(2006ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10
அத்தியாயம்-9
மறுநாள் காலையில் சீக்கிரமே சிங் வந்ததும் முந்தைய இரவு எடுத்த பொருள்கள் ஒரு கூடை அளவு இருந்தன.
அவற்றை கீழே சிதற விட்டார் சிங்! இப்போது பகல் வெளிச்சத்தில் ஒவ்வொன்றாகப் பார்க்க ஆரம்பித்தார்.
குப்பை கூடைக் காகிதங்களைத்தான் முதலில் பார்த்தார்.
கசங்கிய காகிதங்கள்! ஒவ்வொன்றிலும் கணக்குகள் போடப்பட்டு இருந்தன. அவை வரவு செலவு கணக்குகள் என்று தோன்றின.
அவைகளை ஒதுக்கிவிடப் போன சிங், சட்டென்று திகைப்பு அடைந்தவராய் நிறுத்தினார்.
காகிதங்களை மீண்டும் திறந்து பார்த்தார்.
கணக்குகளை மீண்டும் பார்த்தார்.
எல்லாமே ஐந்து ஸ்தானங்களில் இருந்தன.
சில ஆறு ஸ்தானங்களுக்குமே போயிருந்தன.
பத்தாயிரங்களிலும், லட்சங்களிலுமாக கணக்கு.
வெறும் பாடப்புத்தகக் கணக்குகளா? அல்லது உண்மையான வரவு செலவுக் கணக்குகளா?
ஒரு கணம் சிங்கின் எண்ணம் சீறிப் பறந்தது.
ஒருவேளை இந்த இரண்டு பேர்களுக்கும் வரவு செலவுகள் இந்தத் தொகைகளில் இருக்குமா?
கணக்குகளின் கூட்டல் கழித்தல்களைக் கவனித்தார்.
நிச்சயம் தெரிந்து அவை கற்பனைக் கணக்குகள் அல்ல!
நிசமான கணக்குகள் தான். இல்லாவிட்டால் இத்தனை விதத் தொகைகள் வராது.
குபீர் என்று ரத்தம் அவர் தலைக்கு ஓடியது.
ஒவ்வொரு தொகைக்கு எதிராகவும் ஏதோ ஆங்கில எழுத்துக்கள் மிகப் பொடியாக எழுதப்பட்டிருந்தன.
அவைகளைக் கண்டுபிடித்தும் வெப்பமான மூச்சு சிங்குக்கு வந்தது.
இந்தத் தொகைக்குரியவர்கள் பற்றிய குறிப்பு எழுத்துக்கள்தான் அவை என்று தெரிந்தது.
அதெல்லாம் என்ன கொடுக்கல் வாங்கல்கள்? இவ்வளவு தொகையா பரிமாற்றம் நடக்கிறது?
வெறும் லே-அவுட் ஆர்டிஸ்டுகள்தானா இந்த கணபதி, பசுபதிகள்! அல்லது வேறு ஏதாவது ரகசிய வியாபாரம் செய்து கொண்டிருந்தார்களா?
நினைக்க நிகைக்க அவரது நரம்புகள் புடைத்தன.
இப்போது புரிந்தது. கணபதி, பசுபதிகள் ப்ளாட்டில் அத்தனை நவீன வசதிகளும் இருந்தது என்றால்,
அவர்கள் இப்படி சம்பாதிப்பவர்களாகத்தான் இருக்க வேண்டும்.
அப்படியானால். . .
அந்த வீட்டின் வெடிகுண்டு மர்மம் இங்கேதான் இருக்கிறதா?
அந்தக் கணமே ஏதோ தீர்வு கண்டது போல தோன்ற சிங் உடனே துள்ள வேண்டும் என்று நினைத்தார்.
ஆனால் அவர் ஒரு பழுத்த அனுபவசாலி! வெற்றிப் பழம் கையில் சிக்கென அகப்பட்டது என்று தெரிந்தால் தவிர,
எந்தவித உற்சாக உணர்வுகளுக்கும் அவர் இடம் கொடுக்க மாட்டார்
இந்த இரண்டு பதிகளும் பணத்தை எப்படிக் கொடுத்தார்கள்?
போதைப் பொருள் ஏதாவது கடத்தல் செய்தார்களா?
அவர்கள் இருவரும் ஒதுங்கி இருந்தார்கள் என்பதே இந்த வியாபாரத்தைத்தானே குறிக்கிறது.
சிங் யோசித்தார்.
ஒருவேளை பணத்தை ஏராளமாக யாருக்காவது கொடுத்து,
அவர்கள் அதைத் திருப்பித் தர முடியாமல் இந்த பதிகள் இருக்கும் வீட்டுக்கு குண்டு வைத்தார்களோ!
அடப்பாவமே! கிடைத்த 32 சடலங்களில் இவர்கள் இருவர்களது சடலங்களும் இருந்தனவே! இப்படியா இவர்கள் இறக்க வேண்டும்.
சட்டென்று மறுயோசனை.
ஒருவேளை மார்க்கபந்துவாவது நாகசாமியாவது இவர்களிடம் கடன் வாங்கிவிட்டு வீட்டுக்கு வெடிகுண்டு வைத்தார்களோ?
அல்லது இளைஞன் வசந்த்தான் இதைச் செய்திருப்பானோ?
அடுத்த மற்ற காகிதங்களையும் எடுத்துப் பிரித்தார்.
‘ஸாகர் ஓட்டல்’
‘பெங்களூர்’
என்று ஒரு காகிதத்தில் எழுதியிருந்தது.
இன்னொரு காகிதத்தில்
பிரதிமா கெஸ்ட் ஹவுஸ்.
ரேஸ் கோர்ஸ் ரோட்,
பெங்களூர்
என்று காட்டி இருந்தது.
எதற்காவது உதவும் என்று சிங் இந்தக் காகிதங்களை மடித்துப் பையில் போட்டுக் கொண்டார்.
கடைசியாக ஒரு காகிதம்! அதில் வசந்த் என்று போட்டு ஒரு போன் நம்பர் கொடுக்கப்பட்டிருந்தது.
96983475
குறித்துக் கொண்டார் சிங்!
எல்லாக் காகிதங்களையுமே ஒரு பையில் போட்டுக் கொண்டார்.
இதரப் பொருள்கள் கூடையில் அப்படியே இருந்தன. இப்போது பார்க்க விருப்பமில்லை.
காகிதக் குறிப்புகளோடு போன் முன்னால் உட்கார்ந்தார்.
அந்த போன் நம்பர் அவர் கண்களை உறுத்தின.
ரிசீவரை எடுத்தார். டயலைச் சுழற்றினார்.
ஒரு கனத்த குரல் மறுமுனையில் கேட்டது.
“96983475”
“எஸ்.”
“வசந்த் இருக்கிற இடம் தெரியணும்!”
“நீங்க யாரு?”
ஒரு கணம் திகைத்தார் சிங்.
மறுகணம், “குரல் தெரியலையா?” என்றார் இன்னும் கனத்த குரலில்.
“தெரியும்! வி.எஸ்.கிரிதானே!
“குட்” என்றார் சிங். அதை உறுதி செய்வதுபோல!
“கொஞ்சம் ரகசியமா வச்சுக்கணும்.”
“ஓ”
“வசந்த் இப்போ பெங்களூரிலே! அப்புறம் கிரி அந்த எண்பதினாயிரம் என்னாச்சி?”
டக்கென்று துண்டித்தார் சிங். அதற்கு மேல் பேசினால் ஆபத்து!
ஒரு பெரிய லாபம்! வசந்த் பெங்களூரில் இருக்கிறான் என்பது?
மணியை அடித்தார்.
சிப்பந்தி ஓடி வந்து சல்யூட் அடித்தார்.
“லிங்க் வந்ததாச்சா?”
“இன்னும் வரல்லை.”
“நான் நேரே ஏர்போர்ட் போறேன். லிங்க்கை அங்கே வரச் சொல்லு.”
சிங் தமது கைப்பெட்டியை எடுத்து விர் என்று கிளம்பினார்.
மேஜையில் ஏதோ சத்தம்.
அவர் கைப்பெட்டியை எடுத்த அவசரத்தில் மேஜையிலிருந்து கண்ணாடிக் குமிழி அந்தக் கூடைக்குள் விழுந்தது
ஒரு கணம் நின்றார் சிங்!
அவர் மூடநம்பிக்கைக்காரர் அல்ல!
எனினும் ஏதோ தடைப்பட்டதுபோல இருக்க, திரும்பி வந்து மேஜை முன்னால் உட்கார்ந்தார்.
சற்று களைப்பாறுவதுபோல் நாற்காலி முதுகில் சாய்ந்து கொண்டார்.
அவர் பார்வை தாமாக அந்தக் கூடை மீது சென்றது. சட்டென்று ஒரு யோசனை.
குப்பைக் காகிதங்களை மட்டும் பார்த்தோம்.
இந்தப் பொருட்களையும் பார்த்துவிட வேண்டியது தானே!
ஏன் இவைகளை விட்டு வைக்க வேண்டும்?
பொறுமையாக ஒவ்வொன்றையும் பார்த்து அப்பால் வைத்தார்.
அவருக்குத் தேவைப்படாது என்று தோன்றியது. எல்லாப் பொருள்களும் முடியும் நிலையில் அந்தப் பொருள் ஒன்றுதான் அவர் கையில் தங்கி நின்றது.
அலுமினியத் தகடா அல்லது ஈயத் தகடா?
மேஜை மீது அந்தத் துணுக்கைப் பரப்பி வைத்துப் பார்த்தார்.
வெறும் தகடு!
இதன் ஓரங்களில் இவை என்ன? பூப்போட்டது போல இருக்கிறதே!
பூவா? அல்லது மந்திர எழுத்தா?
இது ஏதாவது மாந்திரிக சமாச்சாரமாக இருக்குமோ. . .
யோசித்துக் கொண்டே இருக்கும்போது பளீர் என்று மனத்தில் ஒரு மின்னல் எழுந்தது.
எதையோ அதிசயமாகக் கண்டவர் போல் அந்தத் தகட்டை மகிழ்ச்சியோடு எடுத்து பாக்கெட்டில் போட்டார்.
எழுந்தார்.
லிங்க் எதிரே தென்பட,
“ஸிங்க்! உடனே வா! பெங்களூர் போறோம்!” என்றார்.
அத்தியாயம்-10
பெங்களூர் ‘எமாகல்’ ஓட்டலில் இறங்கி இரண்டு நாளாகி விட்டது.
பிரதிமா கெஸ்ட் ஹவுசிலும், ஸாகர் ஓட்டலிலும் விசாரித்து விட்டார்.
வசந்த் தென்படவில்லை.
எமாகல் ஓட்டலில் உட்கார்ந்து கொண்டே மற்ற எல்லா ஓட்டல்களுக்கும் போன் அடித்துப் பார்த்தார்.
வசந்த் அகப்படவில்லை.
“லிங்க்” என்றார்.
“எஸ் ஸார்.”
“இனிமே வேறே வழியில்லை ஒவ்வொரு இடமாத் தேட வேண்டியதுதான்!”
இருவரும் அன்று மாலை மெஜஸ்டிக் சர்க்கிளுக்குப் புறப்பட்டார்கள்.
5.45 சுமார்!
சாலைகள் நிரம்பி வழிந்தன.
சிங் கூட்டத்தில் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தார்.
அநேகமாகப் பலரும் அவரை விலகிப் போக வேண்டி வந்தது.
சிங் யாரையும் பொருட்படுத்தவில்லை.
அவர் கண்கள் அந்த ஜன வெள்ளத்தில் நீந்திச் சென்றன.
சினிமா போவோர், வருவோர், ஷாப்பிங் போவோர், வருவோர், உல்லாசம் தேடுவோர், அதற்கு அழைப்போர்.
இப்படியாக சகலவித நபர்களும் மெய் மறந்து அந்த வெள்ள அலையில் மிதந்து கொண்டிருக்க,
சிங் ஒவ்வொரு முகத்தையும் விடாது பார்த்தார். அவர் மனசில் பெரிய உறுதி இருந்தது.
ஆற்று மணலில் கடுகைத் தேடுவேன் என்று முனைந்தார்.
பிள்ளையார் கோயில் பக்கம் ஆரம்பித்தவர்கள்,
சுபேதார் சத்திரம் ரோட் திருப்பம் வரை வந்து விட்டார்கள்.
அப்போது சட்டென்று லிங்கின் கைகளைப் பிடித்து அமுக்கினார் சிங்.
லிங்க் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான்.
சிங் ஜாடை காட்டினார்.
அவர் காட்டிய இடத்தில் லிங்க் பார்த்தவுடன் விசில் அடிக்காத குறை!
அவன் எத்தனையோ தடவை அந்த உருவத்தை மனத்தில் பதிய வைத்துக் கொண்டிருக்கிறான். அந்த ஆசாமி இங்கேயா இருக்கிறான்?
“மார்க்கபந்துதானே”
“ஆமாம் ஸார்.”
“லிங்க் அவனைப் பின்தொடர்வோம்:”
இருவரும் தொடர்ந்தார்கள்.
மார்க்கபந்துதான் குறிக்கோள்!
பந்து அங்குமிங்கும் நாசூக்காகப் பார்த்தவாறு சத்திரம் ரோட்டில் நடந்தான்.
சிங் ஒரு தூரத்திலும், அவருக்குப் பின் லிங்கும் பின்தொடர்ந்தார்கள்.
சேஷாத்திரி புறம் போனதும்,
மார்க்கபந்து இடதுபுறம் திரும்பினான்.
அடுத்து இரண்டு மூன்று சந்துகளைக் கடந்தான்.
கடைசியில் ஒரு பெரிய காம்பவுண்ட்.
அதில் தனித்தனி வீடுகள் ஐந்து இருந்தன.
அதில் ஒன்று நோக்கி மணி அடித்தான்.
கதவு திறக்கப்பட்டதும் உள்ளே நுழைந்தான்.
நன்றாக இருட்டி விட்டது. அங்கே நிழல்கள் அதிகமாக இருந்தன.
சிங் வாசலில் போய் கதவை அழுத்திப் பார்த்தார்.
உள்ளே பூட்டியிருந்தது. பிறகு அவர் பரபரத்தார்.
அந்த பெரிய மாளிகையைச் சுற்றி ஒருமுறை வலம் வந்தார்.
உள்ளே எல்லாம் இருட்டாக இருந்தது.
இரண்டாம் முறை சுற்றியபோது,
ஒரு அறை சட்டென்று பிரகாசமாகியது.
அறை சின்னதாக பளீர் என்று அடித்தது.
சிங் மெள்ள அதன் அருகில் வந்தார்.
உள்ளே சத்தம் கேட்டது.
“இந்தா மார்க்கபந்து! என்னை அவிழ்த்து விடு. என்கிட்டேயிருந்து நிறையப் பணம் வாங்கியாச்சு! இதுக்கு மேலும் எதிர்பார்க்காதே!”
சிங் சட்டென்று லிங்க்கை இழுத்து அந்த வார்த்தைகளைக் கேட்க வைத்தார்.
லிங்க் சிங்கின் காது அருகில் போய், “வசந்த்” என்றான்.
“ரைட். எனக்குத் தெரிஞ்சாச்சு!” என்றார் சிங்.
“பணம் தந்தே வாஸ்தவந்தான்! அப்புறம் என்னைக் கொல்லப் பார்த்தியே பிரதர்! அதற்கு என்ன சொல்றே?” என்றான் மார்க்கபந்து.
“அது உங்களைக் கொல்றதுக்கு இல்லை! உங்களுக்குத் தெரியாதா?” என்றான்.
சிரித்தான் மார்க்கபந்து.
அந்தக் கணத்தில் தடால் என்று ஒரு சத்தம்.
அதைத் தொடர்ந்து பல ஓசைகள்.
சிங் சட்டென்று திரையை லேசாக விலக்கிப் பார்த்தார்.
உள்ளே இரண்டு பேரும் கைகலப்பில் ஈடுபட்டிருந்தார்கள்.
வசந்த் தன்னைச் சுற்றிய கயிற்றை மெள்ள மெள்ள அவிழ்ந்திருக்க வேண்டும்.
அந்தக் காரியத்தை மார்க்கபந்து வருவதற்குள்ளே முடிந்திருக்க வேண்டும்.
மார்க்கபந்துவிடம் இன்னும் அவன் (வசந்த்) கட்டுப்பட்டிருப்பது போலவே பேசியிருக்க வேண்டும்.
உள்ளே பலத்த கைகலப்பு!
தம்தம் என்று ஓசைகள் வந்த வண்ணம் இருந்தன.
வசந்தின் கைதான் ஓங்கி இருந்தது. பிரமாத இளைஞனாக திகழ்ந்தான். சீக்கிரத்தில் மார்க்கப்பந்துவை கீழே உருட்டி, ஆயாசப்படுத்தி விட்டான்.
பிறகு தாவிப் போய், தாம்புக் கயிற்றை எடுத்து வந்து, அவன் கைகால்களைக் கட்டினான். பிறகு வசந்த் வீராவேசமாக எழுந்து, “என் ரகசியம் தெரிஞ்சு என்னை ப்ளாக்மெயில் பண்ணினே இல்லே” உன்னை என்ன செய்யறேன்! என்று கறுவிக் கொண்டு கிளம்பினான்.
அவசரமாக அவன் வாசலுக்கு வருவது தெரிந்தது. பிறகு ஓட்டமும், நடையுமாக காம்பவுண்ட்டுக்கு வெளியே போனான்.
சிங்கும், லிங்கும் தொடர்ந்தார்கள்.
சாலைக்கு வந்ததும் அவன் ஒரு ஆட்டோவைக் கைகாட்டி ஏறினான்.
சிங்கும் உடனே ஆட்டோவில் ஏறி அவனைப் பின்பற்றினார்.
ஹோட்டல் ரஞ்சித் முன்னால் வாசலில் ஆட்டோ நின்றது.
அவன் இறங்கி உள்ளே போக, சிங்கும் லிங்கும் உள்ளே நுழைந்தார்கள்.
கவுண்டரில் தங்கள் அடையாளக் கார்டை காட்டி அவர்களது உதவி பெற்றார்கள்.
மேலே 733-ஆம் நம்பர் அறை!
அதை அடைந்தபோது, உள்ளே வசந்த்தின் குரல் சாவித் துவாரத்தில் நன்றாகக் கேட்டது.
“இந்தா நித்யா! இனிமேலும் பொறுக்க முடியாது. நீ என்னைத் திருமணம் செய்துக்கப் போறியா இல்லையா?”
அதற்குப் பதில் இல்லை. சிரிப்புதான் கேட்டது.
“சொல்லு, பண்ணிக்கப் போறியா இல்லையா?”
“பண்ணிக்க மாட்டேன்னா என்ன செய்வீங்க?”
“என்ன செய்வேனா? முந்தி மாதிரி தீமை செஞ்சுடுவேன்னு நினைக்காதே. இப்போ நான் துணிஞ்சாச்சு. நாளைக்கே விஷம் குடிச்சு செத்துடுவேன்.”
மௌனம்.
“நீ அதனாலே தப்பிச்சுடலாம்னு நினைக்காதே.”
“நீதான் அந்த வீட்டிலே வெடிகுண்டு வச்சே, எனக்கு உடந்தையா இருந்தேன்னு போலீசுக்கு லெட்டர் எழுதிட்டுத்தான் சாவேன்.”
“அதனாலே நான் இறந்தா நிம்மதியா ஒரு நல்ல ஆளைத் தேடிப் பண்ணிக்கலாம்னு நினைக்காதே.”
“போலீஸிலேயும், கோர்ட்லேயும் உன்பேர் சிரிச்சு ரிப்பேர் ஆயிடும்.”
“உன்னை எவனும் கல்யாணம் பண்ணிக்க மாட்டான்.”
மௌனம்.
“இந்தா பதில் சொல்லப் போறியா இல்லையா?”
“இந்தாங்க! போலீசுக்குச் சொல்லிடுவேன்னு பயமுறுத்தி பெங்களூருக்கு என்னை இழுத்துட்டு வந்தாச்சு”
“திருமணம் செஞ்சுக்கன்னு வற்புறுத்தறீங்க!”
“இஷ்டம் இல்லாதவளை ஏன் வற்புறுத்துறீங்க?”
“இஷ்டமில்லையா? அப்போ ஏன் என்னை லவ் பண்ணினே?”
“முதல்லே நல்லவன்னு நினைச்சுப் பண்ணினேன்.”
“அப்புறம்?”
‘ஆ’ என்று குரல்! அது நித்யாவின் குரல்தான்.
சிங் உடனே கதவைத் தட்டினார். பலமாகத் தட்டினார்.
“யாரது?” என்று கோபமாகக் கேட்டு வசந்த் கதவைத் திறந்தான்.
லிங்கும், சிங்கும் உள்ளே போய் அவனைப் பிடித்துக் கொண்டார்கள்.
நித்யாவுக்கு அவர்கள் போலீசார் என்று புரிந்துகொள்ள சற்று நேரம் ஆகியது.
சிங்குக்குத் தெரியும் நித்யா ஒருத்திக்குத்தான் கதை பூராவும் தெரியும் என்று.
“சொல்லம்மா! உனக்கு என்ன நேர்ந்திச்சு?” நித்யா ஏறிட்டுப் பார்த்தாள்.
“ஒன்னுமில்லை ஸார். அவரோடு கொஞ்ச நாள் பழகிட்டிந்தேன் ஸார். அப்புறம் விட்டுட்டேன் ஸார். என்னைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினார் ஸார்”
“ஏன் அவரை விடறே?”
“அது. . . அது. .. சில அபிப்பிராய பேதங்கள்.”
“இப்போ உன்னைக் கொல்வேன்னு சொன்னாரே.”
“காதல் வந்தாச்சுன்னா இதுபோல வார்த்தைங்க இளவயசுக்காரங்களுக்குச் சுலபமா வரும்.”
“வசந்த்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?”
“அதிகமாகத் தெரியாது.”
“அவன் சமீபத்தில் ஏதாவது தீய காரியம் செய்தானா?”
“எனக்குத் தெரியாது.”
சிங்குக்கு புன்னகை வந்தது. உண்மையில் நித்யா ஒரு நல்ல பெண். இவ்வளவு கஷ்டம் வந்த போதிலும் அவள் வசந்த்தைக் காட்டிக் கொடுக்க விரும்பவில்லை.
“இந்தா நித்யா, எல்லாம் எங்களுக்குத் தெரிஞ்சாச்சு! அந்த கணபதியும், பசுபதியும் நூறு ரூபாய் நோட்டு கள்ளத்தனமா தயாரிச்சாங்க இல்லே?”
திடுக்கிட்டாள் அவள்.
“இதோ பாரு” என்று சிங் தமது பையிலிருந்து அந்த ஈயத் தகட்டுத் துண்டை எடுத்துக் காட்டினார்.
“வசந்த் இந்த ஆட்களோடு சேர்ந்தான். இவங்க நோட் அடிச்சுக் கொடுத்தாங்க. வசந்த் அதை தனது பாங்க் மூலம் விநியோகம் பண்ணினான்”.
அவள் கண்கள் பெரிதாகின.
“நிறைய கள்ள நோட்டு புழங்கறதுன்னு எங்களுக்கு ரிப்போர்ட் வந்தாச்சு! நாங்க அதன் காரணத்தைக் கண்டுபிடிச்சாச்சு! வசந்த்தான் காரணம்…”
அவள் கண்கள் கலங்கின.
“அடிக்கடி வசந்த் அந்த பிளாட்டுக்கு வந்தபோது உனக்கும் அவனுக்கும் பழக்கம்.”
“நீ முதல்லே காதலிச்சே! ஆனா பின்னாடி அவன் மேலே சந்தேகம் வந்துட்டுது.”
“வசந்த் இருக்கானே, அவனும் அந்த பதிகளும் சேர்ந்து நோட் அடிக்கிற விஷயம் மார்க்கபந்துக்குத் தெரிஞ்சது.
நாகசாமிக்கும் தெரிஞ்சது.
இரண்டு பேரும் வசந்த்தை ப்ளாக்மெயில் பண்ணி பணம் வாங்கினாங்க.”
வாங்கிட்டே இருந்தாங்க!
கொடுக்கலைன்னா பயமுறுத்தினாங்க!
சிங் இங்கே நிறுத்தினார். பிறகு நித்யாவைப் பார்த்து,
“இதுவரை என் ஊகம்.”
“இதுக்கு மேலே சொல்லிவிடு அம்மா!”
அவள் விசித்தாள்.
“சொல்லு அம்மா!”
“இல்லாட்டியும் நாங்க கண்டுபிடிப்போம்!”
“ஆனா அதுக்கு இன்னும் கஷ்டப்படணும்!”
“இன்ஸ்பெக்டர்!”
“சொல்றேன் இன்ஸ்பெக்டர்.”
“வசந்த்தை அவங்க ரெண்டு பேரும் ப்ளாக் மெயில் செஞ்சாங்க!
அவருக்கு பயம் வந்துட்டுது!
விஷயம் எப்படியாவது வெளியிலே போயிடும்னு பயம்!”
“ஒரு திட்டம் போட்டார்.”
நாகசாமி, மார்க்கபந்து ரெண்டு பேரையும் அந்த பதிகள் வீட்டிலே சந்திக்கிற மாதிரி.
அவர்கள் சந்திக்கிற நேரத்திலே டைம்பாம் வச்சு இந்தக் கட்டிடத்தைத் தகர்த்துடறதாக! ஆனா ஜாடை மாடையாய் அவர் வீட்டிலே குண்டு வைக்கப் போறது எனக்குத் தெரிஞ்சு போச்சு!
என் தாயாரை அழைச்சுட்டு அத்தை வீட்டுக்குப் போகச் சொன்னார். அதிலேர்ந்து புரிஞ்சுக்கிட்டேன்! அப்புறம் அவர் பேச்சிலே ‘டைனமைட்’ என்கிற பேர் எதேச்சையாக கேட்டுது! அதுதான் வெடிமருந்துன்னு தெரிஞ்சு போச்சு! நான் அந்தக் கட்டிடத்துக்கு நேரக் கூடிய ஆபத்தைச் சொன்னேன்.
அவங்க அதிலேருந்து தப்பிச்சாங்க! அது மட்டுமில்லே நயவஞ்சகமாக பின்னும் வசந்தை ‘ப்ளாக் மெயில்’ பண்ண ஆரம்பிச்சாங்க…
இப்போ என்னை இவர் கல்யாணம் செய்து கொள்றது மூலம் ஒரு பெண்டாட்டி தன் கணவனுக்கு எதிரா எதுவும் சொல்ல மாட்டான்னு நினைக்கிறார். எனக்கு அதிலே இஷ்டமில்லை! இதுக்கு அவர் என்னை மிரட்டறார்”.
“இன்னும் ஒரே ஒரு விஷயம் சொல்லம்மா. அந்த நாகசாமி இங்கே இருக்கானா?”
“இருக்காரு! அசோகா ஓட்டல்லே தங்கி இருக்காரு. பிடியுங்க! பொண்ணுகளை ஏமாத்தறவரு!”
“மதனாவைக் கொன்னுட்டாரு.”
“பாவி கொன்னுட்டாரா?”
“ஆமாம் கொலைக்காகக் காதல் பண்ணி அவளை கொன்னுட்டாரு.”
“என் விஷயத்திலேயும் அப்படித்தான் நடந்திருக்கும் இன்ஸ்பெக்டர். என்னை இவர் காதலிச்சது! திருமணம் செய்ய நினைக்கிறது எல்லாம் ஒரே ஒரு குறிக்கோளோடு தான்! என்னை எப்படியும் பின்னாலே கொன்னுடனும்னு நினைச்சிருப்பார்!”
“சரியான கிராதகர்னு தெரியும்! பைத்தியக்காரத் தனமாக அகப்பட்டதனாலே அவருக்கு கொஞ்சம் பரிஞ்சு பேசிட்டேன்! அதை இப்போ மறந்துடுங்க இன்ஸ்பெக்டர்! இப்போ அவரைக் கைது செய்யுங்க! நான் சாட்சி சொல்றேன்!”
வராந்தாவில் கட்டி வைத்திருந்த வசந்த்தை பின்னர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார்கள்.
(முற்றும்)
– காதல் அல்ல காதலி!, முதற் பதிப்பு: 2006, பூம்புகார் பதிப்பகம், சென்னை