பாஸ்கருக்கு தன் இளம் மனைவி பவானியுடன் ஐந்தாவது மாடியில் அமைந்திருக்கும் அவர்கள் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு அரட்டையடிப்பது மிகவும் பிடித்திருந்தது.
புதிதாகத் திருமணமான இந்த ஐந்து மாதங்களாக இரவு உணவு முடிந்ததும் இருவரும் மொட்டை மாடிக்கு வந்து விட்டால் நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருப்பார்கள்.
அந்த பிளாக்கில் குடியிருக்கும் அனைவருக்குமே டெரஸ் சொந்தமானது என்றாலும், மற்ற குடித்தனக்காரர்கள் எவருமே இரவில் அங்கு வருவதில்லை. பகலில் ஏதேனும் துணிகள் காயப்போடுவதோடு சரி.
இவர்கள் ஐந்தாவது மாடியில் குடியிருப்பதால் எளிதில் மடக்கு நாற்காலிகளை எடுத்துச் சென்று டெரசில் அமர்ந்து பேச வசதியாயிருந்தது.
பவானியின் அயர வைக்கும் அழகும், கல்வியும், துடுக்குத்தனமான பேச்சும், நறுவிசாக வீட்டுக் காரியங்கள் செய்யும் பாங்கும், சுறுசுறுப்பும் பாஸ்கருக்கு சந்தோஷமளித்ததில் வியப்பில்லைதான். தனக்கு ஒரு இன்டலக்சுவலான மனைவி கிடைத்திருப்பது தன்னுடைய அதிர்ஷ்டமே என்று அவன் நம்பினான்.
ஆனால் – தற்போது சில நாட்களாக பாஸ்கருக்கு பவானியின் நடத்தையின் மேல் ஒரு இனந்தெரியாத சந்தேகம் அரித்துக் கொண்டிருக்கிறது.
காரணம் – இரண்டு மாதங்களுக்கு முன்பு நான்காவது மாடியில் புதிதாகக் குடிவந்த ‘வித்யா’ என்றழைக்கப்படும் வித்யாசங்கர் என்கிற பிரபல எழுத்தாளன்.
வித்யாவின் கதைகளைத் தாங்கி வராத பத்திரிக்கைகளே தமிழகத்தில் இல்லை எனலாம். முப்பதே வயதானாலும், அவனுடைய எழுத்தில் எழுபது வயதுக்குரிய அனுபவ முத்திரை இருந்தது. ஜனரஞ்சகமான கதைகள், க்ரைம், செக்ஸ் கதைகள் என்று அனைத்து பத்திரிக்கைகளிலும் பிரபலமாயிருந்தான். அவனுக்கென்று ஒரு பெரிய வாசகர் வட்டமே இருந்தது.
பவானி ஒரு புத்தகப் பைத்தியம். தமிழ்க் கதைகளை தேடித் தேடி படிப்பாள். தன்னுடைய பிளாக்கிலேயே ஒரு பிரபல எழுத்தாளர் புதிதாக குடி வந்திருக்கிறார் என்கிற விவரம் தெரிந்ததும், வித்யாவின் நட்பை விரும்பி தானே அவனிடம் வலியச் சென்று அறிமுகப் படுத்திக் கொண்டாள். அவனது கதைகளைப் படித்துவிட்டு அவனிடமே அதைப் பற்றி புகழ்ந்தாள்.
சென்ற மாதத்தில் ஒரு நாள் பவானி வித்யாவை பாஸ்கருக்கு அறிமுகப் படுத்தியபோது, பாஸ்கருக்கு அவனது தோற்றமே பிடிக்கவில்லை.
அவனும் அவனது நீண்ட தலைமுடியும், செப்பனிடப்பட்ட தாடியும், தொள தொள ஜிப்பாவும்… பார்த்தாலே வெறுப்பூட்டின.
அது மட்டுமின்றி வித்யாவின் அழுத்தமான பார்வையும், அமர்த்தலான பேச்சும், தான் இருக்கும்போதே தன்னிடம் விட்டேத்தியாக இரண்டொரு வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு, தன் மனைவி பவானியிடம் இலக்கியப் போர்வையில் இழைவதும் பாஸ்கருக்கு சிறிதும் உடன் பாடில்லை.
தன் மனைவி மீது தவறு இல்லை எனினும் அவள் வித்யாவுடன் அடிக்கடி பேசுவதைக் கண்டிக்க முடியாமலும், அவ்வாறு எதாவது கண்டிக்கப் போய் அவள் தன்னை ‘சீப்’பாக நினைத்துவிட்டால் தன்னுடைய சுயமரியாதை அடிபட்டுப் போய் விடுமே என்கிற பயத்திலும் காலம் தள்ளிக் கொண்டிருந்தான்.
பாஸ்கரின் சந்தேகத்தை கிளறும் வகையில் தற்செயலாக சில சம்பவங்கள் நடந்தன. இரவு உணவுக்குப் பிறகு பவானி முன்புபோல் அடிக்கடி டெரஸுக்கு பேச வராமல் வித்யாவின் கதைகளைப் படிப்பதில் ஆர்வம் காட்டியதும், படித்துவிட்டு அவனுடன் மொபைலில் அந்தக் கதையை சிலாகிப்பதும்… பாஸ்கரை மிகவும் சங்கடப் படுத்தியது. மனம் கசக்க ஆரம்பித்தது. வித்யா வித்யா என்று அவனிடம் ரொம்பத்தான் இழைகிறாளே என்று குமைந்தான்.
அவ்வப்போது அலுவலக விஷயமாக தான் டூர் போகும் சமயங்களில் இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வார்களோ என்று தவித்தான். தன் மனதிற்குள் அவர்களது நட்பை நாகரீகப் படுத்த முயற்சி செய்து தோல்வியடைந்தான்.
தன்னுடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள ஒரு தடவை தான் டூர் போவதாகச் சொல்லி, மாலை சென்று விட்டு அன்று இரவிலேயே பத்தரை மணிக்கெல்லாம் திடீரென்று வந்து கதவைத் தட்ட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.
அன்று பெளர்ணமி. புதன் கிழமை…
மாலை ஐந்து மணிக்கெல்லாம் அலுவலத்திலிருந்து வந்த பாஸ்கர், தான் அலுவலக விஷயமாக பம்பாய் வரையில் அவசரமாகச் செல்வதாகவும், பத்து மணிக்கு ப்ளைட் என்றும், திரும்பிவர இரண்டு நாட்களாகும் என்று சொல்லிவிட்டு எட்டு மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பிச் சென்றான்.
-௦-
இளம் தம்பதியினர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை
அக்ட் 27 சென்னை
சென்னை அண்ணா நகரில் வசித்து வந்த இளம் தம்பதியினர் பாஸ்கர் (30)
பவானி (27) நேற்று முந்தைய தினம் இரவு பத்தரை மணியளவில் தங்கள் வீட்டின் ஐந்தாவது அடுக்கின் மொட்டை மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள். முதலில் பவானி குதித்ததாகவும் அதைத் தொடர்ந்து அவளது கணவர் பாஸ்கர் குதித்ததாகவும் தெரிகிறது.
அவர்களின் வீடு வெளிப்பக்கமாக பூட்டியிருந்தது. தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இந்த இரட்டைத் தற்கொலைகள் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா நகர் இன்ஸ்பெக்டர் கதிரேசன் இது பற்றி மேற்கொண்டு தீவிரமாக விசாரணை செய்கிறார். மண்டை சிதறிய நிலையில் பிரேதங்கள் அகற்றப்பட்டு ….
அதற்குமேல் படிக்க முடியாமல் வித்யாசங்கர் அன்றைய பேப்பரை மூடிவிட்டு எழுந்தான். அவன் உடல் வியர்த்தது. ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான். மனதை எவ்வளவு இறுக்கிப் பிடித்தாலும் புதன் கிழமை நடந்த சம்பவங்கள் அவனைப் பயமுறுத்தின. சோர்ந்து போய் படுக்கையில் சரிந்தான்.
அன்று நடந்த சம்பவம் மீண்டும் மீண்டும் அவன் மனத் திரையில் தோன்றியது.
புதன் கிழமை, இரவு 9.15.
டி.வி யில் சீரியல் பாத்துக்கொண்டிருந்த பவானி, அழைப்பு மணி சத்தம் கேட்டதும் எழுந்து சென்று கதவைத் திறந்தாள். அங்கு வித்யாசங்கர் புன்னகை புரிந்தவாறு நின்றிருந்தான். பவானி மகிழ்ச்சியுடன் வித்யாவை வரவேற்று பேசிக் கொண்டிருந்தாள். பேச்சினிடையே பாஸ்கர் ஊரில் இல்லை என்பதை தெரிந்துகொண்ட வித்யா, பவானியிடம், “இன்று பெளர்ணமியாச்சே… டெரஸுக்குப் போய் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தால் மிகவும் ரம்மியமாக இருக்குமே” என்றான்.
பவானி அப்பாவியாக டி.வி யை அணைத்துவிட்டு, வீட்டின் கதவைப் பூட்டி விட்டு அவனுடன் டெரஸ் சென்றாள்.
வித்யா மூன்றடி உயரமுள்ள டெரஸ் தடுப்புச் சுவரின் உள்பக்க விளிம்பில் சாய்ந்தவாறு சுவையாகப் பேச ஆரம்பித்தான். அவன் பேசினான் என்பதைவிட வார்த்தைகளினால் பவானியை மயக்கினான் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆண் பெண் ஈர்ப்புச் சக்தி, கான்ஷியஸ், சப் கான்ஷியஸ், இட், ஈகோ என்று வளர்த்துக் கொண்டே போய், மனிதன் எந்தத் தவறையும் செய்யலாம், அது அவனுக்கு சந்தோஷத்தை கொடுக்கும் எனில்…
அவன் குரலில் கிசு கிசுப்பான விரக தாபம் கொஞ்சியது.
பவானி ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள். பேச்சையும், எழுத்தையும் அவன் லாவகமாக கையாளுவதை எண்ணி வியந்தாள்.
மகுடிக்கு கட்டுண்ட பாம்புபோல் ஆனாள்.
அவன் மேலும், “you know Bhav, it is not the years that matters in our life; but the happy life that counts in those years, we live” என்றான். பவானி அவன் பேசிய ஆங்கிலத்திலும் சொக்கித்தான் போனாள். பெண்களுக்கே உரிய எச்சரிக்கை உணர்வுடன் கூடிய மூன்றாவது கண் அவளுக்கு அப்போது விழித்துக் கொள்ளவில்லை.
தன்னுடைய சாமர்த்தியமான கபடப் பேச்சு, பாலாகப் பொழியும் பெளர்ணமி நிலவு, சுகந்தமான காற்று, அவளின் தனிமை, அவனை நம்பிய அவளின் வெகுளித் தனம் எல்லாவற்றையும் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு –
ஆர்வத்துடன் பவானியை தன்னிடம் இழுத்து ஆலிங்கனம் செய்தான்.
முற்றிலும் தன் வசமிழந்த பவானி எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை.
பத்தரை மணிக்கு ஐந்தாவது மாடியில் தன் வீட்டின் பஸ்ஸரை அழுத்தினான் பாஸ்கர். பதிலில்லை. வெளிப்பக்கம் தாழிட்டிருந்த கதவை பிறகுதான் பார்த்தான். ஒருவேளை டெரஸுக்கு காற்று வாங்கச் சென்றிருப்பாள் என்று நினைத்தவனாய் மேலே வந்து, டெரஸின் ஒற்றை மரக் கதவை மெதுவாகத் திறந்தான்.
அங்கு அவன் கண்ட அவலமான காட்சி… தன் கண்களையே நம்ப முடியாமல் திணறினான். பவானி கண்கள் மூடியபடி திவ்யாவின் ஆலிங்கனத்தில் கட்டுண்டிருந்தாள்.
ஆள் அரவம் கேட்டதும் சட்டென்று உணர்வுக்கு வந்து, விருட்டென்று விலகிக் கொண்டாள். பாஸ்கரைப் பார்த்ததும் தன் குற்றம் உணர்ந்து ஒன்றும் சொல்லத் தோன்றாது விசித்து அழுதாள்.
துடி துடித்துப்போய் செய்வதறியாது விக்கித்து நின்றான் பாஸ்கர்.
அடுத்த கணம், யாருமே எதிர் பாராத அந்தச் சம்பவம் நடந்தே விட்டது.
பவானி ஓடிச் சென்று மூன்றடி உயரமுள்ள டெரஸின் தடுப்புச் சுவரைத் தாண்டி வெளியே குதித்து விட்டாள்.
குடும்பப் பெண்ணான அவள், கண நேரத்தில் தன் வசமிழந்து, அடுத்த கணத்தில் தன் கணவன் முன் அன்னிய ஆடவனுடன் மானத்தையிழந்து, மூன்றாவது கணத்தில் உயிரையும் இழந்து விட்டாள்.
பாஸ்கரும் வித்யாசங்கரும் அவளது இந்தச் செய்கையை சற்றும் எதிர் பார்க்கவில்லை.
பதறிப்போய் துடி துடித்தவாறு வெளியே எட்டிப் பார்த்தான் பாஸ்கர்.
க்ரைம் கதைகள் பல எழுதிய வித்யாவின் மூளை உடனே சுறுசுறுப்பாக வேலை செய்தது… பாஸ்கர் நம்மைப் பழி வாங்காமல் விடமாட்டான். நாளையே நாம் போலீஸ், கோர்ட் என்று அலைந்து தண்டனை கிடைப்பது நிச்சயம், தன் இமேஜ் கெடுவது நிச்சயம் – பாஸ்கர் உயிரோடு இருக்கும் வரையில் – என்று முடிவு செய்தவன், ஒரு கணமும் தாமதியாது சட்டென்று தனது முழு பலத்தையும் பிரயோகித்து பாஸ்கரின் இரண்டு கால்களையும் வாரிவிட்டு, வெளியே தள்ளி விட்டான்.
சற்றும் இதை எதிர்பாராத பாஸ்கர் ஈனக் குரலில் முனகியபடி தலைகீழாக பூமாதேவியை விரைந்து அடைந்து பின்னமானான். பாஸ்கர் விறு விறுவென ஓடிச் சென்று நான்காவது மாடியில் உள்ள தன் வீட்டிற்குள் சென்று புகுந்து கொண்டான்.
சம்பவம் நடந்த அரைமணி நேரத்திற்கெல்லாம் போலீஸ் வந்தது. மனிதர்கள் ஈயென மொய்த்தார்கள். சடலங்களை அகற்றும் வரை தன்
வீட்டின் பால்கனியிலிருந்து கீழே நடக்கும் சம்பவங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான் வித்யாசங்கர்.
போலீஸ் விசாரணையின் போது பாஸ்கர் ஐந்து மணிக்கே வீட்டுக்கு கிளம்பிச் சென்றார் என்கிற அலுவலகத் தகவல், வெளியே பூட்டியிருந்த பாஸ்கரின் வீடு, எவர் மீதும் சந்தேகப்பட முடியாத சூழ்நிலை எல்லாமாகச் சேர்ந்து ஒரு கொலை இரண்டு தற்கொலைகளாகி விட்டது.
மீளாத் துயரினால் பாதிக்கப்பட்ட பாஸ்கர்-பவானியின் உறவினர்களுக்கு அவர்களின் தற்கொலை இன்னமும் புரியாத புதிராக இருக்கிறது.
சட்டத்தின் பிடியிலிருந்து சாமர்த்தியமாக தப்பிவிட்ட வித்யாசங்கர் தனது அடுத்த கதைக்கான கருவைத் தேடி தன் வீட்டின் மேல்விட்டத்தைப் பார்த்தபடி புகைத்துக் கொண்டிருந்தான்.