சோம் தத்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: December 15, 2016
பார்வையிட்டோர்: 17,326 
 
 

“அமி சோம் தத்… அமி நிர்தோசா .. அமி நிர்தோசா ..” என்று சப்தமாக குரல் வரவே சட்டென்று கண் விழித்தாள் ராகினி.

இருட்டுக்குக் கண் பழகி, சுற்றிலும் பார்த்தாள். “அமி நிர்தோசா .. அமி நிர்தோசா ..” என்று பக்கத்தில் இருந்து குரல் வந்தது.

அவள் அருகில் படுத்திருந்த வெங்கட் தான் பேசினான் என்பது புரிந்தது.

“வெங்கட்..வெங்கட்…..” என்று அவனை உலுக்கினாள்.

“என்ன.. என்னாச்சு ராக்ஸ்?” என்று கேட்டபடியே எழுந்து உட்கார்ந்தான்.

“You were talking in your sleep… in Bengali!” என்று சற்று பயத்துடன் சொன்னாள் ராக்ஸ் என்கிற ராகினி.

” அப்படியா? என்ன சொன்னேன்?”

“அமி சோம் தத்… அமி நிர்தோசா .. அமி நிர்தோசா ..” என்று திரும்பத் திரும்பச் சொன்னாய். யார் அந்த சோம் தத்?” என்று ராகினி சொன்னதைக் கேட்ட வெங்கட் முகம் பயத்தில் வெளிறியது.

“என்ன ஆச்சு வெங்கட்? யாரு அந்த சோம் தத்? அந்த மாதிரி உங்க பிரெண்ட்ஸ்ல யாரையும் எனக்குத் தெரியாதே? என்ன விஷயம் சொல்லுங்க” – ராகினி.

“ப்ளீஸ் கெட் மீ அ கப் ஆஃப் டீ! அப்பத் தான் என்னால மேற்கொண்டு பேச முடியும்” என்று வெங்கட் சொல்லவும், ராகினி எழுந்து சென்றாள். ஒரு ஐந்து நிமிடத்தில் இரண்டு கப் டீ எடுத்து வந்து, ஒன்றை அவனிடம் தந்து இன்னொன்றைத் தான் எடுத்துக் கொண்டு பெட்டில் அமர்ந்தாள்.

“கம் ஆன்! டெல் மீ!”

சூடான டீயை ஒரு மிடறு அருந்திய வெங்கட் சற்று புத்துணர்ச்சியுடன் பேச ஆரம்பித்தான்.

“ராக்ஸ்! நானும் ராமும் சேர்ந்து விகடன் பத்திரகை கதைப் போட்டிக்கு கதை எழுதறோம்ன்னு உனக்குத் தெரியுமில்லையா?”

“எஸ் ஐ நோ, பட் அதுக்கும் இந்த சோம் தத்துக்கும் என்ன ரிலேஷன்?”

“ சொல்றேன். என்ன கதை எழுதலாம்னு நானும் ராமும் ஒரு ரெண்டு மூணு நாள் சந்திச்சுப் பேசினோம். என்னென்னவோ தீம்ஸ் அலசினோம். எதுவும் சரிப்பட்டு வரல. அப்பத்தான் எனக்கு ஒரு ஐடியா தோணிச்சு. ஏதாவது உண்மைச் சம்பவத்தைப் பேஸ் பண்ணி கொஞ்சம் அங்கயிங்க மாத்தி ஒரு கதை எழுதினா என்னன்னு? யோசிக்க யோசிக்க அதுதான் ரொம்ப சரின்னும் தோணிச்சு. ராம் கிட்ட சொன்னேன்” என்று வெங்கட் நிறுத்தினான்.

“அதுக்கு ராம் என்ன சொன்னார்?”

“ ராம் மொதல்ல தயங்கினான். ஏதாவது லீகல் ப்ராப்ளம்ஸ் வரும்னு. நான் சொன்னேன் அந்த மாதிரி ப்ராப்ளம் வராத மாதிரி கதையைக் கொஞ்சம் மாற்றி எழுதி விடலாம். யாரும் ஒன்றும் கேட்க முடியாதுன்னு. கொஞ்ச நேரம் யோசிச்ச ராமுக்கும் அது தான் சரின்னு பட்டுது.

அப்புறம் ரெண்டும் பேரும் திரும்பவும் எங்களுக்குத் தெரிஞ்ச சம்பவங்கள எல்லாம் அலச ஆரம்பிச்சோம். ஒண்ணும் ஓகே ஆகல. அப்பத் தான் ராம் இந்த சோம் தத் கதையச் சொன்னான்.

ஒனக்கேத் தெரியும், ராம் சின்ன வயசுல பெங்கால்ல மிட்னாபூர்ங்கற எடத்துல பல வருஷம் இருந்தான். அவங்க அப்பா அங்க வேலையா இருந்தார். அப்ப சின்ன வயசுல கேள்விப்பட்ட ஒரு சம்பவத்தக் கதையா எழுதலாம்ன்னு சொன்னான். அது நடந்ததோ பெங்கால்ல. இங்க யாரும் அத நம்ம கதையோட லிங்க் பண்ண முடியாது. அதுனால பிரச்சனை இல்லைன்னு சொன்னான். நானும் ஓகே சொல்லவே அவன் அந்தக் கதையோட அவுட்லைன் சொன்னான்.” வெங்கட டீ குடிப்பதற்காக மீதும் சற்று அமைதியானான்.

சிறிது மௌனத்துக்குப் பிறகு தொடர்ந்தான்.

“ அது ஒரு பழிவாங்கற ரிவன்ஜ் கதை. அதுவும் ஒரு ஆவி பழி வாங்கற கதை. மிட்னாப்பூர் பக்கத்துல இருந்த கிராமங்களா இணைக்க கவர்மென்ட் ரோடுகள் போட்டுக்கொண்டிருந்த காலம் அது. ராம் அப்பா ஒரு ஸிவில் எஞ்சினியர். அந்தப் ப்ராஜக்ட்ல ஒரு முக்கிய பொறுப்பு. அந்த வேலைகள் செய்ய அங்கேயே லோக்கல்ல இருந்த ஆளுங்கள தேர்ந்தெடுத்தாங்க. அப்படி வந்தவங்கள்ல ஒருத்தன் தான் சோம் தத்.

சோம் தத், பெங்காலிகளுக்கு உரிய ஒருவித மஞ்சள் கலந்த வெள்ளை நிறம். நல்ல உயரம். அதற்குத் தகுந்த உடற்கட்டு. பார்க்கும் எவரையும் தன்பால் இழுக்கும் ஒருவித வசீகரம். அந்த வசீகரம் தான் அவனுக்கு எமனாகவும் வந்தது. அவன் அழகில் மயங்கினாள் சுமலதா.

சுமலதா அந்தப் ப்ராஜக்டில் ராம் அப்பா கீழே வேலை செய்த சந்தீப் பானர்ஜியின் மனைவி. வயது முப்பதை நெருங்கினாலும் இளமை அவளை விடமாட்டேன் என்று சண்டித்தனம் செய்யும் அழகு. வங்காளப் பெண்களுக்கே உரிய மெலிதான தேகவாகு. சங்கீதம் போன்ற குரல். அப்படிப்பட்ட அழகி ஒருத்தனிடம் மயங்கினால், அவன் கதி என்னவாகும்? அதோகதிதான்.

சோம் தத் கதியும் அதோகதியாச்சு. எந்நேரமும் அவள் நினைப்பு. ஏதாவது காரணம் கொண்டு பானர்ஜி வீட்டுக்கு போவதும் அவளைப் பார்ப்பதுமாக இருந்தான்.

காமம் ஒரு விசித்திரமான மெல்லிய நூல். அதில் கட்டுண்டவர்கள் அதை எளிதாக அறுத்துவிட முடியும். ஆனாலும் அது அறாமல் இருக்க அவர்கள் வெகு கவனமாக இருப்பார்கள். அதை ஒரு வேள்வி போலே வளர்ப்பார்கள். அது உள்ளேயே கொழுந்து விட்டு எரிந்து அவர்களை உருக்கும். அதையும் ஒரு சுகமென்றுச் சொல்லுவார்கள்.

அந்த காமநூலில் சோம் தத்தும் சுமலதாவும் கட்டுண்டார்கள். அதுவோ ஒரு சிறிய கிராமம். அதுவும் ஒரு ப்ராஜக்ட் சைட். விஷயம் சிறிது நாளில் மெலிதாக கசிந்தது. அதுவும் சந்தீப் தானே பார்த்துவிட்டான். பார்த்தவன் அதிர்ந்தும் விட்டான்.

அவர்களை அப்படியே கொன்றுவிட வேண்டும் என்றும் அவனுள்ளே ஒரு கோவம் வந்தது. ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை. ஏனென்றால் சந்தீப் இயற்கையில் ஒரு கோழை. பெயர் மானம் என்றவற்றில் எல்லாம் ரொம்ப பிடித்தம் உள்ளவன். அதனால் ராம் அப்பாவிடம் வந்தான்.
அவரிடம் எல்லாம் சொன்னான். பொறுமையாகக் கேட்ட அவர் உடனே சோம் தத்தை கண்டிக்கலாம் என்று சொன்னார். அதற்கு சந்தீப் மறுப்புத் தெரிவித்தான். அப்படிக் கண்டித்தால் அவன் அந்த விஷயத்தைப் பரப்பிவிட்டால் என்னவென்ற பயம்! தனக்குத் அந்த ப்ராஜக்டில் இருந்து இடமாற்றம் வாங்கித் தருமாறு கேட்டான். இவரும் சரியென்று சொன்னார்.

சொன்னபடியே அவனுக்காக ஹெட் ஆபீசில் பேசி வாங்கியும் தந்தார். ஆனால் நடந்து கொண்டிருந்த வேலையை சற்று முடித்துக் கொடுத்துவிட்டு ஒரு இரண்டு வாரத்தில் வந்து சேர்ந்து கொள்ள ஹெட் ஆபீசில் ஆர்டர் போட்டு விட்டார்கள்.”

ராகினி ஒரு வித மயக்கத்தில் இருந்தாள். “ என்னவாச்சு ராக்ஸ்? என்ன ஒரே சைலன்ட்?” என்றான் வெங்கட்.

“ எனக்குப் புரிஞ்சு போச்சு வெங்கட். சோம் தத் அந்தப் பொண்ண ஏதோ செஞ்சிட்டான். சரிதானே?”

“ சரிதான். ஆனால் என்ன செஞ்சிருப்பான்? Can you guess?”

“அவளோட ஓடிப் போயிருப்பான”

“இல்ல. அவளக் கொலை செஞ்சுட்டான்” என்ற வெங்கட்டை ராக்ஸ் பீதியுடன் பார்த்தாள்.

“ ஆமாம் ராக்ஸ்! சோம் தத் சுமலதாவைக் கொலை செஞ்சுட்டான். தனக்குக் கிடைக்காத அவள் யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று கொலை செஞ்சுட்டான். அதற்கு சாட்சி அங்க வேல செஞ்ச ராம் கிஷோர். சந்தீப் நிலை குலைந்து போய்விட்டான். போலீஸ் வந்தது. விசாரணை நடத்தி சோம் தத்தை அரஸ்ட் செஞ்சு கூட்டிகிட்டு போயி ஜெயில்ல போட்டாங்க. கோர்ட் கேஸு எல்லாம் நடந்து அவனுக்குத் தூக்குத் தண்டனை கொடுத்துட்டாங்க.

“இவனைக் கொல்றதுனால என் சுமா திரும்பவும் வருவாளா?” என்று சந்தீப் புலம்பித் தள்ளிவிட்டான்.

ஒரு புதன்கிழமைக் காலை சோம் தத் தூக்கிலிடப்பட்டான். “கடைசியாக ப்ரார்த்தனை பண்ணிக்கோ” என்று அவனிடம் சொல்லப்பட்ட போது அவன் சொன்னது தான் “ அமி சோம் தத்! அமி நிர்தோசா ! அமி நிர்தோசா!”

அதற்கப்புறம் ராம் அப்பா கல்கத்தா மாற்றிக்கொண்டு வந்துவிட்டார். அப்புறம் உடல் நிலை சரியில்லாமல் போக ரிஸைன் பண்ணிவிட்டு சென்னையோட வந்துட்டார். கொஞ்ச நாள் கழிச்சு யார் மூலமாகவோ அவருக்கு ஒரு ந்யூஸ் கெடச்சுது. ராம் கிஷோர் மர்மமான முறைல ஒரு மரத்துல தூக்குப் போட்டுக்கிட்டு செத்துட்டானாம். அவன் உடலை இறக்கிக் கொண்டு போனபோது அங்கே ஒரு மோதிரம் கிடைத்ததாம். அது சோம் தத் மோதிரம் என்று தெரிந்தவர்கள் சொன்னார்களாம்.

இந்தச் செய்தியைக் கேட்ட ராம் அப்பா ரொம்பவே கலங்கிப் போயிட்டாராம். அவன் கொடுத்தப் பொய் சாட்சியை நம்பி மோசம் போயிட்டோமே என்று கலங்கி கலங்கி ஒரு நாள் அட்டாக்கில் போய்விட்டாராம். இதுதான் சோம் தத் பழிவாங்கியக் கதை.” என்று நிறுத்தினான் வெங்கட்.

“இந்தக் கதையைத் தான் நாங்கள் எழுதுவதாக முடிவு செஞ்சிருக்கோம். ஆனா நான் ஏன் இந்த மாதிரி தூக்கத்துல ஒளறினேன்னு எனக்குத் தெரியல!” என்று சொன்னான்.

“ ராம் அப்பா சொன்ன விஷயம் ஒங்கள பாதிச்சிரிச்சு போல இருக்கு. பேசாம தூங்குங்க. காலைல பாத்துக்கலாம்” என்றால் ராகினி.

“ இல்லை ராக்ஸ்! எனக்கு ராம் கிட்ட பேசணும் போல இருக்கு. அந்தப் செல்லைக் கொடு”
“சும்மா இருங்க. ராத்திரில போன் செஞ்சா அவர் பயந்துக்கப் போறார். காலைல பாத்துக்கலாம்”

ஒருவித தயக்கத்துடன் சரியென்று சொன்ன வெங்கட் சிறிது நேரத்தில் தூங்கிப் போனான்.
காலை ஆறு மணிக்கு செல் அலறியது. எடுத்துப் பார்த்தால் ராம்! சரி அவனே செஞ்சுட்டான் நல்லது தான் என்று நினைத்து போனை எடுத்து “ஹல்லோ ராம் ” என்றான்.

“அண்ணா நான் மாலதி. மிஸஸ் ராம். நீங்க உடனே இங்க வாங்களேன்” என்று அழுதபடியே பேசினாள்.

வெங்கட் உடல் விதிர்விதுத்தது. ராகினியையும் அழைத்துக்கொண்டு காரில் ராம் வீட்டுக்குச் சென்றான். அவன் வீட்டு வாசலில் போலீஸ் ஜீப்! குழம்பிய படியே உள்ளே சென்றவனை மாலதி எதிர்கொண்டாள்.

“அண்ணா நான் மோசம் போயிட்டேன்” என்று பெருங்குரலில் அழுதாள். பின்னர் அவர்களை அழைத்துக்கொண்டு ராமின் கம்ப்யூட்டர் ரூமுக்குப் போனாள்.

அங்கே ராம் மின்விசிறியில் தூக்கு மாட்டித் தொங்கிக் கொண்டு இருந்தான். அவன் கம்ப்யூட்டர் திரையில் ராம் எழுதி வைத்த இவர்கள் கதை வர்ட் ஃபைலில் இருந்தது. தமிழில் டைப் செய்து வைத்த வரிகளின் கீழே பெங்காலியில் “আমি নির্দোষ.. আমি নির্দোষ..” என்று எழுதியிருந்தது.

அருகில் ஒரு பழைய டைரி. அதில் 15.11.1970 என்று போட்டு சில செலவினங்கள் போல எழுதியிருந்தது. அதில் ஒரு என்ட்ரி வெங்கட் கவனத்தைக் கவர்ந்தது. “ராம் கிஷோர் – ரூ.2000/- என்று எழுதியிருந்தது. கீழே “கல்யாணராமன்” என்று ராமின் அப்பா கையெழுத்திட்டிருந்தார். வெங்கட் உறைந்தான்.

அருகில் நின்று அழுது கொண்டிருந்த மாலதியைப் பார்த்தான். அவள் முகத்தில் ஒரு சவக்களை தெரிவது போலத் தோன்றியது. பிரமையாக இருக்குமோ?

– பெப்ரவரி 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *