அய்யய்யோ! எஞ்செல்லம்! நீ எங்கடா கண்ணே கீற?. இந்தப் பாவிக்கு தெரியலியே கண்ணூ! டேய் சம்முவம்! ராசா!.”
“தே! தூரப் போம்மா. ச்சூ! உள்ள வராதன்னு சொல்றேன்..இன்ஸ்பெக்டர் ஐயா பார்த்தாரு அவ்வளவுதான். தூரப் போ.”
“ஐயா…ஐயா! எம்புள்ள மொவத்த பார்க்கணும்யா. எப்பிடி சோர்ந்து போய் கெடக்கிறானோ?, தெரியலியே. ஒரு வேளை கூட பசி தாங்கமாட்டானே. கூழுன்னாலும் வயிறு முட்ட குடிக்கணும்யா அவனுக்கு. இந்த நாலுநாளா இன்னா சாப்டானோ?. அய்யோ டேய் சம்முவம்! இந்தக் கோலத்தில உன்னைப் பார்க்கவா தவமா தவமிருந்து பெத்தேன்?.”—அவளுக்கு அழுகை வெடித்துக் கிளம்பியது.
“ஏய் சனியனே! உள்ள இன்ஸ்பெக்டர் ஐயா இருக்காரும்மே. நீ இங்க நிக்கிறதுன்னா வாயைப் பொத்து. இல்லே கேட்டுக்கு அப்பால இழுத்தும் போய் தள்ளிடுவேன்.”
“சரீங்க சாமி!”—-அவள் வாயைப் பொத்திக் கொண்டு அடக்கவொடுக்கமாய் நின்றாள்.
“ஆமா உன் புள்ள பேரு என்னா?.”
“சம்முவம்ய்யா சம்முவம்.நெடுநெடுன்னு உசரமா ராசா மாதிரி இருப்பானே. அப்படியே எங்க அப்பாரு சாடை. பாத்தா கூலிக்காரன் வூட்டுப் புள்ளைன்னு யாராலும் சொல்ல முடியாதுய்யா. அம்மாம் அயவு.”
“சம்முவமா?….சம்முவம்..ஓ! ஷண்முகம். காலேஜ் படிக்கிற பையன். செக்ஷன் 302- எப்பா கிட்டவே நெருங்க முடியாது. பெரிய கேஸு. சரி..சரி தூர வா, இதைத் தாண்டி போவக்கூடாது. இங்கிருந்தே பாரு. அதோ எட்டாம் நெம்பர் செல்லுல முதுவ காட்டிக்கிட்டு உட்கார்ந்திருக்கான் பாரு. அதான் ஷண்முகம்.”
அவள் கண்களை இடுக்கிக் கொண்டு பார்த்தாள். துக்கம் தாளாமல் அங்கேயே தப்தப் பென்று மார்பில் அறைந்துக் கொண்டு அழாஅரம்பித்தாள்.
“அட எஞ்செல்லம்! என் ராசா! எந்த பாவி கண்ணு பட்டுச்சோ?. நம்ம வூட்டுக்கு இப்பிடி ஒரு இடி வந்து எறங்கிடுச்சேப்பா.!. எப்பா நீ பெரிய படிப்பு படிச்சிப்புட்டு பெரிய ஆபீஸரா வரப் போற, எங்க கஷ்டங்களையெல்லாம் புடுங்கிக்கப் போறன்னு நானும் உங்கப்பனும் அங்க கனா கண்டுக்கிட்டு கெடக்கிறோமே. நீ இந்தக் கெதிக்கு ஆளாயிட்டியே எஞ்சாமீ!. இந்த வேலைய நீ செய்யலாமா?. தர்மதொரை அவருக்குப் புள்ளையா பொறந்துட்டு, நீ இப்பிடி செஞ்சது தகுமா?. அக்கா தங்கச்சிங்களோட பொறக்கலியா நீ?. ரெண்டு தங்கச்சிங்க வூட்ல வெலை போவாம கெடக்குதுங்களே. நெருப்பை மடியில கட்டிங்கெடக்கிறோமே. நீ சம்பாரிச்சி அதுங்களை ஜாம்ஜாம்னு கரை சேர்க்கப் போறன்னு நம்பிக்கிணு கெடக்கிறோமே. ஊர்ல மூச்சுக்குமூச்சு உம்பெருமையத்தானே சொல்லிக்கிட்டு திரியுது உங்கப்பன். எல்லாம் பொய்யாப் போச்சே.”-
“ஏய்! சும்மாயிருக்கமாட்டே?.ஆமா உம்புள்ள என்னா படிப்பு படிச்சான்?.”
