(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அன்று நான் ஒரு சத்தியாக்கிரகி நண்பரைப் பார்ப்பதற்காக ஜெயிலுக்குப் போயிருந்தேன்.
எனக்கும் ஒரு சத்தியாக்கிரகி நண்பர் இருக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்கையில் எனக்கே ஆரம்பத்தில் ஆச்சரியமாகத்தான் இருந்தது. நான் அரசியலிலோ அரசியல் விஷயங்களைப் பத்திரிகைகளில் படித்து விவரித்து ஆனந்திப்பதிலோ ஈடுபட்டவன் அல்ல. அரசியல்வாதிகளைக் கண்டாலே மொத்தத்தில் எனக்கு வெறுப்புத்தான். ஆனால் யாரோ ஓர் ஐரிஷ்காரன் சொல்லியிருக்கிறானாம்; அதுபோல, அடிமை நாட்டில் பிறந்தவர்கள் எல்லோருமே ஒரு விதத்தில் அரசியல்வாதிகள்தாம்.
ஆனால் அரசியலுக்கும், கொலை பாதகனாகிய என் கதாநாயகனுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை . நான் முதலில் சொன்ன சத்தியாக்கிரகி நண்பர்கூட இந்தக் கதையில் சம்பந்தப்பட்டவரல்ல. ஆனால் நான் அன்று அந்த நண்பரைக் கண்டு பேசிவிட்டு வரத்தான் ஜெயிலுக்குப் போயிருந்தேன். என்னுடன் வேறு இரண்டு நண்பர்களும் வந்திருந்தார்கள். நாங்கள் மூவரும் விதிப்படி முன்னாலேயே ஜெயில் அதிகாரிக்கு எழுதி இன்ன நாளில் இன்ன சமயத்தில் இன்ன எண்ணுள்ள அரசியல் கைதியைப் பார்க்கலாம் என்று அனுமதி பெற்று வந்திருந்தோம். சரியான சமயத்தில் நண்பரைப் பார்த்துப் பேசவும் பேசிவிட்டோம். பேசவேண்டு மென்று உத்தேசித்து வந்திருந்த விஷயத்தில் அச்சமயம் மறந்துபோனது (முக்கால் வாசியும்) போகப் பாக்கி எல்லாவற்றையும் பேசியாகிவிட்டது. விதிப்படி அனுமதிக்கப் பட்டிருந்த அவகாசம் முடிந்துவிட்டது.
நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, எங்களுக்கும் சத்தியாக்கிரசி நண்பருக்கும் இடையே இருந்த கம்பிகளைப் போலவே மௌனமாகச் சின்னஜெயில் அதிகாரி ஒருவரும் நாங்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தார். எங்கள் சம்பாஷணையில் அவருக்குப் பிடித்த விஷயம் என்ன இருந்தது? ஒன்றும் இல்லை . முகத்தில் அசட்டுக்களை தட்ட, ”சிவனே!” என்று அப்படி உட்கார்ந்த அவரைக் காண எனக்குப் பரிதாபமாக இருந்தது. காரியார்த்தமாகவேனும் அவருடன் இரண்டு வார்த்தை பேசலாமே என்று எண்ணினேன் நான்.
“நண்பருக்குக் கொடுப்பதாகச் சில சாமான்கள் கொண்டு வந்திருக்கிறோம்.”
“ஏன் அதைப்பற்றி எழுதி அனுமதி வாங்கவில்லை?” என்றார் அதிகாரி.
என்ன பதில் சொல்லுவது என்று சிறிது நேரம் யோசித்துவிட்டு, “தெரியாத்தனந்தான்?” என்றேன் நான்.
“தப்பிதம்; மன்னிக்கவேண்டும்” என்றார் என்னுடன் வந்திருந்த வக்கீல் நண்பர்.
“என்ன என்ன சாமான்கள் கொண்டுவந்திருக்கிறீர்கள்?”
“சில புஸ்தகங்கள், ஒரு ஜாடியில் ஊறுகாய், ஒரு போர்வை.”
“சரி, மூன்றரை மணிக்குச் சூபரிண்டு துரை வருவார். அவரிடம் ஒரு மனு எழுதிக்கொடுங்கள். அவர் அனுமதித்தால் -” என்று சொல்லிவிட்டு அந்த அதிகாரி எங்கள் நண்பருடன் ஜெயிலுக்குள் சென்று மறைந்துவிட்டார்.
அப்போதுதான் மணி ஒன்று அடித்தது. ஜெயில் கதவண்டையில் கையிலே ஒரு பயங்கரமான ஆயுதத்துடன் குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டும், நின்றுகொண்டும், கண்ணை மூடிக்கொண்டே தூங்காமலும் இருந்த காவல் சிப்பாயை, அவன் கையில் இருந்த ஆயுதத்திற்குரிய மரியாதையுடன் அணுகிக் கேட்டேன்:
“சூபரிண்டு துரை எப்போது வருவார்?”
அரை விழிப்பில் அவன் காதில் சூபரிண்டு’ என்ற வார்த்தை விழுந்தவுடன் அடென்ஷன் ஸலூட்’டுக்கு அவன் கையும் காலும் நகர்ந்தன. அப்புறம் நான்தான் பேசியவன் என்று அறிந்தவுடன், சிறிது சாவதானமாகவும் அலக்ஷயமாகவும் “நாலு நாலரைக்குள் வந்துவிடுவான்” என்றான்.
நான் எதிரே பார்த்தேன்; நண்பர்களும் மனத்தில் அதே எண்ணத்துடன் எதிரே பார்த்தார்கள். ஜெயிலின் பெரிய கதவுகளிலிருந்து இருபது அடிக்கு அப்பால் நிழலடர்ந்த மரங்கள் நான்கு ஓங்கி வளர்ந்திருந்தன. கையில் கொண்டுபோன சாமான்களுடன் மர நிழலில் போய் உட்கார்ந்துகொண்டு சூபரிண்டெண்டெண்டு வரவேண்டிய வழிமேல் விழிவைத்து நாலு மணி நேரம் காத்திருக்கத் தயார் செய்து கொண்டோம்.
சரியான வெயில். அந்த வெயிலின் அருமை மரநிழலில் ஒண்டிக்கொண்டிருந்த எங்களுக்கு நன்றாகத் தெரிந்தது. மனத்தில் ஜெயில் சூபரிண்டெண்டெண்டு வருமுன் காபிவேளை வந்துவிட்டுப் போய்விடுமே என்ற கவலை. எந்தச் சந்தர்ப்பத்திலும் வெற்றிலை பாக்கில் நம்பிக்கையுடைய நண்பர் வெற்றிலை பாக்கு மூட்டையை அவிழ்த்துப் பரப்பிக்கொண்டு உத்ஸாகத்துடன் வெற்றிலை போட்டு மெல்ல ஆரம்பித்தார்.
“எனக்கு வெற்றிலை பாக்குப் புகையிலை மட்டும் அனுமதிப்பார்களானால் நான் ஜெயிலுக்குப் போக ஆக்ஷேபிக்கமாட்டேன்” என்றார் அவர்.
வக்கீல் நண்பருக்குப் பதில் சொல்லச் சோம்பல்; “நீதான் பதில் சொல்லேன்” என்று சொல்பவர் போல என்னைப் பார்த்தார்.
“என் இஷ்டப்படி வெளியே போய் விட்டு வர அனுமதிப்பார்களானால் எனக்கும் ஜெயிலுக்கும் வர ஆக்ஷேபம் இல்லை ” என்றேன் நான்.
அச்சமயம் புகையிலையைக் கிள்ளி அடக்கி வாயில் போடும் ரஸமான காரியத்தில் ஈடுபட்டிருந்த நண்பர் பதில் சொல்லவில்லை. நான் இரண்டு விநாடி கழித்து மேலும் சொன்னேன்: ” நல்ல காற்று… ஜலமும் நன்றாயிருக்கிறது. தோட்டத்தில் காய்கறிகள் ஏராளமா யிருக்கின்றன. இதைவிட என்ன வேண்டும்?”
அந்த மர நிழலுக்கு அதே சமயம் இரண்டு போலீஸ்காரர்களும் இரண்டு கைதிகளும் வந்து சேர்ந்தார்கள். தம் சோம்பலைக்கூட மறந்துவிட்டு வக்கீல் நண்பர், “இன்றுதான் ஸப் ஜெயிலிலிருந்து கைதிகளை ஜில்லா ஜெயிலுக்கு மாற்றும் நாள்” என்றார்.
போலீஸ்காரர்களும் கைதிகளும் வேர்க்க விறுவிறுக்க வந்து அந்த மரத்தடியில், “அப்பாடி!” என்று உட்கார்ந்தனர்.
“லாரி இல்லையா?” என்று விசாரித்தார் வக்கீல்.
“லாரி ரிப்பேர்… நாலு மைலும் நடைதான்” என்றான் ஒரு போலீஸ்காரன்.
“சரியான வெயில்” என்றேன் நான்.
இதற்குள் ஒரு போலீஸ்காரன் காவல் சிப்பாயின் க்ஷேமலாபங்களை விசாரிக்கப் போய்விட்டான்.
வெளிப் போலீஸாரின் எல்லை அந்த மரங்கள் வரையில்தானாம். அதைத் தாண்டிவிட்டால் ஜெயில் எல்லை. தண்டனை பெற்றுப் போலீஸ் காவலில் வரும் குற்றவாளிகள், ஜெயில் கதவுகள் திறந்து தங்களை அங்கீகரிக்கும் வரையில் அந்த மரத்தடியில்தான் காத்திருப்பார்களாம். வ.வே.சு.ஐயரின் ‘குளத்தங்கரை அரச மரம்’ மாதிரி அந்த நாலு மரங்களும் கலை உணர்ச்சியும் கற்பனையும் பெற்றுத் தங்கள் நிழலில் தங்கிவிட்டுப் போனவர்களின் கதைகளைச் சொல்ல ஆரம்பித்துவிட்டால்..! அதற்கப்புறம் தமிழில் அந்த மாதிரி இலக்கியத்துக்குத் தேவையே இராது.
என் வக்கீல் நண்பர் போலீஸ்காரனை விசாரித்தார்: “எந்த ஊரிலிருந்து….?”
போலீஸ்காரன் நாற்பது மைலுக்கப்பால் இருந்த ஓர் ஊரின் பெயரைச் சொன்னான்.
“ஓ மெயிலில் வந்தீர்களா?”
“ஆமாம்.”
“என்ன சார்ஜ்?”
“மர்டர் (கொலை)” என்று சுருக்கமாகப் பதில் வந்தது.
“இரண்டு பேருமா?”
“இல்லை… கிழவன் போனவாரம் இந்த ஜெயிலிலிருந்து அதோ அந்தச் சுவரில் ஏறிக் குதித்துத் தப்பியோடியவன். இவன்தான் கொலைக்கு…பதினாறு வருஷம்.”
போலீஸ்காரன் காட்டிய ஜெயிலின் மதில்சுவரைத் திரும்பிப் பார்த்தேன் நான். பதினாறடி உயரம் இருக்கும். கால்பிடிப்புக்கு ஒரு வெடிப்போ மூளியோ இல்லை . நான் மறுபடியும் திரும்பி, தப்பியோடி விட்டதாகச் சொல்லப்பட்ட கைதியைப் பார்த்தேன். அவனுக்கு வயசு ஐம்பதுக்கு மேல் இருக்கும்; உடலெல்லாம் சதை சுருக்கஞ் சுருக்கமாகத் தொங்கிக் கொண்டிருந்தது. நான் மறுபடியும் ஒருதரம் ஜெயில் சுவரையும் அவனையும் திரும்பிப் பார்த்தேன். என் கண்களில் எதையோ கண்டு அவன் புன்சிரிப்புச் சிரித்தான். அவன் அந்தச் சுவரேறிக் குதித்துத் தப்பியதை நான் கண்டிக்கவில்லை. அவன் சாமர்த்தியத்தைக் கண்டு ஆச்சரியப் பட்டேன் என்பதை அவன் அறிந்து கொண்டுவிட்டான் போலும்!
“ஓடிப்போக யத்தனித்து மாட்டிக்கொண்டவனுக்குக் கடுமையான தண்டனை கிடைக்கும்” என்றார் வக்கீல்.
“ஓடு முன்பே அதைப்பற்றி யோசித்திருக்க வேண்டும்!” என்றான் போலீஸ்காரன்.
“அப்படி யோசிப்பது சாத்தியமா?” என்று நான் என்னையே கேட்டுக்கொண்டேன். நான் அந்த ஜெயில் சுவருக்குப் பின்புறம் இருந்து, எனக்கு அந்தச் சுவரைக் கடந்துவரும் சாமர்த்தியமும் இருந்தால், பின்னர் அகப்பட்டுக்கொண்டால் என்ன நடக்கும் என்றுதான் யோசித்திருப்பேனா என்ன?”
“ஸெக்ஷன் 302 தானே?” என்றார் வக்கீல். அவர் சொன்ன எண் 302 தானா என்று எனக்கு இப்போது ஞாபகம் இல்லை . 302 இல்லாவிட்டால் அதைப்போல மற்றோர் எண்.
“ஆமாம்” என்றான் போலீஸ்காரன்.
கொலை செய்து பதினாறு வருஷம் தண்டனை பெற்று ஜெயிலுக்குள் புகக் காத்திருந்த அந்தக் கைதியைப் பார்த்தேன். என் கண்கள் என்னையும் அறியாமலே அவன் கைகளையும் ஆடையையும் பார்த்தன. அவைகளில் ரத்தக்கறையோ, அது இருந்த அடையாளமோ இல்லை. எனக்கும் அவனுக்கும் இடையே நாலடி தூரந்தான் இருந்தது. அவனைப் பார்த்தால் முப்பது முப்பத்திரண்டு வயசு இருக்கும் போல் இருந்தது. தடித்துச் சுருண்டு கறுத்த மயிர்; மூக்கும் மோவாய்க்கட்டையும் சப்பட்டையாயிருந்தன. கண்கள் விழி பெரிதாக எடுப்பாகச் சிவந்திருந்தன. அவன் பார்வையில் அசாதாரணமாக எதுவும் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை . முகத்திலே ஒருவிதமான வெறுப்பும் விருப்பும் இல்லாதவன் போலச் சலனமேயின்றி உட்கார்ந்திருந்தான் அவன்.
நான் எந்தக் கொலைகாரனையும் அதற்குமுன் அவ்வளவு நெருங்கிப் பார்த்ததில்லை. யாரையாவது சில சமயம், “கொலைபாதகா!” என்று வாய் நிறையத் திட்டியிருப்பேன். யாராவது லிமிடெட் கம்பெனி மானேஜிங் டைரக்டரைப் பார்க்கும் போது சிலசமயம், “அட! இவன் கொலைக்குக்கூட அஞ்சமாட்டான் போல் இருக்கிறதே” என்று நான் எண்ணியது உண்டு. இது தவிர ரெயிலில் பிரயாணம் செய்ய நேரும்போ தெல்லாம் கொலை திருட்டு முதலிய விஷயங்களைக் கொண்டே எழுதிப் பிழைக்கும் பத்திரிகைகள் சிலவற்றைப் பார்த்திருக்கிறேன். கொலை பாதகன் விஷயமாக எனக்குத் தெரிந்ததெல்லாம் இவ்வளவுதான்.
புகையிலையை எடுத்துக் கசக்கிக் கொண்டிருந்த நண்பருக்குப் புகையிலையை வாயில் போடுமுன் ஒரு சந்தேகம் தட்டிற்று.
“ஆமாம். கையில் விலங்கும் இல்லாமல் உட்கார்த்தி வைத்துவிட்டு நீ எங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறாயே! இதுதான் சமயம் என்று அவன் ஓடிவிட்டானானால்?” என்றார்.
போலீஸ்காரன் மீசையை உருவிக்கொண்டு கைதியைத் திரும்பிப் பார்த்தான். ஒரு நிமிஷம் மௌனமாக இருந்துவிட்டு, “எல்லாம் நடக்குந்தான். நடக்கக்கூடாதா என்ன?… ஆனால் அதனால் அவன் எங்கேயாவது தப்பி ஓடிவிட முடியுமா என்ன? மறுபடியும் மாட்டிக்கொள்ளுவான்; இன்னும் கஷ்டப்படவேண்டும்” என்றான்.
“உனக்கு…?” என்றார் நண்பர்.
“என் வேலை போய்விடும். அதனால் அவனுக்கு லாபம் உண்டானால் செய்யட்டுமே!”
சற்றுநேரமாக மௌனமாயிருந்துவிட்ட வக்கீல் கைதியைக் கோர்ட்டு தோரணையில், “ஏய்! உன் பெயர் என்ன?” என்று கேட்டார்.
அவன் ஒன்றும் பதில் சொல்லவில்லை . அவன் தரையைப் பார்த்துக் கொண்டு சிந்தனைகளில் ஈடுபட்டவனாக உட்கார்ந்திருந்தான்.
“உன்னைத்தான் கேட்கிறார்… சொல்லு…” என்று தூண்டினான் போலீஸ்காரன்.
அதுவும் பயன் அளிக்கவில்லை . கொலைக்குற்றம் செய்ததாகத் தண்டிக்கப்பட்டுச் சிறைவாசத்தை எதிர்பார்த்து அங்கே உட்கார்ந்திருந்த அவன் ஜடம் போல, முகத்திலோ கண்ணிலோ எவ்விதச் சலனமும் இன்றி உட்கார்ந்திருந்தான். ஒரு மனிதனால் அவ்வளவு நிச்சலனமாக இருக்கமுடியும் என்று அதற்குமுன் யாராவது சொல்லியிருந்தால் நான் அதை நம்பியே இருக்கமாட்டேன். உள்ளும் புறமும் சூனியந்தான் அவன் கண்ணில் பட்டது போலும்! இல்லாவிட்டால் அவன் ஜெயில் சுவரைப் பார்த்துக் கொண்டு, அவைகளுக்கப்பால் என்ன இருக்கும் என்று கற்பனை செய்வதில் ஈடுபட்டிருப்பானேன்?
விஷயத்தைக் கொஞ்சங் கொஞ்சமாக விசாரித்து முழுவதும் கிரகிக்காமல் வக்கீல் தன்னை விடமாட்டார் என்று தோன்றிற்றோ என்னவோ போலீஸ்காரனுக்கு; அவன் தானாகவே, சுருக்கமாக நாலைந்து வார்த்தைகளில் கொலைக்கதையைச் சொன்னான்.
“புதிதாக ஒன்றும் இல்லை ….. இவன் பேர் கறுப்பன். இவன் பெண்சாதியின் பேர் பாப்பாத்தி. அவள் சிவப்பாய்க் கண்ணுக்கு அழகாயிருப்பாள். ஒருநாள் குடித்துவிட்டுக் கறுப்பன் வீடு திரும்பும் போது பாப்பாத்தியுடன் ஊர் மணியக்காரன் பிள்ளை ஜோராகப் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்து விட்டான். மண்வெட்டியை எடுத்து ஒரே போடாகப் போட்டு விட்டான். மணியக்காரன் பிள்ளை மூணாநாளில் தீர்ந்து போனான். பாப்பாத்திக்கும் நல்ல காயம். இவனுக்குப் பதினாறு வருஷம். அவ்வளவுதான்” என்றான் போலீஸ்காரன்.
இவ்வளவு சுருக்கமாகவும், சற்றும் கருணையில்லாமலும் இக்கதையைத் தன் உணர்ச்சிகளைப் பாராட்டாமல் போலீஸ்காரன் சொல்லிக் கொண்டிருக்கும் போதாவது அந்தக் கைதியின் முகத்தில் ஏதாவது சலனம் ஏற்படுமா பார்க்கலாம் என்று நான் அவனுடைய முகத்தையே உற்றுக் கவனித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன்…. கைதியும் நான் தன்னையே கவனிப்பதைக் கவனித்தான் என்றே நம்புகிறேன்.
ஏனென்றால் அந்தக் கொலைபாதகன் வக்கீல் பக்கமோ, போலீஸ்காரன் பக்கமோ திரும்பாமல் என்னைப் பார்த்துக் கொண்டு மெதுவாகச் சொல்லலானான்: “என் ஆயுசிலே அதுவரையிலும் அந்த ஒரு நாள் அந்திப்பொழுதிலேதான் நான் குடிக்காமல் இருந்தது! குடித்துவிட்டு வந்திருந்ததாகத்தான் அந்தச் சிறுக்கியும் கோர்ட்டாரும் நம்பினாங்க.” மற்றவர்கள் காதில் அது எப்படி விழுந்ததோ என்னவோ எனக்குத் தெரியாது. அந்த வார்த்தைகளில் கட்டுக்கடங்காத ஓர் எக்களிப்பு ஒலித்ததுபோலத் தோன்றிற்று எனக்கு.
“அட பாவிப் பயலே!” என்றான் போலீஸ்காரன்.
“குடி என்று நம்பினதால்தான் பதினாறு வருஷத்தோடு விட்டது” என்றார் சட்டம் தெரிந்த வக்கீல்; “இதுதான் முதல் குற்றமோ?”
“ஆமாம்; அந்தக் கதவைத் தாண்டினால் எப்படியிருக்கும் என்று பயலுக்குத் தெரியாது!”
பழையபடி தன் யோசனைகளில் ஆழ்ந்திருந்தான் கறுப்பன்.
“இப்போது தெரிந்துவிடும்” என்றார் வக்கீல்.
கிழக்கைதி இவ்வளவு நாழிகை பேசாமல் உட்கார்ந்திருந்தவன் திடீரென்று, “எங்களைப் போன்றவர்களுக்கு உள்ளே இருப்பதைவிட வெளியே இருப்பதுதான் தேவலை, சாமி!” என்றான்.
“நீ சுவர் ஏறிக் குதித்து ஓடினாயே; அப்போது இப்படித் தோணிற்றா உனக்கு?” என்று கேட்டுவிட்டுக் கொலைபாதகன் சிரித்தான். அவன் சிரித்த சிரிப்பு, பையில் காசும் பீடிகளும் குலுங்கக் கவலையற்றுத் தெருவில் திரியும் நாடோடியின் சிரிப்புப் போல இருந்தது. ‘அவன் கண்ணில் அந்த ஜெயில் கதவும் ஆயுதந் தாங்கிய சிப்பாயும் படவில்லையோ! அல்லது பட்டுத்தான் உறைக்கவில்லையோ!’ என்று எண்ணி ஆச்சரியப்பட்டேன் நான்.
அச்சமயம் ஜெயில் திட்டிவாசல் கதவு திறந்தது. சற்றுமுன் நாங்கள் பார்த்துப் பேசிய ஜெயில் சின்ன அதிகாரி அந்தக் கதவுக்கு வெளியே தலையை மட்டும் நீட்டி, “கைதிகளைக் கொண்டுவா” என்று உத்தரவிட்டார். கொலைக்கைதி தயாராக எழுந்து நின்றான். “கிழவா, எழுந்திரு. சொர்க்கவாசல் திறந்திடிச்சு” என்றான் அவன்.
போலீஸ்காரன் அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு ஜெயில் கதவை நோக்கி நடந்தான். கடைசி வரையில் கொலைபாதகனின் முகத்தையும் வார்த்தைகளையும் கவனிப்பது என்ற உத்தேசத்துடன் நானும் அவர்களைப் பின்தொடர்ந்தேன். முதல் பத்தடிகள் எல்லோரும் மௌனமாகவே நடந்தார்கள். கொலைபாதகனின் முகத்தில் பழையபடியே நிச்சலனமும், உணர்ச்சியின்மையும் குடிகொண்டிருந்தன. ஆனால் திட்டிவாசலை நெருங்கும்போது அவன் திடீரென்று போலீஸ்காரனைக் கேட்கலானான்.
“இப்போ ரெயிலில் வந்தோமே! அதற்குப் பணங்கொடுத்தது யார்? டிக்கட் செலவு ஆருடையது?” என்றான்.
இதற்குப் போலீஸ்காரன் சொன்ன பதில் என் காதில் விழவில்லை . ஏனென்றால் அச்சமயம் அவர்கள் திட்டிவாசலைத் தாண்டிவிட்டார்கள். கதவு தானாக மூடிக்கொண்டுவிட்டது.
என்னால் மேலே போக முடியவில்லை.
அந்தக் கைதியின் கடைசி வார்த்தைகள் என்ன மனோபாவத்தைக் காட்டின என்பதை நான் உணரச் சில விநாடிகள் ஆயின. அப்புறம் சார்த்தியிருந்த திட்டிவாசற் கதவை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டேன். வேறு என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை .
நான் திரும்பி மரநிழலுக்கு வந்தேன். என் நண்பர்கள் இருவரும் மௌனமாக உட்கார்ந்திருந்தனர். நானும் அவர்களுடைய மௌனத்தில் கலந்து கொண்டேன். என் நண்பருக்கு அருகில் இருந்த வெற்றிலைக்கட்டுக் குறையாமல் இருந்ததை ஆச்சரியத்துடன் கவனித்தேன்.
“ஆமாம்” என்று ஆரம்பித்தார் அந்த நண்பர்; “வெற்றிலை போட நான் மறந்தே போய்விட்டேன்…என் முப்பது வயசில் இதுதான் முதல் தடவை. தான் செய்ததே சரி என்று ஜெயில் வாசலில் கூடத் திடமாக நம்புகிறவனை இன்றுதான் பார்த்தேன்” என்றார்.
“அவன் நம்பிக்கை சரியானதல்ல என்று சொல்ல நாம் யார்?” என்றேன் நான்.
அதற்கு அப்புறம் வெகுநேரம் கழித்து ஜெயில் சூபரிண் டெண்டெண்டு வந்தார். அவரைக் கண்டதும் காவற்காரன் பயங்கரமாக, ‘அடென்ஷன் ஸல்யூட்’ பண்ணினான். நாங்கள் எங்கள் மனுவை எழுதித் திட்டிவாசலைத் தாண்டி அனுப்பி வைத்து விட்டு மறுபடியும் மரநிழலுக்கு நகர்ந்து காத்துக் கொண்டிருந்தோம், காத்துக் கொண்டிருந்தோம்; கடைசியில் சாமான்களைக் கொடுக்கலாம் என்று அனுமதி வந்தது. சாமான்கள் பட்டியல்படி சரியாயிருக்கின்றனவா என்று சரிபார்த்து ஜெயில் சின்ன அதிகாரி ஜெயில் வாசற்படியண்டை வந்து வாங்கிக் கொண்டார். ஊறுகாய் ஜாடியைக் கொடுக்கும் போது வக்கீல் நண்பர், “இதை ஜல்தி கொடுத்துவிடுங்கள்” என்று சொல்லிவைத்தார்.
சின்ன அதிகாரிகளுக்கென்று இருக்கும் மிகச் சிறந்த தோரணையில் சட்டென்று பதில் கிடைத்தது; “எப்போது எப்படிக் கொடுக்கவேணும் என்பது எங்களுக்குத் தெரியும், ஸார்!”
எனக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, “ஜெயிலதிகாரி யானாலும் ஊறுகாய் விஷயம் தெரியாமலா இருக்கும்?” என்றேன்.
அந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று யோசிப்பவர் போலச் சற்றுநேரம் அவர் என்னையே பார்த்தார்.
கொண்டுவந்த சாமான்களையெல்லாம் அவரிடம் ஒப்படைத்து விட்டு நாங்கள் நகர்ந்தோம். வெயில் தணிந்துவிட்டது. வெளிகேட்டைத் தாண்டி அவிழ்த்து விடப்பட்டிருந்த வண்டியைப் பூட்டச் சொல்லிக்கொண்டு நிற்கும்போது ஒருத்தி வந்தாள்.
அவள் எங்கிருந்து வந்தாள் என்று நான் கவனிக்கவில்லை . அவளுக்கு வயசு இருபதுதான் இருக்கும். நல்ல எடுப்பான, விசாலமான கண்கள்; கட்டான தேகம்; மாநிறம். அவள் முகம் பார்ப்பதற்கு வசீகரமாகத்தான் இருந்தது. அழுது அழுது அவள் கண்கள் சிவந்திருந்தன. தலைமயிர் சிலநாளாக எண்ணெயோ சீப்போ படாததால் பரந்து பரட்டையாக இருந்தது. எனினும் அவள் முகத்தில் விவரிக்க முடியாத ஒரு வசீகரமும் அழகும் இருந்தன. சட்டென்று என் ஞாபகத்தில் தட்டியது.
“பாப்பாத்தியா?” என்றேன்.
“ஆமாங்க-” அவள் கூடிய மட்டும் அழுகையை அடக்கிக் கொண்டுதான் பதிலளித்தாள்; “அவுங்க உங்ககிட்டே பேசிக்கிட்டு இருந்ததெ இங்கிட்டிருந்தே பார்த்தேன். நீங்க வருமட்டும் காத்துக்கிட்டிருந்தேன்” என்றாள்.
நான் பதில் சொல்லவில்லை. வெற்றிலை பாக்கு நண்பர், “அவனை ஜெயிலுக்குள்ளே அழைச்சுக்கிட்டாங்க” என்றார்.
அவர் குரல் ஒரு தனிப்பட்ட அர்த்தத்துடன் தொனித்தது. ஆனால் அதைப் பாப்பாத்தி புரிந்து கொள்ள முடியுமா?
விம்மல்களுக்கிடையே, “அவரு என்ன சொன்னாரு?” என்று கேட்டாள் அவள்.
அவளிடம் சொல்லும்படியாகக் கறுப்பன் என்ன சொன்னான் என்று எனக்குச் சட்டென்று தோன்றவில்லை. சற்றுத் தயங்கினேன்.
“அன்னிக்குச் சாயங்காலம் அவன் குடிவெறியில் இல்லையாம்!” என்றேன் கடைசியில்.
“எனக்குத் தெரியுங்க சாமி, அது” என்றாள் பாப்பாத்தி.
அதற்குமேல் அவளால் அழுகையை அடக்க முடியவில்லை . பாவம்! வெளிகேட்டின் மேல் சாய்ந்து கொண்டு, தோள்கள் குலுங்கக் குலுங்க விம்மி அழ ஆரம்பித்துவிட்டாள்.
இவ்வளவு நாழிகை சுவாரசியமாகத் தூக்கத்தில் கழித்துவிட்ட வண்டிக்காரன், “ரொம்ப நாழியாப் பூட்டுது. ஏதாவது சேத்து…” என்று சொல்லிக் கொண்டே வண்டியைப் பூட்டினான். என் நண்பர்கள் இருவரும் வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். பாப்பாத்தியிடம் சொல்ல வேறு ஏதாவது விஷயமுண்டா என்று சற்றுத் தயங்கிறேன். வேறு ஒன்றும் இருந்ததாகத் தெரியவில்லை. நானும் வண்டியில் ஏறிக்கொண்டேன். வண்டி கிளம்பிற்று. நாங்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டோம் என்பதை அவள் கவனித்தாளோ என்னவோ எனக்குத் தெரியாது.
ஆனால் வண்டியில் நாங்கள் யாவரும் அந்த நாலு மைலும் கடந்து ரெயில்வே ஸ்டேஷன் வரும் வரையில் ஒரு வார்த்தையும் பேசவில்லை!
– 1944, க.நா.சு . சிறுகதைகள்