தொழிலதிபர் மருத நாயகம் கொலை செயப் பட்டுக் கிடப்பதாகத் தகவல் கிடைத்த பத்தாவது நிமிடத்தில் இன்ஸ்பெக்டர் மாதப்பன், தன்னுடைய பரிவாரங்களுடன் மருதநாயகத்தின் பங்களாவில் இருந்தார். மனைவியை இழந்த மருதநாயகம் தனியே வசித்து வந்தார். அவருடைய பங்களாவில், அவர் அறையில் மருதநாயகம் மடங்கிச் சாந்திருந்தார். கழுத்தைச் சுற்றி ஒரு நைலான் கயிறு இறுக்கி இருந் தது. பக்கத்தில் மகள் நீலாவதியும், மருமகன் ரத்தின மும் சோகமும், பயமும் நிரம்பிய முகத்துடன் நின்றிருந்தார்கள். அறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் தாறுமாறாக இறைந்து கிடந்தன. யாரோ எதையோ அவசரமாகத் தேடியிருக்கிறார்கள் என்பது தெரிந்தது.
வழக்கமான விசாரணையை ஆரம்பித்தார் மாதப்பன். அவர் கேட்ட கேள்விகளுக்கு நீலாவதி சொன்ன பதில்களின் சாரம் இதுதான்:
கடந்த சில வாரங்களாகவே மருதநாயகம் குழப்பமான மனநிலையில் இருந்திருக்கிறார். இன்று காலை மகள் நீலாவதிக்கு போன் செய்து தன்னுடைய அந்தரங்க வாழ்க்கை பற்றித் தெரிந்த யாரோ ஒருவன், பெரும் தொகை கேட்டு பிளாக்மெயில் செய்வதாக வும், இன்றைக்குப் பணம் வாங்க அவன் வரும்போது வீட்டில் கூர்க்கா, தோட்டக்காரன், சமையல்காரன் உள்பட வேலையாட்கள் யாரும் இருக்கக்கூடாது என்று மிரட்டி இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். அவன் நோக்கம் பணத்தை மட்டும் கொள்ளையடிப்பது இல்லை என்றும், தன் மீது எல்லையில்லாத வெறுப்பு அவனுக்கு இருக்கிறது என்றும் மிகவும் கலவரமாகச் சொன்னாராம். அவனைப் பற்றிய விவரங்கள் முழுவதையும் எழுதித் தமது அறையிலேயே ஒளித்துவைத் திருப்பதாகவும் சொன்னாராம். அந்தச் சமயத்தில், ‘ஐயோ!’ என்று போனில் அவர் அலறும் சத்தம் கேட்டதாம். அந்தச் சமயத்தில்தான் கொலைகாரன் அவரது பின்புறமாக வந்து கழுத்தை இறுக்கி இருக்க வேண்டும். அதன் பிறகு, ‘பத… பத…’ என்ற சத்தம் மட்டும் போனில் கேட்டதாம்.
உடனடியாக நீலாவதியும், அவளது கணவரும் விரைந்து வந்திருக்கிறார்கள். அவர்களது கார் உள்ளே நுழைவதற்கும், வீட்டுக்குள் இருந்து பைக்கில், ஹெல்மெட் போட்ட ஓர் ஆள் வேகமாகச் செல்வதற்கும் சரியாக இருந்திருக்கிறது. அநேகமாக இவர்களது கார் வரும் சத்தத்தைக் கேட்டுவிட்டுக் கொலையாளி பறந்திருக்க வேண்டும்.
இன்ஸ்பெக்டர் மாதப்பன் வாய்…‘பத… பத…’ என்று முணுமுணுத்துக்கொண்டே இருந்தது. சுவர்களில் நடிகர் சிவாஜி கணேசனின் படங்களையே பார்த்துக் கொண்டிருந்தார்.
நீலாவதியைப் பார்த்துக் கேட்டார்.
மருதநாயகத்துக்கு சினிமான்னா ரொம்பப் பிடிக்குமோ?”
ஆமாங்க! அதிலும் சிவாஜின்னா உயிர்.”
மாதப்பனுக்கு ஏதோ பொறிதட்டியது. ஒரு குறிப் பிட்ட படத்தை நோக்கிப் போனார். படத்தில் இருந்த மாலையைக் கழற்றினார். மாலையில் ஒரு பதக்கம் தொங்கிக் கொண்டிருந்தது. அதன் லாக்கரைத் திறந்தார். உள்ளே ஒரு பென் டிரைவ். கம்ப்யூட்டரில் போட்டுப் பார்த்தபோது, அதில் கொலையாளி பற்றிய விவரங்கள் துல்லியமாகப் பதிவாகி இருந்தன.
‘பத… பத…’ என்ற பாதி வார்த்தைகளை வைத்துத் துப்புத் துலக்கிய மாதப்பன் அடுத்தகட்டப் பணிகளுக்கு ஆயத்தமானார்.