ஒவ்வாமை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: December 2, 2016
பார்வையிட்டோர்: 12,976 
 

சனிக்கிழமை இரவு ஒன்பதுமணி.

தி.நகரில் ஷாப்பிங் முடித்துவிட்டு, துரைசாமி ஐயங்கார் ரோட்டின் மாடியில் அமைந்துள்ள தன் வீட்டின் கதவை தள்ளிக்கொண்டு காஞ்சனா உள்ளே வந்தபோது, தன் அன்புக் கணவன் முகுந்தனின் கழுத்து கீறப்பட்டு ரத்தவெள்ளத்தில் இறந்து கிடப்பதைப் பார்த்து துடித்தாள்.

தாம்பரத்திலிருந்து காஞ்சனாவின் அப்பாவும், சகோதரர்களும் விரைந்து வந்தனர். போலீஸ்நாய் வந்து முகுந்தனை முகர்ந்து பார்த்துவிட்டு சென்னை சில்க்ஸ் வரை ஓடிச் சென்று படுத்து விட்டது.

போலீஸ் சுறுசுறுப்படைந்தது.

முகுந்தன் ஒரு வருடத்திற்கு முன்பு தன் முதல் மனைவி வசுமதியை விவாகரத்து செய்துவிட்டு, நான்கு மாதங்களுக்கு முன்புதான் காஞ்சனாவை திருமணம் செய்துகொண்டதையும், தாம்பரத்தில் பிளாஸ்டிக் காம்போனேன்ட் உற்பத்திசெய்யும் ஆன்சிலரி யூனிட் ஒன்றை ஐநூறு தொழிலாளர்களுடன் நடத்தி வருவதையும், பெரிய பணக்காரன் என்பதையும் விசாரணையில் தெரிந்து கொண்டார்கள்.

காஞ்சனா, வசுமதி இருவர் மீதும் அவர்களின் முதல் சந்தேகம் படிந்தது. அதனால் முதலில் காஞ்சனாவை துருவி துருவி விசாரித்தார்கள். அவள் மொபைலில் பேசிய இலக்கங்களை சோதனைக்கு உட்படுத்தினர்.

அடுத்து மைலாப்பூர் லஸ் கார்னரில் இருக்கும் வசுமதியின் வீட்டிற்கு க்ரைம் இன்ஸ்பெக்டர் தண்டபாணி சென்றார். மிகப்பெரிய புல்வெளியுடன் வீடு பிரம்மாண்டமாக இருந்தது. போர்டிகோவில் பென்ஸ், ஆடி கார்கள் இருந்தன. வரவேற்பறையில் காத்திருந்தபோது, சென்னையின் பிரபல கிரிமினல் லாயர் விஸ்வநாத ஐயர் வீட்டிற்குளிருந்து வந்தார்.

அவரைப் பார்த்ததும் தண்டபாணி எழுந்து நின்று விறைப்பாக மரியாதையுடன் போலீஸ் சல்யூட் அடித்தார்.

“என்ன தண்டம்….என் வீட்டிற்கு வந்திருக்க?”

“சார், ஒரு சின்ன விசாரனைக்காக வசுமதி மேடத்தைப் பார்க்க வந்தேன்.”

“வசுமதி என் டாட்டர், என்ன விஷயம்.?”

“அவரது முன்னாள் கணவர் முகுந்தன் கொலையானது பற்றி பார்மலா சில கேள்விகள் கேட்டுவிட்டு போயிடறேன் சார்.”

வசுமதி அங்கு வந்தாள். நல்ல உயரத்துடன் வாளிப்பாக சிவந்த நிறத்தில்

அழகாக காணப்பட்டாள். மூன்று வயது பெண் குழந்தை அவள் புடவையைப் பற்றிக்கொண்டு வந்தது. யூனிபார்மில் இருந்த இன்ஸ்பெக்டரைப் பார்த்ததும் அழ ஆரம்பித்தது. இன்ஸ் அவளிடம் சில கேள்விகள் கேட்டுவிட்டு விடைபெற்றார்.

விஸ்வநாதன் ஐயர் வக்கீல் டிரஸ் அணிந்து இன்ஸ்பெக்டருடன் கோர்ட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.

நான்கு நாட்கள் சென்றன.

ஐந்தாவதுநாள் இரவு எட்டு மணிக்கு, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெருவில் சரவணன் என்பவர் கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டார். அவரும் முதல் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்று, இரண்டாவது மனைவி சாரதாவுடன் எட்டு மாதங்களாக குடித்தனம் செய்து கொண்டிருப்பவர்.

போலீஸுக்கு இந்த இரண்டு கொலைகளின் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது. தவிர இது ஒரு சீரியல் கொலையோ என்று சந்தேகித்தனர்.

அடுத்த பத்து நாட்களில், போலீஸின் சந்தேகத்தை மெய்ப்பிக்கும் வகையில் நங்கநல்லூர் ஆழ்வார் கெஸ்ட் ஹவுஸ் அருகில் வாசுதேவன் என்பவர் கழுத்து அறுபட்டு கொல்லப்பட்டார். வாசுதேவன் முதல் மனைவியை விவாகரத்து செய்தவர். இரண்டாவது திருமணம் அவருக்கு அடுத்தவாரம் நடக்க இருந்தது. இறக்கும்போது அவருக்கு மனைவி இல்லை என்பது மட்டும்தான் இந்தக் கொலையில் ஒரு வித்தியாசம்.

இதில் வேதனையான விஷயம் என்னவெனில், கொலைகாரன் இரண்டு நாட்கள் ஆழ்வார் கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருந்தான் என்பதுதான். ஆனால் தங்குபவர்களிடமிருந்து அவர்களின் போட்டோ ஐடி பிரதியைப் பெற்றுக் கொள்ளவேண்டும், அவர்களின் பெயர், முகவரி, மொபைல் நம்பர் பெற்றுக்கொண்டு, பணம் பெற்றுக் கொண்டதற்கான பில் தரவேண்டும் என்கிற விதிகளை காற்றில் பறக்கவிட்டு, கொலைகாரன் இரண்டு நாட்கள் தங்கியதற்கு ஆறாயிரம் பணம் மட்டும் ஆழ்வார் கெஸ்ட்ஹவுஸில் பெற்றுக் கொண்டார்கள் என்பதால் போலீஸுக்கு குற்றவாளியை நெருங்குவதில் தடை ஏற்பட்டது.

ஆழ்வார் கெஸ்ட் ஹவுஸ் சீல் வைக்கப்பட்டது. அதன் ஓனர் தீவிரமாக போலீஸால் விசாரிக்கப்பட்டார். அவ்வளவுதான் அதற்குமேல் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

இதுமாதிரி அடுத்தடுத்து மாம்பலம், ஆதம்பாக்கம், திருவான்மியூர், மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் கொலைகள் அரங்கேறின. கொலையுண்டவர்கள் அனைவரும் மனைவியை விவாகரத்து செய்தவர்கள். கொலையுண்ட முதல் இருவர் இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வந்தவர்கள் மற்ற நால்வர் அடுத்த திருமணத்திற்காக தயாராக இருந்தவர்கள்.

ஆனால் கொலைசெய்யப்பட்ட ஆறு பேருக்கும் முதல் மனைவி மூலம் ஒன்றோ இரண்டோ குழந்தைகள் இருந்தன.

இந்த ஆறு கொலைகளும் ஆளும்கட்சிக்கு மிகப்பெரிய தலைவலியாக அமைந்தது. சட்டசபையில் எதிர்கட்சியினர், சென்னை நகரம் கொலை நகரமாகிவிட்டது என்று குற்றம் சாட்டினர். மனைவியை விவாகரத்து செய்த ஆண்கள் கொலை பயத்தில் நடுங்கி வாழ்ந்தனர். .பல பெண்கள் விவாகரத்து செய்துகொண்ட ஆண்களை மறுமணம் செய்துகொள்ளாது விலக்கி வைத்தனர். பத்திரிகைகள் தங்கள் சொந்தக் கற்பனையை சேர்த்துக்கொண்டு மக்களை பயமுறுத்தின.

அப்போதுதான், வீட்டை உடைத்து திருடிய கேஸில் துக்காராம் என்பவன் போலீஸில் பிடிபட்டான். அவனை நோண்டி விசாரித்ததில் அவன் பிரபல தாதா வீரமணியின் ஆள் என்பது தெரிய வந்தது.

வீரமணி சென்னையின் மிகப் பெரிய தாதா. அவனுக்கு நாற்பது வயது. ஆஜானுபாகுவான உடலில், வெள்ளையும் ஜொள்ளையுமாக தும்பைப்பூ வேஷ்டியில், மினிஸ்டர் ஒயிட் ஷர்ட்டில் முண்டா பனியன் தெரியும்படி கூலிங்கிளாஸ் அணிந்து தன் வெள்ளைநிற டொயோட்டா பார்சுனரில் கம்பீரமாக டிரைவருடன் வலம் வருவான். அவனுக்கு அனைத்துகட்சி அரசியல்வாதிகளும் மிக நெருக்கம். அதனால் எல்லாம் தெரிந்த போலீஸும் ஒன்றும் தெரியாதமாதிரி அவனிடமிருந்து சற்று விலகியே இருப்பார்கள்.

எனினும், துக்காராம் கைதுக்குப் பிறகு அவனது இரண்டு மொபைல் நம்பர்களின் இன்கம்மிங், அவுட்கோயிங் கால்களை டிரேஸ் செய்து பார்த்தனர். அப்போது அவன் அடிக்கடி வசுமதியுடன் உரையாடியது தெரிய வந்தது. கடந்த நான்கு மாதங்களில் பன்னிரண்டு தடவைகள் அவன் அவளுடன் பேசியிருக்கிறான்.

போலீஸுக்கு இந்த ஆறு தொடர் கொலைகளுக்கும், வீரமணி, வசுமதிக்கும் ஏதாவது தொடர்பு இருக்கும் என்கிற சந்தேகம் வலுத்தது. விஷயம் கமிஷனர் வரையில் கொண்டு செல்லப்பட்டது.

கமிஷனர், அசிஸ்டெண்ட் கமிஷனரிடம், “யோவ், வசுமதி பிரபல கிரிமினல் லாயரின் மகள். வீரமணி எல்லா கட்சி அரசியல்வாதிகளின் நண்பன். தகுந்த ஆதாரம் இல்லாம அவங்களை நெருங்க முடியாதுய்யா.” என்றார்.

“சார் மொபைல்ல அடிக்கடி பேசினாங்க…..இந்தக் கொலைகள் நடந்த நான்கு மாதங்களில் கொலைக்கு முன்பும், பின்பும் அவர்கள் பேசியிருக்கிறார்கள். மேலும் கொலையுண்ட முகுந்தன் வசுமதியின் முன்னாள் கணவர்.”

கமிஷனர் அதை ஒப்புக்கொள்ளாது, “தகுந்த ஆதாரம் இருந்தால் மட்டும் என்னிடம் பேசுங்கள்” என்றார். ஏஸிபி எப்படியாவது உண்மையைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்று மெனக்கிட்டார்.

தொலைபேசியில் அன்று இரவு ஒன்பது மணிக்கு வசுமதியின் வீட்டை தொடர்பு கொண்டார்.

விஸ்வநாத ஐயர்தான் போனை எடுத்தார்.

“சார் நான் ஏஸிபி பேசுகிறேன். உங்க டாட்டர் வசுமதி மேடம் அடிக்கடி தாதா வீரமணியுடன் மொபைலில் பேசியிருக்காங்க….தொடர்கொலைகள் பற்றி வீரமணி எங்களிடம் எல்லா உண்மையையும் ஒப்புக் கொண்டான். நீங்கள் ஒரு கிரிமினல் லாயர் என்பதால் உங்களிடம் சொல்லிவிட்டு வசுமதி மேடத்தை என்கொயரிக்கு கூப்பிட முடிவெடுத்துள்ளேன். தேவைப்பட்டால் அவங்களை அரெஸ்ட் பண்ண வேண்டியிருக்கும்.”

விஸ்வநாத ஐயர் பதட்டப்படவில்லை.

அமைதியாக “இப்ப இரவு நேரம். என் டாட்டரும் குழந்தையும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். நாளை காலை நான்கு மணிக்கு நாங்கள் திருப்பதி போகிறோம். மாலை வந்துவிடுவோம். அதுக்கு அப்புறம் உங்க என்கொயரியை வச்சுக்குங்க.” என்றார்.

வசுமதியின் மாடி அறைக்குச் சென்றார். டிவி பார்த்துக் கொண்டிருந்தவளிடம் “உன்னிடம் கொஞ்சம் பேசணும்” என்றார்.

உடனே அவள் டிவியை அணைத்தாள்.

“அம்மா வசுமதி, நான் கேட்கும் கேள்விகளுக்கு நீ என்னிடம் உண்மையான பதில் சொல்லுவியா?”

“என்னப்பா இப்படி கேட்டுட்டீங்க…மோர்தேன் என் அப்பா, நீங்க என்னுடைய உயிர் ப்ரெண்டுப்பா.”

“ரொம்ப சந்தோஷம்மா…என்னுடைய ஒரே செல்ல மகள் நீ…”

பால்கனி கதவுகளை நன்கு சாத்திவிட்டு வசுமதிக்கு எதிரே சோபாவில் வந்து அமர்ந்தார்.

“உனக்கும் இந்த ஆறு தொடர் கொலைகளுக்கும், தாதா வீரமணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லைதானே?”.

“இருக்குப்பா…நான் சொல்லித்தான் பணம் வாங்கிக்கொண்டு, வீரமணி தன்னுடையை ஆட்களை வைத்து வரிசையாக இந்த ஆறு கொலைகளையும் செஞ்சாரு. ஒரு கொலைக்கு இரண்டு லட்சம் கொடுத்தேன்.”

“ஓ காட்…. உனக்கும் ஒரு ரெளடிக்கும் எப்படிம்மா தொடர்பு?”

“நாந்தாம்பா அவர்கிட்ட போய் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டேன். ஒரு பத்திரிகை கிசுகிசுல அவரைப்பற்றி படித்தேன். ஒரு பிரபல நடிகர் படத் தயாரிப்பாளரிடம் பணம் வாங்கிக்கொண்டு கால்ஷீட் கொடுத்தாராம். ஆனால் ஒழுங்காக ஷூட்டிங் வராமல் இழுத்தடித்தாராம்.

அந்த தயாரிப்பாளர் வீரமணியைப் பார்த்து விஷயத்தை சொல்லி அழுதாராம்.

“வீரமணி அந்தப் பெரிய நடிகரை கடத்திச் சென்று திருவெற்றியூர் கடற்கரையில் ஒரு மின்சாரபோட்டில் ஏற்றிக்கொண்டு நடுக்கடலுக்கு சென்றவுடன் நடிகரின் உடைகளைக் களைந்து ஒரு ஈரச்சாக்கை அணிவித்து அடி அடி என்று பின்னிவிட்டாராம். ஈரச்சாக்கை போட்டு அடித்தால் ரத்தக்காயம் ஏற்படாது என்பதால் அவ்வாறு செய்தாராம்.

“வலி தாங்காமல் நடிகர் அவரிடம் கெஞ்சி அழுது மன்னிப்புக் கேட்டாராம். அதையடுத்து மரியாதையாக ஷூட்டிங் வந்து சிறப்பாக நடித்துக் கொடுத்தாராம். படம் ரிலீசாகி சக்கைப்போடு போட்டதாம். தயாரிப்பாளர் உச்சி குளிர்ந்து வீரமணிக்கு லாபத்தில் மிகப்பெரிய பங்கு குடுத்தாராம்.

இதைப் படித்ததும் எனக்கு வீரமணிமேல் ஒரு மரியாதை ஏற்பட்டது.”

“………………..”

“நானே அவரிடம் போனில்பேசி பாலவாக்கம் பீச்சுக்கு வரச்சொல்லி நேரில் போய் பார்த்துப் பேசினேன். அவர் என்னிடம் நேர்மையாகவும், பண்பாகவும் பேசினார். ஒவ்வொரு கொலைக்கும் முன்பு அவரைநான் பாலவாக்கம் பீச்சில் சந்தித்துப் பேசினேன். அவரிடம் பணமும் கொடுத்தேன்.”

“எப்படி வசு நீ கொலை செய்கிற அளவுக்கு மாறின?”

வசுமதியின் முகம் ஒரு பெருமிதத்துடன் மின்னியது. குரலில் வெறியுடன்,

“பின்ன என்னப்பா அக்னிசாட்சியா பெண்களைத் திருமணம் செய்துகொண்டு அவளுடன் ஆசையாக உருண்டு புரண்டு ஒரு குழந்தையையும் கொடுத்துவிட்டு, அதுக்கு அப்புறம் சிறிய விஷயங்களை ஊதிப் பெரிதாக்கி டிவோர்ஸ் என்று முறித்துக்கொண்டு புறப்பட்டு, சிறிதும் குற்ற உணர்வோ, வெட்கமோ இல்லாமல் குடித்தனம் நடத்துகிறேன் பேர்வழி என்று அடுத்தவளுடன் படுத்து உருண்டு…ச்சீ இந்தத் தெரு நாய்களை அடித்துக் கொன்றதை நான் பெருமையாக நினைக்கிறேன்.

“கல்யாணம் செய்து கொண்டவுடனே ஒருத்தனுக்கு கணவன் என்கிற பொறுப்பு வரவேண்டும். அந்தப் பொறுப்பை உணர்ந்துகொண்டு மனைவியைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு குழந்தை பிறந்தவுடன் அப்பா என்கிற பொறுப்பும் சேர்ந்து கொள்கிறது. அதெப்படி பொறுப்பை உணராமல் தன் குழந்தைமேல் சிறிதும் பாசமில்லாது அதன் அம்மாவை டிவோர்ஸ் பண்ண முடியும்?”

“நான் கொன்ற ஆறு பேரும் குழந்தை பிறந்த பிறகு முதல் மனைவியை டிவோர்ஸ் செய்தவர்கள்…. ஏன் அவர்கள் ஒரு விதவையை அல்லது ஏற்கனவே விவாகரத்து ஆனவர்களை மறுமணம் செய்துகொள்ளக் கூடாது? ஏனென்றால் அவர்கள் அரிப்பு எடுத்து புதிய அப்பத்துக்கு அலைந்த சொறி நாய்கள். பெண்கள் அவர்களுக்கு போகப் பொருள்.

விஸ்வநாத ஐயருக்கு வியர்த்தது.

“நீங்க கவலைப் படாதீங்கப்பா ஐயாம் வெரி கிளியர். அட்லீஸ்ட் கல்யாணம் ஆனவுடன் புரிதல் இல்லாமல் டிவோர்ஸ் பண்ணும் ஆண்களையாவது மன்னிக்கலாம். ஆனால் குடித்தனம் நடத்தி குழந்தையும் பெற்றுக்கொண்டு அதன் பிறகு டிவோர்சுக்கு அலையும் ஆண்களை கொலைதான் செய்ய வேண்டும். அதைத்தான் நான் செய்தேன். இம்மாதிரி ஆண்கள் தேகசுகத்திற்காக அலைபவர்கள். இவர்களின் எண்ணிக்கை வருடா வருடம் அதிகரித்துக்கொண்டே போகிறது. விவாகரத்து கோர்ட் சென்று பாருங்கள், புரியும். இவர்களை யாரும் கேட்பாரில்லை. நம் உடம்பில் ஏற்படும் அலர்ஜி மாதிரி இவர்கள் நம் சமுதாயத்தின் அலர்ஜி. இந்தவித ஒவ்வாமையைத்தான் நான் எலிமினேட் செய்ய ஆசைப்பட்டேன்.”

“வீரமணி இப்ப போலீஸ் கஸ்டடில இருக்கான். உன்னைக் காட்டிக் கொடுத்துட்டான்மா…. ஏ.ஸி.பி சொன்னார். நாம் திருப்பதி போவதாக போக்கு காட்டியிருக்கிறேன்.”

“கண்டிப்பா அப்படி இருக்காதுப்பா.”

உடனே தன் அப்பாவின் மொபைல் மூலம் வீரமணியை தொடர்பு கொண்டு ஸ்பீக்கரை ஆன் செய்தாள்.

“ஹலோ வீரா ஹியர்.”

“சார் நான் வசுமதி. எப்படி இருக்கீங்க? நீங்க போலீஸ் கஸ்டடில இருக்கிறதாவும் என்னை நீங்க காட்டிகொடுத்து விட்டதாகவும் இப்பதான் அப்பா சொன்னார்.”

“இல்லம்மா…போலீஸ் உங்க அப்பாகிட்ட போட்டு வாங்கறாங்க….நான் என் உயிரை விட்டாலும் விடுவேனே ஒழிய, எவரையும் காட்டிக் கொடுத்ததாக சரித்திரமே கிடையாதும்மா.”

“தேங்க்யூ சார்…குட் நைட்.”

“இது போதும்மா. நான் ஒரு கிரிமினல் லாயர். உனக்கு நீயே நியாயம் கற்பித்துக்கொண்டு வரிசையாக கொலைகள் செய்தது மிகப் பெரிய கிரிமினல் குற்றம். தூக்கு ஒன்றுதான் இதற்கு தண்டனை. எனினும் நீ என் ஒரே மகள். உனக்காக இந்தக் கேஸை நான் தவிடு பொடியாக்குகிறேன். ஆனால் போலீஸ் உன்னை ஸ்மெல் பண்ணிவிட்டார்கள். இனிமேல் உடனடியாக எல்லாத்தையும் நிறுத்து.”

“சரிப்பா.”

மறுநாள் காலை கோர்ட் திறந்ததும் விஸ்வநாத ஐயர் வசுமதிக்கு முன்ஜாமீன் வாங்கி வைத்துக் கொண்டார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *