கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: January 25, 2013
பார்வையிட்டோர்: 21,239 
 
 

Мститель : பழிதீர்ப்பவன்
மூலம் : அன்டன் செக்ஹோவ்
தமிழில் : மா. புகழேந்தி

தனது மனைவியைக் கையும் களவுமாகப் பிடித்த சிறிது நேரத்தில் பியோடோர் பியோடோரோவித்ச் சிகேவ், துப்பாக்கிகள் விற்கும் ஷ்முக் அண் கோ வில், கைத்துப்பாக்கி ஒன்றை வாங்க நின்று கொண்டிருந்தான். அவனது வெளித்தோற்றம், ஆத்திரம் , சோகம் கலந்த கலவையாகவும் மாற்றமுடியாத உறுதி கொண்டவனாகவும் காட்டியது.
“என்ன செய்ய வேணும்னு எனக்குத் தெரியும்”, தனக்குள் சொல்லிக்கொண்டான்.”குடும்பத்தின் புனிதம் கேட்டு விட்டது, குலப்பெருமை சேற்றில் விழுந்து விட்டது. கெட்டவர்கள் வெற்றியடைகிறார்கள். அதனால் மரியாதைக்குரிய குடிமகனான நான் அவர்களைப் பழிவாங்கியே தீர வேண்டும். முதலில் அவளைக் கொல்லவேண்டும் பிற்பாடு அவளது காதலனை அப்புறம் என்னையே.”
அவன் இதுவரை எந்தக் கைத்துப்பாக்கியையும் வைத்திருக்கவில்லை, யாரையும் கொன்றதில்லை. ஆனால் அவனது கொந்தளிக்கும் மனநிலை கற்பனையில் பார்வையாளர்களின் கூட்டத்துக்கு நடுவே, பிணப் பரிசோதனைக்காக ரத்தம் தோய்ந்த மண்டை உடைந்த மூன்று உடல்கள் தெரிந்தது.

அந்தக் கடை ஊழியன், ஓர் உற்சாகமான பிரெஞ்சுக்காரன், தொப்பையுடனும் வெண்ணிறக் கோட்டுடனும், இருந்தவன், மரியாதையான புன்னகையுடன் கைத்துப்பாக்கிகளைக் காட்டிக்கொண்டு, தனது சின்னக் கால்களைத் தேய்த்துக் கொண்டிருந்தான்.
“நான் உங்களுக்கு சொல்வது என்னன்னா, இந்த அருமையான கைத்துப்பாக்கியை எடுத்துக் கொள்ளுங்கள், ஸ்மித் அண் வெஸ்சண் வகை, புத்தம்புதிய வரவு, அறுபது அடி தூரத்தில் இருப்பவரைக் கூடக் கொன்று விடும். குறி தப்பாது. அய்யா நீங்கள் இதன் நயமான வடிவமைப் பாருங்கள். அற்புதமான அமைப்பு. ஒவ்வொரு நாளும் ஒரு டசன் துப்பாக்கிகளை திருடர்களுக்கும், கொள்ளையர்களுக்கும் காதலர்களுக்கும் விற்கிறோம். வலிமையாகத் தாக்கும், தூரத்தில் இருப்பதைக் கூடத் துல்லியமாக அடிக்கும், மனைவியையும் கள்ளக் காதலனையும் ஒரே குண்டில் கொன்று விடலாம். தற்கொலைக்குன்னு சொன்ன இதைவிட நல்ல துப்பாக்கி கிடையாதுன்னு தான் நான் சொல்லுவேன் .”

கடை ஊழியன் விசையை அழுத்திக் காட்டினான். பேரலில் முகர்ந்து பார்த்தான், குறி வைத்துப் பார்த்தான், பேசமுடியா ஆனந்தத்தில் திளைத்தான். அப்போது அவனைப் பார்த்தவர்கள், துப்பாக்கியில் குண்டு மட்டும் இருந்திருந்தால், ஸ்மித்-வெஸ்சண் வடிவமைப்பில் மயங்கி யாருடைய மண்டையையாவது துளைத்துச் செல்லுமாறு சுட்டு விடப் போகிறான் என்று நினைத் திருப்பார்கள்.

“என்ன விலை?”, சிகேவ் கேட்டான்.

“அய்யா, நாற்பத்தி ஐந்து ரூபிள்கள்.”

“ம்ம்ம் அது எனக்கு அதிகமாத் தெரியுது.”

“அப்படீன்னா, அய்யா, இன்னொரு வகை துப்பாக்கியை உங்களுக்குக் காட்டுறேன், விலை கொஞ்சம் குறைவா இருக்கும். இதப் பாருங்க, நாங்க எல்லா வகைக் கைத்துப்பாக்கிகளையும் வச்சிருக்கோம். இங்க பாருங்க, இந்தக் கைத்துப்பாக்கி லேபாசேர் வகை. பதினெட்டு ரூபிள்கள்தான். ஆனால்…” (கடை ஊழியனின் முகம் இப்போது மரியாதையைக் குறைத்துக் கொண்டிருந்தது.) “….ஆனால், அய்யா, இது பழைய தயாரிப்பு. இவைகளை மனநிலை பாதிக்கப் பட்ட பெண்கள் தான் வாங்குவாங்க. தற்கொலை செஞ்சுக்கவோ ஒருத்தன் மனைவியைச் சுடவோ லேபாசெரை வாங்குறது இப்பெல்லாம் குறைஞ்சிட்டு வருது. ஸ்மித்-வெஸ்சண் வகை தான் சரியான தேர்வா இருக்கும்.”

“நான் என்னைச் சுட்டுக்கவோ இன்னொருத்தரைக் கொல்லவோ வாங்கலை,” சிகேவ் சொன்னான், உற்சாகமின்றி பொய்சொன்னான்.

“இதை நான் வாங்குறது பண்ணை வீட்டில் திருடர்களை விரட்டுறதுக்குத்தான்.”

“நீங்க எதுக்கு வாங்குறீங்க அப்படீன்னு கேட்கிறது எங்க வேலை இல்லை.” கடை ஊழியன் கண்களைத் தாழ்த்திக் கொண்டு புன்னகையுடன் சொன்னான். “ஒவ்வொருத்தரும் எதுக்கு வாங்குறாங்குன்னு நாங்க விசாரிக்க ஆரம்பிச்சா கடையை மூட வேண்டியது தான். திருடர்களை விரட்டுறதுக்கு லேபாசேர் சரியா இருக்காது, அது ஒன்னும் சத்தமா வெடிக்காது. நான் சொல்றது சண்டைக்கான துப்பாக்கிங்கறது, மார்டிமேர் தான்….”

“அவனை நான் சண்டைக்கு அழைக்கலாமா?” சிகேவின் மனத்தில் திடீரென ஓர் எண்ணம் பளிச்சிட்டது. “அப்படிச் செய்யிறது அவனுக்கு மரியாதை தருவதா ஆகிடும், இருக்கட்டும், அந்த மிருகத்தை நாயைப் போலக் கொல்லனும்…”

கடை ஊழியன், தனது சின்னக் கால்களால் நளினமாக அங்கும் இங்கும் நடந்தான், இன்னும் புன்னகைத்தவாறே பேசிக்கொண்டிருந்தான், அவன் முன்னே துப்பாகிகள் அடுக்கிவைக்கப் பட்டிருந்தன. அதில் எல்லாவற்றிலும் சிறந்ததாக இருந்தது, ஸ்மித் அண் வெஸ்சண். சிகேவ் அந்த வகைத் துப்பாக்கியை எடுத்தான். இலக்கில்லாமல்ப் பார்த்தான், கற்பனையில் மூழ்கிப் போனான். எப்படி அவன் சுடுவது, எப்படி அந்த துரோகம் செய்தவளது கால்கள் திருகிக் கொண்டு கிடக்கும்…என்று நினைத்துப் பார்த்தான். அவனது புண்பட்ட மனதுக்கு அது ஒன்றும் ஆறுதல் தருவதாக இல்லை. ரத்தம், அழுகை, கொடூரம் அதுவும் அவனை நிம்மதிப் படுத்தவில்லை. இதை விடக் கொடுமையான ஒன்றை அவன் யோசிக்க வேண்டும்.

“எனக்குத் தெரியும், நான் என்னையும் அவனையும் கொல்லுவேன்,” அவன் நினைத்தான், “ஆனால் அவளைக் கொல்லாமல் விடவேண்டும். அவளது உள்மன வலி அவளை வாட்டவேண்டும். அவளைப் போல உணர்ச்சி வசப்படக்கூடியவளுக்கு மரணத்தை விட அது தான் கொடுமையான தண்டனையாக இருக்கும்.”

அப்புறம் அவன் தனது இறுதி ஊர்வலத்தை கற்பனையில் நடத்திப் பார்த்தான்: அவன், காயம்பட்ட கணவன், சவப்பெட்டியில் உதட்டளவில் புன்னகை புரிந்தவாறு கிடக்கிறான், அவள், வெளுத்து, தனது குற்றங்களுக்கெல்லாம் வருந்தித் துடித்துக் கொண்டு சவப்பெட்டியைப் பின் தொடர்கிறாள். ஊர்ப்பழியை விட்டு எங்கே ஓடுவது என்று தெரியாமல் கூசுகிறாள்.

“அய்யா, நீங்கள் ஸ்மித் அன் வெஸ்சண் தயாரிப்பை விரும்புறீங்கன்னு நினைக்கிறேன்,” கடை ஊழியன் அவனது கற்பனையை உடைத்தான். “இது ரொம்ப அதிகம்னு நீங்க நினைச்சா நான் வேணும்னா அஞ்சு ரூபிள்களைத் தள்ளுபடி செய்கிறேன்… ஆனாலும் நாங்க இதை விடக் குறைஞ்ச விலைத் தயாரிப்புகளையும் விக்கறோம்.”

கடை ஊழியன் நாசூக்காகத் திரும்பி இன்னும் ஒரு டசன் துப்பாக்கிகளை எடுத்து பார்வைக்கு வைத்தான்.

” அய்யா, இங்க பாருங்க, விலை முப்பது ரூபிள்கள்தான். இது ஒன்னும் விலை அதிகமில்லை, அந்நியச் செலாவணி மாற்று விகிதம் வரவரக் குறைஞ்சிருச்சு, சுங்க வரி ஏறிருச்சு. பாருங்க நான்கூட பழமை வாதிதான் இருந்தாலும் நானும் முனுமுனுக்கிற மாதிரி ஆகிருச்சு. இந்த மாதிரி வரி ஏறினால் பணக்காரங்க மட்டும் தான் ஆயுதம் வாங்க முடியும். ஏழைகளுக்கு ஒண்ணுமே இல்லை. தூலா ஆயுதங்கள்தான் இருக்கு. அதுல நீங்க உங்க மனைவியைக் குறிபாத்தீங்கன்னா உங்களையே நீங்க சுட்டுக்குவீங்க. ”

சிகேவ் திடீரென உணர்ந்தான், தான் இறந்து விட்டால்? துரோகம் செய்தவள் படும் துன்பங்களை எல்லாம் காண முடியாதே, வருந்தினான். பழிவாங்குவது என்பது சுவையானது ஆனால் அதைக் காணும் போதுதான் சுவைக்க முடியும். செத்துச் சவப்பெட்டியில் இருக்கும் போது என்ன நடக்கிறது என்று எப்படித் தெரியும்?

“இப்படிச் செஞ்சா என்ன?” ,யோசித்தான். ” அவனைக் கொல்லனும். அவனது இறுதி ஊர்வலத்துக்குப் போகணும். அதுக்கப்புறம் என்னையே கொன்னுக்கணும். அவங்க இறுதி ஊர்வலத்துக்கு முன்னாலேயே என்னை கைது செஞ்சு என்னோட துப்பாக்கியைப் பிடுங்கீட்டாங்கன்னா? ..சரி, அவனைக் கொல்லனும். அவள் உயிரோடு இருப்பாள். அப்புறம் நான். இப்போதைக்கு என்னைக் கொன்னுக்க வேண்டாம். போய் கைதாகிக்கலாம். எனக்கு என்னைக் கொல்ல நிறைய நேரம் இருக்கு. கைதாகுறதுனால என்ன நல்லதுன்னா என்னை விசாரிப்பாங்க, அவளோட கெட்ட நடத்தையை நான் உலகுக்குச் சொல்லலாம். நான் என்னைக் கொன்னுட்டா அவள் எல்லாப் பழியையும் என்மேல போட்டுட்டுத் தப்பிச்சிடலாம். சமூகமும் அவள் பக்கம் சேர்ந்துட்டு என்னைக் கேலிபேசும். நான் உயிரோடு இருந்தால், அப்புறமா…”

சிறிது நேரத்திற்குப் பிறகு அவன் சிந்திக்கலானான்:
“ஆமாம், நான் தற்கொலை செய்து கொண்டால் என்னை எல்லாரும் குற்றம் சாட்டுவார்கள், சின்ன விசயத்துக்கெல்லாம் சந்தகப் பட்டேன் என்று…அதல்லாமல் எதுக்கு என்னைக் கொன்னுக்கணும்? அதுவும் முக்கியம். அப்புறம் தற்கொலை செய்துக்கிறது கோழைத்தனம். அதனால, அவனைக் கொன்னுட்டு, அவளை வாழவிடனும், நான் வழக்கைச் சந்திக்கணும். நான் விசாரிக்கப்படுவேன், அவளைக் கோர்ட்டுக்குக் கூப்பிடுவாங்க சாட்சி சொல்ல. அவள் குற்றத்தை அங்கே ஒத்துக்கிறதைப் பார்ப்பேன். அவள் எனக்குச் செஞ்ச துரோகத்தை என் வக்கீல் அவள் வாயாலேயே வரவழைப்பார். நீதிமன்றம், பொதுமக்கள், பத்திரிகைகள் எல்லோரது அனுதாபம் என் மேல் வரும்.”

அவன் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும் போது, கடை ஊழியன் தனது ஆயதங்களை அவனுக்குக் காட்டி விளக்கிக் கொண்டிருந்தான்.

“இங்க பாருங்க இங்க்லீஷ்காரங்க தயாரிப்பு, புதுசு, இப்பத்தான் வந்தது.” கடை ஊழியன் காட்டியபடி பேசினான், “ஆனாலும் என்ன சொல்றன்னா, ஸ்மித்-அன்-வெஸ்சண் தயாரிப்புதான் இதிலெல்லாம் சிறந்தது. உங்களுக்கு நான் ஒன்னு சொல்லணும், நம்பினால் நம்புங்க, ஒரு தடவை இந்தத் துப்பாக்கியை ஒரு படை அதிகாரி வாங்கிட்டுப் போனார், அதில அவரது மனைவியோட காதலனைச் சுட்டாரு, அந்தக் குண்டு அவனைத் துளைசிட்டுப் போயி வெண்கல விளக்கை ஊடுருவி பியானோ மேல பட்டுத் திரும்பி நாய்க்குட்டியைக் கொன்னுட்டு அவர் மனைவிக்குக் காயமும் ஏற்படுத்திச்சு. இந்தச் சாதனை எங்க கடைக்கே பெருமை. அந்த அதிகாரி இப்பக் கைது செய்யப் பட்டிருக்கார். சந்தேகமில்லை அவருக்கு தண்டனை உறுதி. முதல்ல பார்தீங்கன்ன நம்ம சட்டம் காலாவதியானது. ரெண்டாவதாப் பார்தீங்கன்ன நீதிமன்றம் கள்ளக் காதலன் மேலதான் அனுதாபப் படும். ஏன்னா நீதிபதிகள், வக்கீல்கள், ஜூரிகள் எல்லாம் அடுத்தவன் மனைவியோடதான் வாழ்ந்துகிட்டு இருக்காங்க. அவங்க வசதிப்படி பார்த்தா இந்த ரஷ்யாவில ஒரு கணவன் குறைந்தான். எல்லாக் கணவன்மார்களையும் சகாலின் போன்ற தீவுக்கு நாடு கடத்தினா மக்கள் ரொம்ப சந்தோசப் படுவாங்க. அய்யா, இப்போதிருக்கிற ஊழல்களையும் கெட்டுப்போன சமுதாயத்தையும் என்னால பார்க்கச் சகிக்கலை. அடுத்தவன் மனைவியை விரும்புறது அடுத்தவன் சிகரெட்டைப் புகைப்பதைப் போலவும், அடுத்தவன் புத்தகத்தைப் படிப்பதைப் போலவும் ரொம்பச் சாதாரணம் ஆகிருச்சு. ஒவ்வொரு வருசமும் எங்க வியாபாரம் குறைஞ்சிட்டு வருது, அதனால எல்லா மனைவிமார்களும் நல்லவங்க ஆகிட்டாங்கன்னு அர்த்தமில்லை. கணவன்மார்கள் தங்களது நிலைமையை விட்டுக் கொடுத்திட்டாங்க, அப்புறம் தண்டனைக்குப் பயந்துகிட்டாங்கன்னு தான் சொல்லணும்.”

கடை ஊழியன் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுக் கிசிகிசுத்த குரலில் சொன்னான், “அய்யா இதெல்லாம் யார் தப்புன்னு சொல்றீங்க? அரசாங்கத்தோடது!”

“ஒரு பன்றியைப்போலக் கேவலமானவளுக்காக சகாலின் போறதுங்கிறது அர்த்தமேயில்லாதது,” சிகேவ் யோசித்தான்.”நான் நாடுகடத்தப் பட்டு தண்டனை அனுபவித்தால் மனைவிக்கு குளிர் விட்டுப் போகும் மறுபடியும் திருமணம் செய்து கொள்வாள், இன்னொரு கணவனையும் ஏய்ப்பாள். அவளுக்கு வெற்றி கிடைச்சிடும். அப்படீன்னா அவளை அப்படியே விட்டுறணும், நானும் தற்கொலை செஞ்சிக்கக் கூடாது. யாரையும் கொன்றுவிடக் கூடாது. இதை விட நல்லதா ஒன்றைச் சிந்திக்கணும் கண்டுபிடிக்கணும். என்னுடைய பெருந்தன்மையை வைத்து அவர்களைத் தண்டிக்கணும். விவாகரத்து சம்பந்தமா நடவடிக்கை எடுக்கணும்.”

“அய்யா, இங்க பாருங்க இன்னொரு தயாரிப்பு,” கடை ஊழியன் சொன்னான், இன்னொரு டசன் துப்பாக்கிகளைக் காட்டினான், “உங்க கவனத்தை இங்கே திருப்புங்க, இதோ பாருங்க பூட்டிக் கொள்ளும் அமைப்பு…”

அவனது முடிவால் கைத்துப்பாகிகளுக்கு வேலை இல்லாமற்போனது. ஆனால் கடை ஊழியனின் உற்சாகம் பெருகிக் கொண்டே போனது. தனது கடையில் இருந்த ஆயுதங்களை எல்லாம் எடுத்துக் காட்டியபடியே இருந்தான். ஆத்திரப்பட்ட கணவன் இப்போது வெட்கப்பட்டான், தனக்கு தேவை இல்லாத, ஒன்றுமே இல்லாத ஒரு விசயத்தைப் பெரிது படுத்துகிறானோ என்று நினைத்தான், தேவை இல்லாமல் புன்னகைக்கிறான், நேரத்தை வீணடிக்கிறான், ஒன்றுமே இல்லாததற்கு உற்சாகப் படுகிறான்.

“சரி அப்படீன்னா,” அவன் முணுமுணுத்தான், “பிற்பாடு பார்த்துக்கிறேன்..இல்லாட்டி யாரையாவது அனுப்பி வாங்கிக்கறேன்.”

கடை ஊழியனின் முகத்தில் தெரிந்த உணர்சிகளை அவன் பார்க்கவில்லை. அந்த இடத்தின் தர்ம சங்கடத்தைப் போக்க ஏதாவது செய்ய நினைத்தான். என்ன வாங்கலாம்? யோசித்தான். சுவற்றில் மாட்டப் பட்டவைகளில் குறைந்த விலை உள்ளது ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தான். அவனது கண்கள் கதவருகே தொங்கிக்கொண்டிருந்த பச்சை வலையின் மேல் நின்றது.
“அது…என்னது?” அவன் கேட்டான்.

“அது வலை. காட்டுப் பறவைகளைப் பிடிக்கிறதுக்குப் பயன்படுத்துவாங்க.”

“என்ன விலை?”

“அய்யா, எட்டு ரூபிள்கள்”

“அதை எனக்கு எடுத்துக் கொடுங்க….”

– மார்ச் 4, 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *