ஒடைக்காடு என்ற ஊரில் இன்ஸ்பெக்டர் மாதவனுக்கு டூட்டி போட்டிருந்தார்கள். ஒடைக்காடு என்ற பெயருக்கு ஏற்ப பச்சைப்பசேல் என்றிருந்த காட்டினுள் அழகிய ஓடை ஒன்று சலசலத்து ஓடும் அந்த காட்டிற்குள் தீவிரவாதிகள் ஊடுருவிவிட்டதால்தான் மாதவன் மஃப்டியில் வந்து அங்கு தங்கும்படி மேலிடத்து உத்தரவு. அந்த ஊரில் வசந்தம் ஹோட்டலில் சாப்பாடு நன்றாக இருக்கும் என்று நண்பர்கள் சொல்லவே தினமும் அங்கு சென்று சாப்பிடுவது அவனுக்கு வழக்கமாகிவிட்டது.. வசந்தம் ஹோட்டலை முத்துவேலும் அவரது மனைவி திருப்பதியும் நடத்திவந்தார்கள். அவர்களது ஒரே மகள் வசந்தா அற்புதமான அழகி. தெய்வீகக்களை என்று சொல்வார்களே அதே. அவள் அழகில் அவள்மீது மரியாதைதான் ஏற்படும். மாதவன் அவளை ஆராதிக்கவே ஆரம்பித்துவிட்டான். ஒரு அம்மனை வணங்குவது போலவே அவளை பாவித்தான். அவன் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது ஒரு தடவையாவது அவள் தரிசனம் கிட்டதா என்ற எதிர்பார்ப்பு அவனையே சிந்திக்கவைக்கும். ஏன் இப்படி ஒரு பக்தி அவள் மீது என்று ஆச்சரியப்பட வைக்கும்.
வசந்தாவுக்கு முறை மாப்பிள்ளை ஒருவன் இருக்கிறான் என்றும்; கூடிய சீக்கிரம் வசந்தாவை மணம் செய்துகொள்வான் என்றும் மாதவன் கேள்விப்பட்டான். உருவத்தில் .வசந்தாவின் அம்மா திருப்பதி வசந்தாவுக்கு நேர் எதிர். திருப்பதிக்கு பருத்த உடல், அவள் நடக்கும் போது உருண்டு வருவதைப்போலவே இருக்கும். ஆனால் திருப்பதியின் சமையல் நாக்கில் எச்சில் ஊற வைக்கும். ஈ மொய்ப்பதைப்போல மக்கள் அந்த ஹோட்டலை நாடிவரக் காரணம் திருப்பதியின் கைமணம். என்றால் அது உண்மையே..
ஒரு நாள் மதியம் மூன்று மணி இருக்கும், மாதவன் பொடிநடையாக காட்டிற்குள் சென்றான், ஓடையை ஒட்டியே நடந்து கொண்டிருந்தான். அப்போது சளக்புளக் என்ற சப்தம் கேட்கவே யாரோ ஒடை நீரில் நடந்து வந்து கொண்டிருக்கிறார்கள் என்று அனுமானித்தான் .உடனேயே பக்கத்திலிருந்த பெரிய மரத்தில் ஏறிக்கொண்டான். இலை அடர்ந்திருந்த அந்த மரம் அவனைத் தன்னுள் மறைத்துக் கொண்டது. யாரோ ஒரு ஆள் ஒடையில் நடந்து வந்துகொண்டிருந்தான். நீரின் மேல் ஒரு பெரிய ப்ளாஸ்டிக் பை மிதந்து கொண்டிருந்தது. அது கயிறால் கட்டப்பட்டிருந்தது அதனை அவன் இழுத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தான். மரத்தின் மேல் இருந்த மாதவன் அவனை தன் செல்ப் ஃபோனில் படம் பிடித்துக்கொண்டான். அவன் தன் கண்ணை விட்டு மறைந்த பின்பே அவன் கீழே இறங்கி வந்தான்.
இப்போதைக்கு .மாதவனுக்கு ஊரைச்சுற்றும் வேலைதான். தீவிர வாதிகள் என்ன வகையான ஆயுதங்கள் வைத்துள்ளார்கள். அவர்கள் பலம் என்ன பலவீனம் என்ன என்பது பற்றிய விவரங்களை சேகரிப்பது மட்டுமே அவனது வேலை.
மறுநாள் காலை வசந்தம் ஹோட்டலுக்கு சாப்பிடப் போனபோது எதிர்த்த பெட்டிக்கடையில் சிகரெட் பிடித்தபடி உட்கார்ந்திருந்த நபரைப்பார்த்த மாதவன் உடனேயே அவனை அடையாளம் கண்டுகொண்டான். நேற்று ஓடை நீரில் நடந்து போனவன் இவன்தான். மாதவனின் கால்கள் பெட்டிக்கடை நோக்கி நகர்ந்தன. கடையில் ஒரு சிகரெட் வாங்கிக்கொண்டான். சிகரெட் அவனுக்கு பழக்கமில்லை. பேய்க்கு வாக்கப்பட்டால் புளியமரம் ஏறித்தான் ஆகவேண்டும் என்ற பழமொழி அவனுக்கு ஞாபகம் வர உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான்.
“நட்டு! எப்போ உன் கல்யாணம்?” கடைக்காரர் கேட்க அந்த ஆள் “ஐந்து பவுனுக்கு தாலி வாங்கிக் கொண்டுதான் கல்யணம் பற்றி யோசிக்கனும்” என்றான். அந்த நட்டுவின் கண்கள் வசந்தம் ஹோட்டல் வாசலையே வட்டமிட்டுக்கொண்டிருந்தது. அப்பொழுது திருப்பதி வாசலுக்கு வந்து குப்பையைக் கொட்டிவிட்டு இருமிவிட்டுப் போனாள். “உன் அக்கா இப்படி இருமுகிறார்களே வைத்தியம் பார்க்ககூடாதா நட்டு? கடைகாரர் கேட்க; “வசந்தாவைக் கல்யாணம் பண்ணிக் கொண்ட பிறகுதான் அக்காவை கவனிக்க வேண்டும்.” என்ற நட்டு எழுந்துகொண்டான். “முத்துவேல் உனக்கு பெண் கொடுப்பான் என்றா நினைத்தாய்?” மீண்டும் கடைக்கரரின் கேள்வி. “அதற்கு வழியெல்லாம் வச்சிருகேன்” என்றபடி அவ்விடம் விட்டகன்றான் நட்டு என்ற நடராஜன்.
ஹோட்டலை ஒட்டியிருந்த ரோட்டில் நட்டு முன்னே நடக்க மாதவன் பின் தொடர்ந்தான். ஹோட்டலின் கொல்லைப்புறம் வந்தவுடன் நட்டு நின்றுவிட்டான்.. “ஊருக்கு புதுசா? என்ன வேலையாக இங்கே வந்திருக்கீங்க?” நட்டுவின் கேள்விக்கு மாதவன் “இங்கே நிலம் வாங்கலாமா என்று ஸ்டடி பண்ண முதளாளி அனுப்பினார். அதற்குத்தான் வந்திருக்கேன்” .என்று பதிலிருத்தான் “ஏதாச்சும் இருந்தா சொல்லுங்க.. நீங்க இதே ஊர்தானா” என கேட்டு வைத்தான். “இப்படியே போனால் காடுதான். ஊர்ப் பக்கம் போய்ப்பாருங்கள்.” என்றவனுக்கு “காடு பார்க்க ரொம்ப அழகா இருக்கு. அதனால் அங்கு நடைபயிற்சி போகலாம் என்றிருக்கிறேன்.என பதில் கூறினான். “அழகுதான் ஆபத்து” என்று. சொல்லிவிட்டு நட்டு சிரித்தான். “ஏன் அப்படி சொல்கிறீர்கள்?” மாதவனின் கேள்விக்கு பதில்கூற அவன் தயாரில்லை. மாதவன் ஊர்ப்பக்கமாக திரும்பி நடந்தான்.
நட்டு பெட்டிக்கடையில் உட்கார்ந்து இருப்பதும் திருப்பதி குப்பையைக் கொட்டிவிட்டு இருமுவதும், அதன்பிறகு நட்டு கொல்லைப்புறமாகப் போய்; திருப்பதி ப்ளாஸ்டிக் பையில் போட்டுத்தரும் சாப்பாட்டு பொட்டலங்களை ஒடைநீரில் இழுத்துக்கொண்டு போவதும் மாதவனுக்கு சில நாட்களிலேயே நன்றாகவே விளங்கியது. திருப்பதி இருமுவது முத்துவேல் அப்போது. அங்கு இல்லை என தெரியப்படுத்தவே என்பதும் விளங்கியது. சாப்பாடு தீவிரவாதிகளுக்காகத்தான் என்பதையும் யூகிக்க முடிந்தது.
இவ்விஷயங்களை மேலிடத்திற்கு தெரியப்படுத்திய மாதவன் அவ்வூரை விட்டு கிளம்ப ஆயத்தமானான். ஷோல்டர் பையுடன் கிளம்பிவிட்ட மாதவன், சாப்பிட்டுவிட்டுப் போக வசந்தம் ஹோட்டலை அடைந்தான். வாசலில் “இன்று விடுமுறை” என்ற போர்ட்டைப் பார்த்து நின்றிருந்த வேளையில் ஹோட்டலின் உள்ளிருந்து யாரோ முனங்கும் சப்தம் கேட்டு கொல்லைப்புறமாக ஓடிப்போய் பார்த்தான். வசந்தாவின் வாயில் துணியை வைத்து திணித்துவிட்டு வசந்தாவை அந்த நட்டு என்ற மிருகம் நெருங்கிக்கொண்டிருந்த வேளையில் மாதவன் அங்கே வந்து விடவே வசந்தா காப்பாற்றப்பட்டுவிட்டாள். கைகலப்பில் போலீஸ் ட்ரைனிங்கில் மாதவனின் உடல் இறுகி பலம் பெற்றிருந்ததால், வாட்டசாட்டமான நட்டு மல்லாந்து விழுந்துகிடந்தான். அவன் எழுந்து கொள்ள முற்பட்டபோது வசந்தா மாதவனை கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு அறைக்குள் போய் தாள் போட்டுக்கொண்டாள் .மாதவனை இறுக அணைத்துக்கொண்டிருந்த அவள் உடல் நடுங்கிய வண்ணம் இருந்தது. நட்டு கதவை உடைத்து விடுவது போல தட்டிக்கொண்டும் கெட்ட வார்த்தைகளால் மாதவனையும் வசந்தாவையும் திட்டிக்கொண்டும் இருந்தான். அப்போதெல்லாம் வசந்தா மாதவனை மேலும் இறுக அணைத்துக்கொண்டாள். அழகை ஆராதனை செய்துவந்த மாதவன் இப்பொழுது அதே அழகை ஆட்கொண்டுவிட்டான். வசந்தா அதனை வரவேற்றாள்.
பொழுது விடிந்தது. ஊர் சென்றிருந்த முத்துவேல் திரும்பிவிட்டார். முத்துவேலின் குரலைக்கேட்டவுடன்தான் வசந்தா கதவைத்திறந்தாள்.. அப்பா என்று அலறி அவர் காலடியில் போய் விழுந்த வசந்தாவை அவர் தூக்கி நிறுத்தி என்ன நடந்தது வசந்தா என்று பதறிப்போய் கேட்க உள்ளிருந்து பேய் அறைந்தது போல வந்த திருப்பதி நடந்தவற்றை விவரித்தாள். கர்ச்சிப்பில் ஏதோ மருந்தைத்தடவி என் மூக்கில் காட்டி என்னை ஓரமாக உருட்டிவிட்டுவிட்டு நட்டு என் பெண்ணை கெடுக்க நினைத்தான். எனக்கு நடப்பது எல்லமே தெரிந்தாலும் மருந்தினாலோ என்னவோ அசையக்கூட முடியவில்லை. இப்போதான் தெளிவு வந்த மாதிரி இருக்கு.என்றவள்; இந்த தம்பிதான் வசந்தாவைக்காப்பாற்றியது. எனக்கூறினாள்.
அப்பா. இவரை நான் மணந்துகொள்ள நீங்கள் சம்மதிக்கவேண்டும். வேறு வழி ஒன்றுமே இல்லை என வசந்தா அவள் அப்பாவிடம் கேட்டுக்கொண்டாள். .அப்பொழுது “வசந்தா! உன்னிடம் நான் தனியாகப் பேசவேண்டும்” என்று மாதவன் வாய் திறந்தான்.
தான் ஏற்கனவே கல்யாணமானவன் என்ற விவரத்தை வசந்தாவிடம் தெரிவித்த போது அவள் அலட்டிக்கொள்ளாமல் “அதனால் என்ன? நட்டு என்னை மணந்துகொள்ள நேரிட்டால் நான் தற்கொலை செய்துகொள்வேன் என்று அப்பாவிடம் கூறியிருந்தேன். நீங்கள் என்னைக் காப்பாற்றிய தெய்வம். எப்போதாவது நினைத்துக்கொண்டால் என்னை வந்து பாருங்கள் போதும்” என்ற வசந்தாவை மாதவன் வாரம் தோறும் வந்து பார்த்து இரண்டு நாட்கள் தங்கிவிட்டுப் போகும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். முத்துவேல் மகளின் விருப்பத்திற்கு மறுப்பேதும் சொல்லவில்லை. தீவிரவாதிகளுடன் நட்டுவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுவிட்டான். வருடங்கள் காலத்தால் கரைந்து போனது. இரண்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.
மாதவனின் மனைவி இந்துமதி பிள்ளை இல்லை என்ற காரணத்திற்காக ஒரு நாள் தற்கொலைக்கடிதம் எழுதி வைத்துவிட்டு சாகப்போனாள். கடிதத்தில் மாதவன் மறுமணம் செய்துகொள்ளவேண்டும் என்றும் அதற்கு தனக்கு ஏதும் ஆட்ஷேபனை இல்லை என்றும் அதனால் பிறக்கும் பிள்ளையை தானே வளர்க்க ஆசைப்படுவதாகவும், இதனை எத்தனையோ முறை மாதவனிடத்தில் சொன்னாலும் கேட்கவில்லை .அதனால் சாகிறேன் என கிறுக்கி வைத்திருந்தாள். அவளைக்காப்பாற்றி வீட்டிற்கு அழைத்து வந்த அன்றே ஒன்றரை வயது ஆண் குழந்தையான வசந்தன் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டான். அவன் வசந்தாவின் குழந்தை. இந்துமதி பற்றி கேள்விப்பட்ட வசந்தா தன் மகனை இந்துமதிக்கே கொடுத்துவிட்டாள் .தன் பெயரை மாதவன் ஒயாமல் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும் என்றே தன் மகனுக்கு வசந்தன் என்ற பெயரைச் சூட்டி அனுப்பி வைத்தாள்..
வசந்தன் வளர்ப்பதற்காக தரப்பட்ட பிள்ளை என்று மட்டும் இந்துவிற்கு சொல்லப்பட்டது. இந்துவும் தனக்கே என்று தரப்பட்ட பிள்ளை பற்றி மேற்கொண்டு விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்தாள். விசாரிக்கப்போய் பிள்ளை தனக்கில்லாமல் போய்விட்டால் என்று பயப்பட்டாள்.. தன் மாமனார், மாமியார், கொழுந்தனார் இவர்களிடம் வசந்தன் பற்றி பேசிப்பேசி பெருமைப்படுவாள். வீட்டில் உதவிக்கு இருந்த கபாலியும் வசந்தன் செய்யும் குறும்புகளை இந்துவிடம் சொல்லி சொல்லி மகிழ்ந்து போவான்..
இந்நிலையில்தான் ஒரு நாள் அந்த பேரிடியான செய்தி வந்தது .வசந்தா கொல்லப்பட்ட துயரசெய்தியினால் மாதவன் நிலைகுலைந்துபோனான். ஓடைகாட்டிற்குப் போய் தங்கினான். துயரத்திலிருந்த முத்துவேலையும் திருப்பதியையும் தேற்ற வழிதெரியாமல் திகைத்தான். கொலையாளியைக் கண்டுபிடித்து தக்க தண்டனை வாங்கித்தர உறுதி எடுத்துக்கொண்டான். பட்டபகலில் கொலை நடந்திருக்கிறது. விசாரித்ததில் நட்டு இரண்டு நாட்களுக்கு முன்தான் விடுதலை ஆகி இருந்த விவரம் தெரிய வந்தது. போலீஸ் டிபார்ட்மெண்ட் உதவியுடன். சல்லடை போட்டு சலித்ததில் நட்டு அகப்பட்டுவிட்டான். தான் ஒரு குற்றமும் செய்யவில்லை என சாதித்தான். ரொம்ப மிரட்டியதில் மாதவனிடத்தில் ஒரு மோதிரத்தை ஒப்படைத்தான்..அதை வாங்கிப்பார்த்த மாதவன் திகைத்தான் .அது மாதவனின் தம்பியின் மோதிரம். “இது எப்படி உன் கையில்?” மாதவன் கேட்க, “கொலையாளி தன்னைக் காட்டிக்கொடுக்கக்கூடாது என்பதற்காக கொடுத்த பரிசு.”என்று பதில் சொன்னான். அது மாதவனின் தம்பியின் மோதிரம். மாதவன் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தன் வீட்டிற்கு சென்றான். தன்னிடம் கொள்ளைப் பிரியம் வைத்திருக்கும் ராஜனா இக்காரியத்தை செய்திருப்பான்? தன் தம்பியின் நடவடிக்கைகளை கண் காணித்தான்.. ராஜனிடம் நிறைய மாறுதல்கள் தெரிந்தது. கூப்பிட்டால் மட்டுமே தன் அறையைவிட்டு வெளியில் வந்தான். சரியாக சாப்பிடாமல் பெயருக்கு கொரித்துவிட்டு சென்றான். அவனை ஒரு நாள் மாதவன் விசாரிக்கத் துவங்கியவுடனேயே அவன் சொல்ல ஆரம்பித்தான். “நீ அப்பாவிடம் வசந்தனைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்த ரகசியம் அடுத்த அறையிலிருந்த எனக்கும் தெரிந்துவிட்டது. என் இரண்டாவது அண்ணியைப் பார்க்க ஆவலுடன் ஓடைக்காட்டிற்குச் சென்றேன். ஒரு சர்ப்ரைசாக இருக்கட்டுமே என்று உன்னிடம் சொல்லாமல் சென்றேன். அங்கு அண்ணி கொலையாகி கிடந்தார்கள். பயந்து போன நான் திரும்பிவிட நினைத்த போது ஒருவன் கத்தியுடன் வந்து என்னை மிரட்டி என் மோதிரத்தை வாங்கிக்கொண்டு ஓடிவிட்டான். அவன் எங்கிருந்து எந்த திசையிலிருந்து வந்தான் என்பது எனக்குப் புரியவில்லை. அவன்தான் கொலையாளியா என்பதும் எனக்கு தெரியாது.” இதைக்கேட்ட மாதவனுக்கு ஒரே குழப்பமாகிவிட்டது. அக்கம்பக்கத்தில் யார் இருக்கிறர்கள் என்று சரிவர கவனிக்காமல் அப்பாவிடம் வசந்தன் பற்றி சொல்லியதற்காக மாதவன் தன்னையே நொந்து கொண்டான். அன்று இந்து, கோயிலுக்கு சென்றிருந்த சமையத்தில் அவசரமாக அப்பாவிடம் தன் விஷயத்தை பகிர்ந்து கொண்டதற்காக வருந்தினான். “அப்பொழுது கபாலியும் கூட ஜன்னல் அருகில்தான் இருந்தான். அவனும்கூட நீ சொன்ன குழந்தை “வசந்தன்” பற்றிய விஷயத்தை கேட்டிருக்கக்கூடும்” என்று ஒரு செய்தியாக மட்டும் தம்பி சொன்னதை எண்ணிப்பார்த்தான் மாதவன்.
கபாலி பழைய கைதி. அவன் மிகவும் திருந்திவிட்டதனால் மாதவன் அவன் மீது இரக்கம் கொண்டு தன் வீட்டிலேயே தங்க அனுமதித்திருந்தான். கபாலியும் விசுவாசத்துடன் அந்த வீட்டில் ஒருவனாக ஒட்டிக்கொண்டுவிட்டான். அதுவும் இந்துவின் அடிமை என்றே சொல்லவெண்டும். இந்துவுக்கு என்ன தேவையோ அது அனைத்தையும் செய்வான் .வசந்தன் வந்தவுடன் இந்து மாதிரியே அவனும் மகிழ்ந்து போனான்.. போலீஸின் புத்தி கபாலியையும் சந்தேகப்பட ஆரம்பித்தது.. விசாரணையில் கபாலி கொலையான அந்த இடதிற்குப்போனதை ஒப்புக்கொண்டான்.
வசந்தா அம்மா எப்படி இருப்பார்கள் என்று பார்த்துவிட்டு வரவே அங்கு சென்றதாக சொன்னான். ஆனால் தான் கொலை செய்யவில்லை என்றும். முதலில் தான்தான் அங்கு சென்றதாகவும், வசந்தா கொலையுண்டு கிடந்ததைப்பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும், அப்போது கத்தியுடன் அங்கு நட்டு வர அங்கிருந்த தண்ணீர் தொட்டிக்குப்பின்னால் ஒளிந்து கொண்டதாகவும் நட்டுவும் ராஜன் வருவதைப்பார்த்துவிட்டு தூணுக்குப்பின்னால் ஒளிந்துகொண்டதும்.பிறகு வெளிப்பட்டு ராஜனை மிரட்டி மோதிரத்தை வாங்கியதும் எல்லாவற்றையும் சொல்லவே மாதவனுக்கு மேலும் குழப்பமாகியது. மனம் சோர்ந்து போனான். வசந்தாவின் நினைவு அவனை வாட்டவே ஓடைக்காட்டிற்குப் பயணமானான். ஹோட்டல் இழுத்து மூடப்பட்டுவிட்டதால் பொலிவிழந்து காணப்பட்டது. வாசல் விரிய திறந்திருக்கவே தன் அறையில் போய் கட்டிலில் படுத்துக்கொண்டான்..வசந்தா அருகில் இருப்பது போலவே உணர்ந்தான். அலைச்சலும் கவலையும் அவனை சோர்வடைய வைத்திருந்தது. சிறிதே கண்ணயர்ந்துவிட்டான். வெளியில் முத்துவேலனின் குரல் கேட்டு விழித்துக்கொண்டான்.” “பாதகி! சொந்த மகளையே கொன்ற பாவி! அன்றைக்கு நட்டு, உன் மூக்கிலா மருந்து காட்டினான். தம்பிக்கு உடந்தையாக இருந்து கொண்டு என் மகளை சீரழிக்க நினைத்தாயே உன்னால் தன் பிள்ளைக்கும் ஆபத்து என்றுதானே வசந்தா தான் பெற்ற பிள்ளையைத் தூக்கிக் கொடுத்துவிட்டாள். உனக்குப் போய் திருப்பதி திருமலை என்று பெயர் வைத்தானே உன் அப்பன் கொல்லிமலை என்பதுதான் உனக்குப்பொருந்தும்.
திருப்பதியின் குரல் இப்பொழுது கேட்கவே மாதவன் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான் “.என் தம்பியைக் கண்டால் உங்களுக்கு ஆவதில்லை. .வீட்டிற்கே அவனை வரவிடுவதில்லை .வசந்தாவை நினைத்துதான் அவனை வீட்டிற்குள் சேர்க்கவில்லை. அவள் இல்லை என்றால் என் தம்பி என்னுடன் இருப்பான் என்பதால்தான் வசந்தா போய் சேர்ந்துவிட்டாள்”. பிறகென்ன திருமலை தூக்கில் தொங்க சட்டம் நாள் பார்த்துவிட்டது.