கடத்தப்பட்ட குழந்தை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: March 18, 2021
பார்வையிட்டோர்: 6,590 
 

ஏதோ யோசனையில் பேருந்தில் உட்கார்ந்து சென்று கொண்டிருந்த சாக்க்ஷிக்கு எதிர் சீட்டில் உட்கார்ந்து தன் மழலை குரலால் பக்கத்தில் இருக்கும் பெண்ணிடம் ஏதேதோ கேட்டுக்கொண்டு வந்தது கவனத்தை கவருவதாக இருந்தது.

இருந்தால் அந்த குழந்தைக்கு நான்கு அல்லது ஐந்து வயதுக்குள் இருக்கலாம், மென்மையான நீல கலரில் சட்டையும், அழுத்தமான நீலத்தில் ஸ்கர்ட்டும் உடைகள் விலையுயர்ந்ததாக இருக்க வேண்டும். ஆனால் அருகில் உட்கார்ந்திருந்த பெண்ணுக்கு இவள் கண்டிப்பாய் உறவாய் இருக்க வாய்ப்பு இல்லை, அந்த பெண்ணும் மாநிறமாய் இருந்தாலும் முகத்தில் ஒரு பரபரப்பே தென்பட்டது. அடிக்கொரு தரம் ஜன்னலை பார்ப்பதுமாய் இந்த குழந்தை கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதுமாய் இருந்தது சாக்க்ஷிக்கு வேடிக்கையாய் இருந்தது.

காரணம் அந்த குழந்தையின் கேள்விகள் இவளுக்கே ஆச்சர்யமாய் இருக்கும் போது அந்த பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும். அநேகமாய் அந்த பெண் இவர்கள் வீட்டு வேலைக்காரியாய் இருக்கலாம்.

நாம எங்க இறங்கணும்? இன்னும் இரண்டு ஸ்டாப்பிங் தாண்டி இறங்கிடலாம், அந்த பெண் சொல்வது இவளுக்கு கேட்டது. இரண்டு ஸ்டாப்பிங் என்றால் சித்ரா வாக இருக்கலாம் என்று இவள் முடிவு செய்தாள். காரணம் அந்த பேருந்து கோல்டு வின்ஸ் தாண்டி சென்று கொண்டிருந்தது.

சாக்க்ஷி சித்ராவை அடுத்த ஸ்டாப்பிங்கில் அரவிந்தில் இறங்க வேண்டும்.

அதற்கு அடுத்த ஸ்டாப்பிங் பள்ளியில் இறங்க வேண்டிய மாணவிகளின் கூட்டம் தயாராய் தங்களது புத்தகப்பைகளை முதுகில் ஏற்றி இறுக்கி கொண்டிருந்தனர். அவர்கள் படிக்கட்டில் வந்து நின்று விட்டால் தான் இறங்குவதற்கு மிகவும் சிரமப்படவேண்டியிருக்கும் என்பதை அனுபவம் மூலம் தெரிந்து கொண்ட சாக்க்ஷி, விசுக்கென எழுந்து படிக்கு முன்னால் வந்து நின்று கொண்டாள்.

“சித்ரா” கண்டக்டரின் விசிலுக்கு பின் குரல் எழுப்பி பேருந்து நிற்கவும், குழந்தையுடன் அந்த பெண் இறங்கினாள். குழந்தையை ஏறக்குறைய இழுத்தாற்போல் படிக்கட்டை விட்டு கீழே இறக்கியவள் பஸ் வந்த திசையிலேயே குழந்தையை கூட்டி செல்வதை பார்த்து கொண்டிருந்த அடுத்து இறங்குவதற்கு தயாராய் இருந்த சாக்க்ஷி பார்த்துக் கொண்டிருந்தாள்.

அடுத்தடுத்த பணிகள் அலுவலகத்தில் தொடர்ந்து இருக்க பதினோரு மணிக்கு அப்பாடா என்று கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்த சாக்க்ஷி டேபிளின் மேல் அலுவலக உதவியாளர் கொண்டு வந்து வைத்திருந்த டீயை ருசித்து குடித்து விட்டு கொஞ்சம் நிதானப்படுத்தி கொள்ள கைப்பைக்குள் வைத்திருந்த செல்போனை எடுத்து உயிர்ப்பித்து முக நூலை பார்த்துக்கொண்டிருந்தாள்.

தன் விரல்களால் அடுதடுத்து நகர்த்திக்கொண்டே சென்றவள் ஒரு இடத்தில் அதிர்ந்து நிறுத்தி விட்டாள். குழந்தையின் முகம் ஒன்று போடப்பட்டு காணவில்லை, காலையில் இருந்து காணவில்லை, தயவு செய்து கண்டால் தகவல் தரவும் என்று கீழே சில நம்பர்கள் காவல் துறை மூலம் கொடுத்திருந்தது.

இந்த குழந்தை…எங்கோ பார்த்திருக்கிறோம்? அவள் மனது எங்கே, எங்கே என்ற கேள்வி நொடிக்கும் குறைவான வேகத்தில் மூளைக்குள் சென்று சட்டென்று ஞாபகத்துக்கு வந்தது காலை வரும்போது பேருந்தில் பார்த்தது.

அவ்வளவுதான் மனம் பரபரத்தது, கீழே போட்டிருக்கும் எண்ணை தொடர்பு கொள்ளலாமா? இல்லை நமக்கென்ன என்று இருந்து விடலாமா? நாளை இதனால் ஏதாவது பிரச்சினை ஆகி விட்டால்? இந்த கேள்வி வர தடுமாறினாள்.

எதிர் சீட்டில் விமலா வெளியே சென்று விட்டு அப்பொழுதுதான் தன் ஹெல்மெட்டை கழட்டி கையில் பிடித்துக்கொண்டு உள்ளே வந்தாள். சாரிப்பா கேஷ் டிராப் பண்ணறதுக்குள்ளே பேங்குல ஒரே கூட்டம், அப்பாடா நாற்காலியில் உட்கார்ந்தவள், சாக்க்ஷி உன் தலைக்கு மேல இருக்கற பேன் சுவிட்ச போடேன்,

எந்த பதிலும் தராமல் செல்போனையே பார்த்து உட்கார்ந்திருந்த சாக்க்ஷியை ஏய் நான் சுவிட்சை போடுன்னு கத்திகிட்டு இருக்கேன், நீ என்னடான்னா செல்போனையே பார்த்துட்டு இருக்கே.

அவள் போட்ட சத்தத்தில் பக்கத்து சீட் குமார் கூட எழுந்து வந்து விட்டான். என்ன விமலா இப்படி கத்தறே, அப்ப அப்ப இது ஆபிசுன்னு உனக்கு ஞாபகப்படுத்த வேண்டியிருக்கு, சொன்னவன் அவனே சாக்க்ஷியின் தலைக்கு மேலே இருந்த பேன் சுவிட்சை போட்டு விட்டான்.

அப்பொழுதும் குழந்தையின் போட்டோவையே பார்த்து உட்கார்ந்திருந்த சாக்க்ஷியை பார்த்த குமார், என்னாச்சு சாக்க்ஷி? ஏன் இப்படி பிரமை பிடிச்ச மாதிரி செல்போன்ல இருக்கற குழந்தைய பார்த்து உட்கார்ந்துகிட்டிருக்கே.

காதருகில் ஒலித்த அவனது குரலில் சட்டென விழித்த சாக்க்ஷி குமார், குமார் இங்க பாரு இந்த குழந்தைய காலையில பஸ்ல வரும்போது பாத்தேன். இப்ப காணலைன்னு போட்டிருக்கு, அதான் திகைச்சு போயி உட்கார்ந்திருக்கேன்.

அதற்குள் விமலா அவளருகில் வந்து சாக்க்ஷியிடமிருந்த செல்போனை பிடுங்கி அந்த போட்டோவை பார்த்து விட்டு மை காட் அப்படியின்னா இந்த போன் நம்பருக்கு போன் போடு, பதட்டமானாள்.

அதுதான் என்ன பண்ணலாமுன்னு யோசிச்சு உட்கார்ந்திட்டேன்.

ஆமா போ, குமார் இந்த நம்பரை சொல்றேன், உன் செல்போன்ல டிரை பண்ணு.

நம்பர் சொல்ல சொல்ல குமார் எண்களை அழுத்தினான்.

ஹலோ எதிர் குரல் கேட்க சார் நாங்க வேலவன் டிரேடர்ஸ்ல இருந்து பேசறோம், எங்க ஸ்டாப் ஒருத்தங்க, நீங்க பேஸ் புக்ல கொடுத்திருந்த போட்டோவுல இருக்கற குழந்தைய பஸ்ல பாத்திருக்காங்க.

எதிர்ப்புறம் கொஞ்சம் பதட்டம், அமைதி, இரண்டு நிமிடத்தில் ஹலோ, நான் இன்ஸ்பெக்டர் பேசறேன். குமார் மீண்டும் முதலில் அவர்களிடம் சொன்னதை மீண்டும் ஒப்ப்வித்து, கொஞ்சம் இருங்க சார் அவங்களே பேசுவாங்க.

சாக்க்ஷியிடம் போனை கொடுத்தவன் நீ பேசு சாக்க்ஷி, இன்ஸ்பெக்டர் லைன்ல இருக்கறாரு.

போனை பதட்டத்துடன் வாங்கியவள் காலை வேலைக்கு வரும்போது அந்த பெண்ணுடன் இந்த குழந்தை பேசிக்கொண்டு வந்ததை தெரிவித்தாள்.

எதிர்புறமிருந்து இவளின் அலுவலக முகவரி கேட்டிருப்பார்கள் போலிருக்கிறது, தெளிவாக சொன்னாள். பின் மெல்ல சார்..என்னைய பாக்க வர்றதா இருந்தா போலீஸ் டிரஸ்ல வேண்டாம் சார், எங்க முதலாளி பாத்தா எனக்கு கஷ்டம் சார்.

அதற்கு இன்ஸ்பெக்டர் என்ன சொன்னார் என்று தெரியவில்லை, ரொம்ப தேங்க்ஸ் சார், காத்திருக்கறேன் சார் என்றவள்,போனை குமாரிடம் கொடுத்து விட்டு பீள்மேடு போலீஸ் ஸ்டேசன்ல இருந்து சப் இன்ஸ்பெக்டர் ஒருத்தர் வருவாராம். அவர்களிடம் சொன்னாள்.

பைக்கை ஓரமாய் நிறுத்தி விட்டு சாக்க்ஷியை இறக்கி விட்டவர் எந்த இடத்துல அவங்க இறங்கனாங்க மேடம்?

சிக்னல் தாண்டி இதா இந்த இடத்துலதான் பஸ் நின்னுச்சு சார், அந்த பொண்ணு குழந்தைய இழுத்துட்டு இறங்கறப்ப நான் படிக்கட்டு கிட்டே தான் நின்னேன். அதனால நல்லா கவனிச்சேன். இறங்கி பஸ் வந்த பாதை வழியாவே திரும்பி சிக்னலை தாண்டி போறதை பார்த்தேன்.

அப்ப குழந்தை எந்த ட்ரஸ் போட்டிருந்துச்சு?

டார்க் புளுவுல ஓரமா ஜிமிக்கி வச்ச மாதிரி பார்டர் போட்டிருந்த ஸ்கர்ட், மேலே ஒரு சட்டை மாதிரி லைட் புளூ கலர்ல போட்டிருந்துச்சு.

அந்த பொண்ணு? அது சாதாரண சேலைதான் கட்டியிருந்துச்சு, ஆரஞ்சு கலர் சேலை சார். மாநிறமா இருந்துச்சு.

வேற ஏதாவது அவங்க கிட்ட வித்தியாசம் இருந்துச்சா? ஏன்னா நாம் இங்க இருக்கறவங்க கிட்டே விசாரிக்க வசதியா இருக்கும்.

அப்படி ஒண்ணும் தெரியலையே சார்…கொஞ்சம் யோசனையாய் நின்றவள் சார் முகம் மலர கூவினாள்.

என்ன சொல்லுங்க?

சார் இறங்கும்போது அந்த குழந்தையோட செருப்பு ஒண்ணு .

கழண்டு விழுந்துச்சு, அப்ப அந்த பொண்ணு “இந்த செருப்பு ஒண்ணு”, அப்படீன்னு அலுத்துகிட்டே குழந்தைய இழுத்துட்டு இறங்குச்சு.

இறங்கின பின்னாடி … ம்..யோசித்தாள்..

இல்லே சார் மறுபடி அந்த செருப்பை மாட்டிவிட்டுத்தான் அங்கிருந்து கூட்டிகிட்டு போச்சு.

நீங்க என் கூடவே வாங்க, நான் விசாரிக்கும்போது நீங்க ஏதாவது நான் கேட்டா சொல்லுங்க. சரியா?

அவர்கள் அந்த பெண் பேருந்து வந்து நின்ற பாதையிலேயே நடந்தனர்.. சப் இன்ஸ்பெக்டர் காளப்பட்டி போகும் பாதை சந்திக்கும் இடத்தில் இருந்த பெட்டிக்கடையில் விசாரித்தார்.

சாக்க்ஷி சொல்லியிருந்த கலரில் குழந்தை ஒன்றை நடத்திக்கொண்டு ஒரு பெண் இந்த வழியாக சென்றாளா?

அவர்கள் அப்படியே அரை கிலோ மீட்டர் தூரம் அங்கிருந்த கடைகளில் இருப்பவர்களிடம் விசாரித்துக்கொண்டே சென்றனர். ஒரு சிலர் பார்த்ததாக சொன்னாலும், அதை பெரிதாக நினைக்கவில்லை என்ரே சொன்னார்கள்.

அதற்குள் சப் இன்ஸ்பெக்டர் செல் போன் அழைக்க போனை எடுத்தவர் முகம் சற்று பிரகாசமாகி எஸ்..எஸ் என்று சொல்லி தலையாட்டினார்.

நீங்க சொன்ன அடையாளத்தோட ஒரு பொண்ணு குழந்தைய கூட்டிட்டு போறதை சி சி டிவியில கண்டு பிடிச்சுட்டாங்களாம். ஆனா முதல்ல நாம பார்த்த பெட்டிக்கடை கிட்ட நின்னு யார் கூடவோ பேசிட்டு நின்னு இருக்கா. அதுக்கு அப்புறம் அவளை பார்க்க முடியலை.

மீண்டும் பெட்டிக்கடைக்காரரிடம் விசாரணை. இந்த முறை போலீஸ் என்றே அறிமுகப்படுத்த பெட்டிக் கடைக்காரர் பணிவாய் சார், ஒன்பது மணி சுமாருக்கு இந்த இடத்துல சிக்னலுக்காக மூணு கார் நின்னுச்சு சார், அது ஞாபகம் வருது.

சார் பொம்மை வேணுமா? குரல் கேட்க சப் இன்ஸ்பெக்டரும், சாக்க்ஷியும் சட்டென திரும்பி பார்த்தனர்.

வட இந்தியன் ஒருவன் நான்கைந்து பொம்மைகளை கையில் பிடித்து கொண்டு சிக்னலுக்காக நிற்கும் வண்டிகள் ஒவ்வொன்றின் அருகிலும் சென்று பொம்மை வேண்டுமா? என்று கேட்டுக்கொண்டிருந்தான்.

சப் இன்ஸ்பெக்டர் வேகமாய் அவனிடம் சென்றவர் அவனை தனியாக அழைத்து சாக்க்ஷி சொன்ன அடையாளங்களுடன் ஒரு பெண்ணும் குழந்தையும் சென்றார்களா?

இந்த கேள்விக்கு சிறிது யோசித்தவன் சார் ஞாபகம் வருது, சிவப்பு கலர் காரு ஒண்னூ சிக்னலுக்காக நின்னுச்சு, அப்ப ஒரு பொண்ணு குழந்தைய இழுத்து அந்த கார்ல ஏத்திட்டு பின்னாடி வந்த காரு கொஞ்சம் கருப்பு அதுக்குள்ள போய் ஏறிகிட்டாங்க. அப்ப அந்த குழந்தை அந்த பொண்ணை பார்த்து கத்த அதுக்குள்ள அந்த சிவப்பு கார் கதவை சாத்திட்டு இதோ சிக்னலை திருப்பி இப்படி போச்சு, மீண்டும் அவினாசி போகும் பாதையை காட்டினான்.

பின்னாடி வந்த வெள்ளை கார் அது சித்ரா ஏர் போர்ட் பாதையை காட்டி அதுக்குள்ள போச்சு.

செல்போனில் அனைத்து விவரங்களும் பறந்தது. அந்த வெள்ளைக்காரின் எண்கள் சிசி டிவி யின் மூலம் கண்டு பிடிக்கப்பட்டு அதனுடைய விலாசம் எடுக்கப்பட்டது. ஏர் போர்ட் அருகில் இருக்கும் ஒரு நகரின் முகவரியை காட்டியது.

அதே நேரத்தில் சிவப்பு கலரின் எண் ஈரோட்டு முகவரியை தந்தது.

ஈரோட்டு எல்லையை தொட்டு நகருக்குள் நுழைந்த சிவப்பு காரை ஓட்டி வந்தவன் சலித்து சொன்னான், ஒரு மணி நேரத்துல வர வேண்டிய ஊருக்கு இந்த பொண்ணால மூணு மணி நேரமாச்சு, இப்படி அழுது ஆர்ப்பாடம் பண்ணி அடிச்சு மயக்கம் போட வச்சு படுக்க வைக்க வேண்டியதா போச்சு. பக்கத்தில் இருந்தவனிடம் சொல்லிக் கொண்டே பிரப் ரோட்டின் வலது புறம் திருப்ப, போலீஸ் கை காட்டியது.

மறு நாள் செய்தி கருமத்தம்பட்டியில் ஒரு தொழிலதிபரின் குழந்தை கடத்தப்பட்டு, காவல் துறையால் ஐந்து மணி நேரத்துக்குள் மீட்டு உரியவரிடம் சேர்க்கப்பட்டது. இது அந்த தொழிலதிபரை பழிவாங்க நடந்த கடத்தல் இதற்கு உடந்தையாக இருந்து நடத்தி கொடுத்தது அந்த வீட்டில் முன்னர் வேலை செய்து வந்த வேலைக்கார பெண் என்பதும் தெரிய வந்துள்ளது.

ஆரம்ப கட்ட விசாரணையை தொடர்ந்து . மேற் கொண்டு போலீஸ் விசாரித்து வருகிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *