தேடிய குற்றவாளி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: October 6, 2023
பார்வையிட்டோர்: 4,540 
 
 

சுற்றிலும் மலைகளாளும், காடுகளாலும் சூழப்பட்ட நீலகிரி மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு ஊரில்..!

உன் கிட்டே வத்திப்பெட்டி இருக்கா?

கேட்டவனின் குரலில் தெரிந்த தோரனை சட்டென இவ்னை திரும்பி பார்க்க வைத்தது. ஆள் பார்ப்பதற்கு திடகாத்திரமாய் தெரிந்தான். முகமும் முரட்டு தோற்றத்தில் இருந்தது. இவனுக்கு கொஞ்சம் பயம் வந்தது, இருந்தாலும் மெல்ல சிரித்தவாறு இருக்கு ஆனா நான் சிகரெட் பிடிக்கறதில்லை என்றான்.

அதைப்பற்றி எனக்கென்ன கவலை என்பது போல தோளை குலுக்கியவன், கையை நீட்டினான். இவன் தன் தோளில் போட்டிருந்த தோள் பையை திறந்து அதனுள் இருந்த தீப்பெட்டியை எடுத்து கொடுத்தான். வாங்கி தன் சட்டை பையில் இருந்து சிகரெட்டை எடுத்து உதட்டில் வைத்து உறிஞ்சியவன் புகையை அவன் முகத்தில் ஊதியவாறு ஆமா? நீ யாரு ? உன் பேர் என்ன?

முகத்தின் எதிரில் மோதிய புகையை சட்டென கைகளால் விசிறி தள்ளியவன் சிறிதும் கோபத்தை காட்டாமல் என் பேர் பாபு, நான் இங்க மேஸ்திரியா வேலை பார்க்க வந்திருக்கேன்..

யார் உனக்கு வேலை கொடுத்தது?

பாப்பச்சன் காண்ட்ராக்டர்

ம்..ம்..குரலில் உறுமலை காட்டியவாறு தீப்பெட்டியை அவனிடம் வீசினான், லாவகமாய் அதனை பிடித்துக்கொண்டவன் திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

சிகரெட்டை ஊதியவாறு தோள் பையை தூக்கிக்கொண்டு செல்பவனை முறைத்து பார்த்தவாறு நின்றான்.

வேலை நடக்கும் இடத்தில் நின்று கொண்டிருந்த பாப்பச்சன், இவனை கண்டதும், வா பாபு, உனக்காகத்தான் வெயிட் பண்ணிகிட்டிருக்கேன், பாத்துக்க இதுதான் நாம காண்ட்ராக்ட் எடுத்து செஞ்சுகிட்டிருக்கற வேலை. சுற்றிலும் பார்க்க சிமிண்ட்டும், கலவை கலக்கும் சத்தம் சித்தாள்கள் தலையில் கலவையை தூக்கிக்கொண்டு ஒடிக்கொண்டிருந்தார்கள். ஒரு நடைக்கும் ஐம்பது பைசா கொடுத்துடுவோம். அங்க பாரு அந்த ஆள் ஒவ்வொரு சட்டிக்கும் அவங்க நெஞ்சுல குத்தியிருக்கற கார்டுல குறிச்சுகிட்டு இருக்காரு. மெளனமாய் வேலை செய்வதை பார்த்து நின்றான் பாபு. சொல்லிக்கொண்டே இருந்த பாப்பச்சன் ஏன் பாபு என்ன யோசனை? ஒண்ணுமில்லை,

. சரி நான் கிளம்பறேன், எனக்கு மேட்டுப்பாளையத்துல வேலை இருக்கு. திடீரென்று நீ எங்க தங்குவே? யோசனையுடன் கேட்டவர் அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஒருவனை கூப்பிட்டு கோலப்பா இங்க வா, மதியம் மேல தம்பியை கூட்டிகிட்டு மேரி வீட்டுக்கு போ, அவ கிட்டே தம்பி தங்கறதுக்கு வசதி பண்ணித்தர நான் சொன்னதா சொல்லிடு. விறுவிறுவென தன்னுடைய காரை நோக்கி நடந்தார்.

பாபு தன்னுடைய தோள் பையை இறக்கி அங்கிருந்த ஒரு பாறையின் மேல் வைத்து விட்டு வேலை செய்பவர்களை பார்த்துக்கொண்டு நின்றான்.

