விரல்கள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: February 24, 2022
பார்வையிட்டோர்: 18,248 
 

இந்தக் கதையை எழுதி பனிரெண்டு வருடங்களாகிறது (13 -11 – 1999). நிரஞ்சனா என்ற மாதத்திற்கு இரண்டு பிரதிகள் மட்டுமே விற்கிற சிற்றிதழ் ஒன்றில் வெளிவந்து நான் மட்டுமே அதை அச்சில் வாசித்தேன். அச்சாவதற்கு முன் அதன் ஆசிரியர். வாசித்த காலத்தில் சுஜாதாவின் நூல்களை காய்ந்த மாடு போல் மேய்ந்து கொண்டிருந்தேன். அந்த பாதிப்பு கதையில் வெளிப்படையாகவே தெரிகிறது.

***

பெண்கள் இல்லாத கதை.

ஆனாலும் கதைக்குக் காரணம் ஒரு பெண்.

அன்புள்ள அப்பாவுக்கு,
நான் இங்கு நலமாய் வந்து சேர்ந்தேன். இன்னும் மூன்று நாட்கள் கழித்துதான் கல்லூரி ஆரம்பமாகும். ரூமில் தனியாக இருப்பது வெறுப்பாக இருக்கிறது. நீங்கள் எனக்கு வாங்கித் தந்த ஒரு பவுன் மோதிரத்தை நான் விட்டு விட்டு வந்து விட்டேன். அது என் விரலுக்கு லூசாக இருக்கிறது. அதை மாற்றி வைக்கவும்…

வாயிலில் காலை வைத்ததும் கலவரம், தவிப்பு, எதிர்பார்ப்பு, குதூகலம் என்று ஒருவித கலவையான குழப்பங்கள் வந்து தமிழ்ச் செல்வனின் காலியான வயிற்றில் அப்பிக் கொண்டன. சூரியன் கதகதப்பாய் மேலெழும்பிக் கொண்டிருந்தது. இங்கிருந்து பார்த்தால் இரண்டு குருவிகள் மட்டும் அசோகமரத்திலிருந்து என்னமோ ரகசியம் பேசிவிட்டுப் பிரிந்து கொண்டிருந்தன. வழியெங்கும் பெயர் தெரியாத மரங்கள் மலர்களை உதிர்த்திருந்தன. அவற்றில் பனித்துளிகள். ரொம்ப முன்னதாகவே வந்து விட்டோமோ என்று நினைத்துக் கொண்டான்.

உள்ளே போய் கிளாஸ் தேடி உட்கார்ந்து விடலாமா, இல்லை ஒன்பதரை மணிக்கு மேல் போகலாமா என்பதில் அவனுக்குக் குழப்பமிருந்தது. தலை நிமிர்த்திப் பார்த்தபோது உலோக எழுத்துக்கள் பளிச்சிட்டன. ‘நாலு வருடங்கள்…நாலு வருடங்கள் இனி இங்குதான் என் வாழ்க்கை.

சரேலென்று இரண்டு, மூன்று டூ வீலர்கள் உள்ளே நுழைந்து இவனைக் கடந்ததை இவன் கவனிக்கவில்லை. வளாகத்தின் பாதி தூரத்திலேயே அவை நின்றன. ஜெர்கின் அணிந்த ஒருவன் சுட்டு விரலால் இவனை அழைத்தான்.

“ந்யூ அட்மிஷன்?”

“ம்!”

“கம் டு பிரம்மபுத்ரா அவென்யூ.”

நான்கு பேர்களும் அசம்பாவிதமாய் டெஸ்குகளின் மேல் அமர்ந்து கொண்டார்கள். இவன் நடுவில். ஒருத்தன் மூக்கின் மேல் மரு இருந்ததை கவனித்தான்.

“பாடத் தெரியுமா?”

“ம்ஹூம்”

“ஆட?”

“இல்லை.”

“இது தெரியுமா?” என்று அவன் காட்டிய செய்கைக்கு அவர்கள் கோரஸாகச் சிரித்தார்கள். டிஃபன் பாக்ஸில் தண்ணீர் ஊற்றி அவன் தலையில் வைத்து, “டான்ஸ் ஆடு! கரகம். தமிழ்நாடுதான நீ?”
இவன் மெலிதாய் மறுக்க,

“ஸிப்பைக் கழட்டு” என்றான் மற்றொருவன்..

“என்ன?” என்றான் புரியாமல்.

ஸிப்பைக் கழட்டு என்றவன் கையில் வயர் வைத்திருந்தான். அதை பிளக்கில் செருகி, வயரை டிஃபன் பாக்ஸ் தண்ணீரில் போட்டு, “இதில் நீ ஓண்ணுக்கடி” என்றான்.

இவனுடைய மறுப்பை யாரு சட்டை செய்யவில்லை. இரண்டு பேர் இவன் கையைப் பிடித்துக் கொள்ள ஒருத்தன் ஸிப்பைக் கழட்டினான். இன்னொருத்தன், “நாயக்கு நஹி! கல்நாயக்கு ஹூ மே!” என்று முரட்டுக் குரலில் பாடினான். தமிழ்ச் செல்வன் வலுக்கட்டாயமாய் சிறுநீர் கழித்தான். சுளீரென்று ஷாக் அடித்தது. நிறுத்திக் கொண்டான். கண்ணீர் சிந்தினான்.

அரவம் கேட்டுத் திரும்பினார்கள். வாசலில் இன்னொருத்தன் நின்றிருந்தான்.

“கம் ஷ்யாம். கம் ஜாய்ன் அஸ் இன் த ராகிங் பார்ட்டி.”

அவன் கவனிக்காமல் இவனிடம், “மேஜர்?” என்றான்.

“கெமிக்கல் என்ஜினியரிங்.”

அவனை வெளியே நிற்கும்படிச் சைகை செய்து விட்டு, இவர்களின் அநாகரிகமான நடத்தைக்கு இவர்களிடம் இரைந்தான். ஆங்கிலத்தில் கடுமையான பதங்கள். அவர்கள் பணிந்ததில் இருந்து அவன் பெரிய ஆள் என்று தெரிந்தது.

வெளியே வந்து இவனைப் பார்த்து ஸ்நேகமாய்ப் புண்ணகைத்து, “இன்னைக்குக் கிளாஸ் போகாதே! நாள் முழுக்க இதே அனுபவம்தான் வரும் உனக்கு. என் கூட வா! ரிலாக்ஸ்! வண்டில ஏறு!” என்றான்.

இவன் அவனைப் பத்து செகண்டு நன்றிப் பார்வை பார்த்து விட்டு ஏறிக் கொண்டான்.

“காஃபி?” என்றான். அவன் அறையில் ஓஷோ பெரிய சைஸில் தொங்கிக் கொண்டிருந்தார். அறையில் மெல்லிய டியூப்லைட் வெளிச்சம். அலமாரியில் டால்ஸ்டாய், ஓ. ஹென்றி, சிக்மண்ட் ஃப்ராய்ட்…

உள்ளே காஃபி தயாரித்தலில் தேர்ந்தவன் போல, சத்தம் எதுவும் வரவில்லை. ‘ஷ்யாம்! இவனை எப்படி நான் அழைப்பது? மெலிந்த தேகமாய், கண்களில் முதிர்ச்சியோடு இருக்கிறான். ஷ்யாம் என்றே அழைக்கலாமா? சின்ன வயதில் கிணற்றில் விழுந்து செத்துப் போன அண்ணாவின் சாயல் சற்றே இவனிடம் தெரிகிறது.

காஃபியைக் கொடுத்து விட்டு அவன் அருந்துவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். “எனக்கு இது.” என்று ஆப்பிள் ஒன்றை மெல்லிய கத்தியால் நறுக்கி வாயில் போட்டுக் கொண்டான்.

“எங்கே உன் கையைக் கொடு!” என்றான். தமிழ்ச்செல்வன் கை நீட்ட அதை மென்மையாய்ப் பற்றி வருடினான். அவன் கண்களில் சின்னதாய் ஒரு மின்னல் தோன்றியதைக் கவனித்தான்.

“நிஹ்லானியின் விரல்கள் இப்படித்தான் இருக்கும்.” என்றான்.

“யார் அது?”

“கீதா நிஹ்லானி. செத்துப் போய்விட்டாள். மூன்றாவது மாடியில் கெமிஸ்ட்ரி லாபிலிருந்து குதித்து, இரண்டாயிரம் பேரைச் சாட்சி வைத்துக் கொண்டு செத்துப் போய் விட்டாள்”.

காதல் போலும். இவனுக்கு வருத்தமாக, “ஸாரி. “என்றான்.

திரும்பவும், “நிஹ்லானியின் விரல்கள் இப்படித்தான் இருக்கும்” என்றான். “நீ பார்த்தால் அந்த விரல்களுக்காக உலகையே எழுதி வைப்பாய். பார்க்கிறாயா?” என்றான்.

அவனுடைய கேள்வி புரியவில்லை. ஓர் அவசர அவஸ்தை வயிற்றிலிருந்து சுழலாய்ப் பிறந்து மூளைக்குள் புயலடித்தது. கோயமுத்தூரிலிருக்கும் அப்பாவின் ஞாபகம் வந்தது. ‘அப்பா, நான் எழுதின கடிதம் வந்து சேர்ந்ததா? இவனோடு பிளஸ் டூ படித்த பெண், நான்தான் நிஹ்லானி. என் விரல்களைப் பார் என்றாள். ‘காஃபியின் சுவை சற்று வித்தியாசமாக இருந்ததே! வரும்போது ரூமில் புத்தகங்களைச் சரியாக அடுக்கி விட்டு வந்தேனா? எதற்கு இப்படி இருட்டிக் கொண்டு வருகிறது?’.

நழுவும் நினைவுகளை உதறிச் சுதாரித்தபோது எதிரே ஷ்யாம் ஒரு பாட்டிலோடு புன்னகைத்தான். “பாரு! பாரு!” என்றான். பாட்டிலின் உள்ளே ஃபார்மலினில் மிதந்த விரல்கள்…விரல்கள்.

ஷ்யாம் தமிழ்ச்செல்வனின் தொய்ந்து போன கையை எடுத்து அதன் உள்ளங்கை வியர்வையைத் துடைத்தான். ஆப்பிள் நறுக்கிய கத்தி பளபளப்பாக சுத்தமாக இருந்தது. கையை மைக்கா டேபிளில் வைத்து, ஒரு தேர்ந்த கலைஞனின் கவனத்தோடு விரல்களை நறுக்க ஆரம்பித்தான்.

– ஜனவரி 2012

Print Friendly, PDF & Email

கொலைக் கணக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2023

விமான நிலையம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2023

1 thought on “விரல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)