மும்பையிலிருந்து நானும் எனது நண்பனும் ரயிலில் கிளம்பும் போது தொற்றிக் கொண்டது சந்தோஷம்…
உலகில் யாராவது இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருப்பார்களா? என்பது சந்தேகம்தான்…
ரயிலில் பெப்சியில் கலந்து வைத்திருந்த விஸ்கியில் ஆரம்பித்த போதுதான் ஜெகேந்திரன் கேட்டான் “என்ன சந்திரன், நீ ஊருக்கு வருவது தெரியுமா?” என்று.
மெதுவாக தலை கிறுகிறுக்க ஆரம்பிக்க “ம்கூம்… நான் இந்த வாரம் முழுதும் உன்னோடு உன் வீட்டில் தங்குவதால் அடுத்த வாரம்தான் ஊர் கிளம்புவதாகச் சொல்லியிருக்கிறேன்” என்றேன்.
“நாம் இருவரும் கல்லூரியில் அடித்த லூட்டிகள் …. சே! என் தங்கையின் அந்தத் தற்கொலைதான் என்னை ஒரு மாதிரி ஆக்கிவிட்டது” என்று ஜெகன் ஆரம்பிக்க, எனக்கு அடிவயிற்றில் ஒரு பயப் பந்து உருள ஆரம்பித்தது.
“அப்புறம் மும்பைக்கு வந்து, நான் சிகரெட் கம்பெனியில் சேல்ஸ் பிரிவில் சேர, நீ ஷிப்பிங் கம்பெனியில் மேனேஜ்மென்டில் சேர, நம் சந்தோஷம், லூட்டிகள் எவ்வளவு துரத்தியது? உண்மையிலே நாம் வாழ்ந்த அந்த வசந்த காலங்கள் இனி கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது.” என்றான் ஜெகன்.
அவன் மெதுவாக ரயிலோடு சேர்ந்து ஆட ஆரம்பித்ததும், இந்தப் போதையில் மெதுவாக அவனிடம் கேட்டு விடலாமா? என்று நினைத்தேன். ம்கூம்.. அவன் தங்கை விஷயம் பேசியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இருந்தாலும் இனி அதை தோண்டி எடுக்காமல் இருக்க வேண்டும். என் கைகள் நடுங்க ஆரமிப்பதைக் கவனித்த ஜெகன் “அதுக்குள்ள ஏறிடுச்சா? வா, போய்த் தூங்கலாம்” என்று படுக்க அழைத்தான்.
மறுநாள் நாகர்கோவிலில் இறங்கி, வழியிலுள்ள என் ஊரான குள்ளப்பாடி போகாமல் அஞ்சுகிராமம் தாண்டி கன்னிகுளம் கடற்கரை ஊருக்கு வந்து சேர்ந்தோம்.
இரவில் ஜெகனுடைய அம்மாவின் உபசரிப்பு, அந்த மீன்கறிச் சாப்பாடு எல்லாமே அருமையாக இருந்தது.
மறுநாள் ஜெகன் வீட்டு மாடியில் உள்ள பால்கனியில் நின்று கடலை இரசித்துக் கொண்டே பல் விளக்கிக் கொண்டிருந்த என்னிடம் “போட்டிங் போகலாமா?” என்றான் ஜெகன்.
“போகலாம்” என்றேன் முகம் கழுவிக் கொண்டு.
“டிஃபன் சாப்பிட்டு விட்டுக் கிளம்புவோம் கீழே வா” என்றான் ஜெகன்.
“இல்லேடா, நாம் நேராக கடலுக்குள் ஒரு ரவுண்ட் போய் விட்டு வந்து விடுவோம். காலையிலேயே கடலுக்குள் போய் கடற் காற்றை ஆழ்ந்து சுவாசிக்க வேண்டும் போல இருக்கிறது” என்றேன்.
“இல்லேடா, உள்ளே போனால் ரொம்பப் பசிக்கும்” என்றான் ஜெகன்.
“பரவாயில்லை கிளம்பு” என்றேன்.
போட்டை கிளப்பிய ஜெகன் “நீச்சல் தெரியுமா?” என்று கேட்டான்.
“சின்ன வயதிலே படிக்கப் பயந்து போய் விட்டு விட்டேன்”
“தவறி விழுந்தால் கொஞ்சமாவது நீந்துவாயா?” என்று கேட்டான் ஜெகன்.
கடலின் நடுவில் போட் வேகமாகச் சீறிப் பாய்ந்து சென்று கொண்டிருந்தது.
“ஸாரி ஜெகன்… நோ சான்ஸ். மும்பையில் நீச்சல் குளத்திலேயே கழுத்தளவு நீருக்குள்ளே இறங்கப் பயப்படுவேன்”
“இப்போது உன்னை கடலுக்குள்ளே தள்ளி விட்டால் அவ்வளவுதான்” என்று சிரித்தான் ஜெகன்.
அவன் சிரிப்பு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.
“ஏண்டா அப்படிச் சொல்கிறாய்” என்று அவன் கன்னத்தில் தட்டி விட்டு “எவ்வளவு ஜில்லென்று இருக்கிறது? பார்… நிலா இன்னும் போக மாட்டேன் என்று வானத்திலே ஒட்டிக் கொண்டிருக்கிறது”, என்றேன்.
அவனும் நிலவைப் பார்த்து ஆச்சரியப் பட்டுக் கொண்டே. “சந்திரன்… மும்பையிலிருந்து வந்த போது திரும்பி வருவோம் என்று எண்ணிக் கொண்டேதானே வந்திருப்பாய்?” கொஞ்சம் கேலியாகக் கேட்டான் ஜெகன்.
“ஏண்டா அப்படிக் கேட்கிறாய்? நான் பெண் பார்க்கத்தானே ஊருக்குக் கிளம்பினேன்? நீயும் வருகிறேன் என்றதால்தான் சரி என்று சேர்ந்து கிளம்பினோம். பெண் பார்த்துப் பிடித்தால் நிச்சயம் கூட செய்து விட்டுத் திரும்பி விடலாம் என்றுதானே முடிவு செய்தோம்?”
“அது சரி.ஆனால் நாம் ஊருக்கு கிளம்புவதற்கு முந்தைய நாள் தான் எனக்கு ஒரு செய்தி வந்தது”.
“என்னடா?”
“என் தங்கையிடம் எந்த முறையில் பழகினாய்?” அவன் முகம் கோபத்தில் உறைந்திருந்தது.
“பழசை எல்லாம் போட்டு ஏண்டா இப்போது கிளப்பிக் கொண்டிருக்கிறாய்?” என்றேன் ஈனஸ்வரத்தில்…
“எதுடா பழசு? என் தங்கையைக் காதலித்து, அவளை தாயாக்கி, அவளை மறுத்து… அவளை தற்கொலை கூடச் செய்ய வைத்து, அவள் வயிற்று வலியால் தற்கொலை செய்ததாக செட்டப் செய்திருக்கிறாய். பெரிய எமகாதகனாக இருந்திருக்கிறாய். அவளுடைய டைரியை திடீரென்று என் பெட்டியில் பார்த்து எடுத்து வாசித்தேன். கொலைகார நண்பனே… என்னோடு நட்பு என்ற பெயரில் என் தங்கையின் வாழ்க்கையை பந்தாடியிருக்கிறாய். இதற்கு உனக்கு என்ன தண்டனை தரலாம்?” என்று என்னை நோக்கி வேகமாக வந்தான்.
நான் பின்னே பார்க்காமல் நடந்து கொண்டே போக, என்னை ஜெகன் நெருங்கி வர, நான் “தொபுக்கடீர்” என்று கடலுக்குள் விழ அவன் போட்டைத் திருப்பி ஓட்டினான்.