ராஜன் ரவியைக் கத்தியால் குத்தப் போகும் தருணத்தில் சுஜாவின் கனவு கலைந்தது.
‘அப்பப்பா! என்ன கோரம்! என்னதான் இருந்தாலும் உடன் பிறந்த தம்பியை யாராவது இப்படிக் கருணையில்லாமல் கொல்வார்களா? அப்படி என்னதான் நடந்ததோ?’ என்று வியர்வையில் குளித்திருந்த அவள் சிந்தனை ஓடியது.
கனவு சற்று விவரமாகத்தான் கண்டிருந்தாள். என்றாலும் சகோதரர்களுக்குள் என்ன பிரச்சனை என்று அவள் கனவில் வரவில்லை. அப்படியே வந்திருந்தாலும் இப்போது அவளுக்கு நினைவில்லை.
‘என்னையா ஏமாற்றப் பார்த்தாய்?’ என்று வெறித்தனமாகச் சொல்லிக்கொண்டே ராஜன் கையில் கத்தியுடன் நெருங்கியது மட்டும் புகைப்படம் போல அவள் நினைவில் பதிந்து விட்டது.
ராஜனும் ரவியும் அவள் சிநேகிதி ரமாவுடைய கணவனும் மைத்துனனும். ரவி இளையவன். அவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை.
நல்ல குடும்பம். சகோதரர்கள் இருவரும் நல்ல வேலையில் இருந்தார்கள். சொந்த வீடு. அடையாறில். அந்தக் காலத்திலேயே அவர்கள் அப்பா சுலப தவணையில் வாங்கிக் கட்டிய வீடு. இன்றைக்கு பல கோடி பெறும். ஆனால் ராஜன் வேலை மகேந்திரா சிட்டியில் இருந்ததால் இருவரும் தாம்பரம் வாசம். ராஜன் மனைவி ரமாவும் டவுனில் வேலையாய் இருந்தாள். மின்சார வண்டியில் போய் வருவாள். அப்படித் தான் சுஜாவைப் பழக்கம்.
கனவு கலைந்ததும் எழுந்து போய் முகம் கழுவி, வாய் கொப்பளித்து, சிறிது குளிர்ந்த நீர் அருந்தினாள். மீண்டும் தூங்க முயற்சி செய்தாள். வீண் முயற்சி. தூக்கம் வரவில்லை. மணியைப் பார்த்தாள். மணி காலை நாலு! ‘ஐயோ! அதிகாலை கனவு பலிக்குமே!’ என்று ஒரு கணம் அவள் உடல் சிலிர்த்தது.
பின்னர் சிறிது நேரம் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தாள். அப்புறம் எழுந்து சென்று தன் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள். என்னதான் வேலையைக் கைகள் செய்தாலும், மனம் கனவையே சுற்றிச் சுற்றி வந்தது. ராமாவிடம் எப்படியாவது சொல்லி விட வேண்டும். தப்பாக எடுத்துக் கொள்வாள். இருந்தாலும் சிநேகிதத்தின் அழகு, எச்சரிக்கை செய்வது.
சுஜாவுக்கு இந்த மாதிரி விஷயங்களில் நம்பிக்கை அதிகம். எங்காவது நாய் ஊளையிட்டால், மறுநாள் அக்கம் பக்கத்தில் எங்கும் சாவு நேர்ந்திருக்கிறதா என்று கனகாரியமாக விசாரிப்பாள். குடுகுடுப்பைக்காரன் வந்தால், உடனே எழுந்து வந்து அவன் சொல்வதை எல்லாம் கவனமாகக் கேட்பாள். அவன் எதிர்பார்த்ததுக்கும் மேலேயே பணமும் உணவும் கொடுத்து அனுப்புவாள். சகுனம் பார்ப்பது, ஜோசியம், ஜாதகம், ராசிபலன்… ஒன்று விடமாட்டாள்.
அப்படிபட்டவளுக்கு இந்தமாதிரி கனவு வந்தால் என்ன விளைவு என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்!
அன்றைக்கு என்று நேரம் நகரவே மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்த மாதிரி இருந்தது. ஒரு வழியாக மணி எட்டு அடிக்க, சுஜா தன் ஆக்டிவாவை எடுத்துக்கொண்டு ரயிலடியை நோக்கி விரைந்தாள்.
நினைத்த மாதிரியே தாம்பரம் ஸ்டேஷனில் ரமாவைப் பார்த்துவிட்டாள். விரைவு வண்டியும் வந்தது. ‘இதுல வேண்டாமடி ரமா! வேற வண்டில போலாம். உன்கிட்ட கொஞ்சம் பேசணும். இதுல உட்கார இடம் கிடைக்காது’ என்று சொன்னாள்.
சரியென்று ரமாவும் தலையசைக்க, அடுத்து தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட சாதாரண வண்டியில் இருவரும் அமர்ந்தார்கள்.
‘சொல்லுடி, என்ன விஷயம்? ரொம்ப டல்லா இருக்கியே? உடம்பு சரியில்லையா?’ என்ற ரமாவிடம் சுஜா ஒரு குழந்தையைப் போல எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்துவிட்டாள்.
எல்லாவற்றையும் ஒருவித பிரமிப்புடன் ரமா கேட்ட ரமாவின் முகம் மாறியது.
“ ஏய்! நீ என் பிரெண்ட். அதனால விட்டுர்றேன். இதே வேற யாராவது என் புருஷனப் பத்தி இப்படிச் சொல்லிருந்தா நடக்கற கதையே வேற!”
“ நானும் பிரெண்டுங்கற முறைல தான் இதெல்லாம் சொன்னேன். உங்க குடும்பத்துல ஏதும் ப்ராப்ளம் க்ரீயேட் பண்ணனும்ங்கற எண்ணமெல்லாம் இல்ல. சரி, இத்தோட விட்ரு. ஏதோ சொல்லணும்ன்னு தோணிச்சு. சொல்லிட்டேன்!” சுஜா கோவத்துடன் எழுந்து வேறு இடத்தில் சென்று அமர்ந்தாள்.
ஆறு வருஷ நட்பு! மனசு கேக்குமா? ரமா எழுந்து வந்து சுஜா பக்கத்தில் உட்கார்ந்தாள். “ஏய், கோவிக்காதேடி! உன்னப் பத்தித் தெரியாதா? எதுன்னாலும் உடனே டென்ஷன் ஆகிற பார்ட்டி! சரி விடு, என் மேல இருக்கற அக்கறைல தான சொன்ன. நோ ப்ராப்ளம். என் வீட்டுக்காரர் கிட்ட சொல்றேன். ஆனா பாரேன்! இதக் கேட்டு அவர் பெரிசா சிரிப்பார்”
தன் டென்ஷனைக் குறைக்க ரமா முயற்சி செய்கிறாள் என்பது சுஜவுக்குப் புரிந்தது. பிறகு இருவரும் வேறு ஏதோ விஷயங்களைப் பேசியபடியே பயணம் தொடர்ந்தார்கள்.
அதற்கு அப்புறம் சுதந்திர தினம், வீக் எண்டு என்று மூன்று நாள் லீவு வந்துவிட்டதால், சுஜாவும் மறந்தே போனாள்.
லீவு முடிந்து, திங்கள்கிழமை சுஜா திரும்பவும் ரமாவைப் பார்த்தாள். எல்லா விஷயமும் நினைவுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் இவளாகவே எதுவும் கேட்கவில்லை. சிறிது நேரம் கழித்து, ரமாவே ஆரம்பித்தாள்.
“டீ! அன்னைக்கு நீ சொன்ன விஷயத்தை என் வீட்டுக்காரர் கிட்ட சொன்னேன். நான் நெனச்ச மாதிரியே வடிவேல் ஜோக் பார்த்தா மாதிரி குலுங்கக் குலுங்கச் சிரிச்சாரு.” என்று சொல்லி ரமாவும் சிரித்தாள். சுஜாவுக்கு ஒரு பாரம் இறங்கிய மாதிரி இருந்தது. தான் கண்ட கனவு பொய்யானது பற்றி ஒரு சிறிய வருத்தமும் இருந்தது.
அதற்கப்புறம் இரண்டு பேருமே இந்த விஷயத்தை மறந்தே போனார்கள். ஒரு இரண்டு வாரம் கழித்து சுஜாவுக்கு திரும்பவும் அதே கனவு வந்தது. இந்த முறை இன்னும் சற்று விவராமாக.
ராஜன் கையில் கத்தியுடன் ‘என்னையா ஏமாற்றப் பார்த்தாய்? படவா ராஸ்கல்! சொத்துக்குப் பேயா அலையுறயேடா நாயே! என்கிட்டே கேட்டுருந்தால் நானே கொடுப்பேனே! உன்னத் தம்பியாவ வளத்தேன்? பிள்ளை போலத் தானேடா வளத்தேன்? உன் கெட்டப் பழக்கங்கள அப்பாவுக்குத் தெரியாம மறச்சு வச்சது என் தப்பு. அது அவருக்குத் தெரிஞ்சு போச்சு. ஆனா நான் சொல்லல.
உயில மாத்தினது அவர் விருப்பம். அதுக்காக அவர விஷம் வச்சுக் கொன்னுட்டியே பாவி! சொத்து வேணும்னு சொல்லியிருக்கலாமே! இப்ப என்னக் கொல்லப் பாக்குறியா? உன்ன என்ன பண்ணுறேன் பாரு!’ என்றபடி ரவியை நோக்கி முன்னேறினான். ரவியின் கையில் ஒரு பத்திரம். அவன் காலருகில் அந்தக் காலக் கள்ளிப்பெட்டி.. கனவு கலைந்தது.
இந்தத் தடவை சுஜா நிஜமாகவே பயந்து விட்டாள். தான் கனவில் கண்டதுமாதிரி நிச்சயம் நடக்கப் போவதாக அவளுக்குத் தோன்றிவிட்டது. ஆனால் அவளை உறுத்தியது அந்தக் கள்ளிப்பெட்டி. எங்கேயோ பார்த்தது மாதிரி தோன்றிய அந்தப் பெட்டிக்குள் இன்னும் பல ரகசியங்கள் இருப்பதாகத் தோன்றியது.
அன்று காலை ஸ்டேஷனில் ரமா இல்லை. அவள் மொபைல் அணைக்கப்பட்டு இருந்தது. ஆபீஸ் சென்று அவள் ஆபீஸ் நம்பருக்குப் போன் செய்து கேட்டாள். ரமா ஒரு பத்து நாள் லீவு என்றார்கள். சரி, அவள் வந்தபிறகு சொல்லிக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டாள்.
இரண்டு வாரம் கழித்து ரமா வந்தாள். அவள் முகம் வாடியிருந்தது. மெதுவாக என்ன விஷயம் என்று கேட்ட சுஜா அதிர்ந்தாள். ரமாவின் மாமனார் இறந்துவிட்டாராம்!
ஏற்கனவே சோகத்தில் இருந்தவளிடம் இந்த இரண்டாம் கனவைப் பற்றிச் சொல்லவா வேண்டாமா என்று சுஜா மனதில் போராட்டம். இறுதியில் சொல்லி விடுவது என்று முடிவு செய்து சொல்லியும் விட்டாள்.
ரமா ஆச்சர்யத்துடன் இவளைப் பார்த்தாள். “ என் மாமா செத்தது விஷத்துனால தான். ஆனால் பாம்பு கடிச்சு. மேலும், நீ நினைக்கற மாதரி என் மச்சினன் ஊரிலேயே இல்ல. ட்ரைனிங்ன்னு ஒரு நாலு வாரமா பாம்பேல இருக்கான். நாங்க சொல்லித்தான் ஊருக்கே வந்தான்’ என்றாள்.
சுஜாவுக்கு மீண்டும் ஏமாற்றம். இனிமேல் இந்த மாதிரி வரும் கனவுகளுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டாள்.
அன்றைய தினம் எந்த வேலையும் ஓடவில்லை. மதியத்துக்கு மேல் உடம்பு சுடுவது போலத் தோன்றியது. தலை வலித்தது. அரைநாள் லீவு சொல்லிவிட்டு வீடு திரும்பினாள்.
மாடம்பாக்கத்தில் தனி வீடு. அந்த மதியத்தில் அவள் தெருவே அமைதியில் உறைந்திருந்தது. வீட்டை நெருங்கியவள் திறந்திருந்த கேட்டைப் பார்த்து வியந்தாள். வாசலில் இருந்த செருப்புகள் அவள் கணவன் வந்து விட்டதை அறிவித்தன. அந்த இன்னொரு ஜோடி யாருடையது? என்ன இந்த நேரத்தில் யாருடன் வீட்டில் இருக்கிறார்?
குழப்பத்துடன் காலிங் பெல்லை அடிக்க நினைத்தவள் கண்கள் கதவு திறந்து இருந்ததைப் பார்த்தன. மெதுவாக உள்ளே நுழைந்தவள் பெட்ரூமிலிருந்து வந்த குரல்களைக் கேட்டு அங்கே சென்றாள். அந்த ரூமுக்குள் அவள் கண்ட காட்சி அவளை உறைய வைத்தது. அவள் கணவன் (ரங்க)ராஜன் கையில் ஒரு கத்தியை வைத்துக் கொண்டு தன் தம்பி ரவி(ச்சந்திரன்)யிடம் “‘என்னையா ஏமாற்றப் பார்த்தாய்? படவா ராஸ்கல்! சொத்துக்குப் பேயா அலையுறயேடா நாயே! என்கிட்டே கேட்டுருந்தால் நானே கொடுப்பேனே! உன்னத் தம்பியாவ வளத்தேன்? பிள்ளை போலத் தானேடா வளத்தேன்?” என்று கோவத்தில் கத்திக் கொண்டிருந்தான்.
அவள் மைத்துனன் கையில் ஒரு பத்திரம். அவர்கள் காலடியில் ஒரு கள்ளிப்பெட்டி. சுஜாவுக்குக் கனவில் வந்தக் கள்ளிப்பெட்டியை எங்கே பார்த்தோம் என்பது நினைவுக்கு வந்துவிட்டது.
i love kids stories………….