பாப்பச்சன் தன்னுடைய காரில் ஏறி அந்த மலைச்சரிவை விட்டு இறங்கியவர் எதிரில் ஒரு கார் வழி மறித்தாற் போல் வந்து நிற்க, வந்திருப்பது கூத்தப்பனின் கார் என்பதை தெரிந்து சட்டென காரிலிருந்து இறங்கினார்.

என்ன பாப்பச்சா என் கிட்டே சொல்லாம கூட வேலை செய்ய ஆரம்பிச்சுட்டே?

கேட்டுக்கொண்டே பாப்பச்சனை நோக்கி வந்தான் கூத்தப்பன்,

பாப்பச்சன் உனக்கு தெரியாம என்ன வேலை செஞ்சுட்டேன்?

கேட்டவரிடம் அதுதான் ஒரு பையனை வர சொல்லியிருக்கறயே?

பாப்பச்சன் அது என்னோட சொந்தக்காரர் ஒருத்தர் கிட்டே வேலைக்கு ஒரு பையனை கேட்டிருந்தேன். என்னால தினமோ, வாரம் ஒரு முறையோ இங்க வந்து சைட் வேலை எல்லாம் பாக்க முடியறதில்லைன்னு சொல்லியிருந்தேன். அவர் போன வாரம் வீட்டுக்கு வந்து இந்த பையனை ‘அறிமுகப்படுத்தி’வச்சுட்டு போனாரு. இன்னைக்கு வர சொல்லியிருந்தேன்.

எதுவா இருந்தாலும் என் கிட்டே ஒரு வார்த்தை சொல்லிட்டு செஞ்சிருக்க -லாமில்லை.அவன் சொன்னதை கேட்டதும் பாப்பச்சனுக்கு எரிச்சலாய் வந்தாலும் எதுவும் பேசாமல், தப்பா நினைச்சுக்காதே கூத்தப்பா, என்னால முடியலை, அதுதான் இழுத்தார். சரி சரி பையனை பார்த்து இருந்துக்க சொல்லு அவ்வளவுதான் சொல்லி விட்டு தன்னுடைய காருக்கு திரும்பி சென்றான் கூத்தப்பன்.

பாப்பச்சன் எரிச்சலாய் தன்னுடைய காரில் ஏறி “இவனுக்கு பயந்தே” நான் இந்த பையனை இங்க வர வச்சுட்டு தப்பிச்சு போறேன், சொல்லிக்கொண்டே வண்டியை எடுத்தார்.

மேரியின் வீட்டில் கோலப்பன் அறிமுகப்படுத்திய பாபுவை மேலும் கீழுமாய் பார்த்தாள் மேரி. தம்பி இங்க பாரு எங்கிட்டே நாலு வீடு இருக்கு, மூணுல குடும்பம் இருக்கு, ஒண்ணு காலியாத்தான் இருக்கு, ஆனா நீ வயசுப்பையனா இருக்கே, பாப்பச்சன் சொன்னாரே அப்படீங்கறதுக்காக உனக்கு இடம் தர்றேன். வயசுப்பொண்ணுங்க நடமாடற இடம். பார்த்து சூதானமா நடந்துக்கணும் சரியா?

சரி என்று தலையாட்டினான் பாபு, கையில் சாவியை கொடுத்தவள், ஆமா சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவே? தோளை குலுக்கி கடைதான் வேற என்ன ? சொன்னவனிடம் அதெல்லாம் வேண்டாம் எங்க வீட்டுல சாப்பிட்டுக்கோ, மாசமானா அதுக்கு தனியா பணம் கொடுத்துடு, சரியா? அப்புறம் இன்னொன்னு என் வீட்டுலயும் வயசு பொண்ணு இருக்குது பாத்து மரியாதையா நடந்துக்கணும்..அவளின் குரலில் தென்பட்ட ஜாக்கிரதை உணர்வில் சிரித்த பாபு சரி என்று தலையசைத்தான்.

என்ன மேரி எப்படியிருக்கறே? சிரித்துக்கொண்டே அங்கு வந்து நின்றான் கூத்தப்பன்,

அவனை கண்ட்தும் சற்று முகத்தை சுழித்த மேரி வாங்க என்றவள் தம்பி நம்ம வீட்டுக்கு குடி வந்துருக்கு, அதுதான் சாவியை கொடுத்துட்டு பார்த்து நடந்துக்கணும்னு சொல்லிகிட்டிருக்கேன்.

