யார் வென்றவன்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: October 13, 2019
பார்வையிட்டோர்: 39,140 
 
 

என்னை பற்றி சிறிய அறிமுகம், நான் டிடெக்டிவ் ஏஜன்ஸி ஒன்று வைத்துள்ளேன்.

இதற்கு தேவைப்படும் தகுதியாக நான் பழைய இராணுவ அதிகாரி ஆகவோ,போலீஸ் அதிகாரியாகவோ, பணி செய்து கொண்டிருந்ததில்லை.வக்கீல் தொழில் கூட செய்ததில்லை. அப்புறம் எப்படி இந்த டிடெக்டிவ் ஏஜன்ஸி வைத்திருக்கிறாய் என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். நான் சிறு சிறு வழக்குகளுக்காக குற்றவாளியாக சிறைக்கு போயிருக்கிறேன்.அதன் பின் இந்த தொழில் நமக்கு சரிப்பட்டு வராது என்று சின்னதாய் டிடெக்டிவ் ஏஜன்ஸி ஒன்று ஆரம்பிக்கலாம், என்று முடிவு செய்து ஆரம்பித்து விட்டேன். குற்ற பிண்ணனியில் இருந்து வந்துள்ளதால் ஒரு சிலரின் பிரச்சினைகளுக்கு என்னை அணுகுவார்கள் என்ற நம்பிக்கையில் ஆரம்பித்து வெற்றிகரமாக ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.

என் எதிரில் இருந்தவர் “புலன் + ஆய்வு” என எழுதாமல் “புலனாய்வு” என்றுதான் உங்கள் அலுவலக வாசலில் எழுதி இருக்க வேண்டும்.அவர் சொன்ன குறையை கேட்டு எனக்கு கோபம் வந்தாலும் வாடிக்கையாளரானவரை அவமதிக்க கூடாது என்ற வகையில் அமைதியாக புன்னகைத்தேன்.

நீங்கள் சொன்ன அந்த வார்த்தையை சேர்த்து எழுத எல்லோரும் சொல்லி விட்டார்கள், நான்தான் அதை வேண்டுமென்றே அப்படி எழுதி வைத்திருக்கிறேன்.இதை உங்களை போன்ற வாடிக்கையாளர்களை கவர ஒரு உத்தி என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

அவர் நம்பாமல் என்னை பார்த்தார். இவன் ஏதோ சால்ஜாப்பு சொல்கிறான் என்பது போல் இருந்த்து அவர் பார்வை.

இந்த பேச்சை இத்துடன் முடிக்க, சொல்லுங்கள் சார் என்று என் உத்தியோக தோரணையை காட்டினேன், அதே நேரத்தில் வாடிக்கையாளரையும் இந்த பேச்சை மாற்ற வேண்டி ஒரு உளவியல் ரீதியாக திசை திருப்பினேன்.

அவரும் என் மாற்றத்தை உணர்ந்து கொண்டாரோ என்னவோ,கொஞ்சம் ஆழ்ந்த ஈடுபாடுட்டுடன் அவருடைய சிக்கல்களை சொல்ல ஆரம்பித்தார்.

நான் சத்தி ஹார்டுவேர்ஸ் என்னும் கடையை நடத்திக்கொண்டு இருக்கிறேன்.

தெரியும் அதுதான் விசிட்டிங் கார்டு கொடுத்திருக்கிறீர்களே, அவர் என் இடையூறை விரும்பாதவர் போல் சற்று நேரம் நிறுத்தினார்.நான் என் தவறை உண்ர்ந்து..சாரி..நீங்கள் சொல்லிக்கொண்டே போங்கள்

நான் இந்த ஊரில் கொஞ்சம் பிரபலமான புள்ளி, எனக்கு ஓரளவு சொல்லக்கூடிய சொத்துக்கள் உண்டு. சற்று நேரம் கண்ணை மூடி அப்படியே உட்கார்ந்தவர், அடுத்த வார்த்தையை மெல்ல உதிர்த்தார்.ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு குறைகள் உண்டு, சொல்லிக்கொண்டவர், சட்டென வாயை திறக்காமல் அமைதியாக இருந்தார்.

நான் எதுவும் பேசாமல் அவர் மேற்கொண்டு சொல்வதை கேட்டுக்கொண்டு இருந்தேன்.எப்பொழுதுமே வாடிக்கையாளரை பேச வைத்து காது கொடுத்து கேட்பதுதான் நமது வேலை. இது எனது தொழிலுக்கு மிகவும் பொருந்தும், அதனால் எதுவும் பேசாமல் அவர் முகத்தை பார்த்துக்கொண்டு இருந்தேன்.

சட்டென கண் விழித்த்து போல் நான் நல்லவன் என்று எல்லோரிடமும் சொல்லி கொண்டு இருக்கவில்லை. எனக்கென்று சில தனிப்பட்ட செயல்கள் உண்டு,அவைகள் நல்லவைகளாகவும் இருக்கலாம். கெட்டவைகளாகவும் இருக்கலாம்.

நான் மெல்ல இப்பொழுதுதான் விசயத்துக்குள் வருகிறார் என்பதை உணர்ந்து அவர் சொல்வதை ஆழ்ந்த கவனமுடன் கேட்டுக்கொண்டிருந்தேன்.

என்னை ஒருவன் தினமும் மிரட்டிக்கொண்டே இருக்கிறான்.

நான் சட்டென யூ மீன் பிளாக் மெயில் ஆங்கிலத்துக்கு தாவினேன்.

ஆம், சில நேரங்களில் செல் போனிலும்,சில நேரங்களில் அலுவலக தொலைபேசிகளிலும் மிரட்டுகிறான்.

அது எப்படி? என்று என் புருவத்தை உயர்த்தி ஜாடையாக கேட்டேன்.

செகரெட்டரியிடம் என்னுடன் பேசவேண்டும் என்று கேட்கிறான், அவளும் போனை வாங்கி என் கையில் கொடுத்து விடுகிறாள்.

நீங்கள் உங்கள் செகரெட்டரியிடம் இந்த மாதி கால்கள் வந்தால் கொடுக்க வேண்டாம் என்று சொல்லி விடுவதுதானே?

அவன் என்னுடைய முக்கியமான நண்பர்களின் பெயரை சொல்லி அவர்கள் பேசுவதாக சொல்லி விடுகிறான். இவளும் அதை நம்பி என் கையில் போனை கொடுத்து விடுகிறாள்.

அவன் என்ன சொல்லி மிரட்டுகிறான்?

அதுதான் சொல்லிவிட்டேனே, ஒரு சில தவறுகள் நான் செய்து விடுகிறேன், அதை தவறு என்று கூட சொல்ல மாட்டேன், மனிதர்களாய் பிறந்தவர்கள் எல்லாம் செய்யும் காரியங்கள் தான். அதிலும் என்னைப்போன்ற பணக்கார்ர்கள் செய்யும் போது இந்த மாதிரி பேர்வழிகள் அதை போட்டோ எடுத்தோ அல்லது வாட்ஸ் அப்பிலோ எனக்கு அனுப்பி விடுகிறான்.

நீங்கள் அந்த நம்பரை ட்ரேஸ் அவுட் செய்வதுதானே?

ஒரு முறை அனுப்பிய நம்பர் மறு முறை மாற்றி விடுகிறான்.

போலீசில் புகார் கொடுப்பதுதானே?

அவர் என்னை பார்த்து புன்னகைத்து என்னை போல பெரிய மனிதனை பற்றி மறு நாள் பத்திரிக்கையில் விலா வாரியாக எழுதிக்கொண்டிருப்பார்கள்.

சரி நான் இப்பொழுது என்ன செய்யவேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்?

யார் அவன்? எதற்கு என்னை பயமுறுத்திக்கொண்டிருக்கிறான் என்று தெரிய வேண்டும்.

தெரிந்தவுடன் அப்படியே உங்களுக்கு சொல்லிவிட்டால் போதுமா, அல்லது அவன் மேல் போலீஸ் அல்லாத நடவடிக்கை எடுக்க வேண்டுமா?

என்ன சொல்ல வருகிறாய் என்பதாய் பார்த்தார்.

அதுதான் சாம பேத தாண தண்டம், சொல்லிவிட்டு சிரித்தேன்.

நீ புலனாய்வு நிறுவனத்தை நட்த்துகிறாயா? அல்லது கட்டை பஞ்சாயத்து நடத்துகிறாயா?

நான் மெல்ல சிரித்து உங்கள் எண்ணம் என்ன என்று தெரியவே அப்படி கேட்டேன்.

அவன் வாயை அடைத்து, என்னைப்பற்றிய எல்லா தகவல்களையும் என்னிடம் கிடைப்பதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

அவன் அதற்கு பணம் கேட்டால்? கொடுத்து விடு. எனக்கு என்னை பற்றிய தகவல்கள் முக்கியம்.

சரி முயற்சி செய்கிறேன். இதற்கு என் அலுவலகத்துக்கு குறிப்பிட்ட தொகை தந்து விடவேண்டும்

அட்வான்சாக கொடுக்க வேண்டுமா?

இல்லை, என் வேலை முடிந்த பின்னால் வாங்கிக்கொள்கிறேன்.

சரி நான் கிளம்புகிறேன், எழுந்தவரை சாரி..இன்னும் ஒரே ஒர் கேள்வி சார்.

என்ன எனபது போல பார்த்தார்.

என்னுடைய டிடெக்டிவ் ஏஜன்சிக்கு வரவேண்டும் என்று யாராவது உங்களுக்கு சொன்னார்களா? அல்லது நீங்களாக வந்திருக்கிறீர்களா?

சிரித்துக்கொண்டே என்னை மாதிரி பெரிய மனுசங்களுக்கு யாராவது ஒருத்தர் தகவல் கொடுப்பாங்க, அது மாதிரி வச்சுக்கயேன்.

நன்றி சார், ஒரு நிமிசம் ஒரு காப்பி சாப்பிட்டு விட்டு போகலாம், என் டேபிளில் இருந்த பெல்லை அமுக்கினேன், உள்ளே எட்டிப்பார்த்த காரியதரிசியிடம் இரண்டு காப்பி என்று சொன்னேன்.

இரண்டே நிமிசம், சொன்னவள் சொன்னபடியே இரண்டு அழகிய வடிவான கோப்பையில் ஆவி பறக்க காப்பி கொண்டு வந்தாள்.

உட்கார்ந்து குடித்து முடித்தவர், சரி இந்த வேலையை எப்பொழுது முடிப்பாய்?

ஒரு வாரம் கொடுங்கள் போதும்.

சரி என்று விடை பெற்று கிளம்பினார்.

அவர் சென்றவுடன் காரியதரிசியை அழைத்து, நான் வெளியே கிளம்புகிறேன், நான் வர தாமதமானால் அலுவலகத்தை பூட்டி விட்டு எப்பொழுதும் வைக்கும் இடத்தில் சாவியை வைத்து விட்டு செல். சொல்லிவிட்டு என் யமஹா வண்டியை எடுக்க விரைந்தேன்.

ஒரு வாரம் ஓடியிருந்தது. அவருக்கு போன் செய்தேன். எல்லாம் தயார், எங்கு வரட்டும்? என் அலுவலகத்துக்கே வந்து விடு.

பிலிம் ரோல், ஒரு சில போட்டோக்கள், சி.டி போன்றவைகளை, கொண்டு வந்த பேக்கிலிருந்து அவர் மேசையின்மேல் கொட்டினேன். அவர் திருப்தியுடன் பார்த்தவர், இதற்கு அவனுக்கு பத்து இலட்சம் கொடுத்தது அதிகம் என்றார். சார் அவன் இருபத்தி ஐந்து கேட்டான், நான் அவனை போலீசில சொல்லி விடுவதாக மிரட்டி தொகையை குறைத்தேன்.

நல்லது செய்தாய். சரி உன் தொகை எவ்வளவு? இருபத்தி ஐந்து ஆயிரம்.

குறைவாக கேட்கிறாய். உங்களை போல வாடிக்கையாளர்கள் வேண்டும், சொல்லிவிட்டு சிரித்தேன். சரி கேஷா, செக்கா? எப்படி கொடுத்தாலும் சரி.

சந்தோசத்துடன் பெற்றுக்கொண்டு வெளியே வந்தேன். கையில் இருபத்தி ஐந்தாயிரம் அலுவலக கணக்கில் சேர்க்க வேண்டிய பணம்..

கணக்கில் வராமல் ரூபாய் பத்து இலட்சம் இவனை பிளாக் மெயில் செய்ததில் கிடைத்த தொகை.ஒரு இடத்தில் பதுக்கி வைத்து விட்டோம். இவனைப்போன்ற ஆட்கள் இருக்கும் வரை என்னைப்போன்ற ஆட்களுக்கு எப்பொழுதும் வேட்டைதான். சந்தோசமாய் வண்டியை ஸ்டார்ட் செய்தேன்.

அங்கே !

நான் பதுக்கி வைத்திருந்த ரூபாய் பத்து இலட்சம் களவாடப்பட்டு எனக்கு பணம் கொடுத்தவர் மேசையின் மேலேயே போய் சேர்ந்திருந்தது. பணம் கொண்ட பெட்டியை பார்த்தவாறு,என்னிடமே இவன் வேலை காட்டுகிறான், இவனே பிளாக் மெயில் செய்வானாம், இவனே டிடெக்டிவ் செய்வது போல பணம் கொடுத்து பிரச்சினையை தீர்த்து வைப்பானாம். இப்பொழுது என்ன செய்கிறான் பார்க்காலாம்.

நான் அந்த பத்து இலட்சத்தை நினைத்தவாறு வண்டியை முறுக்கி கொண்டிருந்தேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *