எனக்கு முன் இருந்தவனின் அறை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 9,552 
 
 

உடனடியாக அறையை மாற்றவேண்டும் என முடிவெடுத்திருந்த இந்த நாள் இரவில் ஏன் திடீரென விழிப்பு வந்தது என்று தெரியவில்லை. நான் இவ்வளவு நேரம் உறங்கிதான் இருந்தேனா எனக் கூட சந்தேகம் எழுகிறது. உறங்கியதற்கான எந்த அறிகுறியுமற்று மிகுந்த விழிப்பு நிலையில் என் மூளை இயங்கிக் கொண்டிருந்தது. சோர்வின் சுவடு தெரியாமல் நெடுநேரம் உழைத்த சுறுசுறுப்பின் பிரகாசமாய் சுற்றி நடப்பதை மனம் கவனித்துக் கொண்டிருந்தது. முகத்தில் எண்ணைப்பசை… மூக்கு இடுக்குகளில் பிசு பிசுப்பு…. கண்ணோரத்தில் ஊளை…. உதடுகளின் இட வலத்தில் காய்ந்து கெட்டியாயிருக்கும் வெள்ளைத் திரவம் என எதுவுமே அற்ற முதல் விழிப்பாகத் தோன்றியது. இரண்டு பேர் கால் கைகளை `பப்பரபே’ என விருத்துப் படுத்தவுடன் நிரைந்து விடும் இந்த வாடகை அறையில் இது போன்ற உறக்கமற்ற நிலை பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்துவதாக இருந்தது.

எனக்கு பேய் பிசாசு மேலெல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனால் அப்படி ஏதாவது இருந்து தொலைத்துவிட்டால் என்ன செய்வது. பரபரப்பான இந்த செந்தூல் பகுதியில் பேயெல்லாம் வர சாத்தியம் இல்லைதான். அதுவும் லிப்டு வசதி இல்லாத இந்த ஏழாவது மாடிக்கு படியேறி என்னைத் தேடி வந்து பயமுருத்தும் அளவுக்கு நான் முக்கியமானவன் கிடையாது. ஆசிரியர் கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு பணி நிமித்தமாக தலைநகர் வந்திருக்கும் சாதாரண தமிழ்ப்பள்ளி ஆசிரியன். பள்ளிக்கு அருகில் இருப்பதாலும் வெறும் நூறு ரிங்கிட் மட்டுமே மாத வாடகை செலுத்தவேண்டும் என்பதாலும் நான் தேடி கண்டடைந்த இந்த அறையில் இரவினை இன்னும் இரண்டு நாட்கள் கழித்தால் ஒரு வாரமாகிவிடும். அப்பாவின் கடும் உழைப்பினால் எனக்கு துணையாகப்பிறந்த எட்டு சகோதர சகோதரிகளின் சத்தமும் கோழிப்பண்ணை நாற்றமும் இல்லாத இந்த அறை எனக்குப் பிடித்திருந்தாலும் இன்று வரை எனக்கு அந்நியப்பட்டே இருந்தது எனக்கு முன்பு இருந்தவனின் வாடையினால்தான்.

ஆம் வாடை. எதைப்போட்டு தேய்த்தாலும் நகர்வேனா என எல்லா இடங்களிலும் ஒட்டிக்கிடக்கும் எனக்கு முன் இருந்தவனின் வாடை. அந்த வாடயை நுகர முடியாது. இன்னும் கூறப்போனால் அதை உணர நாசிக்கு எந்த வேலையும் கிடையாது. அது மிக அரூபமானது. எந்த நரம்பிலும் உரசாமல் மூளையின் எல்லா உணர்ச்சிப்பகுதிகளையும் சென்றடைந்து, ஒரே சமயத்தில் சீண்டிவிடும் சாமர்த்தியம் கொண்டது. என் உடலை அது சூழ்ந்து கொள்வதையும்; திடீரென எதிர்கொண்டு முகத்தில் அரைவதையும்; பின்புறம் நின்று உற்று பார்ப்பதையும் அங்குள அங்குளமாக என்னால் உணர முடிந்திருக்கிறது. அவனது வாடையை நான் சந்தித்தது பற்றி முதலில் சொல்ல வேண்டும். அது மிக அருவருபானது.

ஃ ஃ ஃ

அறைக்கு பக்கத்தில் இருந்த சின்னஞ்சிறிய மலக்கூடத்தில் அமர்ந்தால் மலங்கழிக்கவும் எழுந்து நின்றால் குளிக்கவும் மட்டுமே முடியும். அவன் அங்குதான் தனது இருப்பை சில காலியாகி, வாய்பிழந்து விட்ட சிகரெட் பெட்டிகள் மூலம் எனக்கு முதன்முதலில் உணர்த்தினான். ஒவ்வொரு சிகரெட் பெட்டிக்குள்ளிருந்தும் அவன் வாடைதான் வீசியது. கொஞ்சம் அதனுள் உற்றுப்பார்க்கையில் ஆழ் இருளில் அவன் கண் வெள்ளைப்படலம் மட்டும் என்னைச் சிமிட்டிப்பார்ப்பது தெரிந்தது. கருப்பு படலம் தனியே கலண்டு மிதந்து கொண்டிருந்தது. அவன் அங்குதான் ஒளிந்திருந்தான்.இன்னும் தனது இதர உறுப்புகளை வெவ்வேறு இடங்களில் ஒளித்துவைத்திருக்கக்கூடும். எனக்கு அது பற்றி அதிகம் தெரியவில்லை.

பெட்டிகளில் நீரைக்கொண்டு நிரப்பினேன். அவன் கண் ஒரு பலூனைப்போல மேலே மிதந்து வந்திருக்கக்கூடும். பெட்டியை மூடி; நன்றாகக் குழுக்கி மலக்கூடத்தொட்டியில் அவைகளைக் கவிழ்த்தேன். ஒவ்வொரு பெட்டியாக குலிக்குள் வீசினேன். நிமிர்ந்தபோது ஒரு பகுதி உடைந்து உள்புற பலகை தெரியும் முகம் பார்க்கும் கண்ணாடியில் என் இடது கண்ணை மட்டும் பார்க்க முடிந்தது. கண்ணாடிப்பலகையில் நிறைய தொலைபேசி எண்கள் குவிந்து கிடந்தன. அவை யாருடையவையாய் இருக்கும் என்ற கேள்வியைவிட மலக்கூடத்தில் அவை இருப்பதற்கான நியாயங்களையே மனம் தேடி சோர்வு கண்டது. மலக்கூடத்தொட்டியில் ஈரமாகி விழுந்துகிடந்த அவனது உள்சிலுவாரை அகற்றும் மனத்திடம் கொஞ்ச நேரம் கந்த சஷ்டி கவசத்தை படித்த பிறகே தோன்றியது. அது ஏதோ ஒரு மட்டமான பிராண்டில் பின்புறம் பெரிய ஓட்டையுடன் இருந்தது. பேசினில் மலக்கரைகள் திட்டுத்திட்டாய் படிந்திருந்தன. கொஞ்ச நேரத்தில் பேசின் முழுதும் அவனது மலம் மிதப்பதாக என் மனம் சில காட்சிகளை ஒளிபரப்புகையில் குமட்டல் வந்தது. வெறும் பேசினுள் நீரை வாரி இரைத்தேன். எந்த மாற்றமும் இல்லை. ஆனால் தயக்கமின்றி நான் பயன்படுத்த அது போதுமானதாக இருந்தது.சிகரெட் பெட்டிகள் மட்டும் குலிக்குள் சென்று மறையாமல் மிதந்தபடி இருந்தன. அன்றைய இரவு எனக்கு நிறைய தொலைபேசி அழைப்புகள் வந்தன. எல்லா எண்களும் அவன் கண்ணாடிப்பலகையில் எழுதி வைத்தவை. நான் எதற்கும் பதில் கொடுக்கவில்லை.

அதன் பிறகு ஒவ்வொரு முறை மலக்கூடத்தில் நுழையும்போதும் அவன் விட்டுச்சென்ற ஏதாவது ஒன்று என் நிர்வாணத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தோன்றும். எவ்வளவு முயற்சித்தும் அவைகளை என்னால் முழுதுமாக அகற்ற முடியவில்லை.அவன் முன்பு அடிக்கடி நான் நிர்வாணமாக நிர்க வேண்டிய நிர்பந்தம் பெரிய சளிப்பினை எனக்குள் ஏற்படுத்திய படி இருந்தது.பிறகு வந்த நாட்களில் பிறர் முன் நிர்வாணமாய் நிர்ப்பது எனக்கு பழகி விட்டது போல் தோன்றியது. மலம் கழிக்கும் போதும் குளிக்கும் போதும் சுய இன்பம் கொள்ளும் போதும் கதவை திறந்தே வைத்திருந்தேன்.எந்தச் செயலையும் ரசனையற்று இயந்திரத்தன்மையுடன் செய்யும் அவலத்தை அவன் இருப்பு எனக்கு ஏற்படுத்தியபடி இருந்தது. அங்கிருந்துதான் அந்த வாடை என்னைப் பின் தொடரத் தொடங்கியிருக்க வேண்டும்.

யாரோ ஒரு அந்நியனின் இடத்தில் அத்து மீறி நான் நுழைந்திருப்பதாக தோன்றும் கணங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் நான் பட படப்பு குறைந்துதான் இருந்தேன். அதுபோன்ற அந்நியமான கணங்கள்,பெரும்பாலும் அறையில் ஆடைகள் மாட்டிவைக்க அவன் அடித்திருந்த ஆணிகளை பார்க்கும் போதெல்லாம் தோன்றும்.எல்லா ஆணிகளிலும் நீல வண்ண நூல் சிறிதளவேனும் சுற்றி கிடக்கும். ஒரு வேளை அவன் நீல நிற பிரியனாக இருக்கலாம். அல்லது அவன் தொழிற்சார்ந்த உடையின் நிறமாக இருக்கலாம். சற்று நேரம் கண்ணை மூடி அசந்ததும் அவன் அந்த நூல்களை முடிச்சிட்டு என் கழுத்தை நோக்கி வருவது தெரியும். பயந்தாங்கொள்ளி. நான் விழித்திருக்கையில் அவன் அவ்வாறு செய்வதில்லை. அந்த நூலை ஆணிகளிலிருந்து பிரித்து வீசிய பொழுதும் அது வீசிய இடத்திலிருந்தே எனக்கான எமகண்டத்திற்கு காத்திருப்பது போல் இருந்தது. அதை அழிப்பது அத்தனை சுலபமானதாகத் தெரியவில்லை. இறுதியில் அவைகளைச் சேகரித்து, குவித்து எரித்தவுடன் சாம்பலானது. சாம்பலை மிக கவனமாக சன்னல் வயோக வீசி பூட்டியவுடன் சிறு துகளாவது அறைக்குள் நுழைந்திருக்குமா என்று தோன்றிய சந்தேகத்தை இங்கு உங்களுக்கு தெரிவிப்பது தேவையற்றது என நினைக்கிறேன்…. மேலும் நீங்கள் என்னை கோழையாக எண்ணக்கூடும்.

தொடக்கத்தில், விரிப்பற்ற அவன் மெத்தையில் படுக்கும் கணமெல்லாம் நான் அடையகூடிய பதற்றம் கற்பிழக்கும் ஒரு பெண்ணுக்கு நிகரானது. மெத்தையின் படிந்திருந்த அவனது விந்துகறைகள் ஒவ்வொரு முறையும் அவன் இருப்பை அதிகமாக்கியது. இன்று எனக்கும் அதை தூய்மை படுத்த விருப்பம் இல்லை. அசுத்தம் எனக்குப் பிடித்துப் போயிருந்தது. இந்த அறைக்கு வந்த புதிதில் நான் மாற்ற வேண்டும் என நினைத்த அனைத்தும் இன்றுவரை அப்படியேதான் இருக்கிறது. கறைகள் படிந்திருந்த இந்த நிர்வாண மெத்தையை கண்டவுடன் ஏற்பட்ட அருவருப்பு இன்று காணாமல் போய்விட்டதை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. அவன் உறங்கும் தருணங்களில் ஏற்பட்ட ஒரு மர்ம சொப்பனத்தில் அவை வெளியேறியிறுக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு இடத்தில் அவை படிந்து கறையாக விரிந்திருந்தது.

பொருட்களை சுமந்து வந்த கலைப்பிலும் முதல் நாள் ஏற்பட்டிருந்த மன சோர்விலும் அதில் படுத்தபோது அவன் அணுக்கள் என் உடல் முழுவதும் ஏறி ஊர்வது போலவே இருந்தது. ஒரு புழுவுக்கான சாமர்த்தியத்தோடு அவை நெளிவதும் காது மூக்கு துவாரங்களில் நுழைவதுமாக என்னை இம்சித்தது. முகம் உடலை பல முறை நனைத்தும் நிம்மதியான உறக்கம் வந்த பாடில்லை. என்ன செய்வதென்று தெரியாததால் அவைகளின் போக்கிலேயே விட்டு விட்டேன். எனக்கு கற்பப்பை இல்லாததுகூட அன்று எனது தைரியத்திற்கு காரணமாய் இருந்திருக்கலாம்.

ஆனால் இன்றைக்கு விழிப்பிற்கு இவையெல்லாம் காரணமாக இல்லை. அவனது இம்சை இவற்றையெல்லாம் கடந்து குரூரமானது. அவன் என்மீது திணித்த வன்முறை மிகவும் திட்டமிட்டதாக உணர்கிறேன்.

ஃ ஃ ஃ

கட்டில் எனக்கு பழக்கப்பட்டு, உடலை தாராளமாக கிடத்தியிருந்த அந்தப் பொழுதில் முகத்துக்கு நேரே சுவர் விரிந்து கிடந்தது. நிறைய கிறுக்கல்கள். அதிகமாக பெண்களின் உருவம்தான் வரையப்பட்டிருந்தது. அவைகளில் முகங்கள் இல்லை. இடுப்புக்கும் முலைகளுக்கும் மட்டும் அதிகபடியான முக்கியத்துவம் கொடுத்து வரையப்பட்டிருந்தது. பல வகையான முலைகள். வரைந்தவனின் விருப்பம் போலெல்லாம் அவை சிருஷ்டி பெற்றிருந்தன. இடையிடையே சில கார்களும் ஊர்ந்து சென்றுக் கொண்டிருந்தன. ரொம்ப நேரமாய் உற்றுப் பார்த்ததில் அவை எங்கோ தூரப்பிரயாணத்தில் ஈடுபட்டிருப்பதாய் தோன்றியது. அந்தக் கார்களில் ஏதாவதொன்றில் ஏறிக்கொள்ளவும் யாருக்கும் தெரியாத அந்தத் தொலைதூர பிரதேசத்திற்கு பயணம் செய்யவும் ஆவல் மேலிட்டபடி இருந்தது. எனக்கு முன்பிருந்தவன் உருவாக்கிய கார்கள் மிக அற்புதமானவை. வெவ்வேறு வடிவங்களில்…. சதுரமான சக்கரங்களில் அவை அமைந்திருந்தன. சில கார்களுக்கு முலைகள் கூட இருந்தது.

இதற்கு முன் இந்த அறையில் வசித்தவன் சுவர்களில் உருவாக்கியிருந்த உலகம் முதலில் அதியற்புத ஒன்றாக எனக்குள் வியாப்பித்தபடி சென்றது. மேலும் கடந்து சென்ற இரண்டு நாட்களில் அவை என் கண்களில் இருந்து எப்படி தப்பியது எனவும் வியப்பாக இருந்தது. இதற்கு முன் அவை இந்தச் சுவர்களில் இல்லை. அவன் இந்த அறையின் வேறு பகுதியில் உருவாக்கிய உருவங்கள் இவை. மெல்ல நகர்ந்து இங்கு வந்திருக்கக்கூடும். வேறெங்கோ வரையப்பட்டிருந்த இவை நெடிய பயணத்தின் இறுதியில் என் கண்முன் தோன்றியுள்ளன. இன்னும் சில தினங்களில் இவை இங்கிருந்து நகர்ந்து சென்றுவிடும். இந்த கார்கள் ஊர்ந்து சன்னலுக்கு வெளியில் நகர்ந்து விடலாம். இந்தப் பெண்கள், கால்களும் தலையும் அற்ற தங்கள் தேகத்தைத் தாங்கியபடி மெல்லிய நடன அசைவில் என் கண் முன்னிருந்து களைந்து விடலாம். எனக்கு ஒரு வகை எச்சரிக்கை உணர்வு தோன்றியது. இன்னும் நிறைய அற்புதங்கள் இந்த அறையில் ஒளிந்திருக்கலாம் என மனதிற்குப்பட்டது.

என் தலைக்கு மேலும் பக்கத்திலும் நிறைய பேர் கூர்ந்து பார்ப்பதாய் உணர்ந்தேன். கண்களை மூட பிடிக்க வில்லை. விழித்தபடியே அண்ணாந்த நிலையில் இருந்தேன். சாயம் பெயர்ந்திருந்த மேல் பரப்புகளில் பல வகையான உருவங்கள் தெரிய தொடங்கின. டிராகன், கத்தியேந்திய வீரன், காதுகளை விரித்திரிக்கும் நாய், நீண்ட மூக்கோடு ஒருத்தி,பெரிய குறியோடு ஒருவன் என சகல ஜீவராசிகளும் அதில் அடைகளமாகியிருப்பது தெரிந்தது. இன்னும் அதில் நிறைய தென்படலாம் என தொடர்ந்து அண்ணாந்து பார்த்தபடி இருந்தேன். அப்படி தேடுகையில் ஏதாவது அனுமாஷ்ய உருவம்கூட தென்படலாம் என தோன்றியதும் பயம் கௌவியது. கண்களை இறுக்க மூடினேன். என் பயத்தை சுவரிலிருந்து கண்டவர்கள் பரிகசித்தனர்.

கோவம் பொங்க அவர்களை நோக்கினேன். இப்போது சத்தம் இல்லை. ஆனால் எல்லோர் முகத்திலும் குறும்பு சிரிப்பு இருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் அதுவும் மறைந்து இறுக்கமாக முகத்தை வைத்துக் கொண்டார்கள். எனக்கு சட்டென ஒரு யோசனைத்தோன்றி தீவிரமாக செயலில் இறங்கினேன்.

கைகால்கள் சங்கிலியால் கட்டப்பட்ட பின்பும் அனைவர் முகத்திலும் திமிர் இருப்பது தெரிந்தது. இனி அவர்கள் நகர முடியாது. முதன் முதலாய் பெண்களை அடிமைப்படுத்தும் இன்பத்தை அறிந்துகொண்டேன். அது எனக்குள் புதிய தெம்பினை ஏற்படுத்தியபடி இருந்தது. ஒருத்தியை என்னிடம் பணிய வைக்க முடிவதும் நான் நினைப்பது போல அவளை வடிவமைக்க முடிவதும் என்னை கடவுளுக்கு நிகரான சிருஷ்டிப்பாளன் எனவும் எண்ண வைத்தது. இன்னும் இன்னும் அவர்களை துன்புறுத்தத் தோன்றி ,நான் கற்றிருந்த கொஞ்ச நஞ்ச ஓவியத்தின் மூலம் பருத்த உயர்ந்த ஆண்களை ஆயுதங்களோடு தோற்றுவித்தேன். தடித்த புருவத்தின் மூலமும் மீசையின் மூலமும் அவர்களை கொடூரமானவர்களாக மாற்றினேன். இப்போது அந்தப் பெண்களின் முகத்தில் மெல்லிய பயம் தோன்றியது. நடக்க போகும் கொடூரத்தை பார்க்க மனமின்றி முகத்தை திருப்பிக் கொண்டேன். சற்று நேரத்திற்கெல்லாம் முணங்கள் ஒலி கேட்டது. முணங்களின் இரைச்சல் கூடிக்கொண்டே சென்றது. பெண்கள் மட்டுமல்லாது நான் உருவாக்கிய ஆண்களிடமிருந்தும் முணங்கள் உற்பத்தியாகிக்கொண்டிருந்தது. அது மிக விசித்திரமான ஒலி. இன்பத்தின் உச்சத்தில் உருவாகும் மொழி. எனக்கு புரிந்து போனது. நெடுநேரம் முணங்கள் மட்டும் கேட்டது. அந்தக் காட்சியைக் காண விருப்பம் இல்லை. ஓசைகள் தீரும் வரை காத்திருந்தேன்.ஒரு துரோகம் நிகழ்ந்து விட்டதற்கான கசப்பு தொண்டையை அடைத்துக்கொண்டிருந்தது.

அந்நாள் இரவு நிம்மதியற்றவை. இந்த இரவு போல அன்றும் மூளை விழிப்பு நிலையில் கிடந்தது. ஆனால் அவை அமைதியிழந்தவை. மறுநாள் பள்ளியில் கூட அந்த முணங்கள் காதுக்குள் கேட்டுக்கொண்டே இருந்தது பெரும் அவதியாகப்பட்டது. என்னை அணுகிய ஒவ்வொரு ஆசிரியைகளும் முணங்கிவிட்டு செல்வது போல இருந்தது. தலைமை ஆசிரியை கூட ஒருமுறை முணங்கினார். மறுநாள் இரவு அவர்களைப் பார்க்க மனம் ஒம்பவில்லை. அவர்களும் நெடுநேரம் அமைதி காத்து இருந்தனர். நான் சங்கிலியில் பிணைத்திருந்த அவர்களின் கால்கள் அசைவற்றிருந்தது. அவர்கள் இனி இந்த அறையை விட்டு போக சாத்தியம் கிடையாது. அவர்கள் என் அடிமைகள். ஆம் அடிமைகள். இந்த ஒரே நிம்மதியில் தான் நாட்களைக் கழித்தேன். ஆனால் மறுநாள் அவர்களின் கால்களுக்கடியில் புதிதாய் விழுந்து கிடந்த அவர்களின் பரம்பரைகள் மீண்டும் என்னை பயமுறுத்தத் தொடங்கிவிட்டது. அவர்கள் மிக விரைவாக வளர்ந்தார்கள்…. விரைவாகக் கூடினர்.. விரைவாகப் பெற்றனர். அவர்களின் ஓயாத பிரசவ முழக்கம் எந்நேரமும் செவிகளை ரொப்பிக் கொண்டிருந்தன. அவர்கள் நிறுத்தாமல் பெருகி கொண்டிருந்தனர்.

அவர்கள் பெரிய சமூகமாக உருமாறியிருந்தனர். ஒவ்வொரு நாளும் நானில்லாத சமயங்களில் அவர்கள் புதிதாய் ஒவ்வொன்றைக் கற்று வைத்திருந்தது எனக்கு வியப்பையும் பதற்றத்தையும் உருவாக்கியது. பெரிய முக்குடன் கைகளில் கம்பு வைத்திருந்த ஒருவனை கடவுளாக நியமித்திருந்தனர்.அவர்களுக்குள் ஜாதிகள் கூட உருவாகியிருந்தது. அவர்கள் என்னைவிட வலுவானவர்களாகிவிட்டிருந்தனர். இப்போது நான் அவர்களுக்கு ஒன்றும் இல்லாதவனாகி விட்டது ஒரு வகை தாழ்வுணர்வை எனக்குள் ஏற்படுத்தியது. அவர்களின் கால் சங்கிலிகளை வெட்டி, அவர்களிடம் நகர்ச்சியை ஏற்படுத்த முனையும் போதெல்லாம் கூரிய ஆயுதங்களைக் கொண்டு தாக்க வந்தனர். அவர்கள் கால்களில் சங்கிலிகளை விரும்பினர். தங்கள் குழந்தைகளையும் சங்கிலியுடன் பிரசவித்தனர். அவர்களின் கடவுளுக்கும் கால்களில் சங்கிலியை அணிவித்திருந்தனர்.எனக்கு முன் இருந்தவனின் வாடை அவர்கள் எல்லோர் மேலும் வீசியது.

– பெப்ரவரி 2011(நன்றி: http://vallinam.com.my)

மலேசியாவில் கெடா மாநிலத்தில் உள்ள லூனாஸ் எனும் சிற்றூரில் பிறந்தேன். ஆரம்பப் பள்ளி வெல்லஸ்லி லுனாஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி. இடைநிலைப்பள்ளியும் லுனாஸில்தான். அப்பா மனோகரன். அம்மா பேச்சாய். இருவருமே வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள். அப்பாவின் வாசிப்பு தத்துவம் சார்ந்தது. அம்மா இலக்கியம். எனது சகோதரி எனக்கு முன்பே கதைகள் எழுதும் ஆர்வம் பெற்றிருந்தார். லுனாஸில் இருக்கும் போதே பத்திரிகைகளுக்கும் இதழ்களுக்கும் கதைகள் மற்றும் கவிதைகள் எழுதினேன். 16 வயதில் எம்.ஏ.இளஞ்செல்வன்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *