வன்மம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: August 9, 2013
பார்வையிட்டோர்: 15,700 
 
 

எங்கள் பண்ணையிலிருந்து ஆடு ஒன்று காணாமற் போய்விட்டது! எங்கள் என்று சொன்னால், அது எனக்கோ எங்கள் குடும்பத்தினர் யாருக்குமோ சொந்தமானது என்று அர்த்தமல்ல. நான் பண்ணையில் பத்துப் பன்னிரண்டு வருடங்களாக வேலை செய்பவன்… மனேஜர் உத்தியோகம். அந்த வகையிற்தான் அது எங்கள் பண்ணை. இங்கு நிரந்தரமாகப் பணி புரியும் இருபத்தைந்து தொழிலாளர்களைப் பொறுத்தவரையிலும் அது ‘எங்கள் பண்ணை’தான். அந்த அளவிற்குப் பண்ணையில் ஈடுபாட்டுடன் வேலை செய்வார்கள். ஆனால் பண்ணை தனியார் ஒருவருக்குச் சொந்தமானது.

மனிதர்கள் யாராவது காணாமற் போனால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை! அவருக்கு என்ன நடந்திருக்கும் என ஓரளவிற்கு ஊகிக்கலாம். ஓரளவிற்கு என்ன… நிச்சயமாகவே ஊகிக்கக் கூடியதாயிருக்கும். ஆனால் பண்ணையுள்ளிருந்து ஆடு ஒன்று காணாமற் போவதென்பது நம்பமுடியாததாயிருந்தது. சுமார் நூறு ஏக்கர் பரப்பளவிலான பண்ணையைச் சுற்றவர முட்கம்பி வேலி போடப்பட்டிருக்கிறது. மேய்ச்சலுக்காக ஆடுகள் இந்த இடங்களைச் சுற்றி வந்தாலும் எந்த ஆட்டுக்கும் அந்த முள் வேலியைத் தாண்டிச் செல்லும் வாய்ப்பு இல்லை. மனிதர்களைப்போல ஆடுகள் ஒன்றை விட்டு ஒன்று வேறு வேறு பாதையிற் பிரிந்து செல்பவையுமல்ல!

மஹ்றூப் இருந்தவரை எல்லாம் ஒழுங்காக இருந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

அன்றாடம் காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்காகப் பட்டியிலிருந்து திறந்து மேய்ச்சல்காரப் பையனிடம் ஒப்படைக்கும்போது, அவற்றைக் கணக்கெடுத்துக்கொண்டு விடுபவர் மஹ்றூப். பண்ணையிலுள்ள மாடுகளைப் பராமரிப்பதற்கென்று நியமிக்கப்பட்டவர்தான் அவர். வயதில் மூத்தவர். மாடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டுபோவது, மாட்டுத் தொழுவங்களைத் துப்பரவு செய்வது, மாடுகளைக் குளிப்பாட்டுவது, பால் கறப்பது போன்ற வேலைகளுக்குப் பொறுப்பானவர். எனினும் ஆடுகளைக் கவனித்துப் பராமரிக்கும் வேலைகளையும் தானாகவே எடுத்துக்கொண்டார்.

ஆட்டுப்பட்டியின் கதவை ஓரளவுக்கு மட்டும் நீக்கி, ஒவ்வொரு ஆடுகளாக வெளியே விடுவார். அவை ஒன்றன் பின் ஒன்றாக ஒழுங்கு முறைப்படி வெளியேறிப் போகும்போது அவற்றை ஒவ்வொன்றாக எண்ணிக் கணக்கெடுத்துக் கொள்வார். மாலையில் திரும்பவும் அவ்வாறே உள்நுழைய விடுவார். சுமார் இருநூறு முன்னூறு ஆடுகள் உள்ள பண்ணையில், இந்த வேலையைத் தினமும் சலிக்காமல் செய்கிறாரே என்று தோன்றும். குட்டி ஈன்ற ஆடுகளையும் குட்டிகளையும் வெளியே விடுவதில்லை. அவற்றுக்குத் தேவையான இலை குழைகளை நேரத்துக்கு நேரம் போட்டு, கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்வார். குட்டிகளைத் தடவிக் கொடுத்து, பால் குறைந்த ஆட்டின் குட்டிகளுக்குப் புட்டிகளிற் பாலூட்டி, பிள்ளைகளைப் போலப் பார்த்துக்கொள்வார். மிருகங்களிடம் மிகவும் பரிவு கொண்டவர். தனது வேலைநேரம் முடிந்தாலும், பொழுதுபட்டாலும் பட்டி தொட்டிகளெல்லாம் பார்த்து வேலைகளை முடித்து ஒழுங்கு செய்துவிட்டுத்தான் போவார். அவரது வீடும் பண்ணையிலிருந்து கூப்பிடு தூரத்திற்தான் இருந்தது.

மஹ்றூப் ஆடு மாடுகளைப் பரிவுடன் பராமரித்து வந்ததுபோலவே, அவையும் அவர் சொன்னபடி கேட்கும் அன்பைக் கொண்டிருந்தன.

ஆனால் பண்ணையிலிருந்த ஒரே ஒரு காளைமாடு மட்டும் அவர்மேல் வன்மம் கொண்டிருந்தது. அந்த மிருகத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகக் கஷ்டம். அதன் குழப்படிகள் தாங்காது எந்த நேரமும் அதைக் கட்டிலேதான் போட்டிருப்பார் மஹ்றூப். சில வேளைகளில் அடியும் போட்டு அதை அடக்கவேண்டியிருக்கும். பசுமாடுகளை, அவற்றின் தேகத்தை உரஞ்சிக் கழுவிக் குளிப்பாட்டும்போதும் அவற்றில் அவர் பால் கறக்கும்போதும், அந்தக் காளை கட்டிலிருந்தபடியே கோபத்துடன் அவரைப் பார்த்துக்கொண்டிருக்கும். வேகமாக மூசி மூசி… கால்களை நிலத்தில் உதைத்தும் பிறாண்டியும் தனது சீற்றத்தைக் காட்டும்.

வழக்கம்போல ஒருநாட் காலையில் ஒவ்வொரு பசுக்களாகத் தொழுவத்திலிருந்து வெளியே கொண்டுவந்து கட்டி, பால் கறக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார் மஹ்றூப். காளைமாடு பெரும் மூச்செடுத்து ஒரு இழுவை இழுத்தது. கட்டு அறுந்துவிட்டது! அவ்வளவுதான்… ஒரே பாய்ச்சலில் வந்தது காளை. அதைக் கண்டு மஹ்றூப் பதகழித்து எழுந்து ஓடுவதற்கு முற்பட்டார். அவரைத் தூக்கி எறிவதற்குக் காளைக்கு ஒரு நேரம் தேவைப்படவில்லை. தனது கோபத்தையெல்லாம் கொம்புக்குக் கூட்டி தலையை உன்னி ஒரே இடி! இடுப்பில் விழுந்தது இடி. பால் வாளி தரையிற் சிதற… மஹ்றூப் முகம் குப்புற விழுந்தார். அவரது இடுப்பு முறிந்துவிட்டது. அதனால் அவரது பணியும் போய்விட்டது!

காலையில் நான் பண்ணைக்கு வந்ததுமே, ஆடு காணாமற் போன செய்தியைக் கொண்டுவந்தவன் காசிம். நான் அந்தத் தகவலுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவசரக்காரன்… சரியாகக் கணக்கெடுத்திருக்கமாட்டான் என்றே தோன்றியது. காசிம் மஹ்றூப்பைப்போல அக்குரேட் ஆன ஆளும் அல்ல. பண்ணையில் மெக்கானிக் ஆக வேலை பார்ப்பவன். ட்றைக்டரும் ஓடுவான். மஹ்றூப் போனபின்னர் ஆடுகளைக் கணக்கெடுக்கும் வேலையையும் செய்து வருபவன்.

“காசிம்… நீங்க சரியாய் செக் பண்ணியிருக்கமாட்டீங்க.. இன்னொரு தடவ பாருங்க..!”

“நல்லாப் பாத்திட்டன் சேர்… காணாமற்போனது.. அந்த பெரிய கறுப்புக் கிடாய்;..”

“அப்பிடியா..?” – ஆடு காணாமற் போனதன் முக்கியத்துவம் அப்போதுதான் எனக்கு உறைத்தது. பல இன ஆடுகள் உள்ள பட்டியில் அந்த ஆடு இல்லாமற் போனால் இலகுவாகத் தெரிந்துவிடும். அந்தப் பட்டிக்கே அது ராஜாவாக இருந்தது. உயர்ந்த இன ஆடு… கலப்பின உருவாக்கத்திற்காகப் பட்டியில் சேர்க்கப்பட்டிருந்தது. அது காணாமற்போய்விட்டதென்பது பெருத்த நஷ்டம்தான்.

“எங்க போயிருக்கும்..? எல்லா இடமும் தேடிப் பாருங்க..! வேலிக்கம்பியை எங்கையாவது வெட்டியிருக்கிறாங்களா… பாருங்க..!”

பண்ணையின் பின் புறமாக முட்கம்பிவேலியை ஊரவர்கள் அவ்வப்போது வெட்டிவிடுவதுண்டு. விறகு பொறுக்குவதற்கோ, தங்களது ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவதற்கோ உள்ளே வருவார்கள். பண்ணையில் மா, பலா, தோடை, எலுமிச்சை, வாழை, முருங்கை கொய்யா போன்ற மரவகைகள் காய்கனிகளுடன் உள்ளன. ஏனைய காய்;கறிவகைகளும்; பயிர் செய்யப்பட்டுள்ளன. சிலர் அவற்றைக் கையாடுவதற்காகவும் வேலியை வெட்டிவிடுவதுண்டு. இரவில் முயல்வேட்டைக்காகவும் சிலர் உள்ளே வருவார்கள்.

இதற்காக, முள்வேலி ஒழுங்காக இருக்கிறதா அல்லது யாராவது உடைத்துவிடுகிறார்களா என்பதைப் பொழுதெல்லாம் கவனிப்பதற்கென்றே சில பணியாட்கள் இருக்கிறார்கள். அதையும் மீறி அவர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டிக்கொண்டிருப்பார்கள். எனினும் அப்படி வருபவர்கள் யாரும் ஒருபோதும் ஆடு மாடுகளைக் களவு கொண்டுபோனதில்லை.

பகுதி பகுதியாகப் பயிர் செய்யப்பட்டிருந்தாலும் பண்ணையிற் பெரும் பகுதி பற்றைகள் நிறைந்து காணப்படுகிறது. ஆடுகளை மேய்ச்சலுக்காக இந்தப் பகுதிக்குத்தான் கொண்டுசெல்வதுண்டு. பற்றைகளுக்குள் ஆடு சிக்கிக்கொண்டுமிருக்கலாம். அல்லது வேலி வெட்டப்பட்டிருந்தால் ஆடு அதனூடு வெளியே போயிருக்குமோ..? பொதுவாக ஆடுகள் மந்தையை விட்டுப் பிரிந்து போகாதெனினும்… வெளியே வேறு ஒரு மறியை மோப்பம் பிடித்துக்கொண்டு போயுமிருக்கலாம். இது கிடாய்தானே.., மனிதர்களிடமே உள்ள சபலபுத்தி; மிருகசாதிக்கு இல்லாமற்போய்விடும் என்று எப்படி நம்பலாம்?

“போய் பற்றைகளுக்குள்ளயெல்லாம் தேடுங்க.. வெளியில ஊருக்குள்ளயும் போய்ப் பாருங்க..!”

“சேர்..! ஆடு காணாமற் போகயில்ல… களவு போயிட்டிது..!” எனக் கதையைத் திசை திருப்பினான் காசிம்.

இவன் எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறான் என அவனது முகத்தைக் கேள்விக்குறியுடன் பார்த்தேன்.

“களவெடுத்த ஆளையும் எனக்குத் தெரியும்..!”

அது யாரென்று கேட்கமுதலே பெயரையும் கூறினான்.

“இம்தியாஸ்..”

இம்தியாஸ் முன்னர் இந்தப் பண்ணையில் வேலை செய்தவன். மஹ்றூப்பின் மகன். அவனை பண்ணையில் வேலைக்குக் கொண்டுவந்து சேர்த்ததே மஹ்றூப்தான். மற்றவர்களை விட வயதிற் குறைந்தவனானாலும், தனது திறமையாலும் ஆற்றலாலும் சீக்கிரமே மேற்பார்வையாளன் என்ற நிலைக்கு உயர்ந்தவன். அவனது கல்வித் தகமையையும் கருத்திற் கொண்டே அப் பதவி வழங்கப்பட்டிருந்தது. ஏனைய தொழிலாளர்களுக்குரிய பணிகளைக் கொடுத்து, அவர்களை அயரவிடாது வேலை வாங்குவதில் வல்லவன். அவனது உயரமான தோற்றமும் கடும் குரலும் மற்றவர்களை மறுகதை பேசாது சொன்னபடி கேட்கவைக்கும். இதனால் பண்ணையிற் பல காலம் பணியாற்றிய அனுபவமுள்ள காசிம் போன்ற ஒருசிலருக்கு இம்தியாஸ்மீது அதிருப்தியும் ஏற்பட்டிருந்தது. சில சமயங்களில் இம்தியாஸிற்கு எதிராக முறைப்பாடுகளும் கொண்டுவருவார்கள். விசாரித்துப் பார்த்தால்.. அவை அர்த்தம் ஏதுமற்ற சோடிக்கப்பட்ட முறைப்பாடுகளாக இருக்கும். இம்தியாஸின் சுறுசுறுப்பான சுபாவமும் தொழிலாளர்களை வேலையில் ஈடுபடுத்தும் சாதுர்யமும் என்னை ஈர்த்திருந்தன. எனினும் ஒரு சந்தர்ப்பத்தில் அவனை வேலையிலிருந்து இடைநிறுத்தும் நிலைமையும் ஏற்பட்டது.

பண்ணையிலுள்ள தண்ணீர்ப் பம்புகள், ட்றைக்டர், டோசர் போன்ற இயந்திரங்களின் பாவனைக்குத் தேவையான டீசல் பரல்களில் நிரப்பப்பட்டு வைக்கப்பட்டிருக்கும். ஐந்து பரல்களில் ஆயிரம் லீட்டர்வரை கொள்வனவு செய்து கொண்டுவந்து வைத்தால், அன்றாடம் தேவையான டீசலை எடுத்துக்கொண்டு மீதி அளவைக் குறித்து வைப்பவன் காசிம். ஒருநாள்@ டீசல் ஐம்பது லீட்டர் குறைந்திருப்பதாகவும், அதை முதல் நாள் இரவு களவாடியது இம்தியாஸ்தான் எனவும் முறையிட்டான். விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இம்தியாஸிற்குத் தெரியாமல் டீசல் வெளியே போயிருக்காது.. கான்களில் டீசலை நிரப்பி, பிக்அப் வாகனத்தில் இரவு கொண்டு சென்றிருக்கிறான் என காசிம் தெரிவித்தான். தேவை கருதி அவன் வீட்டுக்குப் போய்வரலாமாயினும், மேற்பார்வையாளன் என்ற ரீதியில் அவனது தொழில் ஒப்பந்தப்படி பண்ணையில் வதிவிடம் கொடுக்கப்பட்டிருந்தது. இரவிலும் அவன் பண்ணையிற் தங்கியிருக்கவேண்டும். இரவுக் காவலாளியிடம் விசாரித்ததில்@ பண்ணையின் ஏனைய பகுதிகளை.. தான் ஒரு சுற்று வந்த நேரத்தில் பிக்அப் வாகனம் வெளியே போய் வந்தது எனத் தெரிவித்தான். குற்றம் சரியாக நிரூபிக்கப்படவில்லை. எனினும் இதற்குப் பொறுப்பான பதில் இம்தியாசிடமிருந்து கிடைக்காததால் அவனே பொறுப்பேற்கவேண்டுமென வேலையிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தினேன்.

மகனை வேலையிலிருந்து நீக்கியபோது, மஹ்றூப் மிகவும் கவலையடைந்தார்.

“அவன் களவு செய்யிற ஆளில்ல.. நான் அந்தமாதிரிப் புள்ள வளக்கயில்ல..”

“எனக்குத் தெரியும்.. மஹ்றூப்… கொஞ்ச நாள் பொறுங்க… திரும்ப எடுக்கலாம்..”

“கெட்ட பேர் வந்தது… வந்ததுதானே..”

ஒரு தந்தை என்ற ரீதியில் அவரது கவலை எனக்குப் புரிந்தது.

“விசாரணை செய்து சரியான ஆளைக் கண்டுபிடிச்சிடுவன்.. பொறுமையா இருங்க..!”

இம்தியாஸ் போனபின் மஹ்றூப் அவனது வேலைகளையும் கவனித்துக்கொண்டிருந்தார். இப்போது மஹ்றூப்பும் இல்லாத நிலையில் காசிமுக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.

காசிம் கூறுவதுபோல இம்தியாஸ், ஆடு ஒன்றைக் களவாடும் அளவிற்குக் கீழ் நிலைக்குப் போயிருப்பானா என எண்ணிப் பார்த்தேன். நேர்மையாக உழைத்தவன். காலையில் வரும்போதுகூடக் கவனித்தேன்… எனது வாகனத்தைக் கண்டதும் எழுந்து ஒரு பாவமும் அறியாத தோற்றத்துடன் நின்றான். பண்ணைக்கு நான் வந்து போகும்போது முன்னே உள்ள கடை வாசற்கட்டிலோ வீதிஓர மதகுக்கட்டிலோ அவன் அமர்ந்திருப்பதைக் காணமுடியும். இம்தியாசைப் பற்றிய கவலை என் நெஞ்சிலும் இருந்தது.

“இம்தியாஸ் இப்ப வேலையில இல்லயே… எப்பிடி உள்ள வந்திருப்பான்… எப்பிடி ஆட்டைக் களவெடுத்திருப்பான்?” – காசிமைச் சமாளித்தேன்.

“அதுதான் சேர் காரணம்.. வேலையிலயிருந்து நிப்பாட்டின கோபம்..! ஆடுகளை மேயவிட்டிட்டுப் பொடியன் புளியமரத்துக்குப் பணியப் படுத்திடுவான்.. ஆடுகள் எங்க போகுது.. வருகுது.. ஒண்டும் அவனுக்குத் தெரியாது…. இம்தியாஸ் அந்த நேரம்தான் பின்பக்கமாய் வேலியை வெட்டிக்கொண்டு வந்து ஆட்டைக் கொண்டு போயிருக்கிறான்…!”

“அன்வரை வரச்சொல்லு..!” என்றேன். அவன்தான் ஆடு மேய்க்கும் பையன். காசிம் அவனைக் கையோடு கூட்டிவந்தான்.

அன்வரிடம் கேட்டேன்@ “என்ன நடந்தது..? ஆடு எங்க போச்சுது..?”

அன்வர் கண்கள் பிதுங்கப் பதில் பேசாது நின்றான்.

“சொல்லடா.. இல்லாட்டா தோலை உரிச்சிடுவன்..” – உறுக்கலுடன் அவனது காதைப் பிடித்து முறுக்கினான் காசிம்.

“விடு.. காசிம் விடு.. அவனை..! என்ன நடந்தது சொல்லு அன்வர்..?”

“எனக்குத் தெரியாது சேர்..” – சிணுங்கினான்.

“சொல்லடா… நீ ஆடுகளைப் பாக்கிறனியா.. மரத்தடியில படுக்கிறதுக்குப் போறனியா..? அந்த ஆட்டின்ட விலை என்ன தெரியுமா..? காசைக் கொண்டுவந்து கட்டியிட்டுத்தான் நீ வேலைக்கு வரலாம்.. சொல்லு.! இம்தியாஸ் மத்தியானம் வரயில்லையா..? உனக்குத் தெரியாம நடந்திராது..!” – காசிம் மேலும் அவனை மிரட்டினான்.

அன்வர் அழத்தொடங்கிவிட்டான்.

சிறுவன். பாடசாலைக்குப் போகவேண்டிய வயது. யுத்தக் கொடுமைகளால் சொந்த வீடுகளை விட்டு இடம் பெயர்ந்து வந்து முகாம்களிலும் குடிசைகளிலும் வசித்து, சாப்பாட்டுக்காக வெயில் காய்ந்து வேலை செய்யும் பரிதாபம்.

“சரி.. நீ போ..!” – நான் கூறியதை நம்பாதவன் போல, என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே போனான் அன்வர்.

“காசிம்.. நீங்க போய் வேலையைப் பாருங்க.. நான் விசாரிக்கிறன்..!” என காசிமை அனுப்பிவைத்தேன்.

எனினும் நான் பெரிதாக விசாரணை ஏதும் மேற்கொள்ளவில்லை. ஏனைய தொழிலாளர்களின் நடமாட்டங்களையும் தோரணைகளையும் சற்று உன்னிப்பாக அவதானித்தேன். ஆறப்போட்டால் விஷயம் யார்மூலமாகவோ வெளிவரலாம் என்றும் தோன்றியது. காசிம் மட்டும் கரிசனையுடன் தினம் ஒரு தகவலைக் கொண்டுவந்தான்…

– “இரவு.. அன்வரும் இம்தியாசும் பேசிக்கொண்டிருந்தாங்க.. என்னைக் கண்டிட்டு ஒழிச்சிட்டாங்க.. இவங்கள் ரெண்டு பேருக்கும் கூட்டு இருக்கு..!”

– “ஊருக்குள்ள விசாரிச்சுப் பார்த்தன்.. அண்டைக்கு.. ஒரு ஆடு அடிச்சுப் பங்கு போட்டிருக்கிறாங்கள்..!”

– “பொலிசில சொல்லுங்க சேர்.. அவங்கள் புடிச்சு விசாரிச்சாத்தான் உம்மை தெரியவரும்!”

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கும் இம்தியாசை நிரந்தரமாக வேலையிலிருந்து நீக்குவதற்கு காசிம் திட்டம் போடுகிறானோ என்றும் தோன்றியது. ஒரே பிரதேசத்திலிருந்து யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து வந்து பிழைக்கிறவர்கள்.. பட்டியில் இணைந்திருக்கும் ஆடுகளைப்போல இவர்களால் ஏன்; ஒற்றுமையாக இருக்கமுடியவில்லை எனக் கவலையாயிருந்தது. ஒருவருக்கொருவர் ஏன் இந்த வன்மம்?

அவ்வப்போது ஏதாவது சமாதானம் கூறி அவனைச் சமாளித்துக் கொண்டிருந்தேன். இம்தியாசை மேலும் இம்சைப்படுத்த எனக்குச் சம்மதமில்லை. அவர்களது குடும்ப நிலைமையையும் யோசித்துப் பார்த்தேன். மஹ்றூப்பும் வேலை செய்யமுடியாத நிலையிலிருக்கிறார்..

இத் தருணத்திற்தான் பண்ணை உரிமையாளர் அலெக்ஸ் வருகை தந்திருந்தார். கொழும்பு வாசியான அவர், மாதத்தில் ஓரிரு தடவைகள் வந்து கவனித்துப் போவார். பண்ணையின் வரவு செலவுகள், இலாப நஷ்டங்கள், பிரச்சனைகள் பற்றியெல்லாம் இவ்வேளைகளிற் கலந்தாலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும்.

அவரைக் கண்டால் காசிம் துள்ளிக்கொண்டு நிற்பான். குறுக்கு வழிகளில் எதற்குள்ளும் தலையைச் செலுத்தும் சுபாவம் கொண்டவன். தனக்கு மேலுள்ளவர்களிடம் நல்ல பெயர் எடுப்பதற்காக, அதனால் ஏதும் சலுகைகள் பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறான பலவீனத்தை அவன் கொண்டிருந்தான்;! அது என்னிடத்தில் எடுபடுவதில்லை. ஆனால், அது மிஸ்டர் அலெக்ஸிடம் எடுபட்டுவிட்டது!

“இவ்வளவும் நடந்திருக்கு..! நீங்கள் ஒரு அக்ஷனும் எடுக்கயில்லையா..?”

அந்தக் கேள்விக்கு நான் பதில் கூறாமலிருந்தேன்.

“இப்பிடிச் சும்மா விட்டிட்டிருந்தால்.. எங்களைப் பல் இல்லாதவங்கள் என்றுதான் நினைப்பாங்கள்… இப்ப ஒரு ஆடு போச்சுது.. நாளைக்குப் ஃபாமையே கொள்ளை கொண்டு போயிடுவாங்கள்;.. ஏன் பொலிசில றிப்போர்ட் செய்யயில்ல..?”

“அவன்தான் களவெடுத்ததென்று ஒரு ஆதாரமும் இல்லையே..”

“ஆதாரம் தேவையில்ல.. அவன்தான் என்று சந்தேகம் இருக்குதுதானே..? அது போதும்.. பொலிசில பிடிச்சு உதைச்சு விசாரிச்சால்.. எல்லாம் தெரியவரும்.. எடுங்க வாகனத்தை..!”

நான் மறுபேச்சின்றி கட்டளைக்குட்பட்ட இயந்திர மனிதனைப்போலச் சென்று வாகனத்தை எடுத்தேன். அவர் ஏறிப் பக்கத்தில் அமர்ந்துகொண்டார்.

பண்ணைக்கு வந்து போகும் வேளைகளில் அவர் அண்மையிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சில சந்தோஷங்களும் செய்வதால், அவருக்கு அங்கு நல்ல வரவேற்பு இருந்தது. பொறுப்பதிகாரியிடம் விஷயத்தைக் கூறி, முறைப்பாட்டைக் கொடுக்குமாறு என்னைப் பணித்தார். பொலிஸ்காரர் ஒருவர் முறைப்பாட்டை எழுதிக்கொண்டார். வேறு காரணத்துக்காக பொலிஸ் ஜீப் வெளியே போய்விட்டதாகவும்.. வந்தவுடன் அனுப்பி இம்தியாசைக் கொண்டுவருவதாகவும் கூறினார் நிலையப் பொறுப்பதிகாரி. ஆனால் அலெக்ஸிற்கு உடனே காரியம் ஆகவேண்டியிருந்தது@ “எங்கட வானில போகலாமே..” என்றார்.

அது ஏற்றுக்கொள்ளப்பட்டு மூன்று பொலிஸ்காரர்கள் வந்து வாகனத்தில் ஏறிக்கொண்டார்கள்… துப்பாக்கிகள் சகிதம்! ஐயையோ.. நான் இப்போது பொலிஸ்காரனாகவும் ஆகியிருந்தேன்! அலெக்ஸ் இங்ஸ்பெட்டரைப் போல முன் சீற்டில் அமர்ந்துகொண்டார்; இம்தியாசின் வீட்டை நோக்கி வாகனத்தைச் செலுத்தினேன்.

வீட்டின் முன் பாதையோரமாக ஜீப்பை நிறுத்தினேன். பொலிஸ்காரர்கள் இறங்கி.. நான் கை காட்டிய திசையில் வீட்டை நோக்கி விரைந்து… நடந்தம், ஓடியும் போனார்கள். ட்றவைர் சீற்டில் இருந்தவாறே வீட்டுப் பக்கம் பார்த்துக்கொண்டிருந்தேன். வேலிக்கும் அப்பால் வீட்டையும் முற்றத்தையும் காணக்கூடியதாயிருந்தது. இம்தியாஸ் வீட்டில் இருக்கிறானோ..இல்லையோ.. இல்லாமலிருந்தால் நல்லது என எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் அடுத்த காட்சியாக முற்றத்தில் இம்தியாசைப் பொலிஸ்காரர்கள் பிடித்துக்கொண்டிருக்கும் காட்சியைக் கண்டேன். இரண்டு பெண்கள்.. ஒருவர், இம்தியாஸின் மனைவியும் மற்றவர் அவனது தாயுமாக இருக்கலாம்.. அவனது கையைப் பிடித்துக்கொண்டு, விடமாட்டோம் என்பதுபோல நின்றார்கள். பொலிஸ்காரரிடம் மன்றாடுவதும் தெரிந்தது. மஹ்றூப்பை அவ்விடத்திற் காணவில்லை. வெளியே போயிருப்பாரோ.. அல்லது இன்னும் நடக்கமுடியாது வீட்டுக்குள்ளேயே முடங்கிக்;கிடக்கிறாரோ..! பொலிஸ்காரர் இம்தியாசை இழுத்துக்கொண்டு வந்தார்கள்.

இரண்டு சிறுவர்களும் ஒரு சிறுமியும் சற்று இடைவெளி விட்டு பிறகால் தயங்கித் தயங்கி வந்தார்கள். இம்தியாசை ஜீப்பினுள் ஏற்றும்போது அழுவதற்குத் தயாரான துக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஜீப்பை ஸ்ரார்ட் செய்ததும் சிறுவர்களின் அழுகை வெடித்தது.

இம்தியாசை நடுவில் இருத்தி பொலிஸ்காரர் இரு பக்கமும் அமர்ந்தார்கள். நான் திரும்பிப் பார்க்கவில்லை. நேருக்கு நேர் இம்தியாசைப் பார்க்கும் முகத்தை நான் இழந்துவிட்டிருந்தேன். பின்பார்க்கும் முன்கண்ணாடியினூடு நோட்டம் விட்டேன். இம்தியாஸ் தலையைக் குனிந்துகொண்டிருந்தான். விசுவாசமாக, நான் இட்ட கடமைகளைச் செய்துகொண்டிருந்த ஒருவனை இப்போது நானே குற்றவாளியாகக் கொண்டுபோகிறேன்! இது எப்படி நேர்ந்து முடிந்தது?

பொலிஸ் நிலையத்தில், ஒரு கூடு போன்ற சிறிய அறையுள் ஏற்கனவே நின்ற சிலருடன் இம்தியாசும் விட்டுப் பூட்டப்பட்டான். பொறுப்பதிகாரியிடம், ‘ஈவினிங்’ வந்து பார்ப்பதாகக் கூறிவிட்டு அலெக்ஸ் வந்து வானில் ஏறினார். ஈவினிங் அவர் எதற்காக வருவார் என்ற சந்தோஷமான விபரம் அவர்களுக்குத் தெரியும்!

வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது… இம்தியாசின் நிலைமை, இளைஞனான அவனது எதிர்காலம், அவனது குடும்ப நிலை பற்றிய நினைவுகளில் மனம் குமைந்துகொண்டிருந்தேன். நல்லதொரு பொறுப்பான தொழிலாளியாக இருந்தவன்.. ஏதோ குறுக்குப் புத்தியில் தவறு செய்யும் நிலைக்குப் போயிருக்கிறான்! இப்போது இம்தியாசைக் குற்றவாளியாக சந்தேகிக்கும் உணர்வு எனக்கும் ஏற்பட்டிருந்தது. பொலிஸ் பிடித்து, இழுத்து வந்து, வாகனத்தில் ஏற்றி, உள்ளே தள்ளும்வரை அவன் மௌனமாகவே இருந்தான்! மௌனம் சம்மதத்திற்கு அறிகுறிதானே! தான் களவு செய்யவில்லை.. குற்றவாளியல்ல என்று ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லையே!

வாகனத்தில் என் பக்கத்திலிருந்த அலெக்ஸ், “நீங்கள் இந்த அளவுக்கு மகாத்மாவாக இருக்கக்கூடாது..!” என்றார். அவர் என்ன கூறினாலும் நான் ஏதும் பேசாமலிருந்தேன். அந்த அளவிற்காவது எனது அதிருப்தியைக் காட்டவேண்டும்போலிருந்தது.

இம்தியாசிற்கு என்ன நடந்திருக்கும் என்ற ஆதங்கத்துடன் எனக்கு ஓரிரு நாட்கள் கடந்தன. காசிம்கூட தகவல் எதுவும் கொண்டுவரவில்லை. மூன்றாம் நாட் காலை பண்ணைக்கு வந்துகொண்டிருந்தபோது வீதியோரக் கடையின் வாசற்கட்டில் இருந்த இம்தியாஸ்.. எனது வாகனத்தைக் கண்டதும் எழுந்தான். ‘நிற்பதா.. போய்விடுவோமா..’ என எண்ணிக்கொண்டே வாகனத்தை மெதுவாக்க.. வீதிக்குக் குறுக்காக சற்றுத் தாண்டியவாறு நடந்து கிட்ட வந்தான். வாகனத்தை நிறுத்தி அவனைப் பார்த்தேன்.

அவனது வலது கையிற் பத்துப் போடப்பட்டிருந்தது. முழங்கையுடன் மடித்து, கை ஆடாமல் அசையாமல் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்தது. கன்னமும் ஒரு கண்ணின்; மேற் புருவமும் வீக்கமடைந்து அவனது முகத்தோற்றம் கோணலாகிப்போனது போலிருந்தது.

சற்று நேரம் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். எதுவும் பேசமுடியவில்லை. இம்தியாசும் பேசவில்லை.

“அடிச்சாங்களா..?”

“ம்ம்..” – தலையை மெல்ல அசைத்துப் பதில் கூறினான். அப்போது சட்டென அவன் கண்களிற் கண்ணீர் முட்டியது. அது என் கண்களையும் கலங்கச் செய்தது. நான் அவ்விடத்தை விட்டுக் கிழம்பினேன்.

000

மழைக்காலம் நெருங்கி வந்துகொண்டிருந்தது.

ஓரிரு தடவை மழை பெய்து நிலம் ஈரமடைந்திருந்தது. பண்ணையில் ஒரு பகுதியில் உழுந்து பயறு போன்ற தானிய வகைகளைப் பயிரிட்டால் மழைக்காலம் முடிய நல்ல அறுவடை பெற்றுக்கொள்ளலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது. மேற்பார்வை அதிகாரியாக உயர்வு பெற்றிருந்த காசிம் இருபது ஏக்கர் நிலத்தைப் பண்படுத்திப் பயிரிடும் பொறுப்பை எடுத்திருந்தான். பற்றைகளைத் துப்புரவு செய்து உழவடிக்கும் வேலை ஆரம்பமாகியது. ட்றைக்டரில் ஏறினால் துல்லியமாக உழவடிக்கக்கூடியவன் காசிம்.

துப்பரவாக்கும் வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருந்தன. வேலைகளைக் கவனிப்பதற்காக நானும் நேரத்துடன் பண்ணைக்கு வந்துவிடுவதுண்டு. காலையில் எனக்காக வாசலிற் காத்திருந்தான் காசிம்.

நான் வாகனத்தை விட்டு இறங்கமுதலே ஓடி வந்து.. “ஆடு..ஆடு..!” எனப் படபடத்தான்.

“சரிதான்..! இன்னொரு ஆடு தொலைஞ்சுதா..?” எனச் சினத்துடன் வாகனத்தை விட்டு இறங்கினேன்.

“இல்ல சேர்… காணாமல்போன ஆடு..! கண்டுபிடிச்சாச்சு..!”

என்ன ஆடு பட்டிக்குத் திரும்பிவிட்டதா? இவ்வளவு நாட்களுக்குப் பிறகு..? காசிமை ஆச்சரியத்துடன் பாhத்தேன்.

“வாங்க.. காட்டிறன்!..” உழவடித்த இடத்துக்குக் கூட்டிப்போனான்.

பற்றைகளைத் துப்பரவு செய்யும்போது.. அதற்குள் கண்டிருக்கிறான். அடுத்தநாள் நான் வரும்வரை அதை அப்படியே விட்டு என்னை அழைத்துப் போய்க் காட்டினான்.

ஆட்டின் எலும்புக்கூடும் கறுத்த மயிர்களும் அப்படியே படிமங்களாக விழுந்த வாக்கிற் கிடந்தன!

காசிம் விளக்கமளித்தான்@ “பற்றைக்குள்ள மேய வந்திருக்கும்.. பாம்பு கடிச்சிருக்கு.. விஷமேறிச் செத்துப்போச்சு..!”

– தாயகம் இலக்கய சஞ்சிகையில் வெளியானது 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *