பெருமழைக்காடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 8,553 
 
 

அதெல்லாம் ஒத்துவராது புள்ள! அத்துவிட்டுப்புடலாம், நாலு பேரக்கூட்டி செய்யமுடியாதுன்னு நினைச்சேன்னா, இவ வீட்டோடவே இருந்துட்டு போகட்டும்!” என்ற அப்பாவின் குரலில் இருந்த கோபமும், ஆதங்கமும் சுசீலாவுக்கு நன்றாகவே தெரிந்தது. வேண்டாம் இந்த உறவு என்பதில் அவளுக்கும் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை இருந்தாலும், குணங்கெட்டவனின் செயல்கள் அதன் பின் என்னவாக இருக்கும் என்பதை யாராலும் சொல்லமுடியாது. சுசீலாவின் யூகங்களும் ஒரு வரையறைக்குட்பட்டது, அவன் செய்யும் காரியங்கள் பெரும்பாலும் யாரும் எதிர்பாராதது போலவே இருக்கும் எப்போதும்.

சுசீலாவின் அம்மா ஒன்றும் பேசாமல் நின்று கொண்டிருந்தாள், சொளகில் போட்டிருந்த அரிசியை அளைந்தபடியே. அவள் எப்போதாவது தான் பேசுவாள். பெரும்பாலான சமயங்களில் ஒன்றும் பேசுவதில்லை, அவர் சொல்வதை கேட்பதோடு சரி, அவள் வீட்டு விஷயமாய் இருந்தால் மட்டும், கொஞ்சம் அலுத்துக் கொள்வதும், புலம்பிக் கொள்வதும் உண்டு. அவர் தான் எதுக்கெடுத்தாலும், அம்மாவிடம் யோசனை கேட்பது போல பாவனை பண்ணுவார். ஏதும் சொல்லத்தோன்றினாலும், அவள் சொல்லமாட்டாள். சுசீலாவுக்கு இங்கு வரவே யோசனையாய் இருந்தது இந்த முறை, ஆனாலும் வேற போக்கிடம் தெரியாமல் அப்பாவின் நிழலில் தான் ஒதுங்க வேண்டியிருக்கிறது.

”நா அங்க போகப்போறது இல்லப்பா, பழைய மாதிரி ஒத்தாசைக்கு உங்க கூடவே இருந்துக்குறேன் அல்லது ஏதோ வேலைக்குப் போறேன்பா!” என்றாள் தீர்மானமாக.

தனக்கு முன் பிறந்த அக்காள்களுக்கு திருமணம் முடிந்து சென்றதும், அப்பாவும் நிறைய தளர்ந்து விட்டார் என்று தோன்றும் அவளுக்கு. ஆண் பிள்ளை இருந்தால், உதவியாய் இருந்திருக்கும் என்று கடைசி வரை முயன்றவர், ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்றதும் நிமிர்ந்து விட்டார். சுசீலா தொடங்கி, கிரேசியும், மரிய தங்கமும் அவருக்கு உதவியாய் இருந்தபோது, இவளும் படிப்பை நிறுத்தி அப்பாவின் பட்டறையில் வேலை பார்க்க ஆரம்பித்தாள். கடினமான வேலை தான் என்றாலும், வீட்டிற்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற அவள் உடலில் உரம் ஏறியது போல இருந்தது.

முத்தையா ஆசாரி, கார் ஹாரன் பார்ட்ஸ் எல்லாம் செய்து கடைகளுக்குப் போடும் சின்ன பட்டறை வைத்திருக்கிறார். ஹாரன் காயில், ஹாரன் பிளேட் என்று செய்வதுடன், மொத்தமாய் சில்லறை ஸ்பேர் பார்ட்ஸ் வாங்கி ஊர் ஊராய் சென்று விற்று வருகிறார். அவர் உடன் லைனுக்கு போகமுடியாவிட்டாலும், லேத்தில் ஹாரன் கோர் ராடு செய்வதுடன், டயாப்ரம் பிளேட்டும் செய்யவும் கற்றுக் கொண்டாள். அவளுடைய அப்பா, அவளின் ஆர்வத்தை பார்த்து எல்லாம் கற்றுக் கொடுத்தார். சுசீலா லேத்தில் கடைவதுடன், பட்டறையின் நிர்வாகத்தையும் பார்த்துக் கொண்டாள். தங்கைகள் இருவரும் காப்பர் வயரில், ஹாரன் காயில் சுத்துவதுடன், அதை பேக் செய்து, வெவ்வேறு பெயர்களில் லேபிள் வைப்பதோடு சரி. பொதுவாய் டயாப்ரம் பிளேட்டில் வேறுபாடு எதுவும் தெரியாது. கோர் ராடின் நீளமும், காயிலின் திக்னெஸ்ஸில் மட்டுமே வித்யாசம் இருக்கும்.

சுசீலாவின் அம்மாவும் சிலசமயம் ஹாரன் காயில் சுத்துவதுண்டு. சாத்தூரில் இருந்த போது பேனா கம்பெனியில் வேலை பார்த்தது மாதிரி தான் இதுவும் அவளுக்கு.

சுசீலாவுக்குத் திருமண வயது வந்த பிறகும், திருமணம் செய்து வைக்க அவளுடைய அப்பாவுக்கு யோசனையாய் இருந்தது. சுசீலா இருப்பதால், அவரால் நிம்மதியாய் லைனுக்கு போய் வந்து வியாபாரத்தை கவனித்துக் கொள்வது எளிதாய் இருந்தது. சுசீலாவின் இரண்டு தங்கைகளும், சிறுபிள்ளைகளாகவே வளர்ந்தார்கள். பள்ளிக்குப் போவதும், மாலைவேளைகளில் சுசீலாவுக்கோ, அப்பாவுக்கோ உதவுவதோடு சரி.

சுசீலாவுக்கு லேத்தில் வேலை செய்வது அதிகம் பிடித்தது. அரை இஞ்ச் ராடை லேத்தில் கடைய கடைய, பூப்புவாய் இரும்பு இழைகளை உதிர்க்கும் அந்த மெஷின் மீது அத்தனை காதல் அவளுக்கு. கண்ணில் தெறிக்காமல் இருக்க ஒரு கண்ணாடியும், கைகளில் உறையும் போட்டுக் கொண்டு அவளைப் பார்க்க அவளுக்கே அத்தனை ஆசையாய் இருக்கும். ஆண்கள் மட்டுமே இருக்கும் இந்த லேத் வேலையில் தான் இருப்பது அவளுக்கு பெருமையாகவும் இருக்கும். அப்பாவும் அதைச் சொல்லி சொல்லி பூரித்துப் போவார்.

ஸ்பிண்டிலில் ராடை இணைத்தபிறகு, டெயில் ஸ்டாக்கை அட்ஜஸ்ட் செய்யவேண்டும். டூல் ஹோல்டர்கள் இரண்டு மாதிரியான டூல் பிட்டை மாற்றி மாற்றி மெதுவாக நகர்த்தி தொடவைக்க, இழை இழையா சுருளும் ராடு. கடைசல் முடிந்ததும், அறுப்பதற்கு வேறு ஒரு டூல் பிட்டை உபயோகிப்பது இவளது வழக்கம். நினைத்தபடி நகர்த்த உதவும் கேரேஜ் ஹாண்ட்வீல், முன்னும் பின்னும் நகர, அவள் ஒரு சிற்பம் செதுக்குவது போன்ற நேர்த்தியுடனும், ஒன்றுதலுடனும் செய்வாள். அவள் லேத்தை கையாளும் விதத்தில் இருக்கும் லாவகத்தை பார்க்கும் போது அவளுடைய அப்பாவுக்கு பெருமையாய் இருக்கும். ராடு சூடேற சூடேற, மக்கில் வைத்திருக்கும் தண்ணீரை மெல்ல விடுவாள். எண்ட் பிட் ராடுகளை, தனக்கு பிடித்த மாதிரி, சிறு பொம்மைகள் செய்து அடுக்குவது அவளுக்கு ரொம்பவும் பிடித்த விஷயம். கருத்த இரும்பு ராடு, இழைய இழைய உள்ளே இருக்கும் வெள்ளுடம்பைக் காட்டும் போது அவளுக்கு ஏனோ ஒரு சந்தோஷம் தொற்றிக் கொள்ளும்.

அவளுடைய அம்மாவின் வழி தூரத்து சொந்தத்தில் இருந்து வந்த பையன், சொந்தமா லேத் வச்சிருக்கிறதாக தகவல் வந்தது. அவளுடைய அம்மாவுக்கு அந்த சம்பந்தம் ரொம்பவும் பிடித்தது. அவளுடைய ஊர்க்காரர்கள் என்பதால், கூடுதல் சிரத்தையுடன், சுசீலாவுக்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று தீவிரமாய் முயற்சி செய்தாள். சுசீலாவுக்கு ஏனோ அவள் அம்மா வழி சொந்தக்காரர்கள் என்றாலே பிடிப்பதில்லை. உடன் பிறந்த அண்ணன் தம்பிகள் யாரும் அம்மாவுடன் பேசுவதில்லை. அம்மாவின் அப்பா வழி வந்த நிலத்தையும், வீட்டையும் பிரித்துக் கொண்டவர்கள், அம்மாவின் அம்மா நகைகளைக்கூட கொடுக்கவில்லை என்று அம்மா சண்டை போட்டு வந்துவிட்டாள். ஆனாலும் அம்மா, அண்ணன் தம்பிகளை ஒரு போதும் விட்டுக்கொடுப்பதில்லை.

”பொச கெட்ட பயலுக” கூடப்பிறந்தவளுக்கு, அவ அம்மா ஞாபகமா ஒரு குண்டு தங்கம் கொடுத்துட்டா குறைஞ்சா பொயிடுவாய்ங்க! சரி! அவிங்க தான் அப்படி இருக்காய்ங்கன்னா, இவளுக்கு அவிங்க கொடுத்து தான் நிறையப்போற மாதிரி மூஞ்சிய தூக்கி வச்சுட்டு உட்கார்ந்திருக்கா” என்று அதட்டி விட்டு போய்விட்டார்.

இது பெரிய மாமா சம்பந்தம் செய்த வழி சொந்தம் என்பதால், அவளுடைய அப்பாவுக்கு அத்தனை விருப்பமில்லை. அதுவும் சுசீலாவை எங்கோ உசிலம்பட்டியில் கொடுப்பது அவரால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. உள்ளூர் மாப்பிள்ளையா இருந்தா தான் அவரால் அடிக்கடி பார்த்துக் கொள்ளமுடியும் அல்லது வீட்டோட மாப்பிள்ளையாய் இருந்தா நல்லது என்று தோன்றியிருக்க வேண்டும் அவருக்கு. அதனால் அவன் மூஞ்சே சரியில்லையே! என்று போட்டோ பார்த்தவுடன் உதட்டை பிதுக்கி மறுத்துவிட்டார்.

அதே வேகத்தில் பார்த்தவன் தான், சுசீலாவின் புருஷன் டேவிட் சுந்தரம், ஊரு அலங்காநல்லூர் பக்கத்துல மரியம்மாள்குளம். ஐ.டி.ஐ-ல டர்னர் வேலைக்கு படிச்சிட்டு, கட்சி, அரசியல் என்று சுற்றிக் கொண்டிருந்தவன். அவனுக்கு சுசீலாவை திருமணம் செய்வதை விட, மதுரையில் ஜாகைய மாத்துறோம் என்பது தான் கூடுதல் கவர்ச்சியா இருந்தது. டவுன்ஹால் ரோட்டு லாட்ஜ்களில் தான் அவர்களின் அரசியல் பரிவர்த்தனைகள் ஆரம்பிக்கும். திரும்ப அலங்காநல்லூர் வரை போயிட்டு, ஊருக்கு நடக்கணும், அதுவுமில்லாம, அடுத்த நாளு வரணுமென்றால் சிரமப்பட வேண்டியிருக்கும். பொண்ணும் பார்க்க லட்சனமா இருந்ததால், சுந்தரம் சந்தோஷமா தலையாட்டிட்டான்.

முத்தையா ஆசாரிக்கு, அவன் வீட்டோடு மாப்பிள்ளையாய் இருக்க சம்மதித்ததில் சந்தோஷம் தாங்கமுடியவில்லை. டர்னர் வேற படிச்சிருக்கான், கூடமாட உதவியா இருப்பான். முன்னுக்கு வந்துடலாம் என்று கணக்கு போட்டார். அப்பாவுக்கு பிடித்ததாலும், சுந்தரம் நிஜமாகவே சுந்தரமாய் இருந்ததாலும், திருமணத்திற்கு சம்மதித்தாள் சுசீலா. டவுன் ஹால் ரோட்டில் இருக்கும் ரோசரி சர்ச்சில் தான் கல்யாணம், எல்லாம் முடிந்து அம்சவல்லி பிரியாணி வீட்ல என்று அமர்க்களமாய் நடந்தது. சுசீலாவின் பெரிய அக்கா ஸ்டெல்லாவிற்கு கூட கொஞ்சம் வருத்தம், தன் புருஷன் இத்தனை லட்சனமா இல்லாம, இருட்டுல பிடிச்சவன தலைல கட்டிட்டாரே அப்பா என்று. ரெண்டாவது பெண்ணால், கழுகுமலையில் இருந்து வரமுடியவில்லை, நாலு வருஷத்துக்கப்புறம் இப்ப தான் முழுகாம இருக்கிறாள் என்று அவள் மாமியார் விடவில்லை என்று சுசீலாவுக்கு போன் பண்ணி தகவல் அணுப்பியிருந்தாள். சுந்தரத்துக்கு நல்ல வேளை, அம்மா இல்லை! என்று நினைத்துக் கொண்டாள்

ஒரு மாதம் கழிந்தது, அதுவரை அப்பாவுடன் பட்டறைக்குப் போவது அரசியல் நியாயம் பேசுவது, மேல் வளையாமல் ஏதாவது செய்வது என்று பொழுதை ஓட்டினான் சுந்தரம். சுசீலாவின் அப்பாவிற்கு புது மாப்பிள்ளை தானே என்று பேசாமல் விட்டு விட்டார். கையில் இருந்த காசு கரைந்ததும், க்ரோமியம் பிளேட்டிங் முடிந்த சரக்கை எடுத்துக் கொண்டு லைனுக்கு கிளம்பினார். கும்பகோனம், மாயவரம் அப்புறம் தஞ்சாவூர் திருச்சி இந்த முறை.

“மாப்பிள்ளை! நான் லைனுக்குப் போறேன், கழுகுமலைக்கும் போறேன்! வர நாலஞ்சு நாளாவது ஆகும்! சுசீலாவ பார்த்துக்கோங்க மாப்பிள்ள! அப்படியே பட்டறைக்கும் சுசீலா கூட போங்க, போயிட்டு ஹாரன் கோர் ராடு ஆர்டர் ஒண்ணு இருக்கு, அழகப்பா மோட்டார்ஸுக்கும், இந்தியன் மோட்டார்ஸுக்கும் நான் வர்றதுக்குள்ள அணுப்பிடணும்.” ”சுசீலாவுக்கு தெரியும் மாப்பிள்ளை, ஒரு தடவ சொன்னா, நீங்க பிக்கப் பண்ணிக்கிடலாம்” ரொம்ப அவசரம், ரொம்ப முக்கியமும் கூட, நான் லைனுக்கு போலேன்னா, வரும்படி வராது” என்று தயங்கி தயங்கி அவனிடம் சொன்னார்.

“மாமா நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க! தைரியமா போயிட்டு வாங்க மாமா, நான் இருக்கேன்! என்று அவன் பேசியது, சுசீலாவின் அப்பாவுக்கு ஆறுதலாய் இருந்தது. ரெண்டு நாளில் அவனுக்கு அரசியல் அரிப்பு ஏற்பட, டவுன்ஹால் லட்சுமி லாட்ஜில் வட்டம் இருப்பதாக தகவல் வர, மொய் பணத்தில் கொஞ்சம் கேட்டு வாங்கிப்போனவன் ரெண்டு நாளாய்க் காணவில்லை. சுசீலாவே திரும்பவும் லேத்தில் நின்று வேலையை முடிக்கவேண்டியதாய் இருந்தது. என்னக்கா! நீயே வந்துட்ட வேலைக்கு? என்று கேட்ட முருகனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சிரித்து வைத்தாள்.

ரெண்டே நாளில் ஆர்டர் வேலை அத்தனையும் முடித்துவிட்டாள், முருகனை டிவிஎஸ் 50 யை கொடுத்து வடக்கு வெளி வீதியில் இருக்கும் அழகப்பா மோட்டார்ஸுக்கும், இந்தியன் மோட்டார்ஸுக்கும் போட்டுவிட்டு, காசு வாங்கிவர அணுப்பினாள். எப்படித்தான் மோப்பம் பிடித்தானோ? காசு வீட்டுக்கு வந்ததும், அவனும் வந்தான்.

”நிலக்கோட்டையில பொதுக்கூட்டம், வட்டமே வரச்சொல்லிட்டாரு, திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ கூட இருந்தாப்ல, சுந்தரம், சுந்தரம்னு, எல்லா வேலைக்கும் நான் தான் பாத்துக்கோ” என்று அவன் பெருமை பொங்க பேசிய போது சுசீலாவுக்கு எரிச்சலாய் இருந்தது. இனிமே இவன் கூட தான் என்று நினைத்தபோது பயமும் வந்தது. வெள்ளிக்கிழமை அப்பா வந்தபோது இதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை, ஆனால் அவருக்கு விஷயம் தெரிந்து போனது. பட்டறையில் இருக்கும் முருகன் சொல்லிவிட, அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்தவன், செருப்பை தாறுமாறாக விட்டான், நிலையைப் பிடித்துக் கொண்டே. குடித்திருந்தான் போல. முத்தையா ஆசாரி, இதையெல்லாம கவனித்துவிட்டு, “என்ன மாப்பிள்ளை! ரெண்டு நாளா கண்ல படலியாமே, எங்க போயிருந்தீங்க! என்றார் முத்தையா ஆசாரி.

“ஆமா மாமா, நிலக்கோட்டையில ஒரு பொதுக்கூட்டம், கட்சி வேலை செய்ய எம்.எல்.ஏவே கூப்பிட்டு விட்டாரு, போய்த்தானே ஆகணும்! நாளைக்கு ஒரு வட்டம், மாவட்டம்னு ஆயிட்டா உங்களுக்கு தானே மாமா பெருமை” என்று இளித்தவாறே பேசினான்.

சுசீலாவின் அப்பாவுக்கு தான் ஏதோ பெரிய தப்பு செய்துவிட்டது போலத் தோன்றியது. அதைக் கட்டுப்படுத்திக் கொண்டே “அரசியலெல்லாம் வேணாம் மாப்ள! அது பொழப்பு இல்லை மாப்ள, கட்சிக்கு நாயா உழைக்கிறீங்க! நமக்கு ஒண்ணு தேவைன்னா யாரு வந்து நிக்கப் போறா, சொல்லுங்க!” என்றார்

சுசீலாவையும் அவளுடைய அம்மாவையும் பார்த்தவன், இரண்டு பெண்கள் முன்னால், தன்னை அவமானபடுத்திவிட்டார், அதுவும் நாய் என்று சொல்லிவிட்டது அவனுக்கு ஆத்திரத்தை தூண்டியது.

“இந்த மயித்துக்குத் தான், வீட்டோட மாப்ளை எல்லாம், நமக்கு தோதுப்படாதுன்னு, எங்கப்பன்கிட்ட அன்னைக்கே சொன்னேன், கேட்டானா அந்தாளு! பதுமையா இருக்கா, நல்ல குடும்பம், இது போல சம்பந்தம் கிடைக்காதுன்னு, ஏதோ சீமையில இல்லாத அதிசயத்த கண்டமாதிரி இவளைக்கட்டி வச்சான் எங்கப்பன்! என்று குரலை ஏற்றி இறக்கிக் கத்த, யாருக்கும் என்ன பேசுவது என்று தெரியாமல் மாறி மாறி முழித்துக் கொண்டிருந்தார்கள். சுசீலா, அப்பாவையே பார்த்தாள், அவர் தலையில கை வைத்தபடி உட்கார்ந்து விட்டார்.

சுசீலாவின் அப்பா அடங்கியது மாதிரி தெரிந்தவுடன், இன்னும் எகிறினான். “ம்மாள! எனக்கென்ன தலையெழுத்தா இங்க கிடந்து சாக? போனாபோகுதுண்ணு வந்து கூட இருக்கலாம்னு பாத்தா, சும்பைன்னு நினைச்சீங்களா?” என்று திரும்பி சுசீலாவை நோக்கி, நீ எங்கூட வர்றியா? இல்ல! உங்க அப்பன் கூடயே கிடந்து லோல்படுறியா? என்று முடிவாய் கேட்பது போல கேட்டான்.

நிறுத்தி நிறுத்தி ஆரம்பித்தான். இந்த வீட்ல ஈனமானமுள்ள ஒரு பய இருப்பானாடி! நினைச்சுட்டு திரிறீங்க என்னமோ மணத்துப்போய் கிடக்குற மாதிரி?

புலுக்க வேல செய்ய நாந்தான் கிடச்சனா உங்கப்பனுக்கு?” என்று கையைத் தூக்கி ஒரு மாதிரி காட்டினான். கடந்த ஒரு மாதத்தில் இருந்த குழைவும், பேச்சும் தனக்கு சம்பந்தம் இல்லாதது போல பேசினான். இது தான் இவனுடைய நிஜம் என்று நினைத்தபோது சுசீலாவுக்கு வேதனையாய் இருந்தது. ஒரு மாதம் என்பது அவ்வளவு அலுப்பு தரும் காலமா? என்று நினைத்தபோது அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது.

அப்பாவை பார்க்க சகிக்கவில்லை சுசீலாவுக்கு, அவர் கையெடுத்துக் கும்பிட்டபடியே போயிட்டு வா! என்றார். இதற்கு மேல் இவனை நிறுத்துவது சரியில்லை, மரியாதையில்லை என்று பட்டிருக்கவேண்டும் அவருக்கு என்று தோன்றியது. காலையில் போகலாம் என்று முடிவானதும், அறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டாள்.

ராத்திரி முழுதும் அறையில் இருந்து சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. விடிகாலையிலேயே, வேண்டியதை எடுத்துக் கொண்டு அவனுடன் கிளம்பினாள். தங்கைகளுக்கு என்ன செய்வது என்று தெரியாமல், அம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டே அப்பாவை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“எங்க ஊர்க்காரப்பயலையே கல்யாணம் பண்ணி வச்சிருக்கலாம், தெரியாத பிசாசு கையில் பொண்ண பிடிச்சு கொடுத்துட்டு கஷ்டப்பட வேண்டிருக்கு! சாதிசனத்துல கொடுத்தா, ஏதாவது பிரச்னைன்னா, எங்க அண்ணந்தம்பிங்க வந்து என்னான்னு கேட்க மாட்டாய்ங்க?!” என்று சந்தடி சாக்கில் புலம்பினாள். சுசீலாவின் அப்பா, முறைக்க அடங்கினாள்.

இப்போது இவள் வந்திருப்பது, கடந்த ஒரு வருஷத்தில் இது எத்தனாவது முறையோ? என்று தோன்றியது, முத்தையா ஆசாரிக்கு. ஒவ்வொருமுறை வரும்போதும், கையில் இருப்பதை கொடுத்து அணுப்பி விடுவார், மாதத்திற்கு ஒருமுறை லைனுக்குப் போயிட்டு வந்ததும், ஒரு பங்கு அவளுக்கு என்று ஒதுக்கி வைத்து விடுகிறார் இப்போதெல்லாம். வரும்போதெல்லாம், ஏதாவது ஒரு கதை இருக்கும், இவளோ அல்லது மாமனாரோ அடி வாங்கியிருப்பார்கள். காய்கறி நறுக்கிக் கொண்டிருந்த சமயத்தில் எதுவோ கேட்கப்போக, அருவாமனையோடு சேர்த்துத் தள்ள, வலது கையில் ரவிக்கைக்கு கீழே வெட்டுப் பட்ட கையோடு வந்தாள். முத்தையா ஆசாரிக்கு பார்க்க, பார்க்க கொதித்துக் கொண்டு வந்தது. “பரத்தேவடியா மகனை, கண்டதுண்டமா வெட்டினாலும் எனக்கு ஆத்திரம் அடங்காதுடி” என்று ஆவேசம் வந்தது போல கத்தியிருக்கிறார் அப்போது.

அதன்பிறகு அவருக்கு, லைனுக்குப் போகவே பயமாக இருந்தது, அவரு வீட்ல இல்லாத நேரம், வந்து கலாட்டா பண்ணி, ஏதாவது செஞ்சுடுவான்னோன்னு, முருகனை அணுப்ப ஆரம்பித்தார்.

இந்தமுறை சுசீலா போகமாட்டேன் என்று சொன்னது, அவருக்கு நிம்மதியாய் இருந்தது. எப்படியாவது இதுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். இனிமே ஜென்மத்துக்கு, சுசீலாவ அணுப்புற தப்ப மட்டும் செய்யக்கூடாது என்று முடிவு செய்து விட்டார்.

சிம்மக்கல் வரை போயிட்டு, கால் டன் 12கேஜ் தகடு வாங்கிவர கிளம்பினார். டயாப்ரம் செய்ய வந்த ஆர்டரை வர்ற திங்கக்கிழமைக்குள்ள முடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். பொழப்பையும் பார்க்கணுமே! என்று தனக்குள் சொல்லிக் கொண்டார். வாசலை விட்டு இறங்கும் போது தான் கவனித்தார், எதிரில் இருந்த கடையில் நின்ற சுந்தரம், இவரை நோக்கி வந்தான். ஒவ்வொரு முறையும், சுசீலா வந்த அடுத்த நாள் அல்லது அந்த வாரத்தில் வந்து சண்டை போட்டு கூட்டிக் கொண்டு போவான், சுசீலாவை. எதுக்குத்தான் கூட்டிட்டுப் போறானோ? திரும்பவும் பத்து நாள்ல ஏதாவது பிரச்னையோட வந்து நிற்பாள். இதே பொழப்பா போச்சு! ஆனா இந்த முறை அவன் என்ன கூப்பாடு போட்டாலும் அணுப்பக்கூடாது.

எதுக்கு வந்த இங்க? எல்லாத்தியும் அத்துவிட்டாச்சு! போயி ஒன் வட்டத்தைப் போயி உருவு! என்று அவன் தோளைப் பிடித்து தள்ளினார். வாசலில் சத்தம் கேட்டு வந்த, சுசீலாவும், அவளுடைய அம்மாவும் பேசாது நிற்க, பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டு, சுசீலாவை, “ ஏய் சொல்லு புள்ள! உங்க அப்பாக்கிட்ட!” என்றான். சுசீலா படக்கென்று திரும்பி உள்ளே போயிவிட்டாள்.

சுசீலாவின் அம்மா, அவனை உள்ளே வந்து பேசச்சொன்னாள். முத்தையா ஆசாரி, கையில் வைத்திருந்த சாவியை, மனைவியை நோக்கி எறிந்தார். ”போடி, வேலையப்பாத்துக்கிட்டு, வந்திட்டா சமரசம் பண்ண!” சுசீலாவின் அம்மாவும், வீட்டுக்குள்ளே புகுந்து கொண்டாள்.

நீ போறியா இல்லை, போலீசுல சொல்லவா? என்று விரலைக் காட்டி மிரட்டியபடியே, அவன் இடது தோளை பிடித்துத் தள்ளினார். தடுமாறி கீழே விழுந்தவன், இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து, முத்தையா ஆசாரியை மாறி, மாறி குத்தினான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *