காலை பத்துமணி.
அடையாறு. சென்னை.
பிரபல துப்பறியும் நிபுணர் டாக்டர் கோபிநாத் தன் அலுவலகத்தில் சுறுசுறுப்பாக இருந்தார். அவரது டிடெக்டிவ் ஏஜென்ஸி மிகவும் புகழ்வாய்ந்தது. இந்தியாவின் முக்கிய நகரங்களில் அவரது ஏஜென்ஸி உள்ளது.
டாக்டர் கோபிநாத் மனித மனங்களை துல்லியமாக எடைபோடுபவர். பெரிய பெரிய மர்மங்ளைக்கூட மிக அனாயாசமாகக் கையாண்டு குற்றவாளிகளை ஆதாரத்துடன் கூண்டிலேற்றியவர். அவரது துப்பறியும் திறமைகண்டு தமிழக போலீஸும், இந்தியன் போலீஸ் அகாடாமியும் அவருக்கு விருதுகள் கொடுத்து சிறப்பித்துள்ளன.
வாசுகி அவரைச் சந்திக்க பதினோரு மணி அப்பாய்ன்ட்மென்டுக்காக பத்தரைக்கே சென்று வரவேற்பறையில் காத்திருந்தாள்.
சரியாக பதினோரு மணிக்கு உள்ளே அனுப்பப் பட்டாள்.
“குட்மார்னிங் டாக்டர்… என் பெயர் வாசுகி. ஒரு கடினமான ஆலோசனை ஒன்றை உங்களிடம் கேட்டுப்பெற வந்திருக்கிறேன். அனேகமாக யாரும் யாரிடமும் ஆலோசனை பெறமுடியாத, அதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒரு விஷயத்தை உங்களிடம் கேட்க வந்திருக்கிறேன். அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலாவது, நான் செய்ய விரும்புகிற ஒரு மிகப்பெரிய காரியம் எனக்குள் எண்ண அளவில் இருபத்தி நான்கு மணி நேரமும் என்னுள் நடந்துகொண்டே இருக்கிறது. கற்பனை அளவில் எனக்குள் நடந்து கொண்டேயிருக்கிற அந்த மன உளைச்சல் என்னால் தாங்க முடியாததாக இருக்கிறது. அந்த உளைச்சலில் இருந்து நான் மீள வேண்டும்.
இரண்டாவதாக, உங்களிடம் ஆலோசனை பெற வருபவர்களின் பிரச்னை எந்தக் காரணத்தாலும் வெளியே கசியாது என்கிற உங்களின் உத்திரவாதம். எனக்கு இந்தப் பாதுகாப்பு மிகமிக அவசியம் டாக்டர். எனக்கு உங்களின் ஆலோசனையும் வேண்டும், பாதுகாப்பும் வேண்டும். என் பாதுகாப்புக்கு எந்த அபாயமும் ஏற்பட்டு விடாமல் எனக்குள் எரிந்து கொண்டிருக்கிற கற்பனைச் செயலை நான் செய்தாக வேண்டும். அதற்கு உங்களுடைய உதவி வேண்டும்…”
“உங்களுக்கு என்னால் கண்டிப்பாக உதவ முடியும் வாசுகி…பிரச்சினையை தெளிவாகச் சொல்லுங்கள்.”
“நான் கேட்க வந்திருக்கும் ஆலோசனை மிகமிக அபாயகரமானது. அதை நான் முதலிலேயே உங்களிடம் சொல்லிவிட்டால் நீங்கள் எனக்கு ஆலோசனை தர மறுத்தாலும் மறுத்துவிடலாம். அதனால் அதற்கான காரணத்தை முதலில் விளக்கமாகச் சொல்லி விடுகிறேன்.”
“புரிகிறது…, நீங்கள் ஒரு திட்டத்தை வரைந்து வைத்துள்ளீர்கள். ஆனால் அதன் செயல் வடிவம் உங்களுக்கு நூறு சதவீத திருப்தியைத் தரவில்லை. ஆகையால் என் ஆலோசனையையும் பெற்றுக்கொண்டு இரண்டில் எது உங்களுக்கு அதிக திருப்தியைத் தருகிறதோ அதில் செயல்பட வேண்டும் என்பது உங்களுடைய எண்ணம்… சரியா?”
வாசுகி துணுக்குற்றாள். டாக்டர் கோபிநாத் அவளுடைய உள்மனதை எளிதாகப் பார்த்திருக்கிறார். “ஆமாம்… இரண்டின் ஒன்றின் வழியில் செயல்பட எனக்குச் சுதந்திரம் இருக்கின்றது இல்லையா?”
“அது முழுக்க முழுக்க உங்களுடைய சாய்ஸ்…”
“மாலதி என் சித்தியின் பெண். அப்போது அவளுக்கு பதினாறு வயசு. ரொம்பவும் சாதுவான மென்மையான பெண். பயந்த சுபாவம் கொண்டவள். கல்லிடைகுறிச்சியில் தொடர் வீடுகள் உள்ள ஒரு தெருவில் சித்தி சித்தப்பாவுடன் குடியிருந்தாள். நாங்கள் தென்காசியில் இருந்தோம். சித்தியும் நாங்களும் ரொம்ப அன்னியோன்யம். எங்களுக்குள் நெருக்கமும் உறவும் அதிகம். மாலதி ஆண்களுடன் பேசவே மாட்டாள். அவர்களின் எதிரில் நிற்கவே பயப்படுவாள். அப்படிப்பட்ட மாலதியின் வாழ்க்கையில் ஆறு வருடங்களுக்கு முன்பு – அவளுடைய பதினாறாவது வயதில் கசப்பான சம்பவம் ஒன்று நடந்தது.
கல்லிடைக்குறிச்சியில் அவளுடைய பக்கத்து வீட்டில் பாலாஜி என்ற இருபத்திரண்டு வயது இளைஞன் விருந்தாளியாக வந்திருந்து பத்துநாட்கள் தங்கியிருந்தான். அவன் ஒரு தப்பான காரியத்தை யாருக்கும் தெரியாமல் செய்துவிட்டான்.
மாலதி அவளுடைய வீட்டின் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தாள். அந்தப் பாத்ரூமில் மிக உயரத்தில் கதவு இல்லாத வென்டிலேட்டர் ஒன்று உண்டு. பக்கத்துவீட்டு மாடிப்படியின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று சிறிது குனிந்து நெருங்கினால் அந்த வென்டிலேட்டரை அடைந்துவிடலாம். பாலாஜி பாத்ரூமில் யாரோ குளிக்கிற சத்தம் கேட்டு எட்டிப் பார்த்திருக்க வேண்டும். மாலதி குளிக்கும்போது எதேச்சையாக நிமிர்ந்திருக்க வேண்டும். உடனே அந்தப் பாலாஜி மறைந்து படிகளில் ஏறி ஓடிப் போயிருக்க வேண்டும்.
மாலதிக்கு யாரோ தன்னை வென்டிலேட்டர் வழியாக பார்த்தாற் போலவும் இருந்தது… அடுத்த வினாடியே அந்தக் கண்கள் விலகிவிட்டதால் ஒருவேளை கற்பனையோ என்றும் தோன்றியது. ஆனாலும் மனசில் ஒரு சந்தேகமான அச்சம் ஏற்பட்டுவிட்டது. அவசர அவசரமாக வெளியில் வந்துவிட்டாள். இதை அவள் என் சித்தியிடம் சொல்லவில்லை.
மறுநாள் பாத்ரூமுக்குள் போனபோது பயத்துடனே குளிக்க ஆரம்பித்திருக்கிறாள். வென்டிலேட்டரில் ஏதேனும் கண்கள் தெரிகின்றனவாவென்று ஒருவித அச்சத்துடனேயே நிமிர்ந்து பார்த்தவாறே அவசரமாகக் குளித்திருக்கிறாள்.
குளியலை அவள் முடிக்கிற சிலநிமிடங்களுக்கு முன்னால் – சரேலென வென்டிலேட்டரில் பாலாஜியின் கண்கள் தெரிந்திருக்கின்றன. அவ்வளவுதான், புடவையை வாரிச் சுருட்டிக்கொண்டு பாத்ரூமை விட்டு வெளியேறி ஓடிவந்து விட்டாள்.
இயல்பாகவே மாலதி ரொம்ப பயந்த சுபாவம் கொண்டவள். இந்தச் சம்பவம் அவளின் மனசில் ரொம்ப மோசமான பயவிதையை ஊன்றிவிட்டது. அவள் அம்மாவிடம் இந்தச் சம்பவத்தை உடனே சொல்லியிருக்க வேண்டும். ஆனால் மாலதி சொல்லவில்லை.
இதற்குள் வேறொன்றும் நடந்துவிட்டது. பாலாஜி தப்பான எண்ணத்தில் பாத்ரூமை எட்டிப் பார்த்துவிட்டு ஓடி வந்ததை – யாருடைய வீட்டில் அவன் தங்கியிருந்தானோ – அந்த வீட்டுக்கார அம்மாள் பார்த்துவிட்டாள்.
அவள் பாலாஜியின் அசிங்கமான நடத்தையை யாரிடமும் காட்டிக் கொடுக்கவில்லை. அதேசமயம் அவனுடைய செயலையும் அவளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால் அவனை உடனே ஊருக்கு அனுப்பிவிட்டாள்.
பக்கத்து வீட்டுக்கு விருந்தாளியாக வந்திருந்த பாலாஜி என்பவன்தான் வென்டிலேட்டர் வழியாகப் பார்த்தான் என்பதோ; உடனே அவன் ஊருக்கு அனுப்பப்பட்டான் என்பதோ மாலதிக்கு தெரியாத விஷயங்கள். நாலைந்து வீடுகள் தள்ளி இருக்கிறவர்கள்கூட மொட்டைமாடி வழியாகவே தாண்டித் தாண்டி வந்து பார்க்க முடியும் என்பதால் தன்னை யாரோ பார்த்துவிட்டு ஓடுகிறார்கள் என்றுதான் மாலதி பயந்தாளே தவிர, பாலாஜியைப் பற்றி நினைக்கவில்லை.
மாலதியின் மனசில் தான் குளிக்கும்போது யாரோ பார்க்கிறார்கள் என்ற பிரமையும், பயமும் பச்சை குத்தியதுபோல் ஆழமாகப் பதிந்துவிட்டது. அதனால் மறுநாள் அவளுக்கு குளிக்கப்போக பயமாக இருந்தது. லேசாக உடம்பு சரியில்லை என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு குளிக்கப் போகாமல் இருந்துவிட்டாள்.
இதுதான் ஆரம்பம் டாக்டர்… குளிக்கப்போனாலே யாராவது எட்டிப் பார்க்கிற பயங்கர பிரமையை அவளுள் இந்தச் சம்பவம் ஏற்படுத்திவிட்டது. திடீரென மாலதியிடம் தோன்றியிருந்த இந்தப்பயம் அவளுடைய அம்மாவிற்கு பைத்தியக்காரத்தனமாகத் தோன்றியது. பாத்ரூமில் போய் குளிக்கமுடியாதென்று இப்படி அடம்பிடிக்கிறாளே என்ற கோபத்தில், தரதரவென்று மாலதியை இழுத்துப்போய் பாத்ரூமில் தள்ளிக் கதவை வெளிப்புறமாக அடைத்து குளிக்கக் கட்டாயப் படுத்தியபோது மாலதிக்கு பயத்தில் உடம்பு நடுங்கியது.
“யாரோ பாக்கிறாங்கம்மா…யாரோ பாக்கிறாங்கம்மா” என்று பயந்து அழுதிருக்கிறாள். அன்றிலிருந்து மாலதியின் மனச்சரிவு ஆரம்பமாகிவிட்டது டாக்டர்… அன்று தொடங்கிய அவளின் அழுகையும் பிரமையும் நாளடைவில் வீட்டில் எங்கிருந்தாலும் “யாரோ பாக்கிறாங்க” என்று பேதலிக்கிற அளவிற்கு கடுமையாக மாலதியைப் பற்றிவிட்டன. அதன்பிறகு புடவை மாற்றிக் கொள்ளவும் பயப்பட ஆரம்பித்தாள். முழுமையான ‘இன்சேனிட்டி’ கலந்துகொள்ள, மாலதி விசித்திரமான மனோவியாதிக்கு ஆளாகிவிட்டாள். எவ்வளவோ சிகிச்சைகள் கொடுத்தும் அவள் குணமாகவில்லை.
தேய்பிறை நிலா முழுதாகக் கரைந்து போவதைப்போல, மாலதியின் பகுத்தறிவும் கரைந்து அவளைப் பீடித்திருந்த அச்சக் கிரஹணத்தை தாங்கிக்கொள்ள முடியாமல்; இம்சையை சகித்துக்கொள்ள முடியாமல் – ஒருநாள் மாலதி சித்தப் பிரமையின் இறுதிச் செயலாக வீட்டின் பின்புறத் தோட்டத்தில் இருந்த கிணற்றில் விழுந்து இறந்துபோனாள்.
அவளைப் பொருத்த வரையில் இரண்டு வருடப் பீதி கலந்த வாழ்க்கை முடிந்துவிட்டது. தங்களுடைய ஒரேமகள் இறந்த துக்கத்தில் என் சித்தியும், சித்தப்பாவும் சீக்கிரமே இறந்துபோனார்கள்.
பாலாஜி என்ற அநாகரீக இளைஞன் ஒருபெண் குளிப்பதை வென்ட்டிலேட்டர் வழியாக எட்டிப்பார்த்த கண்ணியக் குறைவான சம்பவம், ஒரு மென்மையான குடும்பத்தையே நிர்மூலப்படுத்தி சின்னா பின்னமாக்கி விட்டது டாக்டர்…”
“பக்கத்து வீட்டுக்கு வந்திருந்த பாலாஜிதான் மாலதியின் மனப்பிரமைக்குக் காரணமானவன் என்பது கடைசியில் எப்படித் தெரிந்தது?”
“மாலதியை ஒரு ஹிப்னாடிஸ்டிடமும், மனோதத்துவ நிபுணரிடமும் அழைத்துப்போன பிறகுதான் விஷயங்கள் புரிந்தன. அதன்பின், எங்கள் சித்தியின் பக்கத்துவீட்டு லேடியிடம் தனியாகப் பேசியபோதுதான் எல்லா உண்மைகளும் புரிந்தன. அந்த அம்மாள் மாலதிக்காக மிகவும் வருத்தப்பட்டு பாலாஜியின் கெட்ட நடத்தையை எங்களிடம் நேர்மையுடன் சொன்னாள்.”
“சரி…மாலதியின் முடிவு மிகவும் சோகமானது…இதில் நீங்கள் என்னிடம் இருந்து என்ன ஆலோசனையை எதிர் பார்க்கிறீர்கள்?”
“மாலதிக்கு நேர்ந்த இந்த அழிவு என்னை ரொம்பவும் பாதித்துவிட்டது டாக்டர். அவளைக் கவனித்துக்கொள்ள நானும் சில மாதங்கள் சித்தியின் வீட்டிலேயே தங்கியிருந்தேன். ஆகையால் இப்போதும் மாலதி சம்பந்தப்பட்ட அந்தக் கோரக்காட்சிகள் எல்லாம் என் நினைப்பில் வந்து வந்து என்னை அலைக்கழிக்கின்றன. அதுவும் ராத்திரி வேளைகளில் – கிணற்றில் விழுந்து செத்து விறைத்துப்போனாளே – அந்தக் காட்சிகள் என்னை வாட்டி எடுக்கும்.
அவளின் இறப்பு என்னை ஒவ்வொரு நிமிடமும் வதைக்கிறது. மனம் கொதிக்கச்செய்து நாளடைவில் என்னைக் கொந்தளிக்கவும் வைத்துவிட்டது. என்னுடைய அத்தனை உணர்ச்சிகளிலும் கடும் வன்முறை கலந்துவிட்டது. பாலாஜியைச் சுற்றிதான் என் மனம் வட்டமிடுகிறது. அந்த ராஸ்கல் என் சித்தியின் குடும்பத்தையே நிர்மூலமாக்கிவிட்டு நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறானே என்று என்மனம் குமைகிறது… அவன் நிம்மதியாக வாழக்கூடாது… இல்லை இல்லை அவனை வாழவே விடக்கூடாது என்று முடிவுசெய்துள்ளேன். அவனை அழித்தே தீருவது என்று எனக்குள் நான் சபதமே செய்திருக்கிறேன் டாக்டர்…”
“அழித்தே தீருவதென்றால்?”
“கொலை செய்வது… இரண்டு வருடமாக எனக்கு இதே நினைப்புதான். எப்படியும் நான் பாலாஜியைக் கொன்றேயாக வேண்டும். இது என் லட்சியக் கொலை டாக்டர்.”
மாலதியின் கண்கள் பாம்பின் கண்கள்போல மின்னின.
டாக்டர் கோபிநாத் கர்சீப்பால் நெற்றியை ஒத்திக்கொண்டார். சற்றுத் தள்ளியிருந்த ஏசி கன்ட்ரோலைத் திருகிவிட்டு அதன் அருகில் இருந்த ஒரு பட்டனை அழுத்தினார்.
“பாலாஜியைக் கொன்றுவிட வேண்டும் என்ற எனது முடிவில் எந்த மாற்றமும் கிடையாது டாக்டர். ஆனால் அது எந்த விதத்திலும் என்னுடையை வாழ்க்கையை பாதித்து விடக்கூடாது. அது ரொம்ப முக்கியம். என்னுடைய லட்சியக் கொலையை நான் நிறைவேற்றியாக வேண்டும். ஆனால் குற்றவாளி நான்தான் என்பது யாருக்கும் தெரியக்கூடாது. அந்த அயோக்கியனின் அழிவால் என்னுடைய எதிர்காலத்திற்கு எந்தப் பாதிப்பும் வரக்கூடாது. ஆகையால் என் லட்சியக் கொலையை நிறைவேற்றிக் கொள்வதில் நான் ரொம்பவும் எச்சரிக்கையாகவும் ஜாக்கிரதையாகவும் இருக்கிறேன்….
தினமும் தமிழிலும் ஆங்கிலத்திலும் நிறைய க்ரைம் நாவல்களும் வாசித்துப் பார்த்துவிட்டேன்… ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திட்டம் போடுகிறேன். கணக்குப்போடுகிறேன். ஆனால் இதுவரை எந்தத் திட்டமும் கணக்கும் எனக்கு முழு திருப்தி அளிக்கவில்லை டாக்டர். அதனால் வேறொரு புதிய கணக்கு உங்களுடைய யோசனைப்படி போட்டுப் பார்த்துவிடலாம் என்றுதான் உங்களுடைய ஆலோசனையை தெரிந்துகொள்ள வந்திருக்கிறேன்.”
“அதாவது யாருக்குமே சந்தேகம் வராதபடி பாலாஜியைக் கொலைசெய்ய வேண்டும். நீங்கள் ரொம்பத் தைரியசாலிதான் மிஸ் வாசுகி.”
“ஆமாம் டாக்டர் நான் ரொம்பவும் தைரியசாலிதான்.”
“ஆனால், கொலை செய்தாக வேண்டும் என்கிற அளவிற்குத் தைரியம் வரத் தேவையில்லை…”
“இந்த அளவு தைரியம் வருகிற அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது… அதை நினைத்துப் பார்க்கவேண்டும் நீங்கள்.”
“இதைவிட வாழ்க்கையில் பாதிக்கப் பட்டவர்களெல்லாம் இருக்கிறார்கள் வாசுகி. நீங்கள் செய்ய நினைக்கிற கொலைக் குற்றத்துக்கு என்னை துணையிருக்கச் சொல்கிறீர்கள்..”
“தயவுசெய்து அப்படி நினைக்காதீர்கள். இருபத்திநான்கு மணி நேரமும் எனக்குள் இந்தக் கொலைச் சிந்தனையே விதம் விதமாகச் சுழன்று கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் இருந்து என்னைக் காப்பாற்றுவதாக நினைத்துக்கொண்டு ஒரு பிரமாதமான ‘மர்டர் ப்ளூப்ரின்ட்” ஒன்றை தயாரித்துக் கொடுங்கள்…”
“ஒரு வலுவான தடயத்தை இப்போதே மறந்து விட்டீர்கள் வாசுகி.”
“என்ன டாக்டர்… அது என்னவென்று சொல்லுங்கள்…”
“நீங்கள் விரும்புகிறபடி ஒருவேளை இந்தக் கொலை நடந்துவிட்டால் உங்களைச் சந்தேகப்பட பெண் ஒருவர் இருக்கிறார்.”
“யார் அந்தப்பெண் டாக்டர்?”
“கல்லிடைக்குறிச்சியில் உங்கள் சித்தியின் பக்கத்து வீட்டுப் பெண்மணி!”
“நோ சான்ஸ் டாக்டர்… பாலாஜியைக் கொலைசெய்ய வே.ண்டும் என்று நினைத்ததுமே நான் செய்த முதல் காரியம் அந்த அம்மாளைச் சென்று சந்தித்ததுதான். பாலாஜியைப் பற்றிய முழு விவரங்களை நான் முதலில் தெரிந்து கொண்டாக வேண்டுமே? அதனால் பொதுவாகப் பல விஷயங்களைப்பற்றி அவளிடம் பேசி நடித்துவிட்டு, நைஸாகப் பாலாஜியைப் பற்றிய அனைத்து விவரங்களையும் அவளிடம் கறந்துவிட்டேன்.
அது மட்டுமில்லை… அவளுக்கு மோசமான ஷுகர் என்பதால் ரெகுலராக இன்சுலின் ஷாட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தாள். நான்போன அன்றைக்கு அவளுக்கு ஏராளமாக இன்சுலின் ஏற்றி தனியாக இருந்த அவளை மிக எளிதாக யாருக்கும் சந்தேகமே வராதபடி கொன்றுவிட்டேன் டாக்டர்.”
டாக்டர் கோபிநாத் ஏராளமாக வியர்த்தார்.
“எனக்கு எதிராகச் செயல்படக் கூடிய தடயம் அவள் ஒருத்திதான். இப்போது அந்தத் தடயமும் இல்லை.”
“…………………..”
“எனக்கு உதவி செய்யுங்கள் டாக்டர். அருமையான ப்ளான் ஒன்றைப் போட்டுத் தாருங்கள்… எவ்வளவு செலவானாலும் சரி, என் லட்சியக் கொலையை கூடிய சீக்கிரம் நான் செய்தாக வேண்டும்… ஏன் இந்தக் கொலையை நான் செய்தாக வேண்டியவளாக இருக்கிறேன் என்பதை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்…”
“காரணங்களால்தான் ஒவ்வொரு கொலையும் நடக்கிறது. அதற்காக கொலைகளை ஏற்றுக்கொள்ள முடியாது வாசுகி.”
“கடவுள்களும் அவதாரப் புருஷர்களும்கூட அசுரர்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள்… அதனால் எல்லாக் கொலைகளுமே குற்றங்கள் அல்ல டாக்டர்…”
“தேர்ந்த அரசியல்வாதியைப்போல பேசுகிறீர்கள்…”
“என் லட்சியக்கொலை எப்படியாவது நிறைவேற வேண்டும்.”
“இந்த விஷயத்தில் நான் உங்களுக்கு ஆலோசனை எதையும் தருவதற்கில்லை. சட்ட விரோதமான செயல்களுக்கு என்னுடைய வழிகாட்டல் யாருக்குமே கிடையாது.”
“அப்படின்னா இருபத்திநான்கு மணிநேரமும் எனக்குள் காட்சியாக ஓடிக்கொண்டிருக்கிற அந்தக் கற்பனைக் கொலையில் இருந்து மீள எனக்கு வழி?”
“அதற்கு வழி கொலைக் குற்றம் இல்லை.”
“யுத்தம் என்று வந்துவிட்டால் அதில் கொலைகளும் அடங்கியதுதானே?”
“நான் யுத்தத்தை ஆதரிப்பதாகக் கூறவில்லையே?”
“நீங்கள் லட்சிய நோக்கில் பார்க்கிறீர்கள் டாக்டர். ஆனால் கொலைகளும் குற்றங்களும் எல்லா ஊரிலும் எல்லா நாட்டிலும் யதார்த்தமாக நடைபெறுகின்றன. அந்த யதார்த்தமான முறைகளில் வாழ்கிற ரொம்ப யதார்த்தமான பெண் நான். ராவணனை அழிக்க ராமன் முன்வந்தது யதார்த்த நடைமுறை. கெளரவர்களை ஒழிக்க பாண்டவர்கள் வழி தேடியதும் அப்படித்தான் டாக்டர். அவர்களுக்கு கிருஷ்ணன் சொல்லித்தராத வியூகங்களா? பீஷ்மர்கூடத் தப்ப முடியவில்லையே அந்த வியூகத்தில் இருந்து?
அப்புறம் எப்படி இந்த பாலாஜி மட்டும் தப்ப முடியும்? ஏன் அவன் தப்பவும் வேண்டும்? பழிவாங்கும் உணர்வில் ஏன் நான்மட்டும் செயல் படக்கூடாது? சொல்லுங்கள் டாக்டர்…”
டாக்டர் கோபிநாத் சற்றுப் பொறுமையிழந்தார்.
“கொலையைச் செய்வதும் செய்யாததும் உங்களுடைய விருப்பம். அதை நீங்களே தீர்மானியுங்கள். இந்தப் பழி உணர்ச்சியில் இருந்து மீளவும்; கொலை புரிகிற மனநிலையை மாற்றவும்தான் என்னால் ஆலோசனை வழங்க முடியும். அதற்கான வழிமுறைகளைக் கேளுங்கள். நிறையச் சொல்லுகிறேன். இல்லையென்றால் நீங்கள் இப்பவே விடை பெற்றுக் கொள்ளலாம். எப்படி இப்படி ஒரு ஆலோசனையை என்னிடம் எதிர்பார்த்து வந்தீர்கள்?”
“அவ்வளவு தூரத்துக்கு இந்த எரியும் பிரச்னை எனக்குள் கடல் ஆழத்து சிகரமாக வளர்ந்து நிற்கிறது…”
“ஓகே ஆல் த பெஸ்ட். ஆனால் குற்றவாளிகள் சட்டத்தின் கண்களிலிருந்து தப்பிவிட முடியாது. ஏதாவது ஒருதடயம் போலீசிடம் மாட்டியே விடும்.”
கிண்டலாகச் சிரித்து, “போலீஸிடம் கேட்டுப்பாருங்கள், எத்தனை கொலைகளில் மர்மம் அவிழாமலேயே அமிழ்ந்து கிடக்கின்றன என்று…”
“இருக்கலாம் வாசுகி. உங்களிடம் என் கடைசி வேண்டுகோள், தயவுசெய்து இந்த லட்சியக் கொலை வேண்டாம்.”
“ரொம்ப நன்றி டாக்டர்…”
“நீங்கள் செய்த கொலை; செய்யப்போகிற கொலை பற்றித் தெரிந்த சாட்சியாக; தடயமாக நான் ஆகிவிட்டேன்…! பாலாஜியின் துர்மரணம் எனக்குத் தெரிந்தாகிவிட்டது. அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.”
வாசிகியின் உதடுகளில் ஒரு குரூரப்புன்னகை நெளிந்தது.
“நான் உங்களை ரொம்ப புத்திசாலின்னு நெனச்சேன் டாக்டர்… ஆனால் நீங்க என்னை முட்டாள்னு நெனச்சுட்டீங்க. உங்களின் அறியாமை எனக்கு இப்போதுதான் தெரிகிறது. நான் இவ்வளவு நேரம் சொன்ன விஷயங்கள் பூராவிலும் பொதிந்திருந்த சம்பவங்கள் மட்டும்தான் உண்மை. பாலாஜி, மாலதி, கல்லிடைக்குறிச்சி, தென்காசி எல்லாமே மாற்றிச் சொல்லப்பட்ட பொய்கள். அந்தப் பொய்களின் பின்னால் மறைந்திருக்கிற நிஜமான பெயர்களும், ஊர்களும் வேறானவை. என்றோ ஒருநாள் இந்தக் கொலை நிகழ்ந்து அந்தச் செய்தி வெளிவரும்போது அது நான் செய்த குற்றம்தான் என்பதை உங்களால் யூகிக்கவே முடியாது. ஏனெனில் கொலையுண்ட மனிதனின் பெயர் பாலாஜி என்பதாக இருக்கவே இருக்காது.”
“யார் புத்திசாலி என்பதை அடுத்த சிலமணி நேரங்கள் முடிவு செய்யும். ஒரே ஒரு சந்தேகம் வாசுகி… உங்கள் பெயராவது வாசுகி என்பதுதானா? இல்லை அதுகூடப் பொய்யான பெயரா?”
“இனி உங்களுடைய கேள்விக்கெல்லாம் பதில்சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்குக் கிடையாது டாக்டர். நான் வருகிறேன்.”
“கட்டாயம் வருவீர்கள்…”
வாசுகி சட்டென்று கதவைத் திறந்து வெளியேறினாள்.
அவள் வெளியேறும்போது ரிசப்ஷனில் இரண்டு பெண்கள் காத்திருந்தனர்.
வெளியே வந்த வாசுகி தன்னுடைய மாருதி காரைக் கிளப்பி பாலவாக்கத்திலுள்ள தன் வீட்டிற்கு விரைந்தாள். .
அவளுடைய காரை ஒரு மோட்டார் பைக்கில் இரண்டுபேர் தொடர்ந்தனர்.
வீட்டிற்கு வந்து காலிங்பெல் அடித்ததும் அவள் தோழி சுகன்யா வந்து கதவைத் திறந்தாள்.
“போன காரியம் என்னாச்சுடி?”
“அந்த டாக்டர் சரியான லூசுடி. சட்டம், நீதி, நேர்மைன்னு வியாக்கியானம் பண்ணான். அவனால என்னோட டைம்தான் வேஸ்ட். அதனால நம்முடைய ஒரிஜினல் ப்ளான்படி நீயே அவனைக் கொன்னுடு….”
அப்போது யாரோ காலிங்பெல்லை அழுத்தினார்கள்.
வாசுகி சென்று கதவைத் திறந்தாள்.
அதிரடியாக இரண்டு பெண்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் இருவரையும் இப்போதுதான் ரிசப்ஷனில் பார்த்தது வாசுகிக்கு ஞாபகம் வந்தது.
அடையாள அட்டையைக் காண்பித்துவிட்டு, “நாங்கள் க்ரைம் போலீஸ்… நீங்கள் இருவரும் உடனே எங்களுடன் அடையாறு போலீஸ் ஸ்டேஷன் கிளம்புங்கள். வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை எங்களிடம் கொடுத்துவிடுங்கள். நாங்கள் பிறகு இந்தவீட்டைச் சோதனையிட வேண்டும்.”
“எதற்காக? நாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லையே?”
“அதை போலீஸ் ஸ்டேஷன் வந்து சொல்லுங்கள்… ம்… கவிக்..”
மோட்டார்பைக்கை அங்கயே நிறுத்திவிட்டு, ஒரு டாக்ஸியில் அவர்களை ஏற்றி அந்த இருவரும் அதில் அமர்ந்துகொண்டனர்.
அப்போது ஒருத்தியின் மொபைல் சிணுங்கியது.
“ஓகே ஸார்… டாக்டர் ஆபீஸுக்கே வரோம்…”
கார் டாக்டர் கோபிநாத்தின் அடையாறு அலுவலகத்துக்குச் சென்றது.
அங்கு டாக்டர் கோபிநாத்துடன் அடையாறு க்ரைம் இன்ஸ்பெக்டரும் இருந்தார்.
“வெல்கம் அகெய்ன் வாசுகி… இப்ப யார் புத்திசாலின்னு உங்களுக்குப் புரியணுமே? இந்த அறையில் ரகசியக் காமிரா இருக்கிறது. போதாதற்கு நீங்கள் கொலைபற்றிப் பேச ஆரம்பித்ததும் நான் ஏசி கன்ட்ரோலை இயக்குவதுமாதிரி அடையாறு போலீஸுக்கு வாய்ஸ் கன்ட்ரோலை முடுக்கிவிட்டேன். ஆக நீங்கள் கொலை செய்தது, இனி செய்யப்போவது அனைத்தையும் ஒப்புக்கொண்டு ஒருநீண்ட வாக்குமூலமே கொடுத்துவிட்டீர்கள். நான்தான் அதற்கு சாட்சியும் கூட…. நான் உங்களை நல்வழிப்படுத்தலாம் என்றுதான் நினைத்தேன்… ஆனால் ஏற்கனேவே ஒரு கொலையைச் செய்துவிட்டு, இன்னொரு கொலைக்கு ஆலோசனைவேறு கேட்க வந்தீர்கள். உங்களை சட்டத்தின் முன் நிறுத்துவது என் கடமை.”
“……………………………..”
“இன்ஸ்பெக்டர், இவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினால் எல்லா உண்மைகளும் வெளிவரும். கீப் மி அப்டேட்டட்…”
“ஷ்யூர் டாக்டர்…”
இன்ஸ்பெக்டர் டாக்டரிடம் கைகுலுக்கி நன்றி சொல்லிவிட்டு -வாசுகியையும், சுகன்யாவையும் அடையாறு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார்.
தங்களது பாராட்டுக்கு மிக்க நன்றி.
அருமையான கதை.