நிலவு தூங்கும் நேரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: September 28, 2023
பார்வையிட்டோர்: 3,821 
 
 

உலகத்திலுள்ள அத்தனை ஆண்களும் அழகான பெண்களைக் கண்டதும் அசடுவழிபவர்கள் என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அருணகிரி – கிறீன் வீதிச் சந்தியில் என்னையும் என் ஸ்கூட்டியையும் மோதி வீழ்த்திய ரமீஸ் மெய்யதீன் போன்ற சிலரும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

மதிய உணவு இடைவேளை முடிந்து அலுவலகம் திரும்புவதற்கு திருஞானசம்பந்தர் வீதியைத்தான் நான் வழமையாக விரும்புவேன். அன்றைக்கு மட்டும் என்ன நினைத்தேனோ தெரியவில்லை அருணகிரி வீதியைத் தேர்ந்தெடுத்தேன். ஸ்கூட்டியைக் கிளப்பி சந்தியில் திருப்பியதுதான் தாமதம். கிறீச்… கிறீச் என்று டயர் தேய்த்து ஏதோ ஒன்று என்மீது மோதுவதுபோல வந்து உரசிவிட்டுச் சென்றது. அடுத்தகணம், நீர்வற்றி மணல் காய்ந்துபோன வடிகானுக்குள் கிடந்தேன்; மேலே துண்டு வானம் தெரிந்தது. நல்லவேளையாக இடது முழங்கையில் லேசான ஒரு சிராய்ப்புத் தவிர காயமேதுமின்றித் தப்பித்தேன். என் ஸ்கூட்டி அருகிலிருந்த கிடுகுவேலிக்குள் செருகிநின்று உறுமிக்கொண்டிருந்தது. அதற்குச் சேதமில்லை என்றாலும் வாங்கிய புதிதிலேயே இப்படி ஆனது கவலையாக இருந்தது.

நான் சுதாரித்து எழுந்துகொள்வதற்குள் ஹெல்மெட் அணிந்திருந்த யாரோ ஒருவன் ஓடிவந்து என் கைகளைப் பிடித்துத் தூக்கிவிட்டான். அந்தவேளையில் வீதியில் யாருமே இருக்கவில்லை என்றாலும் விழுந்த அவமானம் பிடுங்கித்தின்றது. எனக்கு உதவியவன்தான் என்னை இடித்திருக்கிறான் என்பதை அவனது ஆடைகளின் அலங்கோலமே காட்டிக்கொடுத்தது.

‘சே.. இப்பிடித்தான் கண் மண் தெரியாம வருவீங்களா..?’ என்றேன் கோபத்தோடு.

‘அதுசரி, ஏன் சொல்ல மாட்டீங்க.. வலதுபக்க பெண்டுல ரோங் சைட்ல வந்தது யாரு..? ஓ! ‘எல்’ போர்டா நீங்க.. காயம் ஒண்ணுமில்லியே..?’ என்று ஹெல்மெட்டைக் கழற்றியபடி அக்கறையோடு கேட்டான். அவன் நடுத்தர உயரத்தில் வெண்ணிற சேர்ட், டை மற்றும் கருநீல ஜீன்ஸ் அணிந்து டைகட்டி லேசான தாடியுடன் இருந்தான். அவனது கண்களில் ஏதோ ஒரு வசீகரம் இருந்தது.

‘இல்ல.. உங்களுக்கு..?’

‘அதான் பாக்கிறீங்களே..!’ என்று தன் எரிச்சலை அடக்கிக்கொண்டு வரவழைத்த முறுவலோடு கழுத்துக்குக் கீழே காண்பித்தான். வலது தோள்பட்டை, மார்புச்சட்டை முழுவதும் புழுதியில் தோய்ந்திருக்க அதில் ஊஞ்சலாடிக்கொண்டிருந்த சன்க்ளாஸின் ஒருபக்கம் உடைந்து ஓட்டையாக இருந்தது. கோபத்தோடு அதைக் கழற்றிக் கானுக்குள் வீசி எறிந்தான்.

‘ஓ.. வெரி ஸொறி’ என்றேன் நிஜமான பரிதாபத்துடன்.

‘இட்ஸ் ஓகே.. எனக்கும் ஒண்ணும் இல்ல. ஆனா என் பைக்தான்..’ என்று அவன் கைகாட்டிய போதுதான் பார்த்தேன். வீதியெங்கும் கண்ணாடிச் சிதறல்கள் தறுமாறாய்ப் பரந்து கிடக்க அவனுடைய பைக் வலப்புறமிருந்த மின்சாரக்கம்பத்தில் மோதி நொறுங்கிக் கிடந்தது.

‘உங்களில மோதிடாம இருக்கிறதுக்கு அந்தப்பக்கம் திருப்பப்போய்த்தான் போஸ்ட்ல கொண்டு விடவேண்டியதாச்சு.. இப்ப என்ன செய்யிறது..?’

‘சரி, வாங்க.. என் வீடு இங்க பக்கத்திலதான்.. முதல்ல வந்து கை காலைக் கழுவிட்டு மற்றதை யோசிப்போம்’ என்று அவனை அழைத்தேன்.

அவன் சிறிது யோசித்து தயங்கினான்.

‘பரவாயில்ல வாங்க.. யாரும் உங்களை ஒண்ணும் பண்ணிர மாட்டாங்க வாங்க’ என்று அவனை வற்புறுத்தி வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். இப்படித்தான் நாங்கள் இருவரும் அறிமுகமானோம்.


நான் கொடுத்த கப் டீயை வாங்கிக் கொண்டு, ‘நீங்க மட்டும் தனியாவா இருக்கிறீங்க..?’ என்று கேட்டான் ரமீஸ். முகம் கை, கால் கழுவியபின் இன்னும் கம்பீரமாகத் தெரிந்தான். என் கணவரின் சேர்ட் அவனுக்கு வெகுகச்சிதமாக இருந்தது.

‘இல்லியே.. உலகத்தலைவர்கள், சாமிகளெல்லாம் என்னோடதான் இருக்காங்க.. பாருங்க’ என்று ஹோல் சுவரைக் காண்பித்துவிட்டு அவன் சிரிப்பதற்கு காத்திருந்தேன்.

அவன் சிரிக்கவில்லை.

‘எங்க வேலை செய்யறீங்க..?’ என்று கேட்டான்.

‘பில்டிங் டிப்பார்ட்மெண்ட்.. எஸ்டிமேட் செக்ஷன்ல. நீங்க?’

‘நான் கல்ச்சரல் மினிஸ்ட்ரில அட்மின்ல.. உங்க ஸ்கூட்டி புதுசா..?’

‘ஓம், எடுத்து இப்ப த்ரீ வீக்ஸ்தான் ஆகுது. நல்லவேளை ஒண்ணும் ஆகல்ல.. பாவம் உங்கடதுதான் நொறுங்கிட்டுது. திருத்தியெடுக்க எவ்வளவு செலவாகும்..?’

‘தெரியல்ல. மெக்கானிக்கிட்டதான் கேக்கணும்..’

‘என்னாலதானே.. நான் அதைத் தாறேன்..’ என்றபடி பேர்ஸைத் திறந்தேன்.

‘பரவாயில்ல.. இப்ப வேணாம். மெக்கானிக் ஷொப்ல கொடுத்திட்டு செலவு கூடுதலாயிருந்தா மட்டும் கேட்கிறேன்..’

‘எப்படிக் கேப்பீங்க.. என்னோட நம்பர்தான் உங்களுக்கிட்ட இல்லையே?’ என்று சிரித்தேன்.

‘அதுதான் இந்த வீடு தெரியுந்தானே…?’

‘வேற வீடு மாறிப்போயிட்டா..?’ என்று நான் குறும்பாய்க் கேட்டேன்.

‘அதுக்குள்ளவா மாறிடுவீங்க.. அதுசரி, உங்க ஹஸ்பண்ட் எங்க..?’ என்று கேட்டான் கழுத்திலிருந்த தாலியைப் பார்த்துவிட்டு.

‘அவர் கனடாவுல.. வாற ஓகஸ்ட்ல நானும் போறேன்’ என்றதும் அவன் பார்வை ஹோலிலிருந்த காலண்டரில் படிந்தது.

‘ஓகே.. எதுக்கும் நம்பரை எடுத்துக்கோங்க.. எப்ப வேணும்டாலும் போன் பண்ணிட்டு வாங்க. நாய் கிடையாது. ஆனா மாமி இருக்காங்க..’ என்றேன் அழுத்தமாக.

எனது நகைச்சுவை புரியாமலே விடைபெற்று சென்றான்.


இரண்டொரு வாரம் கழிந்து அந்த சம்பவத்தை நான் ஏறத்தாழ மறந்துவிட்ட நேரத்தில் ஒரு புதிய இலக்கத்திலிருந்து அழைப்பு வந்தது.

‘ஹலோ யாரு?’ என்றேன் பைல்களைப் புரட்டியபடி.

‘என்ன அதுக்குள்ள மறந்திட்டீங்களா..?’ என்றது ஆண்குரல்.

‘ஓ! ரமேஸ். எப்படி மறக்கேலும். முழங்கை இன்னும் வலிக்குதே.. பிறகு என்னாச்சு.. பைக் செய்திட்டீங்களா.. எவ்வளவு செலவாச்சு..?’

‘என்ட பேர் ரமேஸ் இல்ல ரமீஸ். ஹெட்லைட் சிக்னல் லைட் மாற்றிருக்கு.. ஹேண்டில்பார், முன்வீல் பெண்ட் நிமிர்த்த என்று நிறைய செலவாயிட்டுது.. நானும் அரைவாசி போட்டிருக்கிறன்.. மீதியை மட்டும்’

‘ஓக்கே.. ரமேஸ்.. ஓ.. ஸொறி ரமீஸ், அதுதான் நான் காசு தர்ரேன்னு சொல்லிட்டேனே’

‘பரவாயில்லையா.. மிஸ்… உங்க பேர்?’ என்று இழுக்கவே

‘மிஸஸ் சுனீத்தா முரளிதரன். சுனீத்தா என்றே கூப்பிடுங்களேன். இன்னைக்கு ஈவ்னிங் ஸிக்ஸ்க்கு வீட்டுக்கு வாங்க. பேசுவோம்.. ஓக்கே?’ என்று ஆவலோடு கேட்டேன்.

அவன் பதில் கூறாமலே வைத்துவிட்டான்.

அன்று மாலை அலுவலகத்திலிருந்து திரும்பியதும் உடனடியாகக் குளித்து முடித்து வெளியில் செல்வதற்கு தயாரானேன்.

நேரம் மாலை 6:04

ரமீஸ் தேடி வருவானென்று தெரிந்தும் வேண்டுமென்றே வீட்டைப்பூட்டி ஸ்கூட்டியைக் கிளப்பினேன். சற்றுத் தள்ளியிருந்த தெருமுனையின் ஓரமாய் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு என் வீட்டு வாசலை நோட்டமிட்டவாறு நின்றிருந்தேன். சிறிது நேரத்தில் யாரோ ஒருவன் தன் பைக்கில் ரமீஸை வாசலில் இறக்கிவிட்டுச் செல்வது தெரிந்தது. நான் எதிர்பார்த்தது போலவே, ரமீஸ் இறங்கியதும் பூட்டியிருந்த வீட்டின் கேற்றைப் பார்த்து அதிர்ந்து போனில் என்னை அழைத்தான்.

‘ஹலோ.. மிஸஸ் சுனீத்தா, உங்க வீடு பூட்டியிருக்கே..?’

‘அப்பிடியா..? நான் வேற வீடு மாறிட்டேனே.. தெரியாதா?’

‘விளையாடாதீங்க.. எங்கருக்கிறீங்க சொல்லுங்க?’

‘நான் ஒரு வேலையா அலஸ் தோட்டத்துக்கு வந்திருக்கிறேன். அங்க வரமுடியுமா ரமீஸ்?’ என்றேன், தூரத்தில் நின்றிருக்கும் அவனைப் பார்த்தபடியே.

‘ஆண்டவனே..?’

‘ஏன்.. என்னாச்சு?’

‘நான் பைக்ல வரல்ல..’

‘அப்போ எதுக்கு கையில ஹெல்மெட்டெல்லாம் வச்சிருக்கிறீங்க?’ என்று கேட்டுவிட்டேன் வாய்தவறி.

‘அதுவா..? அது வந்து ஒரு ப்ரெண்ட்டோட பைக்ல.. ஆ.. கொஞ்சமிருங்க.. அது எப்பிடி உங்களுக்குத் தெரியுது? ஓஹோ.. வெளியில பூட்டிட்டு உள்ளே இருக்கிறீங்களா என்ன..?’ என்று காதில் போனை வைத்துக்கொண்டே கேற்றினுடாக உற்று உற்றுப்பார்த்தான்.

‘சேச்சே.. சும்மா ஒரு கெஸ்ஸிங்தான். ரமீஸ், ஒரு த்ரீவிலரைப் பிடிச்சு ‘ச்சாயாப்ளு ஹோட்டல்’ சந்திக்கு வாங்க.. நான் அங்க நிக்கிறேன்.. சரிசரி, ஓட்டோவுக்கு நான் காசு தர்ரேன்டாப்பா..’ என்று வைத்தேன்.

அடுத்த கணம் என் ஸ்கூட்டி அலஸ்தோட்டத்திற்கு பறந்தது.


ஓங்கியடிக்கும் அலைகளின் இடைவெளிகளினூடே ஒன்றையொன்று ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தன சின்னஞ்சிறு மணல் நண்டுகள்.

‘ரமீஸ், இவ்வளவு விசயத்தை நான் உங்ககிட்ட மனம் விட்டுப் பேசியிருக்கிறன்.. நீங்க எதுவுமே பேசாம இருக்கிறீங்க..?’

‘எனக்கு என்ன சொல்றது என்றே தெரியல்ல. உங்கட ஹஸ்பண்ட் முரளி கனடாவுக்குப் போய் செய்திருக்கிற துரோகத்தை மன்னிக்கிறதா அல்லது பிரிந்திருக்கிறதா என்றதை நீங்கதான் முழுசாத் தீர்மானிக்கணும் மிஸஸ் சுனீத்தா. இதுல நான் ஏன் அபிப்பிராயம் சொல்லணும்..? தவிர, பைக் செலவைத் தந்து என்னை அனுப்பிவிடுறதை விட்டுட்டு இதைப்போய் எனக்கிட்ட சொல்லணும்னு ஏன் நெனைச்சீங்க..’

‘ஒருத்தரைப் பார்த்தாலே காரணமில்லாம ஒரு நம்பிக்கை வரும் தெரியுமா? அப்படித்தான் உங்க மேலயும் ஏனோ வந்தது.. ஒபிஸ்ல கூட வேலைசெய்யிற கேள்ஸ்களுக்கிட்ட கூட இது எதையும் நான் சொன்னதில்ல.
ஆம்பிளைகளைப் பத்தி பேசவே வேணாம். அழகான பொம்பிளைகளைக் கண்டால் போதும். உதவிக்கு வர உயிரை விடுவாங்க. தெரியுந்தானே..?’

‘அப்படியெண்டா.. நானும் ஒரு ஆம்பிளைதானே?’

‘அதான் சொன்னேனே.. ரமீஸ், அன்னைக்கு உங்க பெறுமதியான பைக் என்னால ஒடைஞ்சு நொறுங்கின போதும் அதைவிட்டுட்டு நீங்க ஓடிவந்து முதல்ல என்னைத்தான் தூக்கினீங்க.. தவிர, என்னைப் பார்த்து இப்ப வரைக்கும் நீங்க வழியவேயில்ல.. அது போதாதா? நான் என் ஹஸ்பண்ட் முரளிதான் உலகம் என்று வாழ்ந்திட்டிருந்தவ.. அவரே இனி எனக்கு இல்லைன்னு ஆனபிறகு இனிமேல் யாரை நம்பி என்னோட மீதி வாழ்க்கையைத் தொடருறது..?’

‘உங்க சொந்த பந்தத்தில யாராவது..?’

‘எனக்கு இங்க சொந்தங்கள் என்று யாருமில்ல. நான் குழந்தையிலிருந்தே பராமரிப்பு இல்லத்தில வளர்ந்தவ.. அன்னைக்கு ரோட்ல அடிபட்டுக்கிடந்த என்னை தூக்கிவிட்டது போல நீங்க நெனைச்சா வாழ்க்கையிலயும் தூக்கிவிடேலும் ரமீஸ்’

‘இருந்தாலும்.. எப்பிடி சுனீத்தா ரெண்டு தடவைதான் சந்திச்ச முன்பின் தெரியாத ஒருத்தருக்கிட்ட இவ்வளவு நம்பிக்கை வைக்கிறீங்க..? எனக்கு ஏற்கனவே கல்யாணமாகி குழந்தைகூட இருக்கு சுனீத்தா.. என்னோட சம்பளத்தை நம்பித்தான் என் குடும்பமே இருக்கு’

‘தெரியும். உங்க வைஃப் நேர்சரி டீச்சரா இருக்கிறா. வாப்பாவுக்கு பைபாஸ் செய்ய வீட்டை பேங்க்ல அடமானம் வச்சு லோன் எடுத்திருக்கிறீங்க.. நான் எல்லாம் விசாரிச்சுட்டேன்.. ரமீஸ்..’

அவன் விக்கித்துப்போனான்.

‘இதெல்லாம் எப்படி சுனீத்தா உங்களுக்கு..? சரி, இதெல்லாம் தெரிஞ்ச பிறகுமா நான் உதவியா இருக்கலாமென்டு நெனைக்கிறீங்க..?’

‘நான் உங்களுக்கு வேண்டிய சகல உதவியும் செய்வேன்.. என்னை நம்புங்க.. நாளைக்கே உங்க எக்கவுண்டுக்கு ஒரு பெரிய கேஷ் எமௌண்ட் போட்டு விடுறன். அதை வச்சு எல்லாப் பிரச்சினைகளையும் முடிச்சிடுங்க ரமீஸ். யாருக்கும் சொல்ல வேணாம்.. கண் சரியாத் தெரியாத மாமியை நான் சமாளிச்சுக்கிறேன்.. என்வீட்டுல என் கூடவே இருங்க. உங்க குடும்பத்தையும் பாருங்க..’ என்று கெஞ்சியவாறு நெருங்கியமர்ந்தேன். பின்பு அவனுடைய முழங்காலின்மீது தலையைச்சரித்தேன். அவன் சட்டென எழுந்து விலகிக்கொண்டான். சிறிது முன்னோக்கிச்சென்று கடலையே வெறித்தவாறு அமைதியாக நின்றிருந்தான். பலமாக வீசிய கடல்காற்று அவனுடைய கேசத்தை அலைக்கழித்தவாறிருந்தது.

எனது முழங்கால்களுக்குள் தலையைப் புதைத்தபடி நான் விசும்பியழுதுகொண்டிருக்க வானில் மெல்ல இருள்கவிய ஆரம்பித்தது. எவ்வளவுநேரம் அழுதேனோ தெரியவில்லை, விரல்களில் ஏதோ ஊர்வது போலிருக்கவே சட்டெனத் தலையை உயர்த்திப் பார்த்தேன். அருகிலே ரமீஸ் அமர்ந்திருந்தான். கண்ணீர்க் கன்னங்களை விரல்களால் துடைத்து என்னைத் தன் மார்பில் சரியவிட்டு அவன் தாங்கிக்கொண்டபோது…

சோபையிழந்த நிலவு தொடுவானில் முளைத்திருந்தது.


சிலவாரங்கள் கழிந்து ஒரு சனிக்கிழமை மாலையில் நானும் ரெமீஸும் அவனுடைய பைக்கில் பெரிய குளத்தை நோக்கிப் புறப்பட்டோம்.

அங்குள்ள சிறுகோயில் ஒன்றில், எனக்கு தக்க துணையொன்று கிடைக்க வேண்டி நேர்த்தி ஒன்று வைத்திருந்ததை நினைவுபடுத்தி அதை இருவருமாகச் சென்றுதான் நிறைவேற்றிவிட்டு வரவேண்டும் என்று ரமீஸுக்கு கூறியிருந்தேன். இதிலெல்லாம் அவனுக்கு நம்பிக்கை கிடையாதென்றாலும் எனக்காக கூட வருவதற்கு உடன்பட்டிருந்தான்.

சாம்பல்தீவு பாலத்தை கடந்து விஷ்ணுகோயிலைத் தாண்டியதும் எனக்கு அழைப்பு வந்தது. எடுத்துப் பேசினேன்,

‘ஹலோ.. சொல்லுங்க!’

‘……..’

‘ஆமா.. பைக்லதான். சரி, நீங்க சொன்னபடிதான் எல்லாம் நடக்குது..’

‘………’

‘ஓமோம் வந்திட்டிருக்கு.. நீங்க ரெடி பண்ணுங்க!’ என்று விட்டு போனை அணைத்தேன். பைக் சித்தூர் இறக்கத்தை அடைந்ததும் தார் வீதியிலிருந்து க்றவல் பாதையினுள் நுழைந்தது. மஞ்சள் சூரியனின் கிரணங்கள் கண்ணுக்கெட்டிய தூரம்வரை பரந்திருக்கும் வயல்களிலும் சிறுகாடுகளிலும் ஒளிவெள்ளம் பாய்ச்சிக்கொண்டிருக்க மேய்ச்சல் முடித்த மாடு கன்றுகள் புழுதிகிளப்பியபடி சாரிசாரியாக சென்று கொண்டிருந்தன.

‘யார் சுனீ போன்ல?’

‘அதுவா..? அது வந்து என்னோட ஸ்டாப்ஃ மயூரா’ என்றேன்.

‘ஆம்பிளையோட வொய்ஸ் மாதிரி லேசா கேட்டிச்சு..’

‘அ.. ஓமோம். அவள்ற குரலே அப்படித்தான்.. நாங்க கூட ஒஃபிசுல பகிடி பண்ணுவோம்’

‘சரி, சுனீத்தா இன்னும் எவ்வளவு தூரம் போகணும்.. கோயிலுக்கு..?’

‘பெரியகுளக்கட்டுல ஏறி பண்ட்லேயே நேரப்போனா உயரமான பாறைக்கல்லு ஒண்ணு வரும். அதிலருந்து இறங்கி..’

‘சரி, இருட்டுறதுக்குள்ள திரும்பிடலாந்தானே..?’

‘நிச்சயமா!’ என்றேன் புன்னகையுடன்.

ஒருபுறம் சரிவாக இருந்த குளக்கட்டில் பைக் ஏறியதும் நீரில் விழுந்து வந்த காற்று சில்லென்று இருவரையும் ஊடறுத்துச் சென்றது. அதுவரை இருந்த பயணக்களைப்பு நீங்கி புத்துணர்ச்சி உண்டானது. ஒருபுறம் குளமும் மறுபுறம் நெடிதுயர்ந்து கிளைபரப்பியிருந்த மருதமரங்களும் வரிசையாக நின்றிருந்தன. ஆளரவமே இல்லாத அந்த அணைக்கட்டின் கிறவல் வீதியில் அமைதியைக் குலைத்தபடி பைக் ஓடிக்கொண்டிருக்க, இன்னும் சிறிதுநேரத்தில் கல்லுக்கோயிலில் நடக்கப்போவதை நினைத்து மனம் லேசாய் வலித்தது.

‘பாவம் எனக்காக இவ்வளவு தூரம் வந்திருக்கின்றான்’

நான் அப்படியே ரமீஸின் பக்கவாட்டில் இருபுறமும் கைகோர்த்து அவன் முதுகோடு மார்புகளைச் சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டேன். அதை அவனும் விரும்பியதுபோல பின்புறமாகச் சாய்ந்து என்னைக் கொஞ்சுவதுபோல அபிநயித்தான்.

சிறிது தூரம் சென்றதும், யாரோ வேண்டுமென்றே நிமிர்த்தி வைத்ததைப்போலத் தோன்றும் உயரப்பாறையொன்று குளக்கரையோரமாக நின்றிருந்தது. சூரியன் தாழிறங்கி காடுகளுக்குள் மறைவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்க பறவைகள் கீச்சிட்டுக் கொண்டிருந்தன. குளத்தினுள் சிறியதும் பெரியதுமாய் முதலைகள் ஆங்காங்கே நீர்மட்டத்திற்கு மேல் மூக்கை வைத்தபடி நீந்திக்கொண்டிருந்தன.

‘சுனீத்தா, அங்க பாரு, எவ்வளவு பெரிய முதலை.. பயங்கரமாயிருக்குல்ல..?’ என்று ஒரு சிறு குழந்தையின் ஆர்வத்துடன் என்னிடம் காட்டினான் ரமீஸ். அவனது குதூகலிப்பைப் பார்க்க பாவமாக இருந்தது எனக்கு. பேசாமல் அவனிடம் பைக்கைத் திருப்பக் கூறிப்போய்விடுவோமா என்று கூட நினைத்தேன்.

ஆனால் காலம் கடந்து விட்டது.

திடீரென அணைக்கட்டில் ஓரத்தில் இருந்து இருவர் வெளிப்பட்டு பைக்கை வழிமறித்தனர். அவர்கள் கண்கள் தவிர தமது முகத்தை கறுப்புத்துணியால் மூடிக்கட்டியிருந்தார்கள். காதுகளில் பூச்செருகி வெற்றுடம்பில் விபூதிப்பட்டைகள் பூசி இடுப்பிலே காவியுடை தரித்து பூசாரிகள் போலிருந்தனர். ஒருவனுடைய கையில் நீண்ட வாள் கத்தியொன்று பளபளக்க மற்றொருவன் கழுத்தில் சிறிய பைனாகுலர் போல எதையோ அணிந்திருந்தான்.

நான் சிறிதும் பயப்படாமல் அப்படியே பைக்கில் அமைதியாக அமர்ந்திருந்தேன். அதைப் பார்த்து ரமீஸ் குழப்பத்தோடு, ‘யாரு இவங்கள்லாம்..?’ என்று கேட்டபடி பைக்கை நிறுத்தினான். நாங்கள் இறங்கி நின்றதும் அந்த முகமூடிகள் இருவரும் என்னை விட்டுவிட்டு ரமீஸை வாள்முனையில் பயமுறுத்திப் பணிய வைத்தார்கள். அவன் மிரண்டுபோய் திமிற ஆரம்பித்ததும் ஒருவன் தன் கையிலிருந்த வாளை மற்றவனிடம் கொடுத்துவிட்டு, ரமீஸின் பின்புறமாக கிடுக்கிப்பிடி போட்டு அவனை அசையாமல் பிடித்து வைத்துக்கொண்டான். ரமீஸின் கண்கள் பிதுங்கி முகம் பயத்தில் வெளிறிப்போயிருந்தது. அவன் வாய்க்குள் எதையோ விடாமல் முணுமுணுத்துக்கொண்டிருந்தான்.

நாங்கள் நின்றிருந்த இடத்திலிருந்த மண் அணையின் சரிவின் கீழேயிருந்த குளத்து நீர் ‘சளக் புளக்’ கென்ற ஓசையுடன் கரையை மோதிக் கொண்டிருந்தது. அதற்குச் சிறிது தள்ளி ஏறத்தாழ சுமார் ஆறு அல்லது ஏழு அடிகள் நீளமுள்ள பயங்கரமான முதலைகள் ஒன்றையொன்று துரத்தி விளையாடி நீந்திக்கொண்டிருந்தன.

பைனாகுலர் அணிந்திருந்தவன் ரமீஸை தலைமுதல் கால்வரை பார்த்துவிட்டு பின்பு அசையாமல் நின்றிருந்த என்னிடம் வந்தான். அவன் கையில் வாளுடன் என்னை நெருங்க ஆரம்பித்ததும்,

‘டேய் பொம்பளையை ஒண்ணும் செய்யாதடா நாயே..!’ என்று வெறிகொண்டவன் போல உரத்துக் கத்தினான் ரமீஸ். எனக்கு அவன் மேல் பரிதாபமாக இருந்தது. அதைக்கேட்டதும் என்னை நெருங்கி வந்தவன் ஒருகணம் திகைத்து நின்று பின்பு அடக்க முடியாமல் சிரித்துவிட்டு ரகசியமாய்,

‘பரவால்லயே சுனீத்தா அக்கா, உன்ட ஹீரோ உன்னில படு பாசமாத்தான் இருக்கிறான்’ என்றபடி தன் முகத்திரையை அகற்றினான்.

நானும் சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கியபடி, ‘அடப்பாவி ராஜன், நீயாடா இது? முகத்தை மறைச்சிருக்க நான் உன்னை காமினி என்று நெனைச்சிட்டேன்டா.. அதுசரி ராஜன், முரளி அத்தான் எங்க..?’ என்றேன்.

‘கீழ கல்லுக்கோயில்ல பலி பூசையிலருக்கிறாரு.. இதுதான் கடைசி.. மத்த பூசையெல்லாம் பக்காவா முடிச்சிட்டோம். இந்த ஆள் போனமுறை நீ கொண்டு வந்தவனை விட நல்ல வாட்ட சாட்டமாத்தான்க்கா இருக்கிறான். முதலைக்கெல்லாம் இரவுக்கு நல்ல தீனிதான்’

‘அதெல்லாம் இருக்கட்டும் ராஜன், உண்மையில சரி வந்திருமாடா..? சே.. இது எவ்வளவு நாள் எடுத்த வேலை?’

‘இல்லக்கா இந்தமுறை நம்ம பொட்டுச் சாத்திரி வச்சிருக்கிற குறி தப்பாதக்கா.. புதையல் எப்படியும் கெடைச்சிரும்’ என்று நாங்கள் பேசியவாறு அணையிலிருந்து கீழிறங்கி மருதமரத்தோப்பினூடாக கல்லுக்கோயிலை நோக்கி நடந்தபோது..

மேற்கு வானில் பிறை நிலவு சரிந்துகொண்டிருந்தது.

– ஜீவநதி 2016.08 (95) – நூலகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *