மீண்டும் ஒரு முறை அந்த மூன்று மாடி அழகுநிலையத்தை அண்ணாந்து பார்த்தார் இன்ஸ்பெக்டர் சாரங்கன்…
‘அம்புலி ‘ என்று மின்னி மின்னி அணைந்து கொண்டிருந்தது…
‘ம்ம்ம்.!!! இரண்டு வருஷத்துக்கு முந்தி குப்பனும் சுப்பனும் இருந்த எடத்தையெல்லாம் வளச்சு போட்டு குளுகுளு ஏசியில உக்காந்து மாதுளம் பழச்சாறு குடிச்சிட்டிருக்க..!!!
இப்ப உன்ன களிதிங்கணும்னு சொன்னா….???
காலத்தோட கொடுமையப் பாரு….!!!’
தனக்குள் முனகிக் கொண்டார் சாரங்கன்..
வாசலில் இருந்த செக்யூரிட்டி போலீஸ் ஜீப்பைப்பார்த்து அலறி அடித்துக் கொண்டு சலாம் வைத்தான்…
சாரங்கன் மட்டும் வண்டியிலிருந்து இறங்கி ரிவால்விங் கதவைத் திறந்து கொண்டு நேராக ரிசப்ஷனுக்குப் போனார்..
ரோபோக்களோ, என்று சொல்லி வைத்த மாதிரி ஒரே புடவை, சிரிப்பு, வெட்டி விட்ட முடியுடன் மூன்று அழகிகள் மூன்று கவுன்ட்டரில்….
அவர்கள் சாரங்கனைப்பார்த்து துளியாவது அதிர்ச்சி..???
ம்ஹூம்.. மெழுகு பொம்மைகள் போல புன்சிரித்தார்கள்..
சாரங்கனுக்கு இது கொஞ்சம் புதுமையாக இருந்தது..
இந்தக் கால யுவதிகளுக்கு எல்லாமே அலட்சியம்…
இன்ஸ்பெக்டரைப் பார்த்தவுடன் லேசாக ஒரு திடுக்கிடல் இருக்க வேண்டுமென்றெல்லாம் எதிர்பார்ப்பது முட்டாள்தனம்…
ஏன் இன்ஸ்பெக்டர் முடியலங்காரம் செய்து கொள்ளக் கூடாதா ? என்று நினைப்பதுதான் ப்யூர் ப்ரொஃபஷனலிஸம்!!!
ஏனோ நடுவில் இருந்த பெண் அவரை ஈர்த்திருக்க வேண்டும்…!!
நன்றாக த்ரெட்டிங் செய்யப்பட்ட புருவத்தை மில்லிமீட்டர் உயர்த்தி ‘ யெஸ்??’ என்றது அந்தக்குயில்..!!
“எனக்கு மேனகா மேடத்தப் பாக்கணும்…!!”
“டூ யூ ஹாவ் ப்ரீயர் அப்பாயின்ட்மென்ட்…??”
இப்போது சாரங்கனுக்கு கொஞ்சம் எரிச்சல் வந்தது..
‘ இது அசட்டுத் துணிச்சல் ‘ என்று மனதில் எண்ணிக் கொண்டார்..
“இல்லை..! ஆனா பார்த்தே தீர வேண்டிய கட்டாயம்…!!”
“பெர்சனல் ஆர் ப்ரொஃபஷனல்..??”
“மிஸ் ….??”
“ஜாஸ்மின்…!!?”
“யெஸ்.மிஸ் ஜாஸ்மின்……
அஃபீஷியல்தான்.அத அவுங்க கிட்ட நேர்ல தான் சொல்லணும்…!!”
“ஜஸ்ட் எ மினிட் சார்…!! அவுங்க இப்போ ஒரு கான்ஃப்ரன்ஸ்ல இருக்காங்க..!!!”
“திஸ் இஸ் வெரி அர்ஜன்ட்…”
“மெஸேஜ் அனுப்பிட்டேன் சார்..உடனை பதில் அனுப்பிடுவாங்க…!!!”
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் மிஸ்.மேனகா..M.D., CEO ஆஃப் ‘ அம்புலி..’ கண்முன்னே….!! தேவலோகத்திலிருந்து இறங்கி வந்த ஒரிஜினல் மேனகை போல…!!!
ஜாஸ்மினைப் போல மேனகாவால் அமைதிகாக்க முடியவில்லை..
அவளுடைய அதீத மேக்கப்பையும் மீறி அவளுடைய முகத்தில் வேர்வை முத்துக்கள்..
ஒரு வினாடி சமாளித்துக் கொண்டவள் ..
“இன்ஸ்பெக்டர் சாரங்கன்..!!! வாங்க..!!! என் கேபினுக்கு போலாம்…!!!”
இடதுபுறம் திரும்பி ஒரு நீண்ட வராண்டாவில் வலது பக்கத்தில் இருந்த பெரிய கண்ணாடி அறையின் கதவை திறந்தவள் ‘ ப்ளீஸ் கெட் இன் ‘ என்றாள்..
முதல் தளத்தின் பாதியை அடைத்துக் கொண்டிருந்தது அவளது கேபின்..
மியூசியத்தை சுற்றிப் பார்ப்பதுபோல பார்த்தாலே அரை மணி பிடிக்கும்..
“எக்ஸ்க்யூஸ்மீ மிஸ்டர் சாரங்கன். எனக்கு ரெஸ்ட் ரூம் உபயோகிக்க பத்து நிமிடம் அவகாசம் தேவை… மேக் யுவர் செல்ஃப் கம்ஃபர்ட்டபிள் !!!”
என்று கூறியவள் பதிலுக்காக காத்திராமல் உள்ளே சென்று மறைந்தாள்..
சாரங்கனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு…!!
“நான் கார்த்திகேயன் பேசறேன்..என்ன அரெஸ்ட் பண்ணிட்டீங்களா…?? பிரச்சனை ஏதாவது..?? மணி நாலாவது..!! இன்னும் லேட் பண்ணாதீங்க..!!
கார்த்திகேயன் மிகவும் கண்டிப்பான டி.எஸ்.பி..!!!
“யெஸ் சார்.. அவுங்க ரூமிலதான் இருக்கேன்..அவசரமா வாஷ் ரூம் போணம்னாங்க.. வெயிட் பண்றேன்…!!!”
“என்ன சாரங்கன்..??? நீங்க இப்படி முட்டாள்தனமா நடந்துப்பீங்கன்னு நான் கொஞ்சம்கூட நெனக்கல..
அவுங்க வேற வழியா தப்பிச்சு போயிட்டாங்கன்னா…..???இப்பவே மணி நாலரை.. பொழுது சாயரதுக்குள்ள அரெஸ்ட் பண்ணனும்னு எவ்வளவு கவனமா
இருந்தும்…??? “
சார்.. இன்னும் அஞ்சு நிமிஷத்தில வேல முடிஞ்சிடும்.!!”
“வேற வழியா தப்பிச்சு போனாங்க.. !!!அப்புறம் உங்களுக்கு டிஸ்மிஸ் ஆடர்தான்…!!!”
பட்டென அழைப்பைத் துண்டித்தார் டி.எஸ்.பி..!!
ஒரு வினாடி சாரங்கன் பயந்துவிட்டார்…
தொலைபேசியில் எண்களை ஒத்தினார்..
“கோபிநாத்..அலெர்ட்டா இருங்க!! வெளியே யாரையும் அனுமதிக்காதீங்க… யாராயிருந்தாலும் வெயிட் பண்ணட்டும்..!!
அப்படியும் நடக்குமா..??
நல்லவேளை..!!!! நடக்கவில்லை!
“சாரி..!! உங்களைக் காக்க வைத்துவிட்டேன்…!!”
உணர்ச்சிகளை மறைக்க இன்னும் கொஞ்சம் அலங்காரம் தேவைப்பட்டதுபோலும்…!!!
சர்வசாதாரணமாக தனது இருக்கையில் போய் அமர்ந்து கொண்டு..
“யெஸ்.. மிஸ்டர் சாரங்கன் ..??
என்றாள் மேனகா!!!!”
***
மேனகா …!!!
பத்து வருடங்களுக்கு முன்னால் இந்தப் பெயரைச் சொன்னால்’ யாரது..??’ என்று கேட்டவர்கள் தான்…
இன்று ‘ ஓ ..மேனகா..??’ என்று சொல்ல வைத்தவள்.. அதற்கு அவள் நிறையவே விலை கொடுக்க வேண்டியிருந்தது…
ஒரு விளம்பரப்படத்தில் ‘ போயே போச்சே !!!’ என்று சொன்னவள் தான், பிரபல துணிக்கடை மாடலாகி, மிக்ஸி, கிரைண்டர் விற்று, மிஸ்.கோடம்பாக்கத்திலிருந்து மிஸ்.சென்னையாகி, இரண்டு படங்களில் ஹீரோயினுக்கு பின்னால்.’ லால..லால லாலா..’ பாடி, பின் ஹீரோவுக்கு தங்கையானபின் அடுத்து அக்கா என்றவுடன் புத்திசாலித்தனமாய் வெளியேறியவள்…!!!!!
சின்னத்திரையின் பாலிடிக்ஸ் புரியாமல் போகவே ஒரு அழகுக் கலையில் டிப்ளோமா பெற்று ஒரு முட்டுச்சந்தில், ‘ ‘மேனகா அழகு நிலையம் ‘ என்று ஆரம்பித்தவள் ….
கடந்த நான்கு ஆண்டுகளில் எப்படி இந்த அசுர வளர்ச்சி….???
‘ மேனகாவின் காதலனைப் பாரத்திருக்கிறீர்களா..???’
‘ மேனகாவின் இப்போதைய கணவர் யார் தெரியுமா ..???’
‘ நேற்று இரவு பிரபல நடிகருடன் மேனகா அடித்த கொட்டம்…’
போன்ற எந்த கிசுகிசுவும் அவளை பாதித்ததே இல்லை…
இந்த உயரத்தை அடைய அவள் ஒருபோதும் கீழே இறங்கி வந்ததே இல்லை….!!!
மகேந்திரன் அவள் வாழ்க்கையில் குறுக்கிடும் வரை..!!!!
சாதனைப் பெண்களில் ஒருத்தியாக அவள் பிரபல தனியார் தொலைக்காட்சியில் இளம் தொழிலதிபர் மகேந்திரன் கையால் பரிசு வாங்கிய நாள் அவள் வாழ்க்கையின் திருப்புமுனை….!!!
அடிக்கடி தொலைபேசி அழைப்புகள்…இரவு நேர சந்திப்புகள்…. ஒன்றிரண்டு முறை நகரின் ஒதுக்குப்புறமான பண்ணை வீடுகளில் இரண்டு மூன்று நாட்கள் என தொடர்ந்த உறவு..
மேனகா திருமணத்தைப் பற்றி நச்சரிக்க ஆரம்பித்ததும் தான் மகேந்திரன் அவர்களுடைய உறவு அவன் நினைத்துக்கொண்டிருப்பதைப் போல ஒரு பொழுதுபோக்கு இல்லை என்று புரிந்து கொண்டான்…!!!!
*************************
மகேந்திரன் ஒரு ரோமியோவோ, காஸனாவோ கிடையாது. கொஞ்சம் பயந்த சுபாவம் தான்..அன்புக்கு அடிமையாக ஆகிவிடும் அவனது குணம் தான் மேனகாவுடன் நெருங்கி பழக வைத்து விட்டது..
அவளுடைய அழகு முதலில் அவனை ஈர்த்தது உண்மை. ஆனால் போகப் போக அவள் அன்பில் திக்குமுக்காடிப் போனான்..
ஒரு பெரிய தொழிலதிபரானாலும் தலையில் அந்த கனம் ஏறாததற்கு காரணம் அவனது பெற்றோர்கள்..
பரம்பரை பணக்காரர்கள் வரிசையில் அவனைச் சேர்க்க முடியாது.
அப்பா ராஜசேகர் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி…அம்மா கல்லூரி விரிவுரையாளர்…
அப்பா அம்மாவுக்கு அடங்கிய பிள்ளை காதலி மேனகாவுக்கும் அடங்கிப்போனான்..
திருமணம் பற்றி மேனகா பேச்செடுக்கும்போதெல்லாம் அப்பா முகம் தோன்றும்…
நிச்சயம் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்….
எப்படியாவது மேனகாவிடம் சொல்ல வரும்போது அவனது வாயை அடக்க அவளுக்கு எத்தனை ஆயுதங்கள் கைவசம் இருந்தது???
“மகி.!! இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் வரவேண்டியது இருக்கும்.!!“
அப்பாவும் அம்மாவும் அவனை வேலை நடுவில் கூப்பிட்டால் அது நிச்சயம் முக்கியமான செய்தியாகத்தான் இருக்கும்…
என்ன என்று கூட கேட்காமல் கிளம்பிவிட்டான்..
அவர்களுடைய இனோவா பிரம்மானந்த ரெட்டியின் அரண்மனை வாசலை நெருங்கியதுமே தயாராக கேட்டைத் திறந்து சல்யூட் அடித்தான் செக்யூரிட்டி..
அரண்மனை..??? ஆம் அதுபோலத்தான் காட்சி அளித்தது அந்த பங்களா!!!
வாசலில் ஒன்றுக்கு மூன்று பென்ஸ்…
இவர்களுடைய கார் நேராக போர்ட்டிகோவில் போய் நின்றதும் வாசலுக்கே வந்து வரவேற்றாள் பிரம்மானந்த ரெட்டியின் மனைவி கிருஷ்ண குமாரி….!!!
ஆறடிக்கும் சற்றே குறைந்த உயரம்…. அறுபதுகளில் இருந்தாலும் நன்கு கட்டிக்காத்த உடல்வாகு..!!!
வெள்ளை நிறத்தில் சிவப்பும் ரோஜாவர்ணமும் கலந்த சிறிய பூக்கள் நெய்த கட்டாவ் வாயில் புடவை… வெள்ளை நிறத்தில் ரவிக்.
கழுத்தில் வைரப் பதக்கம் மின்னும் முத்துச் சரங்கள்.. கையில் வைர பிரேஸ்லெட்…!!!
இந்தி நடிகை வகிதா ரகுமானை நினைவுக்கு வருகிறதா?? ஆம்.. எல்லோரும் அப்படித்தான் சொல்வார்கள்…
வெகு நாகரீகமாக கைகூப்பி வணக்கம் சொன்னாள்……!!!
மகேந்திரனை நாசூக்காக அணைத்துக் கொண்டு “வெல்கம்…!!!”என்றாள் …. வருங்கால மாப்பிள்ளையும், சம்பந்தியுமல்லவா….?????
***
” ஹலோ..!!! இன்ஸ்பெக்டர் சாரங்கன் ஹியர்..உங்களை அலுவலகத்தில் தொந்தரவு செய்வதுக்கு மன்னிக்கவும்..!!!”
“நோ.. நாட் அட் ஆல் ..!!! ” உண்மைல பாத்தா நான் உங்க தொலைபேசி அழைப்பை எதிர் நோக்கி காத்திருக்கேன்…!!!”
“உங்க வீட்ல நடந்த துக்க சம்பவத்துக்கு வருந்துகிறேன்.. நீங்களும் உங்க மனைவியும் அளித்த புகார் பேர்ல உங்க கிட்ட நேர்ல பேச வேண்டியிருக்கு..!!”
“யெஸ்.மிஸ்டர் சாரங்கன்… எனக்கு இன்னைக்கு முழுசும் தொழில் சம்பந்தமான நிறைய அப்பாயின்ட்மென்ட் இருக்கு .. நாளைக்கு மாலை உங்களுக்கு சரிப்படுமா…???”
“சாரி.. மகேந்திரன்.. !!!நாளைக்கு எங்கள் மன்த்லி கான்ஃபெரன்ஸ்.. சனிக் கிழமை காலை எப்படி..???”
“ஐடியல்….. !!!சனிக்கிழமை காலைல எங்களோடு சிற்றுண்டி சாப்பிட்டுக்கொண்டு நாம் பேசலாமே..!!!
“மன்னிக்கவும்.. அதுக்கெல்லாம் நேரம் இருக்காது.. நீங்க சிற்றுண்டிய முடிச்சிட்டு ஒம்பது மணிக்கெல்லாம் தயாரா இருங்க.. அரைமணி நேர வேலைதான்….!”
“ஷ்யூர்….”
சாரங்கன் எல்லாவற்றிலுமே முன்னெச்செரிக்கையாக இருப்பவர்.. அவ்வளவு எளிதாக தெரியாதவர் வீட்டில், உணவு..???
அதுவும் ஒரு வழக்கு சம்பந்தமாக பார்க்கப் போகிறவர்கள் வீட்டில்…சான்சே இல்லை….!!!!
பிரம்மானந்த ரெட்டியைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறார்…சில பொது நிகழ்ச்சிகளில் பார்த்தும் இருக்கிறார்..
ஆனால் வீட்டிற்கு போவது இதுவே முதல் முறை…
அவர் காலம் முடிந்து ஏழெட்டு வருடமாகிவிட்டது…
இப்போது அவர் மனைவி கிருஷ்ணகுமாரிதான் ஆல் இன் ஆல்….!!!!
மகேந்திரன் ..மகிஷா…!
திருமண பாதுகாப்பு ஏற்பாடுகள் இவர் தலைமையில் தான்… ஒரு சிறிய குழப்பமும் இல்லாமல் திருமணம் சிறப்பாக நடந்ததற்கு நேரிலேயே அரங்கிலிருந்து இறங்கி வந்து பாராட்டினாள் கிருஷ்ணகுமாரி….
மிகவும் சோர்வாகத் தெரிந்தாள்.. நடையிலும் ஒரு தடுமாற்றம்…!!!
ஒரே பெண்ணின் திருமணமல்லவா?? ..
பாவம் !! எல்லா வேலையும் தன் தலையில் இழுத்து போட்டுக் கொண்டிருப்பாள்..!!!
மகேந்திரனுக்கும் உள்ளூர ஒரு பயம் இருந்ததை மறுக்க முடியுமா???? அவனும் சாரங்கனை புகழ்ந்து தள்ளிவிட்டான்்..
திருமணம் முடிந்த பத்து நாளில், ஒரே பெண் மகிஷாவின் கைகளின் மருதாணிச் சிவப்பு மறையும்முன்னே அருமை மகளை விட்டு இந்த உலகத்திலிருந்தே மறைந்துவிட்டாளே !!
எல்லா தினசரிகளிலும் செய்தியாகி விட்டாளே….!!!!
***
ரெட்டியின் வீட்டுக்குள் நுழைந்ததுமே அவர்கள் உலகமே வேறு என்று புரிந்து விட்டது..
தோட்டாதரணியைக்கொண்டு இதுபோல செட் போடுவதற்கே குறைந்தது இரண்டு மூன்று கோடிகள் பிடிக்கும்..
கிருஷ்ணகுமாரி மகேந்திரன் கையை விடமாட்டாள் போலிருந்தது..!!!
‘ மகிஷா…!! என்று குரல் கேட்டதும் துள்ளிக் குதித்து ஓடி வந்தது ஒரு மான்குட்டி..
ஏதோ பூர்வ ஜன்ம பந்தம் போல இரு குடும்பமும் பார்த்தவுடனே ஒட்டிக்கொண்டு விட்டது கிருஷ்ண குமாரியின் பேச்சு சாதுரியத்தால் மட்டுமல்ல…. !!!!
மகிஷாவின் குழந்தைத்தனமான பேச்சினாலும், அவர்களின் பண்பட்ட நடத்தையாலும் கூட இருக்கலாம்…
சொத்து மட்டும் ..!!!….இல்லை மகிஷாவின் பிரமிக்க வைக்கும் அழகு மட்டும்..!!!
இரண்டில் ஒன்று கிடைத்தாலே அது ஜாக்பாட் அடித்தமாதிரிதான்…!!
அதை வேண்டாம் என்று வைக்க அவன் அத்தனை முட்டாளில்லை….!!!
மேனகா…..???
அவளைப் பற்றி அப்புறம் யோசிக்கலாம்…..!!!
ஆறு மாதத்தில் நிச்சயதார்த்தம்.. ஒரு வருடத்தில் திருமணம்..
மேனகாவை சமாளிக்க நிறையவே அவகாசம் இருக்கிறது…!!!!
ராஜசேகரும், சத்யாவும் மகனின் அதிர்ஷ்டத்தை எண்ணி எண்ணி பூரித்துப் போனார்கள்…!!!
மகன் மேனகாவின் பிடியில் சிக்கிக் கொள்ளாமல் வெளியே வர வேண்டுமே…!!!
அதுமட்டுமே இப்போது அவர்கள் மனதில்…!!!
இரட்டைக் குதிரையில் சவாரி செய்வது எவ்வளவு கடினம் என்பதை மகேந்திரன் இப்போது உணர வேண்டிய நேரம்…
***
“மகி…இப்பொல்லாம் உன் முகத்தில பழைய சிரிப்பு காரணமே..!!
“ஏன் எதையோ பறி கொடுத்த மாதிரி இருக்க..???”
“அப்பா கிட்ட கல்யாணம் பத்தி பேசினியா.???”
“என்ன எப்போ உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகப் போற ???”
வறுத்தெடுத்து விட்டாள் மேனகா.!!!
“ஹாய்..மகி டியர்… உனக்கு இந்த சனிக்கிழமை ஒரு சின்ன பார்ட்டி.. நானும் நீயும் மட்டும்..நம்ப கெஸ்ட் ஹவுஸ்லதான்…!!
“ஏண்டா ஆறுமாதம் லேட் பண்ற?? நாளைக்கே நிச்சயதார்த்தம்.. அடுத்த நாள் திருமணம்..!! எப்படி என் ஐடியா…???”
ஒரு ஃபோன் கால்……
“மகி..உடனே வீட்டுக்கு வா..!! உனக்கொரு சர்ப்ரைஸ்..!!”
நீ மேனகான்னு ஒரு பொண்ணு பின்னால் சுத்தறயா..?? இனிமே எல்லாத்தையும் விட்டிட்டு எம்பின்னால மட்டும் சுத்தற..ஓக்கே..!! ஐயம் பிரட்டி சீரியஸ்…”
மகிஷாவின் குரல் தேன் போல தித்திதாலும் அவளது குரலில் இருந்த கண்டிப்பு அவள் எதையும் செய்வாள் என்பதை உணர்த்தியது….
மகிஷாவும் செக் வைத்து விட்டாள்…
இரண்டு பக்கமும் ராணி..!! நடுவில் ராஜா ????
மகிக்கு ஒரு முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று தோன்றியது…
***
நீச்சல் குளத்தை பார்த்துக் கொண்டே பேச ஆரம்பித்தார் சாரங்கன்..
நீலமும் பச்சையும் கண்ணுக்கு இதமாக இருந்தது..
வேலைப்பாடு மிக்க அழகிய வட்ட மேசை.. சுற்றிலும் பச்சை..எதிரே, உயரே நீலம்..
மகிஷா ஒரு கல்லூரி மாணவியைப்போல
‘ Don’t Stare ‘ ( உற்று நோக்கு என்று அர்த்தம்???) எனும் வாசகங்கள் எழுதிய மஞ்சள் நிற டீ ஷர்ட்டும் ஜீன்சும், அணிந்திருக்க மகேந்திரனும் அதே நிற சட்டையும் ஜீன்சும் அணிந்து, ‘ மேட் ஃபார் ஈச் அதர் ‘ என்று உறுதி படுத்திக் கொண்டிருந்தனர்…
ஒரு தட்டில் வறுத்த முந்திரிப் பருப்பும், கண்ணாடி கோப்பையில் ஆரஞ்சு சாறும்..
“மிஸ்.மகிஷா…ஐயம் வெரி சாரி..!!
பத்து நாளைக்குள்ள …!!!
இன்ஸ்பெக்டர் வாயைத் திறக்க காத்திருந்தவள் போல் மகிஷா படபடவென்று கொட்டி தீர்த்து விட்டாள்..
“சாரங்கன்.!!!! எனக்கு அம்மாதான் எல்லாமே.!!!
அப்பாவுக்கு என்ன ரொம்ப ரொம்ப பிடிக்கும்..ஆனா கட்டி அணச்சு முத்தம் குடுக்கிற டைப் அப்பா இல்ல..
தள்ளி நின்னு எவ்வளவு நேரம் வேணாலும் பேசுவார்..
அம்மா….???
என்னோடு உலகமே அவுங்கள சுத்திதான்… மதர் தெரசாவையும் ஜான்சி ராணியையும் கலந்து செஞ்ச அதிசய கலவை..
அப்பா போனதும் அம்மாவோட நிர்வாகத்தில அசுர வளர்ச்சி… அதுவரைக்கும் வீட்ல இருந்து பாத்துகிட்டு அம்மாவே இல்ல..இது வேற முகம்..!!
திருமணம் நிச்சயம் செய்த உடனேயே அம்மா செஞ்ச முதல் காரியம் சொத்து முழுவதும் என் பேருக்கு எழுதி வச்சதுதான்…!!!
இன்ஸ்பெக்டர் சாரங்கன் கண்கள் தன்னிச்சையாக மகேந்திரன் பக்கம் ஒரு கணம் திரும்பி மீண்டது…!!!
கொஞ்சம் அழுதாள்…
“மேடம்..ரிலாக்ஸ்..!!
மகேந்திரன் நீங்க புகார் குடுத்த காரணத்த முக்கியமா தெரிஞ்சுக்கலாம்னு வந்தேன்….!!!”
மகியின் குரல் உண்மையிலேயே கம்மியிருந்தது….!
“ஈவ்னிங் ரிசப்ஷனுக்கு முன்னாடி அத்தை ‘ லேச தல வலிக்கிற மாதிரி இருக்கு..!!! கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன்னு ‘அறைக்கு போயிட்டாங்க..
முதல்முறை அவுங்கள நான் அப்பத்தான் இத்தனை சோர்வா
பாக்கிறேன்…
மறுபடியும் ஈவ்னிங் பழைய உற்சாகத்தோடு மேடையில் ஏறி ஒரே சிரிப்பும்..கும்மாளமுமா விருந்தினர்களோட கலந்துகிட்டத பாத்து இரண்டு பேரும் ஏமாந்துட்டோம்..
அன்னிக்கு இரவு எங்களுக்கு லேக் வ்யூ ரிசார்ட்ல முதலிரவு..
மறுநாள் லஞ்ச் முடிச்சு வீட்டுக்கு போன எங்களுக்கு பெரிய அதிர்ச்சி…!!
மகிஷா தொடர்ந்தாள்…
“காலையில எழுந்ததும் அம்மா கட்டில விட்டு இறங்கும்போது காலிரண்டும் நடுங்க ஆரம்பிச்சிருக்கு. சமாளிச்சு எந்திரிச்சு நடக்க ஆரம்பச்சிருக்காங்க…
மறுபடியும் கொஞ்ச நேரத்தில பழையபடி குளிச்சிட்டு சாப்பிட மேசையில உக்காரும்போது கண் இருட்டிட்டு வர மாதிரி இருந்திருக்கு…
சாப்பிடும்போது கை நடுங்குற மாதிரி இருக்குன்னு சீக்கிரமே சாப்பிட்டு எழுந்து சோஃபால உக்காந்தவுங்கதான்.. எந்திருக்க முடியல…!!!
பத்து நாள்ல படிப்படியாக கணமுன்னாலேயே அவுங்க உடம்பு …!!!
அழும் மனைவியை அணைத்துக் கொண்டே பேசினான் மகி..
“எங்க திருமணம் ஆனதுமே அம்மாவும் அப்பாவும் கோத்தகிரியில இருக்கிற எங்க வீட்டுக்குப் போய் ஒரு மாசம் இருந்திட்டு வரதா சொல்லி கிளம்பி போய்ட்டாங்க…”
“மகேந்திரன் …!! அம்மா இறந்தது இயற்கை மரணம் இல்லைன்னு புகார்ல சொல்லியிருக்கீங்க..!!!!
அதப்பத்தி விசாரிக்கத் தான் இந்த வருகையே..!
“சொல்றேன் இன்ஸ்பெக்டர்..
அத்தைய பரிசோதன செஞ்ச எல்லா டாக்டருமே கலந்து ஆலோசிச்சு சொன்ன முடிவுதான் நான் உங்களுக்கு புகார் அனுப்ப காரணம்..
அவங்க ரத்தத்தில மெதுவா ஆளைக்கொல்ற விஷம் கலந்திருக்கு.. அதுதான் படிப்படியா நரம்பு மண்டலத்த பாதிச்சு மூளைய செயலிழக்கச் செய்திருக்கு…!!! “
சாரங்கனுக்கு இந்த கேஸ் பெரிய சவாலாயிருக்கப்போகிறது என்று புரிந்துவிட்டது..
இந்தியாவிலேயே பெரிய புள்ளியான பிரம்மானந்த ரெட்டியின் சொத்து முழுவதும் இப்போது மகிஷா கையில்…
சந்தேக லிஸ்ட்டில் மகிஷா இருக்க வாய்ப்பே இல்லை..
மகேந்திரன்…???
மகிஷா அவன் சொத்து… ரெட்டியின் அத்தனை சொத்துக்களுடனும்….!!!
பொன்முட்டையிடும் வாத்து..
அவளது அம்மாவை தங்கத்தட்டில் வைத்து தாங்க தயாராயிருக்கும் அவனை எப்படி சந்தேக லிஸ்ட்டில் சேர்ப்பது….???
சாரங்கன் எழுந்து நின்றார்..
“மேடம்..கேக்கவே அதிர்ச்சியா இருக்கு…உங்கம்மா ஒரு பெரிய தொழிலதிபர்…..!!!
போட்டி ..பொறாமை
அதில் இருக்க நிறையவே வாய்ப்பிருக்கு..
முதல்ல அங்கிருந்து தொடங்கணும்.. இன்னும் பலமுறை உங்களை நான் தொந்தரவு செய்ய வேண்டியிருக்கும்…
என்னுடைய எல்லா கேள்விகளுக்கும் உண்மையான பதிலை எதிர்பார்க்கிறேன்…
வீட்டில் வேலை செய்யும் அத்தன பேரையும் விசாரிக்க வேண்டியிருக்கும்..
போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்திடட்டும்…
கூடிய சீக்கிரம் துப்பு கெடச்சிடும்னு நம்புவோம்..
டேக் கேர்…..!!!!
***
மேனகா மகியின் மாற்றத்தை உணர ஆரம்பித்தாள்..
“மகி.. கமான்.. என்ன முழு முட்டாள்னு நெனச்சிடாத..
நீ நிச்சயம் என்ன கல்யாணம் செஞ்சுப்பங்கிற நம்பிக்கை சுத்தமா போயிடிச்சு..
இன்னும் ஒரு வாரம் டைம் தரேன்.. அதுக்குள்ள உன் முடிவச் சொல்லு.
நீ ஒண்ணும் எனக்கு பரிதாபப் பட தேவையில்லை…
உன்ன மாதிரி பெரிய இடத்தில் மாட்டி ஏமாந்த பொண்ணுங்க லிஸ்ட்ல என்ன சேத்திடாத..
நீ வேண்டாம்னு சொல்றதுக்கு முன்னாடி நானே உன்ன வேண்டாம்னு வச்சிட்டேன்..!!!
நிச்சியமாக இன்னும் இரண்டு மாசத்தில் ஒரு கல்யாணப் பத்திரிகையோட நீ வரத்தான் போற.. நானும் உன் கல்யாணத்த அட்டெண்ட் பண்ணத்தான் போறேன்..!!!
பயப்படாத..!! நிச்சயம் உங்க திருமணம் ஜாம் ஜாம்னு நடக்கும்..
நமக்குள்ள இனி எந்த தொடர்பும் இருக்காது..
யாரைக் கல்யாணம் செஞ்சுகிட்டாலும் அவகிட்ட உண்மையா இரு…. குட் லக்… அண்ட் குட் பை…!!!!
இவ்வளவு சுலபமாக காரியம் முடியுமென்று மகேந்திரன் கனவிலும் நினைக்கவில்லை..
கொஞ்சம் உறுத்தலாக இருந்தது…
மேனகா ஒரு வாரம் பயித்தியம் பிடித்தது போல வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்தாள்..
மேனகா அழகு நிலையத்திலிருந்து தொலைபேசி அழைப்புகள் குவிந்தன…
இப்போது அவள் மனம் ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ள தயாராகி இருந்தது..
முதல் அடி எடுத்து வைக்க தயங்கும் குழந்தை தனக்கு நடக்க முடியும் என்று தெரிந்து விட்டால் கிடைத்த பொருட்களைப் பிடித்துக் கொண்டு வீட்டையே சுற்றி வரும்..
மேனகாவும் கிடைத்த சந்தர்ப்பத்தை எல்லாம் உபயோகித்து அடுத்தடுத்த படிகளில் ஏற ஆரம்பித்தாள்..
அப்புறம் ஓட்டம் தானே…!!
நகரின் பாதி பெரிய பண முதலைகள் அவளுடைய ஒரு கண் அசைவுக்கு உலகையே காலடியில் கொட்டினார்கள்..
இப்பவும் கிசுகிசுக்கள்.. ஆனால் அதில் முக்காலும் உண்மை…
ஊருக்கு சற்றே ஒதுக்குப்புறத்தில் ஐந்து கிரவுண்டில் மூன்றடுக்கில் ‘ அம்புலி…’!!!
வானத்திலிருந்து இறங்கி வந்த நிலவு போல….!!!
பசியுடன் இரைக்குக் காத்திருக்கும் புலியானாள்…
***
டி.ஸ்.பி..கார்த்திகேயனுக்கு ஒரு சவாலான வழக்கு கிடைத்தால் அல்வா சாப்பிடுவது போல..
தான் மட்டும் சாப்பிடமாட்டார்…..
தனது டீமில் வேலை செய்யும் அத்தனை பேரையும் சாப்பிட வைப்பார்..
அடிக்கடி மீட்டிங்..!! கிருஷ்ண குமாரி வழக்குதான்….!!!
சாரங்கனை அவருக்கு மிகவும் பிடிக்கும்..
“சாரங்கன்…!! நீங்க இந்த வழக்கை கையாளும் விதம் எனக்கு முழு திருப்த்தி…
இதைமட்டும் நீங்க வெற்றிகரமாய் முடிச்சிட்டீங்கன்னா உங்க ப்ரமோஷன் கன்ஃபர்ம்ட்..!!!!
உங்க உதவிக்கு எஸ். ஐ. மனோகரும், சங்கரலிங்கமும் கூடவே இருப்பாங்க..
ஆமா ..?? கேஸ் எப்படி போயிட்டிருக்கு….???
“தாங்யூ சார்….!!! சரியான பாதையில்தான் போகுது…
போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் அவுங்க இறந்தது ஸ்லோ பாய்சனாலதான்னு உறுதியா சொல்லுது….
ஆனா சாதரணமா உபயோகப்படுத்தற ஆர்சனிக் இல்ல..இது ஏதோ ஒரு விஷச் செடியிலிருந்து எடுத்திருக்கலாம்னு நம்பறாங்க..!!
சார்..அவுங்கள கொல்ற அளவுக்கு தொழில் சம்பந்தமா எந்த பொறாமையும் இல்லை..நல்லா விசாரிச்சிட்டோம்..!!!
வீட்டில என்கொயரி போயிட்டிருக்கு….!!!
நிறைய ஆட்கள விசாரணை செய்ய வேண்டி இருக்கு…!!
குடும்பத்தோடு முழு ஒத்துழைப்பு இருக்குறதால சிக்கலில்லாம போயிட்டிருக்கு..!!!
“சாரங்கன்..நீங்க மகேந்திரன நல்லா க்ரில் பண்ணனும்..
கிருஷணகுமாரி இறந்ததில அதிகமா பயனடையப் போறது மகேந்திரன் தான்…!!”
“யு ஆர் ரைட் சார்.. “
“என்னதான் சொத்துக்களெல்லாம் மனைவி பேர்ல இருந்தாலும் கம்பெனி நிர்வாகம் முழுசும் இனிமே மாப்பிள்ளதானே…அந்த ஆங்கிளல யோசிங்க..
அப்புறம் அந்த மேனகா விவகாரம்..மகிஷாவ தனியா நிறையவே என்கொயரி பண்ண வேண்டி வரும்.. இது ரொம்ப ரொம்ப முக்கியம்…!!!
“யெஸ்.சார்…!!!!”
“சாரங்கன்..!!நீங்க மட்டும் இருங்க…!!!!
தாங்யூ ஆல்..யூ கேன் டிஸ்பெர்ஸ் நௌ…!!!
“சாரங்கன்.. இந்த ஸ்லோ பாய்சனோட முதல் அறிகுறிகள் தலைவலி, வாந்தி, சோர்வு, பதட்டம், தடுமாற்றம், இதெல்லாம் மேடம் கிருஷணகுமாரிக்கு பெண்ணோட திருமணம் முடிஞ்ச அடுத்த நாள்தான் ஆரம்பிச்சிடுச்சு..
நீங்க அத முக்கியமா கவனிக்கணும்..
திருமணத்துக்கு வந்தவுங்க அத்தனை பேர் லிஸ்ட், விழாவில முக்கியமா விருந்து ஏற்பாடு செய்த கேட்டரர், பறிமாறின வெயிட்டர்ஸ், பரிமாறிய ஐட்டம்ஸ், ஒரு தகவல விடாம சேகரிங்க…
அப்பறம் மேனகா மேட்டர் ரொம்ப ரொம்ப முக்கியம்..
ஆல் தி பெஸ்ட்…!!!!
விருந்து முடிந்து பத்து நாட்களுக்கு மேலாகி விட்டதே..!!!
இப்போது குப்பைத் தொட்டியைக் கிளறச் சொன்னால்…..???
முடியாது என்ற சொல் சாரங்கன் அகராதியிலேயே கிடையாதே!!!!
***
மிஸ்டர்.மகேந்திரன்!! உங்க கிட்டேயும் உங்க மனைவி கிட்டையும் இன்னும் கொஞ்சம் என்கொயரி மீதம் இருக்கு..தனித்தனியா…!!!
“ஓ… நாளைக்கு நான் தொழில் சம்பந்தமா சிங்கப்பூர் போக வேண்டியிருக்கு..மூணு நாளாகும்..மகிஷா ஃப்ரீயாதான் இருப்பா..
அவகிட்ட கூப்பிட்டு எப்பவேணா வச்சுக்குங்க.. நான் திரும்ப வந்ததும் நாம மீட் பண்ணலாம்…!!”
“சூப்பர்..!!!தாங்யூ…!!!”
மகேந்திரன் குரலில் பதட்டமோ ஆச்சரியமோ எதுவும் இல்லை.. சாரங்கன் அவனை சந்தேக லிஸ்ட்டிலிருந்து எப்போதோ நீக்கியிருந்தார்..
இருந்தாலும் கடமையைச் செய்யாமல் இருக்க மாட்டார்..
***
“மிஸ்.மகிஷா…திரும்ப திரும்ப அந்த துக்க சம்பவத்தை உங்களுக்கு நினைவூட்டுவதற்கு மன்னிக்கவும்..!!!
இந்த காக்கிச்சட்டை எங்களுடைய உணர்ச்சிகளைப் போர்த்தி விடும் இரும்பு கவசம்ன்னு போலீஸ் ஃபோர்ஸ்ல சேரும்போதே புரிஞ்சிடும்.!!!
வீட்டில போயி இதக் கழட்டி வச்சாக்கூட இதோட வாசன வீசத்தான் செய்யுது..
குடும்பத்தில இருக்கறவுங்க நம்மளை நல்லா புரிஞ்சுக்கலைன்னா வாழ்க்கையே போராட்டம்தான்..
“நோ…!! நோ…!!! மிஸ்டர் சாரங்கன்..!!! நீங்க மத்த போலீஸ் மாதிரி இல்ல..உங்க கிட்ட பேசினாலே பாதி மனச்சுமை இறங்கினமாதிரி இருக்கு….!!!”
“ஐயம் சோ ஹானர்ட்…”
***
ஒருமணி நேரம் மகிஷாவுடன் பேசியதில் கிடைத்த தகவல்கள் மிகவும் உபயோகமாக இருந்ததில் சாரங்கனுக்கு ஏக மகிழ்ச்சி….
மேனகாவுடன் மகேந்திரனுக்கு எந்த தொடர்பும் இல்லை…
அவளுக்குத் தெரியாமல் எதையும் மறைத்ததில்லை…
பக்கா ஜென்டில்மேன்…
மேனகா அவர்களுடைய திருமணத்திற்கு வந்திருந்தாள்.. !!!!
அவளுடைய அழகு நிலையத்திலிருந்து இரண்டு பெண்கள்தான் அவளுக்கு மணப்பெண் அலங்காரம் செய்தார்கள்..
***
மகிஷா தனது கைகளைக் காட்டினாள்….
“பாருங்க சாரங்கன்..?? இன்னும் அப்படியே இருக்கு…சாதாரணமா அம்மாக்கு இந்த அலங்காரமெல்லாம் பிடிக்காது.. அவுங்க கூட வச்சிகிட்டாங்க…!!!
அம்மாவால அடுத்த நாள் கல்யாணத்துக்கு புடவை கூட ஒழுங்கா கட்டமுடியல..
மெகந்தி அன்னிக்கு வெள்ளையில ஜரிகை போட்ட ஒரு புடவை கட்டியிருந்தாங்க பாருங்க..தேவதை மாதிரி..!!!!
அதை அப்படியே மடிச்சு எடுத்து உள்ள வச்சிருக்கேன்.. இரண்டு இடத்தில மருதாணி கறை கூட பட்டிருந்தது..அம்மா நினைவா அதை எப்பவும் தலைகாணிக்கு அடியில வச்சுகிட்டு தான் தூங்குவேன்….!!!
சாரங்கன் போலீஸ் மூளையின் ஒரு மூலையில் ஏதோ பொறிதட்டினாற்போல…!!!!
அன்று இரவு சாரங்கன் தூங்கவே இல்லை..மகேந்திரனை இப்போதைக்கு விட்டுவிடலாம்…
அடுத்து அவருடைய இலக்கு ‘அம்புலி..’
***
வழக்கு இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டதைப் போல ஒரு உள்ளுணர்வு…
மூளையைக் கசக்கி யோசித்ததில் இதை மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும் என்று தலைமைச் செயலகம் ஆணையிட்டது…
சப் இன்ஸ்பெக்டர் திலகா மிகவும் கண்டிப்பும் நேர்மையும் உள்ளவள்.போட்டு வாங்குவதில் அவளுக்கு நிகர் அவள்தான்..
அம்புலிக்கு அவளை அனுப்பியது வழக்கை எந்த அளவுக்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டது….????
***
“எம்பேரு சுசித்ரா.. எனக்கு மேனகா மேடத்த பாக்கணும்.. ஒரு ப்ரைடல் மேக்கப் விஷயமா…!!!”
“ப்ளீஸ் .. டேக் யுவர் சீட்… மேடம் பெங்களூர் போயிருக்காங்க..
வர இரண்டு நாளாகும்..
என் பெயர் ஜெஸிந்தா..!!! எங்கிட்ட பேசலாம்…!!!”
“மிஸ்..ஜெஸிந்தா…!! உங்க மேடத்தப் பத்தி தெரியாதவங்களே இருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்..
அதுவும் ரெட்டி வீட்டு கல்யாணத்தில மகிஷா மேடத்தோட மேக்கப்பும், மெகந்தி அலங்காரமும் இன்னும் ஊர்ல பேச்சா இருக்கு…!!!
அதேபோல ஒரு திருமணம்..!!!
சினிமா நடிகை கன்னியாகுமரியோட பொண்ணு மோகினி தான் மணப்பெண்.. !!!!!
அடுத்த மாசம் பத்தாம் தேதியிலிருந்து மூணு நாள் மேக்கப் இருக்கும்…!!!
“ரொம்பவே மகிழ்ச்சி.. நான் மோகினியோட பெரிய ஃபேன்…
“மகிஷாவுக்கு யார் அலங்காரம் செஞ்சாங்க…??? சூப்பர்!!!”
நாங்க மூணு பேர் போயிருந்தோம்.. நானும் வள்ளியும் முதலிரண்டு நாள்..மெகந்தி முழுசும் சுஜாதா தான்..அவள மாதிரி மருதாணி அலங்காரம் செய்ய யாராலும் முடியாது.. வெரி கிஃப்டட்…!!!
இதிலே ஆச்சரியம் என்னன்னா மகிஷாவோட அம்மா கிருஷணகுமாரி மேடமே ஆசைப்பட்டு போட்டுகிட்டாங்க.. அதுவும் முதல் முறையாக…!!!
“சுஜாதா இருக்காங்களா..!!! நேர்ல பாத்து கங்ராஜுலேட் பண்ணனும் !!!”
“ஒரு கஸ்டமர பாத்திட்டிருக்கா..பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க…!!!”
மேனகா இல்லாதது எவ்வளவு நல்லதாக போயிற்று… இப்படி சுதந்திரமாய் பேச முடியுமா???
சுஜாவுக்கு மெடல் தான் கொடுக்க வேண்டும்…
கேட்காமலேயே எல்லாவற்றையும் கக்கிவிட்டாளே…!!!
மிஞ்சி மிஞ்சி போனால் இருபது வயதான் இருக்கும்.மேக்கப்பே தேவையில்லை…அத்தனை அழகு..!!!
இள ரத்தம்.. திறந்த வாய் மூடாமல் பேசினாள்…
திலகாவுக்கு வேலையே இல்லை..லட்டு வாயிலேயே வந்து விழுந்தால் முழுங்க கசக்குமா…..???
***
“நான் உண்மையிலேயே அதிர்ஷ்டக்காரி..ரெட்டி வீட்டு கல்யாணப்பத்திரிகை வந்ததுமே மேனகா மேடம் எங்க எல்லாருக்கும் காட்டிவிட்டு,
நாமதான் மணப்பெண் அலங்காரம், மெகந்தி எல்லாம்..!!!
தூள் கிளப்பணும்…
சுஜா… நீதான் மெகந்தி இன் சார்ஜ்.!!”‘
திருமணத்தன்னிக்கு என்னை தனியா கூப்பிட்டு ஒரு மணிநேரம் அட்வைஸ்…
‘ சுஜா..!!? நீ மகிஷாவ தனியா கவனிச்சுக்கோ!!! அவங்க ரொம்ப ஃபஸ்ஸி..!! அநியாயத்துக்கு சுத்தம் பாப்பாங்க..!!!
அதுனால இரண்டு கையுறைகள் மாட்டிக்கோ..
அவுங்களுக்கு ஸ்பெஷலா நீல நிற பேக்கட்ல மருதாணி பவுடர் இருக்கும்.. மத்ததெல்லாம் சிவப்பு..
மிக்ஸ் பண்ணிடாத…
அவுங்களுக்கு போட்டது யாருக்கும் போடாத..ஏன்னா அவுங்களுக்கு மிகவும் எக்ஸ்பென்ஸிவ் பவுடர்..
முடிஞ்சதும் அந்த கிண்ணம், பிரஷ் எல்லாம் இந்த பேப்பர் கவர்ல போட்டு சீல் பண்ணி மறக்காம திருப்பி எங்கிட்ட குடுத்துடு…”
எனக்கு வானத்தில பறப்பது போல இருந்தது…!!!
ஆனா கொஞ்சம் சொதப்பிடிச்சு..
மகிஷா மேடத்துக்கு காத்திருக்கும்போது பெரிய மேடம் வந்தாங்க..மகிஷாவுக்கு அமெரிக்காவுல இருக்கிற ஒரு ஃப்ரண்டு ஃபோன்ல கூப்பிட்டு வாழ்த்து சொல்லிட்டிருக்கா..
இப்போதைக்கு வரமாட்டா…
எனக்கென்னவோ இன்னக்கி மருதாணி வைக்கணும் போல ஆச வந்திடிச்சு.. அவசர வேல நிறைய இருக்கு..
கமான்…க்விக்..உடனே வச்சு விடு…”
“மேடம் இது வந்து….!!!”
“ஏன் எனக்கு நல்லா இருக்காதா…???
“ஐய்யோ.. மேடம்..!!! உக்காருங்க…!!!”
அவுங்க என்ன பேசவே விடல..!!!
திலகாவுக்கு மீதிக் கதை சொல்லாமலேயே புரிந்து விட்டது…
பூனைக்குட்டிக்கு வைத்த பொறியில் புலியல்லவா மாட்டிக் கொண்டது…
***
“மிஸ்.மகிஷா !!! வீ ஆர் சீயிங் சம் லைட் அட் தி எண்ட் ஆஃப் தி டனல்..!!”
“ரியலி..??? சாரங்கன் நீங்க உண்மையிலேயே ஒரு ஜீனியஸ்..!! சொல்லுங்க..!!!”
“ஒரே ஒரு நாள் டைம் குடுங்க.. அதுக்கு முன்னாடி ஒரு ஹம்பிள் ரிக்வெஸ்ட்..
உங்க அம்மாவோட ஒரு புடவைய பத்திரமா வச்சிருக்கிறதா சொன்னீங்களே…!!
எனக்கு அது மிகவும் அவசரமா தேவைப்படுது..கேஸ் விஷயமாத்தான்..இரண்டே நாள்ல பத்திரமா திருப்பித் தந்திடுவேன்..!!!!”
“ஓ ஷ்யூர்….!!”
“சப் இன்ஸ்பெக்டர் திலகா வந்து கலெக்ட் பண்ணிப் பாங்க..!!!”
“சாரங்கன்..அம்மா கேஸ அம்மாவே சால்வ் பண்ணப் போறாங்களா..???
ஓ மம்மி..! யூ ஆர் கிரேட்…”
மகிஷா ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டது ஃபோனில் தெரிந்தது…!!
***
சாரங்கனுக்கு அன்று முழுவதும் வாழ்த்துகள் வந்த வண்ணம் இருந்தன..
எஸ்..பி..உமாசந்திரன் மிகவும் புகழ்ந்து தள்ளி விட்டார்..
“மிஸ்டர்.சாரங்கன் ..ஆரம்பத்திலேயே இந்த வழக்கு ஒரு பெரிய சவாலா இருக்கப் போகுது என்று எல்லோருமே ஃபீல் பண்ணினோம்..
கார்த்திகேயன் உங்களப் பத்தி சொன்னபோது கூட எனக்கு நம்பிக்கை வரல..
நீங்க நம்ப டிபார்ட்மென்ட்டுக்கே பெருமை தேடித் தந்துட்டீங்க !!!”
“தாங்யூ சார்…எல்லாரோட ஒத்துழைப்பும் எனக்கு பூரணமா கிடச்சது…எஸ்பெஷலி திலகா மேடம்…”
***
“ஹலோ.மிஸ்டர் சாரங்கன்..வர சனிக்கிழமை இரவு எங்க வீட்டில உங்களுக்கு ஒரு சின்ன ட்ரீட்.. திலகா மேடத்தையும் அழைச்சிட்டு வந்திடுங்க…..!!!
***
சாரங்கன் கேட்டுக் கொண்டபடி நீச்சல் குளத்தருகே விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர் மகேந்திரன் தம்பதியர்..
மகிஷா ஒரு மாதிரி உணர்ச்சிக் குவியலாக இருந்தாள்.. அழுகையும் சிரிப்பும் மாறிமாறி…!!
“சாரங்கன்.. என்னால கொஞ்சம் கூட நம்ப முடியல…அம்மா தன்னோட உயிரக் குடுத்து என்ன காப்பாத்தி இருக்காங்க இல்லியா..??
இந்த மாதிரி அம்மா யாருக்கு கிடைக்கும்…??”
மகேந்திரன் சடாரென்று எழுந்து மகிஷாவைக் கட்டி அணைத்து மாறிமாறி முத்தமிட்டான்..
“ஓ..மகி..உன்னை நான் இழந்திருப்பேன்…!!!”
“யெஸ்.. மிஸ்டர்..மகி..
மேனகாவோட குறி மகிஷாதானே.!!!”
“மிஸ்.திலகா..ப்ளீஸ்..அன்னக்கி நடந்தத உங்க வாயால கேக்கணும் போல இருக்கு….!!!
விருந்து முடிந்து போகும்போது மணி பன்னிரண்டு ஆகி இருந்தது…
***
“யெஸ் மிஸ்டர் சாரங்கன்.. என்ன விஷயமா என்னப் பாக்க வந்திருக்கீங்கன்னு என்னால யூகிக்க முடியலனா நான் அடிமுட்டாளாயிருக்கணும்.
நான் எங்கேயாவது தப்பிச்சு போயிடுவேனோன்னு நீங்க நினைக்காட்டாலும் உங்க மேலதிகாரி எச்சரிக்கை பண்ணியிருப்பாரே…???
நான் ஒரு வக்கீலுக்கும் ஃபோன் பண்ணல..எனக்கு பெயிலும் வேண்டாம்…”
இரண்டு கரங்களையும் நீட்டினாள்..”ம்ம்ம்.. அரெஸ்ட் மீ..!!”
சாரங்கன் ஒரு வினாடி அதிர்ந்தார்..
ஆனால் அவருக்குத் தெரியுமே!! மேனகா ஒரு நாளும் யாரிடமும் கெஞ்சியதில்லை..
”பொறுங்க மேடம்.. நான் உங்கள அரெஸ்ட் பண்ண முடியாது…
”ஹலோ.. மிஸ்.வந்தனா..
மேனகா மேடம் தயாரா இருக்காங்க.. கேன் யூ கம் அண்ட் அரெஸ்ட் ஹர் ப்ளீஸ்..!!”
“மிஸ்.மேனகா..உங்க ஒத்துழைப்புக்கு மிகவும் நன்றி…!!”
“சாரங்கன்… நான் வாழ்க்கையில எடுத்த ஒவ்வொரு முடிவும் ஆழமா யோசிச்சு எடுத்த முடிவுதான்..
ஆனாலும் ஒவ்வோர் தடவையும் தோத்து தான் போனேன்…
இந்த முறை எடுத்தது அவசரத்தில் எடுத்தது.. ஆத்திரத்தில் எடுத்தது..
இதில யாரோட உயிர் போயிருந்தாலும் நான் செஞ்சது மிகப் பெரிய குற்றம்…!!!
நான் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டியவள்..மகி எங்கிருந்தாலும் மகிழ்ச்சியா இருக்கட்டும்..ஐயம் ரெடி….!!!”
***
சாரங்கனுக்கு அன்று விருந்தின்போது மகி சொன்னது நினைவுக்கு வந்தது..
“மிஸ்டர்.சாரங்கன்…மேனகா துணிச்சலான பெண்.. அவள் தான் செஞ்ச குத்தத்தை சுலபமாக சுஜாதா மேல போட்டுட்டு தப்பிச்சிருக்க முடியும்..அத பண்ணாதது உண்மையிலேயே அவளோட பெருந்தன்மைய காட்டுது…இல்ல மகிஷா…!!!”
மகிஷா மகேந்திரனைப் பார்த்து கண்ணடித்தாள்..
“ஒன்ஸ் எ லவர்..ஆல்வேஸ் எ லவர்.!!!
இல்லையா சாரங்கன்….???”
உண்மைதான்….!!!