புலி வருது!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: January 2, 2022
பார்வையிட்டோர்: 28,121 
 

சத்தியமங்கலம் காட்டிலாகா அலுவலகம் முன்பாக திடீரென்று ஜீப்பில் வந்து கலெக்டரே இறங்குவார் என்ற அதிகாரிகள் யாரும் எதிர் பார்க்கவில்லை

“இதோட எட்டு பேர் செத்தாச்சு. என்னதான் பண்ணிட்டிருக்கீங்க நீங்க?” கத்தினார் கலெக்டர்

“சார், கிராமத்துக்காரங்களே ஒரு குழு அமைச்சி தினம் பத்து பேர்னு தீப்பந்தம் கொளுத்திக்கிட்டு ஊரைச் சுத்தி வந்து காவல் காத்திக்கிட்ருக்காங்க. நாங்க ரெண்டு ஆபீசர்ஸ் ஜீப்புல துப்பாக்கியை வெச்சிகிட்டு அலைஞ்சிட்டுக்கோம். இனிமே எந்த பிராப்ளமும் வராது சார்.”

“என்ன இப்படிப் பொறுப்பில்லாமல் பேசறீங்க? எட்டு பேரைக் கொன்னிருக்கு. மனுஷ ரத்தத்தோட டேஸ்ட் பார்த்து வெறி பிடிச்சி சுத்திட்டுருக்கு அந்தப் புலி. இனிமே வராதுன்னு எப்படிச் சொல்றீங்க?”

“ஒரு தடவை சுட்டதில் மிஸ் ஃபயர் ஆயிடுச்சு சார். ஆனா அதில மிரண்டு அது டீப் ஃபாரெஸ்ட் போய்டுச்சி, இனிமே வராது.”

“என்னால் ஒத்துக்க முடியாது. அந்தப் புலியை கொன்னுடச் சொல்லிதான் உத்தரவு போட்டுட்டேனே. ரிஸ்க் வேணாம். அதைக் கொன்னுடணும் அமைச்சர் மெட்ராஸ்ல உக்காந்துகிட்டு போன்ல கெட்டவார்த்தை எல்லாம் சொல்லி திட்டறார்ய்யா உங்கள்ள யாருக்கம் அந்தப் புலியைக் கொல்றதுக்குத் திறமை இல்லையா? அதான் உண்மையா?”

“சார், ஃபாரெஸ்ட் ஆபீசர் கதிர்வேலு இதில் எக்ஸ்ப ர்ட் சார். அவர் லீவுல போயிருக்கார். அவர் வந்ததும்…”

“மனுஷ உயர் செத்துக்கிட்டுருக்கு அந்த கிராமத்துல ஒவ்வொரு ராத்திரியும் உசுரைக் கைல பிடிச்சிட்டு பயந்துக்கிட்டுருக்காங்க. வந்ததும், போனதும்னு பேசிட்ருக்கீங்களே… அவரோட லீவைக் கேன்சல் பண்ணுங்க, உடனே வரச் சொல்லுங்க, புலியைக் கொன்னுட்டுதான் என்னை வந்து பார்க்கணும்னு சொல்லுங்க.”

“எஸ் சார்.”

ஜீப் புறப்பட்டுப் போனதும், எல்லோரும் பெருமூச்சு விட்டார்கள்.

“என்ன அமுதா முட்டாள்தனமாப் பேசறே? ஃபுட்பால் மேட்ச்சா நடக்கப் போகுது, வந்து வேடிக்கைப் பார்க்கறேன்று சொல்றே? புலி வேட்டைம்மா, உயிரைப் பணயம் வெச்சு இறங்கறேன்” என்றான்

கதிர்வேல் தனது துப்பாக்கியைத் துடைத்தபடி.

“ப்ளீஸ் கதிர்…. ப்ளீஸ்…. ப்ளீஸ் கதிர், நீ அந்தப் புலியைச் – சுடறதை நான் உன் பக்கத்துல இருந்து பார்க்கணும்ப்பா. எவ்வளவு த்ரில்லிங்கா இருக்கும். பளீஸ் கண்ணா .” அவன் தாடையைப் பிடித்துக் கொண்டு கொஞ்சினாள் அமுதா.

“ரொம்ப டேஞ்சர் அமுதா.”

“டேஞ்சர் எனக்கு மட்டும்தானா? உனக்கில்லையா? நான் யாரு? உன்னோட சுகதுக்கங்கள்ல பங்கெடுத்துக்கப் போறவ. உனக்கேற்படற அபாயத்திலேயும் பங்கெடுத்துக்கக் கூடாதா?”

கதிர்வேல் அவளைப் பார்த்தான். யோசித்தான்.

“அவசியம் வரணுமா?”

“வந்தே ஆகணும்.”

“சரி, வா.” என்றான்.

புலி வேட்டைக்கான ஆயத்த ஏற்பாடுகளுடன் அவளையும் அழைத்துக் கொண்டு அந்த கிராமத்திற்கு வந்து சேர்ந்தான்.

முதல் கட்டமாக அந்த கிராமத்தில் புலி அடித்து பலியான குடும்பத்தினர். புலியைப் பார்த்தவர்கள் என்று எல்லோரையும் விசாரித்து, புலி காட்டின் எந்தப் பகுதியிலிருந்து வருகிறது, எந்தத் திசையில் திரும்பி ஓடுகிறது என்கிற தகவல்களைச் சேகரித்தான்.

அந்தத் தகவல்களின் அடிப்படையில் பகலில் காட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தேர்ந்தெடுந்து ஒரு உயரமான மரத்தின் மேல் பரண் ஒன்றை அமைத்தான். ஒரு ஆடு வேண்டும் என்ற கேட்டு, கொண்டு வந்து அந்த மரத்திற்கு அருகாமையில் மற்றொரு மரத்தில் கட்டிப் போட்டான். டவுனில் இரத்த வங்கியிலிருந்து மனித ரத்தம் ஒரு பாட்டில் வாங்கி வந்து ரெஃப்ரிஜிரேட்டரில் வைத்துக் கொண்டான்.

“உன் பிளான் என்ன கதிர்?” என்றாள் அமுதா.

“இன்னையிலேர்ந்து தினம் ராத்திரி அந்தப் பரண்ல போய் உக்கார்ந்து இருப்பேன். ரத்தத்தை அந்த ஆட்டு மேல் தெளிச்சு வெச்சிடுவேன். ஊர்ல தீப்பந்தம் கொளுத்திட்டு காவலுக்கு சுத்தறதை நிறத்தச் சொல்லப்போறேன். துப்பாக்கியோட தயாரா இருப்பேன். மனித ரத்தத்தோட சுவையைப் பார்த்துட்ட அந்தப் புலி அந்த ஆட்டைத் தேடி வரும். அது ஆட்டு மேல பாயறப்ப என் துப்பாக்கி குண்டு அதுமேல் பாயும்” என்றான் கதிர்.

“ஃபெண்டாஸ்டிக், உன்னோட அந்த பரண்ல நானும் இருப்பேன் இல்லையா?” என்றாள் அமுதா.

“கொஞ்சம் யோசித்துப் பாரேன் அவசியமா?”

“அவசியம்! புலியை நீ சுட்டதும் உனக்கு ஒரு தித்திக்கம் முத்தம் கொடுக்கறதுக்கு நான் உன் பக்கத்தில இருந்தாத்தானே முடியும்?”

“சரி, வந்து தொலை” என்றான்.

“ம்….ம்.. மே….” என்றது ஆடு. ரத்தம் தெளிக்கப்பட்டிருந்தது. மரத்தின் பரண்மேல் கதிர்வேலும், அமுதாவும் இருந்தார்கள். கதிர்வேலின் கையில் ஒரு அடக்கமான டார்ச்லைட். அதையும் அவன் அணைத்து விட, ஒரே இருட்டு.

அடர்ந்த மரங்களென்பதால் நில வெளிச்சம் கூட கசிந்து வரவில்லை . ஏதேதோ பறவகைளின் சத்தங்கள், கொஞ்சம் பயமாக இருக்கவே அவ்னைக் கட்டிக் கொண்டாள் அமுதா.

“என்ன, பயமாக இருக்கா?”

“கொஞ்சம்.”

“நான் தான் சொன்னேன்ல, வரவேணாம்னு. பயப்படாதே, கைல துப்பாக்கி இருக்கு”

“புலி மரத்து மேல ஏறி வராதா?”

“ஏறாது, அதிலயும் இவ்வளவு உயரம் ஏறாது.”

“ஏன் கதிர், குறி தவறாம சுட்டுடுவியா நீ?”

“இதுவரைக்கும் ஒன்பது புலி சுட்டுருக்கேன்.”

“ஒரே தடவை சுட்டதும் செத்துடுமா?”

“அது குண்டு எங்கே பாயுதுன்றதைப் பொறுத்தது. ஆனா ரெண்டு மூணு தடவை சுடணும். அதோட துடிப்படங்கற வரைக்கும் சுடணும்.”

“குண்டு பட்டதும் பயங்கரமாகக் கத்துமில்லை .”

“இல்லை . பி.எஸ்.வீரப்பா மாதிரி சிரிக்கும். கேக்கறியே கேள்வி.”

“சமயத்துல செத்தது மாதிரி நடிக்குமா?”

“இதோ பாரு. உனக்கு ரொம்ப பயமா இருந்தா, இறங்கு. கொண்டு போய் விட்டுட்டு வந்துடறேன்.”

“இறங்கின சமயம் பார்த்து புலி வந்துட்டா?”

“இவ்வளவு பயம் இருக்குல்லே, எதுக்கு பிடிவாதம் பிடிச்சே!”

“ஒரு ஆசைதான். ஆனா நீ பெரிய தைரியசாலி தான் கதிர். நமக்குப் பொறக்கற பையனும் படு துணிச்சலா வருவான்.”

“அதுக்கு இப்ப என்ன? இன்னும் கல்யாணமே நடக்கலையே.”

“அதனால் என்ன? நடக்க வேண்டியதுதான் நடந்துடுச்சே. என் வயத்துலே நம்ம பையன் கண்ணு முழிச்சுட்டான்ப்பா. பீரியட் தப்பிருக்கேன்.”

“ஏய்! நிஜமாவா? விளையாடாதே”

“இதிலென்ன விளையாட்டு? நிஜமா! என் கையைப் பிடித்து நாடி பாரேன். இரட்டைத் துடிப்பு கேக்கும்.”

“ஏன் எங்கிட்ட சொல்லலை நீ?”

“சமயம் வர்றப்ப சொல்லலாம்னு பார்த்தேன். அதான் சொல்லிட்டேனே!”

கதிர்வேல் மொனமானான். அவன் முகம் கறுத்துப் போனதை இருட்டு காரணமாக அவளால் பார்க்க முடியவில்லை.

கர்ப்பமாகி விட்டதால் இனி கல்யாணத்திற்கு நச்சரிப்பாளே! இருநூறு பவுன் நகை, பைக், மூன்று ஏக்கர் நிலத்துடன் பெண் நிச்சயம் செய்து வைத்திருப்பதை எப்படிச் சொல்லி இவளை கழற்றி விடுவது என்று யோசித்துக் கொண்டிருக்கையில் … இப்படி ஒரு பிரச்சினையா?

உர்ர்ர்ர்ர் என்று புலியின் உறுமல் தூரத்தில் கேட்டது.

“அதோ , புலி வருது.”

“ரொம்ப பயமா இருக்கு கதிர்” என்ற அவனை மேலும் இறுக்கிக் கொண்டாள்.

“கையை விடு முதல்ல. எப்படி நான் சுடறது?” என்று அவளை விலக்கி நிறுத்தி டார்ச் லைட்டை ஆகாயம் நோக்கிக் காட்டி, லீக்கான வெளிச்சத்தில் கீழே பார்த்தான். மெதுவாக அந்த ஆட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது புலி.

“அமுதா, அதோ பாரு புலி!”

“ம்ம்ம். நான் பார்க்க மாட்டேன்” என்று தன் முகத்தைப் பொத்திக் கொண்டாள்.

புலி ஆட்டுக்கு மிகப் பக்கமாக வந்த சமயம்… கதிர்வேல் பரணின் விளிம்பில் நின்றிருந்த அமுதாவை சட்டென்ற கீழே தள்ளி விட்டான்.

அமுதா ஒரு கிளையில் மோதியதால் நேராக தரையில் விழுந்து சிதறாமல் குதித்தமாதிரி கீழே விழுந்து, உடனே எழுந்து பிரமையில் ஒரு வினாடி நின்றிருக்க…..

அந்த நேரம் அங்கே பாய்ந்து வந்த கரடி ஒன்று ஆட்டின் மேல் தாவியது. அதே நேரம் புலியும் பாய்ந்தது.

சுதாரித்த அமுதா காட்டுக்கு வெளியே ஓடத் துவங்கினாள். ஆட்டை முன்னிட்டு கரடியும், புலியும் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டன. அதில் ஆடு எப்போதோ உயிரை விட்டு இழுபட்டுக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் புலி ஆட்டைக் கவ்வியிழுத்துக் கொண்டு காட்டுக்குள்ளே பாய்ச்சலாய் ஓடியது.

ஆட்டைக் கோட்டை விட்ட கோபத்தில் திரும்பிய கரடி மரத்தின் மேல் கதிர்வேல் இருப்பதைப் பார்த்தது. ஒரே பாய்ச்சலாக மரத்தின் மேல் ஏறத் துவங்கியது.

அமுதாவைத் தள்ளி விட்டபோது ஏற்பட்ட தடுமாற்றத்தில் தன் துப்பாக்கியைத் தவற விட்டிருந்த கதிர்வேல் இந்தப் பக்கமும், அந்தப் பக்கமுமாகத் தள்ளாடி பரபரத்துக் கொண்டிருக்க….

மரத்தல் ஏறிய கரடி அந்தப் பரணை சமீபித்தது.

(இதனால் சகலமானவருக்கும்… கெடுவான் – கேடு நினைப்பான் என்கிற நீதி மற்றும் ஒருமுறை சொல்லப்படுகிறது.)

Print Friendly, PDF & Email

1 thought on “புலி வருது!

  1. யப்பா. என்ன ஒரு விறுவிறுப்பான கதை. நீதியும் நச்சென்று சொல்லப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *