(1992ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 6-10 | அத்தியாயம் 11-15 | அத்தியாயம் 16-20
அத்தியாயம்-11
அந்த இரவு வேளையிலே என் அருகில் அமர்ந்திருந்த அப்பெண்மை அழகைக் கண்களை முழுக்கத் திறவாமல் அரைக் கண்ணால் பார்த்தேன். அவள் பார்வை என் முகத்திலே நின்றது.
கோடை காலமாகையால் பனியன்கூட அணியாமல் படுத்திருந்தேன். என் பரந்த மார்பின்மீது அவள் பார்வை பட்டதும் என்னை அவள் கைகளால் தொட்டுவிட்ட மாதிரியே புல்லரித்தது. ஒருவேளை இதுவும் என்னுடைய பிரமையோ என்ற எண்ணம் எழுந்தது.
சீதா என்னை முற்றும் வெறுக்கிறாள் என்பதற்குக் கடந்த நாட்களின் நிகழ்ச்சி ஒவ்வொன்றும் சான்று. நான் நின்ற இடத்தில் அவள் நிற்கவில்லை. நான் சாப்பிடப் போனால் அவள் முன்போல் சகஜமாகப் பரிமாறுவதில்லை. வெளியே போய்விடுவாள். என் மானத்தை அவள் வாங்காமல் விட்டதன் காரணம், அவளுக்கு என் தாயிடம் இருந்த பக்தியும் மரியாதையும் தான். சில மணிகளுக்கு முன்புதான் அவள் அறையில் அழுதபடி படுத்திருந்ததை நான் பார்த்தேன். அவளைத் தேற்றும் நோக்கத்தோடு, சீக்கிரமே நான் வீட்டை விட்டுப் போய் விடுகிறேன் என்று உறுதிமொழி கொடுத்திருந்தேன். அப்படி இருக்கும்போது அவள் ஏன் தனிமையில் இரவு வேளையில் என் அறைக்கு வரவேண்டும்? வந்ததும் இல்லாமல் என் பக்கத்தில் ஏன் உட்கார வேண்டும்? புரியாத புதிராக இருந்தது. காவிரிக் கரையில் எனக்கு ஏற்பட்ட ஜாலக் காட்சிபோல் இதுவும் ஒரு ஜாலக்காட்சி என்றுதான் நினைக்க முடிந்தது. எனது கண்களைப் பூராவும் திறவாமல் அரைப் பார்வையில் அவளைக் கவனித்தபடி இருந்தேன். கனவு காண்கிறோம் என்ற நினைப்பு வந்த பின்னும், தொடர்ந்து. அவற்றைச் சுய உணர்வோடு காண முடிந்தால், நிலை எப்படியிருக்குமோ அப்படி இருந்தது என் நிலை.
சீதா என்னையே கவனித்த படி சில விநாடிகள் உட்கார்ந்திருந்தாள். அவள் மார்பு மட்டும் விவரிக்க முடியாத உணர்ச்சிகள் காரணமாக விம்மி எழுந்தபடி இருந்தது. இன்னும் என்ன நடக்கப் போகிறது என்று கவனித்தபடி பேசாமல் படுத்திருந்தேன். உட்கார்ந்திருந்த சீதா மெள்ள எழுந்தாள். அறை வாயில் போனாள். இதுதான் சமயமென்று என்னுடைய கையைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். சுரீரென்று வலித்தது. நான் காண்பது கனவல்ல; நடப்பது எல்லாம் நனவுதான் என்று உணர்ந்து கொண்டேன்.
வாயில்வரை சென்ற சீதா தயக்கத்தோடு கதவினருகில் நின்றாள். கதவை மூடிவிட்டு மறுபடியும் அறையினுள் நுழைந்தாள். என் மனத்தில் ஆவல் அதிகரித்தது. உள்ளம் திக் திக் என்று அடித்தபடி இருந்தது. சீதா என்னை நெருங்கினாள். கட்டிலில் உட்கார்ந்தாள். உட்கார்ந்தவளின் இடையானது என்னுடைய விலாவில் பட்டது. என் மனதில் (சீதாவின் ஸ்பரிசம் ஏற்பட்டதும்) இன்பம் நிறைந்தது. ஒன்று மறியாமல் தூக்கத்தில் புரண்டு படுப்பவன் போல் புரண்டு படுத்தேன்.
பௌர்ணமி இரவில் என்னைப் பற்றிக் கொண்ட ஒரு மிருகத்தனம் மறுபடியும் என் மனத்தை ஆக்ரமித்தது. என் உடலின் ஒவ்வோர் அணுவும் விருப்பத்தால் வெந்தபடி இருந்தது. சித்ரா பௌர்ணமி இரவில் நடந்து கொண்டது போல் நடந்து கொள்ளக் கூடாது என்று என் மனதில் குமுறி எழுந்த சைத்தானின் வேகம் என் சங்கற்பத்தைத் தகர்த்த படி இருந்தது. என்னுடைய நேர்மை உணர்ச்சியும் சங்கல்பமும், பெரும் புயலின் பாதையில், தாளிடப்பட்ட கதவு கிடுகிடுத்து ஆடுவது போல் ஆடின. எந்த நிமிஷமும் புயலின் வேகம் கதவைப் பிடுங்கி எறிந்து விடலாம். அதேபோல்தான் என் மன உறுதியும் என் ஆசையென்ற புயலின் முன் தள்ளாடியது. கண்களை மூடியபடி, ‘ஆண்டவனே, சீதா இந்த அறையை விட்டு எழுந்து போய்விட மாட்டாளா?’ என்று துடியாகத் துடித்தேன். சீதா எழுந்திருக்கவில்லை.
அடைப்பைத் திறந்து விட்டவுடன், தொட்டியில் உள்ள நீர் மட்டம் குறைவதுபோல், என் வைராக்கியம் குறைந்து கொண்டே போயிற்று. அதோடு என் மனிதப் பண்பும் மறையத் தொடங்கியது. அதே தருணத்தில் அறையில் உள்ளிப் பூண்டின் மணம் லேசாக வீசத் தொடங்கியது. அன்று அரச மரத்தடியில் நான் நுகர்ந்த அதே உள்ளிப் பூண்டின் வாடை வீசியது. என்ன ஆச்சரியம்! அடுத்த வினாடி அது மல்லிகை மணமாக மாறியது. என் சங்கல்பம், என் நேர், என் கட்டுப்பாடு எல்லாம் என்னை விட்டு ஓடின. என்னையுமறியாமல் என் கைகள் சீதாவின் தோளைப் பற்றின. சீதா அப்படியே என்மீது சாய்ந்தாள். என் கரங்கள் இரும்புக் கரங்கள் போல் சீதாவின் முதுகுப் புறத்தில் அழுத்தி அவளை என் உடலோடு இறுக்கி நெருக்கின. நான் சுய உணர்வுக்கு வந்ததும் சீதா. “அத்தான், அத்தான்! வேண்டாம் அத்தான்,” என்று மெல்லிய குரலில் அழுதபடி இருந்தாள்.
எனக்கே என் செயல் வெட்கம் தந்தது. என் கைகளை வெடுக்கென்று உதறியபடி எடுத்துவிட்டு, எழுந்து உட்கார்ந்தேன். சீதாவும் குலைந்துபோன மேலாடைகளைச் சரி செய்தபடி வேறுபுறம் திரும்பி உட்கார்ந்தாள். அறையில் நிசப்தமும், வெட்கமும் நிலவின. இருவரும் பேசாமல் இருந்தோம்.
அலாரம் டைம்பீஸின் மெல்லிய ‘டிக் டிக்’ என்ற ஒலி மட்டும் எங்கள் இருவரின் ஆசை இதயங்களின் படபடப்புக்குப் பக்கமேளம் வாசித்தபடி இருந்தது. நான் மெல்ல எழுந்துபோய் அறையின் ஸ்விட்சைப் போட்டேன். அறை முழுவதும் வெளிச்சம் பரவியது.
சீதா தலை குனிந்தபடி தரையைப் பார்த்தபடி, “வெளிச்சம் வேண்டாம் அத்தான்! விளக்கை அணைத்து விடுங்கள்,” என்றாள். ராமநாதனை அழைக்க வேண்டிய வார்த்தை, ‘அத்தான்’. சீதா என்னை அத்தான் என்று அழைக்கிறாள். அதுவும் இன்றிரவுதான் அவள் என்னை முதன் முறையாக அப்படி அழைத்தாள்.
எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. உலகமே அறியாத சீதா, ஆண் பெண் உறவு பற்றிய சிந்தனை ஏதுமறியாமல், பச்சிளங் குழந்தை மனதோடு வாழ்ந்து வந்தவள், என்னை மிருகம் என்று வெறுத்தவள் எப்படி இரவு வேளையில் என் அறைக்குத் தனிமையில் வரத் துணிந்தாள்? மெள்ள அவள் அருகில் சென்றேன். அவள் தலையைக் கோதிய படி, “என்னை மன்னித்துவிடு சீதா, எனக்கு நான் என்ன செய்தேன் என்றே புரியவில்லை சீதா” என்றேன்.
சீதா என்னை நிமிர்ந்து பாராமல் மௌனமாக இருந்தாள். பிறகு மெல்லிய குரலில் “எனக்கும் ஒன்றும் புரியவில்லை அத்தான்,” என்றாள்.
“நீ என்னை வெறுக்கவில்லையா?” என்று கேட்டேன்.
”எது விருப்பம்? எது வெறுப்பு? எல்லாம் குழப்பமாக இருக்கிறது அத்தான்.”
விருப்பும் வெறுப்பும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்ற ஞானியின் பொன்மொழி என் ஞாபகத்துக்கு வந்தது.
“இது கூடாது சீதா. இது தவறு! நடக்கக் கூடாத தவறு சீதா”, என்றேன்.
“ஆம்.கூடாதுதான். ஆனால் என்ன செய்வது? எனக்கே என் மனம் புரியவில்லை அத்தான்.”
“சீதா. உங்கப்பா ராமலிங்கம், உன் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார். நான் இங்கு இருப்பதே தவறு. ஆகையால் விடிந்த உடனே யாரிடமும் சொல்லாமல் எங்காவது சென்றுவிடுகிறேன், அதுதான் சரியான வழி”.
அவள் பதில் பேசவில்லை. என்னை நிமிர்ந்து பார்த்தாள். அவள் விழிகள் நீர் நிறைந்து காணப்பட்து. “எங்கே செல்லப் போகிறீர்கள்?” என்றாள்
“எங்காவது தொலைந்து போகிறேன் என் இயற்கையை மாற்ற முடியாவிட்டால் இந்த உலகத்தை விட்டே தொலைந்து போகிறேன் சீதா. சொர்க்கம் போன்ற இன்பம் நிறைந்த வீட்டை நரகமாக்கப் போவதில்லை. நீ நடந்ததையெல்லாம் மறந்துவிடு. ராமநாதனை மணந்து கொண்டு சுகமாக இரு”.
”அத்தான். கடந்த சில நாட்களாக, நடந்ததை மறக்கத்தான் முயன்று பார்த்தேன். முடியவில்லையே! ஆண் ஒரு நெருப்பு என்பதை உணராமல் விளையாட்டுக் குழந்தையாய் இருந்தவளைப் பெரிய மனுஷியாக்கி விட்டீர்களே! இந்த வீட்டில் நீங்கள் நுழைந்த நாளே, நான் உங்களைப் பார்த்த உடனே. நான் மாறிவிட்டேன். தூங்கும்போது கூட எனக்குக் கனவில் உங்கள் விழிகள்தான் தோன்றும். அந்த விழிகளை மறக்க முயன்று பார்த்தேன் முடியவில்லை. அன்று சித்ரா பௌர்ணமி யன்று நீங்கள் என்னை அணைத்தீர்களே, அதற்கு முன்பே என் கனவில் தோன்றியிருக்கிறீர்கள். அன்று வலுவில் என்னை அணைத்த போது, அந்த அணைப்பில் இன்பம் அடைந்ததும் எவ்வளவு கேவலமானவள் என்று நினைத்து என்னையே வெறுத்தேன். எனக்கு என்மீது ஏற்பட்ட வெறுப்பைத்தான் உங்கள்மீது கொட்டினேன். உங்களைக் கன்னத்திலே அறைந்தேன். உங்களை மிருகம் என்று திட்டியபோது. உண்மையிலேயே என் மனத்தின் உள்ளிருந்து குமுறிக் கொண்டிருந்த ‘ஆசை’ மிருகத்தைத்தான் திட்டினேன். நான் சித்திரவதைதான் அனுபவிக்கிறேன்.”
“சீதா. நீ சொல்வது விசித்திரமாக இருக்கிறது. நான் இந்த வீட்டிற்கு வந்திருக்கவே கூடாது என்று தோன்றுகிறது!”
“நீங்கள் வராமலே இருந்திருந்தால் நான் அத்தான் ராமநாதனை மணந்து சந்தோஷமாக வாழ்ந்திருப்பேன். அவர் என்னைப் பார்க்கும் போது என் மனத்தில் அமைதி, பண்பு இதுபோன்ற உயர்வான உணர்ச்சிகள் தான் ஏற்படுகின்றன. நான் எனக்கே கண்ணியமானவளாகக் காட்சி அளிக்கிறேன். ஆனால் நீங்கள் என்னைப் பார்க்கும்போது நான் ஆடையிழந்து நிற்பவள் போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதுமட்டு மல்ல; எனக்கே தெரியாத இன்னொரு சீதா என்னுள்ளிருந்து உதயமாகி விட்டாள். அவளுடைய பண்பு, இச்சைகள். இவற்றை விவரிக்கவே எனக்கு வெட்கமாக இருக்கிறது”, என்று கூறிவிட்டு விசித்து விசித்து அழத் தொடங்கினாள். எனக்கு அவளைப் பார்க்கவே பரிதாபமாகவும், வேதனையாகவும் இருந்தது. அவளைத் தேற்றும் நோக்கத்தோடு அவளை நெருங்கினேன்.
அவளைத் தொடவும் என் கை கூசிற்று. இவ்வளவு ஆசைப் போதையை அறியாப் பெண் மனத்தில் ஏற்படுத்திய என்னுடைய காந்தக் கண்களையே தோண்டி எடுத்து எறிந்து விட்டால் என்ன என்று தோன்றியது. இந்த உத்தமியின் உள்ளத்தில் ஒரு பேயை உண்டாக்கியது நானல்லவா?
“சீதா, சீதா கவலைப்படாதே சீதா”. சீதா என்னைத் திரும்பிப் பார்த்தாள். “சீதா, புத்தகங்களில் காதலைப் பற்றியும், பெண் மனத்தைப் பற்றியும் எழுதுகிறவர்கள் ஏதேதோ எழுதுகிறார்கள். ஆனால் எனக்கு ஏற்பட்டிருக்கும் அனுபவம் முற்றிலும் புதியதாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் நான் என்னை வெறுப்பதாகத்தான் நினைத்து வந்தேன். நாளைக் காலையிலேயே இந்த வீட்டை விட்டு ஓடிவிடலாம் என்று நினைத்து வந்தேன். ஆனால் உலகத்தில் கலப்பற்ற வெறுப்பும், கலப்பற்ற ஆசையும் இருக்க முடியாது என்று தெரிகிறது. ஒவ்வொருவர் வெறுப்பில் ஆசையும், ஒவ்வொருவர் ஆசையில் வெறுப்பும் கலந்துதான் இருக்க வேண்டும். விதி என்ற கண்ணுக்குத் தெரியாத ஆசைக் கயிறு நம் வாழ்வை ஒரு பம்பரமாக ஆட்டி வைக்கிறது சீதா.” சீதா என்னையே நோக்கினாள். “உன் அப்பா சந்தோஷமாக இருக்க வேண்டும், ராமநாதன் வாழ்வு மலர வேண்டும். உனக்கு நல்ல எதிர்காலம் இருக்க வேண்டும். இம் மூன்றும் நிறைவேற வேண்டுமானால் நீ என்னை மறந்து ராமநாதனை மணப்பதுதான் சரி”, .. என்று சொல்ல முடியாமல் சொன்னேன்.
சீதா சோகமாகச் சிரித்தாள். “குழந்தை முதல் ராமநாத அத்தானோடு சேர்ந்து வளர்ந்திருக்கிறேன். அவருக்குச் சிறு துன்பம் நேர்ந்தா லும் பொறுக்க மாட்டேன். ஆனால் என் உள்ளத்தில் உங்கள் வெறும் பார்வையால் நீங்கள் சிருஷ்டித்திருக்கும் அந்த ஆசைப் பேய் இருக்கும் வரையில் நான் எப்படி உங்களை மறப்பது? அவரை மணந்து அவருக்குப் பொருத்தமான உத்தம மனைவியாக வாழ முடியுமா? உள்ளம் உங்களை விரும்ப, உடல் உங்களோடு கலக்கத் துடிக்கும்போது ஊருக்காக நான் அவரை மணப்பது அவருக்குத் துரோகமல்லவா? பண்பின் உருவமான அவரது வாழ்வை நரகமாக்கச் சொல்கிறீர்களா?” என்று கேட்டாள்.
எனக்கு அவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை. திடீரென்று எனக்கு ஓர் எண்ணம் உதயமாயிற்று. ”சீதா, என் விழிகள் உன் மனத்தில் ஏற்படுத்திய குழப்பம் சீக்கிரமே தெளிந்துவிடும். ஒரு வாரத்தில் அல்லது ஒரு மாதத்தில் நீ என்னை மறக்க முடியாவிட்டாலும் ஒரு வருஷத்திலாவது என்னை மறந்து விடுவாய். ஆகையால் நான் எங்காவது கண்காணாச் சீமைக்கு ஓடி விடுகிறேன்,” என்றேன்.
சீதா பெருமூச்சு விட்டாள்.
“இல்லை அத்தான், நீங்கள் எங்கு ஓடினாலும் என் மனம் நீங்கள் திரும்பிவரும் நாளைத்தான் எதிர் பார்த்திருக்கும்.”
“இல்லை சீதா. நான் வாழ்வதால் யாருக்கும் பயன் இல்லை. என் தாய்க்குக்கூட உன் ஆதரவு இருந்தால் போதும். நான் நாளைக்கே என் வாழ்வை முடித்துக் கொண்டால் இந்தக் காவிரி ஆற்றிலே விழுந்து வாழ்வை முடித்து விட்டால் – அப்புறம் பிரசினை தானே தீர்ந்து விடும் சீதா.” என்றேன்.
“வேண்டாம் அத்தான். கேட்கவே பயமாயிருக்கிறது, அத்தான்,” என்று சொல்லி, ஓடிவந்து என்னை இறுக அணைத்துக்கொண்டு சீதா அழுதாள். ”ஏதாவது செய்து விடுவீர்களோ என்ற பயத்தால்தான் நானே இன்று இரவு உங்கள் அறைக்கு வந்து என் உண்மை மனநிலையைக் கூறிவிடுவது என்று முடிவு செய்தேன் சத்தியமாக ஒன்றும் செய்து கொள்ள மாட்டீர்களே?” என்று கூறி விசும்பி அழுதாள்.
சிறிதே காலத்தில் ஒரு பெண்ணுக்கு முன்பின் தெரியாத ஒருவனிடம் எவ்வளவு பாசம் ஏற்படுகிறது என்பதை நினைக்கவும் ஆச்சரியமாக இருக்கிறது. சீதாவின் ஆசையையும் பாசத்தையும் ஏற்கத் தகுதியற்றவன் நான். நிர்மலமான அவள் வாழ்வில் குறுக்கிடக் கூடாது… ஆனால் அவளுக்கு என்ன சொல்லித் தேற்றுவது?
குழம்பியபடி நான் இருக்கும் போது சாத்தப்பட்டிருந்த அறையின் கதவு திறந்தது. சீதா என்னை அணைத்தபடி அழுது கொண்டிருந்தாள். ஆதலால் அவள் முதுகுப்புறம் கதவு திறந்ததை அவள் கவனிக்கவே இல்லை. கதவு முழுவதும் திறந்ததும் கதவுக்கு வெளியே நிற்பது யார் என்று எனக்கு நன்றாகத் தெரிந்தது. வந்தவர் ராமலிங்கமாகவோ அல்லது என் தாயாகவோ இருந்தால் கூடப் பரவாயில்லை. ஆனால் அங்கு ராமநாதனா வந்து நிற்க வேண்டும்? சீதா என்னை அணைத்தபடி நிற்கும் காட்சியை, அவளை மணக்கப் போகும் ராமநாதனின் கண்களா காண வேண்டும்?
எவ்வளவு முறை ராமநாதன் என்னிடம் கூறியிருக்கிறான், “சீதா பண்பின் சிகரம் திலீபா! அவள், காதல் புத்தகங்கள், ஆபாசப் படங்களைக்கூடப் பார்க்க விரும்புவதில்லை. காவியங்களில் வர்ணிக்கப்படும் லட்சியப் பாட்டுடை தலைவியடா என் சீதா!” என்று பெருமையோடு கூறினவனின் வருங்கால மனைவி, இப்போது இருக்கும் நிலையைப் பார்த்து அவன் மனம் எப்படித் துடிக்கும்!
தீமை செய்வதற்கென்றே சிலர் பிறக்கின்றனர். தான் செல்லும் இடங்களை நரகமாக்கி எரிக்கவென்றே சிலர் பிறக்கின்றனர். அந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள் நானும் என் தந்தையும்.
சீதாவை அணைப்பிலிருந்து விலக்கினேன். சீதா மருண்டபடி, அறையின் வாயிலைப் பார்ததாள். ராமநாதனை அங்கே கண்டதும் அவள் மனதில் என்ன வேதனை புகுந்திருக்கும் என்பதை என்னால் நிர்ணயிக்க முடியவில்லை. ஒரே மரத்துக் கிளைகள்போல் அன்னியோன்யமாய்ச் சேர்ந்து வளர்ந்து வந்தவர்களை வெட்டித் தள்ளிய கோடாலி அல்லவா நான்!
ராமநாதன் தள்ளாடியபடி அறையினுள் நுழைந்தான். ஸ்விட்ச்சை அழுத்தினான். அறை முழுவதும் ஒளி பரவியது. சீதாவை அப்படியே ஆச்சரியத்தோடும், வேதனையோடும் பார்த்தான். சீதாவின் அழுத கண்கள், குலைந்துபோன மேலாடை எல்லாம் சேர்ந்து, அன்று அறையில் நடந்த கதையை இன்னும் மிகைப்படுத்திக் கூறின.
ராமநாதனின் கை விரல்கள் நடுங்குவதைப் பார்த்தேன். அவன் உதடுகள் துடிப்பதைப் பார்த்தேன். சீதா தரையைப் பார்த்தபடியும், ராமநாதன் சீதாவைப் பார்த்தபடியும், நான் ராமநாதனைப் பார்த்தபடியும் சில விநாடிகள் இருந்தோம். மூன்று சில விநாடிகள் இருந்தோம். மூன்று மனித உள்ளங்களில் மூன்றுவிதமான உணர்ச்சிப் புயல்கள் வீசியபடி இருந்தன. சிறு விரலில் அணுசக்தியை எடுத்துக் கப்பல் ஓட்டலாம் என்று சொல்கிறார்கள். எங்கள் மூவர் மனதிலும் அப்போது கொந்தளித்த உணர்ச்சிகளை மாற்ற முடிந்தால் எவ்வளவோ கப்பல்களை ஒட்டியிருக்கலாம்.
அடுத்த வினாடி, ராமநாதனின் கைகள் என் கன்னத்தில் அடிகளை மழையாய்ப் பொழிந்தன. அவன் கொடுத்த ஒவ்வொரு அடியும் எனக்கு இன்பத்தைக் கொடுத்தது. அவன் என்னை அடிக்க அடிக்க எனக்கு என் குற்றம் குறைவதுபோல் தோன்றியது. என் வாயிலிருந்து ரத்தம் வழிவது கூடத் தெரியாமல் மரம்போல் நின்றேன்.
