(2013ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அடர்ந்து பெரிய மரங்களாக வளர்ந்து, நல்ல நிழல் தரும் சாலையில் தனது வண்டியைத் திருப்பினாள் ஜினா. மரங்களின் வளர்ச்சியும் வீடுகளின் கட்டிட அமைப்பும் அப்பகுதி உருவாகி ஒரு ஐம்பதாண்டுகள் ஆகியிருக்கலாம் எனத் தோன்றியது. நகரை விட்டு விலகி, அமைதியான வாழ்க்கையை வேண்டி புறநகர்ப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த குடியிருப்புகளில் ஒன்று அது. அப்பகுதியின் மரங்கள் தரும் நிழலும் காற்றும் அந்த வெயில் கொளுத்தும் கோடையின் கசகசப்பில் மிகவும் இதமாக இருந்தது. ஜினா போக வேண்டிய வீட்டினை அடையாளம் காண்பதில் அவளுக்குச் சிரமமாக இல்லை. அவளுக்கு முன்பே அவளது காவல்துறையின் பரிவாரங்கள் அங்கு வந்து சேர்ந்து வேலையைத் தொடங்கி விட்டிருந்தனர். வீட்டின் முன் “நுழையத் தடை என்ற வாக்கியம் பொறிக்கப்பட்ட மஞ்சள் நாடா சுற்றிக் கட்டப்பட்டிருந்தது. அக்கம் பக்கம் வீடுகளின் வாசலில் ஒரு சிலர் வந்து நின்று வேடிக்கைப் பார்த்தனர். ஜினாவின் கண்கள் மார்ட்டினைத் தேடித் துழாவின, அவனைக் காணவில்லை.
ஸ்டியரிங் வீலில் இருந்து எக்கி ரேடியோவைத் தட்டி, “மார்ட்டின், எங்கே போனாய், போக்குவரத்து அதிகமா? வழியில் மாட்டிக்கொண்டாயா?” என்றாள்.
“ஆமாம், மாட்டிக்கொண்டேன் சீஃப், ஆனால் போக்குவரத்தில் அல்ல, எஃப்.பி.ஐயிடம் இருந்து ஒரு அவசர வேண்டுகோளைக் கவனிக்க வேண்டிய சூழ்நிலை. எனக்குப் பதில் உங்களுக்கு உதவ வேறு ஆளை அனுப்பியிருக்கிறேன்.”
“ஏன் அதனை உடனே எனக்குச் சொல்ல என்ன கேடு? உனக்குப் பதில் யாரை அனுப்பினாய்?’ எனச் சிடுசிடுத்தாள் ஜினா. ஜினாவின் சள்ளென்று விழும் முன்கோபம் நகரக் காவல்துறை பணியாளர்களிடம் பிரசித்தி பெற்றது.
“இது போல உங்களுக்குக் கோபம் வரும் என்றுதான் சொல்லவில்லை சீஃப், அதைவிடப் பதிலுக்கு வந்திருக்கும் ஆளின் பெயர் உங்களுக்கு மேலும் எரிச்சலூட்டும், அதனால் தவிர்த்தேன், தேவையான தகவல்களைச் சேகரித்துக் கொண்டு ரெக்ஸ் ஏற்கனவே அங்கிருக்கிறான்.”
“யார்?!!.. அந்த டி-ரெக்ஸ் கோமாளியா? அர்த்தமில்லாமல் நகைச்சுவை சொல்லிக்கொண்டு, எதற்கெடுத்தாலும் அபத்தமாகச் சிரித்துக் கொண்டு…ச்சே… உனக்கு வேறு ஆளே கிடைக்கவில்லை, உன்னை வந்து கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்கிறேன். அதோ வருகிறான் அறுவைத் திலகம், அப்புறம் பேசுகிறேன் உன்னுடன்,” என்று ஜினா ஒலிவாங்கியை நிறுத்தும்முன் ரேடியோவின் கர…கர ஒலியின் பின்னணியில் மார்ட்டின் சிரித்துக்கொண்டே “கூல் டவுன், சீஃப்” என்று சொல்வது கேட்டது.
வண்டியிலிருந்து இறங்கித் தொப்பியை மாட்டிக்கொண்ட ஜினா, தன்னை நோக்கி விரைந்து வந்து “ஹை சீஃப், மார்ட்டினுக்குப் பதில் நான் வந்திருக்கிறேன்” என்ற ரெக்ஸைத் தன்னையும் அறியாமல் முறைப்பதைத் தவிர்த்தாள்.
“சரி ரெக்ஸ், சுருக்கமாகச் சொல்லு”
“அதோ அந்தக் கிறிஸ்துவ மதம் பரப்பும் போதகர்கள்தான் முதலில் பார்த்து 911ஐ கைபேசியில் அழைத்திருக்கிறார்கள். கூப்பிட்டுப் பார்த்துவிட்டு யாரும் வராததால் முன்கதவில் பிரசுரங்களைச்செருகமுயன்றவுடன் கதவு திறந்து கொண்டிருக்கிறது. தொலைக்காட்சியின் சப்தம் அதிகமாயிருந்திருக்கிறது. அதன் முன் மிஸ்டரும் மிஸ்ஸஸ் ஸ்மித்தும் ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்து தூங்குவது போல இருப்பதைப் பார்த்துத் திரும்ப எண்ணினார்களாம். ஆனால் துர்நாற்றம் வரவும் சந்தேகம் வந்து, உள்ளே சென்று அவர்கள் தோளைத் தொட்டு உலுக்கவும் உடல்கள் சரிந்து விட்டிருக்கின்றன. உடனே ஆம்புலன்ஸை அனுப்பச் சொல்லியிருக்கிறார்கள்.” என்று சொல்லிய ரெக்ஸ் நடைபாதையில் மரத்தடியில் நின்றுகொண்டிருந்த கருப்புக் கோட் சூட் அணிந்து, பிரசாரப் பத்திரிக்கைகள் தாங்கிய தோள் பையுடன் நிற்கும் இளைஞர்களைக் காட்டினான்.
“சரி, நீ அவர்களின் முகவரி போன்ற தகவல்களை வாங்கிக் கொண்டு, மேலும் விசாரணையை முடித்துக் கொண்டு, அவர்களை அனுப்பிவிட்டு உள்ளே வா”
கதவைத் தள்ளிக்கொண்டு ஜினா உள்ளே நுழைந்த பொழுது வீடு அளவுக்கு மீறிக் குளிரூட்டப்பட்டிருப்பது தெரிந்தது. அறுபத்தி ஐந்து அல்லது அதற்கு மேல் வயதுள்ள, தளர்ந்த வெளிறிய, வயோதிக ஸ்மித் தம்பதியினர் இன்னமும் தொலைக்காட்சி பார்ப்பவர்கள் போலச் சரிந்து அமர்ந்திருக்க, தொலைக்காட்சியில் ஒரு சோப் ஒப்பரா நிகழ்ச்சியில் இரு பெண்கள் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
காவல்துறைப் பணியாளர்கள் வீட்டையும், ஸ்மித் தம்பதியினரையும் பல கோணங்களில் படம்பிடித்துக் கொண்டிருந்தனர். கைரேகைத் தடயங்களுக்காகப் பொடி தூவி, துரிகையால் பல இடங்களை வருடிக்கொண்டு இருந்தார்கள். அனைத்தையும் சிறு புத்தகத்தில் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தவர், கையுறைப் பெட்டியிலிருந்து உறைகளை உருவி ஜினாவிடம் கொடுத்துக் கொண்டே, “எதையும் மாற்றவில்லை, அசைக்கவில்லை சீஃப் என்றார்.”
கையுறையை மாட்டிக் கொண்டே “ஏதும் செக்யூரிட்டி கேமரா சிஸ்டம் வைத்திருக்கிறார்களா?” என்றாள் ஜினா.
“ஊஹூம் இல்லை. இன்னமும் பழைய லாண்ட் லைன் தொலைபேசியை மட்டுமே விரும்பும் வயோதிகர்கள். ஒரு கைபேசியோ, கணினியோ கூட வீட்டில் இல்லை. அவசர அழைப்பிற்கு என்று குளிர்பதனப் பெட்டி மேலே ஒட்டியிருந்த தாளில் கண்டு, அதில் சில தொலைபேசி எண்களைத் துரத்திப் பிடித்தத்தில் இவர்களுக்கு ஒரே மகள், கணவனை இழந்த அவள் பதின்ம வயது மகளுடன் சாக்ரமெண்ட்டோவில் இருக்கிறாள் எனத் தெரிந்தது. தகவல் சொல்லியிருக்கின்றோம். இனிமேல் கிளம்பினாலும் ஒரு மணி நேரத்தில் வந்து விடுவார்கள்.”
ஸ்மித் தம்பதியினருக்கு எதிரே ஆளுக்கொரு கோக் டின் இருந்தது. துப்பாக்கிக் காயம் போல எதுவும் இல்லை,
இரத்தம் சிந்தியிருக்கவில்லை. சோடாவில் நஞ்சு கலந்து குடித்து உயிரை விட்டார்களோ என எண்ணியவாறு வீட்டை அங்குலம் அங்குலமாக நோட்டம் விட்டாள் ஜினா. கோக் அருகே கவிழ்த்த ஒரு டிவி நிகழ்ச்சி நிரல் புத்தகமும், தபாலில் சேர்க்க வேண்டிய கடிதங்களும் இருந்தன. அவை அனைத்தும் தொலைபேசி, தண்ணீர், மின்சாரம், பத்திரிக்கை சந்தா, கேசோலின் எனக் கட்டவேண்டிய தொகைகளுக்காக அனுப்பவேண்டியவை.
கணப்புக்கு மேலிருந்த திட்டில் இருந்த புகைப்படங்களில் சில குடும்பப் படங்கள், வாழ்த்து அட்டைகள் இருந்தன. மிஸ்டர் ஸ்மித் இராணுவத்தில் பணிபுரிந்ததைச் சொல்லும் படங்கள், அவர் பிடித்த பெரிய மீனுடன் ஒரு படம், அக்கால ஹாலிவுட் நடிகை போன்ற தோற்றத்துடன் இளவயதில் மிஸஸ் ஸ்மித், பல் விழுந்த சிரிப்பைக் காட்டும் சிறுவயது மகளைக் கட்டிக் கொண்டு கடற்கரையில், பட்டம் வாங்கிய மகளுடன், பேத்தியுடன் போன்ற வழக்கமான படங்கள். சற்றுத் தள்ளி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே உடற்பயிற்சி செய்ய ஒரு அசையா மிதிவண்டி இயந்திரம். சமையலறைக் குளிர்பதனப் பெட்டியில் பழங்கள், காய்கள், கோழி என நிறைந்திருந்தன. அதன் கதவில் பேத்தியின் கிறுக்கலான ஓவியம் “ஐ லவ் யு கிரான்மா” என்றது. அத்துடன் அதன் கதவின் மேல் வாங்கவேண்டிய மளிகைப் பட்டியல் ஒன்று. அதில் சோயப் பால், சர்க்கரையற்ற, கொழுப்புக் குறைந்த பண்டங்களின் பெயர்கள். அதனருகில் தொலைபேசி எண்கள் பட்டியல். டிஷ் வாஷரில் பாத்திரங்கள் காய்ந்து எடுத்து அடுக்கத் தயாராகக் காத்திருக்க, மிகவும் சுத்தமான சமையலறையாக இருந்தது.
அருகில் இருந்த சிறிய லாண்டரி அறையில் வாஷிங் மெஷின் காலியாக இருக்க, உலர்த்தும் பெட்டியில் துணிகள் உலர்ந்து மடிக்கக் காத்திருந்தன. சிறிதும் கலையாத படுக்கை அறை எல்லாவற்றையும் பார்வையிட்டுவிட்டு மீண்டும் முன் அறைக்கு ஜினா வந்த பொழுது ரெக்ஸ் மற்றவர்களிடம் தகவல் சேகரித்துக் கொண்டிருந்தான்.
“மரணத்திற்கு என்ன காரணம் என்று உனக்குத் தோன்றுகிறது ரெக்ஸ்?” என்றால் ஜினா.
“தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே தற்கொலை செய்து கொண்டு விட்டார்கள், சீஃப். அவர்களை அந்த அளவுக்கு அவர்கள் பார்த்த நிகழ்ச்சி பாதித்துள்ளது. என்ன நிகழ்ச்சி என்று தெரிந்தால் அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரித்த நிறுவனத்தை ஷியூ பண்ணலாம். துர்நாற்றம் வருவதால் இறந்து மூன்று நாட்களுக்கு மேலிருக்கலாம், சரியான நேரம் தெரிந்தால் என்ன நிகழ்ச்சி என்று கண்டுபிடித்து விடலாம். யாராவது இந்த உயிரிழப்புக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்.” என்றான் மோவாயைத் தடவி கொண்டு.
“இறந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன, ரெக்ஸ். அநேகமாகச் சென்ற வியாழன் இதே நேரம் இறந்திருக்கிறார்கள்.”
ரெக்ஸ் ஆச்சரியத்துடன், “அது எப்படி உங்களுக்குத் தெரியும் சீஃப்?” என்றான்.
“நான் நினைப்பதை போஸ்ட் மார்ட்டம் அறிக்கை உறுதிப்படுத்த வேண்டும். டிவி நிகழ்ச்சி நிரல் புத்தகம் அந்தப் பக்கத்தில் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கிறது. வீட்டில் அனைத்தும் அடுத்த வேலைக்கு. அடுத்த நாளைக்கு எனப் பல வேலைகள் காத்து இருக்கின்றன. உடல்நலம் பேணும் உணவாகப் பார்த்துப் பார்த்து வாங்குவதாகவும் தெரிகிறது. உடற்பயிற்சி செய்பவர்கள், உடல்நலத்தில் அதிக அக்கறை செலுத்துபவர்கள்.”
“பிறகு ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்,சீஃப்?”
“அவர்களுக்கும் அந்த நிமிடம் வரை உயிர் விட எண்ணம் இருந்ததாக இந்த வீட்டின் சூழல் காட்டவில்லை.”
“ஆமாம், திடீரென உயிரை விட எடுத்த முடிவாகத்தான் இருக்கும் சீஃப், மிஸ்டர் ஸ்மித் வெளியில் காரைக் கழுவிக் கொண்டிருந்தவரும் பாதியில் வந்ததாகத்தான் தெரிகிறது. வெளியில் எல்லாவற்றையும் அப்படியே போட்டு விட்டு வந்திருக்கிறார். அப்படியானால் வேலை செய்த களைப்புடன் சிறிது ஓய்வெடுக்க, குளிர்பானம் குடிக்க உள்ளே வந்திருக்கிறார். மனைவி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறார். இவர் நிகழ்ச்சி நிரல் பார்த்து விட்டு வேறு ஏதோ ஒரு நிகழ்ச்சி மாற்றச் சொல்லியிருக்கிறார். இருவருக்கும் வாக்குவாதம் ஆரம்பித்து, சண்டை முற்றிப்போய், இதென்ன வாழ்க்கை என வெறுப்பேறி, விஷம் கலந்து குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்கள் இருவரும்.”
“ஆமாம், நாற்பது ஆண்டுகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தவர்கள்தான் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வாக்குவாதம் செய்து உயிரை விட முடிவெடுத்தார்களா?” என்ற ஜினாவின் குரலில் எரிச்சல் கலந்த சலிப்புத் தெரிந்தது.
“நாற்பது ஆண்டுகளா, அது உங்களுக்கு எப்படித் தெரியும், சீஃப்?”
ஜினா கணப்பின் திட்டின் மேலிருந்த திருமணநாள் வாழ்த்து அட்டையைக் காட்டினாள்.
“ஸ்மித் காரைக் கழுவி கொண்டிருக்கும் பொழுது யாரோ தெரிந்தவர்கள் வந்திருக்க வேண்டும். வரவேற்று எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். கெட்ட எண்ணம் உள்ள விருந்தாளி அவர்களைத் திசை திருப்பிவிட்டு, அவர்களுக்குத் தெரியாமல் அவர்களது பானத்தில் நஞ்சு கலந்துவிட்டிருக்கலாம். பிறகு சந்தடி இன்றித் தனது பானத்துடன் வெளியேறி இருக்க வேண்டும். கதவினைப் பூட்டாத காரணமும் அதுதான். வீடு அதிகக் குளிராக இருப்பதன் காரணமும் மரணம் நடந்தது உடனே அனைவருக்கும் தெரியவராமல், உடல் அழிவதைத் தாமதப்படுத்தும் நோக்கமாக இருக்க வேண்டும். எனவே திட்டமிட்ட கொலை, பர்ஸ்ட் டிகிரி மர்டர் என்றால் கொலை செய்த நபர் கைரேகைத் தடயம் எதையும் விட்டுச் செல்ல வழியில்லை.”
“வாவ், என்ன ஒரு சிறந்த போலீஸ் மூளை”
“எனக்கு ‘வாவ்’ சொல்வது இருக்கட்டும் ரெக்ஸ், நான் சொன்ன கோணத்தில் ஏதேனும் லாஜிக் இடிக்கிறதா என்று பார்? மரண அறிக்கை இறந்த நேரம் என்ன வென்று சொல்கிறது என்று பார்ப்போம், பானத்தில் நஞ்சுதான் கலந்திருந்தது என உறுதியாகத் தெரிந்தால், அண்டை வீட்டுக்காரர்களிடம் அவர்கள் யாரையாவது பார்த்தார்களா? அவர்கள் வீட்டில் செக்யூரிட்டி கேமெரா ஏதும் உண்டா? அதில் ஏதும் பதிவாகி இருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரணையைத் தொடரலாம். ஸ்மித் மகள் வந்து இறுதிச் சடங்குகள் முடிந்த பின்பு அவளையும் விசாரிக்க வேண்டும். சொத்து அவளுக்குப் போகும் என்றால் அவள் கொலை செய்யத் தேவை இராது. உயிலையும் படிக்க வேண்டும். சரி, நீ மற்ற வேலைகளை முடித்துவிட்டு வா. இது தற்கொலை அல்ல கொலை என்று நிரூபிக்கச் சரியான காரணம் வேண்டும்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள் ஜினா.
தொடர்ந்து வந்த அடுத்த வாரம் உள்ளூர் நிகழ்ச்சிக்குப் பாதுகாப்புக் கொடுப்பது, ஒன்றிரண்டு நீதிமன்ற விசாரணைக்குச் சாட்சி சொல்ல வேண்டிய கடமை என ஜினாவிற்குக் காலம் ஓடி விட்டது.
ஸ்மித் கேஸ்ஸின் மரண அறிக்கை, பானத்திலும் இறந்தவர்கள் குடலிலும் ஒரே நஞ்சு என்றும், மரண நேரம் குத்துமதிப்பாக ஜினா ஊகித்த நேரம்தான் என்றும் ஆதாரம் கொடுத்தது. இறந்த தம்பதியினர் மகளுக்குப் பெரும்பான்மையான சொத்தையும், அவர்கள் படித்த பல்கலைக்கழகங்களுக்கு ஒரு சிறு தொகையை நன்கொடையாகவும் எழுதி வைத்திருந்தனர். ஸ்மித் தம்பதிகளுக்கு உடல் உபாதைகள் எதுவும் இருந்திருக்கக் கூடும் எனவும் மரணஆய்வு அறிக்கை கூறவில்லை.
கடன் சுமை போன்ற எந்த ஒரு பிச்சுப் பிடுங்கலுமின்றி, நல்ல உடல்நலமுடன் ஓய்வுக் காலத்தை அனுபவித்துக் கொண்டிருந்தவர்கள், ஒரு காரணமும் இல்லாமல் உயிரைவிட முடிவெடுப்பார்களா? இந்த மரணத்தை ஓர் ஓப்பன் அண்ட் ஷட் கேஸாக முடிவு செய்ய ஜினாவின் மனம் ஒத்துக்கொள்ள மறுத்தது. ரெக்ஸின் விசாரணையின் மூலம் அக்கம் பக்கம் வசித்த குடும்பங்கள் எந்தவித விபரீத நடவடிக்கையையோ, வேற்று மனிதர்களையோ பார்த்ததாகத் தகவல் கிடைக்கவில்லை. ஒரு வேளை அந்தக் கிறுக்கன் ரெக்ஸ் சொன்னது போலத் திடீர் வாக்குவாதம் தற்கொலையில் முடிந்ததா?
நினைக்கவே அபத்தமாக இருந்தது ஜினாவிற்கு தொலைபேசியில் பேசிய பொழுது ஸ்மித் தம்பதியினரின் இறுதிச் சடங்குகள் முடிந்த பின்பு அவர்கள் மகள் அந்த வீட்டில் சிலகாலம் இருக்கப்போவதாகத் தெரிந்தது. எதற்கும் ஒரு நடை போய் அவளுடன் பேசினால் ஏதேனும் தெரியும் என்று ஜினா முடிவெடுத்தாள்.
ஜினாவும் ரெக்ஸ்ஸும் வண்டியை ஸ்மித் இல்லத்தின் முன் நிறுத்திய பொழுது, நடைபாதையில் ஸ்கேட் போர்ட்டில் பயணித்த பதின்ம வயது சிறுவனொருவன் அவர்களைப் பார்த்துக் கையசைத்துவிட்டு, லாவகமாக எம்பி, ஸ்கேட் பலகை காலிலிருந்து நழுவாமல் சாலையில் குதித்து, சாலையின் குறுக்கே கடந்தான். மீண்டும் எதிர்சாரி நடைபாதையில் எம்பிக் குதித்து இரு வீடுகளுக்கு இடையே மின்சார, எரிவாயு, தண்ணீர் சேவைகளின் பயன்பாடுகளுக்காக இருந்த வெற்றிடச் சந்தில் ஸ்கேட் செய்து குறுக்கு வழியில் பக்கத்துத் தெருவிற்குள் சென்று மறைந்தான்.
ஜினா அழைப்பு மணியை அழுத்தியதும் கதவைத் திறந்த வாட்ட சாட்டமான வழுக்கைத்தலை ஆள் வாருங்கள் என வரவேற்று, “என் பெயர் ஜோ, நான் ஸ்மித் மகள் டெய்ஸியின் வருங்காலக் கணவன்.” என்று தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு கை குலுக்கினான்.
“அப்படியா உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. டெய்ஸியைப் பார்த்து வருத்தம் தெரிவித்துவிட்டுச் சிறிது தகவலும் சேகரிக்கலாம் என்று வந்தோம். என் பெயர் ஜினா, இந்த ஆஃபிசரின் பெயர் ரெக்ஸ், நாங்கள் இருவரும் ஆரம்பத்தில் இருந்து இந்தக் கேஸின் விசாரணையைச் செய்து வருகிறோம்.”
“டெய்ஸியும் மகளும் கடைக்குப் போயிருக்கிறார்கள், எந்நேரமும் வந்து விடலாம். நான் எந்த வகையிலாவது உதவ முடியுமா?’
“நீங்கள் எந்த ஊரிலிருக்கிறீர்கள்? என்ன செய்கிறீர்கள்? எவ்வளவு காலமாக டெய்ஸியுடன் பழக்கம்? உங்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளத்தான் கேட்கிறேன். சாதாரணமாக அனைவரும் கேட்பது போன்ற கேள்விகள் இவை போலீஸ் விசாரணை அல்ல.”
“புரிகிறது” எனச் சிரித்தான். நானும் சாக்ரமெண்ட்டோவில்தான் இருக்கிறேன். அங்கு டெய்ஸி வீட்டிற்குச் சிறிது அருகில் எனது வீடு, நாங்கள், அதாவது நான், டெய்ஸி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்த டெய்ஸியின் கணவன். நாங்கள் யாவரும் சிறு வயதில் இருந்து ஒன்றாகப் பள்ளியில் படித்தவர்கள். நல்ல நண்பர்கள். என் மனைவியும் இறந்து விட்டாள். எனவே நானும் டெய்ஸியும் திருமணம் செய்து கொண்டு ஒருவருக்கொருவர் துணையாக இருக்கலாம் என்று சென்ற மாதம்தான் முடிவு செய்தோம்.”
“நல்லது வாழ்த்துகள். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று சொல்லவில்லையே”
“ஓ, மன்னிக்கவும், நான் ப்ளம்பிங் பிசினஸ் செய்கிறேன், தேசிய அளவில் பிரான்ச்சைஸ் உள்ள ஒரு நிறுவனத்தின் சாக்ரமெண்ட்டோ கிளை என்னுடையது. என் நிறுவனத்தில் என்னையும் சேர்த்துப் பதினோரு பேர் இருக்கிறோம்.”
ரெக்ஸ் இடைமறித்து, “ஓஹோ, நீங்கள்தான் அந்த “ஜோ தி ப்ளம்பரா”? ஏன் சென்ற தேர்தலில் மிட் ரோம்னிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யவில்லை?” என்று கேட்டுத் தனது நகைச்சுவைக்குத் தானே ஹெஹ் ஹெஹ்ஹே.என்று சிரித்தான்.
ஜோவிற்கு இந்த நகைச்சுவை பிடிக்கவில்லை என்பதை அவன் முகபாவம் காட்டியது. ஜினா இடைமறித்து, “ரெக்ஸ், விளையாடாதே,பீ சீரியஸ் மன்னிக்கவும் மிஸ்டர் ஜோ, ரெக்ஸிற்குச் சிறிது விளையாட்டுப் புத்தி தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்று கூறி ரெக்ஸ்ஸை முறைத்தாள்.
அவன் அதைக் கவனிக்காதது போல முகத்தைத் திருப்பிக் கொண்டான். அப்பொழுது வாசல் கதவு திறந்து ஷாப்பிங் செய்த பைகளுடன் டெய்ஸி தனது மகளுடன் வந்தாள். ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டார்கள்.
டெய்ஸி தன் மகளை வாங்கிய சாமான்களை உள்ளே அடுக்கி வைக்கச் சொன்னாள். ஜோ,சிறுமியிடம் “கொஞ்சம் பொறும்மா நானும் வந்து உதவுகிறேன், முதலில் ஒரு தம்மடித்துவிட்டு வருகிறேன்” என்று அவளை ஆதரவுடன் தடவிக் கொடுத்துவிட்டு வெளியே சென்றான்.
“மற்றவர்களுக்குச் செஹண்ட் ஹாண்ட் ஸ்மோக்கிங்கினால் விளையும் தீமையைச் செய்ய ஜோவால் முடியாது. எப்பொழுதும் புகைப்பது வெளியே சென்றுதான்” என்று சொன்ன டெய்ஸியின் குரலில் பெருமை பொங்கி வழிந்தது.
மேற்கொண்டு நடந்த உரையாடலில் பெரிதாக ஒன்றும் தகவல்கள் கிடைக்கவில்லை. டெய்ஸி ஜோவைத் திருமணம் செய்துகொள்வதில் அவளது பெற்றோருக்குச் சிறிதும் விருப்பம் இல்லாதது தெரிந்தது. ஜோவின் சிறுவயது முதலே ஜோவை ஸ்மித் தம்பதியினர் விரும்பியதில்லையாம். அவர்களைச் சமாதானப்படுத்த டெய்ஸி முயற்சி செய்து கொண்டிருக்கும் பொழுதே அவர்கள் இறந்தும் விட்டார்கள். அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு என்ன வருத்தம் என்பது டெய்ஸிக்குச் சிறிதும் புரியவில்லை என்றாள்.
ஜினாவும் ரெக்ஸ்ஸும் ஸ்மித்தின் வீட்டை விட்டு வெளியேறிய பொழுது, ஸ்கேட் போர்டு சிறுவன் ஒரு கைபேசியில் அவர்களது போலீஸ் வண்டியைப் படம்பிடித்துக் கொண்டிருந்தான்.
“ஏய், என்ன செய்கிறாய் நீ? யூட்யூபில் படம் போடுவதற்காகப் போலீஸ் வண்டியையே படம் எடுக்கிறாயா?” என்று ஜினா அதட்டினாள்.
“கோபிக்காதீர்கள் சீஃப். பொடியன்தானே. இவன் போலத்தான் நானும் போலீஸ் ஆகவேண்டும் என்ற கனவுடன் சிறு வயதில் பார்க்கும் போலீஸ்காரர்களுடன் எல்லாம் படம் எடுத்துக் கொள்வேன்.”
அதற்குள் ஜினாவிற்கு அழைப்பு வர, அவள் அவர்களை விட்டு விலகிச் சென்று கைபேசியில் பேச ஆரம்பித்தாள்.
சிறுவன் போலீஸ் வண்டியில் சாய்ந்து கொண்டு, ரெக்ஸின் தொப்பியைத் தலையில் மாட்டிக் கொண்டு போஸ் கொடுக்க, ரெக்ஸ் அவனைப் படம் பிடித்தான். பிறகு இருவரும் சேர்ந்து காமெராவை உயரே தூக்கி வைத்துச் சேர்ந்து தங்களைப் படம்பிடித்துக் கொண்டார்கள். அதன் பிறகு இருவரது கைபேசிகளையும் உற்று உற்றுப் பார்த்து விவாதித்துக் கொண்டார்கள்.
இவற்றைக் கவனித்துக் கொண்டே ஜினா பேசி முடித்துவிட்டு வண்டியில் ஏறியதும், கார் ஹாரனை எரிச்சலுடன் அழுத்தினாள். ரெக்ஸ் ஓடி வந்து காரில் ஏறிக் கொண்டான்.
வண்டியை ஓட்டிக் கொண்டே “அது என்ன பைண்ட் சைஸ் பசங்களோட தோழமை, என்ன செய்கிறீர்கள் இருவரும்?” என்றாள்.
“இருவரும் படம் எடுத்துக் கொண்டோம்,சீஃப். அவனுடைய யூட்யூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்ய விருப்பம் தெரிவித்து என் கைபேசிக்குச் செய்தி வழியே ஒரு சுட்டி அனுப்பச் சொன்னேன்.”
“ஆமாம், ரொம்ப முக்கியம்” என்ற ஜினாவின் குரலில் கிண்டல் தொனித்தது.
அதைப் பொருட்படுத்தாது, “இந்தக் கேஸில் இப்பொழுது உங்கள் முடிவு என்ன சீஃப்?” என்றான் ரெக்ஸ்.
“அந்த ஆள் சரியில்லை.”
“யார்?”
“அதுதான் அந்த ஜோ. என்னவோ ஒரு போலித்தன்மை அவனிடம் இருக்கிறது. அவன் அந்தச் சிறுமியிடம் பழகுவதில் எனக்கு விருப்பம் இல்லை, அவன் பார்வையோ, தொடுதலோ ஏதோ ஒன்று சரியில்லை.”
“இது அந்த மகளின் அம்மாவிற்குத் தெரியாதா? டெய்ஸிக்கு இல்லாத அக்கறையா உங்களுக்கு?”
“அவளுக்குக் காதல் கண்ணை மறைக்கிறது. அவனைப் பற்றி மேலும் தகவல் சேகரி ரெக்ஸ். ஏதேனும் குற்றப் பின்னணி இருக்கிறதா? சிறார்களுடன் பழகுவதில் தவறு செய்தவனா? அவன் மனைவி எப்படி இறந்தாள்? நிறையப் பணம் இன்ஷுர் செய்திருந்தானா அவள் மீது? அவனிடம் ஏதோ தப்பு காரணம் இல்லாமல் ஸ்மித் பெற்றோர் இந்தத் திருமண ஏற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். ஜோவிற்கு இந்தச் சிறுமி மேல் ஒரு கண் இருந்திருக்க வேண்டும். அது அந்தத் தாத்தா பாட்டிக்கும் புரிந்திருக்க வேண்டும். பேத்தியைக் காப்பாற்றும் எண்ணத்தில் ஜோவை எதிர்த்திருக்கலாம்.”
“வாவ், இது போலீஸ் மூளையா? இல்லை விமன்ஸ் இன்டியூஷனா?”
“பெரும்பாலும் நீ இரண்டாவதாகச் சொல்வது.”
அடுத்த நாள் ஜினா கதவைத் தள்ளித் திறந்து கொண்டு அலுவலகத்தில் நுழைந்த பொழுது மார்ட்டின் எதிர்ப்பட்டான்.
“என்ன சீஃப், சிட்டி ஹாலில் சந்திப்பு எப்படி? நகராட்சித் தலைவர் என்ன சொல்கிறார்?”
“தி பெஸ்ட் லுக்கிங் அட்டர்னி ஜெனெரல் இன் தி கன்ட்ரி, கமலா ஹாரிஸ் நகரக் காவல்துறையினரின் ஒத்துழைப்பு வேண்டி நகர மேயர்களிடம் பேசலாம் என எதிர்பார்க்கிறார். அதற்காக நம் துறை பற்றிச் சிறிது தகவல் சேகரித்தார்” என்று சொல்லிக் கண்ணடித்தாள்.
மார்ட்டின் கவலையுடன், “சொன்னால் கோவிக்காதீங்க சீஃப், கொஞ்ச நாள் பழக்கத்திலேயே ரெக்ஸின் தாக்கம் உங்கள் பேச்சில் தெரிகிறது. அட்டர்னி ஜெனெரல் ஹாரிஸ் பற்றி நீங்களும் இது போலப் பேசி வெள்ளை மாளிகை போல வம்பில் மாட்டிக் கொள்வீர்கள் போலிருக்கிறது.”
“ஆமாம், உண்மைதான், ரெக்ஸின் தாக்கம் பற்றி நீ சொல்வது கவலையைத் தருகிறது. உன் அக்கறைக்கு நன்றி. நம் துறையின் சென்ற மீட்டிங் மினிட்ஸ் கோப்பை ஒரு பிரதி எடுத்துக் கொண்டு என் அறைக்கு வா. நகரத் தலைவருக்கு நம் நடவடிக்கைகளைப் பற்றி ஒரு “டாக்கிங் பாய்ண்ட்ஸ் மெமோ’ கொடுத்தனுப்பினால் அவருக்கு உதவியாக இருக்கும்.”
“அதை அவர் எடிட் செய்தால் என்ன செய்வது?” என்று மார்ட்டின் சிரித்தான்.
“ஏதேது!!! நீயும் பேசியே வம்பை விலைக்கு வாங்குவாய் போல இருக்கிறது. முதலில் இந்த ரெக்ஸை இங்கிருந்து துரத்திவிட வேண்டும், இல்லாவிட்டால் எல்லோருமே அவனைப் போல மாறிவிடுவோம்.”
ஜினா தனது அறையை அடையும் முன் ரெக்ஸின் மேஜையில் எட்டிப் பார்த்தாள். அவன் யூடியூப் காணொளியில் மூழ்கி இருந்தான். அவனது அரை டிக்கட் நண்பன் ஸ்கேட் வித்தை காண்பிக்கும் படத்தினில் ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டும் மீண்டும் மீண்டும் பார்த்தான்.
“ஹேய், ரெக்ஸ் வேலை நேரத்தில் காணொளியா பார்க்கிறாய்? இரு உன் பெர்ஃபார்மன்ஸ் ரீவ்வியூவில் தீட்டி விடுகிறேன் உன்னை.”
“வாங்க சீஃப், அது நடக்கப் போவதில்லை, பதவி உயர்வுக்குத்தான் பரிந்துரை செய்வீர்கள் நான் கண்டுபிடித்ததைச் சொன்னால், இங்கே வந்து பாருங்கள், என்ன தெரிகிறது? படத்தில் பையனைப் பார்க்காதீர்கள் அவன் பின்னால் என்ன நடக்கிறது பாருங்கள்.”
காணொளியை ரெக்ஸ் ஓடவிட்டான். அதில் அவனது பைண்ட் சைஸ் நண்பன், மரணமடைந்த ஸ்மித் வீட்டருகே வசிப்பவன், ஸ்கேட் போர்டில் வித்தை காண்பித்தான், அவனுடன் மேலும் சில சிறுவர்கள் இருந்தார்கள். பின்புறம் உள்ள வீடுகளுக்கிடையே இருந்த ஒரு சந்தில் இருந்து ஒரு மனிதன் வந்தான். கையில் இருந்த சோடாக் கேனில் இருந்து கொஞ்சம் குடித்தான். பிறகு கால்சராயின் பையைத் துழாவி சாவியை எடுத்து ஒரு வேனின் கதவைத் திறந்து அதனை ஓட்ட ஆரம்பித்தான். அந்த வண்டி ஸ்கேட் செய்யும் சிறுவர்களை நோக்கி அவர்கள் இருக்கும் திசையில் வந்தது. விளையாடும் சிறுவர்களுக்காக மிக மெதுவாக ஓட்டியதில் வேனின் பதிவு எண்ணும், அது சாக்ரமெண்ட்டோவைச் சேர்ந்த ஒரு ப்ளம்பிங் நிறுவனத்தின் வேன் என்பது அதன் ஒரு பக்கத்தில் எழுதியிருந்த விளம்பர வாக்கியங்களில் இருந்தும், ஓட்டுவது ஜோ எனவும் தெளிவாகத் தெரிந்தது.
ஜினாவின் கண்களில் ஓடிய மின்னல் போன்ற மகிழ்ச்சியைப் பார்த்துச் சிரித்த ரெக்ஸ், “ஆமாம் சீஃப், நீங்கள் நினைப்பது சரி. என் பைண்ட் சைஸ் பார்ட்னரின் நண்பன் எடுத்த காணொளி இது. அவர்களுடன் பேசித் தேதியைச் சரி பார்த்து உறுதி செய்துவிட்டேன். ஸ்மித் மரணநாளில் எடுத்திருக்கிறார்கள். அந்தப் பாவி ஸ்மித் தெருவில் வண்டியை நிறுத்தி யார் கவனத்தையும் கவருவதைத் தவிர்த்திருக்கிறான். இந்தப் பையனின் தெருவில் நிறுத்திவிட்டு இடைப்பட்ட சந்தில் நுழைந்து காரைக் கழுவி கொண்டிருந்த ஸ்மித்துடன் அவர் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறான். கணவன் மனைவி இருவருக்கும் சந்தேகம் வராமல் அவர்களை வேலை தீர்த்திருக்கிறான். பிறகு வீட்டை அதிகக் குளிரூட்டிவிட்டு, கதவைச் சார்த்திவிட்டு மீண்டும் சந்து வழியாகவே வந்து தனது நிறுவன வேனில் ஏறிச் சாக்ரமெண்ட்டோவிற்குப் பறந்துவிட்டிருக்கிறான். காணொளி எடுத்த நேரம் துல்லியமாக அதில் பதிவாகிவிட்டது. அவனது கைபேசி நிறுவனத்திடம் பேசி அவனது ஃபோனின் ஜிபிஎஸ் ரெகார்ட் வாங்கி ஒத்துப் பார்த்துவிட்டேன். இரண்டும் கச்சிதமாகப் பொருந்துகிறது.மச்சி வசமாக மாட்டிக்கொண்டான்.”
“குட் பாய், சூப்பர் வர்க் என் அறைக்கு வா, நீதிபதியிடம் பேசி அரெஸ்ட் வாரண்ட் வாங்குவதைப் பற்றிய அடுத்த நடவடிக்கையினை விவாதிப்போம். கைது செய்து, தனி அறையில் போட்டு விசாரணை என்ற பெயரில் நெருக்கடி கொடுத்தால் கக்கிவிடுவான் உண்மையை, லை டிடெக்டர் வழியாகவும் உறுதி செய்து விடலாம்.”
தனது அறையில் நுழைந்த ஜினாவிற்குப் பசித்தது. உணவு நேரம் கடந்துவிட்டது நினைவு வந்தது. வயிற்றைத் தடவி கொண்டே தனது உணவுப் பையைக் கவிழ்த்து மேஜை மேல் கொட்டி அதிலிருந்த ஒரு வாழைப் பழத்தை எடுத்துக் கொண்டாள். தனது நீலக் கால்சராயை முட்டிக்கு மேல் சிறிது இழுத்துவிட்டு மேஜை நுனியில் தொத்தியவாறு உட்கார்ந்தாள். அறைக் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்த ரெக்ஸ், தகவல்கள் சேகரித்து அந்தத் தாள்களை ஒரு கோப்பில் அடுக்கி அவளது பார்வைக்குக் காண்பித்தான்.
அவைகளைப் புரட்டிப் பார்த்தவாறே, “இது போதும் என நினைக்கிறேன் ரெக்ஸ். உன் திறமையை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. மேற்கொண்டு நீயே இந்தக் கேஸை முன்நடத்திச் செல், உனக்குப் பதவி உயர்வு நிச்சயம்” என்றாள் ஜினா புன்னகையுடன்,
“நன்றி சீஃப்,” என்று கதவை நோக்கி நடந்த ரெக்ஸ், “பார்ட்னர் மார்ட்டின் உங்களைப் பற்றிச் சொல்வது சரிதான்” என்றான்.
அப்பொழுது கதவைத் திறந்து ஒரு கோப்புடன் உள்ளே நுழைந்த மார்ட்டின், “நான் என்ன சொன்னேன் சீஃப்பைப் பற்றி?” என்றான்.
வாழைப் பழத்தை சாப்பிட்டுக் கொண்டே ஜினாவும், “வாஷ் ஷி ஷஷ் அபௌஷ் மீ?” என்றாள்.
“பழகுவதற்குத்தான் நீங்கள் வெளித்தோற்றத்தில் க்ருயெல்லா போல இருப்பீர்கள், ஆனால் உங்கள் மனம் அத்தனையும் தங்கமானது என்றான்.”
இதை எதிர்பார்க்காத மார்ட்டினின் முகத்திலும் ஜினாவின் முகத்திலும் அதிர்ச்சி தெரிந்தது. ஜினா மெல்லுவதை மறந்தாள். ஆனால் மார்ட்டின் உடனே சுதாரித்துக் கொண்டு “சீஃப், இதோ நீங்கள் கேட்ட கோப்பு” என்று ஜினாவின் மேஜையில் கோப்பைப் போட்டுவிட்டு, “அடேய் பாவி,நாசமாப் போறவனே, உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று திட்டியவாறு வெளியேறும் ரெக்ஸை நோக்கி ஓடினான்.
கோபத்துடன் சுற்றும் முற்றும் பார்த்த ஜினா கைக்கு வாகாக எதுவும் கிடைக்காததால் சாப்பிட்டுக் கொண்டிருந்த வாழைப் பழத்தையே அவர்களை நோக்கி விட்டெறிந்தாள். அதற்குள் அவர்கள் இருவரும் வெளியேறிவிட பழம் கதவில் பட்டுத் தரையில் விழுந்தது.
– அனிச்ச மலர்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: அக்டோபர் 2013, கௌதம் பதிப்பகம், சென்னை.
நன்றி: http://www.FreeTamilEbooks.com