“இன்சினியர் சாமீ. ஏட்டய்யா! எங்க கும்பல்ல எவன் இப்பிடி டவுனுக்கு வந்து இத்தேப் பெரிய படிப்பு படிச்சான்?. கஞ்சிக்கு செத்த சனம்யா.. எல்லாம் கூலிவேலை. பொழுது சாஞ்சா சாராயத்த ஏத்திக்குவானுங்க. வெறவு பொளப்பானுங்க,.இதான் எங்க பொயப்பு. ஆனா என்வூட்டு ஆம்பள சத்தியவான்யா.சாராயத்த மோந்துகூட பார்க்காது தெரியுமா?. எம்புள்ள மட்டும் கம்மியா இன்னா?.இஸுக்கோல்லியே ஃபர்ஸ்ட் மார்க்கு எடுத்தானாமில்ல?. வாத்திமார்லாம் சொல்லவுட்டுத்தானே ஆவறது ஆவட்டும்னு இவன காலேஜில சேர்த்தாங்க. ஐயோ! இப்ப எல்லாம் போச்சே.டேய்! அய்யா!
சம்முவம்! இப்பிடி திரும்புடா. டேய் கண்ணே! உனுக்கு ஞாபகம் கீதா? சின்ன பெர்தனக்காரனும், அவன் கூட்டாளிங்களும் சேர்ந்துக்கிணு,ஹும்! இதெல்லாம் படிச்சிப்புட்டு மணியம் பாக்கப் போவுதாம்யான்னு உன்னைப் பத்தி குசும்பு பேசி சிரிச்சானுங்களே. நீ குதிகுதின்னு குதிச்சியே. நாக்கைப் புடுங்கிக்கிற மாரி ரெண்டு வார்த்தை கேக்காம வுட்றதில்லன்னு பறந்தியே, அப்ப நானு இன்னா சொன்னேண்டா கண்ணூ?. இந்த மனுஷாளுக்கு சர்த்தாய் படிச்சிப்புட்டு பெரிய ஆளாய் வந்து காட்றா., கையால அடிக்கிறவங்கள சொல்லால அடிக்கணும், சொல்லால அடிக்கிறவங்கள நம்ம செய்யறத வெச்சி அடிக்கணும்னு படிச்சிபடிச்சி சொன்னேனே. இப்ப எங்கியோ போயிட்டியே. ஐயா…ஐயா…! நீங்களாவது அவனைக் கூப்பிடுங்க. எம்பக்கம் திரும்ப மாட்டேன்றானே.. அவனுக்கு எம்மேல கோவம்யா. அதான். பின்னே? எங்கொயந்தைய ஜெயில்ல போட்டு நாலு நாளாவுது., பெத்தவ நான் இன்னிக்குத்தானே வந்துகீறேன்?. ஆனா ஏட்டையா! செத்தாலும் இவன் மொவத்தில முழிக்கக் கூடாதுன்னு சர்த்தா இருந்தேன்யா. இவங்கப்பன் எம்மாம் சொல்லுச்சி, எனுக்கு மனசு ஒம்பலய்யா. அவனை பெத்த இந்த வயித்தைத்தான் குத்திக்கணும். பேப்பர்ல இவன் போட்டோவைப் போட்டு, கொலைகாரன்னு போட்டிருந்துச்சி.. என் ஜென்மமே சிவுங்கிப் போச்சய்யா.. இதுக்கா தவமா தவமிருந்து பெத்தேன்?..”—–சொல்லும்போதே அவளுக்கு அழுகை பீறிடுகிறது.
“ ஐயா!…ஏட்டய்யா! எட்டு வருசமா எங்களுக்கு கொயந்தை இல்லை., எத்தினி மாயமந்திரம்?,எத்தினி பச்சிலை வைத்தியம்?,எம் மாமியா ஆடுதீண்டாபாளை தழைய மாசாமாசம் அரைச்சீ அரைச்சி குடுப்பா. கொமட்டிகொமட்டி வாந்தியா வரும் அன்னிக்கெல்லாம் ஒரு பருக்கை சோறு உள்ள எறங்காது.. விரிஞ்சிபுரம் கோவில்ல மாரிமாசம் (மார்கழி மாதம்) பனியில நடுராத்திரிக்கு தலைக்கு பச்சைத்தண்ணி ஊத்திக்கிணு, வெடவெடன்னு குளிர்ல, புள்ள வரங் கேட்டு ஈரத்துணியோட தரையில உருண்டுங் கெடந்தேன்ய்யா. கைய பின்னால் கட்டிக்கிணு மண்சோறு துன்னென். அப்பிடி வரங்கேட்டு பொறந்த புள்ளையா இவன்..”—-கொஞ்ச நேரம் முந்தானையால் வாயைப் பொத்திக் கொண்டு அழுதாள்.
”எம்மாங் கஸ்டத்தில பெத்தவங்க நம்மள படிக்க வெக்கறாங்க?. குந்த ஒயுங்கா ஒரு குடிச கீதா? அப்பன்,ஆத்தா வேலைக்கு போனாத்தானே சோறு, இல்லேன்னா பஸ்தண்ணி குடிச்சிட்டுத்தான படுத்துக்கிறோம். எத்தியும் யோசிக்காம, பொறுக்கிமாதிரி பொட்டப் பசங்கள் கிண்டலு பண்ணாணாமே, கைய புடிச்சி இஸ்தானாமே, ஒரு பொண்ண ஓடஓட தொரத்தினானாமே. ஐயோ! எம்புள்ளையா அப்பிடிப்பட்ட கேடுகெட்டவன்.?. அந்த பொண்ணு பயந்துக்கிணு ஓட்றப்போ பஸ்ல மாட்டிக்கிணு செத்துப் போச்சாமே. ஐயய்யோ! கேக்கறப்பவே என் அங்கமெல்லாம் பதறுதே, அவள பெத்த வயிறு எப்பிடி துடிக்கும்?.அவுங்க சாபம் வுட்டா நாங்க தாங்க மாட்டோம்யா. வாணாம். இந்தப் புள்ளய நான் பெக்கல. அது எம்புள்ள இல்லை. ஆமா நான் செத்தாக் கூட என்னை அவன் தொடக் கூடாது. நானு புள்ள பெறாத கொட்டு.ன்னு நெனச்சிக்கிறேன்.. அடிப்பாவி! நாமளும் கைவுட்டுட்டா அப்பறம் அவனுக்கு ஆருடீ ஆதரவு?ன்னு திட்டிப்பிட்டு என் வூட்டு ஆம்பள ஓடியாந்தாங்க..”
”தே! தூரப்போ.! அவந்தான் உன்னை திரும்பிகூட பார்க்கமாட்டேன்றானே.ஏன் சொம்மா அழுதுக்கிட்டு நிக்கிற. போ…போ.”
“ஐயோ எஞ்செல்லம்! இந்த பாவிய மன்னிச்சிக்கடா கண்ணூ!. அப்பறந்தான் இந்த புத்தி கெட்டவளுக்கு உம் மனசு தெரிஞ்சிதுப்பா. பெத்தவளுக்கு புள்ள மனசு தெரிய வாணாம்?.இந்த துப்பு கெட்டவளுக்கு தெரியலியே ராசா. எப்பா! அம்மா மொவத்தில எப்பிடி முயிப்பேன்னு தலையில அடிச்சிக்கிணு அப்பிடி அயுதியாமே. அதான் கண்ணூ ஓடியாந்துட்டேன். டேய்! ஐயா பெரியவனே! எயுந்து கதவோரம் வாய்யா! திரும்பி ஒருக்கா என்னை பாரு ராசா!
சம்முவம்!….சம்முவம்…!.”—–அழுதபடி மெதுவாக சற்று அருகில் நெருங்கியவளை கான்ஸ்டபிள் ஓடி வந்து விரட்டினார்.. அவளுடைய மவன் வீம்பாய் திரும்பிப் பார்க்காமல் சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்துக் கொண்டிருந்தான்.
“தோம்மா! உன்னை உள்ள விட்டதே தப்பு. இது கொலை கேஸு, யாரும் கிட்ட போவக்கூடாதுன்னு சொல்றேன், இங்க வந்து ஒப்பாரி வெக்கிறியே. இன்னா? போம்மே அப்பால. பாவம் சும்மா போன பொண்ணை தொரத்தி தொரத்தி சாவடிச்சான் ராஸ்கல்.. தோ பாரு இனிமே கிட்ட வந்தே ஒதைதான். ஆமாம்.”
“ஐயா…ஐயா!..கொலைகாரன்னு நீங்களே பேரு வெச்சிடாதீங்கய்யா. எம்புள்ள அப்பன்கிட்ட எல்லாத்தியும் விலாவாரியா சொல்லி அழுதிருக்கான்யா. காலேஜ் பசங்க ஒண்ணுக்கொண்ணு ரவுஸு பண்றப்ப அந்தப் பொண்ணு இவனை கரப்பா..கரப்பான்னு கூப்டாளாம்யா. எம்புள்ள அத்தத்தான் ஏன்னு கேட்டுக்கீறான். அது பயந்துக்கிணு கேட்டை தாண்டி வெளியே ஓடிக்கீறா. அப்பத்தான் பஸ்ல மாட்டி……எல்லாம் ஆயிப் போச்சிய்யா.அந்தப் பொண்ணு யாரு? அதும் பேரு இன்னா?,எந்த ஊரு?, இன்னா படிக்குது?, எதுவுமே சம்முவத்துக்கு தெரியாதாம்யா.ஐயோ! அந்தப் பொண்ணு எனுக்கு இன்னா பாவம் பண்ணுச்சி? என் கண்ணெதிரிலியே பஸ்ல மாட்டி, சக்கரத்துக்குக் கீழே நசுங்கி, நிமிசத்திலகூழாயிட்டாப்பா.என்னால மறக்க முடியலப்பா. நாந்தாம்பா கொன்னுட்டேன்..நாந்தாம்பா கொன்னுட்டேன்னு ஓன்னு அயுதானாம்யா.. அட எங்கண்ணூ! சம்முவம்! அத்த மறந்துடுப்பா. புத்தியறிஞ்சி செஞ்சா அது தப்பு. இது விதிப்பா.ஏட்டய்யா! நீங்களாவது அவனுக்குச் சொல்லுங்களேன். வெடலப் பசங்க ஒருத்தருக்கொருத்தர் ரவுஸு பண்றது ஊருல உலகத்தில நடக்கிறதுதான். கயனிகாட்ல நடவு, அறப்பும் போது வந்து பாருங்க நடக்கிற கூத்தை.. அந்தப் பொண்ணு திடுக்குணு வெளியே ஓட்னா இவன் இன்னாய்யா பண்ணுவான்?. அப்பவும் ஓடாதேன்னு கத்தி கூப்டானாம்யா. ஏட்டய்யா! அறியாத வயசு, ஏதோ செஞ்சிட்டான். இந்த பாவிக்கோசரம் மன்னிச்சி வுட்ருங்கய்யா. டேய்…டேய்! கண்ணே சம்முவம்! எழுந்து கதவுப் பக்கம் வாம்மா!.”—-இப்பவும் அவன் திரும்பவில்லை.
“யோவ்! ஒன் நாட் சிக்ஸ்! இந்த பொம்பள கிட்ட இன்னா கேப்மாரித்தனம் பார்த்தியா? புள்ளைக்கோசரம் ஒரு நிமிஷத்தில நியாயத்தைத் திருப்பிப் போட்டுட்டா பாரு. படிக்கிறவன் செய்ற வேலையா இது?.எல்லாத்தையும் செஞ்சிட்டு இப்ப அழுவுறான்னா போன உசுரு வந்துடுமா?.”—–பாரா நிக்கிற கான்ஸ்டபிள் கிட்ட ஏட்டு சொல்லிக்கிட்டிருந்தார். அந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு. இப்போது அவள் கிட்டத்தட்ட எட்டாம் நெம்பர் செல்லை நெருங்கி விட்டாள்.. கான்ஸ்டபிள் பார்த்துவிட்டு லட்டியை ஓங்கிக் கொண்டு ஓடிவர, திரும்பவும் வராண்டாவுக்கு ஓடி வந்து விட்டாள். அவசரமாக முந்தானையை அவிழ்த்து கசங்கிய ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்து பயத்துடன் நீட்டினாள்.
“ஐயா! ஒரு வாட்டி ஜெயில தெறந்து வுடு சாமீ. எம்புள்ளைக்கி எம்மாம் கோவமிருந்தாலும் நானு கிட்டக்க போயி அவனைத் தொட்டு பெரியவனே!ன்னு கூப்டா சிரிச்சிப்புடுவான்யா. இப்ப கொயந்த புத்தி கலங்கிப் போயி கிடக்கிறாப்ல படுதே. பொட்ட முண்டையாட்டம் அயுவறான்யா அதான் திரும்ப மாட்டேன்றான். எல்லாம் கொஞ்சநாயி எம்மடியில தலை வெச்சிக்கிணு படுத்தான்னா சரியாப் பூடுவான்யா. நானு உடனே வரலேன்றதுதான் அவனுக்குக் கோவம். டேய் கண்ணே! சம்முவம்! இர்றா நானு அங்க வர்றேன். மனச தளர வுட்றாதப்பா. தெகிரியத்த வுட்றக் கூடாது. ஏட்டய்யா! தெறந்து வுடுங்க.அஞ்சேஅஞ்சி நிமிசம். போனதுவந்தது தெரியாம வந்திட்றேன்..”—-கையில் ஐம்பது ரூபாய் நோட்டை. இன்னமும் நீட்டிக் கொண்டிருந்தாள்.. கான்ஸ்டபிள் அவளை அங்கியே நிற்கும்படி எச்சரித்து விட்டு உள்ளே சென்றார்.
“சார்! அந்தப் பொம்பளை கதவை திறந்து விடச் சொல்லி ஆர்ப்பாட்டம் பண்ண ஆரம்பிச்சிட்டா. அந்தோணி ஆட்டோ ரெடியா நிக்கிது.”
“உம்.ம்.ம் இப்ப டியூட்டி டாக்டர் யார்யா?”
“சொர்ணரேகாம்மா சார்! .மேடம் ரெடின்னு போன் வந்திடுச்சி சார். சீக்கிரம் முடிச்சிடலாம். பிரஸ்ஸுக்கு சொல்லிடுவோமா சார். நாம முந்திக்கிறது பெட்டர்.”
“த்தூ! வாயைப் பொத்து. நானே பெரிய டென்ஷனில் இருக்கேன். எய்ட்டீன் ஃபார்ட்டி எங்கய்யா?. மொதல்ல உங்க ரெண்டு பேரையும் கட்டிவெச்சி உதைக்கணும்டா. அவன் காலேஜ் பையன்.தடால்புடால்னு எதையாவது செஞ்சிட்ற வயசு. நாமதான் உஷாரா இருந்திருக்கணும். ராத்திரி ரெண்டுபேரும் எங்க போய் புடுங்கிக்கிணு இருந்தீங்க?. ஐயோ! என் தலை உருளப் போவுது..”
“கொஞ்சம் கண் அசந்துட்டோம்ய்யா.”
“எஸ்.பி. ஆபீஸுக்கு தகவல் போயிருக்கு, வருவான் உன் மாமன். அப்ப சொல்லு கண் அசந்துட்டோம் ஐயா, அந்த நேரத்தில பையன் மாட்டிக்கிட்டு தொங்கிட்டான். நாங்கதான் பாடிய எறக்கி சாத்தி வெச்சிருக்கோம்னு. கடவுளே! என்னென்ன நடக்கப் போவுதோ?.நடந்ததைச் சொன்னா ஒரு பய நம்புவானா?. நாமதான் அடிச்சி மாட்டிட்டோம்னு பழி வரப் போவுது. கலவரம் வரப்போவுது.. ஏய்! என் எதிரிலேயே நிக்காத, தூரப் போய்யா..”—-இன்ஸ்பெக்டருக்கு கோபத்தில் மூச்சிரைத்தது. அவள் கத்திகத்தி குரல் கம்மிப்போய்
“டேய்!..கண்ணே சம்முவம்! என் ராசா!.”—அவள் இன்னமும் கத்திக் கொண்டிருக்கிறாள். ஓடிப்போயி அவனைக் கட்டிக் கொண்டு மனபாரந்தீர அழவேண்டும் அவளுக்கு. அடுத்து இன்னும் கொஞ்ச நேரத்தில் அவள் ஆசை ஈடேறப்போகிறது.
– 09-01-2005