ம்..ம்..பார்த்து நடந்துக்க சொல்லு பாபுவை பார்த்து முகத்தை கொடூரமாக்கிக் கொண்டு சொன்னான் கூத்தப்பன்.

கூத்தப்பனின் கொடூர முகம் சற்று மனதை கலக்கினாலும் பாபு சுதாரித்துக்கொண்டு என்னால யாருக்கும் எந்த பிரச்சினை வராது. சொல்லிக்கொண்டே மேரியிடம் வீட்டை காட்டறீங்களா? நடக்க ஆரம்பித்தான்.

மேரியும், பாபுவும் போவதை பார்த்துக்கொண்டிருந்த கூத்தப்பன் சற்று தள்ளி இருந்த மேரியின் வீட்டின் வாசலில் நின்றிருந்த அவள் மகள் பிரமீளாவை பார்த்ததும் முகத்தை கலகலப்பாக்கி கொண்டான். இவன் பார்ப்பதை கண்டவுடன் சட்டென வீட்டுக்குள் நுழைந்து கொண்டாள் பிரமீளா.

காலையில் கோலப்பன் தன்னை அழைத்துக்கொண்டு போக வருவதற்கு முன்னால் மேரியின் வீட்டுக்கு வந்து காலை டிபனை முடித்துக்கொண்டு தயாராகி விடுவான் பாபு. மதியம் சாப்பாடு கோலப்பன் மேரியின் வீட்டுக்கு வந்து பெற்றுக் கொண்டு‘சைட்டுக்கே கொண்டு வந்து கொடுத்து விடுவான். இரவு எட்டு மணிக்குள் மேரியின் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு தன்னுடைய அறைக்கு சென்று விடுவான்.

இரவு மேரி பாபுவுக்கு இந்த மலை காட்டுக்குள் மலைவாசிகள் நடத்தும் திருவிழாவை பற்றி சுவாரசியமாய் சொல்லிக்கொண்டே தட்டில் தோசையை வைக்க வாசலில் யாரோ நிற்பது போல நிழலாட திரும்பி பார்த்தபோது கூத்தப்பன் நின்று கொண்டிருந்தான். போதையில் நின்று கொண்டிருந்தது அவனது தள்ளாட்டத்தில் தெரிந்தது.

இவனுக்கு மட்டும்தான் டிபன் போடுவியா எனக்கு போட மாட்டியா? தள்ளாடிக் கொண்டே உள்ளே வந்தவன் அங்கிருந்த டேபிளில் அமர்ந்து கொண்டான். மேரியின் முகம் கோபத்தில் சிவந்தாலும், கண்களில் பயம் தெரிய கூத்தப்பா, தம்பியும் சாப்பிட்டு முடிச்சிருச்சு, இப்பத்தான் எல்லாத்தையும் கழுவி வச்சோம், சொன்னவள் பாபுவை எழும்பி செல்ல கண்களால் சாடை செய்தாள்.

அவளின் கண் சாடையை கண்டு கொள்ளாத பாபு தட்டில் வைத்த தோசையை நிதானமாய் சாப்பிட ஆரம்பித்தான். கூத்தப்பன் ‘என்னாடி’ ரொம்பத்தான் பிகு பண்ணிக்கறீங்க? ஏன் என்னைய மாதிரி ஆளுங்களை கண்டா உங்களுக்கு இளக்காரமா? கொஞ்சம் சிவப்பு தோலும், ஆளு அழகா இருந்தா போதும் வீட்டுல உட்கார்ந்து சாப்பாடு போட்டுடுவீங்க இல்லையா? தள்ளாடிக்கொண்டே உள்ளறைக்குள் நுழைய முயற்சித்தான்.

அவனின் நோக்கம் பிரமீளாவை நோக்கித்தான் என்பதை உணர்ந்து கொண்ட மேரி சட்டென உள்ளறையை மறைத்துக்கொண்டு இப்ப நீ வெளியே போறியா? வயசு பொண்ணு இருக்கற இடத்துல வந்து இப்படி ரகளை பண்ணாதே..

அவளின் திடீர் தடையால் உக்ரமான கூத்தப்பன் இப்பொழுது பாபுவின் அருகில் வந்து ஏண்டா உனக்கு வேற கடையே கிடைக்கலையா? இந்த வீட்டுல அந்த பொண்ணு கிட்டே ஏதாவது வாலாட்ட நினைச்சே.. கையில் திடீரென ஒரு கத்தி முளைத்திருந்தது. அதை பார்த்த்தும் மேரிக்கு குலை நடுங்க ஆரம்பித்தது.

இவள் பதட்டப்பட்ட அளவுக்கு பாபு பதட்டமடையவில்லை. நிதானமாக சாப்பிட்டு முடித்து அந்த தட்டிலேயே கையை கழுவினான். பிறகு மெல்ல எழுந்து மேரியம்மா எவ்வளவு ஆச்சுன்னு கணக்கு எழுதிக்குங்க, சொல்லிக் கொண்டு கிளம்ப ஆயத்தமானான். இவனும் கிளம்பி விட்டால் கூத்தப்பனை யார் வெளியே கொண்டு போவது திகைப்பில் இருந்த மேரியம்மா தம்பி இவனையும் கூட்டிகிட்டு போயிடேன் என்பது போல கண்களால் பார்த்தாள்.

அவளின் பார்வையை புரிந்து கொண்ட பாபு, அப்புறம் கூத்தப்பண்னே வாங்க கொஞ்சம் காத்தாட போய் பேசலாம் அழைத்தான்.

இவனின் கத்தியை கண்டு கொஞ்சமும் பயப்படாமல், சாதாரணமாய் நடந்து கொண்டதே கூத்தப்பனுக்கு அதிர்ச்சியாக இருக்க, இப்பொழுது தன்னை வெளியே கூப்பிடும் அளவுக்கு போகவும், சரி வெளியே வைத்து இவனை மிரட்டி வைப்பது சுலபம் என்று அவனுடன் தள்ளாடி வெளியே வந்தான்.

பாபு உடனே அறைக்கு செல்லாமல் அந்த குளிரிலும் அப்படியே கூத்தப்பனை அழைத்துக்கொண்டு பாதைக்கு இறங்கினான். பாதையில் அமைதியாய் நடந்து வந்த பாபுவை பார்த்த கூத்தப்பன், டேய்..தம்பி..இங்க பாரு உடனே இந்த ஊரை விட்டு ஓடிடு இல்லையின்னா, இப்படித்தான் தன்னுடைய கையில் வைத்திருந்த கத்தியை பாபுவின் முகத்தை நோக்கி விசிறினான். கண்டிப்பாய் அந்த விசிறலுக்கு முகத்தில் கடுமையான கீறல் விழுந்திருக்கும், ஆனால் நடந்ததே வேறு, பாபு அந்த விசிறலுக்கு லாவகமாய் வில்கியது மட்டுமில்லாமல் கூத்தப்பனின் கையை அப்படியே மடக்கி அவன் கையில் இருந்த கத்தியை பிடுங்கி தூர வீசியெறிந்தான்.

கூத்தப்பன் அதிர்ச்சியாகி நின்று விட்டான். அதெப்படி? கண் மூடி திறப்பதற்குள் கத்தி இவன் கையை விட்டு அவன் கைக்கு சென்று காட்டுக்குள் போய் விழுந்து விட்டது. டேய்..அவனை பார்த்து உறும நினைத்தவன் மறு கணம் அதிர்ச்சியாய் அப்படியே விழி பிதுங்க நின்று விட்டான்..அவன் தலையில் துப்பாக்கி முனை வைக்கப்பட்டிருந்தது. இங்க பாரு அப்படியே மண்டை சிதற சுட்டு கத்தியை தூக்கி வீசுன மாதிரி உன்னையும் தூக்கி வீசிட்டு போயிடுவேன். புரிஞ்சுதா..இப்பொழுது பேசிய பாபுவின் குரலில் தெரிந்த கொடூரம் கூத்தப்பனை அப்படியே நடு நடுங்க செய்தது. அப்படியே தொப்பென்று பாதையிலேயே உட்கார்ந்தவனை கண்டு கொள்ளாமல் திரும்ப விடு விடுவென்று தன் அறைக்கு நடந்து வந்தான்.

‘அனை கட்டுமான’ பணிகள் வேகமாக நடந்து கொண்டிருந்தன. வேலை நடந்து கொண்டிருப்பதை பார்த்து நின்று கொண்டிருந்த பாபு யாரோ பின்னால்

நிற்பது போன்ற உணர்வு வர திரும்பி பார்த்தான். கூத்தப்பன் நின்று கொண்டிருந்தான்.பாபுவை பார்த்து முகத்தில் சின்ன பயத்துடன் ஒரு புன்னகையை சிந்தினான். பாபு முகத்தில் எந்த பிரதிபலிப்பும் காட்டாமல் அவன் முகத்தை பார்த்தான். கூத்தப்பனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. நேற்று இரவு அவ்வளவு கொடூரமாக பேசியவனா இவன்? ஒன்றும் தெரியாதவன் போல் முகத்தை வைத்து நின்று கொண்டிருப்பதை பார்த்தால் கை தேர்ந்த நடிகனாக தெரிந்தான்.

உன்னை..உங்களை எங்க தலைவர் பாக்கணும்னு சொன்னார்…பயத்துடன் சொல்ல அது யார் உங்க தலைவரு ? கிண்டலாய் கேட்டவன் இப்பவெல்லாம் முடியாது, இராத்திரி பாக்கலாமுன்னு சொல்லிடு, மீண்டும் கூத்தப்பனை பார்த்து இப்படி பகல்ல எதிர்ல வந்து பம்மறது, அப்படி எல்லாம் வச்சுக்க கூடாது .நீ எப்படி இந்த ஊருக்குள்ள இருந்தியோ அதே மாதிரி இருக்கணும், புரிஞ்சுதா..பாபுவின் குரலில் ஒலித்த கடுமை இவனை தலையாட்ட வைத்தது உடனே அந்த இடத்தை விட்டு சென்றான்.

அங்கு வேலை செய்து கொண்டிருந்த பணியாட்கள் இதை ஆச்சர்யத்துடன் பார்த்தனர். இந்த ஏரியாவில் கூத்தப்பனை பார்த்து பயப்படாதவர்கள் யாருமில்லை. அப்படி சிங்கம் போல் அலைந்தவன் இந்த பையனை பார்த்து இவ்வளவு பயமாய் நின்று கொண்டு பதில் சொல்கிறான்.? கூத்தப்பன் சென்றதை பார்த்து விட்டு திரும்பிய பாபு வேலை செய்து கொண்டிருந்த ஆட்கள் இவனையே பார்ப்பதை கண்டு நீங்க ஏன் நின்னுட்டீங்க? வேலைய பாருங்க..மென்மையாய் விரட்டினான்.

இரவு நல்ல தூக்கத்தில் இருந்த பாபு கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு விழித்தவன் எழுந்து சென்று கதவை திறந்தான். கூத்தப்பன் நின்று கொண்டிருந்தான். எரிச்சலாய் வந்த்து பாபுவுக்கு, அன்று ஒரு நாள் விரட்டிய விரட்டலுக்கு இப்படி வந்து தொல்லை கொடுத்து கொண்டிருப்பவனை பார்த்து. என்ன வேண்டும்? கேட்டவனின் குரலில் தென்பட்ட காரம் கூத்தப்பனை சற்று கலங்க வைத்தது, தலைவர் வந்திருக்காரு, தயங்கி சொன்னான். தலைவரா வரச்சொல்.. இல்லை..உன்னைய..உங்களைய வர சொல்றாரு தயங்கி சொன்னான். சட்டென்று திரும்பிய பாபு எங்க இருக்கார் உங்க தலைவரு?

வெளியே ரோட்டுலதான்.. சரி இதா வர்றேன்,சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினான்.

இருளில் ஒதுங்கி இருந்த காரில் அமர்ந்திருந்த ஒரு உருவம் இவன் அருகில் வர வா உள்ளே வந்து உட்காரு. கார் கதவை திறந்து விட சற்று தயங்கிய பாபு என்ன நினைத்தானோ காரில் ஏறி உட்கார்ந்தான். கூத்தப்பன் சற்று தள்ளி நின்று கொண்டான்.

சற்று அமைதி..நீ யார்? காருக்குள் இருளாய் இருந்தாலும் குரலை வைத்து இந்த ஆளுக்கு வயது ஐம்பதாவது இருக்கவேண்டும் என்று முடிவு செய்தவன், அது கிடக்கட்டும், நீ யாரு? அவன் எதுக்கு உன்னை தலைவர் தலைவர் அப்படீங்கறான்.

பாபுவின் எதிர் கேள்வி அந்த ஆளை முகம் சுழிக்க வைத்திருக்க வேண்டும். இங்க நான் மட்டும்தான் கேள்வி கேட்கணும், நீ கூத்தப்பனை மிரட்டிட்டே அப்படீங்கறதுனால உன்னைய ஹீரோவா நினைச்சு பேசக்கூடாது, இப்ப கூட நான் நினைச்சா உன்னைய இப்படியே பரலோகம் அனுப்ப முடியும், குரலில் கடுமை தெரிந்தது.

இந்த மாதிரி ஆயிரம் மிரட்டல்களை பார்த்துட்டவன நான். நான் போயிட்டா எங்க நோக்கம் முடிஞ்சுடாது, எனக்கு பின்னாடி இதே மாதிரி இன்னொருத்தர் வருவாங்க, உங்களை மாதிரி தலைவர் தொண்டர் அப்படீன்னு வச்சுகிட்டு ஆளை மிரட்டற வேலைக்கெல்லாம் நாங்களும் எங்க இயக்கமும் பயப்படாது புரிஞ்சுதா? பாபுவின் குரலா அது? அப்படி ஒரு கர்ண கடூரத்தை காண்பித்தது.

சற்று மெளனம்..ஓகே எனக்கு புரியுது, நீ சொன்னியே இயக்கம் அது மாதிரி இந்த ஏரியாவுல பெரிய இயக்கமே வச்சு நடத்தறவங்க நாங்க, உயிர் பயம் உனக்கு மட்டுமில்லை, எங்களுக்கும் கிடையவே கிடையாது.

அந்த உருவம் சொல்லவும் குபீரென சிரித்தான் பாபு, அதுதான் அன்னைக்கு இராத்திரியே கூத்தப்பன் கிட்டே பார்த்தேனே. இவனை மாதிரி ஆளுங்களை வச்சுகிட்டு பெரிய கூட்டத்தை வச்சுகிட்டதா பேச வேண்டாம். உயிருக்கு ஆபத்துன்னா யாரை வேணா காட்டி கொடுத்துடுவான். நிருபிச்சு காட்டட்டுமா? பாவுவின் குரலில் ஆவேசம். சட்டென்று அதை குறைத்த பாபு, இன்னும் ஆறு மாசம்தான் நான் இங்க இருப்பேன். அதுக்குள்ள நான் வந்த வேலைய முடிச்சுட்டு போயிடுவேன். அதுவரைக்கும் என்னைய தொல்லை பண்ணக்கூடாது, புரிஞ்சுதா? சொல்லிவிட்டு சட்டென காரை விட்டு இறங்கியவன் விறு விறுவென அறையை நோக்கி நடந்தான்.

மறு நாள் இவன் வேலை முடிந்து மாலை அவன் அறைக்கு வந்த பொழுது அறை முழுவதும் கலைந்து கிடந்தது. விடமாட்டார்கள் மனதுக்குள் நினைத்துக்கொண்டவன் மீண்டும் இரவு சந்திக்க வருவார்கள். நினைத்தது போலவே இரவு பத்து மணிக்கு மேல் கதவு தட்டப்பட்டு திறக்க கூத்தப்பன் வெளியே நின்றான். உங்கள் தலைவர் வந்திருக்கிறாரா? இவனின் கேள்விக்கு இல்லை, வரும் புதன் உங்களை வேலைக்கு போக வேண்டாம் எங்கள் ஆட்களின் மீட்டிங் ஒண்ணு இருக்கு, அதுல கட்டாயம் கலந்துக்கணும்னு சொல்ல சொன்னாங்க. சரி என்று கதவை சாத்திக்கொண்டான்.

புதன் காலை கோலப்பனிடம் வேலைக்கு வரவில்லை, நீயே பார்த்துக்கொள் என்று சொல்லி விட்டான். பத்து மணிக்கு கூத்தப்பன் இவனிடம் வந்து நின்றவன் பாபுவை அழைத்து கொண்டு ரோட்டுக்கு வந்தான். அங்கு வந்து நின்ற கார் ஒன்றின் பின் புறம் ஒருவர் உள்ளிருந்தார். பாபுவையும் அதில் ஏற சொன்ன கூத்தப்பன் முன்புறம் முன்புற கதவை திறந்து உட்கார்ந்து கொண்டான்.

காரின் பயணம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேல் இருந்தது. பாதை கொஞ்சம் கொஞ்சமாக அடர்ந்த காட்டுக்குள் செல்ல ஆரம்பித்தது. காருக்குள் ஒருவரும் பேசிக்கொள்ளவில்லை. பாபு பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் ஆளை பார்த்தவன் அன்று இருளில் காரில் உட்கார்ந்து அவனை சந்திக்க வந்த ஆளாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தான். பார்க்கலாம் எதுவரை

இவர்களால் போக முடிகிறது என்கிற வைராக்கியத்தை மனதுக்குள் ஏற்றிக்கொண்டான்,

அந்த காட்டுக்குள் அப்படி ஒரு வீடு இருப்பதை யாரும் நம்ப முடியாது. அவ்வளவு வசதிகளுடன் இருந்தது. முழுவதும் மரங்களால் செய்யப்பட்டிருந்தாலும், ஐம்பது பேர் தாராளாமாக அதற்குள் வசிக்க கூடிய அளவில் இருந்தது. முன் அறையில் கூத்தப்பன் இருந்து கொண்டான் இவர்கள் இருவரும் உள்ளே நுழையும்போது ஏற்கனவே அங்கிருந்த ஹாலில் அமைக்கப்பட்டிருந்த டேபிளில் பனிரெண்டு பேர் உட்கார்ந்திருந்ததை பார்த்த மாத்திரத்தில் எண்ணி கணக்கிட்டுக் கொண்டான் பாபு

பாவுவையும் உட்கார சொன்னவன், அருகிலேயே அவனும் உட்கார்ந்து கொண்டான். ஐந்து நிமிடம் அமைதி..

பாபுவுடன் வந்தவன் எழுந்து உங்களுக்கு இவரை பற்றி அறிமுகப்படுத்த விரும்புகிறேன். அது கூட இவர் சொல்லி தெரிந்து கொள்ளவில்லை. நேற்று என்னுடைய ஆள் இவருடைய அறையை சோதனை செய்து கிடைத்தவைகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். பத்திருபது பேப்பர் கட்டுகளை கொடுத்தார். ஒவ்வொருவராக வாங்கி பார்த்தனர். அதில் “கொலை குற்றவாளி தப்பி ஓட்டம்” வெடி விபத்து வழக்கு சம்பந்தபட்ட நபர் பாபுவின் படம் போட்டு ஒரு தினசரி பத்திரிக்கை, தமிழில் குறைவாகவும், மற்ற மொழிகளில் இவன் போட்டோவை போட்டு காவல் துறை இவனை தேடுவதாக போட்டிருந்தது. அனைவரும் மொழி புரியாவிட்டாலும், தமிழில் கிடைத்த ஒரு சில பத்திரிக்கைகளை கொண்டு இவன் பல மாநிலங்கள் தேடும் ஒரு குற்றவாளி என்பதை முடிவு செய்து கொண்டனர்.

பாபுவின் கூட வந்த நபர் இவர் எதற்கு இந்த மலைக்காட்டுக்கு வரவேண்டும், இதை கண்டிப்பாக நமது கூட்டத்துக்கு விளக்க வேண்டும். இல்லையென்றால் இந்த கூட்டத்தினரை தாண்டி இந்த சுற்று வட்டாரத்தில் வாழ முடியாது என்பதை இவருக்கு தெரிவிக்கிறோம்.

பாபு பட்டென்று எழுந்து முதலில் ஒன்றை சொல்ல விரும்புகிறேன், நான் உங்கள் யார் பாதுகாப்பையும் கேட்டு இங்கு வரவில்லை. அப்படி உங்களால் எனக்கு கண்டிப்பாய் பாதுகாப்பு கொடுக்க முடியாது. சொன்னவன், ஒத்துக்கொள்கிறேன் நான் ஆந்திரா, கர்நாடகா, கேரளா தமிழ்நாடு இவைகளால் தேடப்படுக் குற்றவாளி என்று. ஆனால் இப்படி என்னை கூப்பிட்டு மிரட்டுவதால் ஒன்றும் ஆகப்போவதுமில்லை. நீங்கள் ஒவ்வொருவருவரும் ஒவ்வொரு தொழிலில் தேர்ந்தவர்கள் என்பது புரிகிறது. செம்மரக்கட்டை கடத்துவதில் இருந்து சந்தனமரம் கடத்துவது, கஞ்சா கடத்துவது இதிலெல்லாம் நீங்கள் கரை கடந்தவர்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால் நான் அப்படியல்ல, ஒரு இயக்கத்தை சேர்ந்தவன், பணம் காசு இவைகள் எனக்கு பொருட்டல்ல, உயிரும் ஒரு பொருட்டல்ல, இவைகள் மட்டும்தான் இப்பொழுது சொல்ல முடியும்.

இப்படிப்பட்ட எனக்கு நீங்கள் பாதுகாப்பு கொடுப்பது என்பது கேலியாக இல்லையா? அவனின் பேச்சு நிற்கவும்,

ஐந்து நிமிடங்கள் அமைதி. திடீரென ஒருவன் உள்ளே சென்று நாற்பது வயது மதிக்கத்தகுந்த ஒரு ஆளை அழைத்து வருகிறான்..

இவர் நம்மை பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்? இதோ நான் கூட்டி வந்திருக்கும் நபரை பற்றி உங்களுக்கு தெரியுமா? இவர் மேல் உள்ள போலீஸ் கேஸ் எவ்வளவு தெரியுமா? நான்கு வருசமா என் பாதுகாப்புலதான் வச்சிருக்கேன். இன்னைக்கு நம்ம தலைவர் சொன்னதுனால உங்களுக்கு எல்லாம் காட்டறதுக்காக கூட்டி வந்திருக்கேன். கம்பீரமாய் சொன்னான்.

அப்பொழுது வெளியில் “பட்டென்று” ஒரு சத்தம் என்னவென்று இவர்கள் சுதாரிக்குமுன் கதவை உடைத்து அனைவரையும் சுற்றிக்கொண்டது காவல்துறையின் துப்பாக்கி முனை.. போலீஸ் இங்கெப்படி உள்ளே நுழைய முடிந்தது? உட்கார்ந்திருந்த அனைவரின் கேள்வி

எல்லாரும் அப்படியே கையை தூக்கி வெளியே வாங்க..போலீசின் அறிவிப்பு.

பனிரெண்டு பேரையும், கைது செய்த போலீஸ், கூத்தப்பனுக்கு முதலிலேயே விலங்கு போட்டிருந்தது. பாதுகாத்து வைத்திருந்தவனை கைவிலங்கிட்டு பாபுவை நோக்கி சென்று அவன் முன்னால் இவன் தானே உங்கள் மாநிலத்தில் தேடப்படும் குற்றவாளி !

யெஸ் சார், இவனைத் தேடித்தான் இத்தனை வருடங்களாக அலைந்தோம். தமிழ்நாட்டில் இங்கு ஏதோ ஒரு மலைக்காட்டில் யாரோ ஒருவரின் பாதுகாப்பில்தான் இருக்கிறான் என்று யூகம் செய்த போலீஸ் இதே மாநிலத்தை சேர்ந்த என்னை அனுப்பி வைத்தது.

பனிரெண்டு பேரையும் பார்த்து சொன்னான், நீங்கள் இந்த காட்டுக்குள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை போலீஸ் ஏற்கனவே கண்டு பிடித்து விட்டது. அதற்கு தகுந்த தண்டனையை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள். ஆனால் இவன் எங்கள் மாநிலத்தில் மிகப்பெரிய கொள்ளை, கொலை கேசுகளில் தேடப்பட்டு வருபவன். நான் வந்தது இவனை பிடித்து கொண்டு போகத்தான். கண்டிப்பாய் இங்குதான் அவன் இருக்கிறான் என்று தெரியும், ஆனால் யாரிடம் இருப்பான் என்பது தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தோம். கூத்தப்பனும், அவன் முதலாளியும் தானாகவே வந்து எனக்கு காட்டி கொடுத்து உதவியிருக்காங்க, அவங்களே நாள் கிழமை சொல்லி போலீஸ் அலர்டா ஆகி என்னை தொடர்ந்து வர்றதுக்கும் உதவி பண்ணியிருக்காங்க அவங்களுக்கு ரொம்ப நன்றி.

போலீஸ் கொண்டு வந்த வேனில் ஏறுமுன் அனைவரும் பாபுவை அழைத்து வந்தவனையும், கூத்தப்பனையும் கடுமையான வார்த்தைகளால் திட்டிக்கொண்டு வேன் ஏறினர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *