கொலைக் கணக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: February 19, 2023
பார்வையிட்டோர்: 6,283 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“உங்க கணவர் எப்படிக் கொலை செய்யப்பட்டார்னு கொஞ்சம் மறுபடியும் சொல்லுங்க,” ராதிகாவிடம் இன்ஸ்பெக்டர் கேட்டுக் கொண்டிருந்தார். கொலை செய்யப்பட்டு இரண்டு மாதங்களாகியும் இன்னும் துப்பு துலங்கவில்லை.

“சார், கொலை நடந்த அன்னிக்கு இரவு பத்து மணிக்கு நானும் அவரும் இருட்டான அந்தச் சாலை வழியாக நடந்து போய்க் கொண்டிருக்கும் போது, அவரை சுட்டுட்டு ஓடிட்டாங்க சார். அது அவரோட எதிரிங்க தான் யாராவது இருக்கணும்” சொல்லிக் கொண்டிருக்கும் போதே விக்கித்து அழுதாள்.

“நான் உங்கக்கிட்டே இந்தக் கொலையைப் பத்தி பல முறை கேட்டு தொந்தரவு கொடுத்திட்டேன். மன்னிக்கணும். கடைசியாய் ஒரு கேள்வி கேட்கிறேன். அதுக்குமட்டும் நீங்க பதில் சொல்லிட்டா போதும்!“

“என் கணவரை கொலை செஞ்சவனை கண்டுபிடித்து தூக்கிலே ஏத்தணும் சார் அதுக்காக நீங்க எத்தனை முறை என்கிட்டே விவரங்கள் கேட்டாலும் நான் அதைப் பத்தி சொல்ல கடமைப்பட்டிருக்கேன் சார்!”

“சரி நீங்க உங்க கணவர் கொலை செய்யப்பட்ட அன்னிக்கு, ரெண்டு பேரும் இருட்டு சாலை வழியாக நடந்து வந்ததாகத்தான் சொன்னீங்களே தவிர எங்கே போய்விட்டு அந்தச் சாலை வழியாக நடந்து வந்தீங்கன்னு சொல்லலியே” இன்ஸ்பெக்டர் கேட்டார்.

“இல்லே சார், அது பத்தி நீங்க இதுவரை கேட்காததாலே நானும் சொல்லலே அவ்வளவுதான்!” ராதிகா ஒருவாறாக சமாளித்தாள்.

“சரி இப்ப கேட்கிறேன். எங்கே போய்ட்டு வந்தீங்க?”

“நாங்க ரெண்டு பேரும் அன்னிக்கு முதல் காட்சி சினிமாவுக்கு போய்ட்டு வந்தோம் சார்” ராதிகா சொன்னாள்.

“உங்களை உங்க கணவர் கொலை வழக்கு சம்பந்தமாக கைது செய்கிறேன்!”

“ஏன் இன்ஸ்பெக்டர் என்னை கைது செய்யறீங்க? ”

‘உங்க கணவர் கொலை செய்யப்பட்ட அன்னிக்கு தமிழ்நாடு முழுவதும் சினிமா தியேட்டர்களிலே எங்கும் சினிமா ஓடலே. கேளிக்கை வரியை குறைக்கச் சொல்லி ஸ்டிரைக் நடந்திருக்கு, நீங்க இப்படி பொய் சொல்றதிலேர்ந்தே தெரிகிறது நீங்களும் உங்க கணவரை கொலை செய்ய உதவியிருக்கீங்கன்னு. உங்கள மேலும் விசாரிக்கத்தான் இப்ப சந்தேகத்தின் பேரில் கைது செய்யறேன்! சொல்லிய இன்ஸ்பெக்டர் ராதிகாவை கைது செய்தார்.

தீவிர விசாரணைக்குப்பின் தான் ஆரம்பத்திலேர்ந்து காதலித்து வந்த தன் காதலனை கல்யாணம் செய்து கொள்வதற்காகவே தன் கணவனை காதலனின் உதவியோடு கொலை செய்ததாக ஒப்புக் கொண்டாள்.

– நெகிழ்ச்சியூட்டும் சிறுகதைகள்!, முதற் பதிப்பு: 2005, மல்டி ஆர்ட்ஸ் கிரேஷன்ஸ், சிங்கப்பூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *