மூணு பவுன் சங்கிலி…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: December 31, 2020
பார்வையிட்டோர்: 18,685 
 
 

அவ்வளவாக பரபரப்பில்லாத நண்பகல் நேரம். இராயப்பேட்டை காவல் நிலையத்திற்குள் ஆய்வாளர் எழிலரசன் நுழையும் போது அவர்களைக் கவனித்தார்.

அந்தப் பெண்மணி இரண்டு குழந்தைகள் மற்றும் கணவர் உதவி ஆய்வாளர் பாண்டியன் முன் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அவர் தன் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். நிமிர்ந்து அவர்கள் முகத்தைப் பார்க்காமல் பேசினார். பாவம் அந்தப் பெண் அவர் பார்வையால் நெளிந்து கொண்டிருந்தாள்.

வலதுபக்கம் பெஞ்சில் ஒரு ஆள் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். இவரைப் பார்த்தவுடன் எழுந்து நிற்கிறார். ஷர்ட் இன் பண்ணி சூ போட்டுக்கொண்டு டீக்காக இருந்தார்.

தளவாடங்கள் அறை லாக் அப் அறை இவற்றைப் பார்த்துக் கொண்டே தன் அறைக்குள் நுழைந்தார்.

பின்னாலேயே வந்த ஏட்டு

விரைப்பாக உத்தரவுக்குக் காத்திருந்தார்.

‘பாண்டியன வரச் சொல்லுங்க’.

சிறிது நேரத்தில்,

‘குட் மார்னிங் சார் கூப்பிட்டிங்களா?’

‘நாளைக்கு சென்ட்ரல் மினிஸ்டர் வரதால பந்தோபஸ்து வேல இருக்குது. நினைவுல வச்சுக்கங்க’.

‘ஓகே சார்’.

‘யாரது ஃபேமிலி?’

‘சிலோன்காரங்க சார். வருஷத்துக்கு ஒரு வாட்டி ஸ்டேஷனுக்கு வந்து பதிவு செஞ்சுக்கனும்’.

‘ஏன் குற்றவாளி மாதிரி நிக்க வச்சு பேசறீங்க? ஆம்பிளய மட்டும் வந்து கையெழுத்து போட்டுட்டுப் போக சொல்லறுது தானே?’

‘அப்படி இல்லீங்க சார். இவங்க எல்லாம் கொஞ்சம் எடம் கொடுத்தா ரொம்ப ஆட ஆரம்பிச்சிடுவாங்க’.

‘பாவங்க. வேறு வழியில்லாமல் தானே இங்கே வந்திருக்காங்க’.

‘வந்து சும்மா இருந்தா பரவால்ல. இவங்களால கிரைம் அதிகமாகிடுச்சி’.

‘இந்த குடும்பம் என்னய்யா பண்ணுச்சு?’

‘இப்படியே பாவப்பட்டுப் பாவப்பட்டு விட்டா கட்சீல நம்ப தலீவர்ங்களய

போட்டு தள்றானுங்க’.

‘எவனோ ஒருத்தன் பண்ணான்னு இவங்கள டார்ச்சர் பண்றது என்ன நியாயம்? இவனுங்க இங்கே வந்து லோல் படறதற்கு வேற எங்கேயாச்சும் வெளிநாட்டுக்கு போயிருந்தா நல்லாவே இருந்து இருப்பாங்க’.

பாண்டியனுக்கு எரிச்சலாக வந்தது. இந்த இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனுக்கு வந்ததிலிருந்து தனக்கு நிம்மதியே இல்லை என்ற எண்ணம் ஏற்பட்டது.

எதுக்கெடுத்தாலும் பெரிய யோக்கியன் மாதிரி புத்தி சொல்றது.

தனது இருக்கைக்கு திரும்பினார்.

‘ஏட்டு?’ இன்ஸ்பெக்டர் அழைத்தார்

‘சொல்லுங்க அய்யா’. சல்யூட்.

‘வேற யாரோ ஒருத்தரு‌ உட்கார்ந்து இருக்காரே, யாரது?’

‘தெஃப்ட் கேசுங்க அய்யா. கம்ப்ளைன்ட் கொடுக்க வந்திருக்காரு’.

‘வரச்சொல்லு’.

‘சார் குட் மார்னிங் சார்’.

‘உட்காருங்க உங்க பேரு?’

‘ராம்கோபால்ங்க. பாலாஜி நகர் செகன்ட் ஸ்டீரட்ல வீடுங்க’.

‘அடையார் இன்ஸ்பெக்டர் உங்களுக்காகதான் பேசினாரா?’

‘ஆமாங்க சார். என் ஃப்ரென்டோட பிரதர் இன் லா’.

‘சரி என்ன திருடு போச்சு?’

‘3 பவுன் செயின் சார். வைஃப்து சார்’.

‘எப்பத்திலிருந்து செயின் காணோம்?’

‘நேத்து காலைல 11 மணிக்கு சார்’.

‘எங்க வச்சாங்களாம்?’

‘பெட்ரூம்ல ட்ரெஸ்ஸிங் டேபிள் மேல சார்’.

‘பெட்ரூம்ல நீங்கள் இல்லாதபோது வேற யார் சார் வந்து எடுக்க முடியும்?’

இன்ஸ்பெக்டர் யதார்த்தமாகக் கேட்டாலும் அவருக்கு சுருக்கென்றது.

‘ஏசி ரிப்பேர் பண்ண மெக்கானிக் ரெண்டு பேரு வந்தாங்க சார்’.

‘அப்ப அவனுங்க தான் எடுத்து இருப்பான்ங்கறீங்களா?’

‘இருக்கலாம் சார்’.

‘எங்குள்ள ஆளுங்க?’ கொட்டாவி விட்டுக்கொண்டே கேட்டார்.

‘எங்க வீட்டு வாசலில் இருக்கு சார் கடை’.

இன்ஸ்பெக்டர் இப்போது நிமிர்ந்து உட்கார்ந்தார.

‘வீட்டுக்கு பக்கத்திலயா?’

‘ஆமாங்க சார்’.

‘பழக்கமான ஆளுங்களா?’

‘அடிக்கடி அங்க பார்த்து இருக்குறோம் சார்’.

‘பசங்க இப்ப அங்க தான் இருக்காங்கள?’

‘ஆமாங்க சார்’.

‘அங்க போயி ரைட்டர் கிட்ட ஒரு கம்ப்ளைன்ட் எழுதி கொடுங்க. நான் விசாரிக்கிறேன்’

‘ஏட்டு’

‘அய்யா’.

‘சார் கம்ப்ளைன்ட் எழுதிக் கொடுத்தவுடனே கூட போ. ஒரு கடை காட்டுவாரு. பசங்கள கூட்டிட்டு வா’.

‘சரிங்கய்யா’. மீண்டும் சல்யூட்.

பின்பக்கமாகவே இரண்டடி நடந்து சரக்கென்று நகர்ந்தான்.

அரை மணியில் கான்ஸ்டபிள் அந்த 2 பேரையும் இழுத்துக் கொண்டு வந்தார். இன்ஸ்பெக்டர், இரண்டு பேரையும் பார்த்தார்.

‘பேர் என்னடா?’

‘முத்து சார்’.

‘தமிழ் சார்’.

கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொண்டிருந்தது.

இவர்கள் செய்திருக்க மாட்டார்கள் என்று தோன்றியது.

அப்போது போன் அடித்தது. ஏசியிடமிருந்து போன்.

‘கமிஷனருடன் மீட்டிங் ஒன்னு இருக்கு. ‌மினிஸ்டர் பந்தோபஸ்து விஷயமா பேசறதுக்கு கமிஷனர் ஆபீஸ் வரைக்கும் வந்துட்டு போங்க எழிலரசன்’.

‘இப்பவே கிளம்பிட்டாங்கேய்யா வந்துட்டே இருக்கேன்’.

போகும்போது சப்-இன்ஸ்பெக்டரிடம்,

‘இந்த இரண்டு பசங்களையும் என்னன்னு கொஞ்சம் விசாரிச்சு வையுங்க. கமிஷனர் ஆபீஸ் வரைக்கும் போயிட்டு வந்துடறேன். ஒரு மீட்டிங் கூப்ட்டு இருக்காங்க:.

‘சரிங்க நான் பாத்துக்குறேன்’.

அந்த இலங்கை குடும்பம் நின்று கொண்டிருந்தது.

‘நீங்க இன்னும் போல?’

சப் இன்ஸ்பெக்டரிடம் திரும்பி,

‘அவங்கள அப்பவே அனுப்புங்கனு சொன்னேன். இன்னும் ஏன் நிக்க வெச்சு இருக்கீங்க’ எரிச்சலோடு கத்தி விட்டுப் போய்விட்டார்

சப் இன்ஸ்பெக்டருக்கு ஆத்திரத்தோடு அவமானமும் சேர்ந்து கொண்டது.

‘ஏன்யா உங்களுக்கு வேற நேரம் காலம் கிடையாதா? தாலி அறுக்கறதுக்கே வந்து சேருங்க’ அவர்களிடம் குதறினார்.

மொத்த குடும்பமே வெலவெலத்துப் போய் விட்டது.

‘போட்டோ எல்லாம் ஒட்டி குடுத்தாச்சா?’

‘கு..கு..கொ..கொடுத்துட்டேங்க அய்யா’ பயத்தில் திக்கினான்.

அவரது பார்வை, சரி சரி கிளம்புங்க என்றது. அவர்கள் திரும்பிச் செல்லும்போது பார்வை அந்த பெண்ணின் பின்பகுதியில் குத்திட்டு நின்றது.

அவர்கள் மறைந்தவுடன் பசங்கள் மீது திரும்பியது.

‘யோவ், இது என்னா கேசு?’

‘தெஃப்ட் கேசு சார்’.

அவர்களைப் பார்த்தவுடனே எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது.

‘ எதைக் கத்துகறீங்களோ இல்லையோ இத கத்துக்கங்க’.

பொளுக் என்று இரண்டு பேரையும் ஒருவனை வலது கையாலும் இன்னொருவனை இடது கையாலும் பலமாக அடித்தார். உரமேற்றிய உலக்கை கைகளின் அடிக்கு இருவரும் தாக்குப் பிடிக்காமல் சுருண்டு விழுந்தனர்

‘கம்ப்ளைன்ட் நம்பர் ஆயிடுச்சா?’

டைட்டரை பார்த்துக் கேட்டார்.

‘ஆயிடுச்சுங்க’.

வாங்கி படித்தார்.

‘செயினு எங்கடா வச்சிருக்கீங்க?’

‘சார் எனக்கு ஒன்றுமே தெரியாது சார்’

‘வூடு எங்கடா?

‘சார் நாங்க பாலாஜி நகர்ல் ஏசி ரிப்பேர் பண்ற கட வெச்சிருக்கோம் சார்’.

‘யாருடா ஓனர்?’

‘நாங்க மூணு பேரு பார்ட்னர்ஸ் சார்’.

‘என்னடா மயிறு பார்ட்னர்ஸ்? பெரிய அம்பானி. திருட்டு நாய்களா’ பூட்ஸ் காலால் ஒருத்தனை எட்டி உதைத்தார்.

‘அய்யோ அம்மா’ என்று சுருண்டான்.

‘நீங்க ரெண்டு பேர் மட்டும் தானா? கூட வேற யாராவது உண்டா?’

‘இன்னொருத்தன் உண்டு சார்’. முத்து.

‘அவன் எங்கடா?’

‘ ஊருக்குப் போய் இருக்கான் சார்’.

‘எந்த ஊருடா?’

“கோவில்பட்டி சார்’.

‘எப்படா போனோன்?’

‘இன்னைக்கு மத்தியானம் சார். ஊர்ல திருவிழான்னு போயிருக்கான் சார்’.

‘அப்ப செயின அவன் கிட்ட குடுத்து விட்டீங்களாடா?’

‘இல்லைங்க சார்’.

‘அப்ப எங்கடா இருக்கு?’

‘சார் எங்களுக்கு ஒன்னுமே தெரியாது சார்’.

இருவரும் மாற்றி மாற்றிப் பதிலளித்தார்கள்.

தமிழ், ‘சார் கடையில வேலை ஜாஸ்தியா இருக்கு சார். இன்னிக்கு சாய்ந்தரத்துக்குள்ள ரெண்டு மிஷினு டெலிவரி பண்ணனு……’

முடிப்பதற்குள் பளீரென்று கன்னத்தில் ஒரு அறை விழுந்தது.

‘புறம்போக்கு… நான் என்ன வேல மயிறு இல்லாம விசாரிச்சுக்கினு இருக்கனா?’

யோவ் இது நாய்ங்ள கொண்டு போய் லாக்கப்ல போடு. பேண்ட் சொக்கா அவுத்துட்டு ஜட்டியில உட்காரவை. இதோ வந்துடறன்’.

அவரு ‘இதோ வந்துடுறேன்னு’ சொன்னா வெளிய போய்

பங்க் கடையில ஒரு டீ சிகரெட்டுக்கு கமிட் ஆகிறாறுன்னு‌.அர்த்தம்.

ஒரு நாளைக்குக் குறைந்தது பத்து டீ சாப்பிடனும். சிகரெட் இல்லாத சமயத்தில் டீ சீட்டுக்கு வந்துடும்.

வில்ஸை பற்றவைத்துப் பொறுக்க இழுத்தார். புகை உள்ளே போய் நுரையீரலைக் கிச்சு கிச்சு மூட்டியவுடன் படபடப்பு கொறைஞ்சி நிம்மதியானது போல இருந்தது.

இந்த இன்ஸ்பெக்டரால நிம்மதியே போச்சு. போலீஸ் வேலைக்குக் கொஞ்சமும் இலாயக்கில்லாதவனுங்க. பரிட்சை எழுதி நேரா இன்ஸ்பெக்டரா சீட்ல வந்து உட்காந்துக்கிட்டு நம்ம உயிர எடுக்கிறானுங்க. கிரிமினல்ஸ் கூட எப்படி டீல் பண்றதுன்னு தெரியல. இந்த ஸாப்ட் மயிறு அப்புரோச் எல்லாம் வேலைக்கு ஆவாது. போலீஸ்காரங்க மேல பயம் போய்டும். அடி அடி அடி….. இது ஒண்ணுதான் தப்பு பண்ண வைக்காது என உறுதியாக நம்பினார் பாண்டியன்

சிகரெட்டை போட்டு பூட்ஸ் காலால் அழுத்தி நசுக்கிட்டு ரெடியா போட்டு வைத்திருந்த டீயை எடுத்து வாயில் வைத்து உறிஞ்சினாரு.

உள்ளே வந்த போது கம்பிகளுக்குப் பின்னால் அந்த இரண்டு இளைஞர்களும் ஜட்டியில் நின்று கொண்டிருந்தார்கள். ரெண்டு பேரு ஜட்டியிலேயும் கிழிச்சல்கள் கண் சிமிட்டின.

இந்த கேச பொருத்த வரைக்கும் ஒரு முடிவுக்கு வந்துட்டாரு. பசங்க ஏதோ கடை நடத்தறாங்க. பெருசா லாபம் பாக்க முடியல. அதனால வேலை செய்யற இடத்துல கை வைக்க ஆரம்பிச்சிட்டாங்க. பொருள பத்திரப்படுத்தி ஒருத்தன ஊருக்கு அனுப்பிச்சிட்டானுங்க. இதெல்லாம் முதல்கட்ட அமெச்சூர் வகை திருட்டு. இவனுங்கள இப்படியே வளரவிட்டா ப்ரொபஷனல்ஸ் ஆயிடுவாங்க. அவன் ஏதோ ஊருக்கு போய் இருக்கான்னு சொன்னாங்களே.‌என்ன ‌ஊரு.‌?ஆங். கோவில்பட்டி. விசாரிக்க சொல்லணும். அவன தூக்கினா கேஸ் முடிஞ்சிடும்.

சப்-இன்ஸ்பெக்டர்க்கு

இப்பதான் ஒரு திருப்தி வந்தது. கம்பீர மீசைய முறுக்கினார்.

எத்தனை வருஷம் சர்வீஸ். நேத்து வந்தவன் எல்லாம் என்னா உருட்டறானுங்க.

திருச்சியில் வண்டி நின்றது விஜய் ஒரு காபி சாப்பிடலாம் என்று வண்டியிலிருந்து இறங்கினான். போன் அடித்தது.

‘என்னா தமிழ்?’

தமிழால் பேசவே முடியவில்லை அழகை.

விஜய் பதறினான். ‘என்னடா மாப்ள, என்ன ஆச்சு?

தமிழால் பேசமடியவில்லை.

முத்து போனை வாங்கி‌

‘நம்ம கடைய ஒட்டுனா மாதிரி இருக்குதே அந்த பங்களா வீடு’.

‘ஆமாம்’.

‘அவங்க வீட்ல 3 பவுன் செயின காணுமாம்?’

‘அதுக்கு நாம என்னடா பண்றது?’

‘ஏசி ரிப்பேர் பண்ணப் போன நாமதான் திருடிட்டோம்னு கம்ப்ளைன்ட் பண்ணி இருக்காங்க’.

‘இப்ப நானும் தமிழும் போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கோம்டா. அடிக்கிறாங்கடா’. சொல்லும்போதே அவன் குரல் உடைந்து அழுதான்.

‘தயவு செஞ்சு உடனை‌ திரும்பி வந்துடு’.

கான்ஸ்டபிள் போனை வாங்கி

‘டேய் உடனே பஸ்ஸ புடிச்சு ராத்திரிக்குள்ள டேஷனுக்கு வந்திடு. எங்கேயாவது ஓடிகீடி பூடலாம்னு நெனைக்காதே. வகுந்திடுவோம்’.

‘ஊர்ல அம்மாக்கு உடம்பு சரி இல்லனு போய்கிட்டு இருக்கிறேன் சார். நாங்க எல்லாம் நல்ல பசங்க சார். அந்த மாதிரி செய்ய மாட்டோம் சார்’.

‘உடனே கிளம்பி வா. நேர்ல வந்து சொல்லு’.

‘அம்மா சார்’.

‘அம்மா ஒன்னும் போய்ட மாட்டாங்க. கிளம்பி ‌வாடா’.

‘சரிங்க சார்’.

சப் இன்ஸ்பெக்டர்

‘என்னய்யா சொல்றான்?’

‘வந்துற்றேன்னு சொல்றான்ங்க அய்யா’.

மாலை ஆறு மணிவாக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனுக்கு வந்தார். அடுத்த 2 நாட்களுக்கான பந்தோபஸ்து ஏற்பாடுகள் மனதை ஆக்கிரமித்துக் கொண்டது.

மீண்டும் வெளியே கிளம்பும்போது சப் இன்ஸ்பெக்டரிடம்

‘என்ன ஆச்சு இந்த கேசு?’ என்றார்.

‘இன்னொரு அக்கிஸ்ட்டுக்கு வெயிட்டிங் சார்’.

‘சரி சரி பார்த்துக்கங்க. சின்ன பசங்க. பெரிய கிரைமும் இல்ல’ என்று சொல்லிக்கொண்டே வெளியே போனார்.

எந்த கிரைமும் கிரைமுதான். இதெல்லாம் முளையிலேயே கிள்ளி எடுக்கலைன்னா நாளைக்கே பெரிய மரமாகி சமுதாயத்திற்கே கேடு.

நினைத்துக் கொண்டார் .

விஜய் வரும்போது செயினோடு வருவான். ரெண்டு தட்டு தட்டி எச்சரிக்கை பண்ணி விட்டு விடலாமா என்று யோசித்தார்.

விஜய் 8 மணிக்கு அடித்துப் பிடித்து வந்து சேர்ந்தான்.

‘எங்கடா செயின்?’

‘எங்களுக்கும் இந்த திருட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல சார்’.

சுர்ரென்று கோபம் வந்தது சப் இன்ஸ்பெக்டருக்கு.

கூடவே பசி வேறு சேர்ந்து கொண்டது.

எழுந்து பளீரென அறைந்தார்.

விஜயின் காது கொய்ங் என்றது.

‘வெளாடறீங்களடா பொறுக்கி நாய்ங்களா’.

அடி ஒருபுறம். வாழ்க்கையில் அதுகாறும் அப்படிப்பட்ட சொல்லடிகளை கேட்டது இல்லாததினாலே கூடுதலாக அதிர்ச்சி.

அவன் முடியைக் கொத்தாகப் பிடித்து இழுத்துத் தள்ளினார்.

சுவரில் இடித்து கீழே விழுந்தான்.

‘யோவ் ஏட்டு இந்த நாயையும் துணிய அவுத்து ஜட்டியோட உள்ள தள்ளு. அந்த லத்தியை எடுத்து வை. இதோ வந்துடறன்’.

மீண்டும் சிகரெட்டு ஒரு டீ…பசியை அடக்க சாயந்திரம் போட்டுவைத்திருந்த இரண்டு போண்டாவை எடுத்து உள்ளே தள்ளினார்.

ஏட்டு செல்வராஜை அழைத்துக் கொண்டு கம்பிகளுக்கு உள்ளே சென்று அவர்களைக் கோபம் தீரும் வரை அடித்து விளாசினார். பசி காரணமாக மூன்று பேருக்குக் கத்துவதற்கோ அழுவதற்கோ குரல் இல்லை. மார்பிலே ‌ கைகளை இறுக அணைத்துக் கொண்டு வாங்கிக் கொண்டார்கள்

அடித்துச் சலித்தவுடன் வெளியே வந்தார்.

‘கல்லுளி மங்கன்ங்க’. ஒரு ராத்திரி உள்ள இருந்தா நாளைக்கு உண்மையா சொல்லிடுவானுங்க. இல்லண்ணா வெள்ள காயிதத்தில கையெழுத்து வாங்கிடனும்’.

எரிச்சலோடு வீட்டுக்குக் கிளம்பினார்.

மூன்று பேரும் தரையில் சுருண்டு கிடந்தனர்.

ஏட்டு குடிக்கத் தண்ணீர் கொடுத்தார். தமிழுக்கு மட்டுமே பாட்டிலைத் தூக்கிக் குடிக்கும் சக்தி இருந்தது.

இரவு பத்து மணி வாக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனுக்கு வந்தார்.

அலைபேசியில்,

‘நீ சாப்பிடுமா‌ நான் இப்பதான் ஸ்டேஷனுக்கு வந்து இருக்கேன். அரை மணி நேரம் ஆகும். காத்திருக்காதே. சாப்பிடு’.

பந்தோபஸ்து ஏற்பாடெல்லாம் சிறப்பாகச் செய்யப்பட்டிருக்கிறது என்று உள்துறை செயலாளரும். கமிஷனரும் பாராட்டியது திருப்தி அளித்தது.

ஆயாசமாக இருந்தது. பாட்டில் திறந்து தண்ணீர் குடித்தார்.

‘கான்ஸ்டபிள் லாக்கப்பில யாரு? அந்த பசங்களா? ஸ்டேட்மென்ட் வாங்கியாச்சா?’

சல்யூட்.. ‘இல்லைங்கைய்யா’.

‘கூட்டிட்டு வா’.

‘சரிங்கைய்யா’

சல்யூட் அடித்து இரண்டடி பின்னால் சென்று வெளியேறினார்.

இந்த செயற்கைத்தனம் பிடிக்கவில்லை.

மூன்று பேரும் நிற்க முடியாமல் நின்று கொண்டிருந்தார்கள்.

இன்ஸ்பெக்டர் அவர்களை ஆராய்ந்தார்.

நையப் புடைக்கப்பட்டது நன்றாகத் தெரிந்தது.

‘யார் விசாரிச்சது?’

‘அய்யா, சப் இன்ஸ்பெக்டர் சாருங்க’.

‘ம்.’

‘நீங்க எல்லாம் என்ன பண்றீங்க?’

தமிழ்தான் பேசினான்.

‘சார் நான் சென்னை சார். வீடு திருவொற்றியூர் சார். விஜி கோவில்பட்டி சார். முத்து வேலூரு சார். நாங்க மூணு பேரும் திருவொற்றியூரில ராமகிருஷ்ணா பாலிடெக்னிக்ல மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிச்சோம் சார்.

இராயப்பேட்டையில் எங்க அப்பா ஃப்ரெண்டு காதர் பாய் னு ஒருத்தர் ஏசி ரிப்பேர் கடை வெச்சிருந்தார் சார்‌. அவர்கிட்ட நாங்க மூணு பேரும் வேலைக்குச் சேர்ந்தோம் சார். அவரு வேற வேலை கிடைச்சதுன்னு துபாய்க்கு போயிட்டார் சார். கடையும் கஷ்டமருங்களையும் எங்க கிட்ட குடுத்துட்டு போயிட்டாரு. நாங்க மூணு பேரு ஆறு மாசமா நடத்திவிட்டு வரோம் சார்’.

‘சொந்த இடமா?’

‘இல்ல சார் வாடகை சார்’.

‘சரி என்ன நடந்தது?’

‘சார் சத்தியமா ஒன்னுமே தெரியாது சார். அந்த பங்களா வூட்டு காம்பவுண்டு ஒட்டின மாதிரி தான் எங்க கடை இருக்குது.

காலைல வீட்ல ஏசி ஃபால்ட்னு அந்த சார் ஆபீஸ் போகும்போது சொல்லிட்டு போனாரு. பத்தரை மணிக்கு விஜயும் முத்துவும் வீட்டுக்கு உள்ள போனாங்க சார்’.

இப்போது முதன்முறையாக விஜய்..

‘சார் அந்த அக்காதான் ரூம்புக்குள்ள கூட்டிட்டு போனாங்க. நாங்க ரெண்டு பேரும் மிஷின் பிரிச்சி பார்த்தோம் சார். கப்பாசிட்டர் வேலை செய்யல. முத்து, கடையில போய் ஒரு ஸ்பேர் எடுத்து கிட்டு வர போனான் சார். நான் பிரஷ் வச்சி மிசின தொடச்சேன் சார். ஒரே டஸ்ட்டா இருந்தது. அப்புறம் கெப்பாசிட்டர் பிக்ஸ் பண்ணி ஏசி வேலை செய்யுதுன்னு போட்டு காண்பிச்சுட்டு வந்துட்டோம் சார். அந்த அக்கா ஃபுல்லா அங்கேயேதான் இருந்தாங்க சார்’.

‘உங்க வீடுங்க எங்க?’

‘அவன் திருவத்தியூரு. நாங்கள் கடையிலேயே தங்கிக்கறோம் சார்’.

‘மூணு பேரும் கஷ்டப்பட்டு மேலே வரணும்னு உழைக்கிறோம் சார்’.

‘சத்தியமா எந்த தப்பு தண்டாக்கும் போனதே இல்ல சார்

எழிலரசனுக்கு தெளிவாகப் புரிந்துவிட்டது இவர்களுக்கும் திருட்டுக்கும் துளிகூட சம்பந்தம் இல்லை.

‘ஏட்டு இவனுகங்க ஏதாவது சாப்பிட்டாங்களா?’

‘இல்லைங்க அய்யா’.

‘மூணு பேரு கிட்டயும் கையெழுத்து வாங்கிட்டு அனுப்பிடு.

நாளைக்கு ரைட்டர் வந்தா இவங்கள இன்ஸ்பெக்டர் விசாரிச்சாரு. பசங்க மேல குற்றமில்லைன்னு எழுத சொல்லு.

தனது பாக்கெட்டில் இருந்து இரண்டு இருநூறு ரூபாய்த் தாள்களை எடுத்து கொடுத்து போகும்போது சாப்பிட்டுட்டு போங்க. என்றார்.

மறுநாள் காலை அலுவலகத்தில் ராம் கோபால் ஒரு மீட்டிங்கில் இருக்கும்போது சித்ராவிடமிருந்து அழைப்பு வந்தது.

‘என்ன சித்து அவசரமா?’

‘வந்து …வந்து… செயின் இங்க தாங்க இருக்கு’.

‘அடக்கடவுளே, என்னடி சொல்ற?’

‘ஆமாம்பா துணியெல்லாம் எடுத்து வாஷிங் மெஷின்ல போடும்போது கிடைச்சதுபா’.

‘சரியா கவனிச்சு இருக்கலாம் இல்ல’.

‘ஆமாங்க பாவம் அந்த பசங்க. அதுக்கு தான் போன் பண்ணேன். கொஞ்சம் போலீஸ் ஸ்டேஷன்ல போய் சொல்லிடுங்க’.

ஒருகணம் யோசித்துப் பார்த்தான். அந்த சப்-இன்ஸ்பெக்டர் முகம் ஞாபகம் வந்தது. அவருடைய கோபம் இப்போது இவன் மேல திரும்பும்.

‘சித்து நமக்கு கிடைச்ச மாதிரி காண்பிச்சுக்க வேண்டாம். இன்னொரு நாள் போனா அவங்களே அந்த பசங்களை வெளியில் விட்டுடுவாங்க. இப்ப போய் நாம ஏதாவது சொன்னா அந்த போலீஸ்காரன்

நம்மள எகிறுவான்’.

‘சரிங்க’.

‘அந்த சம்பவத்துக்கு பிறகு அந்த ஏசி கடை திறக்கப்படவேயில்லை. தமிழ் ராயபுரத்தில் ஒரு ஆப்செட் அச்சகத்தில் வேலைக்குச் சேர்ந்து விட்டான். முத்து வேலூருக்குப் போய்விட்டான்‌ துணிக்கடையொன்றில் சேர்ந்திருக்கிறான். தமிழுக்கு கோவில்பட்டியில் இன்னும் வேலை எதுவும் கிடைக்கவில்லை பட்டாசு கம்பெனி ஒன்றில் வேலை தருவதாகச் சொல்லி இருக்கிறார்கள். வேலை வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு ஒரு சின்ன பிரச்சனை. பலமாக வாங்கிய அறையில் ஒரு பக்கம் காது முற்றிலுமாக கேட்பதில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *