பய முகங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: July 29, 2016
பார்வையிட்டோர்: 12,919 
 

கர்நாடகம் ஒரு மிகச் சிறந்த மாநிலம். தண்ணீர் பஞ்சமோ வறட்சியோ இல்லாத அமைதியான மாநிலம். கன்னட மக்கள் தெய்வ பக்தியும் நேர்மையுமானவர்கள். அடாவடித்தனம் அறியாதவர்கள்.

தமிழர்களும் கன்னடத்து மக்களும் குடும்பம் குடும்பமாக மிகவும் பாசத்துடன் பின்னிப்பிணைந்து உறவாடுவார்கள். இவர்களிடையே காதல் கல்யாணங்களும், வர்த்தக ரீதியான உறவுகளும் அதிகம்.

ஆனால் அம்மாநிலத்தில் உற்பத்தியாகி பல நிலைகளைக் கடந்து, தமிழகத்தை ஊடுருவி கடலில் கலக்கும் காவிரித்தாயின் மீது உள்ள பாசத்தினால் அவ்வப்போது தமிழர்களும் கன்னட மக்களும் புரிதலின்றி சண்டையிட்டுக்கொண்டு சுப்ரீம் கோர்ட் வரை செல்வார்கள்.

இந்தச் சண்டைகள் எப்போதாவது நடந்தாலும் அதன் தாக்கம் அதிகம்.

நடேசன், வயது 25. தமிழ் மண்ணில் பிறந்து, கல்வி பயின்று வளர்ந்திருந்தாலும் அவனுக்கு வேலை கிடைத்தது என்னவோ மைசூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில். அவன் வங்கியில் சேர்ந்து நான்கு மாதங்களே ஆகியிருந்தன. கன்னடம் சுத்தமாகத் தெரியாது.

அந்த நிலையில்தான் காவிரிப் பிரச்சனை தோன்றியது. வெறுப்பைத் தூண்டிவிடும் சில அரசியல் வாதிகளால் பிரச்சினை ஊதிப் பெரிதாக்கப்பட்டது. சில அமைப்புகள் ரோடில் போகும் தமிழர்களை குறி வைத்து தாக்க ஆரம்பித்தன. குறிப்பாக பெங்களூரிலும், மைசூரிலும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. தமிழ் சினிமாக்கள் ஓடும் தியேட்டர்களிலிருந்து அவைகள்
தூக்கப்பட்டு கன்னடப் படங்கள் மட்டுமே ஓடியது.

கன்னட மக்கள் தமிழர்களை விரோதமாகப் பார்த்தனர். சில இடங்களில் அவர்களுக்கிடையே அடிதடி நடந்தது. மைசூரில் டூரிஸ்டுகள் வருவது நின்றுபோய், ஊரே களையிழந்து காணப் பட்டது. வேலைக்குச் சேர்ந்து நான்கு மாதங்களே ஆன நிலையில் நடந்து கொண்டிருந்த கலவரங்கள் நடேசனை மிகவும் அச்சமூட்டியது.

அவன் வீட்டிற்குச் செல்லும் வழியில் ஏதாவது கலவரக் கும்பலில் மாட்டிக் கொண்டால், அப்போது சமாளிப்பதற்காக வங்கியின் சக ஊழியர்களிடமிருந்து முன்னெச்சரிக்கையாக சிறிது கன்னடம் கற்றுக் கொண்டிருந்தான். ‘முப்பது நாட்களில் கன்னடம் கற்றுக் கொள்ளுங்கள்’ புத்தகத்தை வாங்கினான். கவனமாக இருக்க மெனக்கிட்டான்.

அன்று வங்கியில் பணப் பட்டுவாடா அதிகமிருந்ததால் வீட்டிற்கு கிளம்பும்போது இரவு எட்டு மணியாகிவிட்டது. ஸ்கூட்டரில் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தான். பயம் அடி வயிற்றைப் பிசைந்தது.

தெரு விளக்குகள் வேறு எரியவில்லை. அடர்ந்திருந்த சாலையோர மரங்கள் இருட்டை பெரிதாக்கி பயமுறுத்தின. அன்று நடந்த கலவரத்தினால் ஆங்காங்கே எரிந்து கொண்டிருந்த டயர் குவியல்கள் புகை மண்டலங்களை கிளப்பிக் கொண்டிருந்தன.

சாலையோர திருப்பத்தில் பத்துப் பதினைந்துபேர் கூடிய ஒரு முரட்டுக் கூட்டம் அவனை எதிர் கொண்டது. லுங்கி அணிந்து கையில் தடிகள் வைத்திருந்தனர்.

அவர்களைப் பார்த்ததும் இவனுக்கு உடம்பு வெலவெலத்தது. முகம் வெளிறியது.

ஒருவன் ஸ்கூட்டரை நிறுத்த மற்றவர்கள் நடேசனை சூழ்ந்து கொண்டனர்.

“எல்லி ஹோகுத்தியா? மனே எல்லி?” அதட்டலாக ஒருவன் கேட்டான்.

நடேசன், “கெலசா முகுசிக்கொண்டு மனே ஓஹுத்தினி” என்று ஈனமான குரலில் சொன்னான்.

அடுத்தவன் சரேலென தன்னிடமிருந்த கத்தியை உருவி நடேசன் வயிற்றில் பாய்ச்ச, “ஐயோ அம்மா வலி உயிர் போகுதே” என்று ரத்தம் பீரிட அலறியபடி நடேசன் ஸ்கூட்டரிலிருந்து சரிந்து கீழே விழுந்தான்.

“ஏ மச்சி, இவன் நம்ம ஆளுடா… அவசரப் பட்டுவிட்டோம்” என்று அந்த இடத்தை விட்டு ஓடி அவர்கள் இருட்டில் மறைந்தனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *