கிரௌன் பிராஸிகியூடர் திவான் பகதூர் அமிர்தலிங்கம் பலே ஆசாமி. கேஸ் விவாதிப்பதில் ரொம்பப் பழக்கம். உட்காரும்பொழுது ஜுரர்களுக்கு ஸ்பஷ்டமாக விளங்கும்படி செய்துவிட்டு உட்கார்ந்தார். அவர் சில வக்கீல்கள் மாதிரி கோர்ட்டின் பச்சாதாபத்தையும், இளகிய ஹ்ருதயத்தையும் எதிர்பார்ப்பவர் அல்ல. கைச் சரக்கும் உணர்ச்சி நாடகமும் இல்லாமல் வெறும் விஷயத்தை மட்டும் விளங்க வைத்துவிட்டு உட்கார்ந்தார்.
விஷயம், விஷயம், விஷயம். இதைத் தவிர அமிர்தலிங்கத்திற்கு வேறு கவலை கிடையாது. விஷயமும் தர்க்கமும் கேஸை வாதிப்பதற்கு இருக்கும்பொழுது சோக நாடகம் போட வேண்டியதில்லை என்பது அவர் துணிபு.
அவர் உட்கார்ந்ததும் எதிர்க்கட்சி வக்கீல் திரு. லக்ஷ்மண பிள்ளை குற்றவாளியின் சார்பாக வாதிப்பதற்கு எழுந்தார். திவான் பகதூர் அமிர்தலிங்கத்திற்குப் புன்சிரிப்பு வந்தது. நம்ப முடியாத கதை. ஜுரர்கள், ஆமாம், அவர்கள் எப்படி நம்புவார்கள்? அவருடைய பிரசங்க மழையைச் சிதற அடித்து மாட்சிமை தங்கிய நீதிபதியின் முன் தமது கட்சியை ஸ்தாபிப்பது கஷ்டமல்ல.
அமிர்தலிங்கம் தொழிலில் பழம் பெருச்சாளியானாலும் இந்தக் கேஸில் விவாதிப்பது அவருக்கு மிகவும் உத்ஸாகமாக இருந்தது. இருந்தாலும் அது மிகவும் சிக்கலான கேஸ். ஒரு மோசமான கிரௌன் பிராஸிக்யூடர் கேஸை ஆபாசமாக நடத்திக் குழப்பிவிடலாம்.
குற்றவாளிக்குத் தண்டனை நிச்சயம். முக்கால்வாசி அவனுக்குத் தூக்குத் தண்டனைதான். ஆமாம் நியாயம் வழங்கப்படாமல் இருக்க முடியுமா? உணர்ச்சியில் பண்பட்ட உள்ளமில்லையாயினும் குற்றவாளியின் மீது சிறிது பச்சாத்தாபம் ஏற்பட்டது. குற்றவாளி அழகன், படிப்பாளி… சகவாச தோஷம்.
எதிர்க்கட்சி வக்கீலின் பேச்சில் இது மட்டுந்தான் அமிர்தலிங்கம் கவனித்தார். அதன் பிறகு தனது நீண்ட யோசனையில் கோர்ட்டை மறந்தார்.
எதிர்க்கட்சி வக்கீல் லக்ஷ்மண பிள்ளை பேசி முடித்து உட்கார்ந்தார். அமிர்தலிங்கம் மெதுவாகப் பொடியை உறிஞ்சிவிட்டு கோர்ட்டைக் கவனித்தார். ‘லன்ச்’சுக்காகக் கோர்ட்டு ஒத்திவைக்கப்பட்டது.
திவான் பகதூர் அமிர்தலிங்கம் பக்கத்து வாசல் வழியாக வெளியே செல்லும்பொழுது, தனது வழியைத் தடை செய்துகொண்டு ஒரு வாலிபப் பெண் இருப்பதைக் கண்டார்.
“உங்களிடம் சற்று பேசலாமா? ஒரு நிமிஷம்” என்றாள்.
முகம் இளைத்தவள்; கிழிந்த உடைகளைக் கட்டியிருந்தாலும் அவள் நல்ல அழகி என்று கவனித்தார். அவள் மனம் மிகவும் குழம்பியிருப்பது போல் தோன்றியது.
“என் குமாஸ்தாவைப் பாருங்களேன். உங்களிஷ்டப்படி நடக்க முடியாததற்கு வருந்துகிறேன். நீங்களே பாருங்கள் எனக்குக் கொஞ்சமாவது ஒழிவு இருக்கிறதா என்று.”
“ஆமாம் நீங்கள் டிபன் சாப்பிட வேண்டியதுதான்.”
“ஆமாம் டிபன் சாப்பிடாமல் இருக்க முடியுமா?”
அமிர்தலிங்கம் சற்று வெறுப்புடன் பேசினார். திவான் பகதூருக்கும் வயிறு என்று ஒன்றிருக்கிறது என்று யாராவது ஞாபகப்படுத்தலாமா?
“கொஞ்ச நேரமாவது என்னுடன் பேச முடியாதா?”
“நீங்கள்தான் பாருங்களேன். சரி – சரி… காரியத்தையாவது சொல்லுங்கள்.”
“இங்கேயா! இந்தக் கூட்டதிலா, சமாசாரம் மிகவும் முக்கியமானது. அதுவும் கொஞ்சம் இரகசியமானது. உங்களைத் தனியாகக் கண்டு பேச முடியுமா?”
“அது முடியாது.”
இப்படிச் சொன்னாலும் அவர் மனம் சிறிது இளகியது. அவள் முகம், சோகம் தேங்கிய முகம் கவர்ச்சித்தது. என்னவென்று அறிய ஆவல்.
“கேஸ் முடிந்ததும் எனது அறைக்கு வாருங்கள். அதாவது நீங்கள் சொல்லப்போகும் விஷயம் அவ்வளவு முக்கியமானது, எனது உதவி அவசியம் என்று பட்டால்” என்று சொன்னார்.
“நீங்கள் மனம் இரங்கியதற்கு நான் என்ன சொல்லுவது. ஆனால் அப்பொழுது நான் உங்களைச் சந்திப்பதில் பிரயோஜனமில்லை.” பிறகு மிகவும் தணிந்த குரலில், “கிட்டுவைப் பற்றி” என்றாள். அவள் முகம் சிவந்து வியர்த்தது. எப்படியிருந்தாலும் ஹிந்துப் பெண் அல்லவா? வேறு வழியில்லை.
திவான் பகதூர் திடுக்கிட்டார். யாரோ நெஞ்சில் சம்மட்டியால் அடித்தது போல் கலங்கினார்.
“கிட்டுவைப் பற்றி என்ன? நீ யார்?”
“நான் அவருடைய… மனைவி” என்றாள்; நாணம், சோகம், அவர் பெயரைக் கூறுவதினால் ஏற்படும் ஒரு இன்பம் அலைபோல் எழுந்து மறைந்தது.
திவான் பகதூருக்குக் கலக்கம் அதிகமாயிற்று. முகமே அதைக் காண்பித்துவிட்டது.
“கிட்டுவின் மனைவி!”
அவள் அவருடைய முகத்தை ஆவலுடன், சோகத்தில் பிறந்த ஆவலுடன் கவனித்தாள்.
“என் பின்னே வா!” என்று சடக்கென்று கூறினார்.
திவான் பகதூர் அவளைக் கோர்ட்டில் தனக்கென்றிருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றார். உள்ளே சென்றதும் அவளை ஒரு நாற்காலியில் உட்காரச் சொன்னார். அவள் உட்காரவில்லை. மூலையில் ஒதுங்கி நின்றாள். திவான் பகதூருக்கு இருக்கும் உள்ள கலக்கம் அவரைப் பரபரப்புடன் அறையைச் சுற்றி நடக்கச் செய்தது.
“என் மகனுடைய மனைவி என்று கூறுகிறாய். அது உண்மையா? நீ சொல்லுவது நிஜமாக அப்படித்தானா? நிஜமாக உங்களுக்குள் கலியாணம் நடந்ததா?” என்று கேட்டார்.
“ஆறு மாசத்துக்கு முன்னே ரிஜிஸ்தர் கலியாணம் செய்துகொண்டோ ம்” என்றாள் அவள். அவள் வார்த்தையில் அவளது களங்கமற்ற உள்ளம் பிரதிபலித்தது.
“அப்படியா?”
“நேற்றுவரை அவர் உங்கள் மகன் என்று எனக்குத் தெரியாது.”
“நிஜமாக!” அவர் வார்த்தைகளில் சந்தேகமும் கேலியும் கலந்திருந்தது.
“இது ரொம்ப – ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது. நீ இந்தப் ‘பெரிய’ சமாசாரத்தைச் சொல்லாவிட்டால் எனக்குத் தெரிந்தே இருக்காது. புது மருமகள் இருக்கிறாள் என்று தெரியாமல் போயிற்று. இந்தச் ‘சந்தோஷ’ சமாசாரத்தைக் கேட்ட பிறகு காது குளிர்ந்துவிட்டது. இன்னும் என்னமோ சொல்லவேண்டும் என்று வந்தீர்களே! அதைச் சொல்லுங்கள். கேட்கிறதற்குத் தயார். நேரமும் கொஞ்சம். ஆமாம் நான் டிபன் சாப்பிட வேண்டாமா?” என்று கேலியும் குத்தலுமாக மனதிலுள்ள வெறுப்பை எல்லாம் தமது வக்கீல் வேலையுடன் சேர்த்துக் காண்பித்தார். அமிர்தலிங்கத்திற்கு ஒரு புறம் கோபம், ஒரு புறம் வெறுப்பு. “வீட்டு விலாசம் 6, அய்யப்பன் பிள்ளைத் தெரு, மைலாப்பூர்” என்று சொல்லிக்கொண்டே வெளியே செல்லயத்தனித்தார்.
“போகாதேயுங்கள். கேட்டுவிட்டுப் போங்கள். இந்தக் கேஸிலிருக்கும் குற்றவாளியைத் தப்பவைக்க முக்கியமான சாட்சியம் அவரிடம் இருக்கிறதென்று சொல்லச் சொன்னார்.”
“குற்றவாளி! எந்தக் குற்றவாளி?” என்றார் அமிர்தலிங்கம்.
“இப்பொழுது நடக்கிற கேஸில்… அந்தக் குற்றவாளி…”
“இந்தக் கேஸில் என் மகனுமா! உளறாதே. பயப்படாமல் சொல்லு. என்ன சொல்லுகிறாய்?”
“என்னுடைய அண்ணனை அவர் சாட்சியம் தப்புவிக்கும் என்று.”
“உன் அண்ணன்!”
திவான் பகதூருக்குப் புதிருக்கு மேல் புதிராக சமாசாரங்கள் வெளிவந்து கொண்டிருந்தன.
“உன் அப்பா பெயரென்ன?”
“ஜம்புநாத அய்யர்.”
இந்த குற்றவாளியின் தகப்பனாரும் அவர்தான். உள்ளத்தில் ஏற்பட்ட குழப்பத் திரையை விலக்க முயல்வதுபோல் அமிர்தலிங்கம் முகத்தை, நெற்றியை, துடைத்தார்.
“அவர் என்னை உங்களிடம் அனுப்பினார்.”
இந்த வார்த்தைகள் வக்கீலைக் கோபமூட்டின.
“அப்படியா! கிட்டு, பிறகு எங்கே ஒளிந்து இருக்கிறான். அவன் ஏன் மனிதன் மாதிரி வெளியில் வரக்கூடாது?”
அவள் கலங்கிய கண்களைக் கவனித்தார். அவர் கோபம் விலகியது. அவளுடைய பதிலை அவர் உள்ளம் எதிர்பார்த்தது போல் இருந்தது. அவர் உள்ளமும் உடைந்து உடலும் சோர்ந்தார்.
“அவர் பாயும் படுக்கையுமாய்… மிகவும் அபாயத்திலிருக்கிறார். டாக்டர் பிழைப்பதுகூட…” என்று சொல்லி விம்மி விம்மி ஏங்கினாள். உள்ளத்தின் கஷ்டம் பொருமிக்கொண்டு வெளிப்பட்டது.
“நாம் இருவரும் என்ன கனவு காண்கிறோமா?” என்றார் அமிர்தலிங்கம்.
“டாக்டர் அன்று வந்துவிட்டுப் போன பிறகு உங்களைப் பார்க்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். இன்னும் ரொம்ப நேரங்கூட… இருக்கமாட்டார் என்று டாக்டர் சொன்னார். அவர் எங்கள் அண்ணனைக் காப்பாற்ற முடியுமாம். நீங்கள் தான் அதை முதலில் கேட்க வேண்டுமாம். எங்கள் அண்ணனுக்குத் தெரிந்த வக்கீல் ஒருத்தரையும் கூப்பிடச் சொன்னார். அதை உங்களால் செய்ய முடியுமா? என் அண்ணாவுக்காக இல்லை. அவர் கஷ்டப்படுவதைப் பார்க்க சகிக்கவில்லை. அதுதான் அவரது மனதை வாட்டிக் கொண்டு இருக்கிறது. அந்த வக்கீலைப் பார்க்கும்வரை நெஞ்சு வேகாது என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். அண்ணன் உயிரை அவர் காப்பாற்ற முடியுமாம். அது முடியுமா?”
அமிர்தலிங்கம் அவள் சொன்னதைக் கேட்கவேயில்லை.
“நான் அவனைப் பார்க்கவேண்டும். இரு, இதோ வருகிறேன். யாரையும் உள்ளே வரவிடாதே இரண்டு நிமிஷம்.”
அவருடைய ஜுனியர் பக்கத்தறையில் டிபன் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்.
“கேஸை நீ பார்த்துக்கொள். நான் ஒரு நோட் வேண்டுமானால் ஜட்ஜிற்கு அனுப்பி வைக்கிறேன்.”
ஜுனியரும் நல்ல பழகின ஆசாமிதான்.
அமிர்தலிங்கம் தமது வக்கீல் சட்டையைக் கழற்றிவிட்டு, ஜட்ஜிற்கு ஒரு ‘நோட்டும்’ எழுதி அனுப்பிவிட்டுத் திரும்பி வந்து அவளையழைத்துக் கொண்டு பின்புற வழியாக ஒரு வாடகை மோட்டாரில் மகனுடைய வீட்டிற்குச் சென்றார்.
திவான் பகதூர் அமிர்தலிங்கம் தனது மகன் இருக்கும் வீட்டைக் கண்டதும் திடுக்கிட்டார். சென்னையில் பணமில்லாவிட்டால் நல்ல வீடு எங்கு கிடைக்கும்? ஒண்டுக்குடித்தனம்; இருட்டறை; சமையலும் அதற்குள்தான். மகன் கிழிந்த ஓலைப்பாயில் படுத்திருந்தான். அவள் உள்ளே சென்றதும் மாமனாரைப் பற்றிக் கவனிக்கவில்லை. கிட்டுவின் தலை, தலையணையைவிட்டுச் சற்று விலகியிருந்தது. அவனை மெதுவாக எடுத்து மார்புடன் அணைத்துக் கொண்டு தலையணையில் அதை உயரமாக வைத்துச் சாய வைத்தாள்.
“அப்பா வாருங்கள்” என்றான் கிட்டு ஹீனஸ்வரத்தில். “உங்களால் வரமுடியும் என்று நினைக்கவேயில்லை. இருக்கிறதைப் பார்த்தால் இன்னம் கொஞ்ச நேரம் இருப்பேன்.”
அமிர்தலிங்கத்திர்கு ஈட்டியால் குத்தியது மாதிரி இருந்தது.
“ஏன் உடம்பிற்கு குணமில்லை என்று முன்னமே சொல்லிவிடக் கூடாது?” என்றார்.
“உங்களை இதுவரை தொந்திரவு செய்தது போதாதா? மங்களத்தைப் பற்றி உங்களிடம் சொல்ல எனக்குக் கொஞ்சம் பயம். நான் சொல்லுவது உங்களுக்கு அர்த்தமாகாது. ஏதாவது கோபமாக சொல்லுவீர்கள்” என்று சொன்னான்.
மங்களம் அவன் பக்கத்திலிருந்து அவனுக்குப் பால் ஆற்றிக்கொண்டிருந்தாள். தனது வாடிய கைகளால் அவளது கரத்தை மெதுவாகத் தடவிக் கொண்டு, அவள் கண்களில் நோக்கினான். ஒரு சோகம் கலந்த அன்பு தவழ்ந்தது. மங்களத்தின் கண்களில் கண்ணீர் பொங்கியது.
“எனது வாழ்க்கையில் மங்களம் இடம் பெற்றவுடன் எனது வாழ்க்கையே மாறிவிட்டது. ஆனால் கடவுளுக்குக்கூட பொறுக்கவில்லை.”
அவன் குரலில் ஒரு புதிய சக்தி பிறந்தது.
“இவளுடைய அண்ணனின் வக்கிலை அழைத்து வந்தீர்களா?” என்றான்.
“அவர் இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவார்.”
“இன்னும் கொஞ்ச நேரத்திலா? கொஞ்ச நேரம் கழித்து எதற்கு?”
“நான் தான் உன்னை முதலில் பார்ப்பது நல்லது என்று நினைத்தேன். கிட்டு, என்மீது உனக்கு நம்பிக்கை இருக்கிறதா?”
“உங்களை நம்பாமலா? ஆனால் எவ்வளவு நேரம் இருப்பேனோ?”
“இந்தக் கேஸில் உனக்கு என்ன சம்பந்தம், முதலில் இருந்து சொல்லு.”
கிட்டு மறுபடியும் களைத்துவிட்டான். மிகவும் கஷ்டப்பட்டு பேச வேண்டியிருந்தது.
“எல்லாவற்றையும் எழுதி வைத்திருக்கிறேன். டாக்டர் அன்றைக்குச் சொல்லிவிட்டுப் போன பிறகு எல்லாவற்றையும் எழுதி வைத்தேன். இவளுடைய அண்ணன் வக்கீல் வந்ததும் கை எழுத்துப் போட்டுவிடுகிறேன். இத்தனை நாள் தாமதியாமல் இருந்தால்… மங்களம் நீ கொஞ்சம் வெளியே போய்விட்டு வா. அப்பாவிடம் பேச வேண்டியிருக்கிறது.
“அவரைக் களைத்துவிடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்” என்றாள் மங்களம்.
அமிர்தலிங்கம் தலையை அசைத்தார்.
“மங்களத்திற்கு நான் என்ன சொல்லப் போகிறேன் என்று தெரியாது. அவளுக்கும் உங்களுக்கும் திடுக்கிடும்படியாகத்தான் இருக்கும்.”
தலையணையின் கீழ் இருந்த காகிதத்தை எடுத்தான்.
“எல்லாம் இதில் இருக்கிறது. அவர் வந்ததும் கை எழுத்துப் போட்டுவிடுகிறேன்.”
அமிர்தலிங்கம் அதை வாங்கி, கண்ணாடியைப் போட்டுக் கொண்டு வாசிக்க ஆரம்பித்தார். அதை வாசித்து முடித்த பிறகும் அவர் குரல் மாறவில்லை.
“இந்த கேஸில் புதிய விஷயங்களைச் சொல்லியிருக்கிறாய். இதனால் உன் குடும்பத்திற்கு என்ன நேரும் என்பதை யோசித்திருப்பாய் என்று நம்புகிறேன். ஆனால் இதைத் தவிர வேறு வழியில்லை. உனது தாய் நல்ல காலமாக இது எல்லாம் கேட்காமல் இறந்து போகக் கொடுத்து வைத்தவள். நீ உனது மனைவியின் பேரில் மிகவும் பிரியம் வைத்திருக்கிறாய். உனக்கு என் பேரில் கொஞ்சமாவது பிரியம் கிடையாது என்று எனக்குத் தெரியும்.”
“அப்படியல்ல அப்பா. உங்கள் பேரில் எனக்கு எவ்வளவு பிரியம் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது. நீங்களும் எனக்கு எவ்வளவோ செய்து பார்த்தீர்கள். அது உங்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்தது என்று எனக்குத் தெரியும். என் குணத்தில் எங்கோ ஒரு கோளாறு இருந்திருக்க வேண்டும். மங்களம் இதற்கு முன்பு என்னைச் சந்தித்திருந்தால் எனது வாழ்க்கை வேறு மாதிரியாக இருந்திருக்கும். மங்களம் எனது வாழ்க்கையில் வரும்பொழுது நான் பலவீனமாகிவிட்டேன். எல்லாம் சீக்கிரம் முடிந்துவிடும்” என்றான்.
அமிர்தலிங்கம் முகத்தை மூடிக்கொண்டார்.
“உங்கள் இருவருக்குமாகவாவது வேறு மாதிரி நான் நடந்து கொள்ளலாம். நான் தூக்கிற்குச் செல்லவேண்டிய அவசியமில்லாத பொழுது உண்மையைச் சொன்னால் என்ன? இன்று முழுவதும் இருப்பேனோ என்னவோ?”
அமிர்தலிங்கம் நடுங்கினார். தன்னையறியாமல் மறுபடியும் காகிதத்தை வாசித்தார்.
“இது ஒரு மாதிரி முடிந்துவிட்டால் எனது மனம் நிம்மதியாகிவிடும்.”
அமிர்தலிங்கம் பத்திரத்தைக் கவனித்து வாசிக்க ஆரம்பித்தார். பழைய வக்கீல் ஆகிவிட்டார்.
“என் முன்பாகக் கையெழுத்துப் போட்டாலே போதும்” என்றார்.
“நீ ஒப்புக்கொள்வதில் ஒரு சந்தேகமும் கிடையாது. உனது மைத்துனன் தப்பித்துக் கொள்ளுவான். ஆனால் உன்னைச் சிறையில் போடுவதற்குள்…”
“அப்படியா! அந்தப் பயலைக் கொல்வது குற்றமல்ல. நல்ல மனிதன் எவனும் அவனைக் கொன்றுவிடுவான்.”
“எப்படியானாலும் கொலை கொலைதான்” என்றார் வக்கீல்.
கிட்டுவிற்கு அர்த்தமாகவில்லை.
“கொலை கொலைதான். நீ எனது வாழ்க்கையின் ஏமாற்றம். எனது புகழையும் பட்டத்தையும் தேடும் அவசரத்தில் உன்னை மறந்தேன்.”
“அப்பா அதற்காக வருத்தப்பட வேண்டாம்.”
“கை எழுத்தைப் போடு.”
கிட்டு கையெழுத்திட்டான்.
“கவலைப்படாதே. அரை மணி நேரத்தில் இதை கோர்ட்டிற்குக் கொண்டு போய் விடுகிறேன்.”
பத்திரத்தைப் பைக்குள் வைத்துக் கொண்டார்.
“என்னை நம்பு. உம்! உன்னிடம் சில விஷயங்கள் கேட்க வேண்டும். கேஸில் சில விளங்கவில்லை. நீ கேஸைப் பேப்பரில் பார்த்தாயா?”
“ஆமாம் நேற்றுவரை அவன் தப்பித்துக்கொள்ளுவான் என்று நம்பியிருந்தேன்.”
“இதிலிருந்து கேஸென்றால் உனக்கு ஒன்றுமே தெரியாது என்று தெரிகிறதே. இறந்தவன் எப்படி இருப்பான் என்று சொல் பார்ப்போம்.”
“அப்படி ஒன்றுமில்லையே.”
“அவன் கையிலிருந்த மோதிரம் அதைப் பற்றி…”
கிட்டு தலையை அசைத்தான்.
“போலீஸார் வரும்பொழுது பிணத்தின் மீது அது இல்லை. ஒரு சாட்சி அதைப் பற்றிச் சொன்னான். கொலை செய்யப்பட்டவன் அதை அவனிடம் இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு காட்டியிருக்கிறான்.”
“ஆமாம்.”
“அதைப் பற்றி உனக்குத் தெரியுமா? ஞாபகப்படுத்திப் பார்; அது ஒரு மலையாளப் பெண் கொடுத்தது என்று உனக்குச் சொல்லி இருக்கிறானா?”
“ஆமாம் சொன்ன மாதிரி ஞாபகம் இருக்கிறது.”
“அதைப் பிணத்தின் மீது காணோமே! நீ எடுத்தாயா?”
“ஆம்! நான் தான் எடுத்தேன்” என்றான் கிட்டு.
ஒரு மௌனம். அமிர்தலிங்கம் விரல்களைச் சுடக்கிக் கொண்டார். “அதை எங்கே வைத்தாய்?”
“அப்பா நீங்கள் என்னை இந்த ஸ்திதியில் இப்படி ‘கிராஸ் எக்ஸாமினேஷன்’ செய்தால்! மிகவும் களைப்பாக இருக்கிறது. மங்களத்தைக் கூப்பிடுங்கள்…”
“கிட்டு அப்படி ஒன்றுமில்லை. தெரிந்தவரை சொன்னால் அனாவசியமாக நேரம் கழியாது…”
“அந்த மோதிரத்தை எடுத்து நானே எறிந்துவிட்டேன். எங்கே போட்டேன் என்று எனக்கு ஞாபகம் இல்லை.”
“மனம் குழம்பியிருந்திருக்கும். ஞாபகப்படுத்திப் பார்.”
“பிரயோஜனமில்லை” என்றான் கிட்டு சற்றுநேரம் கழித்து.
“நீதான் அவனுடைய புஸ்தகத்திற்குப் பின் ஒளித்துவைத்தாயா?” என்றார்.
கிட்டுவின் முகம் மலர்ந்தது. “ஆமாம் இப்பொழுதுதான் ஞாபகம் வருகிறது. அங்கேதான் வைத்தேன்” என்றான்.
“அப்படியா நன்றாக அர்த்தமாகிவிட்டது. சின்ன விஷயம். குழப்பத்தை விளக்கிவிட்டாய்.”
“போய் வாருங்கள் அப்பா! நீங்கள் வந்ததற்கு… மங்களத்தைப் பார்த்துக் கொள்ளுவீர்களா?”
அமிர்தலிங்கத்தின் கண்களில் நீர் துளித்தது.
“இன்னும் சந்தேகமா?” என்றார்.
அமிர்தலிங்கம் வெளியே வந்து மோட்டாரில் ஏறினார். உள்ளிருந்து விம்மியழும் அழுகைக் குரல் கேட்டது.
அந்தக் கேஸில் அமிர்தலிங்கம் கடைசியாகப் பேசும்பொழுது மோசமாக இருந்தது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அவரே குற்றவாளிக்குப் பரிந்து பேசுவது போல பட்டது.
அவர் தமது மகனுடைய கடிதத்தை வெளியில் எடுக்கவேயில்லை.
ஜுரர்கள் அவனைக் குற்றவாளி என்று அபிப்பிராயப்பட்டார்கள். தீர்ப்புக் கூற நீதிபதி கருப்புக் குல்லாவை அணிந்து கொண்டார்.
திவான் பகதூர் அமிர்தலிங்கமும் ஜுனியரும் வெளியே வந்தார்கள்.
“கேஸ்தான் முடிந்துவிட்டதே இவன் தான் குற்றவாளி என்று நீர் திட்டமாக நினைக்கிறீரா?” என்றார்.
ஜுனியர் ஆச்சரியப்பட்டு விழித்தார்.
“கேள்வி அதிசயமாக இருக்கலாம். உமக்குச் சந்தேகம் இருக்கிறதா?”
“சந்தேகம் இல்லை.”
தனது மகன் கொடுத்த கடிதத்தைக் கொடுத்தார்.
“இதை வாசியும். இதற்காகத்தான் மத்தியானம் சென்றிருந்தேன்.”
அவர் வாசித்து முடிக்கும்வரை காத்திருந்தார்.
“அப்புறம்?” என்றார் ஜுனியர் ஆச்சரியத்துடன்.
“எனது மகனைச் சில கேள்விகள் கேட்டேன். செத்தவன் போட்டிருந்த மோதிரத்தைப் பற்றிக் கூறினான்.”
ஜுனியருக்கு இன்னும் ஆச்சரியம் அதிகரித்தது.
“அவன் அதை எடுத்துவிட்டானாம். அது அவன் மீது இருக்க அவனுக்குப் பிடிக்கவில்லையாம்.”
“அப்படியா?”
“அவன் தான் அதை புஸ்தகத்தின் பின்புறம் ஒளித்தானாம்.”
“ஆமாம் ஸார். கேஸில் மோதிரத்தைப் பற்றியே பேச்சில்லையே!”
“ஆமாம். அது தான் செத்தவன் மோதிரம் வைத்திருந்ததே கிடையாது. அதைப் பற்றி என் மகனுக்கு எப்படித் தெரியும்? அவன் அங்கிருந்தால்தானே!” என்றார்.
– ஊழியன், 04-01-1935 (புனைப்பெயர்: நந்தன்)