உங்க கிட்டே சொல்றதுக்கு என்ன சார், என்னால முடியலை சார், எப்படா அவன் கிட்டே இருந்து கழண்டுக்கலாமுன்னு நினைச்சேன். ஆனா பயம் சார், இவன் ரொம்ப கொடூர புத்தி உள்ளவன் சார், எனக்கு இந்த எண்ணம் இருக்குன்னு தெரிஞ்சாலே என்னை அங்கேயே முடிச்சிடுவான், அதுனால அவன் செய்யற எல்லாத்தையும் பல்லை கடிச்சு பொறுத்துகிட்டேன். சொல்லிவிட்டு மூக்கை உறிஞ்சியவள், கிளாஸில் மிச்சம் இருந்த விஸ்கியை எடுத்து வாயில் ஊற்றிக்கொண்டாள்.
ஏன் உங்க வீட்டு சைடு ஆளுங்க இருப்பாங்க இல்லையா, அவங்களை வச்சு இவனை கண்டிச்சிருக்க வேண்டியதுதானே.
இல்லையே சார், நான் மும்பையில பிறந்து வளர்ந்தவ, அங்கதான் படிச்சிகிட்டிருந்தேன் இவன் அங்க படிக்க வந்தான், இரண்டு பேருக்கும் பழக்கம் ஆயிடுச்சு, அதுக்கப்புறம் என்ன, இவனை நம்பி இதோ உங்க முன்னால தண்ணியும் கையுமா நிக்க வேண்டியதா போச்சு.
இந்த பழக்கம் உங்களுக்கு இப்பத்தான் வந்துச்சா?
சார் உண்மைய சொல்றேன் சார், மும்பையில எங்க குடும்பம் ரொம்ப ஏழ்மையான குடும்பம் சார், நான் படிச்சு முன்னுக்கு வந்து காட்டணும்னு வெறியோட படிச்சுகிட்டிருந்தேன். பி.எஸ்.சி பயாலஜிதான் சார் என்னோட சப்ஜெக்ட்.
இரண்டாவது வருஷம் ஆறு மாசம் கூட போயிருக்க மாட்டேன், இவன் டிகிரி முடிச்சு கிளம்பிகிட்டிருந்தான். அப்ப நானும் இவனும் ரொம்ப குளோசா இருந்தோம். அவன் சொல்றதெல்லாம் எனக்கு வேத வாக்கு, அப்படி இருந்தவ இவன் ஒரு வார்த்தை சொன்னான், என் கூட வந்துடு, உன்னைய ராணி மாதிரி வச்சுக்குவேன்… அப்படீன்னு சொல்றதை நம்பி, மூக்கை வேகமாக உறிஞ்சி அழுவதை பார்த்தபடி லோகநாதன் உட்கார்ந்திருந்தார்.
பெருமூச்சு ஒன்று அவரிடம் இருந்து வந்தது. இன்னும் ஓய்வு பெற நான்கு வருடங்களே இருக்கிறது. இரண்டு பெண் குழந்தைகள் இருவரும் நல்ல வேலையில் இருந்தாலும் மனம் என்னவோ இந்த பெண்ணின் கதையில் பயந்து நடுங்கியது.
பெரிய பெண் தான் விரும்பியவனைத்தான் மணக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறாள். இவர் அதற்கு இசைவு கொடுக்காமல் இழுத்தடித்து கொண்டிருக்கிறார்.
அவளோ உங்க இரண்டு பேர் முன்னாடிதான் என் கல்யாணம் நடக்கும், அதுவும் நான் விரும்பறவரோடதான், இவளின் பிடிவாதம்.
இவர்கள் இருவருக்கும் இடையில் மனைவியும், சின்னவளும் செயவதறியாது திகைத்து தினம் தினம் கசமுசவாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. அப்பாவும் பெண்ணும் ஒருவரை ஒருவர் பேசிக்கொள்ளாமலேயே ஆறு மாதங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது
அவர் எதிர்பார்த்த பதில் இனியும் இந்த பெண்ணிடம் வரும் என்று தெரியவில்லை. இதற்காக இவளை இந்த “பாருக்கு” கூட்டி வந்தார்.
இவள் இதுவரை குற்றம் சொல்லிக் கொண்டிருந்த ராஜசேகர் நேற்று முன்னால் காலை அவன் வீட்டில் இறந்து கிடந்தான். ஆரம்பத்தில் இது தற்கொலையாக இருக்கலாம் என்றுதான் நினைத்தார்கள். ஆனால் “ஊடகங்கள்” விடுவதில்லையே, அவன் அவ்வப்பொழுது சினிமாவில் தலைகாட்டி கொண்டிருந்தவன், அவனின் இறப்பை “ஊடகங்கள்” அவ்வளவு சீக்கிரம் விடுமா?
லோகநாதனின் தலையில் இந்த “கேசின்” பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
முதலில் ராஜசேகரின் விவரங்களை சேகரிக்கும்போதே தெரிந்து விட்டது, இவனின் குணங்களால் ஏராளமான விரோதிகளை சம்பாதித்து கொண்டிருக்கிறான்,
இவனுக்கு திருமணம் ஆகவில்லை என்று அவனின் பெற்றோர் அடித்து சொன்னாலும் ஒரு பெண்ணுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதை தெரிந்து கொண்டவர் அந்த பெண் பெயர் மிர்சிலின் என்பதையும் அவள் எங்கு வசிக்கிறாள் என்பதையும் அறிந்தார்.
‘யெஸ்’, அந்த பெண்ணின் அழைப்பில் உள்ளே வந்து உட்கார்ந்தார். ஓரளவு வசதியுடந்தான் வைத்திருக்கிறான் இந்த பெண்ணை என்பதை உணர்ந்தவர், மெல்ல பேச்சு கொடுத்தார்.
வட இந்திய சாயல் இருப்பதை உணர்ந்தவுடன் தனது இரண்டு மூன்று வருட டெல்லியில் பணிபுரிந்த அனுபவத்தை கொண்டு ஹிந்தியில் சகஜமாக உரையாடினார்.
அப்படி உரையாடும்போதுதான் இவளது பலவீனமே மதுதான் என்பதை உணர்ந்து பாருக்கு அழைத்து வந்தார்.
சார் என் பேர் மணிமாறன், நாங்க இரண்டு பேரும் ஒண்ணா ஸ்கூல்ல படிச்சோம், அதுக்கு பின்னாடி அவனுக்கு மும்பையில படிக்க சான்ஸ் கிடைச்சு அங்கே போய் படிச்சான். நல்ல பிரில்லியண்ட் ஸ்டூடன்ட் சார்.
உங்க “பேக்கிரவுண்ட்”
சார் எங்க அப்பா அம்பத்தூர்ல ஒரு பேகடரி வச்சிருக்காரு, இப்ப நான்தான் அதை பாத்துகிட்டிருக்கேன். இதோ என்னோட விசிட்டிங் கார்டு கையில் கொடுத்தான்.
விசிட்டிங் கார்டை வாங்கி பார்த்தார், நல்ல வழவழப்பாய் இருந்தது. விலை உயர்ந்ததாய் இருக்கிறது, அவனது செல்வ செழிப்பை மனதுக்குள் கணக்கிட்டார்.
ராஜசேகருக்கு வசதிகள் எப்படி?
அவன் ஒரே பையன் சார் அவங்க அப்பா அம்மாவுக்கு. அவங்கப்பாவும் பெரிய ஏஜன்ஸி ஒண்ணு வச்சிருக்காரு. இவனைத்தான் அதை பார்க்க சொல்லி கிட்டே இருப்பாரு.இவனுக்கு சினிமா ஆசையினால அந்த பக்கம் போகாமலேயே இருந்தான்.
ஒரு சில நேரங்கள்ல அவங்க அப்பா அம்மா எங்கிட்டேயே அதை பத்தி பேசியிருக்காங்க, ஆனா நான் இதை பத்தி பேச வந்தாலே அவன் எறிஞ்சு விழுந்து என் மூடை கெடுக்காதே அப்படீன்னு கத்துவான். அதனால நான் அவன் கிட்டே இந்த விசயத்தை பத்தி பேசறதையே விட்டுட்டேன்.
ராஜசேகரோட பழக்க வழக்கங்கள்?
எல்லா விஷய்த்துலயும் அவன் வீக் தான் சார், இவனுக்கு சினிமாவுல நல்ல சான்ஸ் ஒண்ணு வந்துச்சு, கிட்டத்தட்ட ஹீரோவுக்கு அடுத்த ரோல், ஆனா அதுல நடிக்கற ஹீரோயின் இவனை ஏமாத்தி அவ தம்பிய நடிக்க வச்சிட்டா, அப்ப கூட இவன் அவளை ரொம்ப நம்பினான். அவ என் மேல வச்சிருக்கற அஃப்கெசனை நான் நம்புறேன் அப்படீன்னான்.
இவன் கூட வாழ்ந்து கிட்ட இருக்கற பொண்ணை பத்தி !
அந்த பொண்ணு கொஞ்சம் ஷோஷியல் டைப் சார், எல்லார்கூடயும் நல்லா பழகும், அது இவனுக்கு ஒரு சந்தேகம், பாவம் அதை போட்டு அடிப்பான், சில நேரங்களில கொடூரமா தண்டனை கூட கொடுத்திருக்கான்.
இதுவெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?
சார் நான் அவன் வீட்டுக்கு அடிக்கடி போவேன், அந்த பொண்ணு எங்கிட்டே சொல்லி அழும்.
இவங்க அப்பா அம்மா சென்னையில இருந்தும் ஏன் இவரை தனியா வசிக்க விட்டிருக்காங்க.
சார், தப்பா நினைச்சுக்காதீங்க, இவனோட மோசமான “பிகேவியர்” தான் காரணம் சார். அவங்களுக்கே பொறுக்கலை, நீ தனியாவே இருந்துக்க, நாங்க தனியா இருக்கோம், வேணும்னா வந்து எங்களை பார்த்துக்கோ அப்படீன்னுட்டாங்க.
சரி ராஜசேகரை கடைசியா எப்ப பார்த்தீங்க?
சார் அவன் சாகறதுக்கு இரண்டு நாள் முன்னாடி “பார்ல” வச்சு பார்த்தேன். அப்ப அந்த பொண்ணும் கூட இருந்துச்சு.
அப்ப அவர் எப்படி இருந்தாரு?
நல்லா சிரிச்சு பேசிட்டுத்தான் இருந்தான். இவனே ஒரு படம் தயாரிக்கறதை பத்தி கூட பேசினான்.
அதுக்கு நிறைய பணம் வேணுமே.
நான் கூட அதை பத்தி கேட்டேன் சார், அதுவெல்லாம் ரெடி பண்ணிடலாம், என்ன பியூட்டி சரிதானே அப்படீன்னு அந்த பொண்ணு கிட்டே கேட்டான், அதுக்கு அந்த பொண்ணு என்னமோ பண்ணு, எனக்கு இது ஒண்ணும் பிடிக்கலை. என்னை கல்யாணம் பண்ணிக்க அது மட்டும் தான் சொல்லுவேன் அப்படீன்னு சொல்லிச்சு.
ஓ…
அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கறதில இவருக்கு என்ன சிக்கல்?
என்ன சார் இப்படி கேட்கறீங்க? அவங்க வீட்டுல ஒத்துக்குவாங்கலா?, இவனே அவங்களை ஒத்துக்க வைக்கலாமுன்னுதான் மும்பையில இருந்து இந்த பொண்ணை கூட்டிட்டு வந்தான், அவங்க பேரண்ட்ஸ் ஒத்துக்கவே இல்லை, அந்த பொண்ணு அங்கேயும் போக முடியாத சூழ்நிலை. இருந்தாலும் மனிதாபிமானத்தோட அந்த பொண்ணுக்கு தனி வீடு ஏற்பாடு பண்ணி மாசா மாசம் பணம் வர்றதுக்கும் ஏற்பாடு பண்ணிட்டான்.
ராஜசேகர் பலவந்தபடுத்த பட்டதற்கான, எந்த காயங்களும் இல்லை. அவர் உடலில் அளவுக்கதிகமான தூக்கமாத்திரை போட்டுக்கொண்டதாலே இறப்பு நிகழ்ந்திருக்கிறது. கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை. மற்றபடி படுக்கையில் படுத்தவாரேதான் இறந்திருக்கிறார்.
தற்கொலை செய்து கொள்பவன் என்னென்ன முன்னேற்பாடுகள் செய்து கொள்வானோ அத்தனையும் செய்தது போலத்தான் இறந்தவர் காணப்பட்டார்.
ராஜசேகரின் மருத்துவ பைலை நிதானமாக படித்தார் லோகநாதன்.
இந்த கேசை அவரிடம் ஒப்படைக்கும் போதே அசிஸ்டெண்ட் கமிஷனர் நக்கலாய் சிரித்தார். இந்த கேசையாவது கண்டு பிடிச்சு குற்றவாளியை கோர்ட்டுக்கு கொண்டு வருவியா?
லோகநாதன் ஒன்றும் பேசவில்லை. அவர் மனசாட்சிக்கு தெரியும், அவர் எடுத்த எல்லா கேஸ்களிலும் குற்றாவாளியை அடையாளம் கண்டு பிடித்து விடுவார்.
ஆனால் குற்றவாளி அரசியல் பின்புலத்திலோ, அல்லது வேறு ஏதோவொரு வகையிலேயே தப்பித்து விடுகிறான். இதற்கு அவர் என்ன செய்ய முடியும்.
இதை அனைத்தும் கமிஷனர் அறிவார், அதனாலேயே நம்பிக்கையாய் இந்த பொறுப்பை லோகநாதனிடமே கூப்பிட்டு ஒப்படைத்தார்.
ஒரு வாரம் ஓடியிருந்தது. ஊடகங்கள் அடுத்த கேசை பிடித்து அதனை பற்றி தனக்கு தெரிந்த வகையில் உலகத்திற்கு திரித்து (தெரிவித்து)கொண்டிருந்தன.
வேறு ஏதோ புகார் சம்பந்தமாக “ஜாலியோ ஜில்” மாலுக்கு சென்றிருந்தார். பெரும் பணக்காரர்களுக்குத்தான் அந்த இடத்தில் சுற்றிவர தாங்கும், என்று நினைத்து அதன் வாசலில் நான்கைந்து காவலர்களுடன் நின்று கொண்டிருந்தார்.
கார் ஒன்று உள் வந்து நிற்க அதிலிருந்து மிர்சிலி இறங்கினாள். முகம் நல்ல தெளிவாக இருந்தது. நெற்றியில் பொட்டு இட்டு புடவை கட்டி இருந்தாள். காருக்குள் குனிந்து ஓட்டுபவனிடம் ஏதோ சொல்ல அவன் காரை நிறுத்திவிட்டு வரும்வரை அங்கேயே நிற்க சொல்வதை இவர் அவர்களின் சைகை மூலம் புரிந்து கொண்டார்.
மிர்சிலியுடன் ஒன்றாய் மாலுக்குள் நுழைபவனை பார்த்தவர் அதிசயப்பட்டார். மணிமாறந்தான். இவரை கண்டவுடன் இருவரும் அருகில் வந்தனர். “ஹலோ சார்” கை குலுக்கினான்.
சார் மிர்சிலியும் நானும் கல்யாணம் பண்ணிகிட்டோம். அவங்க அப்பா அம்மாவை கூட கூப்பிட்டு கல்யாணம் பண்ணி பதிவும் பண்ணிகிட்டோம். மிர்சிலி கை குவித்தாள்.
இவருக்கு மனதுக்குள் ஒரு வித பரபரப்பு வந்தது. போனவாரம் இந்த பெண் இருந்த நிலை என்ன, இப்பொழுது இவளின் நிலைமை என்ன?
அவரின் மனப்போக்கு அவளுக்கு புரிந்ததோ என்னவோ, சார் இப்ப நான் நிம்மதியா இருக்கேன். என்னுடைய தவறுகள் இவருக்கு தெரியும், அதை எல்லாம் தெரிஞ்சுதான் என்னை ஏத்து கிட்டாரு. நானும் அன்னைய சூழ்நிலையில அதுவும் அவனோட வற்புறுத்தலால அப்படி இருந்தேன். இப்ப அப்படி போக அவசியம் வராது இல்லையா சார்.
அவளின் கேள்வியினால் இவருக்கு கொஞ்சம் வெட்கமாக கூட வந்தது. சே இந்த பெண் கண்டு பிடித்து விட்டாளே. புன்னகையுடன் தலையசைப்பதை தவிர அவருக்கு வேறு வழியில்லை
இருந்தாலும் அவரது போலீஸ் புத்தி இப்படி ஒரு கேள்வியை போட்டது. ஏன் இவர்கள் இருவரும் சேர்ந்து பழகுவது தெரிந்து அவன் தற்கொலை செய்திருக்க கூடாது. இப்படி இருக்கவும் வாய்ப்பு இருப்பதாக அவர் மனது அடித்து சொன்னது.
எதற்கும் இருவரையும் கண்கானிக்க ஆட்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டார்.
உள்ளே போன மணிமாறன் திடீரென பரபரப்பாய் ஓடி வந்தான். சார் அன்னைக்கு உங்ககிட்டே தகவல் சொல்லும்போது ஒன்னை சொல்ல மறந்துட்டேன். இரண்டு மாசமா நான் இந்த மது,மாது, இது எல்லாத்தையும் விட்டுடறதுக்கு முயற்சி பண்ணிகிட்டிருக்கேன். அதுக்கோசரம் ஹைதராபாத் போற வழியில இருக்கற ஒரு சாமியாரை அடிக்கடி பார்த்து அவர் சொல்ற மாதிரி நடக்க முயற்சி பண்ணறதாவும் சொல்லியிருக்கான்.
இதை நீங்க போன உடனே எனக்கு ஞாபகம் வந்துச்சு, இருந்தாலும் அது ரொம்ப முக்கியமான விஷயமா இருக்க வாய்ப்பில்லை அப்படீன்னு விட்டுட்டேன். இப்ப உங்களை பாத்துட்டு உள்ளே போனப்புறம்தாம் எனக்கு ஞாபகம் வந்துச்சு, உடனே வந்து உங்க கிட்டே சொல்லிட்டேன்.
“தாங்ஸ்” ஒற்றை சொல்லை உதிர்த்து மணிமாறனை அனுப்பி வைத்தாலும், இந்த தகவல் அவருக்கு பெரியதாக படவில்லை. எந்த பெரிய மனுஷனுங்க சாமியார் பின்னல சுத்தாம இருக்கானுங்க?
வீட்டுக்கு வந்தவரின் மனம் அமைதியாய் இருந்தது. காப்பி கொண்டு வந்து கொடுத்த மனைவி “ஏங்க” நான் ஒண்ணு சொன்னா கேட்பீங்களா
சொல்லு அதான் இருபத்து அஞ்சு வருசமா கேட்டுட்டுதான் இருக்கேன்.
க்கும்..இதுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை, முகத்தை அஷ்ட கோணலாக காட்டியவள், இன்னைக்கு எனக்கு தெரிஞ்சவங்க கிட்டே பேசிகிட்டிருந்தேன். அவங்க ஒரு ஐடியா சொன்னாங்க, நீங்க கேட்பீங்களோ என்னவோ, இழுத்தாள்.
பரவாயில்லை சொல்லு, என்னன்னுதான் கேட்கறனே.
நீங்களும் உங்க பிடிவாதத்தை விடமாட்டீங்க, அவளும் விடமாட்டேன்னு இருக்கா, அதுக்குத்தான் அவங்க ஒரு ஐடியா சொன்னாங்க. அவங்களுக்கு தெரிஞ்ச சாமியார் ஒருத்தர் இருக்காராம். அவர்கிட்டே கொஞ்ச நாள் போய் பார்த்தா போதுமாம்.
அதுக்கப்புறம் அவர் சொல்றமாதிரி எல்லாம் கேட்க ஆரம்பிச்சிருவாங்கலாம். நாமளும் நம்ம பொண்ணை கூட்டிகிட்டு அவர்கிட்ட போனா அவர் கொஞ்சம் கொஞ்சமா நம்ம பொண்ணு மனசை மாத்திடுவாருல்லை.
மனைவியின் முகத்தை பார்த்தவருக்கு பாவமாய் இருந்தது. பாவம் கணவனுக்கா, இல்லை பெற்ற மகளுக்கா என்னும் பிரச்சினையால் இந்த ஆறு மாதங்களாக வீடு அல்லோகலப்பட்டது போதும். அவ வரட்டும் அதை பத்தி அப்புறம் பேசலாம்.
பெரியவள் உள்ளே வந்தவள் அப்பாவை பார்த்ததும் சற்று தயங்கினாள். மெளனமாய் அவரை தாண்ட முயற்சித்தவளை இவரே அழைத்தார். நாளைக்கு அந்த பையனோட அப்பா,அம்மாவ வீட்டுக்கு கூட்டிட்டு வர சொல்லு, மேற்கொண்டு எல்லா விஷயங்களையும் பேசி முடிச்சிக்கலாம்.
அவரின் பேச்சு மகளுக்கு மட்டுமல்ல, மனைவிக்கும் ஆச்சர்யமாக இருந்தது. “ரொம்ப தாங்ஸ் அப்பா” சந்தோஷத்துடன் அவரின் கையை பிடித்து கொண்டாள்.
சார் அண்ணனை எதுக்கு பாக்கணும்?
சந்தேகமாய் கேட்டவனை பார்த்து சிரித்தபடி உங்கண்ணனை நான் ஒரு தகவலுக்காக பார்க்க வந்திருக்கேன். நீ போய் சொல்லு, கண்டிப்பா கூப்பிடுவாரு.
லோகநாதனின் உருவமும் அவரது உடலும் அவரை காவல்துறையை சேர்ந்தவர் என்பதை சொல்லாமல் சொல்லின, இதனால் அவன் தயங்கியபடியே அங்கிருந்து நகர்ந்தான்.
“சைக்கிள் செயின் சங்கிலி” அருமையாகத்தான் பெயர் வைத்து கொண்டிருக்கிறான். இந்த மாதிரி பொடியன்களை வைத்து இந்த ஏரியாவில் ரவுடி ராஜ்ஜியம் நடத்தி வருவதாக இவன் மீது குற்றச்சாட்டு உண்டு.
இருந்தாலும் காவல்துறை கண்டும் காணாமல் இருக்கிறது, காரணம் இவன் காவல்துறைக்கு முக்கியமான ஒரு “இன்பார்மராய்” இருப்பதால்.
சார் வாங்க சார், குரல் கேட்டவுடன் திரும்பினார். சங்கிலி மாறியிருந்தான். வயது ஏறியிருந்தது நன்கு தெரிந்தது.
சங்கிலி எப்படியிருக்கே?
நல்லாயிருக்கேன் சார், பவ்யமாய் சொன்னான், உன் கிட்டே ஒரு தகவலுக்காக வந்தேன், சொல்ல முடியுமா?
கேளுங்க சார் தெரிஞ்சா சொல்றேன்.
ராஜசேகர், அதுதாம்ப்பா இரண்டு நாளைக்கு முன்னால “சூசைடு” பண்ணிகிட்டதா செய்தி வந்துச்சே, அவனுக்கு உனக்கும் என்ன தகராறு.
ஐயோ சார் அது இரண்டு வருசத்துக்கு முன்னாடி நடந்தது சார், அதுக்கும் இதுக்கும் முடிச்சு போட்டுடாதீங்க.
செ..சே..அப்படியெல்லாம் இல்லைப்பா, என்ன பிரச்சினை உங்களுக்குள்ளேன்னு விசாரிச்சு தெரிஞ்சுக்கலாமுன்னுதான் வந்தேன்.
அதை ஏன் சார் கேட்கறீங்க? என்னொட பார்ட்டிகிட்ட “லம்பா” பணம் வாங்கிட்டு திரும்பி கொடுக்காம டிமிக்கி கொடுத்துட்டு இருந்தான். என்னோட பார்ட்டி அவனை ஒரு வாரம் பிடிச்சு அடைச்சு வையுங்க அப்படீன்னு சொல்லுச்சு, அப்படி ஒரு வாரம் அடைச்சு வச்சேன். அவங்க அப்பா அலறியடிச்சுகிட்டு பணத்தை கொண்டு வந்து கொடுத்து பையனை மீட்டுகிட்டு போனாரு, அவ்வளவுதான் சார். அதுக்கப்புறம் அவனை நான் கண்டுக்கறதே இல்லை சார். அவன் சரியான போதை கேசு சார், ஒரு வாரம் அவனை அடைச்சு வைக்கறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுச்சு. எங்க பசங்க கிட்டே எப்ப பார்த்தாலும் போதைக்கு ஏதோ ஒண்ணு கேட்டுகிட்டே இருந்தான். எப்படியோ அவன் இங்கிருந்து போனது எங்களுக்கு ரொம்ப நிம்மதியாத்தான் இருந்துச்சு.
சரி சங்கிலி நான் கிளம்புறேன், அவ்வளவுதான், மேற்கொண்டு ஏதாவது தகவல் வேணும்னா உங்கிட்டே வர்றேன்.
சார் நீங்க வரவேண்டாம், தகவல் சொல்லி விடுங்க, நான் எங்க ஆளுங்க மூலமா சொல்லி விடறேன்.
அவன் குரலில் தெரிந்த மரியாதை அவரை யோசிக்க வைத்தது. இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னால் பிக்பாக்கெட்காரனாக இவரிடம் மாட்டி இவன் வாங்கிய அடி உதைகள் எத்தனை..!
எல்லாம் முடிந்து அவனுக்காக காத்திருக்கும் அவன் ஆயாவிடம் கை நிறை பணம் கொடுத்து அவனுக்கு ஏதாவது ஒரு தொழில் செஞ்சு கொடு என்று அனுப்பி வைப்பார்.
அவனிடம் எந்த ஒரு பிரதிபலனும் பார்க்காமல் இருந்ததால் அவன் இன்னும் இவரை மரியாதை குறையாமல் பார்த்து கொள்ள நினைக்கிறான்.
லோகனாதனின் மனம் அன்று இலேசாக இருந்தது. பெரிய பெண்ணை விரும்பிய பையன் இவரின் மனதுக்கும் பிடித்திருந்தது. அவனின் அப்பாவும், அம்மாவும் நல்ல குடும்பத்தை சார்ந்தவர்களாக இருந்ததில் அவருக்கு பெருத்த நிம்மதி.
திருமண விஷயங்கள் அனைத்தும் பேசி முடித்து அவர்கள் விடைபெற்று போன பின் இவர்கள் வீடு பழைய படி கலகலப்பாய் இருந்தது.
சின்னவள் பெரியவளை கிண்டல் செய்து கொண்டிருக்க, அவள் வெட்கப்படுவதை இவர் உட்கார்ந்து பார்த்தபடி இரசித்தார். அவரின் அருகில் வந்த மனைவியிடம், என்ன இன்னைக்கு ஒரே கொண்டாட்டமா இருக்கு நம்ம வீட்டுல
இருக்காதா பின்னே, அப்பாவும் பெண்ணும் ஆளுக்கொரு பக்கம் முறைச்சுகிட்டு அப்பப்பா எங்க நிம்மதியும் போய், எப்படியோ உங்க மனசு மாறுச்சே அதுவே போதும்.
இல்லையின்னா நீதான் சொன்னியே அந்த சாமியார் அவரை பார்க்க சொல்லி நீ என்னை நச்சரிச்சிருப்பே.
க்கும்..உங்களுக்கு இந்த நக்கலுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை, உண்மைதானாம் அந்த சாமியார்கிட்டே போனவங்க பாதி பேரு இதை சொல்லியிருக்காங்க, அப்ப மீதி பேரு ! பக பகவென சிரித்த லோகநாதனுக்கு சடாரென உதித்தது மணிமாறன் சொல்லியிருந்த செய்தி.
இரண்டு மாதங்களாக அவன் தன்னை திருத்தி கொள்ள முயற்சிக்க சாமியாரை தேடி சென்ற விஷயம்.
சட்டென எழுந்தார். என்னங்க எந்திரிச்சிட்டீங்க?
இல்லை அவசரமா ஆபிஸ் விஷயம், வந்துடறேன், விறு விறுவென, சீருடையை தவிர்த்து விட்டு, வேறு வேட்டி சட்டை அணிந்து கொண்டு வெளியே வர ஜீப் டிரைவர் சல்யூட் அடித்தபடி தயாராக இருந்தார்.
வண்டியை ஹைதராபாத் போற பாதையில கொண்டு போப்பா. அந்த சாமியாரின் முகவரியை ஏற்கனவே தெரிந்து வைத்திருந்ததால் வழி மட்டும் ஓட்டுநரிடம் சொன்னார்.
சாமியார் தற்சமயம் வெளியூர் சென்றிருப்பதாக தகவல் சொன்னார்கள்.
சற்று ஒதுங்கி நின்று அங்கிருந்த சூழ்நிலைகளை மனதுக்குள் வாங்கியபடி நின்றார்.
சுமார் ஏழெட்டு கார்கள் நின்று கொண்டிருந்தன. உள்ளே போவோர் வருவோர் அதிகபட்சமாக இலைஞர்களாகவே இருந்தனர். சில கார்களில் பெண்கள் தனியாகவும் வந்து சென்று கொண்டிருந்தார்கள்.
சீருடை அணியாமல் வந்திருந்தாலும் காவல்துறையை சேர்ந்த ஜீப் என்பதால் அங்கிருப்பவர்களுக்கு தயக்கமாய் இருக்கலாம் என்பதால் டிரைவரை மறைவாக ஆசிரமத்தை தாண்டி போய் நிற்க சொல்லிவிட்டு இவர் மட்டும் தனித்து உள்ளே வந்தார்.
உள்ளே ஆடம்பரமாய் இருந்தது. வரவேற்புக்கு யாரும் இல்லாவிட்டாலும், முன்னறை அகலமாகவும் உட்காருவதற்கு பெரிய பெரிய இருக்கைகள் போடப்பட்டு பார்க்க வந்தவர்களை உட்கார வைக்கப்பட்டிருந்தனர்.
ஹாலை ஒட்டிய மற்றொரு அறையில் ஏதோ வகுப்பு ஒன்று நடப்பது தெரிந்தது. யாரோ பிரசங்கம் செய்வதும் காதுக்குள் விழுந்தது.
இன்னும் சற்று உள்புறமாய் பாதை சென்றது. யாரும் சந்தேகிக்கா வண்ணம் உட்கார்ந்திருந்த இருக்கையை விட்டு அது வழியாக உள்ளே நடந்தார்.
அடுத்த அறையில் ஆண்களும் பெண்களும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதை கண்டார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அங்கேயே உட்கார்ந்து ஆசிரமத்தின் செயல்பாடுகளை உள்வாங்கியபடி இருந்தார்.
பெரிய சாமியாரை பார்க்க “அப்பாயிண்ட்மெண்ட்” வாங்கித்தான் பார்க்க முடியும் என்று சொன்னார்கள். வாரத்தின் இரண்டு நாட்கள் மட்டும் பக்தர்களுக்கு பிரசங்கம் செய்வார், அப்பொழுது நீங்கள் அவரிடம் வாய்ப்பு கிடைத்தால் பேசலாம் என்றார்கள்.
அசிஸ்டெண்ட் கமிஷனர் முன் நின்றபடி ராஜசேகரின் ரிப்போர்ட்டை கையில் கொடுத்தார்.
என்னயா முடிச்சிட்ட போலிருக்கே.
எஸ் சார், இதுல எல்லா விவரமும் இருக்கு சார். சரி அரை மணி நேரம் வெயிட் பண்ணு படிச்சிட்டு கூப்பிடறேன்.
வெளியே காத்திருந்தார். அரை மணி நேரம் என்பது ஒரு மணி நேரம் ஆயிற்று. அழைப்பு வர உள்ளே வந்தவர் மீண்டும் ஒரு சல்யூட் வைத்தார்.
என்னயா இது திட்டமிட்ட கொலைன்னு சொல்லியிருக்கே, அதுவும் அந்த சாமியார் மேலயே குற்றம் சொல்லியிருக்கே.
உண்மைதான் சார், ராஜசேகர் இரண்டு மாசமா தன்னை திருத்திக்கறதுக்கு இவர்கிட்ட போயிருக்கான்.
உண்மையிலே அவன் அதுக்காக போகலை, அதுக்கு மூணு மாசத்துக்கு முன்னாடி இரண்டு பேரும் ஒண்ணா சிங்கப்பூர்லயிருந்து பிளைட்ல இந்தியா வந்திருக்காங்க, மும்பை வந்து அப்படியே சென்னை வந்திருக்காங்க. அதுக்கான டீடெயில்சையும் இணைச்சிருக்கேன்.
அப்ப சாமியார் கொண்டு வந்த “கோல்டு பிஸ்கட்” கிட்டத்தட்ட பல கோடி மதிப்புள்ளது ஏதோ ஒரு காரணத்துக்காக அதாவது சாமியார் “கஸ்டம்ஸ்ல” இருந்து தப்பிக்க இவன் மூலமா இங்க வந்திருக்கு. அதை பக்காவா செஞ்சு முடிச்ச ராஜசேகர், அதை திரும்ப சாமியார் கிட்டே ஒப்படைக்க தயாராய் இல்லாம இருந்திருக்கான்.
இது விஷயமா இரண்டு மாசமா அவங்களுக்குள்ள பேச்சு வார்த்தை நடந்திருக்கு. இந்த புதையல் பணத்தை பார்த்த பின்னாலதான் ராஜசேகருக்கு சொந்தமா படம் எடுக்கணுனே தோணியிருக்கு.
ஆனா ராஜசேகர் தற்கொலை செஞ்சுக்கறதுக்கு முன்னாடி அதாவது அதுக்கு முத நாள் அவன் ஒளிச்சு வச்சிருந்த எல்லா கோல்டன் பிஸ்கட்டுகளை சாமியார் கிட்ட இருக்கிற ஆளுங்க வந்து இவங்கிட்டே இருந்து எடுத்துட்டு போயிருக்காங்க.
அதுக்கு அவங்க “மெஸ்மைரைஸ்” அப்படீங்கற டெக்னிக்கை உபயோகிச்சிருக்காங்க
அதுக்காக நான் பார்த்த சில “டாக்டர்ஸோட கருத்துக்களையும்” இதுல இணைச்சிருக்கேன்.
தன்னையும் மீறி எல்லாத்தையும் அவங்க கிட்டே கொடுத்துட்டோமுன்னு ராஜசேகருக்கு அதுக்கப்புறம் உறைச்சிருக்கு. அங்க போய் சண்டை போட்டிருக்கான்.
அவங்க முடிவு எடுத்துட்டாங்க, இவனை உயிரோட வைக்க கூடாதுன்னு. சரியான நாள் பார்த்து அவன் படுக்கையில அவனுக்கு தெரியாம ஒரு மெலோடி ஸ்பீக்கரை வச்சு அவனோட மனசை தூண்டியிருக்காங்க, அதாவது வாழ்க்கையை முடிச்சிக்க சொல்லி. அவன் அது மாதிரியே செஞ்சு தன்னோட வாழ்க்கையை முடிச்சுகிட்டான்.
இதுல அவங்க இரண்டு முறை முயற்சி பண்ணி தோத்தும் போயிருக்காங்க, காரணம் ராஜசேகருக்கு அன்னைக்கு ஏமாந்து எல்லா தங்க பிஸ்கட்டுகளை கொடுத்த பின்னால அவன் தனியா ரூம்ல தூங்கறதுக்கு பயப்பட்டிருக்கான், காரணம் அவன் மனம் அவனையும் அறியாம இந்த பேச்சை கேட்டிடுவோமுன்னு, ஆனா அவன் செஞ்ச தப்பு இதை யார்கிட்டேயும் சொல்லாம இருந்ததுதான். சொன்னா எல்லா விஷயமும் வெளியில வந்துடும்னு பயம்தான் காரணம்.
ஆனா அன்னைக்கு சாயங்காலமா அவனுக்கு டிரிங்க்ஸ் எடுக்க வச்சிருக்காங்க, அதுல புத்தி தடுமாறியிருக்கான், இராத்திரி படுக்கற ரூமுக்கு அவனே போயிருக்கான்.
அதுக்கப்புறம் எல்லாமே அவங்க ஏற்பாடு செஞ்சபடி நடந்திருக்கு.
சரி இப்ப என்ன செய்ய போறே? சாமியாரை அரெஸ்ட் பண்ண போறியா?
நீங்க எப்ப சொன்னாலும் நான் கைது பண்ண தயாராய் இருக்கேன்.
இருய்யா எதுக்கும் உயரதிகாரிக கிட்டே பேசிட்டு சொல்றேன். நாளைக் காலையிலே முடிவை சொல்லிடறேன்.
மறு நாள் லோகநாதன் பத்திரிக்கையாளர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார். “ராஜசேகர் தற்கொலைதான்” செய்து கொண்டார் என்பது தகுந்த சாட்சிகளின் மூலம் உறுதிபடுத்தபட்டிருக்கிறது.
சாமியாருடன் மத்திய அமைச்சர் ஒருவர் அவரின் ஆசிரமத்தில் தங்கியிருந்து பேசிக்கொண்டிருந்தார்.
அசிஸ்டெண்ட் கமிஷனர் “என்னயா வழக்கம்போல” உன் கேசு டமால்தானா !
அவரின் கிண்டலை இரசித்த லோகநாதன் “என் கடன் பணி செய்து கொண்டிருப்பதே அவ்வளவுதான் சார்.
எனக்கு என் பொண்ணு கல்யாண வேலை இருக்கு சார், அதுக்கு லீவு கொடுங்க சார். விடுமுறை விண்ணப்பதை நீட்டினார் அதிகாரியிடம்.