிக்க போனார். நல்ல வேளை பக்கத்தில் இருந்த மற்றவர்கள் அவரை தடுத்தி நிறுத்தி அசோக்குமாரிடம் அப்படி பேசக்கூடாது என்று சொல்லி சமாதானப்படுத்தினர்.

சமாதானம் செய்தாலும் சரவணகுமாரின் மனம் ஆறவில்லை. சே..கிளம்பும்போதே வீட்டில் நடந்தது ஞாபகம் வந்தது.


ராதிகா எதிரில் வந்து நின்றதை நிமிர்ந்து பார்த்த சரவணகுமார் மகள் ஏதோ சொல்ல வருகிறாள், என்பதை புரிந்து கொண்டார். என்ன சொல்வாள், அப்பா அந்த பார்ட்டிக்கு போக வேண்டாம் என்பாள், வழக்கம்போலத்தானே, கொஞ்சம் அலட்சியமாய் தோளை குலுக்கினார்..

அப்பா ம்..ம்..

சொல், மேற் கொண்டு தொடர சிக்னல் தந்தார்.

நீங்க அந்த அசோக்குமார்கிட்டே சேர்ந்து ரொம்ப தண்ணி அடிக்க ஆரம்பிச்சுட்டீங்க, குற்றம் சாட்டும் தோரணையில் சொன்னாள்.

அம்மா ‘பிசினஸ்’ அப்படீன்னா ஆயிரம் பேர் கூட பழகறதுதாம்மா, அப்ப நல்லவன் கெட்டவன்னு பார்க்க முடியுமா?

நீங்க ‘பிசினசுல’ பார்க்க வேண்டாம், ஆனா அவனோட நோக்கம் மட்டும் வேற மாதிரி இருக்கு, அது மட்டுமில்லை, இப்ப அடிக்கடி நீங்க மயக்கம் போட்டு விழுந்துடறீங்க, உங்களுக்கு என்ன நடக்குதுன்னே தெரிய மாட்டேங்குது, அம்மாவுக்கும் எனக்கும் பயமா இருக்கு, கொஞ்சம் புரிஞ்சுக்குங்க, மகள் தன் மீது வைத்திருக்கும் பாசத்தில் கூறுவது இவருக்கு புரிகிறது. ஆனால் மனசு கேடக மாட்டெனென்கிறதே.

சரிம்மா இன்னையோட ‘லாஸ்ட்’, இந்த ஒரு டைம் மட்டும் அலவ் பண்ணுங்க, இனிமேல் கண்ட்ரோலா இருக்க முயற்சி பண்ணறேன், மகளின் தாடையை செல்லமாய் கொஞ்சி விட்டு காரை நோக்கி நடந்தார்.

தயாராய் நின்ற ஓட்டுநரை வேண்டாமென்று சொல்லி விட்டு இவரே காரை எடுக்க உட்கார்ந்தார். பார்த்துக் கொண்டிருந்த ராதிகா வேகமாக வந்து அப்பா சொல்றதை கேளுங்க, ராமையாவை கூட்டிட்டு போங்க, அவரு உங்களை பத்திரமா கூட்டிட்டு வந்துடுவாரு, சொல்ல சொல்ல பை..பை.. சீரியோ..கிண்டலாய் சொல்லிக்கொண்டே காரை அவர்கள் காம்பவுண்ட் கேட்டை தாண்டி பறந்தார். அவர் செல்வதை கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ராதிகா.

அந்த அசோக் குமார் எவ்வளவு மோசமானவன் என்பது இவளுக்கு தெரிந்தது. அவனது கண் தன் மீதுதான் என்பதும், அதன் பின் இந்த சொத்துக்கள் அவன் கைக்கு தானாக வந்து விழுந்து விடும் என்று கணக்கு போட்டு கொண்டிருக்கிறான். அதனால் சரவணகுமாரை தண்ணீரில் கவிழ்க்க திட்டம் தீட்டி செயல்படுகிறான்.

அசோக்குமாரின் மனமும் ஆறாமல் பொருமிக் கொண்டிருந்தது, என்னையவே அடிக்க வர்றியா? இரு இரு கறுவினான். கொஞ்சம் கொஞ்சமாய் போதை உலகத்துக்குள் அங்குள்ளவர்கள் சென்று சுற்றி என்ன் நடக்கிறது என்பதை கூட அறியாமல் அங்கிருந்த டேபிளின் மேலேயே கவிழ்ந்து கொண்டவர்களும் சிலர்.

நல்ல போதையில் இருந்த சரவணமார் இயற்கை உபாதைக்காக தடுமாறி எழுந்து தள்ளாடி தள்ளாடி புதர் மறைவை நோக்கி நடக்க, அரையே குரோதமாய் பார்த்து கொண்டிருந்த அசோக்குமார் சட்டென எழுந்து அவரை பின் தொடர்ந்தான்.

இயற்கை உபாதையை முடித்து அந்த புதரிலிருந்து வெளியே வந்த சரவணகுமாரின் எதிரில் வந்து நின்ற அசோக் குமார் அவரது சட்டையை பிடித்து உலுக்கினான். திடீரென்று வந்த இந்த தாக்குதலை எதிர்பார்க்காத சரவணகுமார் நெஞ்சை பிடித்துக் கொண்டு அப்படியே மடங்கி கீழே விழுந்தார். .

பயந்து போன அசோக் குமார் குனிந்து அவர் மூக்கின் அருகில் கையை கொண்டு போக அதில் எந்த சலன்மும் தெரியாததால் அப்படியே நிலை குலைந்து நின்றான். அவனது போதை முழுவதும் இறங்கி போயிருந்தது. பத்து நிமிடம் என்ன செய்வது என்று விழித்து நின்று கொண்டிருந்தவன் ஞாபகம் வர அந்த ஏரியாவின் தாதாவான பக்கிரியை செல் போனில் அழைத்தான்.

நீ ஒண்ணும் கவலைப்படாதே வாத்யாரே நானே அங்க வாறேன்.

பத்து நிமிடத்துக்குள் அவன் அங்கிருக்க அந்த புதருக்குள் இருவரும் பேசி முடித்து அசோக்குமாரின் கம்பெனி பின்புறம் புதைத்து விடலாம், முடிவு செய்தவுடன் சத்தமில்லாமல் சரவணகுமாரை தூக்கி அவன் வந்த காரின் டிக்கிக்குள் திணித்து அசோக்குமாரின் கம்பெனியை நோக்கி செலுத்த ஆரம்பித்தான். அதற்குள் அசோக் குமாரிடம் சொல்லி அவனது இரு ஆட்களை கேட் வாட்ச்மேனிடம் உள்ளே அனுப்ப அனுமதிக்கும்படி சொன்னான். வாட்ச்மேன் கேட்டால் “கம்பெனி பிளம்பர்” வேலை செய்ய அனுப்புவதாக சொல்ல, சொன்னான்.

பக்கிரி காரை கம்பெனி வாட்ச்மேன் முதலாளி சொல்லியிருந்தபடி உள்ளே அனுமதித்தான். கார் உள்ளே வந்து நின்றவுடன் இறங்கிய பக்கிரி கேட் வாட்ச்மேன் என்ன செய்கிறான் என்பதை பார்த்தான் அவன் இவனை உள்ளே விட்டு விட்டு அறைக்குள் சென்று உட்காருவது தெரிந்தது. அதற்குள் சத்தம் கேட்டு வெளியே வந்த இருவரும் பக்கிரியிடம் சென்றனர்.

என்னடா குழி ரெடி பண்ணிட்டீங்களா? பண்ணியாச்சுங்க, சரி வாங்க பாடி இதுக்குள்ளேயே இருக்கட்டும், முதல்ல குழி போதுமான்னு பாத்துடுவோம், நாளைக் காலையில எவனுக்கு சந்தேகம் வராத இடத்துலதான் நோண்டினீங்களா? கேட்டுக் கொண்டே. பின்புறம் நடந்து வந்தனர்.

அவர்கள் செல்லவும் கார் டிக்கி மெல்ல திறந்து தள்ளாடிக்கொண்டு ஒருவர் வெளி வருவதை மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ரகுவுக்கு சட்டென உண்மை புரிபட ஆரம்பித்தது. இப்பொழுது அவர்கள் வந்து விட்டால் அவரை முடித்து விடுவார்கள், வேகமாய் வெளியே வந்து மட மடவென கீழே இறங்கியவன் தள்ளாடிக்கொண்டு நின்றவரை அப்படியே தர தரவென இழுந்துக்கொண்டு மேலே விரைந்தான். அவர் தடுமாறவும் சட்டென தன் தோளில் போட்டுக்கொண்டு அந்த படி வழியாக மேலேறி தனது அறைக்குள் கொண்டு சென்று அப்படியே கட்டிலடியில் படுக்க வைத்தான். அவர் படுக்க இடம் கிடைக்கவும் மீண்டும் மயக்க நிலைக்கு போனார்.

மறுபடி பேச்சு சத்தம் கேட்க இவன் சன்னல் ஓரம் நின்று நடப்பதை பார்த்தான். வந்து நின்ற மூவரும் ஆச்சர்யத்துடன் என்னடா பாடியை காணோம்? பக்கிரி ஆச்சர்யத்துடன் கேட்க? கார் டிக்கியை மீண்டும் சோதித்து பார்த்தான்.

பாஸ் நீங்க பாடியை எடுத்து வந்தீங்களா? அவனின் சந்தேகத்திற்கு எரிச்சலுடன் பதில் சொன்னான் பக்கிரி ஏண்டா நான்தாண்டா தூக்கி டிக்கியில போட்டேன், அப்புறம் எப்படி காணாம போகும். ஏண்டா நாம மூணு பேரும் இங்கிருந்து போகும்போது டிக்கி திறந்திருந்துச்சா? இந்த கேள்விக்கு இருவரும் குழப்பமான பதிலை சொன்னார்கள். ஒருவன் ஆமாம் என்றான், இன்னொருவன் இல்லை என்றான், ஆக மொத்தம் பாடிய காணோம், வழியில விழுந்திருக்கலாம், இல்லையின்னா அவன் எழுந்து தப்பிச்சிருக்கலாம். எதுக்கும் இங்க எல்லா இடத்துலயும் தேடுங்கடா?

அவர்கள் பரபரப்பாய் தேட தேட ரகுவரனுக்கு வயிறெல்லாம் கலங்க ஆரம்பித்தது, அப்படியே தேடிக்கொண்டு மேலே வந்தால் என்ன செய்வது? இந்த ஆள் மட்டுமல்ல, நான் இங்கிருப்பது கூட இவர்களுக்கு தெரிந்து அந்த குழியில் என்னையும் சேர்த்து புதைத்து விடுவார்களே, பயத்துடன் அப்படியே பதுங்கி உட்கார்ந்தான்.

அவர்கள் சுற்றும் முற்றும் தேடுவது இவனுக்கு கேட்டுக்கொண்டே இருக்க மனசு படக் படக்கென எப்பொழுது வேண்டுமானாலும் அவர்கள் இங்கு வந்து விடலாம், என்று எதிர்பார்த்து காத்திருந்தான்.

முக்கால் மணி நேரம் கழிந்திருக்கும், பாஸ் எனக்கென்னவோ பாடி தவறி நீங்க வந்த வழியில விழுந்திருக்க வாய்ப்பு இருக்குன்னு தோணுது, வாங்க வெளியே போய் பார்த்துட்டு வந்துடலாம், இப்ப அசோக்குமாருக்கு என்னடா சொல்றது? ஒண்ணும் சொல்ல வேண்டாம் பாஸ், பாடி கிடைக்கலியின்னா கூட அப்படியே விட்டுடுங்க, ஒண்ணும் பேச வேண்டாம், அவர்கள் பேசிக்கொண்டே காரை கிளப்பும் சத்தம் கேட்ட்து.

கொஞ்சம் தைரியமாய் எழுந்து சன்னல் வழியாக எட்டி பார்த்த ரகுவரன் அவர்கள் மூவருமே கிளம்பியதை உறுதி செய்தவன், கட்டிலின் அடியில் படுத்திருந்தவரை உலுக்க ஆரம்பித்தான்.

பத்து நிமிடத்துக்குள் சிணுங்கலுடன் விழித்த சரவணகுமாரின் கன்னத்தை தட்டி விழிப்பு வர முயற்சி செய்தான். அவரிடம் மெல்ல சூழ்நிலையை விளக்கினான்.

இருவரும் மெல்ல நடந்து கேட் அருகில் நின்றனர். வாட்ச்மேன் இப்பொழுது உட்கார்ந்த நிலையில் உறக்கத்திற்கு சென்றிருந்தான். கால் பாதம் பதியாமல் இருவரும் அவனை தாண்டி வெளியே வந்தவர்கள் அந்த இடத்தை விட்டு வேகமாய் நடக்க ஆரம்பித்தனர்.

அரை மணி நேரம் நடந்தவர்கள் எதிரில் ஒரு ஹெட் லைட் வெளிச்சம் தொலைவில் தெரிய பாதைக்கு பக்கத்தில் இருந்த புதரொன்றில் அப்படியே குனிந்து உட்கார்ந்தனர்.

கார் ஒன்று அவர்களை கடந்து செல்வதை பார்த்தவுடன் ரகுவரன் புரிந்து கொண்டான். இது அவர்கள் வந்த கார்தான், வழியில் தேடி பார்த்து மறுபடி கம்பெனிக்குள்தான் இருக்கவேண்டும் என்ற முடிவுடன் வருகிறார்கள். அநேகமாக மேலே வரைக்கும் இந்த முறை தேடுவார்கள். நல்ல வேளை எனது பையையும் தூக்கி கொண்டு வந்தது, கார் அவர்களை தாண்டி சென்றும் பத்து நிமிடம் அப்படியே உட்கார்ந்திருந்தவர்கள், பின் மெல்ல எழுந்து தார் சாலைக்கு வந்து எதிரில் வந்த ஒரு டிராவல்ஸ் வண்டியை கையை காட்டி நிறுத்தினார்கள்.


விடியற்காலை நான்கு மணி அளவில் தடுமாறிக்கொண்டு வரும் சரவணகுமாரை பார்த்து வீட்டு கேட் வாட்ச்மேன் “ஐயா” ஓடி வந்து அவரை தாங்கி கொண்டான். கூட வந்த ரகுவரன் அப்படியே வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாம், இருவரும் தாங்கலாய் வீட்டுக்குள் அழைத்து சென்றனர். ராதிகாவும் அம்மாவும் அதற்குள் சத்தம் கேட்டு வெளியே வந்தவர்கள் இவரின் நிலைமையை பார்த்து பதட்டமடைய..ரகுவரன் கை அமர்த்தி, முதலில் அவரை அமைதியாக படுக்க வையுங்கள், அப்புறம் டாக்டரை கூப்பிடுங்கள்

ஆறு மணிக்கெல்லாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரவணகுமார் ஒன்பது மணி அளவில் மருந்தின் வேகத்தில் ஓரளவு தெளிவு பெற்று விட்டார்.

பக்கத்தில் இருந்த ராதிகாவின் அம்மாவிடம் அந்த பையனை கூப்பிடு, சொன்னவரிடம் எந்த பையன் சற்று யோசித்த அம்மாவை முறைத்து ஏம்மா அப்பா கூட வந்தவரை மறந்துட்டியா? சொல்லிக்கொண்டே ராதிகா வெளியே வந்தவள் அங்கு நாற்காலியில் உட்கார்ந்திருந்த ரகுவரனை “அப்பா உங்களை அழைக்கிறார்” உள்ளே கூட்டி சென்றாள்.

ராதிகாவை பார்த்து அம்மா இந்த பையனை நம்ம அவுட் ஹவுசுக்குள்ள தங்க சொல்லிடு. நான் நாளைக்கு வந்த பின்னால் இவனை பத்தி விசாரிச்சுக்கலாம், சரியா தம்பி, இப்ப கார்ல போய் இவங்க காட்டுற அறையில நல்லா ரெஸ்ட் எடு, ரொம்ப கஷ்டப்பட்டு என்னை காப்பாத்தி கூட்டிட்டு வந்திருக்கே. அதனால இன்னைக்கு பூரா ரெஸ்ட் எடு நாளைக்கு நானும் ரெடியாயிடுவேன், நீயும் ரெடியாயிடு, மத்ததை நாளைக்கு பேசிக்கலாம்.

ஒரு மாதம் ஓடியிருந்தது, ரகுவரன் வீட்டில் அவனது முதல் சம்பளத்தை அப்பாவின் வங்கி கணக்கில் போட்டிருக்கிறான், அதை எடுத்து வந்து சாமி முன்னல் வைத்து கும்பிட்டார்கள். அப்பொழுது செல்போன் அழைக்க அப்பா பணம் வந்துதா? அதுல அம்மாவுக்கும், அக்காவுக்கும் ஒரு சேலை எடுத்துடுங்க…

மகனின் குரல் இவருக்கு மகிழ்ச்சியை தர உனக்கு செலவுக்கில்லாம எல்லாத்தையும் அனுப்பிச்சிட்டியா? கவலையுடன் கேட்டார்.

அப்பா எனக்கு எல்லா செலவும் எங்க முதலாளியே பார்த்துக்கறாரு, நான் இப்ப அவருக்கு பையன் மாதிரி, அவரோட ‘பர்சனல் செகரெட்டரி’, அதனால என்னைய பத்தி கவலைப்படாம நீங்க சந்தோசமா இருங்க.. சொன்னவனிடம்

அந்த நிர்மல் இண்டஸ்ரியல் முதலாளி வீட்டுலயா?.

இல்லை ராதிகா புராடக்ட்ஸ், இண்டஸ்ட்ரியல் கம்பெனி முதலாளி வீட்டுல.

அப்ப நீ வேலைக்கு போன கம்பெனி? அது பெரிய கதை வந்து சொல்றேன், போனை அணைத்தான்.

Print Friendly, PDF & Email
பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *