குற்றம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: October 6, 2012
பார்வையிட்டோர்: 17,511 
 

இரவும் அமைதியும் எங்கும் பரவி கிடந்தன. மஞ்சள் புள்ளிகளாக விண்மீன்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மின்னிக்கொண்டிருந்தன. அந்த செம்பனைக் காட்டுக்கு சற்று தூரத்தில், நெடுஞ்சாலையில், வாகனங்கள் சீறிக் கொண்டு ஓடும் சத்தம் சன்னமாக அவ்வப்போது கேட்டு மறைந்தது.

அந்த மோன அமைதியைக் கெடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கில் ஒன்று ‘ட்ரு….ட்ரு’ என்ற சத்தத்தோடு வருவது கேட்டது. தொடர்ந்து, வீரா கடமை உணர்வோடு குரைத்தது. செல்லதுரை சன்னல் சீலையை கொஞ்சமாக விலக்கி, நிரந்தரமாக இருந்த சிறிய இடைவெளி வழி பார்த்தான். பரசுதான்……., மோட்டார் சைக்கிலை கேட் ஓரமாக நிறுத்தி விட்டு சாய்வாக தொங்கிக் கொண்டிருந்த இரும்பு கேட்டை திறந்துகொண்டு உள்ளே வந்தான். பழகிய மனித வாடை என்பதால் வீரா சாந்தமாகி வாலை சுருட்டிக்கொண்டு சரிந்து படுத்தது.

பரசு கதவை லேசாக தட்டினான்.

“தொறந்துதான் இருக்கு….உள்ள வா” என்றான் செல்லதுரை

பரசு அந்த தகர கதவை தள்ளி திறந்தான். உள்ளே வந்ததும் மேல் நாதாங்கியை தூக்கி கதவை பூட்டினான். அந்த அறையை முழுமையாக அடைத்துக்கொண்டு சிறைபட்டுக் கிடந்த சிகரேட் புகை திறக்கப்பட்ட கதவு வழி வெளியேற முண்டியடித்துக் கொண்டு ஓடியது. அவ்வளவு புகையும் பரசு உடலை ஒரே வீச்சில் தாக்கி கலைந்தன.

ஒரே ஒரு டியூப் விளக்கு அந்த சிறிய அறைக்குள் வெளிச்சம் பரப்பிக் கொண்டிருந்தது. அந்த சதுர வடிவிலான அறையில் ஒரு வட்டமான சாப்பாட்டு மேசையும் இரண்டு நாற்காலிகளும், ஒரு நீண்ட பழைய ரோத்தான் சோபாவும் பிரதானமாக கிடந்தன. ஒரு கையடக்க சோனி வானொலி பழைய பாடல்களைப் புதிய மெட்டில் பாடிக்கொண்டிருந்தது. மேசைக் காற்றாடி ஒன்று தட தட சத்ததுடன் சுழன்று கொண்டிருந்தது. மற்றபடி எரு மூட்டைகள், பூச்சி கொள்ளி மருந்து புட்டிகள், மண்வெட்டிகள், துடைப்பம், காலி டின்கள், அழுக்கு துணிகள் என்று பல பொருட்களும் ஒழுங்கற்று கிடந்தன.

செல்லதுரை சோபாவில் சாய்ந்து அமர்ந்திருந்தான். சட்டையை கழற்றி ஜன்னல் கம்பியில் மாட்டிவிட்டு வெறும் உடம்போடு இருந்தான். கையில் சிகரேட் புகைந்து கொண்டிருந்தது. கண்கள் சிவப்பேறி இருந்தன.

“என்ணாண்ணே…. ஆரம்பிச்சுட்டீங்களா?” என்று கேட்டபடி பரசு தான் கொண்டுவந்திருந்த பையை மேசையில் வைத்துவிட்டு பிலாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தான். மேசை மேல் கிடந்த சிகரேட் பாக்கேட்டை திறந்து ஒரு சிகரேட்டை பற்றவைத்துக் கொண்டான். பைக்குள் இருந்து எட்டு குளிர்ந்த பீர் டின்களை எடுத்து வெளியே வைத்தான். காகிததில் மடிக்கப்பட்ட வேறு ஒரு பொட்டலத்தைப் பிரித்தான். பட்டமிளகாய் கிள்ளிப்போட்டு, பெரிய வெங்காயம் சேர்த்து கிச்சாப்புடன் வறுக்கப்பட்ட கோழித்துண்டுகள் சூடு ஆறாமல் இருந்தன. காகிதப் பொட்டலத்துக்குள் சிக்கூண்டு இருந்த கோழி வறுவலின் மனம் குபீர் என்று வெளிப்பட்டு அறையில் நிறைந்தது.

செல்லதுரை தான் ஏற்கனவே குடித்து மீதம் வைதிருந்த மதுவை ஒரே மொடராக குடித்துவிட்டு காலி டின்னை கையாலேயே நசுக்கி ஒரமாக வைத்தான். சிகரேட்டை ஒரு இழு இழுத்து புகையை மூக்கு வழி விட்டான். கனன்று கொண்டிருந்த சிகரேட் துண்டை அணைத்து பீர் டின்னுக்குள் திணித்து விட்டு எழுந்தான். பக்கதில் இருந்த சிறு அலமாரியைத் திறந்து இரண்டு கண்ணாடி தட்டுகளும் கரண்டிகளும் கொண்டுவந்து மேசை மேல் வைத்து விட்டு பிலாஸ்டிக் நாற்காலியை காலாலேயே இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்டான்.

“எங்க? யாப் கடையிலியா வாங்கின?” என்று கேட்டுக்கொண்டே ஒரு கோழித்துண்டை கரண்டியில் எடுத்து வாயில் போட்டுக்கொண்டான். மொர மொரப்பாக இருந்த வாய்க்கு, கோழி வறுவல் இதமாக இருந்தது. அழுத்தமாக உச்சுக்கொட்டிக் கொண்டு ஒருமுறை தொண்டையை செருமிக் கொண்டான்.

பரசு பதில் ஏதும் பேசவில்லை. ‘இம்’ என்று மட்டும் கூறிவிட்டு ஒரு பீர் டின்னை எடுத்து திறந்து மடமட வென்று குடிக்கத்தொடங்கினான். செல்லதுரை சிகரேட்டை புகைத்தபடி பரசு குடிப்பதையே பார்த்துக் கொண்டிருந்தான். பரசுவின் தொண்டை மேடு விருட் விருட் என ஏறி இறங்குவது நன்கு தெரிந்தது. செல்லதுரை பரசுவின் கழுத்துப் பகுதியை ஒரு முறை வெறித்துப் பார்த்தான். அவன் கண்களில் சிவப்பு இப்போது மேலும் கூடியிருந்தது.

******************
ஒரு மாதத்திற்கு முன் இதைவிடவும் இருட்டான ஒரு நாள்….. மோட்டார் சைக்கிளை செம்பனை மரங்களுக்கு இடையே நிறுத்தி விட்டு செல்லதுரை முன்னால் நடந்தான். அவனுக்கு பின்னால் பரசு. நடந்தார்கள் என்றால் கம்பீர வீர நடை அல்ல…. பதுங்கி பதுங்கி போகும் கள்ள நடை. சில வாரங்களாக பலமாக சிந்தித்து திட்டம் போட்டு, ஒத்திகை பார்த்து இன்று அரங்கேரப் போகிற நாடகம். இந்த நாடகத்திற்கு கதை வசனம் இயக்கம் எல்லாம் செல்லதுரைதான். பரசு முக்கிய நடிகன். செல்லதுரை என்ன சொல்கிறானோ அதன் படியே அவன் செய்தான்.

அவர்கள் பழைய தாமான் ஒன்றின் பக்கத்தில் உள்ள காலி நிலத்தில் புதிதாய் தோன்றி, சுற்று வட்டார பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு நாகம்மாள் கோயிலை நோக்கி நகர்ந்தார்கள். சில நாட்களுக்கு முன்புதான் நாகம்மாள் அலங்காரம் கொண்டு கோலாகல திருவிழா கண்டாள். அப்போது அந்தக் கோவில் சீவி சிங்காரித்து நிற்கும் புதுமணப்பெண்போல் நின்று கொண்டிருந்தது.

கோவில், பெரியசாமி குடும்பத்தார்க்குச் சொந்தம். பெரியசாமியின் தாயார் ஒவ்வொரு செவ்வாய் வெள்ளியும் விளக்கு போட்டு வந்த புற்று அது. அவளுக்கு வயதானதும் பொறுப்பை தன் மகன் பெரியசாமியிடம் கொடுத்தாள். அவன் ஏனோ தானோ வென்றுதான் இருந்தான். ஒரு நாள் பெரியசாமியின் கனவில் நாகம் ஒன்று வந்ததாகவும் அந்த வார கடைசியில் பெரியசாமிக்கு நம்பர் அடித்ததாகவும் ஒரு கதை உண்டு. அன்று முதல் நாகம்மாள் புதுப்பொழிவு கண்டாள். மேல் கூரை, சுற்று சுவர், சிறிய கலசம், கோபுரம் என்று புற்று மெல்ல கோயிலாக பரிணமித்தது. பெரியசாமியும் சுத்த பத்தமாக இருந்து கோயிலை கவனித்துக் கொண்டான். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை உண்டியல் கணக்கு பார்ப்பது உட்பட அவன் மிகப்பொறுப்பாக இருந்தான். கோயிலுக்கு இப்போது செயற்குழு ஒன்று கூட உண்டு. இவ்வருட திருவிழாவை செயற்குழு ஒற்றுமையாக நின்று ஜாம் ஜாம் என்று நடத்தி விட்டதாக அவர்களே பூரித்து போகிறார்கள்.

செல்லதுரை மெல்ல கால்வாயில் இறங்கினான். மழை வந்தால் மட்டுமே நீர் காணும் கால்வாய் அது. ஆள் உயர ஆழம் உள்ள கால்வாயில் பரசுவும் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு இறங்கினான். இருட்டிலேயே கூர்ந்து பார்த்து இரண்டொரு மண்மேடுகளில் கால் வைத்து இருவரும் மேலே ஏறினார்கள். கோயில் கோபுரம் நிழல் போல் தெரிந்தது. குனிந்தபடியே ஓடி கோயிலை அடைந்தார்கள். கோயிலோடு ஒட்டி வளர்ந்திருந்த மாமர கிளையொன்றைப் பற்றி தாவி, கோயிலைச் சுற்றி போடப்பட்டிருந்த வேலியை தாண்டி உள்ளே சத்தமின்றி குதித்தார்கள். எங்கும் இருட்டு தாராளமாக அப்பிக்கிடந்தது

செல்லதுரைக்குக் கோயில் திருட்டு புதிதல்ல. பரசுவுக்கு கொஞ்சம் புதுத் தொழில். பூச்சிக்கொள்ளி மருந்து தொழிற்சாலையில் ரசாயன நெடியை சகித்துக் கொண்டு எத்தனை நாட்களுக்கு ஸ்டோர் பையனாக இருப்பது? கை நிறைய பணம் பார்க்க வேண்டாமா? செல்லதுரை காட்டிய வழி பரசுவை சுலபத்தில் கவர்ந்து விட்டது. ஆனால் இப்போது பரசுவுக்கு பதற்றமும் நடுக்கமும் கூடிக்கொண்டே போனது.

******************

பரசு மது டின்னை கீழே வைக்கும் போது செல்லதுரை தன்னையே கவனிப்பதை உணர்ந்தான். இருவரின் கண்களும் தவிர்க முடியாமல் ஒருமுறை சந்தித்து பிரிந்தன. பார்வையின் கீறல் இருவருக்குமே வலியையும் பதற்றத்தையும் கொடுத்தது. முடிவை நோக்கிய இருவரின் தவிப்பும் அதிகரித்தது. அந்த அறையில் சிகரேட் புகை நிரப்பாத இடங்களைச் சந்தேக புகை புகுந்து நிரப்ப துவங்கியது.

******************
இருவரும் கையில் இருந்த சிறிய கைவிளக்கு வெளிச்சத்தில் முன்னேறினர். நிதானித்து, கூர்ந்து பார்த்த போது புற்றுக்கு அருகில் சில எண்ணெய் விளக்குகள் எரிந்து கொண்டிருப்பது தெரிந்தது. செல்லதுரைதான் முதலில் கோயில் உண்டியலை நெருங்கினான். தரையோடு புதைத்து கல்லால் கட்டப்பட்ட உண்டியலின் பக்கவாட்டில் இரும்பு பூட்டு தொங்கியது.

செல்லதுரை இடுப்பில் இருந்து சிறிய இரும்பு ‘கட்டரை’ உருவி எடுத்தான். கட்டரை பூட்டின் தலைப்பகுதியில் விட்டு இடுக்கி மேலும் கீழும் ஆட்டி முறுக்கி இழுத்தான். சில நிமிட முயற்சியில் பூட்டு தலை வேறு முண்டம் வேறாக விழுந்தது. பரசு பரபரப்பானான். செல்லதுரை உண்டியலின் மேல் மூடியை திறந்து உள்ளே கையைவிட்டு கிடைத்தவற்றை வெளியே எடுத்தான். ரிங்கிட் நோட்டுகளும் சில்லரை காசுகளும் கைநிறைய வந்தன. அவசர அவசரமாக அவற்றை தோளில் மாட்டியிருந்த பையில் திணித்தான். சில சில்லரை காசுகள் கீழே விழுந்து சிதறின. அவை கலகல ஓசை எழுப்பியவாறு நாலாபுறமும் ஓடின. அமைதியான இருளில் சில்லரை காசுகளின் சத்தம், கொளுசு சத்தம் போல் சலசலத்து ஒலித்து. ஜல் ஜல் சதங்கை கட்டி நாகம்பாள் அந்நேரம் அங்கு ஓடி வந்தால் அவள் பாத கொளுசு சத்தமும் இப்படித்தான் கேட்குமோ?.

உண்டியல் காலி ஆனதும் செல்லதுரை புற்றுக்கு அருகில் இருக்கும் நாகம்மாள் விக்ரகத்தை நோக்கி நகர்ந்தான். பரசு பின் தொடர்ந்தான். இரும்பு வேலிக்குள் பாதுகாப்புடன் நாகம்மாள் வீட்டிருந்தாள். இருளில், கருத்த மேனியுடன் வீற்றிருக்கும் நாகம்பாளின் முகம், அருகில் இருக்கும் சிறு எண்ணெய் விளக்கொளியில் வசீகரமாக மின்னியது. நிரந்தர மந்தகாச புன்னகை பூத்தபடி அமர்ந்திருக்கும் நாகம்மாள், அவ்வேளையிலும் எந்த கவலையும் அற்று புன்னகைத்துக் கொண்டுதானிருந்தாள். செல்லதுரை கையில் இருந்த கைவிளக்கின் ஒளியை வீசி நாலாபுரமும் தேடினான். இரும்பு வேலியை ஆயுதத்தால் தகர்த்தான். நாகம்மாளின் கழுத்தை அலங்கரித்த தங்க நகைகளும் தாலிச்சரடும் அவன் கைகளில் அடக்கமாகின. அவள் பாத அடியில் யாரோ ஒரு பக்தர் காணிக்கை செய்திருந்த பொன்னாலான சிறிய திரிசூலத்தை பரசு எடுத்து பையில் போட்டான். பிறகு இருவருமாக நாகம்மாள் சிலையை ஆட்டி அசைத்து திருப்பினர். நாகம்மாள் பீடத்தோடு நகர்த்தப்பட்டாள். பீடத்துக்கு அடியில் அவர்கள் எதிர்ப்பார்த்தபடி பொன்னும் மணியும் வைக்கப்பட்டிருந்தன. பொற்காசுகளையும் நவரத்தினங்களையும் இருவரும் வாரி எடுத்து பைக்குள் போட்டுக் கொண்டனர்.

வேலை முடிந்தது. முகத்தில் வழிந்த வேர்வையை துடைத்துக் கொண்டு இருவரும் வந்த வழியே கிளம்பினர். சற்று முன்பு வரை கிழக்கு பார்த்து அமர்ந்திருந்த நாகம்மாள் இப்போது அதே புன்னகையோடு மேற்கு பார்த்து அமர்ந்துவிட்டாள்.

******************

“அப்பறம்…. எப்படி அண்ணே.. ஸ்டோருக்கு வா பேசி செட்டல் பன்னலாம்னு சொன்னீங்க…. பேசாம இருகீங்க…” பரசு அமைதியை கலைத்தான். அவன் குழறும் நாக்கை கட்டுப்படுத்தி பேசினான். “…. சொன்ன மாதிரியே என் பங்கை கொடுத்துடுங்க….அந்தத் தாலி சரடே பத்து பவுனு இருக்கும். அவ்லோ சாமானையும் ஒழிச்சு வச்சிட்டு என்னிய அலைய விடாதீங்க. நான் அப்புறம் வேற மாதிரி செஞ்சிடுவேன்….”

செல்லதுரைக்கு கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது. “என்னாட செஞ்சிடுவ…” என்று நுனி நாக்கு வரை வந்த வார்தைகளைக் கட்டுப்படுத்தினான். “என்னா பரசு ஒரு மாதிரியா பேசர. நான் ஒன்ன ஏமாத்த நெனக்கில….! பாதுகாப்பா இருக்கட்டுமேனுதான் ஒரு இடத்துல பத்திரமா வச்சிருக்கேன்…. கொடுக்க மாட்டேன்னு சொல்லலையே….கொஞ்ச நாள் போனதும் வெளிய எடுத்து பங்கு பிரிச்சிக்கலாம்….யாருக்கும் சந்தேகம் வராது” சொல்லிவிட்டு செல்லதுரை ஒரு மது டின்னை எடுத்து திறத்தான்.

“அண்ணே ஒங்க கதையெல்லாம் எனக்கும் தெரியும். மாறனையும் பாலாவையும் ஏமாத்துன வேலையெல்லாம் என் கிட்ட வேணாம்…நான் ஒரு மாதிரியான ஆளு!” பரசுவின் குரல் கொடூரமாக கேட்டது.

நிலைமை மிஞ்சி போய்விட்டதை செல்லதுரை உணர்ந்தான். “சரி, பரசு பிரச்சன வேணாம்… செட்டல் பண்ணிக்கலாம்,,,” செல்லதுரை பரசுவுக்கு பேச்சில் இனிப்பு காட்டி அமைதி படுத்த முயன்றான்.

பிறகு “இரு….. பாத்ரூம் போயிட்டு வந்திடுறேன்” என கூறிவிட்டு அந்த, பழைய ஸ்டோரை விட்டு வெளியே வந்தான். செம்பனை தோட்ட முதலாளி அந்தச் சிறிய கட்டிடத்தை உரம் போன்ற பொருட்கள் வைக்க செல்லதுரைக்கு கொடுத்திருந்தார். செல்லதுரை தன் பெரும்பகுதி நேரத்தை அங்கேயே கழிப்பதுடன் பல சமரசங்களையும் அங்கேயே முடித்துக் கொள்வான். அவனுக்கு வசதியாக அந்த ஸ்டோர் ரூமை மாற்றி அமைத்துக் கொண்டான். செல்லதுரை அங்கே இருப்பது தோட்டத்திற்கும் பாதுகாப்பாக இருப்பதால் முதலாளியும் கண்டுகொள்வதில்லை.

செல்லதுரை வெளியே சென்றான்…..

பரசு சுறு சுறுப்பானான். இந்த அறிய வாய்ப்புக்காகவே காத்திருந்தவன் போல சட்டென்று தன் சட்டை பாக்கேட்டில் கைவிட்டு ஒரு காகித பொட்டலத்தை எடுத்தான். தீப்பெட்டி அளவில் இறுக்கமாக மடித்து இருந்த அந்த பொட்டலத்தை மிக கவனமாக பிரித்தான். பலிச்சென்று வெள்ளை நிறத்தில் உப்பு போல ‘சோடியம் நிட்ராட்’ எந்த வாசமும் இன்றி அமைதியாக கிடந்தது. சில விநாடிகள் அந்த வெண்ணிற பொடியை பரசு கூர்ந்து பார்த்தான். குரூர சிரிப்பு அவனது உதட்டோரம் மின்னி மறைந்தது. “சோடியம் நிட்ராட், இது உள்ளே போனால் பதினைந்து நிமிடத்தில் உன் கதை முடிந்து விடும்….டேய் செல்லதுரை…, என்னையா ஏமாத்த பாக்குற…..” பரசுவின் மனதில் பல நூறு பிசாசுகள் ஒன்றாக சேர்ந்து கோவென்று குரல் எழுப்பி ஆர்ப்பரித்தன.

பரசு, செல்லதுரை குடித்து விட்டு மீதம் வைத்திருந்த மதுவில் டின்னில் அவ்வளவு விஷத்தையும் கொட்டினான். காகிததை கசக்கி தூர வீசினான்.

வெளியே…,

செல்லதுரை ஸ்டோருக்கு மறைவாக ஒதுங்கினான். செம்பனை மரங்களுக்கு பின்னால் நின்று கொண்டான். இருட்டு அவனையும் செம்பனைமரங்களையும் ஒன்றாக மறைத்திருந்தது. கைப்பேசியை வெளியே எடுத்தான். யாரையோ அழைத்தான். “ஒகே! வா! இப்ப வந்தா சரியா இருக்கும்…” என்று மிக சன்னமாக கூறிவிட்டு கைப்பேசியை பாக்கேட்டிலேயே வைத்துக் கொண்டான். அங்கேயே நின்று கொண்டான்.

சற்று நேரத்தில்…., எங்கிருந்தோ மூன்று மோட்டாரில் ஆறு பேர் சீறிக்கொண்டு வந்தனர். வீராவின் அடித்தொண்டை குரைப்பை பொருட்படுத்தாமல் திமுதிமுவென ஸ்டோருக்குள் புகுந்தனர்.

அடுத்த நொடி…

பரசுவின் ஈனமான குரல் அதிர்ந்து அடங்கியது. ரத்த வெள்ளத்தில் பரசுவை இழுத்துக் கொண்டுபோய் கால்வாயில் தள்ளி விட்டு கொலைக்கார கும்பல் ஓடி மறைந்தது.

செல்லதுரை மறைவில் இருந்து வெளியே வந்தான். குரூரமாக சிரித்தான். ஸ்டோருக்குள் ஓடினான். பரசுவின் ரத்தம் ஆங்காங்கே தெரித்துக் கிடந்தது. “ ஏன்டா நாயே! என் கிட்டையா பங்கு கேட்கிற…. இப்ப எடுத்துக்கடா உன் பங்க….” செல்லதுரை உரக்கச் சிரித்தான். ஒரு சிகரேட்டை பற்ற வைத்து இழுத்தான். பிறகு, மேசை மேல் தான் குடித்து மீதமாக வைத்திருந்த பீரை எடுத்து மட மட வென்று குடித்து முடித்தான். காலி டின்னை நசுக்கி வீசினான். வீரா ஓயாமல் குரைத்துக் கொண்டிருந்தது.

மறுநாள்….
‘இரண்டு நண்பர்கள் மர்மமான முறையில் கொலை’ என்ற தலைப்போடு நாளிதழ்கள் செல்லதுரையின் படத்தையும் பரசுவின் படத்தையும் முன்பக்கத்தில் போட்டிருந்தன.

– இக்கதை மலேசியாவில் தினக்குரல் நாளிதழிலும் மலேசிய நண்பன் நாளிதழிலும் இவ்வாண்டு வெளிவந்தது

Print Friendly, PDF & Email

1 thought on “குற்றம்

  1. அடடா!…த்சோ…த்சோ…
    இப்போ களவாடினது எல்லாம் என்ன ஆச்சு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *