(2001ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 | அத்தியாயம்-4
நான் கல்யாணத்துக்குப் பெண் பார்க்கப் போகிறவன் என்று வைத்துக்கொள்ளுங்கள். என் முன் எப்படி வந்து உட்காருவாள்? அப்படி வந்து உட்கார்ந்தாள் மாயா. தரை நோக்கி வந்தாள். ஒரு தடவை நிமிர்ந்து கரம் குவித்து, போர்த்திக்கொண்டு உட்கார்ந்தாள். தன் கை நகங்களைப் பார்த்துக்கொண்டாள். எளிய புடைவை அணிந்திருந்தாள். கழுத்தில் காதில் நகைகள் இல்லை. திருவள்ளுவரின் ‘மனை மாட்சி’ என்கிற அதிகாரத்திலிருந்து நேரே நடந்துவந்தவள்போல் இருந்தாள்.
‘அவள் மிகவும் மன அமைதி குன்றி இருக் கிறாள்’ என்றான் அண்ணன். மற்றொரு சிகரெட் பற்றவைத்துக்கொண்டான்.
நான் அவள் முகத்தைச் சற்றுநேரம் நோக்கினேன். குழந்தை முகம். சின்ன உதடுகள், மேக்கப் என்பதே இல்லை. ‘த’ என்றால் அழுதுவிடுவாள் போல் தோன்றியது. அந்த அஃபிடவிட்டில் எழுதி இருந்த தைரியமான வார்த்தைகளுக்கும் அவள் உருவத் துக்கும் முரண்பாடாக இருந்தது.
ஆனால் அந்த அடக்கத்தையும் மீறி மாயாவின் உடலமைப்பில் ஒருவிதக் காந்தம் இருந்ததை என்னால் உணர முடிந்தது.
அது அந்தக் குழந்தை முகத்துக்குப் பொருந்தாத மார்பின் அளவிலா? அல்லது…
உடை களைந்தால் கோயில் சிலை போல, தேவி போல இருப் பாள் என்று தோன்றியது. பூஜை செய்யலாம்.
நான் கனைத்துக்கொண்டேன்.
‘என் பெயர் கணேஷ், மிஸ் மாயா! இந்த வழக்கு கோர்ட்டுக்கு வந்தால் அதனால் ஏற்படப்போகும் பப்ளிஸிடியைப் பற்றி உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன்.’
‘தெரியும்’ என்றான் அண்ணன்.
‘உங்களுக்கு வேண்டியது என்ன?’
‘நியாயம்!’ என்றான். மாயா பேசவில்லை.
‘நஷ்ட ஈடு கேட்டிருக்கிறீர்கள்?’
‘கோர்ட்டில் ஒரு பைசா தீர்ப்பானால்கூட நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.’
‘கோர்ட்டுக்கு வெளியே அதிகமாகப் பைசா கிடைக்கும் என்றால்?’
‘அதைத் தொட மாட்டோம்! அந்த ஆள் ஒரு ஃப்ராட் சாமியார். அவன் பாஸ்டர்ட். அன்று காலை என் தங்கை திரும்பி வந்த போது, நீங்கள் அவளைப் பார்த்திருக்க வேண்டும்! டெரிபிள்!’
‘இருந்தும் இந்தக் கேஸை நாம் கோர்ட்டில் வாதாடவேண்டிய அவசியமில்லை என்று தோன்றுகிறது. அதனால் இரண்டு கட்சிகளுக்குமே லாபம் இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் எவ்வளவு நஷ்ட ஈடு எதிர்பார்க்கிறீர்கள்!’
‘நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. சமூகத்தில் இந்த மாதிரி ஏமாற்றிக்கொண்டு திரியும் ஆசாமியை, பக்தி என்ற பெயரில் கன்னிகைப் பெண்களுக்குக் களங்கம் விளைவிக்கும் ஆசாமியை எக்ஸ்போஸ் பண்ணவேண்டும். அதுதான் என் குறிக்கோள். நீங்கள் வியாபாரம் பேச வந்திருக்கிறீர்கள். மன்னிக்கவும். எங்களை வாங்க முடியாது. என்ன மாயா?’
‘ஆம்’ என்றாள்.
‘தப்பாக எடுத்துக்கொள்கிறீர்கள். நான் விலை பேச வரவில்லை. உங்கள் குறிக்கோள் என்ன என்று தெரிந்துகொள்ள வந்தேன். உங்களுக்கும் பிற்பாடு நன்மை ஏற்படும் என்று ரீதியில்தான் கோர்ட்டுக்கு வெளியே பேசித் தீர்த்துவிடலாம் என்று சொன்னேன். கோர்ட் என்பது பொது இடம். பொது இடத்தில் மாயா போன்ற அழகான பெண்ணை சில எக்கச்சக்கமான கேள்விகளுக்கு உள்ளாக்கவேண்டும் என்பதை நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.’
‘என்ன கேள்விகள்?’ என்றாள் மாயா.
‘இரு! அவர் பயமுறுத்துகிறார். மிஸ்டர்! நீங்கள் என்ன கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம். எங்களுக்குப் பயமில்லை. எங்கள் பக்கம் உண்மை இருக்கிறது. உண்மையை கோர்ட்டில் சொல்லத் தயங்கவே வேண்டியதில்லை. அந்தப் போலிச் சாமியார் உமக்கு நிறையப் பணம் கொடுத்திருப்பார். நன்றாக, கொடுத்த காசுக்கு வாதாடுங்கள். நீங்கள் போகலாம்’ என்றான்.
‘ரமேஷ்’ என்று ஆரம்பித்தாள் மாயா.
‘ஷட் அப் மாயா!’ என்றான்.
‘உண்மை உங்கள் பக்கமே இருக்கட்டும். நீங்களே இந்தக் கேஸில் வெல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளலாம். வெற்றி என்பது என்ன? அதன் அர்த்தம் என்ன? உங்கள் தங்கை களங்கப் படுத்தப்பட்டுவிட்டாள் என்பது நிரூபிக்கப்படும். உங்களுக்கு நஷ்ட ஈடு கிடைக்கும். அதே சமயம் அந்த இளம்பெண்ணின் எதிர்காலம் பாழாகிவிடுகிறது, அல்லவா! பேப்பரில் போட்டோ வரும். நான் கேட்கப்போகும் அப்பட்டமான கேள்விகள் பதில்கள் எல்லாம் பிரசுரமாகி… ஒரு திருமணமாகாத பெண்ணுக்கு இத்தனை விளம்பரம், இந்த மாதிரி விளம்பரம் தேவையா? யோசித்துப் பாருங்கள்.’
‘மிஸ்டர் கணேஷ், உங்கள் பேச்சில் பயந்து அந்த மகா ஃப்ராட் ஆசாமியைத் தப்பிக்க விட்டுவிடுவோம் என்று எதிர்பார்க்காதீர்கள். இந்தக் கேஸை சுப்ரீம் கோர்ட்வரை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். புரிகிறதா?’
நான் என் பையிலிருந்து சிறிய காகிதத்தை எடுத்து அதில் என் டெலிபோன் நம்பரை எழுதி மேஜைமேல் வைத்தேன்.
‘நீங்கள் ஒரு வேளை மனம் மாறினால், என் டெலிபோன் நம்பர் இதில் இருக்கிறது. என்னிடம் நீங்கள் பேசலாம். வருகிறேன்.’
‘கோர்ட்டில் சந்திக்கலாம்’ என்று சொல்லிவிட்டு என் முகத்தில் அறைந்தது போல் கதவைச் சாத்தினான்.
வெளியே வந்த நான் காரை சந்தின் முகப்பில் நிறுத்தினேன். அங்கிருந்த ஓட்டல் ஒன்றில் நுழைந்து காப்பி ஆர்டர் செய்தேன். யோசித்தேன். பணம் அவர்கள் குறிக்கோளாக இருக்காது. அந்தப் பெண் ஏன் பேசவில்லை? அண்ணன்காரனே முழுவதும் பதில் சொல்கிறான்.
காப்பியைப் பாதி சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது கடைக்கு வெளியே அந்த மாயாவின் அண்ணனை மறுபடியும் பார்த்தேன். அவசர அவசரமாக ஒரு ஆட்டோ பிடித்து அதில் ஏறிக்கொண்டு சென்றான்.
நான் உடனே செயல்பட்டேன். மேஜைமேல் பைசாவை வைத்து விட்டு வெளியே வந்து காரில் ஏறிக்கொண்டேன்.
அந்த ஆட்டோ ரிக்ஷா ஒரு பர்லாங் தூரத்தில் போய்க் கொண்டிருந்தது. உடனே காரைக் கிளப்பி அதைப் பின் தொடர்ந்தேன்.
ஆட்டோரிக்ஷாவின் பின் பக்கம் சற்று நசுங்கி இருந்தது. ‘அவசர போலீஸ் உதவிக்கு’ என்று எழுதி இருந்தது பாதி அழிந்திருந்தது.
அந்த அடையாளம், பின்னால் அதைச் சுலபமாகத் தொடர்வதில் உதவியது. இல்லாவிட்டால் அந்த ஆட்டோ போன சிக்கலான பிரயாணத்தில் எப்போதோ அதை இழந்திருப்பேன்.
மவுண்ட் ரோடு, தேனாம்பேட்டைப் பகுதியில் செனடாஃப் ரோடின் அருகே சென்று ஒரு அமைதியான வீட்டின் எதிரில் நின்றது. அங்கே அவன் இறங்கிக்கொண்டு அவசரமாகப் பைசா கொடுத்துவிட்டுப் பதட்டத்துடன் வீட்டின் உள்ளே சென்றான்.
நான் அந்த வீட்டின்முன் மெதுவாகக் காரைச் செலுத்தினேன். ‘ஆர். வாசுதேவன், ஆர்.வி. இன்டர்நேஷனல்’ என்ற போர்டு ஒரு ஆணியில் சாய்ந்து தொங்கியது. கணபதி நகர் என்பது தெருவின் பெயர் என்று தெரிந்துகொண்டேன்.
நான் என் தம்புச் செட்டித் தெரு ஆபீசை அடைந்தபோது –
மாலை ஏழு மணி ஆகிவிட்டது. என் ஜூனியர் வஸந்த் எனக்காகக் காத்திருந்தான்.
‘நீ இன்னும் போகவில்லையா? உன் டென்னிஸ் இன்று கோவிந்தாவா?’ என்றேன்.
‘நீங்கள் கிருஷ்ணா மிஷனிலிருந்து திரும்பி வருகிறீர்கள். ஏதாவது முக்கிய வேலை இருக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.’
‘குட்! தாங்க்ஸ் வஸந்த். உன் உதவி நிச்சயமாகத் தேவையாக இருக்கிறது எனக்கு. ஒரு பேப்பரை எடுத்துக்கொள். எழுதிக் கொள். நீ செய்யவேண்டிய காரியங்கள் இவை. ஒன்று! ஸர் ஜான் உட்ரஃப் என்பவர் எழுதிய ‘தந்த்ரா’ என்கிற புஸ்தகம் ஒன்று வேண்டும். எங்கே கிடைக்கும்?’
‘கன்னிமராவில் இருக்கும்.’
‘கன்னிமராவில் இருக்கும் புஸ்தகம் ஏற்கெனவே எடுக்கப்பட்டு இருக்கிறது. ஹிக்கின்பாதம்ஸில் பார். புக் சென்டரில் பார். என்ன விலை இருந்தாலும் அதை வாங்கிக்கொள், ஓகே!’
‘ஓகே.’
‘இரண்டு, ஆர்.வாசுதேவன், ஆர்.வி. இன்ட்டர்நேஷனல், நம்பர் மூன்று, கணபதி நகர், செனடாஃப் ரோடுக்குப் போ. பக்கத்தில் அந்த ஆசாமியைப் பற்றிக் கடைசி ஸ்க்ரூ ஆணி வரை விவரம் சேகரிக்கவேண்டும்.’
‘ஓ.கே.’ எழுதிக் கொண்டான்.
மூன்று, சுவாமி கிருஷ்ணானந்த சன்மார்க்க பதாவைப் பற்றி எல்லா விவரங்களும் வேண்டும். பிறந்தது, படித்தது, பிரபல மானது எல்லாம்…
‘நான்கு இந்தக் கேஸைப் பற்றி சென்னை பேப்பர்களில் வந்த அனைத்துச் செய்திகளும் வேண்டும்.
‘ஐந்து, ஒரு பாட்டில் பீர் வேண்டும்’ என்று முடித்தேன்.
‘டன்’ என்றான் வஸந்த் சிரித்துக்கொண்டே! ‘எப்போது வேண்டும்?’
‘பீரா? இப்போதே!’
‘பீர் ஃப்ரிஜ்ஜில் இருக்கிறது. நீங்கள் கேட்ட விவரங்கள்?’
‘நாளை மாலைக்குள்.’
‘டன்’ என்றான்.
அவன் கிளாஸ்களை அமைக்க, ‘இந்த அஃபிடவிட்டை நீயும் படித்துப் பார். உனக்கு என்ன தோன்றுகிறது என்று சொல்’ என்றேன்.
வஸந்த் சுறுசுறுப்பான இளைஞன். எனக்கு பிரீஃப் தயாரிப்பதி லிருந்து என் காருக்கு வரி கட்டுவது, லைசென்ஸைப் புதுப் பிப்பது, பிரயாணத்துக்கு டிக்கெட் வாங்குவது போன்ற எத்த னையோ சில்லறைக் கவலைகளை நீக்கி, எல்லாம் செய்கிற வன். சிலவேளை பிரகாசமாக எனக்குத் தோன்றாத கோணங் களைச் சொல்வான். என்மேல் ஒருவித பக்தி அவனுக்கு. நான் குடிக்கும் சிகரெட்டுகள் அதிகமானால் எச்சரிப்பான். கட்சிக் காரர்களிடம் என் வினோத சுபாவங்களுக்குச் சரிகட்டி சால் ஜாப்பு சொல்வான். கேஸ் தேதிகளைக் குறித்து வைத்துக்கொள் வான். வஸந்த் எனக்குக் கிடைத்த ரத்தினம்.
கேஸைப் படித்துவிட்டு மெலிதாக விசில் அடித்தான்.
‘சொல்’ என்றேன்.
‘நிச்சயமாக இந்தப் பெண்ணின் குற்றச்சாட்டு கற்பனை இல்லை. இந்த மாதிரி விஷயங்களைக் கற்பனை செய்ய முடியாது. ஹேவஜ்ர சக்தி… பூஜை!’ ஒரு தடவை தலையை ஆட்டிக் கொண்டு, ‘பாஸ், எங்கே இருக்கிறது அந்த கிருஷ்ணா மிஷன்’ என்றான்.
‘ஏன் சேர வேண்டுமா? வஸந்த், அந்த ஆசாமி தண்ணீரை நிறம் மாற்றிக் காட்டினார்… தெரியுமா?’
‘தண்ணீரை?’
‘என் கண் முன்னே நடந்தது. தண்ணீர் நிறம் மாறுகிறது. மறுபடி தண்ணீர் ஆகிறது. யூ ஆர் நாட் இம்ப்ரெஸ்ட்?’
அவன் தலையை ஆட்டினான். ‘அந்தப் பெண்ணைப் பார்த் தேன்…’ என்றேன்.
‘பாஸ், நீங்கள் என்னைக் கூப்பிட்டிருக்க வேண்டும். இந்தச் சின்ன வேலை எல்லாம் நான் கவனித்துக்கொள்ளக் கூடாதா?’
‘உன்னை அனுப்பி இருந்தால் மற்றொரு நஷ்ட ஈடு வழக்கு ஏற்பட்டிருக்கும். அவள் அண்ணன்… ம்ஹூம். அசைய மாட்டேன் என்கிறான். நான் பேசி முடித்து வெளியே வந்ததும், அவசர அவசரமாக ஆட்டோவில் புறப்பட்டு இந்த செனடாஃப் புள்ளியைப் பார்க்க ஓடினான்!’
‘தந்த்ர சாஸ்திரம் இதில் எங்கு வருகிறது?’
‘ஹேவஜ்ர சக்தி பூஜை, தந்த்ர சாஸ்திர பூஜைகளில் ஒன்று என்று சுவாமி சொன்னார். வஸந்த், மற்றொரு விஷயம். நான் அந்தப் பெண்ணின் வீட்டில் காத்திருந்தபோது அங்கே கன்னிமரா லைப்ரரியிலிருந்து எடுத்து வரப்பட்ட புத்தகம் ஒன்றைப் பார்த்தேன். என்ன புத்தகம், தெரியுமா?’
‘ஸர் ஜான் உட்ராஃபின் தந்த்ரா என்கிற புஸ்தகம். ஐ ஸீ தி கனெக்ஷன் பாஸ்’ என்றான். புத்திசாலி.’
‘இப்போது என்ன சொல்கிறாய்?’
‘நீங்கள் கேட்ட விவரங்களைச் சேகரித்தபின்தான் கொஞ்சம் தெளிவாகும் என்று தெரிகிறது, சியர்ஸ்!’
– தொடரும்…
– மாயா (குறுநாவல்), வெளிவந்த ஆண்டு: 2001, தினமணி கதிர்