“துரோகி! அயோக்கியா!” என்ற வார்த்தைகள் ஒலிப்பதும் இடைஇடையே என் முகத்தில் குத்துக்கள் விழுவதும்தான் எனக்கு தெரிந்தது. ராமநாதனை நான் தடுக்கவுமில்லை. பதில் பேசவும் இல்லை. அடி மாரியின் நடுவே எனக்கு உணர்வு மங்க ஆரம்பித்தது. அறையின் விளக்கு எரிந்த போதிலும் இருள் சூழ்வது போல் தெரிந்தது. என் கால்கள் நிற்கும் சக்தியை இழந்து நான் தரையில் விழுவதுபோல் உணர்ந்தேன்.
“அவரை அடிக்காதீர்கள். அவரை அடிக்காதீர்கள். நான் அவரைத் தான் விரும்புகிறேன், ஐயோ! அவரை அடிக்காதீர்கள்!” என்று சீதா அலறினாள்.
அதே விநாடி ராமலிங்கத்தின் குரல் கேட்டது. தொடர்ந்து என் தாயின் குரல், “என்னப்பா நடந்தது? திலீபன் என்ன பண்ணினான்?” என்று கேட்டதும் என் காதுகளில் விழுந்தது. நான் அப்படியே இருண்ட வெளியில் முடிவில்லாமல் விழுந்து கொண்டே இருந்தேன். மரணம் என்பது இப்படித்தான் இருக்குமோ?
அதற்குப் பிறகு எனக்கு எந்த வித சிந்தனையும் இல்லை. உணர்வும் இல்லை.
அத்தியாயம்-12
எனக்குச் சுய உணர்வு வந்த போது நான் படுக்கையில் படுத்திருந்தேன். என் முகம் வீங்கியிருந்தது. அதன்மீது பிளாஸ்ரிகள் போடப்பட்டிருந்தன. என் உடல் ஜூரத்தால் கொதித்தது. மூடிய கண்களைத் திறந்து பார்த்தேன். அறையில் யாரும் இல்லை, என்னை ஈன்ற தாயைத் தவிர.
அழுவதற்கு என்றே பிறந்தவள் என் தாய். என் தந்தையை மணந்து, தினமும் அழுதாள். என் தந்தையின் இறுதிப் பயணத்தன்று அவள் சிந்திய கண்ணீர்தான் கடைசி அழுகையாக இருக்கும் என்று நான் உறுதி கூறினேன். “அம்மா! அப்பா போய் விட்டார். இனிமேல் நீ அழவே தேவையில்லை” என்று சொல்லி ஒரு மாதம்கூட ஆகவில்லை; அதற்குள் நானே என் தாயை அழச் செய்து விட்டேன். ஒழுங்காக நான் வாழ்வுப் பாதையில் நடந்து செல்லக் கூடாதா? விவரிக்க முடியாத உணர்ச்சிகள் ஏன் என்னை வந்து தாக்கித் தவறான பாதையில் செலுத்த வேண்டும்? நான் தான் தவறு செய்பவன் ஆயிற்றே!
சீதா ஏன் என் அறைக்குள் இரவில் வரவேண்டும்? ஆண் பெண் உறவின் காரணமான உணர்ச்சிகளின் வேகத்தை உணராதவளது மனத்தில், ஏன் ஆசை முளைக்கவேண்டும்? அதுவும் என்மேல் ஏன் ஆசை ஏற்பட வேண்டும்? என் கண்களின் காந்த சக்தி, அவள் மனத்தைப் போய் அடிமை கொள்ள வேண்டுமா?
ஒற்றுமையாக, இன்பமாக, அமைதியாக வாழ்ந்த வீட்டில் பாம்பு போல் நான் நுழைந்து அமளி ஏற்படுத்திவிட்டேன். எனக்கு என் தாயின் முகத்தைப் பார்க்கவும் வெட்கமாக இருந்தது. அந்தச் சமயத்தில் அறையில் டாக்டர் நுழைந்தார். என் தாயைப் பார்த்து அவர், “இன்னும் மயக்கம் தெளியவில்லையா?” என்று கேட்டார்.
“அப்படியே மயங்கித்தான் கிடக்கிறான்,” என்று என் தாய் பதில் கூறினாள்.
அப்போது எனக்கு மயக்கம் தெளிந்த நிலைதான். மயக்கம் தெளிந்துவிட்டது என்று வெளிப்படுத்திக் கொண்டால், நான் என் தாயோடு பேச வேண்டும். இந்த நிலையில், நானும் என் தாயும் எதைப் பற்றிப் பேசப் போகிறோம்? நேற்று இரவு என் அறையில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றித்தானே பேச வேண்டி வரும்? பண்புக்கும், சீலத்துக்கும் கலங்கரை விளக்குப் போன்ற என் தாய், எப்படி என்னை மன்னிப்பாள்? அன்னமிட்ட வீட்டில் கன்னமிட்டவன் நிலை போல்தான் என் நிலை.
என் நடத்தையை, நான் எந்தக் கோணத்திலிருந்து சரியென்று சொல்ல முடியும்? மயக்கம் தெளிந்து விட்ட போதிலும், மயக்கம் தெளியாதவனைப் போல் நடித்துப் படுத்திருப்பதே சரி என்ற எண்ணம்தான் என் கோழை மனத்தில் தோன்றியது.
‘நான் என்ன தவறு செய்து விட்டேன்? நான் சீதாவை விரும்பினேன். சீதா என்னை விரும்பினாள். அவள் என் அறைக்கு வந்தாள். இதில் என்ன தவறு?’ என்ற வாதம் லேசாக என் மனத்தின் அடித்தளத்தில் எழுந்த போதிலும், அந்த வாதத்துக்குக் குரல் கொடுக்க எனக்குப் போதிய தைரியம் இல்லை.
சீதாவை நான் காதலித்ததே ஒரு திருட்டு என்றுதான் நான் எண்ணினேன். அவள் ராமநாதனைச் சேர வேண்டியவள். அவள் மனம் என்னை நாடிவிட்டது. அது குற்றம், அந்தக் குற்றத்தைச் செய்தவள் சீதா அல்ல, நான்தான் என்று எல்லோரும் எண்ணினார்கள்.நானும் அவ்வாறே எண்ணினேன். அந்த வீட்டிலிருந்து. சீதாவிடமிருந்து எவ்வளவு தூரம் ஒதுங்கி வாழ்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது என்று நான் நினைத்தேன். இம்மாதிரி சிந்தனையோடு, கண்களை மூடியபடியே அறையில் படுத்திருந்தேன்.
மணி மூன்று அடித்ததும்தான், நான் இரவிலிருந்து மறுநாள் பிற்பகல் மூன்று மணிவரை ஞாபகம் இல்லாமல் இருந்திருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். சுமார் பதினைந்து மணி நேரம் மயங்கிக் கிடந்திருக்கிறேன்! அந்த நிலையில் எனக்கு வைத்தியம் நடந்திருக்கிறது. என் முகத்தில் பிளாஸ்திரிகள் போடப் பட்டிருக்கின்றன.
ராமலிங்கமோ, ராமநாதனோ. என்னிடம் பச்சாதாபம் காட்ட நியாயம் இல்லை. சட்டம் தெரிந்த அவர்கள், வைத்தியம் இல்லாமல் எனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் அப்போது ராமநாதன் கொலைக் குற்றத்துக்குப் பதில் சொல்ல நேருமே என்ற பீதி உணர்ச்சிதான், அவர்களை என் உடல் மீது அக்கறை காட்டச் செய்திருக்க வேண்டும். பீதி உணர்ச்சி தானே நாகரிகத்தின் அடிப்படை? பயத்தின் விளைவுகள் தானே நாட்டின் சட்டங்கள்? பீனல் சட்டங்கள் இருப்பதும், அதை நீதிமன்றங்கள் அமுல் செய்வதும் எதை எடுத்துக் காட்டுகின்றன? மனிதன் நகரத்தில் வாழ்ந்தாலும், உள்ளத்தளவு அவன் காட்டில் வாழும் மிருகத்தை ஒத்தவன்தான் என்ற உண்மையைத்தானே? சொத்துரிமை, சேமிப்பு, தெரு தோறும் உள்ள பாங்குகள், நீதிமன்றங்கள், போலீஸ் ஸ்டேஷன்கள் எல்லாம் ஏன் ஏற்பட்டிருக்கின்றன? உழைத்த சீமான்களின் சோம்பேறிக் குழந்தைகளைச் சமூகம் கவனிக்காது சாக்கடையில் தள்ளிவிடும்; அந்த நிலை அந்தச் சோம்பேறிச் சீமான்களுக்கு ஏற்படக்கூடாது என்றுதானே சொத்துரிமை மனிதனுக்கு வழங்கப் படுகிறது!’
நான் ஒரு சோம்பேறித் தந்தையின் பண்பற்ற மகன். எனக்குப் புரட்சிக் கறை படிந்த சிந்தனைகள் தோன்றுவது இயற்கைதானே? ராமநாதனும் சீதாவும் ராமலிங்கத்தின் பரம்பரை உழைப்பின் பலனுக்கு வாரிசாகப் பிறந்தவர்கள். ஆடம்பரமாக வாழ வேண்டியவர்கள். நான், சபாபதி என்ற சமூகத்தின் கழிவுக்கு வாரிசாகப் பிறந்தவன்தானே? இரண்டும் இரண்டு இனம். எப்படி ஒன்று சேர முடியும்? இவ்வாறு பல்வேறு பட்ட குழம்பிய சிந்தனைகளில் நான் ஆழ்ந்திருந்தபோது. அறையின் கதவு திறக்கும் சப்தம் கேட்டது.
ராமலிங்கம் உள்ளே நுழைந்தார். என் தாய் மரியாதையின் அடையாளமாக நாற்காலியை விட்டு எழுந்து முந்தானையால் தன் தோளைப் போர்த்துக் கொண்டாள். அறையில் நுழைந்த ராமலிங்கம், என் பார்வையில் இருந்தார். அதனால், என்னால் அவர் முகத்தைக் கவனிக்க முடிந்தது. அவர் மௌனமாக என்னை ஒரு முறை பார்த்தார். பிறகு ஒரு முறை கனைத்துக் கொண்டார்.
என் தாய் நடுங்கியபடி கெஞ்சினாள். “நான் படும் வேதனையின். அளவு சொல்ல முடியாது. நான் ஏன் இங்கு வந்தேன் என்று ஒவ்வொரு வினாடியும் துடிக்கிறேன்,” என்றாள்.
அதற்கு ராமலிங்கம், “அம்மா! நீங்கள் என்ன செய்ய முடியும்? நானும் சீதாவுக்குப் பாசம் நிறைந்த தாய் கிடைத்துவிட்டாள் என்று மகிழ்ந்திருந்தேன். ஆனால்… நாங்கள் கொடுத்து வைக்கவில்லை. டாக்டர், மாலைக்குள் மயக்கம் தெளிந்து விடும் என்கிறார். ஆகையால், இரவு ரயிலுக்கே டிக்கெட் போட்டுவிட்டேன். நீங்கள் போய்விடலாம்” என்று கூறினார்.
என் தாய் ஒன்றும் பேசாமல் இருந்தாள். கண்ணியமான முறையில் வீட்டை விட்டு வெளியேறுங்கள் என்று சொல்கிறார் என்பதைப் புரிந்து கொண்டுவிட்டேன். அடுத்த வினாடி ராமலிங்கம் என் தாயிடம், நூறு ரூபாய் நோட்டு அடங்கிய கட்டு ஒன்றைக் கொடுத்தார். “நான் இழந்த சகோதரியைப் போல் நீங்கள்! இதைப் பெற்றுக் கொள்ளுங்கள். செலவுக்குத் தேவைப்படும்,” என்றார்.
என் தாய் அழுதபடி, “வேண்டாம். பணம் வேண்டாம். என் மகனுக்கு நல்லவர்கள் ஆதரவு கிடைத்தது என்று ஓரளவு நிம்மதியோடு இருந்தேன். ஆனால் அதை அவனே கெடுத்துக் கொண்டான். வெய்யிலில் நிற்பவர். மரத்தின் நிழலை தேடுவது இயற்கை. என் மகன் அந்த மரத்தையே வெட்டத் திட்டமிட்டிருந்தான் என்பதை நான் உணரவில்லை. எங்களை மன்னித்துவிட்டதாக ஒரு வார்த்தை சொன்னால் அதுவே போதும்.” என்றாள்.
ராமலிங்கம் சில வினாடிகள் தயங்கி நின்றார். பிறகு ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார்.
ராமலிங்கம் அறையை விட்டு மறைந்ததும், சீதா அறையினுள் நுழைந்தாள். அவள் கண்கள் அழுது சிவந்திருந்தன. அவள் ஆடையலங்காரம் கவனிப்பு இல்லாமையால் மாசு படிந்து காணப்பட்டது. அந்த வீட்டிலுள்ள எல்லோர் மனத்திலும் வேதனையிருந்தாலும், சீதாதான் மிகவும் பாதிக்கப்பட்டவள் என்பது தெளிவாய்த் தெரிந்தது. புரட்சி என்பதை அடிப்படை மாறுதல் என்று சித்தாந்திகள் வர்ணிப்பது உண்டு. அம்மாதிரி ஓர் அடிப்படை மாறுதல் சீதாவின் மனத்தில் ஏற்பட்டிருந்தது என்பதில் ஐயமில்லை. நான் வருவதற்கு முன் வாழ்ந்த சீதா வேறு, நான் வந்த பின் வாழும் சீதா வேறு.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அவள் முகத்தில் சாவுக்குத் துணிந்தவர்களின் வெறித்த பார்வை இருந்தது. அவளுடைய பரிதாபமான முகத்தைப் பார்க்கப் பார்க்க எனக்கு அவளைப் பக்கத்தில் இருத்தித் தேறுதல் வார்த்தைகள் கூறவேண்டும் போல் தோன்றியது. ஆனால் அதற்குப் போதிய துணிவு எனக்கு இல்லையே? அறையில் நுழைந்த சீதா, நேரே நான் படுத்திருந்த இடத்துக்கும் வந்தாள். என்னை அன்போடு, ஒரு தாய் என் குழந்தையைப் பார்ப்பது போலப் பார்த்தாள். ஒரே குற்றத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு கூட்டாளிகள் அல்லவா நாங்கள்? ஆனால் அவள் மனத்தில், தான் குற்றவாளி என்ற கூச்சமோ பயமோ இல்லை. என் தாய் இருப்பதைக்கூட லட்சியம் செய்யாமல் சீதா அங்கு வந்து என்னைக் கூர்ந்து கவனிப்பதைக் கண்டு என் தாய் ஆச்சரியமடைந்தாள்.
என் தாய் அவள் வயது அவருக்குக் கொடுத்திருந்த அந்தஸ்தை வகித்தபடி. கண்டிக்கும் குரலில், ‘சீதா! நீ இங்கு வருவது முறையில்லை. சரியில்லை” என்றாள்.
“இங்கு வராமல், அவரைப் பாராமல் என்னால் இருக்க முடியவில்லை” என்று அழுதபடி கூறினாள் சீதா.
மறுபடியும் என் தாய், “சீதா! சீக்கிரமே நீ இந்த அறையைவிட்டுப் போய் விடு!” என்றாள்.
சீதா தயங்கினாள், பிறகு ஒரு தீர்மானத்தோடு, என் படுக்கை அருகில் போடப்பட்டிருந்த நாற்காலியில் போய் உட்கார்ந்தாள். சீதாவின் உறுதியைக் கண்டு, என் தாய் பயந்தே போய்விட்டான். “சீதா! உங்கப்பா இங்கே வந்தால்…” என்று அவள் கூற அதக்குள் சீதா, “அவர் வரட்டும், பரவாயில்லை” என்றாள்.
இதற்கு மேல் நடப்பதையெல்லாம் பார்த்து கொண்டு. என்னால் சும்மா இருக்கமுடியவில்லை. நான் கண்ணைத் திறந்து, “சீதா! அம்மா சொல்வது தான் சரி, நீ போய்விடு, என்னை மறந்துவிடு” என்று கூறியபடி படுக்கையிலிருந்து மெள்ள எழுந்து உட்கார்ந்தேன்.
என் கேள்விக்கும் பதில் செல்வதற்குப் பதிலாக சீதா என்னை அப்படியே பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள். என் தாய், “பார்த்தாயா திலீபா நீ செய்திருக்கும் நாசத்தை? என்ன சொக்குப் பொடி போட்டு அறியாப் பெண் சீதாவை இப்படி மாற்றிவிட்டாய். ஒன்றும் அறியாத வெகுளிக் குழந்தையாய் இருந்தவள் இவ்வளவு தூரம் மாறி விட்டாளேடா! என்ன மாயமடா பண்ணினாய், பாவி!” என்று திட்டினாள் என்னை.
உடனே சீதா, “அத்தை! அத்தானைத் திட்டாதீர்கள்” என்று சொல்லிலிட்டுத் தலை குனிந்து கொண்டாள்.
நான் உடனே சீதாவிடம், “சீதா! தயவுசெய்து இங்கிருந்து போய்விடு. எனக்காக, என் மீதுள்ள பிரியத்துக்காகப் போய் விடு சீதா” என்றேன்.
சீதா மௌனமாகத் தரையைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள். அவள் கண்களிலிருந்து இரண்டு துளி கண்ணீர் தரையில் விழுந்தது. அப்போதுதான் அவள் அழுவதை உணர்ந்தேன். பிறகு கண்களைத் திறந்து என்னை நோக்கியபடி, “அத்தான், ஏன் இப்படிப் பேசுகிறீர்கள்? உங்களுக்கு என் மீது அன்பில்லையா?” என்று கேட்டாள். நான் பதில் சொல்லாமல் இருந்தேன். “பதில் சொல்லுங்கள் அத்தான். உங்கள் பதிலை நம்பித்தான் என் உயிர் ஊசலாடுகிறது” என்றாள்.
என் தாயின் முன்னிலையில் இம்மாதிரிக் கேள்விகளைக் கேட்க, அவளுக்கு அச்சம், நாணம் போன்ற உணர்ச்சிகள் இல்லாமலே போய்விட்டதா என்று நினைத்தேன். என் தாய், சீதாவிடம், “தயவு செய்து போய் விடம்மா. நீ சிறு பெண். இப்படியெல்லாம் ஓர் ஆண் பிள்ளையிடம் பேசுவது சரியல்ல. வீட்டிலே அம்மா இல்லாமல் வளர்ந்ததாலே மனத்தில் தோன்றுவதைத் துணிவாகப் பேசுகிறாய். நீ ராமநாதனை மணந்து, நன்றாக வாழப்போகிறாய். இப்படி அசட்டுப் பிசட்டு என்று பேசக்கூடாது. உன் அம்மா நிலையிலிருந்து நான்
சொல்கிறேன்.” என்று சம்பிரதாயமான பொன்மொழிகளை உதிர்த்தாள்.
நான் உடனே சீதாவிடம், ”சீதா! நான் உன்னை உயிரினும் மேலாக நேசிக்கிறேன். ஆனால் அம்மா சொல்வதுதான் சரி. உன் வாழ்வு ராமநாதனோடுதான் பின்னப்பட வேண்டும். அப்போதுதான் உன் எதிர்காலம் வளமாயிருக்கும்” என்று கூறி முடிக்கு முன்பே சீதா குறுக்கிட்டாள்.
“என் எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் ஏன் நிர்ணயிக்கவேண்டும்? நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள், அந்த வாக்கியம் ஒன்றே எனக்குப் போதும்,” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டுச் சீதா கம்பீரமாக எழுந்திருந்தாள்.
அதே சமயத்தில் ராமலிங்கமும், ராமநாதனும் அறையினுள் நுழைந்தனர். ராமலிங்கம் அங்கு சீதா நிற்பதைப் பார்த்ததும் ஆத்திரம் அடைந்தார். ராமநாதன் எந்தவித உணர்ச்சியுமில்லாமல், என்னையும் சீதாவையும் மாறி மாறிப் பார்த்தான்.
ராமலிங்கம் “நீ ஒன்றும் தெரியாதவள் என்று நினைத்திருந்தேன். ரொம்பத் துணிச்சல்காரியாகி விட்டாய். எல்லாம் அவனால் வந்தது. அறையை விட்டுப் போ வெளியே!” என்று கோபத்துடன் கூச்சலிட்டார்.
“இந்த அறையை விட்டு மட்டும் என்னப்பா, உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், இந்த வீட்டை விட்டே, இந்த உலகத்தை விட்டே நான் போகத் தயார் அப்பா!” என்றாள் ஏளனமாக.
ராமலிங்கத்தின் ஆத்திரம் வரம்பு மீறியது. அவர் கைகளை ஓங்கியபடி, “நீலி! செய்ததையெல்லாம் செய்துவிட்டு, என்னை எதிர்த்தா பேசுகிறாய்?” என்று கூறிக் கொண்டே சீதாவை அடிக்கப் போனார்.
அத்தியாயம்-13
என் உள்ளம் குமுறியது. உடனே பாய்ந்து அவரைத் தடுக்க வேண்டும் என்று தோன்றியது. அதற்குள் ராமநாதன் அவர் கைகளைப் பிடித்துத் தடுத்து நிறுத்தினான். “மாமா! உங்கள் வயதென்ன, நீங்கள் செய்வதென்ன?” என்று சொல்லித் தடுத்தான்.
இந்தச் சங்கடமான சூழ்நிலையில் அங்கு நிற்பதுகூடத் தவுறு என்று நினைத்த என் தாய், அறையைவிட்டு வெளியேறினாள். நான், சீதா, ராமநாதன், ராமலிங்கம் – நால்வர் மட்டுமே இருந்தோம். நான், மற்ற இருவரையும் பார்த்து, “என்னை மன்னித்துவிடுங்கள். தவறு என்னுடையது. எனக்கு ஏற்பட்ட சோதனையில் தவறிவிட்டேன். இரவு ரயில் வரைகூடக் காத்திருக்க விரும்பவில்லை. இப்போதே பகல் வண்டிக்கே போய்விடுகிறேன்.” என்றேன்.
பெரியவரும் ராமநாதனும் ஒன்றும் பேசவில்லை. சீதா மட்டும் என்னைத் திரும்பி வேதனையோடு பார்த்தாள். அவள் உடனே, “அப்பா! இதுவரையில் நான் நடந்து கொண் டது கூடத் தவறு இல்லை. நான் உண்மையை மறைத்து வைத்து, ராமநாதனை மணந்து கொண்டால் அதுதான் பெரிய தவறு” என்றாள்.
ராமலிங்கம் அவளைப் பார்த்து, “அதிகப்பிரசங்கி! நீ ஒன்றும் பேச வேண்டாம். வெளியே போ!” என்றார்.
சீதா கொஞ்சங்கூடத் தயங்காமல், “உங்களுக்காக இல்லாவிட்டாலும், அத்தான் ராமநாதனுக்காகவாவது நான் உண்மை பேசித்தான் ஆகவேண்டும் அப்பா,” என்றாள்.
ராமநாதன் சீதாவை ஆச்சரியத்தோடு நோக்கினான்.
சீதா, ராமநாதனை நோக்கிப் பின்வருமாறு கூறினாள்: “உங்களை நான் தெய்வத்துக்கும் மேலாக மதிக்கிறேன். உண்மையின் உருவம் நீங்கள். பண்பின் வடிவம் நீங்கள். குழந்தை முதல் உங்களோடு சேர்ந்து வளர்ந்த நான், உங்கள் மீதுள்ள பாசத்துக்கு இதுநாள் வரை பெயர் கொடுக்கத் தெரியாமல் இருந்தேன். (என்னைச் சுட்டிக் காட்டி) அவர் இந்த வீட்டில் விருந்தாளியாக நுழைந்தபோதுதான், நான் அந்தப் பாசத்தின் உண்மையான தன்மையை உணர்ந்தேன். உறவுமுறையில் நீங்கள் அத்தானாக இருந்த போதிலும். உங்களை அண்ணா என்றுதான் என் இதயம் கூறுகிறது. உள்ளும் புறமும் ஒருவரை அண்ணனாக மதிக்கும் போது, அவரை எப்படி மணந்து அவருக்கு மனைவியாவது? இத்தனை வருஷங்களில் நான் ஒருநாள்கூட உங்களிடம் பேசும்போது தலை குனிந்து நின்றதில்லை. என் முகம் சிவந்து, என் நெஞ்சு ‘திக்திக்’கென்று அடித்துக் கொண்டதில்லை. அண்ணா! உங்களுக்கு நான் பெரிய துரோகம் செய்ய வேண்டுமானால், அது உங்களை மணந்து கொள்வதுதான். கல்யாணமான பின்பு இந்த உண்மையை நீங்கள் புரிந்து கொள்வதைக் காட்டிலும். அதற்கு முன்பே புரிந்து கொள்வது நல்லதில்லையா? உங்களுக்குத் துரோகம் செய்வதைக் காட்டிலும், எனக்கு மரணமே மேல்” என்று கூறிவிட்டுச் சீதா அறையை விட்டு வெளியே சென்றாள்.
ராமலிங்கமும் ராமநாதனும் ஸ்தம்பித்து நின்றனர். ராமலிங்கம் என்னைப் பார்த்ததும் அவர் மனத்திலே பொங்கிய ஆத்திரம் பீரிட்டுக் கொண்டு வந்தது. “எல்லாம் இந்தப் பயலால்தான் வந்தது. இவனை ஒழித்துவிட்டால் என்ன?” என்று கூறியபடி அவர் என்னை நோக்கி ஓடி வந்து, உட்கார்ந்திருந்த என்னைக் கீழே தள்ளினார்.
ராமலிங்கத்துக்குப் பின்னாலேயே ஓடி வந்த ராமநாதன், அவரைத் தடுத்து நிறுத்தி, ஒரு நாற்காலியில் உட்கார வைத்தான்
“ஆத்திரப்படாதீர்கள் மாமா”. என்றான்.
ராமலிங்கம், “பல வருஷங்களாக, நான் போட்ட திட்டம் முறியும் போது, என் வாழ்வின் கனவு மறையும்போது நான் எப்படியடா ஆத்திரப்படாமல் இருக்க முடியும்?” என்று கூறிவிட்டுக் குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கினார்.
படுக்கையிலிருந்து கீழே தள்ளப்பட்டுக் கிடந்த எனக்கு ராமலிங்கத்தைப் பார்க்கும்போது பரிதாபமாக இருந்தது. என்னால் அல்லவா அந்த வயதான நல்லவர் மனம் உடைய நேர்ந்தது!
ராமநாதன் அவர் அழுகை அடங்கும் வரையில், அவர் அருகிலேயே பேசாமல் உட்கார்ந்தி ருந்தான். பிறகு அவரிடம் பரிவுடன். ”மாமா! ஒருவர் விதியை மற்றவர் நிர்ணயிக்க முடியாது. தந்தையாயிருந்தாலும், ஓரளவுக்குத் தான் மகளின் வாழ்வை நிர்ணயிக்க முடியும். சீதா என்ன, தரம் கெட்டவளா? இத்தனை வருஷங்களில், அவள் என்றாவது உங்களுக்கு மறுப்புச் சொல்லி இருக்கிறாளா? அல்லது வரம்பு மீறிப் போயிருக்கிறாளா? சீதா ஒரு பசு,மாமா. அவளே இன்று இவ்வளவு துணிச்சலாய்ப் பேச வேண்டுமென்றால், தக்க காரணம் இல்லாமல் பேசுவாளா? கல்யாணம் என்பது ஒரு பெண்ணுக்கு வாழ்வுப் பிரசினை இல்லையா? அதுவும் கற்புள்ள உத்தமப் பெண்ணுக்கு அது உயிர்ப் பிரசினை மாமா. உங்களுக் குப் பயந்து அவள் என்னை மணந்து கொண்டு வாழ்ந்தால். எங்கள் இருவர் வாழ்வும் அல்லவா நரகமாகி விடும்? அதை யோசித்துப் பாருங்கள் மாமா”, என்றான்.
இந்தக் கம்பீரமான வார்த்தைகளைக் கேட்டபோது, எனக்கு ராமநாதன் ஆயிரத்தில் ஒருவன் என்றே தோன்றியது. தான் அடையவேண்டிய பெண்ணை இழந்த நிலையிலும் ஆத்திரத்துக்கு இடம் தராமல், அறிவுக்கு இடம் தந்து பேசும் அறிவாளி ராமநாதன். ஆனால் நானோ, உள்ளத்து உணர்ச்சிகளைக்கூட வெளிப்படுத்தப் பயப்படும் ஒரு கோழை. சீதா, ராமநாதனை விரும்பாமல் என்னை விரும்புகிறாளே! என்ன ஆச்சரியம்! நல்ல பெண்மணிகள் எப்போதும் தகுதியற்றவர்களையே விரும்புவதுதான் வாழ்வின் விதி போலும்.
இப்படி நான் நினைத்துக் கொண்டிருக்கும்போதே என் சிந்தனைகளை வார்த்தைகளால் சொல்வது போல், ராமலிங்கத்தின் பேச்சு அமைந் தது. “ராமநாதா, உன் தாய் இப்படித்தான் தன் ஆசைக்கு இடம் கொடுத்து, உன் தந்தையை மணந்து அழிந்து போனாள்,” என்று சொல்லிப் பெருமூச்சு விட்டார்.
உடனே ராமநாதன், “திலீபன் என் தந்தையைப் போல் அல்ல மாமா. அன்பும், ஆதரவும், செல்வமும் இருந்தால் திலீபனின் வாழ்வு நல்லபடி அமைந்துவிடும் மாமா” என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்தான். பிறகு என் முன்னிலையில் விஷயங்களைப் பேசக் கூச்சப் பட்டானோ என்னவோ தெரிய வில்லை. “மாமா! வாருங்கள். நம் அறைக்குச் சென்று எல்லா விஷயங்களையும் அமைதியாக யோசிப்போம்,” என்றான்.
உடனே ராமலிங்கமும், ராமநாதனும் அறையை விட்டு வெளியே சென்றனர். நான் சிந்தித்தபடியே உட்கார்ந்திருந்தேன். அப்போது வீட்டின் உட்புறத்திலிருந்து பெரும் கூச்சல் கேட்டது. என் உள்ளம் காரணம் தெரியாத பீதியில் அடித்துக் கொண்டது.
என் தாய் அலறியபடியே அறைக்குள் ஓடிவந்தாள். “திலீபா, அந்தப் பெண் சீதா கிணற்றில் குதிக்க ஓடிக் கொண்டிருக்கிறாளடா!” என்று பதைத்தாள்
என் உடலில் இடி விழுந்தது போல் தோன்றியது. நான் என்னை மறந்தேன். அந்த அறையை விட்டு, என் தாயையும் கவனிக்காமல் கொல்லைப்புறம் நோக்கி ஓடினேன். கொல்லைப்புறத்தில் கிணற்றடிக்கு ஓடினேன். அங்கு ராமலிங்கமும், ராமநாதனும் நிற்பதைப் பார்த்தேன். இருவரும் திகைத்தபடி நின்றனர். கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தேன். சீதா நீர் மட்டத்துக்கு வந்து விட்டு மறைவது தெரிந்தது. நான் என்ன செய்தேன் என்று எனக்கே தெரியாது. அடுத்த வினாடி கிணற்றுக்குள் குதித்து விட்டேன்.
நான் கிணற்றுக்குள் குதித்த போது எனக்கு நன்றாக நீந்தத் தெரியாது என்பதைப் பற்றி நினைக்கவேயில்லை. என் உடல் நீர் மட்டத்தைத் தொட்டபோதுதான் எனக்கு அந்த நினைப்பு வந்தது. அப்போது கூட என் வாழ்வைப் பற்றிய சிந்தனை வரவில்லை. சீதாவைப் பற்றித்தான் நினைத்தேன்.
சற்றுத் தூரத்தில் முழுகி எழுந்த சீதாவின் தலைமயிரைப் பற்றி இழுத்து அவளை இழுத்துச் சென்றேன். அந்தக் கிணறு ஓர் அகன்ற கிணறு. அதில் நீர் மட்டத்துக்கு மேல் சிமிண்டில் திட்டுப் போல் ஏற்படுத்தி அதில் நீர் இறைக்க மோட்டார் வைத்து வசதி செய்திருந்தனர் அந்த மோட்டாரை அவ்வப்போது பழுது பார்க்க வரும் எலெக்ட்ரீஷியன் இறங்க அதில் ஓர் இரும்பு ஏணி பொருத்தப்பட்டிருந்தது. சீதாவை இழுத்துக் கொண்டு அந்த ஏணியை நோக்கி நகர்ந்தேன். அப்போதுதான், நீந்தத் தெரியாதவன் நான் என்பதைப் பரிபூரணமாக உணர்ந்தேன் கால்களும், உடலும் நீர் நிலைக்கு மேல் இருக்க மறுத்தன. கால்களை உதைத்து, அப்படியும் இப்படியும் புரண்டு, நான்கு அடி தூரம் ஏணியை நோக்கி நகர்ந்து விட்டேன். ஏணிக்கும் எனக்கும் அரை அடி தூரம்தான் இருந்தது. இனிமேல் சமாளிக்க முடியாது என்ற பயம் எனக்கு ஏற்பட்டது.
அந்தப் பயத்தின் இடையே எப்படியாவது சீதாவைக் காப்பாற்ற வேண்டும் என்ற நினைப்பும் கூடவே எழுந்தது. உடனே சீதாவைத் தள்ளி அந்த இரும்பு ஏணியின் இடையே அமைக்கப்பட்டிருக்கும் இரும்புப் படிகளின் நடுவே அவள் உடலைத் திணித்தேன் சீதாவின் முகம் நீர் மட்டத்துக்கு மேல் தொங்கியது. அதே வினாடி என்னைப் பூஆகர்ஷண சக்தி, கிணற்றின் அடித்தளத்துக்கு இழுத்தது. ‘சீதாவை ஏணியில் சாத்தி விட்டோம்; இனி அவள் உயிருக்குப் பயமில்லை,’ என்ற சந்தோஷம் அரை விநாடிகூட – நீடிக்கவில்லை. எனக்கு என் நிலை பற்றிய பீதி பிடித்துக் கொண்டது. கைகளை அசைத்தும் கால்களை உதைத்தும் நீருக்கு மேல் மிதக்க முயன்றேன். ஆனால் கால்களும் கைகளும் பிரயாசையின் காரணமாகச் சோர்வடைய ஆரம்பித்தன. கைகள் அசைய மறுத்தன.
நான் மெள்ள மெள்ள நீரிலே முழுக ஆரம்பித்தேன். அரை ஞாபகம், அரை மயக்கம் என்ற நிலையில், நாசி வழியும், வாய் வழியும். உள்ளே புகும் நீரை வெளியே தள்ள முயன்றேன். அந்த முயற்சியில் நான் ஈடுபட்டிருக்கும்போதே என் கால்கள் கிணற்றின் தரையில் பட்டன. அப்புறம் நானே மறுபடியும் மேலே வருவது போல் தோன்றியது. அதற்கப்புறம் எனக்கு ஒன்றுமே தெரியாது. யாருடைய கைகளோ என்னைத் தூக்குவது போல் மட்டும் தோன்றியது.
நான் குதித்தவுடனே ராம லிங்கத்தின் டிரைவர் கிணற்றில் குதித்திருக்கிறான். அவன் குதிக்கும் போதுதான், நான் சீதாவைக் கிணற் றின் இரும்பு ஏணியில் தொங்க வைத்து விட்டு முழுக ஆரம்பித்திருக்கிறேன். அவன் சீதாவுக்கு அபாயமில்லை என்று தெரிந்ததும் என்னைக் காப்பாற்ற நினைத்து நீரில் அவனும் முழுகி என்னைத் தூக்கியபடி நீர் மட்டத்துக்கு மேல் வந்திருக்கிறான்.
உருளை வழியே விடப்பட்ட கயிற்றை என் உடலைச் சுற்றி உறுதியாகப் பிணைத்து என்னை நீர்க் குடத்தை இழுப்பது போல் இழுத்திருக்கிறார்கள். சீதாவையும் எனக்குப் பின்பு இதே மாதிரி வெளியே இழுத்திருக்கிறார்கள்.
அன்று இரவு ஏழு மணி சுமாருக்குத்தான் எனக்கு ஞாபகம் வந்தது. அப்போதுதான் எனக்கு டிரைவர் மாணிக்கம் மேற்கண்ட் விவரங்களைத் தெரிவித்தான். எனக்கு முன்பே ஞாபகம் வரப்பெற்ற சீதா என் அருகில் உட்கார்ந்திருந்தாள்.
எனக்குக் கிணற்றில் குதிக்கும் போதே ஜுரம் இருந்ததால், அது இந்த நிகழ்ச்சிக்குப் பின் இன்னும் சற்று அதிகமாகி இருந்தது. தொண்டை, மார்பு, இந்த இடங்களில் ஒரு வலி இருந்தது. சீதா ஏதோ மருந்தை என் வாயில் ஊற்றினாள்.
மாணிக்கம், “நீங்க பெரிய தைரியசாலிங்க. நீஞ்சத் தெரியாத நிலையிலே என்ன துணிச்சலோடு கிணற்றிலே குதிச்சீங்க?” என்றான்.
அப்போதுதான் நான் ஒரு வீரனாகிவிட்டேன் என்பதை உணர்ந்தேன். சீதாவின் பார்வையில் இருந்த பெருமிதம் அங்குள்ளவர்கள் எல்லோரும் என்னைப் பார்த்த முறையிலிருந்து நான் ஒரு வீரப்பணியில், காதலால் எனக்கு ஏற்பட்ட இழுக்கைத் துடைத்துவிட்டேன் என்று தோன்றியது.
என்னை விஷத்திலும் அதிகமாக வெறுத்த ராமலிங்கமே என் அருகில் வந்து. “நன்றி திலீபா” என்று சொன்னார்.
ராமநாதன் என்னிடம், “எனக்கு நீந்தத் தெரியும் திலீபா. ஆனால் அப்போது ஒன்றும் ஓட வில்லை. அப்படியே திகைத்து நின்று விட்டேன்; ஆனால் நீயோ எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்து விட்டாய். ஓய்வு எடுத்துக் கொள்”, என்று சொல்லிவிட்டு எல்லோரையும் அப்புறம் போகும்படி சொல்லிவிட்டு அறையைவிட்டு வெளியேறினான்.
நேற்றுவரை அந்த வீட்டில் ஒரு தீண்டப்படாதவனாக இருந்த நான், இன்று திடீரென்று செய்த துணிச்சலான செயலால் பாராட்டப்படும். அளவுக்கு வந்துவிட்டேன். நான் ஒரு கோழை என்பது எனக்குத் தெரியும். ஆழமான நதியில் இறங்குவது, வேகமான காரில் போவது எல்லாம் எனக்கு நடுக்கத்தையே கொடுக்கும் விஷயங்கள். அப்படிப் பட்ட நான் எப்படி இந்தக் காரியத்தைச் செய்தேன்? வாழ்க்கையில் மிகவும முக்கியமான கடடங்களில் நம் அறிவு வேலை செய்வது இல்லை. நம்முள் இருக்கும் வேறு ஏதோ ஒன்று வேலை செய்கிறது என்பது தெளிவாய்த் தெரிகிறது. இதே மாதிரி நான் என்னை அறியாத ஒரு நிலையில்தான் ஆத்திரத்தால் உந்தப்பட்டு, அன்று இரவு சீதாவைத் தொட்டேன். அதுவும் ஓர் அன்புணர்ச்சியால் தானே? இன்று அவளைக் காப்பாற்றியதும் ஓர் அன்பு உணர்ச்சியால்தான். ஆனால் இரண்டுக்கும் இடையே எவ்வளவு வித்தியாசம்!
எல்லோரும் வெளியே சென்ற பின்பு சீதாவும் என் தாயும் மட்டும் அறையில் இருந்தனர். எல்லோரும் என்னைப் போற்றிவிட்டுப் போகும் போதெல்லாம் என்னைப் பெற்றெடுத்த தாய் வாய் புதைத்து அதே அறையில்தான் ஒதுங்கி இருந்தாள் என்பதை உணர்ந்தேன்.
தூரத்திலே ஒரு ஜன்னலருகில் கண் நிறையக் கண்ணீரோடு பேசாமல் நின்றிருந்தாள். நான் சீதாவைக் காப்பாற்றக் கிணற்றில் குதித்தபோது என்ன நினைத்தாளோ! நான் நீரில் முழுகும்போது எப்படித் துடித்தாளோ! மறுபடி நான் காப்பாற்றப்பட்டபோது என்ன மகிழ்ச்சி அடைந்தாளோ! யாருக்குத் தெரியும்? அவள்தான் எதையும் வெளிப்படுத்துவதில்லையே! பாவம், தன் உணர்ச்சிகளை அடக்கி அடக்கிப் பழகியவளாச்சே! வாழ்க்கை என்ற க்யூ வரிசையில் தன்னைக் கடைசியில் நிறுத்திக் கொண்டவளல்லவா! என் உடலில் உள்ள தசை, ரத்தம், எழுபத்தீராயிரம் நாடிகள் எல்லாவற்றையும் தன் உடலில் இருந்து எடுத்துத் தான மாகக் கொடுத்து, அதற்குத் திலீபன் என்று பெயரையும் கொடுத்து வளர்த்த அந்த உத்தமி, அதே அறையில் ஓரத்தில் நின்று கொண்டிருந்தாள்.
அத்தியாயம்-14
நான் தாய் பக்கம் திரும்பினேன் சீதா. ஒருவேளை தாயும் மகனும் தனியாக இருக்க வேண்டுமென்று விரும்பினாளோ என்னவோ, உடனே எழுந்து வெளியே சென்றாள் சீதா. வெளியே போனதும் நான் ‘அம்மா’ என்று கூப்பிட்டேன். நான் பிறக்கும் போது ‘அம்மா’ என்று அவளைக் கூப்பிடவில்லை. காரணம் அப்போது எனக்குப் பேச்சுத் தெரியாது; ஒன்றுமே தெரியாத பச்சைக் குழந்தை. நான் செத்து மறுபடியும் பிறந்த இன்று ‘அம்மா’ என்று என் ஆவியிலுள்ள வாத்சல்யத்தை யெல்லாம் சேர்த்து வைத்துக் கூப்பிட்டேன்.
என் தாய் என்னை நோக்கித் தள்ளாடியபடி நடந்து வந்தாள். என் அருகில் அமர்ந்து என் தலை மயிரைத் தடவிக் கொடுத்தாள்.
”அம்மா, நான் சாகாமல் பிழைத்து விட்டேன்”, என்றேன் அவள் கண்களில் தேங்கியிருந்த கண்ணீர்த் துளிகள் என் முகத்தில் சிந்தின. “திலீபா, திலீபா,” என்று இரு முறை என் பெயரைச் சொல்லிவிட்டு நிறுத்திக் கொண்டாள்
‘என்னம்மா?” என்று கேட்டேன் என் தாய், “திலீபா, நீ என் வயிற்றில் பால் வார்த்துவிட்டாயடா! நீ உன் தந்தையைப் போல் இல்லை. உனக்கு ஆழமான அன்பு இருக்கிறதடா திலீபா உனக்கு அன்பு இருக்கிறது! இல்லாவிட்டால் சீதாவைக் காப்பாற்றக் குதித்து இருக்க முடியுமா? நீ அழிந்து போக மாட்டாய். உங்கப்பா மாதிரியே இருந்து விடுவாயோ என பயந்திருந்தேன். ஆனால் இன்றைக்குத் தெரிந்து போயிற்று. நீ உண்மையிலேயே என் மகன்தாண்டா”, என்று சொல்லி விட்டுச் சிணுங்கி அழுதாள். இந்த வார்த்தைகளைக் கேட்க எனக்கு ஏற்பட்ட இன்பம் இவ்வளவு என்று சொல்ல முடியாது. அம்மாவும் நானும், ஒருவர் முகத்தில் மற்றவர் முகத்தை வைத்து அழுதோம்.
நான் செய்த தவறுகள் எல்லாம் துடைக்கப்பட்டு விட்டன என்பதை உணர்ந்தேன். ஒரு நிமிடம் வாழ்ந்தாலும் பிறருக்காக வாழ்ந்தால், அதில் ஏற்படும் இன்பம் அலாதியான இன்பம் என்பதை உணர்ந்தேன். இதே சமயத்தில் சீதா ஒரு வெள்ளி டம்ளரில் சூடான தக்காளி சூப் எடுத்துக்கொண்டு அறையில் நுழைந்தாள். அவள் அறையில் நுழைந்ததும் என் தாய் மெல்ல எழுந்து வெளியே சென்றாள்.
சீதா, ”அத்தான், இந்த சூப்பைச் சாப்பிடுங்கள்” என்று சொல்லி என்னை எழுப்பித் தன் கைகளால் தாங்கியபடி சூப்பைக் கொடுத்தாள். தக்காளி சூப்பைக் குடித்து முடித்ததும், எனக்கு அவளிடம் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி இருந்தோம்.
சீதா, ”அத்தான். அப்பாவுக்கு இப்போதாவது புரிந்திருக்கும் என் முடிவு சரியென்று,” என்றாள்.
நான், “சீதா, நீ செய்தது தவறு; கிணற்றில் குதித்தது மன்னிக்க முடியாத தவறு”, என்றேன்.
சீதா, “அத்தான், நீந்தத் தெரியாத நீங்கள் நீரில் குதித்தது தவறு இல்லையா? தவறு என்றே வைத்துக் கொள்வோம்; அப்பா, ராமநாதன் எல்லாரும்தானே கிணற்றடிக்கு வந்திருந்தார்கள்.? அவர்களுக்கு எல்லாம் என்மீது பிரியமில்லையா? ஆனால் கிணற்றில் குதித்தது நீங்கள் ஒருவர்தானே! அத்தான். உங்கள் ஆழமான அன்புக்கு வேறு அத்தாட்சியே எனக்கு வேண்டியதில்லை”, என்று சொன்னாள்.
இந்த உரையாடல் நடந்த பின்பு தினமும் சீதாதான் என்னைக் கவனித்து வந்தாள். அவளை ராமலிங்கம் தடுக்கவில்லை. ராமலிங்கமோ, ராமனாதனோ என் அறைப் பக்கம்கூடச் சில நாட்கள் வரவில்லை.
சீதாவும் என்னிடம் ஒரு பணிப் பெண் போல நடந்து கொண்டாளே அல்லாது வேறு ஒன்றும் பேசுவதில்லை. கிணற்றுச் சம்பவம் வேலைக்காரர்கள் எல்லோருக்கும் தெரிந்து விட்டதால் ஊரில் பரவிவிட்டது என்றும், அதனால் ராமலிங்கம் மிகவும் மனக் கிலேசம் அடைந்திருக்கிறார் என்றும் எனக்குத் தெரிந்தது. அடிக்கடி தனி அறையில் அவரும் ராமநாதனும் ஏதோ பேசி வருகிறார்கள் என்பதும் எனக்குத் தெரிந்தது.
என் தாய் சொன்னதிலிருந்து ராமலிங்கம் திருச்சி வீட்டைக் காலி செய்துவிட்டு, சென்னைக்கே சென்று விடத் திட்டமிட்டிருக்கிறார் என்பதும் தெரிந்தது; ராமலிங்கம் உண்மையிலேயே என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்? அவர் வேண்டா வெறுப்பாக என்னை அந்த வீட்டில் பொறுத்துக் கொண்டிருக்கிறாரா? இல்லை, உண்மையிலேயே என்னை மருமகனாக அவர் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வாரா என்பதும் புரியவில்லை.
ஆனால், அந்த நிகழ்ச்சி நடந்த நாளிலிருந்து ராமலிங்கம் சீதாவோடு அதிகம் பேசுவதில்லை என்றும் தெரிந்தது. அதற்காக அவர் சீதாவையோ என்னையோ வெறுப்பதாகவும் தெரியவில்லை. அமைதியான வெள்ளம்போல் ஓடிய வாழ்க்கையில் திடீரென்று அவருக்குப் பழக்கமில்லாத சுழல்கள் ஏற்பட்டு விட்டன. பழைய கருத்துக்கள், பழைய பிடிப்புக்களை மாற்றிக் கொள்ளக் காலம் வேண்டுமல்லவா! அவர் புதுச் சூழ்நிலையைப் புரிந்து கொள்ள முயன்று கொண்டிருக்கிறார் என்றே நான் நினைத்தேன். அவர் நினைத்துத் திட்டமிட்ட எதிர்காலம் ஒன்று; அவருக்கு நேர்ந்திருக்கும் எதிர்காலம் வேறு. இந்த வேற்றுமையை ஜீரணிக்க முயன்று கொண்டிருந்தார். அந்த முயற்சியில் அவருக்குத் துணையாக இருந்து வந்தான் ராமநாதன் என்றே நான் நினைக்கிறேன்.
ஒருநாள் சீதா சொன்னாள்: ”அத்தான், ராமநாதனும் உங்கம்மாவும் ஒன்று; ரெண்டு பேருக்கும் சுயநலம் என்பதே கிடையாது. ராமநாதனுக்கு எது பிடிக்கும் பிடிக்காதென்பது சொல்லவே முடியாது. கடமைதான் அவர் வாழ்க்கைப் பாதையில் கையேந்திச் செல்லும் கை விளக்கு.’
அது உண்மை. முதியவர் ராமலிங்கத்துக்கு உள்ள படபடப்பு. கோபம்கூட ராமநாதனுக்கு இல்லை. உண்மையிலேயே ஆத்திரப்பட வேண்டியவன் ராமநாதன். ஆனால் அவன் அமைதியாகக் காணப்பட்டான். அவன் அமைதிக்குப் பின்னால் சோகமும் ஏமாற்றமும் இல்லாமல் இல்லை.
ஒரு நாள் காலை திடீரென்று ராமநாதன் என்னிடம் வந்து, ”நாம் எல்லோரும் குணசீலம் சென்று வருவோம்.” என்றான்.
குணசீலம் என்பது திருச்சியிலிருந்து பத்து மைல் அளவில் உள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம். திருப்பதியைப் போல் குணசீலத்திலும் வீற்றிருப்பவர் ஸ்ரீநிவாசப் பெருமாளே. புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள், தீராத நோயாளிகள் தான் அங்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். பொதுவாக அந்தக் கோவிலில் முரட்டுப் பைத்தியங்கள் சங்கிலியால் கட்டப்பட்டு இருக்குமாம்.
திடீரென்று அந்தக் கோவிலுக்கு என்னை அழைக்கவும் எனக்குச் சிறிது அச்சமாகவே இருந்தது. என்னை அங்கு கொண்டுபோய்ப் பைத்தியம் என்று சொல்லிச் சங்கிலியால் பிணைத்து விடுவார்களோ என்ற அசட்டுத்தனமான எண்ணம் எழுந்தது. ராமலிங்கமோ ராமநாதனோ, அவர்கள் விரோதிகளிடம்கூட அம்மாதிரியாக நடந்து கொள்ளக் கூடியவர்கள் அல்ல. என் தாய், சீதா, ராமலிங்கம் எல்லோரும் என்னுடன் வருகிறார்கள் என்னும் விவரம் எனக்குக் காரில் ஏறினவுடனேதான் தெரிந்தது.
கோவிலுக்கு அருகில் உள்ள காவிரி ஆற்றில் குளித்துவிட்டு, நாங்கள் கோவிலுக்குள் நுழைந்தோம். தாடி நிறைந்த முகத்தோடு சங்கிலியால் பிணைக்கப்பட்ட பைத்தியங்கள் வெளிப் பிராகாரத்தில் இருந்தன. என்னைப் பார்த்து ஒரு மாதிரியாகச் சிரித்தன. உட்பிராகாரத்தில் சென்றதும் பெண் பைத்தியங்கள் பல பருவத்தில், ஆண்டவனைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்கள்.
இந்தப் பெண்டிர் எல்லாம் சாதாரணப் பைத்தியங்கள் அல்ல என்றும், பேய் புகுந்த பெண்கள் என்றும், நாளடைவில் ஆண்டவன் அருளால் பேய்கள் பெண்களை விட்டு விலக. சாதாரண நிலை அடைவார்கள் என்றும் கூறினார்கள்.
அப்போதுதான் எனக்கு ராமலிங்கம் எதற்காகக் குணசீலம் எங்களை அழைத்து வந்தார் என்பது வெளியாயிற்று. பெருமாள் பாதத்தில் வெள்ளைப் பூவும், சிவப்புப் பூவும் கட்டி வைத்து. சீதாவின் கல்யாண விஷயமாக ஒரு முடிவுக்கு வரத் தீர்மானித்திருக்கிறார் என்பது தெரிந்தது.
அவர் பேச்சிலிருந்தும் மல்லிகைப் பூ வந்தால் நான் மணமகன் என்றும், ரோஜா இதழ் வந்தால் ராமநாதன் மணமகன் எனறும் அவர் தீர்மானித்திருக்கிறார் என்று அவர் என் தாயிடம் பேசிய பேச்சிலிருந்தும் தெரிந்தது.
இரண்டு பூக்களும் பெருமாள் பாதத்தில் வைக்கப்பட்டன. அர்ச்சனை, தீபாராதனை எல்லாம் முடிய முக்கால் மணி நேரம் ஆகியது. பிரசாதம் பெற்றுக் கொண்டதும் கோவில் அர்ச்சகர் அங்குள்ள ஒரு குழந்தையை அழைத்துப் பூக்கள் வைக்கப்பட்டிருக்கும் அந்தத் தட்டிலிருந்து இலையால் மூடப்பட்டிருக்கும் இரண்டு பூப்பொட்டலங்களில் ஒன்றை எடுக்கச் சொன்னார்.
எங்கள் மனம் எல்லாம் குதிரைப் பந்தயத்தின் முடிவுக் கட்டத்தில் இருக்கும் சூதாடிகளின் நிலையில்தான் இருந்தது. ஆனால் ராமநாதன் மட்டும் இம் மாதிரி தேர்வு முறையை விரும்பாதவன் போல் அலட்சியமாக இருந்தான். சீதாவின் விருப்பம் தெரிந்தும் மறுபடியும் இந்தப் பிரசினையைக் கடவுளிடம் விடுவது தவறு என்று எண்ணினான் போலும்.
சீதாவின் உயிரே இந்த இலைச் சுருள்கள் மீது நின்றது என்பது அவள், அவற்றைப் பார்த்த பார்வையிலிருந்து தெரிந்தது. குழந்தை ஓர் இலைச் சுருளைத் தேர்ந்தெடுத்தது. ராமலிங்கம் அந்தக் குழந்தை யிடமிருந்து நடுங்கிய கைகளோடு இலைச் சுருளைப் பெற்றுக் கொண்டார். நானும் சீதாவும் மூச்சடக்கியபடி முடிவுக்குக் காத்திருந்தோம்.
ராமலிங்கம் இலைச் சுருளைப் பிரித்துப் பார்த்தார். அதனுள்ளிருந்து வெள்ளை நிறம் தெரிந்தது. மல்லிகைப் பூ வெளிப்பட்டது. சீதா மகிழ்ந்தாள்; என் தாயும் மகிழ்ச்சியைக் காட்டினாள். ஆனால், ராமலிங்கம் பூவைப் பார்த்து விட்டு ஆண்டவனை ஒருமுறை பார்த்தார். அவர் ஆண்டவன் கட்டளையை ஒப்புக்கொண்டார் என்பது தெரிந்தது.
மல்லிகைப் பூ எனக்கு ராசி யான பூதான் என்ற சந்தோஷ நினைப்போடு நான் கோவிலை விட்டு வெளிவந்தேன். அப்போது தலைவிரித்து வெளிப் பிராகாரத்தில் ஆடிக் கொண்டிருந்த ஒரு பெண். அதாவது பேய் பிடிக்கப்பட்ட பெண் என்னை வெகு நாள் தெரிந்தவள் போல் முறைத்துப் பார்த்தாள். பிறகு சிரித்தாள்.
எழுந்து என்னிடம் வந்து, யாரும் தடுப்பதற்கு முன், மல்லிகைப் பூ வாசனை உன்னை விடாது இந்தா வச்சுக்கோ,” என்று சொல்லி என் கையிலே பூச்சரத்தைக் கொடுத்து விட்டு மறுபடி போய் உட்கார்ந்தாள்.
எனக்கு உடல் வியர்த்து விட் டது. நல்ல சகுனம் என்று மற்றவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் எனக்கல்லவா தெரியும், சித்ரா பௌர்ணமி இரவிலிருந்து மல்லிகை மணத் துக்கும் என் மனத்துக்கும் உள்ள விசித்திர தொடர்பு?
பகல் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துட்டோம். அன்று பிற்பகல் பூராவும் என் எதிர்காலத்தைப் பற்றிய பல விஷயங்கள் பேசப்பட் டன. உதகமண்டலத்தில் உள்ள ராமலிங்கத்தின் மானருவி எஸ்டேட்டை என் பெயரில் மாற்றி என்னை ஒரு சீமானாக்கி விடுவது என்பது பற்றி மாமாவிடம் ராமநாதன் ஒரு திட்டம் கொடுத்தான்.
மறுநாளே நானும் ராமநாதனும் உதகமண்டலம் செல்வது என்று முடிவு செய்யப்பட்டது. அப்போது டிரைவர் மாணிக்கம் அங்கு நின்று கொண்டிருந்தான். நான் ராமநாதனிடம், “சீதாவின் உயிரைக் காப்பாற்றியதற்காக எனக்கு இவ்வளவு சன்மானம் செய்கிறீர்கள். என் உயிரைக் காப்பாற்றிய மாணிக்கத்துக்கு ஒன்றுமே கிடையாதா?” என்று கேட்டேன்.
மாணிக்கம் புன்னகை செய்தான். ராமநாதன் சிரித்தபடி, “மாணிக்கத்துக்குச் சன்மானம் செய்ய வேண்டியது உன் பொறுப்பு”, என்றான்.
நான் உட, “அப்படியானால் அந்த எஸ்டேட் என் பெயருக்கு மாறிய தேதியிலிருந்து ஒரு வருட வருமானம் மாணிக்கத்தைச் சேர்ந்தது” என்றேன்.
மாணிக்கம் உடனே “எஜமான்! அந்த எஸ்டேட் வருமானம் கிட்டத்தட்ட லட்சத்துக்குப் பக்கமா வரும். அவ்வளவு பணம் திடீரென்று வந்தால் என்னாலே தாங்க முடியாது. நான் சுத்தமாகக் கெட்டுப் போயிடுவேனுங்க,” என்றான்.
மறுநாளே, நானும் ராமநாதனும் உதகமண்டலத்துக்குக் காரில் புறப்பட்டோம். சீதாவின் முகத்தில் அன்று படர்ந்த புன்னகை என் மனத்தை விட்டு என்றுமே நீங்காது.
ராமநாதன் தான் கார் ஓட்டிச் சென்றான். அவன் 60 மைல் 70 மைல் வேகத்தில் கரூரிலிருந்து காங்கேயம் செல்லும் பாதையில் செல்லும்போது எனக்குப் பயமாகவே இருந்தது. நான் அடிக்கடி, “மெள்ளப் போ அண்ணா, மெள்ளப் போ,” என்றேன்.
ராமநாதன் சிரித்தான். “இனி மானருவி எஸ்டேட் முதலாளி நீ. சீக்கிரமே நீ ஒரு கார் வாங்கி ஓட்டக் கற்றுக்கொள்ள வேண்டாமா?” என்று சொன்னான்.
”காரா! நான் ஓட்டறதா! அது ஒரு நாளும் நான் செய்யப் போறதில்லை. காருக்கும் எனக்கும் லாயக்கில்லை. நிச்சயமாக விபத்து ஏற்படும்,” என்றேன்.
அத்தியாயம்-15
என் பயத்தைப் பார்த்து ராமநாதன் சிரித்தான். “கார் வேகமாகப் போனால் அதில் உட்காரப் பயப்படுகிற நீ எப்படித் தான் அந்தக் கிணற்றிலே குதித்தாயோ தெரியவில்லை,” என்றான்.
‘பயம் என்ற உணர்ச்சிக்கும் ஓர் எல்லை இருக்கிறது. பயம் எல்லையை மீறும்போது அதுவே தைரியமாக மாறுகிறது போலும்’, என்று நான் நினைத்தேன்.
இரவு எட்டு மணி சுமாருக்கு நாங்கள் இருவரும் மானருவி எஸ்டேட் வந்து சேர்ந்தோம். உடனே வெந்நீரில் குளித்துவிட்டு வேலைக்காரன் ஓட்டலிலிருந்து வாங்கி வந்த உணவைச் சாப்பிட்டோம்.
சாப்பிட்டவுடனே கார் ஓட் டிய களைப்பால் ராமநாதன் தூங்கி விட்டான். குளிர்ப் பிரதேசத்துக்குப் புதியவனான எனக்குத் தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தேன். பிறகு சிறிது நேரம் தூங்கினேன்.
இரவு மணி இரண்டு அடித்ததும் விழித்துக் கொண்டேன். குளிரில் உடல் நடுங்கியது. அந்த ரூம் ஐஸ் பெட்டி போல் ஜில்லென்று இருந்தது. பக்கத்துக் கட்டிலில் ராமனாதன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். மெள்ளப் படுக்கையை விட்டு எழுந்து உலவ ஆரம்பித்தேன். தேகத்துக்கு உஷ்ணம் ஏற்பட்டாலாவது அயர்ந்து தூக்கம் வரலாம் என்று நினைத்தேன்.
நாங்கள் படுத்திருந்த அறையின் தரைமீது பலகை போடப்பட்டிருந்ததால் நான் உலவும்போது சத்தம் ஏற்பட்டது. சத்தம் செய்து ராமநாதன் தூக்கத்தைக் கலைக்கக் கூடாது என்று படுக்கை அறையை அடுத்த வராந்தாவுக்குச் சென்றேன். வராந்தாவில் நான் வேகமாக உலவிக் கொண்டிருக்கும்போது சற்றுத் தூரத்திலிருந்து இசை கேட்டது. அதிலும் அது வீணையின் இசையாக இருந்தது ஆச்சரியத்தைத் தந்தது.
ஊட்டியில் இரவு இரண்டு மணி வேளைக்குக் குளிரில் யார் வீணை சாதகம் செய்வார்கள்? வீணையின் நாதத்தோடு ஒரு பெண் ஆலாபனை செய்வதுபோல் இருந்தது.
நான் வராந்தாவின் ஓரத்துக்கு வந்து எட்டிப் பார்த்தேன் வராந்தாவை ஒட்டிய நிலச்சரிவில் ஒரு பங்களாவிலிருந்து இசை வந்தது. அந்தப் பள்ளத்தாக்கிலுள்ள சிறிய பங்களாவில் ஜன்னல்களிலெல்லாம் வெளிச்சம் தெரிந்தது. மூடு பனியிடையே ஒரு பங்களா. சுற்றியுள்ள பங்களாக்களில் எல்லாம் இருள் சூழ்ந்திருக்கும்போது அந்தப் பங்களாவில் மட்டும் வெளிச்சம். அந்தப் பங்களாவைப் பார்த்தபடி இசையைக் கவனித்தேன். ‘மாயா மாளவ கௌள’ ராகத்தில் யாரோ ஆலாபனை செய்வதுபோல் தெரிந்தது. குரல் இனிமையாக இருந்தாலும் அதன் தொனி மனிதத் தொனியாக இல்லை. அது இசையா, சோக அழுகையா புரியவில்லை.
இப்படி நினைத்துக்கொண்டே வாரந்தாவில் நிற்கும்போது திடீரென்று இசை நின்றது. அந்த வீட்டுக் கண்ணாடி ஜன்னலில் ஓர் உருவத்தின் நிழல் விழுந்தது. அடுத்த வினாடி அந்த ஜன்னலை ஒரு கை திறப்பது தெரிந்தது. ஜன்னலைத் திறந்துவிட்டு மறைவிலிருந்து என்னை யாரோ கவனிக்கிறார்கள் என்று எனக்குப் பட்டது. உடனே அந்த அறை விளக்கு அணைக்கப்பட்டு இருள் சூழ்ந்தது. இருள் சூழ்ந்த நிலையில் இருக்குப் பங்களாவின் தோற்றமே மாறியது. திடீரென்று ஒரு பெண்ணின் அலறல் சப்தம் கேட்டது. ஜன்னல் கதவு மறுபடியும் படீரென்று சாத்தப்படும் சப்தம். அலறல் சப்தத்தை பின் தொடர்ந்தது. நான் அப்படியே அந்தப் பங்களாவைக் கற்சிலைபோல் பார்த்தபடி நின்றேன். வெகு தொலைவில் ஒரு நாய் ஊளையிட்டுக் கொண்டிருந்தது. அப்புறம் ஒரே நிசப்தம்!
எஸ்டேட் பங்களாவில் கேட்ட சப்தம். என் காதுகளில் அப்படியே நின்றது.
அது, ஒரு பெண்ணின் அலறல் சப்தமாகவே எனக்குத் தோன்றிற்று. உண்மையிலேயே அது பெண்ணின் கூச்சல்தானா அல்லது ஒரு மிருகத்தின் பிளிறலா? அல்லது….. மனிதன், மிருகம் இந்த இரண்டு இனத்தையும் சேராத ஓர் அபூர்வ ஜீவனின் அழுகுரலா?
ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றேன். அந்தப் பள்ளத்தாக்கில் கிடந்த அந்தச் சிறிய பங்களா, மங்கலான நிலவொளியில், பனி சூழப்பட்ட தோற்றத்தில், கற்களால் கட்டிய ஒரு வீடு போலவே தெரியவில்லை.உயிர் உள்ள ஒரு பொருள் போலத் தோன்றியது. எனக்கு விவரம் தெரியாத ஒரு பயம் ஏற்பட்டது.
நான் இந்த உதகமண்டலத்துக்கு முற்றிலும் புதியவன். அரசாங்க பஸ் உருளும் ‘கடகட’ சத்தத்திலும், சிந்தாதிரிப்பேட்டை ரிக்ஷா மணிச் சத்தத்திலும் பிறந்து வளர்ந்து வாலிப நிலை அடைந்தவனுக்கு, உதகமண்டலத்தில் எஸ்டேட் பங்களாவும், அதன் சாவு அமைதியும், மரண நிசப்தமும் ஒரு புத்தம் புதிய அனுபவம்தான். யூக லிப்டஸ் மரங்களிலிருந்து என்னை நோக்கி வந்த அந்த மருந்து மணம், என் நாசி வழியே நெஞ்சில் நிறைந்து உடலுக்கு இன்பக் கிளர்ச்சியைத் தந்தது. வெளியில் சூழ்ந்த மூடு பனியின் நெருக்கம், அதிகமான என் உடலைத் தாக்கி,என் பற்களை வெடவெடவென்று நடுங்க வைத்தது. வெண்பனியின் இடையே உயர்ந்த, கறுத்த மரங்கள், ‘ஒரு பயங்கர நாடகம் நடக்கப்போகிறது. அதில் நாங்கள் பங்கெடுத்துக் கொள்ளக் காத்திருக்கிறோம்,’ என்று அறிவிப்பது போல் தோன்றியது. ‘சீ! என்ன பயங்கரக் கற்பனை இது!’ என் மனம் எப்போதுமே ஒன்றுமில்லாத தோற்றத்துக்கெல்லாம் காரணம் கற்பிக்கிறது. சித்ரா பௌர்ணமியன்று எனக்கு ஏற்பட்ட பிரமைகூட இம்மாதிரி ரகமே.
அண்ணா ராமனாதனைப் போல் எனக்கு ஒரு சாதாரணக் கற்பனா சக்தியுள்ள மனம் இருந்திருக்கக் கூடாதா? எவ்வளவு வேதனைகள் குறையும்? அதிர்ஷ்டம் என்னைத் தேடிவந்திருக்கிறது. பல லட்சங்களுக்கு அதிபதியாகப் போகும் தங்கச் சிலையை நான் இன்னும் சில வாரங்களில் மணக்கப் போகிறேன். அந்தத் தங்கச் சிலை சீதா என்னை நினைத்தே ஒவ்வொரு நிமிஷமும் வாழ்கிறாள். ‘திருமணம் முடியட்டும். நாம் இருவரும் தனியாக உதகமண்டலம் போகலாம்’ என்று சொல்லி வழி அனுப்பியவள், இன்னும் ஒரு மாதத்தில் என்னோடு இரவில் என்னை அணைத்தபடி இதே இடத்தில் நிற்பாள். அப்போது இதே குளிர் எனக்கு வேதனை தராது; இன்பம் தரும். இன்பக் கற்பனை செய்து என் பயத்தைப் போக்கிக் கொண்டேன்.
சீதாவின் நினைப்பால் ஓரளவு துணிவடைந்து, பள்ளத்தாக்கில் இருந்த சிறிய பங்களாவை மறுமுறை பார்த்தேன். அது இப்போது சாதாரண இருண்ட வீடாகக் காட்சி அளித்தது. மனத் திருபதியோடு வராந்தாவிலிருந்து படுக்கையை நோக்கித் திரும்பினேன். அப்போது என் முகத்தில் சில்லென்று காற்று வீசியது. என் முகமும் சிலிர்த்தது. மல்லிகைப் பூ மணம் என் நாசிக்குத் தெரிந்தது. பொதுவாக மலைநாட்டில்- அதுவும் ஊட்டி போன்ற இடங்களில் ரோஜா, மல்லிகை போன்ற புஷ்பங்களுக்கு இயற்கையாகவே மணம் கிடையாது. இந்த நாட்டுக்கென்று உள்ள ஒரே மணம் ‘யூகலிப்டஸ்’ அதாவது – தலைவலித் தைல மணம்தான்!
அப்படியிருக்கும்போது மல்லிகைப் பூ மணம் எப்படி வந்தது? அதை நினைக்கும்போதே என் மனத்தில் அச்சம் ஏற்பட்டது. உடனே வராந்தாவிலிருந்து அறைக்குள் வந்து. கண்ணாடிக் கதவுகளைத் தாழ்ப்பாளிட்டுச் சாத்திவிட்டேன். சற்றுத் தூரத்தில் ராமனாதன் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தான். நானும் படுக்கையில் படுத்துக் கொண்டேன். ஆனால் தூங்க முடியவில்லை. காரணம், நான் படுத்திருந்த இடத்திலிருந்து என் பார்வை சென்ற பாதையில் வராந்தாக் கதவு இருந்தது தான். சமவெளி ஊர்களில் எல்லாம் கதவுகள் பூராவும் மரத்தால் ஆகியிருக்கும். ஆனால் ஊட்டி போன்ற குளிர்ப் பிரதேசங்களில். கதவுகளின் பெரும் பகுதி கண்ணாடியால் ஆகியிருப்பதால், கதவுக்கப்பால் உள்ள பகுதியும் மங்கலாகத் தெரிந்தபடிதான் இருக்கும். கதவை மூடுவதால் மட்டும் தனிமை கிட்டி விடுவதில்லை.
எனது கண்கள் கண்ணாடிக் கதவுக்கு அப்பால் உள்ள பகுதியைக் கவனித்தபடியே இருந்தது. கண்ணாடிக் கதவு மெள்ள ஆடுவது போலவும், அதை யாரோ வெளிப்புறமிருந்து அசைப்பது போலவும் தோன்றியது.
– தொடரும்…
– உடல் பொருள் ஆனந்தி, குமுதம் வார இதழில் (29-10-1992 முதல்) வெளியான தொடர்கதை.